எங்கு  பார்த்தாலும்

பசுமையாய்

பச்ச பசேலென்று

வயல்வெளிகளாக

இருந்த எனது கிராமம்

,

கொஞ்சம் கொஞ்சமாக

வேலி முட்கள் வளர்ந்த

முட்புதர்களாக மாறியது

,

அச்சமயத்தில் தான்

பட்டாசு ஆலைத்

தொழிற்சாலைகள்

மெது மெதுவாக

தலை தூக்கியது

,

அச்சமயம்

மணி பிடிப்பது

மருந்து செலுத்துவது

போன்ற வேலைகளில்

காளிராஜ் அண்ணன்

கெட்டிக்காரன்

,

எப்போதும்

பட்டாசுத் தொழிற்சாலை

வேலைக்குச் செல்ல மாட்டான்

என்றாவது மட்டும் தான்

,

அதனால்

மண் அடிப்பது

மணி பிடிப்பதென்றால்

காளிராஜ் அண்ணனைத் தான்

தேடி வந்து

அழைத்துச் செல்வார்கள்

00

திடீரென்று ஒருநாள்

சென்னையில்

வேலை பார்த்த எனக்கு

தொலைபேசி அழைப்பு வந்தது

அண்ணன் வேலை பார்த்த இடம்

வெடித்து விட்டதென்று

,

பல நாட்களாக

வேலைக்கு செல்லாதவன்

அன்று தான்

சென்றிருக்கிறான்

சென்னையிலிருக்கும் என்னால்

உடனடியாக ஊருக்கு

வர முடியவில்லை

நான் வருவதற்குள்ளாகவே

அண்ணனை

எரித்து விட்டார்கள்

,

தூக்கி எறியப்பட்டு

உடுத்தியிருந்த

கைலி சட்டையெல்லாம்

தீக்கிரையாகி

தோலுரிக்கப்பட்டு

கரேரென்று கிடந்ததாகவும்

,

மூன்று பேர்களில்

அண்ணனுக்கு மட்டும் தான்

அதிக காயமென்று

மறுநாள்

அம்மா சொல்லித் தான் தெரியும்

00

அண்ணனின்

கடைசி முகம்

காணாத நான்

கடைசியாய் அவன்

சிரித்த சிரிப்பை மட்டுமே

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

,

வீட்டிலிருக்கும் புகைப்படத்தில்…

                         ***

வறண்ட நிலப்பரப்பாக

கண்மாய் மாறியதில்

அனைத்து கால்வாய்களும்

மறைந்து போனது

,

செழித்த நிலமோ

பரந்து கிடக்கிறது

அவை

பயிர்களின் விளைச்சலின்றி

வேலி முட்களாகவே

தோற்றம் பெற்றது

,

விவசாயிகள்

இருக்கதான் செய்கிறார்கள்

அவர்களும்

விவசாயம் மறந்து

மற்றொரு தொழிலில்

,

மண் வளம்

நிறைந்து கிடக்கிறது

மழை வெள்ளமோ

எட்டிப் பார்ப்பதில்லை

,

அப்போது

சிலுசிலு வென்று

வீசும் காற்றில்

சலசல வென்ற சத்தத்துடன்

நெற்பயிர்கள்

ஒன்றையொன்று

உரசிக் கொள்ளும்

,

இப்போது

அதன் சத்தமும்

கேட்பதில்லை

,

இவை எல்லாமும்

இன்று

மண்ணுக்குள் புதைந்த

சடலமாக

அமைதியாய்

துயில் கொள்கிறது…

                                  ***

ஊரில்

வருடத்திற்கு ஒருமுறையென்று

வைகாசி மாதம்

காளியம்மன் கோவில்

பொங்கல் திருவிழா

சிறப்பாக நடைபெறும்

,

ஊர்ப் பொங்கலுக்கு

வரி வசூலிப்பதில்

முதல் ஆளாக அப்பா

வரி கொடுத்து விடுவார்

,

வரி கொடுப்பவர்களின்

ஒவ்வொரு வீட்டிலும்

மின்குழாய் விளக்குகள்

தவறாமல் கட்டப்படும்

,

வருடா வருடம்

யார் வீட்டில்

மின்குழாய் விளக்குகள்

இல்லையென்றாலும்

எங்கள் வீட்டில்

தவறாமல் இருக்கும்

,

பொங்கல் நாளன்று

கோவில் தீச்சட்டி

எடுத்து வந்து

எங்கள் வீட்டு சாமியை

அழைத்துச் செல்வது

நடைமுறை

,

வெள்ளி செவ்வாயென

சூடம் பத்தி காட்டி

தவறாது சாமி

கும்பிடுவதும்

அப்பாவின் வழக்கம்

,

ஆனால்

இப்போதெல்லாம் அப்பா

வரி கொடுப்பதை

மறந்து விட்டதோடு

மட்டுமல்லாமல்

சாமி பக்கமும்

போவதேயில்லை…

                             ***

அந்தி மாலை

தன் ஒளிக்கற்றைகளை

கொஞ்சம் கொஞ்சமாக

மறைத்துக் கொள்கிறான்

பகலவன்

,

இரை தேடிச் சென்ற

பறவைகள் அனைத்தும்

வீடு திரும்பும் நிமித்தமாக

தன்னுடைய கூட்டிற்கு

திரும்புகிறது

,

மேய்ச்சலுக்கு சென்ற

ஆடு மாடுகள்

கூட்டம் கூட்டமாக

சத்தங்கள் எழுப்பி

தன் கூடாரங்கள்

வந்தடைகின்றன

,

தாயின் வருகையறிந்து

பசியின் வேகத்தில்

கட்டியிருக்கும் கயிற்றை

முன்னிழுத்துக் கொண்டு

ஓடி வரத் தவிக்கிறது

கன்றுக்குட்டி

,

சுறு சுறுப்பாக

தன் வேலையை

செய்து கொண்டிருந்த

எறும்புகள்

சாரை சாரையாய்

ஒரு தொடர்வண்டி போல்

தன் இருப்பிடம்

நோக்கிச் செல்கின்றன

,

பன் பட்டர்

சோன் பப்படி யென்று

ஒலிப்பெருக்கி சத்தத்துடன்

வியாபாரி ஒருவர்

இருசக்கர வாகனத்தில்

தெருக்களில்

விற்பனை செய்கிறார்

,

பட்டாசுத் தொழிற்சாலை

வேலை முடித்து

நான்கு சக்கர வாகனத்தின்

ஒலிப்பெருக்கி சத்தத்துடன்

பேருந்து நிலைய

மைதானத்தில்

வந்து இறங்குகிறார்கள்

,

விவசாயம் மறந்த

எம்மூர் மக்கள்…

                                ***

கண்ணன். க

“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *