–ரவி அல்லது.
1.
பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த மரக்கடை வாசலில் ஹக்கீம் தட்டு ரிக்சாவை நிறுத்தி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தான். இனி இதை பழைய பேருந்து நிலையம் என்றுதான் சொல்ல வேண்டும்.நேற்று துணை முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த ஆட்சியில் மன்னார்குடி போகும் ரோட்டில் பைபாஸ் கார்னரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை வைத்தார்கள். இவர்கள் ஆட்சியில் தஞ்சாவூர் செல்லும் ரோட்டின் பைபாஸ் கார்னரில் அண்ணா, கலைஞர் சிலையைத் திறந்து இருக்கிறார்கள்.
அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஹக்கீமிற்கு அல்லாஹ் ரிஸ்க்கை வைத்து இருந்திருக்க வேண்டும். அவன் சில சாமான்களை அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிலைகள் திறக்கும் பைபாஸ் இடத்திற்கும் ஏற்றி இறக்கிக் கொண்டு இருந்தான். வாடகை வாங்க காத்திருக்கும் போது சும்மா நிற்காமல் அங்கிருந்த நாற்காலிகளை வரிசையாக போட்டுக்கொண்டு இருந்தான். பல பேர் அதே வேலையை செய்து கொண்டு இருந்தார்கள். அவனை வாடகைக்கு அழைத்தவர் பைபாஸ் ரோட்டின் ஒரு வழியை மறைத்து மேடை போட்டுக் கொண்டிருந்த இடத்தில் எங்கோ சென்றுவிட்டு வந்து அங்கு காரை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார்.
“அண்ணே…. ஆறு ட்ரிப்ண்ணே. நீங்கள் பாத்து ஏதாவது குடுங்கண்ணே.”
“நீ ஏன்டா சேரைத் தூக்கிப் போட்டுக்கிட்டு இருக்கே. அது அவன்க வேலை. “
அங்கிருந்த யாரையோ அழைத்தவர். வாடகை கொடுக்கச் சொல்லி சொன்னார். ஹக்கீமிற்கு பயம் வந்துவிட்டது. இவரைப் பார்த்தால் நல்லவராக தெரிகிறார். அவர் எப்படி இருப்பாரோ என்ற கவலை வந்தது. அவர் அழைத்தவர் போன் பேசிக்கொண்டு செய்கையிலையே வானத்தைக் காட்டினார். இவர் புரிந்தவராக தன் கையைத் தொடரச் சொல்லி செய்கையில் செய்தார். ஹக்கீம் இவைகளைப் பார்த்து மனதிற்குள் ‘அல்லாஹூ அக்பர்’ என சொல்லிக் கொண்டான். அவன் அதிகம் பயன் படுத்தும் வார்த்தை இது.
அவனிடம் இரண்டு ஐநூறு ரூபாயைக் கொடுத்தார்.
“போதுமாடா” என்றார்
“நீங்கள் எது கொடுத்தாலும் சரிண்ணே.”
“நான் சொன்னேன்னு பிரியாணி வாங்கிட்டுப்போடா.”
அவனுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது அவனுக்கு எதிர்பாராத விதமாக கிடைத்தது. பணத்தை வாங்கியதும் அவனுக்கு சுலைகாவின் நினைவு வந்தது. அவளுக்கு இந்தப் பணத்தை ஜீ-பே செய்யச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். நோம்பு வைத்து இருந்ததால் ரிக்சா ஓட்ட சிரமமாக இருந்தாலும் பைபாஸ் என்பதால் பெடலை மிதிப்பதற்கு எளிமையாக இருந்தது.
டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கை தென்னை மர நிழலில் ஆங்காங்கே தோப்புகளில் உட்கார்ந்து பலரும் குடித்துக் கொண்டு இருந்தார்கள். ஹக்கீம் ஒண்ணும் நல்லவனில்லை. அவனும் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்தவன் தான். இப்போதும் யாராவது ஸ்டாண்டில் ‘ஹக்கீம் இருக்கானா’ என்று கேட்டால் ‘யாரூ அந்த கஞ்சாக் குடிக்கிப் பயலா’ என்றுதான் கேட்பார்கள். அவன் சுலைகாவை நிக்காஹ் செய்வதற்கு ஒரு வருடம் முன்பே கஞ்சா அடிப்பதை நிறுத்திவிட்டான். ஆனாலும் அந்தப் பெயர் மாறியபாடகத் தெரியவில்லை.
அந்தப் பழக்கம் அவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும் போது ஆரம்பித்தது. அவனுடைய அத்தா வபாத்தானதும் வீட்டுச் சுமை அவன் தலைமேல் இறங்கியது. அவன் உம்மா உடல் நிலை சரியில்லாமல் படுத்துக் கிடந்தாள்.
அந்த தெருவில் இருந்த தட்டு ரிக்சா ஓட்டும் முத்துவோடு அவன் இருந்த ஸ்டாண்ட்க்கு போவான்.முத்து நோஞ்சானாக இருந்ததால் அவனுக்கு ஹக்கீம் தேவைப்பட்டான். மூட்டைகளை ஏத்துவது இறக்குவது போன்ற எடுபிடி வேலைகளை அவனுக்கு செய்து கொடுத்தான். ‘இந்த ஊரிலையே தட்டு ரிக்சாவுக்கு ட்ரைவர் வச்சிருக்கிறது.முத்துதான்டா.’ என்று ஸ்டாண்டில் கிண்டலடிப்பார்கள். முத்து கொடுக்கின்ற காசில் தான் கொஞ்சம் வயிற்றை அவனால் நனைக்க முடிந்தது.
உம்மாவுக்கு வைத்திய செலவு பார்ப்பது எல்லாம் அவனால் நினைத்துப் பார்க்க முடியாத விசயம். முத்துவிடமிருந்து பழகிக் கொண்ட கஞ்சாப் பழக்கம் பத்து வருடத்திற்கு மேலாக அவனிடம் இருந்தது.கொஞ்ச நாளில் முத்து இறந்துவிட்டான். முத்து மகனைப் படிக்க வைத்து அவனுக்கு அரசாங்க வேலை வாங்க வேண்டும் என்று முத்து மனைவி நினைத்து இருந்ததால் ரிக்சாவை இவனிடமே கொடுத்துவிட்டாள்.
‘கஞ்சா பீடை இதோட ஒழிஞ்சது ‘ என்று அவள் நினைத்துக் கொண்டாள். வண்டி இவனுக்கு வந்ததால் அவன் கஞ்சா அடிப்பது அதிகமானது. அதோடுதான் விழிப்பான் அதோடுதான் தூங்குவான். அதனால ‘கஞ்சாக் குடிக்கி’ என்று யாரும் சொல்வதாக சொன்னால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான்.
ஜிக்னி கிழவி தான் அவன் கஞ்சாக் குடிப்பதை நிறுத்தினாள்.கிழவி அவன் உம்மாவின் தோழி. இப்போது ஹக்கீமிற்கு சொந்தமாக வீடு இருக்கிறது என்றால் அது ஜிக்னி கிழவியால்தான். அந்தக் கிழவி தான் ஹக்கீம் உம்மாவிற்கு இந்த இடத்தைக் கொடுத்தாள்.
ஹக்கீம் உம்மா, அவன் அத்தா, ஜிக்னி கிழவி எல்லோரும் கமுதி பக்கத்தில் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள். ஹக்கீமின் உம்மாவை காதலித்து கலிமா சொல்லி நிக்காஹ் செய்தவர்தான் அவன் அத்தா. அவர் ஒன்றும் பெரிய மிட்டா மிராஸ் கிடையாது. சாதாரணமாக அன்றைய காலகட்டத்தில் மக்கள் வெறுக்கக்கூடிய துப்புறவு தொழிலாளி.
ஹக்கீம் உம்மா ஒரு குடிசையில் இருந்தபோது அவன் அத்தா சாக்கடை விச வாய்வுத் தாக்கி மயக்கமடித்து கிடந்த போது காப்பாற்றியதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டது. யாருக்கும் தெரியாமல் நிக்காஹ் முடித்ததோடு அவர்கள் இருவரும் ஊரைவிட்டு துரத்தப்பட்ட ஜிக்னியிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவள்தான் இப்போது இருக்கும் இடத்தைப் பாதியாக பிரித்து மறுவாழ்வு கொடுத்து இருக்கிறாள். இந்த சம்பவம் எதுவும் ஹக்கீமிற்கு தெரியாது. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் ஜிக்னி உம்மாவின் தோழி. உம்மா மௌத்தானதும் அவனுக்கு உறவு என்று சொல்ல ஜிக்னியைவிட்டால் வேறு நாதி கிடையாது.
உம்மா மௌத்திற்குப் பிறகு அவன் வீட்டிலேயே கஞ்சா அடிக்கத் துவக்கிவிட்டான். ஜிக்னியும் கிழவியானதால் அவளால் அவனைப் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு அவள் மீனை வெட்டிக் கொடுப்பாள். அதுதான் அவள் தொழில். இரயில்வே கேட்டைத் தாண்டி அந்தப் பக்கத்தில் அவள் உட்கார்ந்து மீனை வெட்டிக் கொடுப்பாள். கேட்டின் இந்தப் பக்கம் ஹக்கீம் ரிக்சாவை ஸ்டாண்டில் போட்டு வைத்து இருப்பான்.
விரா மீன் யாராவது கொண்டு வந்தால் இப்போது எல்லாம் அவளால் உரச முடிவதில்லை. இதற்கு அவள் ஹக்கீமைத்தான் பயன்படுத்துவாள். அங்கே இருந்து கையை ஆட்டினால் இவனுக்கு இங்கிருந்து பார்த்தாலே தெரியும். அவன் அங்கு சென்றுதும் சாம்பல் தேய்த்து கல்லில் உரசச் சொல்லி மீனை வெட்டிக் கொடுப்பாள்.சிலபேர் மணலைப் போட்டு உரசச் சொல்வார்கள்.
பல சமயம் நாமும் மீன் வெட்ட வந்திருந்தால் இந்தக் கஞ்சாக் குடிக்கிங்கிற பேர் வராமல் இருந்திருக்குமோ என்று ஹக்கீம் நினைப்பான்.
ஒரு நாள் ஜிக்னி கிழவி அவனிடம் கேட்டாள்.
“ஏன்டா..மருமவனே.(அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்) கஞ்சாக் குடிச்சே சாவலாம்ன்னு இருக்கியா.கல்யாணம் எதுவும் பண்ட்றது மாதிரி இருக்கியாடா.”
“ஏய்… கிழவி நீ சும்மா இருக்க மாட்டே.நானே வெறுப்புல திரியிறேன்.மறுபடியும் இதே மாதிரி கேட்டே. கல்லக் கொண்டு மண்டைய உடச்சிப் புடுவேன். ஆமாம். “
அவன் கத்தி விட்டு வந்தாலும் அவனுக்கும் முதல் முறையாக கல்யாணம் பற்றிய சிந்தனை வந்தது. ‘நமக்கு யாரு பொண்ணு குடுப்பா. கிழவி ஏதோ ஒளறுது. நமக்குத் தெரியாம கஞ்சா அடிக்குமோ.அடிச்சாலும் அடிப்பா. நெஞ்சலுத்தக்காரி.’ என நினைத்துக் கொள்வான். ஜிக்னி கிழவி அவன் கல்யாணம் பற்றி பேசியதிலிருந்து அவளுக்கு பல ஒத்தாசைகளை அவன் செய்தான். அவளுக்கு அது தெரியாதா என்ன.
இந்தக் காலக்கட்டத்தில் நாகூர் கந்தூரி விழா வந்தது. அவளுக்கு நேர்த்திக்கடன் இருக்கிறது என்று அவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றாள்.
அங்கு அவள் மொட்டை அடித்தாள். ஒரு சில ஏழைகளுக்கு மதியம் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள். அவனை மஸாருக்கு(சமாதி) அழைத்து வந்தாள். அங்கு நான்கு பேர் தலையில் தொப்பி வைத்து ஜரிகையாலான துணிப் பட்டையை மார்பில் போட்டு கையில் வெள்ளியாலான கோள் வைத்துக்கொண்டு பக்கத்திற்கு இரண்டு பேராக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்தாள். மஸாருக்கு உள்ளே இருந்து கொண்டு வந்தப் பெட்டியை தலையில் வைக்கச் சொல்லி குனிந்தாள். அவனையும் குனியச் சொல்லி வைக்கச் சொன்னாள். அவர்கள் கொடுத்தப் பூவை வாங்கிப் பத்திரப்படுத்தினாள். கால் ஊனமுற்ற ஒருவர் பக்கத்தில் பெட்டி வைத்து உட்கார்ந்து அனுமதி சீட்டு கொடுத்துக் கொண்டு இருந்தார். அவரிடம் அனுமதி சீட்டு வாங்கி அவனை மஸாருக்கு உள்ளே சென்று வரச் சொன்னாள்.
