அவர்களை நெடுங்காலமாக
பார்க்காமல் இருந்துவிட்டேன்.
ஏனெனத் தெரியாதென்றெல்லாம்
உண்மையின் மறுபக்கத்தைச் சொல்வதற்கு
என் நா ஒரு நாளும் முன் வந்ததில்லை.
தெரிந்துதான் இதைச் செய்தேனென்று
எங்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.
தெரிந்துச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது
என்றுச்சிலர் கேட்கலாம். சில விடயங்களை
அப்படிதான் செய்ய வேண்டும்.
செய்தாக வேண்டுமென்றுக் காலத்தால் நிர்பந்திக்கவும் பட்டுயிருப்போமென்ற நிதர்சனத்தை
அதே சிலர்தான் உணர்வார்கள்.
நீ காலத்தைக் காரணம் காட்டுகிறாய்?
என்றுக்கூட சிலர் கேட்கவரக்கூடும். வரட்டும்.
அதற்காக உண்மையின் மறுப்பக்கத்தை
சொல்வதற்கு என் நா ஒரு நாளும் முன் வரப்போவதில்லை என்றுதான் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.
காலம்தான் எங்களுக்கு இந்த பிரிவைத் தந்தது.
காலம்தான் இருவரையும் ஒருவராக்கியது
அதே, காலம்தான் இருவரையும் இருவேறாக்கியது.
இந்த பிரிவு இருவருக்கும் இனிக்குமா?
இந்த பிரிவு இருவருக்கும் கசக்குமா?
என்ற கேள்விக்கு நாங்கள் முன்வைக்கும் பதில்கள்
இந்த இரண்டுமே நடக்குமென்று நாங்கள் சொல்வோம்.
இனிப்புக்குள் இருக்கும் ஒருத்துளிக் கசப்பும்
கசப்புக்குள் இருக்கும் ஒருத்துளி இனிப்பும்
எங்களுடையக் காதல்
காலம் நிகழ்த்திய விளையாட்டில் புரிதல்தான்
எங்களுடையக் காதல்.
இந்த மிச்சமிருக்கும் ஓர் வாழ்க்கையில்
சேர்ந்தே ஆகவேண்டுமென்ற நிர்ப்பந்தம் கிடையாது எங்களுக்குள்ளிருக்கும் அந்த பேரன்பின் குட்டி உயிருக்கு.
பிரிந்திருந்தாலும் அவ்வப்போது பார்த்துக்கொண்டால் புன்னகைத்து
ஒரு தேநீர் அருந்தி விடைபெறுவோம்
அதுவே போதுமானது அந்தக்குட்டி உயிருக்கு.
00

துங்கன்.
என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன். கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன்.

