மகா.இராஜராஜசோழன்.
ஓடி வருகிறது ஒற்றைக் கொம்புக் குதிரை. “புஸ்புஸ் புஸ்புஸ்”என வேகமாகக் கேட்கும் அதன் மூச்சுவிடும் சத்தம் காட்டையே அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதன் காலடி சத்தம் “ட்டட் டக் ட்டட் டக் ட்டட் டக்” என வேகமாகக் கேட்டது. காட்டின் தரையில் வாழ்கின்ற எறும்புகளும் ஈக்களும் பயந்து நடுங்கி செடிகளின் மீது ஏறி அதன் அதன் திறனுக்கான உயரத்தில் அமர்ந்து கொண்டு சத்தம் கேட்ட திசையில் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
மரத்தின் மீது அமர்ந்திருந்த பறவைகளுக்கும் இந்தச் சத்தம் புதுமையாக இருந்தது.
இந்தக் காட்டின் மரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளில் சில வேற்று நாட்டிலிருந்து வந்தவை ஆனாலும் அந்தப் பறவைகளுக்குத் தமிழ் தெரிந்திருந்தது. தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பறவையிடம்
“இது என்ன சத்தம்னு உங்களுக்குத் தெரியுமா?”
பக்கத்தில் அமர்ந்திருந்த பறவை அமைதியாகவே இருந்தது.
இப்போது முன்பைவிட வேகமாக.
“தமிழில்தானே கேட்கிறேன் தமிழ் தெரியுமா? தெரியாதா?
“இது என்ன சத்தம்னு உங்களுக்குத் தெரியுமா?” முன்னாடி கேட்டதைவிட சத்தமாகவும் மூஞ்ச கொஞ்சம் கோவமாகவும் வைத்துக் கொண்டு கேட்டது.
அந்தத் தமிழ்நாட்டுப் பறவைக்கு இந்த வெளிநாட்டுப் பறவை என்ன பேசுகிறது என்று தெரியவில்லை. அதன் முகத்தைப் பார்த்தால் அந்தப் பறவை கோவப்படுகிறது என்பது மட்டும் தெரிகிறது. அதனால் கொஞ்சம் தன் முகத்தை மாற்று வாயை அகல விரித்துத் தன் இயலாமையைத் தலையசைத்துக் காட்டியது.
இந்த நேரத்தில் வேகமாக வந்து ஒரு பறவை தமிழ்நாட்டுப் பறவைக்கும் வெளிநாட்டுப் பறவைக்கும் இடையில் அமர்ந்தது. வந்து அமர்ந்த பறவைக்கு இடம் விட்டு இரண்டு பறவைகளும் நகர்ந்து அமர்ந்து கொண்டன.
இப்போது “ட்டட் டக் ட்டட் டக் ட்டட் டக்” என்ற சத்தம் பக்கத்தில் கேட்கிறது. வேகமாகக் கேட்பதால் காது தாங்க முடியாத சத்தமாக இருந்ததால் வந்து அமர்ந்த பறவையும் வெளிநாட்டுப்பறவையும் காதுக்குள் சத்தம் கேட்காதவாறு தன் கைகளைக் கொண்டு இறுக்கமாக மூடிக் கொண்டன. அப்போதும் முன்பு காதுகேட்காதது போல் அமர்ந்திருந்த அந்தப் பறவை எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தது.
அடே சத்தம் காதமூடியும் வேகமா கேட்குது காத மூடு உன்னைதான் காதை மூடு” எனக் கத்தியது. அந்தப் பறவைக்கு வெளிநாட்டுப் பறவை சொன்னதும் காதில் விழவில்லை. வானத்தையும் பூமியையும் பார்த்தபடி அமர்ந்திருந்தது.
இந்த இரண்டு பறவைகளுக்கும் இடையே வந்து ஒரு பறவை அமர்ந்தது.
வந்து அமர்ந்த பறவைக்கு இடம் விட்டு இரண்டு பறவைகளும் நகர்ந்து அமர்ந்து கொண்டன.
பேருந்தில் அமர இடம்பிடிக்கும் மனிதர்களைப் போல இன்னும் பறவைகள் உலகம் மாறிப்போகவில்லை.
வந்து அமர்ந்த பறவை
“ட்டட் டக் ட்டட் டக் ட்டட் டக்” என வேகமாகச் சத்தம் கேட்கும் திசை நோக்கித் திரும்பிப் பார்த்தது.