ஹக்கீமிற்கு உள்ளே சென்று என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் பெயர் மட்டும்தான் ஹக்கீம். அவன் இதுவரை யாருக்கும் சலாம் கூட சொன்னதில்லை. அவனுக்கு சலாமும் தெரியாது தொழுகையும் தெரியாது. பயந்து கொண்டே உள்ளே சென்றான். நேரடியாக மஸாரைப் பார்த்துவிட்டு இடதுபக்கம் திரும்பி உள்ளே போனால் அங்கிருந்த சிறிய ஜன்னல் ஓட்டை வழியாக அவனுக்கு முன்பாக சென்றவர்கள் பார்த்தார்கள். அவனும் அதுபோல செய்தான். பின்பக்கம் பச்சை நிறத்தில் மரத்தாலான தூண் மாதிரி இருந்ததை தொட்டு வணங்கினார்கள். அவனும் அதுபோல செய்தான். வலது புறம் இருந்த அதே போன்ற சிறிய ஜன்னல் ஓட்டை வழியாக மஸாரைப் பார்த்தான். இப்போது அவனுக்குப் பயம் விலகி இருந்தது. ஜிக்னி கிழவி இவன் வெளியே வருவதை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தாள். அது போன்ற பிரகாசமான முகத்தை ஜிக்னியிடம் ஹக்கீம் இதுவரைப் பார்த்ததில்லை. இருவரும் மஸாரைப் பார்ப்பது மாதிரி மின் விசிறிக்கு கீழே அமர்ந்து கொண்டார்கள். கூட்டம் பாத்திஹா ஓதுவதும் உள்ளே செல்வதுமாக அவரவர் வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள். வந்தவர்களில் இந்துக்களின் கூட்டமும் மலையாளிகள் கூட்டமும் தான் அதிகமாக இருந்தது.
“நான் செஞ்ச ,இந்த நேர்த்திக் கடன் எல்லாம் உன்னோட உம்மா செய்ய வேண்டியது. உனக்காக அவள் நேர்ச்சை செஞ்சது. அதை நான் செய்ய வேண்டியதாக இருக்கு. எனக்கு ஒரு உதவி பணட்றியாடா. “
“சொல்லு செய்றேன். “
அவன் சந்தோசமாக இருந்தான். இதுபோல அவன் வாழ்க்கையில் சந்தோசமான மன நிலையில் அவன் இருந்ததில்லை.
“என் ராசால்லடா மருமவனே. கஞ்சா அடிக்கிறதை நிறுத்திர்றா. உனக்குப் புண்ணியமாப் போகும். “
அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. அது அவனை மிகவும் பாதித்தது.
“உன் மேல சத்தியமா இனிமேல் நான் அடிக்க மாட்டேன்.” என்றான்.
அவள் நெற்றி தரையில் படுமாறு மஸாரை நோக்கி குப்புற விழுந்து வணங்கினாள். பத்து நிமிடம் அப்படியேக் கிடந்தாள். ‘வழியில யாரும் நிக்காதீங்க’ என்று யாரோ குரல் கொடுத்துக்கொண்டு போன போது தான் அவள் எழுந்தாள்.
******
2.
ஊருக்கு வந்ததும் அவன் இரயிலடி பள்ளி வாசல் ஹஜ்ரத்தைப் பார்த்தான். தனக்கு தொழுகையை கற்றுக் கொடுக்கச் சொன்னான்.
ஜிக்னி கிழவி அலைந்து திரிந்து சுலைகாவை அவனுக்கு மண முடித்து வைத்தாள். ‘கஞ்சாக் குடிக்கியைப் பாருடா. அழகான பிள்ளயை கட்டிக்கிட்டு வந்துட்டான்’ என்று தெருவில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.
இப்போது அவனுக்கு வயது இருபத்தி ஐந்து ஆகிறது.நிக்காஹ் முடிந்து முன்று வருடமாகியும் குழந்தைப் பிறக்காததால் ‘கஞ்சா குடிக்கிக் குழந்தைப் பொறக்காது’ என்று காலையில் நகராட்சி பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது பெண்கள் குத்தி காட்டிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சுலைகா பலமுறை அழுவாள்.
“அல்லாஹ்வோட நியமத் தானே மச்சான் குழந்தைங்க. அவன் எப்போ நாட்றானோ.அப்பதானே தருவான். இவங்க குத்திக்காட்டிப் பேசுறாங்கன்னு. நீ வருத்தப்படாதே மச்சான். “
அவன் பேசுவதை அவள் பேசுவதால்தானோ என்னவோ சுலைகா மேல் உயிரையே ஹக்கீம் வைத்திருந்தான்.
இப்போது தான் சுலைகா சூழியாகி பிறந்த இடத்திற்கு சென்று இருக்கிறாள். அவனுக்கு அங்கே அவளை அனுப்ப விருப்பமில்லை. ஏதேதோ சொல்லி அவளை ஏழு மாதம் வரை இங்கே வைத்திருந்தான். அதன் பிறகு அவனுக்கே சுலைகாவிற்கு ஒரு பெண் துணை வேண்டும் என்பதால் அவளின் உம்மாவிடம் அனுப்பிவிட்டான்.
ஆண்டவர் சைக்கிள் கம்பெனியில் பணத்தை அனுப்பச் சொல்லலாம் என அங்கு வந்தபோது அவர் இறந்துவிட்டதாக பிளக்ஸ் வைத்து இருந்தார்கள். பக்கத்தில் இருந்த கடையில் கேட்டபோது ஜி-பே,போன்-பே எதுவும் வேலை செய்யவில்லை என்று சொன்னார்கள். வடக்கிலிருந்து வந்த கூலி வேலைகள் பார்க்கும் ஹிந்திக்காரர்கள் பணம் அனுப்ப முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தார்கள்.
மணிக்கூண்டிற்கு வந்து ரிக்சாவை ஓரமாக நிறுத்திவிட்டு ஹமீதியா ப்ரவுசிங் சென்டரில் கேட்டான். அங்கும் அதேப் பதிலைச் சொன்னார்கள். ஓனர் இஸ்மாயில் பாய் உள்ளே கம்ப்யூட்டரில் ஏதோ செய்து கொண்டு இருந்தார். அவரிடம் கேட்கலாமா என்று தோன்றியது. அவனுக்கு அவரைத் தெரியாது. தொழுவ வரும்போது பள்ளியில் பார்த்தது தான். அவன் தயங்கியபடி வெளியே வண்டி நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்தான்.
அங்கிருந்து பார்த்தபோது ஏசியன் மளிகையில் அதன் ஓனர் சாதிக் அலி பாய் கல்லாவில் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு வெங்காய மூட்டை, மிளகாய் மூட்டை பல முறை அவன் ஏற்றி வந்து போட்டு இருக்கிறான். அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்தான்.
“அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.”
“வலைக்கும் சலாம். வரஹ்மத்துல்லாஹிப் பரக்கத்துஹூ. என்னப்பா. “
“ஒண்ணுமில்லை பாய். மனைவி ஊர்ல டெலிவரிக்கு போயிருக்கா.ஏழு மாசமோ எட்டு மாசமோ. ஆயிரம் பணம் அனுப்ப எல்லா இடத்திலும் கேட்கிறேன். நெட் ஒர்க் வேலை செய்யலைங்கிறாங்க.”
“ஆமப்பா. எனக்கும் அப்படித்தான் இருக்கு. நீ வேற எங்கேயாவது ட்ரைப் பண்ணு. ஏடிஎம்ல போடலாமே. “
“அதெல்லாம் நமக்குத் தெரியாது. பாய்”
அவர் எந்த ஊர் என்று கேட்டார். அவன் சொன்னான்.
“நான் ஒண்ணு செய்யிறேன்.எங்க ஊர்க்காரங்க. அங்க மளிகைக் கடை வச்சிருக்காங்க. நான் போன் பண்ணி சொல்லிட்றேன்.அங்கப் போய் வாங்கிக்கச் சொல்லு. உன் மனைவி பேர் என்ன. “
“சுலைகா பாய்.”
அவர் போன் செய்து விவரங்கள் சொன்னார்.
“இப்பவே போய் வாங்கிக்கச் சொல்லுப்பா.”
“ஜஸாகல்லாஹூ ஹைர். “
அவன் பணம் கொடுத்தான். அவர் ஏதோ யோசித்தவராக சொன்னார்.
“நான் இங்கு பணம் எல்லாம் அனுப்புவதில்லை. நீ கேட்டேன்னுதான் இந்த உதவியைச் செஞ்சேன். இதை என்னோட பெருநாள் ஹதியாவா வச்சுக்கப்பா. ” என்றார்.
“பரவாயில்லை வேற யாருக்காவது கொடுங்க பாய்.”
அவர் வற்புறுத்தியதும். ஐநூறு ரூபாய் தான் எடுத்துக்கொள்வதாகவும். ஐநூறை வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்றும் சொன்னான்.
பணம் ஆயிரத்தைக் கொடுத்து அரிசி ,பிஸ்கெட், மளிகை சாமான்கள் கொஞ்சம் சொன்னான். சாதிக் அலி பாய் சாமான்களுக்கு விலைகளைப் போட்டு கூட்டிப் பார்த்தால் அது சரியாக ஐநூறு ரூபாய் வந்தது. அவனிடம் பில்லைக் கொடுத்து விட்டு ஆச்சரியமாக அவன் சாமான்கள் எடுத்துப் போவதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இஷா தொழுது முடித்ததும் ஜிக்னி கிழவி உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.
டிக்காசனைப் போட்டு வாங்கி வந்த பிஸ்கெட்டை சாப்பிடக் கொடுத்து மாத்திரையைச் சாப்பிடச் சொன்னான். அதன் பிறகுதான் கிழவிக்கு உடம்புக்கு பலம் கிடைத்து எழுந்து உட்கார முடிந்தது.
“நான் தராவித் தொழப்போறேன். வேற எதுவும் வேணுமா. “
“இன்னைக்கு அவசியம் போகனுமாடா.”
“இந்த வருசம் விடாம தராவித் தொழனும்னு நினைச்சு வச்சிருக்கேன். “
“சரி. இன்னைக்கு இங்கேயைப் படுத்துக்க. சுலைகாவுக்கு போன் பண்ணியா.”
“போன் சார்ஜ் இல்லாம ஆஃப்பாகி கிடக்கு. இங்க சார்ஜ் போட்டுட்டுப் போறேன். அவ பேசினாலும் பேசுவா. நீ எடுத்துப் பேசிக்க. “
“அவ காலுன்னு எப்பட்றா. எனக்குத் தெரியும். “
“அவ கால் வரும்போது சுலைகா..சுலைகா… ன்னு வரும் எடுத்துப் பேசிக்க. “
ஜிக்னி அவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடல் வலி அதிகமாக இருந்தது.
தொழுது முடித்து வந்ததும். ஜிக்னி வீட்டிற்கு தான் ஹக்கீம் போனான். அவள் படுக்கையிலையே சிறுநீர் கழித்து இருந்தார். அவரின் துணிகளை மாற்றிப் படுக்க வைத்தான்.
“ஆஸ்பத்திரி போவோமா. “
“வேணாம் காலையில் பார்த்துக்கலாம். உனக்குதான்டா சிரமம். “
“எனக்கும் யாரும் இல்லை. உனக்கும் யாரும் இல்லை. நான் செய்யாமல் உனக்கு வேற யாரு செய்யுறது. நான் இதுவரை கேட்டதே இல்லை. உனக்கு , எங்க உம்மா, அத்தாவுக்கு எல்லாம் சொந்தக்காரங்களே இல்லையா. “
அவள் சிரித்தாள். அவன் மனைவி சுலைகா ஒரு முறை கேட்டபோது இதே போலத்தான் சிரித்தார். ஒரு நாள் இரண்டு பேரையும் உட்கார வைத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தார். அது முடியாமல் போனது. இவனிடம் இப்போது சொல்ல வேண்டியதாக இருக்கிறது என நினைத்து அவனைப் பெத்தவர்களின் கதையைச் சொன்னார். அவனுக்கு அவன் உம்மாவைப் பார்க்கணும் போல இருந்தது.
“உம்மாவும் வாப்பாவும் உன்னை ஏன் தேடி வரணும். “
“அப்போ தெற்கே ஜாதிக்கலவரம் கடுமையாக இருந்தது. குடும்பம் குடும்பமாக எல்லோருமே இந்தப் பக்கம் வந்தாங்க. அவுங்க கூட இவங்களும் வந்துட்டாங்க. நான் இங்க இருக்கிறது அவுங்களுக்குத் தெரியாது. அந்த இருளன்தான் எங்கள சேர்த்து வச்சிருக்கனும்.”
ஜிக்னி அழுதார்.
