அ.பாண்டியனின் ‘கரிப்புத்துளிகள்’

தயாஜி

வரலாற்றை அப்படியே எழுதுவதற்கும் வரலாற்றைப் புனைவாக்கி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எதில் மனிதர்களின் இருதரப்பு கதைகளும் சொல்லப்பட்டிருக்கிறது என யோசித்தால் அதற்கான பதில் கிடைக்கும்.

இங்கு நமக்கு சொல்லப்பட்ட வரலாறுகள் அனைத்திலும் வெற்றி பெற்றவர்கள் சொன்ன கதைகளே நிறைந்து கிடக்கின்றன. 

யாரிடம் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்களின் விருப்பப்படி அவர்களின் வரலாறுகளைக் அவர்களால் கட்டமைக்க முடிகின்றது. புதிது புதிதாக ஒன்றை அவர்களுக்கு சாதகமாய்க் கண்டுபிடிப்பது போன்ற கேலிகூத்துகளையும் அவர்களால் நடத்த முடிகின்றது.

இத்தனைக்கும் மேலாக, கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களால் வரவிருக்கும் மாற்றத்தை கவனத்தில் கொண்டு அவற்றை அழிக்கவும் இந்த அதிகார அமைப்புகள் முனைப்பாக செயல்படுகின்றன. நாம் நமது வாழும் காலம் முழுக்க இதனைப் பார்க்கத்தான் போகின்றோம்.

வரலாற்றின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவதனுள் தங்களுக்கு சாதகமான பலவற்றைப் புகுத்தியும் பலவற்றை அகற்றியும் விடுகிறார்கள். அதனால்தான் என்னவோ வரலாறுகள் முழுக்க பல வெற்றிடங்களும்  கேள்விகளும் குழப்பங்களும் இருக்கின்றன.

வரலாற்று ஆவணங்களைத் தேடிச் செல்கிறவர்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டுமா நடக்கின்றன.

வரலாற்றில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவது வரலாற்று ஆசிரியர்களின் வேலை மட்டுமல்ல. எழுத்தாளர்களின் வேலையும் கூட. இப்படி சொல்வதில் இருக்கும் சிக்கலையும் புரிந்து கொள்ள முடிகின்றது. அப்படியான புனைவாசிரியர்களே இங்கு பல வரலாற்று குழப்பங்களுக்கு காரணமாகிவிடுகின்றார்கள்.

ஆனால் நான் சொல்லும் எழுத்தாளர்கள் யார் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அவர்களின் பின்புலம் என்ன அப்படி அவர்கள் சொல்வதால் ஏற்படப்போகும் மாற்றங்களில் யாருக்கும் இலாபம். யாருடைய அதிகார பலத்தை அது அதிகப்படுத்தும் என்பது போன்ற பல கூறுகளில் இருந்தும் நாம் ஆராய வேண்டியுள்ளது.

வரலாற்றில் நிறைந்திருக்கும் காலியிடங்களை புனைவுகள் கொண்டு நிரப்ப முயலும் எழுத்தாளர்களின் புனைவுகள் மூலம்  இதுவரையில் சொல்லப்பட்ட வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு வெளிச்சம் கிடைக்கின்றது. அதிலும் புனைவுகள் வழி அதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் நன்கு ஆராயப்படுகின்றன. கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அதிலிருந்தே அது உண்மையா இல்லையா என்கிற தெளிவிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் மூலம் மலேசிய வரலாற்றின் ஒரு பகுதியை, பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாத பகுதியை தனது வரலாற்று புனைவின் மூலம் அதன் சாத்தியப்பாடுகளைச் சொல்லியிருக்கின்றார். நாவலில் இருக்கும் இடங்களை இன்றும் கூட நீங்கள் சென்று அதன் நிலவரங்களை அறிந்து கொள்ளலாம் என்பது நாவலாசிரியர் செய்திருக்கும் களப்பணிக்கு ஒரு சான்று.

எழுத்தாளர் அ.பாண்டியன், பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு  இடைநிலைப்பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.

‘கரிப்புத் துளிகள்’, எழுத்தாளர் அ.பாண்டியனின் இரண்டாவது நாவல். 2023-ம் ஆண்டில் வெளிவந்தது. 298 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.

இவரது முதல் நாவலான ‘ரிங்கிட்’ (குறுநாவல்) 2018-ம் ஆண்டில் வெளிவந்தது. அதுவும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்தான். ‘அவரவர் வெளி’ என்னும் சிறுகதை விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு 2018-ம் ஆண்டிலும், ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எனும் மலாய் இலக்கிய அறிமுகக் கட்டுரைத் தொகுப்பை 2015-லும் வெளியிட்டுள்ளார்.

அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவலை வாசிக்கும் முன் மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் ‘தாரா’ நாவலை வாசித்திருந்தேன். இந்த இரு நாவல்களிலும் சில ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தேன். இரு நாவல்களிலுமே தொன்மத்தின் பயன்பாடு, வெளிநாட்டில் இருந்து மலேசியாவிற்கு வேலை வந்திருக்கும் அந்நியர்களின் இருப்பும் வாழ்க்கை முறையும், ஆங்காங்கே நடக்கும் கொலையும் துர்மரணமும் போன்றவை திரும்பத் திரும்ப ஒரே நாவலில் என்னை இழுத்து கொண்டது போல உணர்ந்தேன்.

குறிப்பாக ஒரே நிலத்தில் நடக்கும் இருவேறு வாழ்க்கையாக அந்நாவல்கள் விரிந்து எனக்கான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தன. சரி அந்த அனுபவத்தை வைத்து மலேசியாவில் ஒரே காலகட்டத்தில் வெளிவந்த அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவலையும் ம.நவீனின் ‘தாரா’ நாவலையும் ஒப்பிட்டு எழுதலாமே என்கிற எண்ணமும் எழுந்தது.

அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைந்த போதுதான் இன்னொரு சம்பவம் நடந்தது. இந்த இருவரின்  சமகால எழுத்தாளராக சொல்லக்கூடிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘தலேஜு’ என்னும் நாவல் வெளிவருகின்றது. அந்த நாவல் குறித்த சில குறிப்புகளை வாசிக்கும் போது இதுவும் எனக்கு பழக்கமானதாகவே தோன்றியது. கொஞ்சம் பொறுத்திருந்து அந்த நாவல் வெளிவந்ததும் வாங்கினேன்.

எனக்கு முன் அந்த நாவலை வாசித்த நண்பர் அந்த நாவல் குறித்து என்னிடம் பேசப்பேச எனக்கு முன்னமே பழக்கமான பாதையில் வேறு வழியில் இருந்து நுழைவது போல இருந்தது. ‘தலேஜு’ நாவல் எனக்கு தேஜாவு உணர்வைக் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

ஆக மலேசியாவில் சமகால எழுத்தாளர்களாக அறியப்படும் மூன்று எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில் ஆளுக்கு ஒரு நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்கள். மூன்றிலுமே ஏதோ ஒருவகையில் ஒற்றுமை இருக்கிறது. அந்த மூன்று நாவல்களையுமே வாசித்து பேசவேண்டிய அவசியமும் இருப்பதாகத் தோன்றுகிறது.

யாராவது ஒருவர் இந்த மூன்று நாவல்களையும் வாசித்து ஒப்பிட்டு எழுதினால் அது புது முயற்சியாக அமைந்து இன்னொரு திறப்பையும்  வாசகர்களுக்கு திறந்து விடலாம். யாருக்கு தெரியும் அதன் தொடர்ச்சியாக ஏங்கேனும் ஓர் எழுத்தாளர் நான்காவதாக ஒரு நாவலை எழுதத் தொடங்கலாம்.

அதுவெல்லாம் அதன் போக்கில் நடக்கும் போது நடக்கட்டும். நடக்கும்.  நாம் இப்போது  அ.பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவலுக்குச் செல்வோம்.

பொதுவாக இப்படி இந்நாவலைக் குறித்துச் சொல்ல தொடங்கலாம் என்றிருக்கிறேன். உருபெற்ற உருகுலைந்த மலேசிய தமிழர்களின்  வாழ்க்கையை ஆதாரமாக எடுத்து அந்த உருபெற்ற உருகுலைந்த பின்னணிகளுக்கு அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தனது களப்பணியில் இருந்து தனது புனைவு திறனின் இருந்து நாவலாசிரியர் ஒரு கோடு போட்டிருக்கின்றார். அந்தக் கோட்டை அவர் போட்டிருப்பது இங்குள்ள வரலாற்றின் ஊடே என்பதுதான் இந்த நாவலுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது.

வரலாறுகளில் இல்லாத சில பக்கங்களை இங்கு பலரும் மறந்து போன பக்கங்களைத் தன் வரலாற்று புனைவு மூலம் ஒவ்வொரு பக்கமாக திறந்துவிடுகின்றார் நாவலாசிரியர்.

இந்நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள் எதுவுமே முழுமையடையாதது போல எனக்கு தோன்றியது. ஆனால் நாவலை வாசித்து முடித்தப்பின் காலச்சூழலில் சிதைந்தும் சிதறியும் போன மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி ஓரு முழுமையை எதிர்ப்பார்க்க முடியும் என்ற கேள்வியே மிஞ்சியது.

இன்று அரசியல் காரணங்களுக்காய்ட் ‘தற்குறி’ என்ற வார்த்தை பிரபலமடைந்திருப்பதை நீங்களும் கவனித்து இருப்பீர்கள். இந்த நாயக வழிபாடு எங்கிருந்து தொடங்கியது என்கிற ஒரு பார்வையை நாவலாசிரியர் எழுதியிருப்பார். குறிப்பாக தமிழர்களுக்கு அவர்கள் தலைவர்களாக எடுத்துக் கொள்ளும் நபர்கள் மீது எழும் பற்றுக்கும் அந்த விசுவாசத்திற்கும் பின்னால் இருக்கும் உளவியல் இந்நாவலில் வராலாற்று பின்னணியில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

மலேசியாவில், பினாங்கு வட்டாரத்தில் புகழ் பெற்ற ‘ஜாலான் பாரு ஐயா’ கோவில் தொடங்கிய விதத்தையும் அந்தக் கோவில் வளர்ந்த விதத்தையும் நாவலில் வாசிக்கும் போது இங்கு பல கோவில்களின் தோற்றத்திற்கு பின்னால் இருக்கும் கதைகள் மீது இயல்பாகவே ஆர்வம் எழுகின்றது.

இப்போதும் அந்த ஐயா கோவில் அங்கேயே இருக்கிறது. ஐயா அங்கே இருப்பதற்கு எத்தனை ஐயாக்கள் அங்கில்லாமல் போனார்கள் என நாவலை வாசிப்பவர்கள் கண்டுகொள்ளக்கூடும்.

எந்த ஒரு நிலத்திற்கும் ஓர் அமானுஷயம் மறைந்திருக்கும் என நம்புகிறேன். அது அந்த நிலத்தின் ஆதித்தாயின் வாரிசு. ஒரு போதும் அது அந்த இடத்தை விட்டு அகலாது. சிலருக்கு அது புலப்படும் சிலரை அது புரட்டி எடுக்கும் சிலருக்கு ஒருபோதும் அதைப்பற்றிய அனுபவமே இருக்காது. இந்த மூன்றையுமே இந்நாவலில் வாசகர்கள் அவதானிக்கலாம். உண்மையில் ஆசியர் அவ்விடத்தை எழுதும் போதெல்லாம் அடுத்த என்ன நடக்குமோ என்கிற பதற்றத்தை நமக்கு கொடுக்கும். சில இடங்களில் அந்த அமானுஷயம் வாசிக்கின்றவர்களையும் பயமுறுத்துகிறது.

பினாங்கில் கடல் மேல் பாலம் கட்டும்போது தொடங்கும் இந்நாவல் அந்தப் பாலம் கட்டி முடித்து திறப்பு விழா செய்யும் போது முடிவடைகிறது. எனக்கு சிறு வயதில் இருந்து கடலில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி பாலம் போட்டார்கள் என்கிற சந்தேகம் இருந்தது. பினாங்கு வந்து அந்தப் பாலத்தைக் கடந்திருந்தால் உங்களுக்கும் அந்தச் சந்தேகம் எழும். அதற்கான பதிலை இந்நாவலில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அது போக எல்லா இடத்திலுமே உதிரி மனிதர்கள் துன்பத்திலும் துயரத்திலும் உழன்றபடியே அதிலிருந்து மீண்டு வர முயன்று கொண்டு இருகின்றார்கள். சிலருக்கு அங்கே இருப்பதே இலாபத்தைக் கொடுக்கும்படி உள்ளது. எந்த சூழலிலும் தனக்கான இலாபமும் தன் பசிக்கான தீனியுமே போதும் என்று நினைக்கும் மனிதர்களை இந்நாவலில் காணலாம்.

‘கரிப்புத் துளியாக’ இந்நாவல் காட்டும் உலகம் கடல் நீராகவும் இருக்கலாம் அங்குள்ள மனிதர்களின் கண்ணீராகவும் இருக்கலாம். இந்நாவலை வாசித்து முடிக்கும்போது நமது கன்னத்திலும் அந்தத் துளிகளை நம்மால் உணர முடியும்.

எனக்கு பிடித்தமான இந்த நாவல் குறித்து ரொம்பவும் கொஞ்சமாகவே பேசியுள்ளேன். சிறுகதை போல அல்லாமல், நாவலின் உலகத்திற்கு உங்களை நுழைய வைப்பதே எனக்கு வேண்டும். அந்த உலகில் நீங்களும் ஒரு ஆளாக சென்று வந்துவிட்டால் இதைவிட நாம் அதிகமாக பேசலாம். அதற்கு நீங்கள் இந்நாவலை வாசிக்க வேண்டும். அதற்கான சிறு வெளிச்சமாகத்தான் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.

இயற்கைக்கும் அதனை காசாக்க நினைக்கும் பேராசை கொண்ட மனிதர்களுக்கும் மத்தியில் பலியாகும் மக்களின் குரலில் ஒலிக்கும் படைப்புகளில் இதுவும் ஒன்று.

‘தோட்ட துண்டாடல்’ என்பது மலேசிய தமிழர்களின் இருண்ட காலங்களில் ஒன்று. இன்று பல மலேசியர்களுக்கே அந்த வார்த்தைக்கு பொருள் தெரியாமல் போனது துரதிஷ்டம். பொருள் தெரியாமல் போனவர்களுக்கு அந்த மனிதர்களின் வலிமட்டும் தெரியவா போகிறது. இந்நாவலில் அந்த வலிக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கின்றார் நாவலாசிரியர்.

இந்நாவலை திறந்தால் கீழே வைக்க முடியாததற்கு நாவலின் உள்ளே பலவற்றை ஆசிரியர் வைத்திருக்கின்றார். பல இடங்கள் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்கிற கேள்விகளோடு அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வியும் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை தீபாவளி சமயத்தில் கோலாலும்பூர் பிரிக்பீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு வரிசையில் சில பெண்கள் நாற்காலி மேஜை போட்டு பலரின் கைகளுக்கு மருதாணிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். மனைவிக்கு மருதாணி வைக்கத்தொடங்கிய பொண்ணின் கைகளைப் பார்க்கலானேன். அத்துணை வேகம். நமக்கு மூன்றாவதாக கை இருந்தாலும் அதற்கு சேர்த்து ஒரே சமயத்தில் மருதாணி வைத்துவிடுவார் போல.

அவரின் கைவேகத்தைப் பார்த்ததும் இவ்வளவு வேகத்தில் மருதாணி போடும்போது அது தவறாக போய்விடாதா என கேட்டேன். ஒரு கணம் கேள்வி கேட்டது யார் என்பது போல நிமிர்ந்து பார்த்தவர் அடுத்த கணமே  தனது வேலையில் இறங்கிவிட்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் எப்போதும் மறக்காது.

‘நாம விரும்பி செய்யும் எதிலுமே தவறு நேர்ந்தால் அதுவும் ஒரு கலையாக மாறிவிடுமே…” என்றார். உண்மைதான் அவர் சொல்லிக்கொண்டே கையில் சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு கோடும் அப்படி ஒடு கோடும் போட்டு என்னைக் கூப்பிட்டு காட்டி அதற்கு நடுவில் எதையோ செய்தார் கொஞ்ச நேரத்தில் அந்த மருதாணி என் மனைவியில் கையில் இலைகளுக்கு நடுவில் பூத்திருக்கும் அழகிய மலரானது.

கரிப்புத் துளிகள் நாவலுமே இப்படியான பல சாத்தியங்களை நமக்கு கொடுத்த வண்ணமே இருக்கிறது. மலேசியாவை மட்டுமல்ல மலேசிய தமிழர்கள் கடந்த வந்தப் பாதைகளையும் இங்கு  தமிழர்களுக்கு தமிழர்களே செய்த துரோகத்தையும் இந்த நிலத்திற்கே உரிய தொன்மங்களைத் தெரிந்து கொள்ளவும் நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும். மலேசிய வரலாற்றைச் சொல்லக்கூடியதாக எப்போதும் சொல்லப்படும் சுதந்திரத்திற்கு முந்திய கதைகள் போலவே சுதந்திரத்திற்கு பிந்திய கதைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கான ஒரு கதவை இந்த நாவல் வாசகர்களுக்கு திறந்துவிடுகின்றது.

மீண்டும் அடுத்த மாதம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு உங்களைச் சந்திக்கின்றேன்.

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *