அருகாமையின் பறத்தல்.
உன்
அருகாமை இருப்பின்
பெரும் மகிழ்வில்
உதிர்கிறது
நட்சத்திரங்கள்
பூக்காடென
வானம் தொடும்
தூரத்தில்.
,
விட்டகன்ற
வேளையில்
ஏதோவொன்று
இழுத்து விட்டது.
பூமியில்
இருப்பாதாகவொரு
பாதகத்தை
அன்றாடங்கள்
யாவையுமே
அலுப்புகளாக்கி.
,
இனியொரு பொழுதும்
விடுவதாகவும்
இல்லை.
விட்டகலுவதாகவும்
இல்லை.
இப்பித்தின்
பெருங்காதலை
யாதொரு
பேரிழப்பின்
பிரளயத்திலும்.
***
மனக் கல்லின் பேதமை.
வெகு தூரம்
வந்த பிறகும்
உமிழப்பட்ட எச்சில்
காயாமல்
வீச்சமடித்தது
நெடுந் துயராக
சொற்களுக்கும்
மணம்
உண்டெனச் சொல்லியவாறு.
,
மக்க
வைத்த
காலம்
வினோதமாயிரம்
நிகழ்த்தியதால்
விரோதங்கள்
யாவும்
உதிர்ந்து போனது
மனதிடம்
மாட்டவிடாமல்.
,
சுழற்சியின்
வேகத்தில்
யாவுமே
புறத்தில்
வேறொரு
வடிவங்களெடுத்த
வேளையில்
அவனை
அல்லது
அவர்களைக்
கடந்த பொழுது
முகம்
திருப்பிக் கொண்டார்கள்
சிரித்தலின்
வாஞ்சைகளறியாமல்.
***
மதிப்புக் கூட்டப்பட்ட
மன வேலிகள்.
வேர்களில்
பின்னிய
மரங்களைத் தான்
இவர்கள்
வேலிகளிட்டுப்
பிரித்தார்கள்
அற்பக் காரணங்களுக்காக.
,
வாஞ்சைகள் கொண்ட
மரங்கள்
பூத்தது.
வருத்தத்தில்
இலைகளை
உதிர்த்து.
,
மேற்பரப்பில்
வெட்டிச் சாய்த்த
மரங்களுக்கு
இடையில்
பிணக் குவியலும்
கிடந்தது
ஆதி இணைப்பை
அறியாமல்
பொருளாகவே
யாவையும்
பார்த்துப் பழகியதால்.
,
மடிந்த
மண்ணறைக்குள்
இருக்கிறது
மறுக்கவியலாத
உண்மைகள்
சொல்ல முடியாத
துயரமாக
பூமியையும்
சுழ வைத்து.
***
விம்மலாகவொரு விலகல்.
ஆசையின் பொருட்டான
நகர்தலின்
விதி
எதுவாகவும் இருக்கட்டும்.
,
உன்
அருகாமையற்ற
பெறுதல்
யாதொன்றைக்
கொடுத்து சிறந்தாலும்
செயற்கை பூரித்தலைத்தவிர
செய்வது
வேறொன்றுமில்லை
எனக்கு.
,
விட்டகல முடியாத
இத்துயரப் பாடின்
கேவலை
நீ
அறிந்தும்
அனுப்புவதுதன்
பரிவை
நினைத்து
வழியும்
கண்ணீரைத் துடைத்து
கட்டியணைத்துக்கொள்
காணாது போகும்
துடிப்பில்
இதயம்
லயம்
கூடிக் கழிக்க.
***