“என்னைய ஒன்பதுன்னு(ஹக்கீமிற்கு இந்த வார்த்தையை ஜிக்னியிடமிருந்து கேட்டது உடம்பைக் கூச வைத்தது.) அவன் ஜிக்னி மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். ஏன்டா… நீ தலையக் குனியிற.எனக்கு கேட்டு கேட்டு எல்லாமே மரத்துப்போச்சுடா. ஒன்பதுன்னு ஊர்ல அடிச்சி விரட்டிட்டாங்க. அங்க சுத்தி இங்க சுத்தி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன். என்னைய மாதிரி ஒரு அக்கா இந்த இடத்தில் இருந்துச்சு. அதுதான் போகும்போது இதைக் குடுத்துட்டுப் போனிச்சு.”
“அவுங்க எங்கப் போயிட்டாங்க.”
“அது பார்க்க அழகா இருக்கும். இங்க அதுனால காலம் தள்ள முடியல. நான் பாம்பே போறேன்னு போயிடுச்சு. அப்புறம் வந்த ஆட்சி மாற்றத்துல இந்த இடத்துக்கு எனக்குப் பட்டா கொடுத்தாங்க. என்னன்னமோ மாறிப் போச்சு. எங்க மேல உள்ள பார்வை மாறலைடா. இந்த வாய்க்காலைத் தாண்டி கஞ்சா அடிக்கிறவனைத் தவிர யாராவது வர்றானா பாரூ.”
அவன் மௌனமாக உட்கார்ந்து இருந்தான். அந்த ஏரியா துப்புரவு தொழிலாளர்கள் வாழும் பகுதி. அங்கு மற்றவர்கள் குடி இருக்கத் தயங்கினார்கள். எந்த இடம் விற்பனை என்றாலும் இவர்களுக்குள்ளே விற்று வாங்கினார்கள். இரண்டு ஏழைப்பட்ட முஸ்லிம் குடும்பம் இங்கு இருந்தது. அதில் ஹக்கீம் குடும்பமும் ஒன்று. இன்னொரு குடும்பம் வீட்டைக் காலி செய்து போய்விட்டார்கள்.
ஆற்றின் பாசன வாய்க்காலைத் தாண்டி வந்தால் ஹக்கீம், ஜிக்னி வீடு இருக்கும். இடது புறம் திரும்பினால் புளிய மரம் நிற்கும். அதன் கீழ்தான் கஞ்சா அடிக்க காவாளிப் பயல்கள் வருவார்கள். அவர்களும் ஜிக்னியிடம் பேசமாட்டார்கள்.
ஹக்கீம் வாப்பா இறந்த பிறகு அவன் இந்த புளிய மரத்தடியில் உட்கார்ந்து இருந்த ஒரு நாளில்தான் முத்துவோடு அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது.
ஹக்கீம் வீட்டைச் சுற்றி கருவேல மரங்கள். அதன் பிறகு இரயில்வேக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் வந்துவிடும். வாய்க்காலுக்கு இந்தப் பக்கம் ஜிக்னிக்கு மட்டும் தான் பட்டா கிடைத்தது. ஜிக்னி வீட்டிற்கு பக்கத்தில் குடி இருக்காமல் பலபேர் பட்டாவுக்கு மனு கொடுத்து இருந்தார்கள். அவைகளை அதிகாரிகள் நிராகரித்துவிட்டார்கள்.
“இப்பவே சாக்கடையும் பன்னியும் அதிமா இருக்கு. அப்போ இதைவிட மோசமான நாத்தமாக இருந்திருக்குமே.” என்றான் ஹக்கீம்.
“ஆமாம்.அப்போ இங்கிருந்து கொஞ்ச தூரத்தில மீனு கோழிக் கழிவுகளைக் கொட்டுவாங்க. நாத்தம் குடலைப் புரட்டிக்கிட்டே இருக்கும். மனுஷப் பய நாத்தத்தைவிட இது எனக்கு மோசமானதா தெரியல.இங்க வாழ உங்க உம்மா ரொம்ப கஷ்டப்பட்டா.”
அவன் உம்மா முகத்தை நினைவுக்கு கொண்டு வர முயன்றான். அவனால் நினைவுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஆதார் கார்டைப் பார்க்கலாம் என்றால் அவன் உம்மாவே ‘இது நான் இல்லைடா’ என்று சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
“களைப்பா இருக்கு. கொஞ்சம் தண்ணீ குடுடா.”
தண்ணீரைக் குடித்து விட்டு ஜிக்னி பேச ஆரம்பித்தார்.
“கொஞ்ச நாளா எனக்கு சாவு நினைப்பாவே இருக்குடா. அதனால என் பேர்ல உள்ள நிலத்தை உனக்கு உயில் எழுதி வச்சிருக்கேன். நான் செத்துட்டா கோர்ட்டுக்கும் பக்கத்தில் இருக்கிற பில்டிங்ல ஜெயக்குமார்ன்னு ஒரு வக்கீல் இருப்பார். அவர்கிட்ட தான் இதை எழுதினேன். அவர்கிட்ட நான் சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவனுக்கு விஏஓ பார்த்து ஒன்னும் பண்ணத் தெரியாது. அவனுக்கு நீங்கதான் ஒரு உதவியாக செஞ்சுக்குடுங்கன்னு சொன்னேன். அவரோட குமாஸ்தா பழனிகிட்ட ‘எப்பவாவது இது பேரன் வந்தா தொறத்திவிட்றாத. எனக்கிட்ட சொல்லிற்றான்னு’ என் முன்னாடியே சொன்னார். நீ அதை மாத்தாம இருந்துடாதடா.”
“உனக்கு இப்போல்லாம் மௌத்து வராது. நீ பொலம்பாம இரு. “
“…. “
“எங்க உம்மா, வாப்பாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். “
“உன்னோட வாப்பா. என் தம்பிடா.என்னைய வீட்ட விட்டுத் தொறத்தி விட்டப்போ. அவன் சின்னப் பையன்.”
****
3.
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை முன்னாடியே கிழவி சொல்லி இருக்கலாம் என நினைத்தான்.
“எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைடா.”
“நானும் உங்கள மாதிரி நோம்பு வைக்கனும்டா. “
“உடம்பு முடியாம இருக்கிறவங்க நோம்பு வைக்கக் கூடாது.”
“நான் பலகீனமா படுத்துக்கிடக்கிறேன். உடம்புக்கு நோவு ஒன்னும் இல்லைடா.”
“முன்னாடியே சொல்லி இருந்தா. பள்ளி வாசல்ல யாரிடமாவது கேட்டிருப்பேன்.இந்த நேரத்தில் ஹஜ்ரத்தும் தூங்கி இருப்பார்.”
