கு.ஜெயபிரகாஷ்
காலம் 1:முதன் முதலில் பெண் தேடும் போது
பெயர்: ராமன்
வயது: 29
உயரம்: 5’8”
கல்வி: B.E, MBA
வேலை: IT Company – நல்ல சம்பளம்
என்னைப் பற்றி:
நான் positive mindset உடைய, career-oriented, fun-loving மனிதன். வாழ்க்கையை enjoy பண்ணும் குணம். travel, movies, fitness மீது ஆர்வம்.
எதிர்பார்ப்பு:
· அழகாகவும் நன்றாகவும் பேசும் குணம்
· நல்ல கல்வி மற்றும் வேலை
· modern + traditional balance
· height குறைந்தது 5’4”
· same caste preferred
குறிப்பு:
Life partner என் best friend ஆக இருக்க வேண்டும்.
*****
காலம் 2: 50வது முறை பெண் தேடும் போது
பெயர்: ராமன்
வயது: 32
உயரம்: 5’8”
வேலை: நிலையான வேலை
என்னைப் பற்றி:
அமைதியான, family-oriented மனிதன். சிம்பிளான வாழ்க்கை பிடிக்கும். பொறுப்புடன் வாழ்பவன்.
எதிர்பார்ப்பு:
· நல்ல மனசு இருந்தால் போதும்
· வேலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி
· குடும்பத்தை மதிப்பவர்
· height முக்கியமில்லை
· caste okay
குறிப்பு:
புரிந்துகொண்டு வாழும் ஒருவர் கிடைத்தால் போதும்
****
காலம் 3: 99வது முறை பெண் தேடும் போது
பெயர்: ராமன்
வயது: 37
என்னைப் பற்றி:
நான்… சராசரி மனிதன்.
எதிர்பார்ப்பு:
· reject பண்ணாத ஒருவர்
குறிப்பு:
இது profile இல்ல.
இது ஒரு request.
*****
“இந்த முறை நல்லா நடக்கும்,” என்று எல்லா முறையிலும் சொல்லும் பழக்கத்திலேயே அம்மா மீண்டும் சொன்னாள். அந்த வாக்கியம் ஒரு நம்பிக்கையான ஒரு பழக்கம்.
ராமன் சிரிக்கவில்லை. அவன் முன்னால் திறந்திருந்த laptop திரையில் “Create / Edit Profile” என்று எழுதி இருந்தது. அவன் தனது புகைப்படத்தை சற்று பிரகாசமாக்கிக் கொண்டிருந்தான்; முகத்தில் இல்லாத ஒளியை மென்பொருட்களின் மூலமாகச் சேர்க்க முயற்சித்திருந்தான்.
“சாப்பிட வரியா?” கதவின் வாசலில் நின்றுக் கொண்டு அம்மா இவனை அழைத்தாள்.
“இப்போ வரேன்,” என்றான். அவன் “Save” பொத்தானை அழுத்தினான். அந்த இரவு கைபேசி ஒலிக்கவில்லை. எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் இந்த முறை ராமன் அதைத் திறந்து பார்க்கவில்லை. அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அம்மா எதிரில் அமர்ந்திருந்தாள்.
அமைதி பழகிப்போன அமைதி.
சில நிமிடங்களுக்கு பிறகு அவன் கேட்டான்: “அம்மா… உனக்கு பயமா?” அவள் திடுக்கிட்டாள். “எதுக்கு?”
“நான் இப்படியே இருப்பேன்னு…”
அவள் சிரிக்க முயன்றாள். ஆனால் அந்த சிரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களில் நீர் ததும்பியது.
“எனக்கு பயம் இல்லை… நீ தனியா இருப்பியேன்னு தான் பயம்.” என் காலத்திற்குள்ள உனக்கு ஒரு கல்யானத்த பண்ணி பேரன் பேத்திய பாத்துட்டா என் கட்ட நிம்மதியா சாயும்.
ராமன் அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் குற்றமில்லை; சோர்வும் இல்லை. ஒரு ஒப்புதல் மட்டும்.
“நான் பழகிட்டேன் அம்மா… ஆனா இன்னும் முழுக்க இல்ல.”
*****
அடுத்த நாள் காலை. வழக்கம்போலவே அவன் எழுந்தான். போன் சைலன்ட். வாழ்க்கை தினசரிபோல நகர்ந்தது. ஆனால் notification bar-ல் ஒரு சிறிய மாற்றம்
“1 Interest received.”