அந்தப் பறவை மற்ற பறவை, விலங்குகளைப் போல அதிர்ச்சி அடையவும் இல்லை. பயப்படவும் இல்லை. மாற்றாக அந்த “ட்டட் டக் ட்டட் டக் ட்டட் டக்” சத்தம் அந்தப் பறவையின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கியது. அந்தப் பறவையின் முகம் கொடிய வெய்யிலின் வாட்டத்தையும் தாண்டி மலர்ந்தது.
வெளிநாட்டுப்பறவைக்கு இப்போது ஒன்று புரிந்துவிட்டது, வரும் ஓசையாலோ அந்த ஓசையை எழுப்பி ஓடிவரும் விலங்காலோ எந்தத் துன்பமும் இல்லை என்று. இப்போது வெளிநாட்டுப் பறவை வந்து அமர்ந்த பறவையைப் பார்த்துப் புன்னகை செய்தது.
இரண்டு பறவைகளும் சிரிப்பால் நட்பை உருவாக்கிக் கொண்டது. பேசத் தொடங்கின. வெளிநாட்டுப் பறவை வந்து அமர்ந்த பறவை இடம் மீண்டும் கேட்து
“அது என்ன சத்தம்?”
“இதோ கேட்கிறதே அந்தச் சத்தமா?”
“ஆமாம்”
“அது என் நண்பன் ஓடிவரும் சத்தம்”
“உங்கள் நண்பன் ஓடி வரும் சத்தத்தைக் கேட்டால் பெரிய விலங்காக இருக்குமோ?’
“ஆமாம் பெரிய விலங்கு மட்டும் இல்ல. பார்க்க ரொம்ப அழகாவும் இருக்கும். அதோட உடல் நிறம் வெள்ளையா இருக்கும் பால் போலப் பாக்கவே அழகா இருக்கும். அதோட பிடரி மயிர் நீலமா மயில்ஞய தோகை நிறம் போல இருக்கும். அதோட கண்ணு வைரம் போல மின்னும். இதை எல்லாத்தைவிடம் சிறப்பு ஒன்னு இருக்கு”
“அது என்ன சிறப்பு?”
“எந்த விலங்கும் இல்லாத அழகான ஒற்றைக் கொம்பு ஒன்னு அதுக்கு உண்டு”.
“காண்டா மிருகத்துக்கும் கொம்பு இருக்குமே?”
“இது காண்ட மிருகத்தின் கொம்பைவிட அதிசயம் நிறைந்தது. அதன் மீது அமர்ந்தால் வானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வு தோன்றும், அதன் மீது அமர்ந்தால் இந்த உலகத்தையே ஒரு சுற்றுச் சுற்றிக் காண்டும்”
ஓ ஓ ஓ அப்படியா? நீ அதன் ஒற்றைக்கொம்பு மீது அமர்ந்து இந்த உலகத்தைச் சுற்றிப் பார்த்திருக்கியா?
“ஆமாம் அந்த ஒன்றைக் கொம்புக்குதிரை இந்தக் காட்டிற்கு வந்த புதிது அப்போ ஒரு முறை அதன் ஒற்றைக்கொம்பு மீது என்னை அமரவைத்துச் சுற்றிக்காட்டுச்சு”
“அப்படியா? கேட்கவே வியப்பாக உள்ளது. என்னையும் ஒரு முறை அதன் ஒற்றைக் கொம்பில் அமரவைத்துச் சுற்றிக்காட்டச் சொல்கிறாயா?” என்று வெளிநாட்டுப் பறவை கேட்டது.
“கேட்கலாமே” என்றது உள்ளூர்ப் பறவை.
இரண்டு பறவைகளும் பேசிக் கொண்டே இருக்கையில் மூச்சிவிடும் சத்தத்தோடு ஓடிவந்து நின்றது ஒற்றைக் கொம்புக்குதிரை.
உள்ளூர்ப் பறவை மகிழ்ச்சியில் என்ன நண்பா நலமா ? எனக் கேட்டுக் கொண்டே பறந்து போய் அதன் ஒற்றைக் கொம்பின் மீது அமர்ந்து கொண்டது.
நட்பின் மேன்மை உணர்ந்த ஒற்றைக்கொம்புக் குதிரை பறவையிடவும் எதுவும் கேட்கவே இல்லை உலகைச் சுற்றிக் காட்ட ஓட ஆரம்பித்தது.