அவனுக்குப் பயமாக இருந்தது. படுத்த படுக்கையாக கிடக்கிறதை நோம்பு வைக்கச் சொல்லலாமா. இது நோம்பு வச்சா அல்லாஹ் ஏத்துகுவானா. அவன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ சூராவையும் ‘குல்ஹூவல்லாஹூ’ சூராவையும் மனனம் செய்யிறதுக்கே படாத பாடுபட்டான்.
அவனுக்கு அதுக்கு மேல எதுவும் தெரியாது. ஜும்மா அன்று கடைசி ஸப் இல்லை என்றால் வெளியே தான் தொழுவான். அவனுக்கு இஸ்லாத்தை தெரிய எந்த வாய்ப்பும் இல்லை. சுலைகா வந்த பிறகு தான் அவனே இஸ்லாத்தின் பல விசயங்களை தெரிந்து கொண்டான். நோம்பு வைக்கிறது. நேரத்துக்கு தொழுவுவது எல்லாமே அதன் பிறகுதான். சுலைகாவுக்கு இப்போது போன் செய்தால் திட்டுவாள் . அவள் உம்மாகாரி கொஞ்சம் ராங்கிப் பிடித்தவள். அதனால்தான் சுலைகாவை அங்கு அவன் அனுப்ப விரும்பவில்லை.
கிழவி அனத்திக் கொண்டே இருந்தார். அவன் கிழவியை காலையில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து படுத்துத் தூங்கினான். கனவில் அவனின் உம்மா வந்தார்கள். அது அவனுக்கு எந்த இடம் என்று தெரியவில்லை. அவன் அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்து கண்ணீரைத் துடைத்துவிட்டார். தலையில் தொப்பியை வைத்தார். அப்போது பார்த்து ஜிக்னி கிழவி அழைக்க எழுந்துவிட்டான். கிழவி எழுந்து உட்கார்ந்து இருந்தார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு சஹர் வைக்க நேரம் பார்த்தான். அதற்கு அரை மணி நேரம் இருந்தது.
“உன்னை நினைச்சா கவலையா இருக்குடா.”
“ஏன் எனக்கு என்ன. “
“எனக்கு ஏதாவது நடந்துருச்சுன்னா.இங்க இருக்காதடா. சுலைகா பாவம். நீ வேலைக்குப் போயிட்டியன்னா. அவ தனியா இருப்பா. கண்ட காவாளிப் பயலுவ.இங்க சுத்திகிட்டு இருப்பாங்க.”
“இரயில்வே சுரங்கப் பாதை வேலை ஆரம்பிக்கப் போறாங்களாம். நமக்கு இந்தப் பக்கம் பாதை வந்துரும்.நம்ம இடத்தில கடைகள் கட்டி விடலாம்.”
ஜிக்னி கிழவி அவனை ஆச்சரியமாக பார்த்தார். அவன் பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது.
“ஏன்டா. உன்னோட உம்மா பல நேரம் சொல்லி இருக்கா. கலிமா சொல்லு. கலிமா சொல்லுன்னு. எனக்கு அப்பல்லாம் தோனவே இல்லைடா.”
“ஏன் திடீர்னு உனக்கு இப்படித் தோணுது. “
“ஊர விட்டு தொறத்தி விட்டப்ப. இங்க வந்து கொஞ்ச நாளில் செத்துறலாம்ன்னு நினைச்சேன். அப்பதான் உன்னோட வாப்பாவும் உம்மாவும் வந்தாங்க. அப்போ அந்த முடிவை மாத்தினேன். அவுங்க இரண்டு பேரும் போனப்ப நீ வந்தே. என்னைய இங்க யாருக்குமே பிடிக்கலைடா. நான் இப்படி பொறந்ததுக்கு. நான் என்னடா பண்ட்றது. உனக்கு தெரியுமா. இவன்களையே ஊரைவிட்டு ஓரமா வச்சிருக்காங்க. இவங்க என்னைய ஒதுக்கி வச்சிருக்காங்க பார்த்தியா. வாய்க்காலுக்கு இந்தப் பக்கம் யாரும் வரமாட்டாங்க,பார்த்தியா.”
அப்போது தான் ஹக்கீம் அதையேப் புரிந்தான். தான் கஞ்சா அடிப்பதால் தான் யாரும் இந்த பக்கம் வருவதில்லை என நினைத்தான். இந்தப் பக்கம் சாக்கடையாக இருக்கிறதால வருவதில்லை என்று பல முறை நினைத்து இருக்கிறான். இங்குள்ளவர்கள் ஏன் இவனுடன் பேசவில்லை என்பதற்கு அவனுக்கு இப்போது தான் காரணம் புரிந்தது.
“இந்தப் பக்கம் வந்தா அவுங்க புள்ளைங்களும் ஒன்பதா மாறிருவாங்களாம். “
கிழவி அழுகிறதா என்று முன்னே நகர்ந்துப் பார்த்தான்.
“மனசு எல்லாம் மறத்துப்போச்சுடா. இங்க தான் எந்த மரியாதையும் இல்ல. அங்கையாவது ஏதாவது கிடைக்குமான்னு பார்ப்போம். எனக்கு எந்த சாமி உசத்தி எந்த சாமி தாழ்த்தின்னெல்லாம் பார்க்கத் தெரியாது. உம்மா ஏதேதோ சொன்னா. எனக்கு அதெல்லாம் ஞாபகத்துக்கு வரல. நீதான்டா உதவனும். கலிமான்னா என்னடா. “
“லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ். இதுதான் கலிமான்னு தெரியும். இதை எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியல.”
“சரிடா காலையில கேட்டுட்டு வாடா. “
ஹக்கீம் ஆமோதித்துவிட்டு நேரத்தைப் பார்த்தான். சஹர் நேரம் வந்து இருந்தது. ஜிக்னி பன்னும் அவன் மீதம் இருந்த நோம்புக் கஞ்சியையும் சாப்பிட்டு சஹர் சாப்பாட்டை முடித்துக் கொண்டார்கள். ஹக்கீம் பள்ளிக்கு தொழுவப் போவதாக சொல்லிவிட்டு கிளம்பினான். இன்று அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. முதல் முறையாக அவன் பழகிய தெருவில் நடப்பதே அவனுக்கு அருவருப்பாக இருந்தது. கிழவி சந்தோசம்ங்கிறதையேப் பார்க்கலையேங்கிற நினைவு வரும்போது அழுகை வந்தது. அவனுக்கு இதெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. ஜிக்னி கிழவி தன் மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

‘யா அல்லாஹ்… அதுக்கு நீ நேர் வழியைக் கொடுக்கனும். அதை நான் சந்தோசமாக வச்சிருக்கனும்.’ குழந்தை பிறந்து வந்ததும் ஒரு வருடம் கழித்து கிழவியோட அஜ்மீர் போய்ட்டு வரனும் என்று நினைத்தான். அதற்கு இந்த தட்டு ரிக்சா மட்டும் ஓட்டினால் பத்தாது என்று வேறு என்ன செய்யலாம் என யோசிக்கும்போதே பள்ளிவாசல் வந்துவிட்டது.