அவன் அதை உடனே திறக்கவில்லை. சில விநாடிகள் பார்த்தான்.
ஒரு காலத்தில் அவன் எதிர்பார்த்திருந்த அதே விஷயத்தை இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் அந்நியன் போல. பிறகு மெதுவாகத் திறந்தான்.
Profile Name: மீனா, வயது: 35, திருமண நிலை: விவாகரத்து என்று இருந்ததை அவன் கண் அந்த ஒரு வார்த்தையில் நின்றது. முன்னிருந்த ராமன் இதைத் தாண்டி சென்றிருப்பான். இப்போது அவன் கீழே ஸ்க்ரோல் செய்தான்.
“இது என் 48வது profile. முதலில் நான் என்னை explain பண்ணிக்கிட்டே இருந்தேன். இப்போ நான் சும்மா இருக்கிறேன். ஒரு தவறான திருமணத்திலிருந்து வெளியே வந்தேன். perfect life வேண்டாம்.
அமைதியா இருக்கக்கூடிய ஒரு மனிதன் வேண்டும்தான்.” அந்த வரிகள் அவன் திரையில் இல்லை, அவன்மனதில் விழுந்தது போல இருந்தது.
Message: “உங்கள் profile படித்தேன். அது profile மாதிரி இல்லை… உண்மையா இருந்தது. அதனால தான் interest அனுப்பினேன்.”
ராமன் சிரித்தான். அவன் 99 முறை எழுத முடியாத உண்மை
100வது முறை அவனை வந்து அடைந்தது. அவன் பதில் செய்யத் தொடங்கினான். நிறுத்தினான். அழித்தான். தயங்க்கினான்.
“நான் பேச தெரியாதவன் இல்ல… ஆனா என்ன பேசணும் என்று தெரியாம இருந்தவன். இப்போ கொஞ்சம் தெரிஞ்ச மாதிரி இருக்கு.” என்று டைப் செய்து Send செய்தான்.
அந்த செய்தி காபி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மீனாவை அடைந்தது. அவள் அதை வாசித்தாள். சில விநாடிகள் எதுவும் செய்யாமல் நின்றாள். அவள் மனதில் ஒரு மெல்லிய சத்தம். “இது வேற மாதிரி இருக்கு…”அவள் பதிலை டைப் செய்தால். “நானும் பேச தெரியாம இருந்த காலம் இருக்கு. இப்போ பேசாம இருக்கத்தான் கற்றுக்கிட்டேன். அதுக்குள்ள பேசுறவங்க கிடைக்கறது ரொம்ப ரேர்.”
அவர்களின் முதல் உரையாடல் “ஹாய்/ ஹலோ” என்று தொடங்கவில்லை. அது இரண்டு அமைதிகளுக்கு நடுவே ஒரு வார்த்தை விழுவது போல இருந்தது.
“நீங்க சந்தோஷமா இருக்கீங்களா இப்போ?” என்றான் ராமன்.
“சந்தோஷம் இல்ல… ஆனா சும்மா இருக்கிறேன். அது போதும் என்று கற்றுக்கிட்டேன்.” என்று பதில் தந்தாள் மீனா.
“நானும் அதே தான்.”
அவர்கள் தினமும் பேசவில்லை. ஆனால் பேசும் போது
நேரம் கணக்கில் இல்லாமல் நகர்ந்தது.
“நீங்க இன்னும் profiles பார்க்கிறீங்களா?” என்றாள் மீனா.
ராமன் சிரித்தான். “இல்ல… இப்போ ஒரே profile தான் open பண்ணுறேன்.”
அவள் புரிந்துகொண்டாள்.
****
ஒரு சாதாரண காபி கடை. சாலையோர கண்ணாடி கதவின் வெளியே வண்டிகள் ஓடிக்கொண்டே இருந்தன; உள்ளே மிதமான காபி வாசனையும், கப்புகள் மோதும் சின்னச் சத்தங்களும். யாருக்கும் யாரும் முக்கியமில்லாத ஒரு மாலை நேரம். ராமன் முன்னதாகவே வந்து, ஜன்னலருகே இருந்த இரண்டு இருக்கை மேசையில் அமர்ந்திருந்தான். கைப்பேசி மேசை மேல் வைத்துவிட்டு screen off செய்துவிட்டு அதைத் திறக்க வேண்டும் என்ற அவசரம் இல்லாமல், வெளியே போகும் வண்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு வாகனமும் ஒரு கணம் அவன் கவனத்தைத் தொடும், “இவளா?” என்று தோன்றி, “இல்ல…” என்று மறைந்து விடும். அவன் தன்னையே சிரித்துக்கொண்டான்; இந்த காத்திருப்பு அவனுக்கு புதிதல்ல, ஆனால் இந்த முறை அது சுமையாக இல்லை.
அந்த நேரத்தில் கதவு திறந்தது. குளிர்ந்த காற்றோடு ஒரு சின்ன சத்தம். மீனா உள்ளே வந்தாள். ஒரு நிமிடம் நின்று சுற்றிப் பார்த்தாள், யாரையோ தேடும் பார்வை, ஆனாலும் அவசரமில்லாதது. அவள் கண்கள் ராமனைத் தொட்டது. ஒரு நொடிக்கு. பிறகு அவள் அவன் பக்கம் நடந்துவந்தாள். ராமன் மெதுவாக எழுந்தான். அவசரமில்லாமல், தன்னைத்தான் மறைக்காத ஒரு நகர்வு. “நான் ராமன்,” என்றான். “மீனா,” என்றாள். இருவரும் கைகுலுக்கவில்லை, கடமைக்கானச் சிரிப்பு இல்லை, அந்த இரண்டு வார்த்தைகள் போதுமானது. இருவரும் சின்ன சிரிப்பை பகிர்ந்தார்கள்; அது சங்கடமாக இல்லை, ஒரு நிம்மதியா இருந்தது.
அவர்கள் அமர்ந்தார்கள். “ஒரு filter coffee…” என்று ராமன் சொன்னான்; அவளைப் பார்த்து, “உங்களுக்கு?” என்றான். “same,” என்றாள். அந்த ‘same’லேயே ஒரு வசதி இருந்தது. காபி வருவதற்குள் அவர்கள் பேசவில்லை. ராமன் tissue paperஐ சீர்செய்தான்; மீனா வெளியே போகும் வண்டிகளை பார்த்தாள். அந்த அமைதி யாரையும் சிக்கவைக்கவில்லை. “டிராபிக் ரொம்ப இருந்ததா?” என்றான் அவன். “இல்ல… நான் தான் கொஞ்சம் லேட்டா வந்தேன்,” அவள் சிரித்தாள். “நானும்…” என்றான் அவன். இருவரும் புரிந்துகொண்டார்கள் அது டிராபிக் பற்றி அல்ல.
காபி வந்தது. நீராவி மேலே எழுந்தது. மீனா ஒரு சுவிப் எடுத்தாள்; “நல்லா இருக்கு,” என்றாள். “ஹூம்…” என்று அவன் தலைஅசைத்தான். “நீங்க… முதல் முறையா இதுபோல மீட் பண்ணறீங்களா?” என்றாள் அவள். ராமன் சிரித்தான். “இல்ல… ஆனா இப்படி நிதானமா இருக்குறது இதான் முதல் முறை.” அவள் மெதுவாக அதை ஏற்றுக்கொண்டாள். “நீங்க profileல சொன்னது…” என்று அவள் தொடங்க, “எது?” என்றான் அவன். “‘பேசிக்கொள்ள ஒருத்தி இருந்தா போதும்’ன்னு…” ஒரு இடைவெளி. ராமன் காபியை கீழே வைத்து அவளைப் பார்த்தான். “அது அந்த நேரத்தில் உண்மைதான்,” என்றான். “இப்போ?” என்றாள் அவள். அவன் சிரித்தான். “இப்போ… பேசாம இருந்தாலும் ஓக்கேன்னு தோணுது.”
மீனா சிரித்தாள். அந்த சிரிப்பில் பெரிய உற்சாகம் இல்லை; ஆனால் உள்ளுக்குள் ஏதோ அமைதியாக ஒரு நிம்மதி இருந்தது. வெளியே சாலை ஓசை தொடர்ந்து கொண்டே இருந்தது; உள்ளே காபி வாசனை பரவிக்கொண்டே இருந்தது. அந்த மேசையில், அவர்கள் இருவரும் யாரையும் impress பண்ணாமல், எதையும் நிரூபிக்காமல், சும்மா இருந்தார்கள். அந்த “சும்மா” தான் அவர்களின் முதல் உண்மையான உரையாடல்.
******