நோம்பு நேரம் என்பதால் பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இருந்தது. தொழுகை முடித்து ஹஜ்ரத் குர்ஆன் ஓதினார். அவன் அங்கு இருந்தவர்களோடு இருந்தான். அமல்கள் முடிந்து எல்லோரும் கிளம்பியதும் ஹஜ்ரத் பின்னால் நின்று அவரை அழைத்தான்.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். “
“வலைக்கும் சலாம். “
அவன் ஜிக்னி கிழவி சொன்னதைச் சொன்னான். அவர் ஆச்சரியப்பட்டார்.
அவர் யோசிக்காமல் கிழவியைப் பார்க்க வந்திருக்கலாம்.
அந்த ஊரில் இப்போது தான் மத மோதல் நடைபெற இருந்தது. அரசு தலையீட்டின் காரணமாக அமைதிக்கு மாறி இருந்தது.
ஹஜ்ரத் மதக் கலவரத்தை நினைத்து தயங்கினாரா.
அந்த துப்புரவு தெருவிற்குள் போகத் தயங்கினாரா.
ஹக்கீம் கஞ்சாக் குடிக்கி என்பதால் தயங்கினாரா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
“‘அஸ்ஹது லா இலாஹ இல்லல்லாஹ் அஸ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொன்னால் போதும். அதன் பிறகு இஸ்லாம் முறைகளுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. இப்போதைக்கு இதை கொஞ்சம் தள்ளிப் போடுப்பா. இப்படி நான் சொல்வதே தவறுப்பா. அல்லாஹ் என்னை மன்னிப்பானாக.”
“அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க சொன்னதை எழுதித் தர்றீங்களா.”
அவர் மீண்டும் தயங்கினார். தனக்கு எதுவும் பிரச்சினை வருமோ என்று நினைத்தார்.
“அல்லாஹ் மீது சத்தியமா. நான் இதை யார் கிட்டையும் சொல்ல மாட்டேன். எனக்கு எழுதிக் குடுங்க. உங்களைவிட்டா.எனக்கு வேற ஆள் இல்லை.”
அவர் அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டு அவனிடம் எழுதிக் கொடுத்தார்.
அந்தக் காகிதத்தை வாங்கியதும். அவனுக்கு ஜிக்னி கிழவிக்கு சொர்க்கத்தை பெற்றுக் கொடுத்தது போல சந்தோசமாக இருந்தது. ஏழைகளுக்கு எப்போதும் சிறிய விசயங்கள் போதுமானது அவர்கள் மகிழ்ச்சி அடைவதற்கு. இதைத்தான் இங்கு எல்லோரும் செய்து தங்களுக்கானதை அறுவடை செய்து கொள்கிறார்கள். இதில் அரசியல்வாதிகள் ஆன்மீகவாதிகள் எல்லோரும் அடங்குவார்கள்.
****
4.
காலையிலிருந்து ஹக்கீம் உட்கார்ந்து இருக்கிறான். சவாரி எதுவும் கிடைக்கவில்லை. கிழவி ஆஸ்பத்திரிக்கு வர மறுத்துவிட்டார். இன்று ஏதாவது சவாரி வந்தால் கிழவிக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என நினைத்தான். கிழவியோடு அவன் நோம்பு திறப்பது அவனுக்கு சந்தோசமாக இருந்தது.
அவன் அம்மாவிடம் சிரித்து பேசியதாக நினைவே அவனுக்கு இல்லை. அப்போது முத்துவும் அவனும் கஞ்சா அடித்துவிட்டு படத்துக்கு போவது சுற்றுதாகவே இருந்தார்கள்.
இப்போது நாம் கஞ்சாவை விட்டு சுலைகாவோடு நிக்காஹ் முடித்து. குழந்தை பெற்று. தொழுகை வணக்க வழிபாடுன்னு இருக்கிறதைப் பார்த்தா உம்மா எத்தனை சந்தோசப் பட்டிருக்கும் என்று நினைத்தான். அப்போது சவாரி எடுக்க ஒருவர் வந்தார்.
“காலம் பாக்ஸ் ஏத்திக்கிட்டு போவனும் வர்றீயா. “
“எத்தனை பாக்ஸ். எங்க போகணும். “
“பாரதி சாலை போகனும். பத்து பாக்ஸ். “
“அற நூறு குடுங்கண்ணே. இருவது பீஸ்ண்ணே.”
“அப்பவே சொன்னாங்க. அங்க ஒரு கஞ்சாக் குடிக்கி உட்கார்ந்து இருப்பான். ஏட்டிக்குப் பூட்டியா கேட்பான்னாங்க. “
அவனுக்கு கோவம் வரவில்லை. அதைக் கேட்டு கேட்டு கிழவியைப் போல பழகிவிட்டான்.
“நான் வரலைண்ணே. வேற வண்டியப் பாருங்க. “
“டேய்.நீதான்டா வரனும். அது சந்து. ரிக்சா மட்டும் தான் போகும். வாடகை குறைச்சி சொல்லுடா. “
“ரெண்டு ட்ரிப் போகணும். ஒரே ட்ரிப் போனா. ரிம் வலைஞ்சுருண்ணே. சொன்னாப் புரிஞ்சுக்கங்க.”
இதைக் கேட்டதும் வந்தவர் யோசிக்க ஆரம்பித்து பிறகு ஒத்துக்கொண்டார்.
அவன் வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது மதியம் மூன்று மணி ஆனது. வரும்போதே பள்ளி வாசலில் நோம்பு கஞ்சியை வாங்கிக் கொண்டான். நோம்பு நாளில் சில்வர் வாளியை வண்டிக்கு கீழே இருக்கும் சாக்கில் போட்டு வைத்து இருப்பான். சுலைகா தான் இப்படிச் செய்யச் சொன்னது, அவனுக்கு எப்போதும் வசதியாக அமைந்தது.
ஜிக்னி கிழவி அசைவற்று படுத்துக்கிடந்தார்.சிறுநீர் பாயை விட்டு தரையில் வழிந்து ஓடித் தேங்கி இருந்தது.அவைகளை அவன் சுத்தம் செய்தான்.
நேத்தையிலேர்ந்து இதனால்தான் மௌத்தைப் பத்தியேப் பேசியதோ என்று நினைத்தான்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்தபோது வேண்டாம் என்று செய்கையில் மறுத்துவிட்டார்.
அவன் ஹஜ்ரத்திடம் எழுதி வந்த காகிதத்தை கிழவியிடம் காண்பித்தான். ஹஜ்ரத் சொன்னதை சொல்லும்போது அவனால் அவர் சொன்னவைகளை அரபியில் சொல்லத் தெரியவில்லை. அவன் கிழவி படித்திருக்கும் என நினைத்திருந்தான். அது நேற்று கொடுத்த எல்லா காகிதத்திலும் கைரேகை வைத்திருந்தது இப்போது தான் நினைவுக்கு வந்தது.
ஜிக்னி கிழவி நினைவு மாறி மாறி வந்தது. அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த தெருவில் எந்தப் பையனும் அவனோடு பழகாதது அவனுக்கு இப்போது கோவமாக வந்தது.
இப்தார் நேரத்தில் கிழவியை குளிக்க வைத்து புதுத் துணி மாற்றி கலிமா சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தான். அது தவறு என்று தோன்றியது.
ஆசையாக நோம்புக் கஞ்சி கேட்டதை அவனால் கொடுக்க முடியவில்லை. ‘இன்னும் இரண்டு மணி நேரம் நன்றாக இருந்திருந்தால் எல்லாமே சரியாகி இருக்குமே அல்லாஹ்’ என்று வானத்தை நோக்கி கையை உயர்த்தினான்.
ஒரு குவளையில் நோம்புக்கஞ்சியை ஊற்றி கிழவி வாயில் ஊற்றலாம் என முடிவு எடுத்தான். நோம்போட எந்த விதியும் அவனுக்கு தெரியாததை நினைத்து தன்னையே நொந்து கொண்டான். கிழவி வாயைத் திறக்க மறுத்தார். கண்கள் மருள் கொள்ள ஆரம்பித்துவிட்டது.
அவன் அவசரமாக ஒளுச் செய்துவிட்டு இரண்டு ரக்காத் தொழுதான். இனி வேறு வழி இல்லை என அவர் காதில் ‘லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொன்னான். பிறகு காதை கிழவி வாய் அருகே வைத்துப் பார்த்தான். அவள் சொன்னதற்கான சத்தம் எதுவும் வரவில்லை. மறுபடியும் மறுபடியும் கலிமாவை சொல்லி கிழவியின் வாயில் காதை வைத்தான். கிழவி கண்களிலிருந்து கண்ணீர் தான் வழிந்தது.
*****
5.
அவன் வாழ்க்கையில் இதுபோல பார்த்ததில்லை. சுலைகா நிறைமாதக்காரியாக இருப்பதால் அவளிடம் பேசத் தயங்கினான். அல்லாஹ்.. அல்லாஹ் என்று வீடு முழுவதும் நடந்தான்.
கிழவிக்கு அசைவு வயிற்றுக்கு மேலே மட்டும் இருந்தது. காலைப் பிடித்துப் பார்த்தான் அது ஐஸ் மாதிரி இருந்தது. அவன் ஹஜ்ரத் எழுதிக் கொடுத்த காகிதத்தையும் நோம்புக் கஞ்சியையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
கலிமாவை விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தான். பாவம் அவன் எப்படியாவது கிழவியை சொல்ல வைத்துவிடலாம் என நம்பினான். தொண்டைக் குழிக்கு மேலே மட்டும் அசைவு இருந்தது. கிழவி முகம் பார்க்கப் பயமாக இருந்தது. வாசலில் நின்று கத்தினால் யாராவது வருவார்களா என்று யோசித்தான். இப்போதைக்கு அருகில் இருப்பதே சிறந்தது என்று நினைத்தான். கிழவி மிகவும் அவதிப்பட்டார். அவர் ஏதோ சொல்ல வருகிறாரோ என முகத்திற்குப் பக்கத்தில் தன் முகத்தை கொண்டு சென்றான். என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு கலிமா சொல்ல வைத்து நோம்பு கஞ்சியைக் கொடுத்துவிட வேண்டும் என்பதிலையே குறியாக இருந்தான். அவனிடம் அவர் கேட்டது இதை மட்டும் தான்.
மஹ்ரீப் பாங்கு சொல்வது கேட்டது. அவனுக்கு நோம்பு திறக்க மறந்தது நினைவுக்கு வந்தது.
‘அல்லாஹூ அக்பர்… அல்லாஹ் அக்பர்… ‘ என்று கேட்டதற்கு அடுத்து ‘அஷ்ஹது… ‘ என்றபோது கிழவி முகம் சிரிப்பதாக தோன்றியது. அவன் பக்கத்தில் சென்றான். அவன் இரண்டு கையிலும் வைத்திருந்ததைப் பார்த்தபடி ஜிக்னி கிழவி மௌத்தாகிப் போனார்.
அவனுக்கு அழுகை வரவில்லை. எந்த அதிர்ச்சியும் எழவில்லை. நாற்ற வாடை வந்தது. கிழவி மலம்,மூத்திரம் போயிருக்க வேண்டும் என்று நினைத்தான். பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு தண்ணிரைக் குடித்து நோம்பு திறந்துவிட்டு அடுத்த என்ன செய்யலாம் என யோசித்தான்.
சுலைகாவின் நைட்டியை எடுத்துக்கொண்டு வந்து ஜனாஸாவை குளிக்க வைத்து நைட்டியைப் போட்டு படுக்க வைத்தான். கிழவியின் பெட்டியைத் திறந்தான் உள்ளே சேலைகள் கொஞ்சம் இருந்தது. அதில் வெள்ளையாக இருந்த சேலையை எடுத்து ஜனாஸா மீது போர்த்தினான். மஞ்சள் பையில் சுருட்டி இருந்த ஆதார் கார்டை எடுத்து பையில் வைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த சாவியை எடுத்து பரணியில் இருந்த பெட்டியை இறக்கித் திறந்து பார்த்தான். அவனுக்கு அதற்குள் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சாக்குப் பை ஒன்றில் இரண்டு ஐநூறு ரூபாய் கட்டு பணம் இருந்தது. அதில் மீன் கவுச்சி அடித்தது.
எல்லாவற்றையும் சொன்ன கிழவி ஏன் இந்த ஒரு லட்சம் பணத்தை மட்டும் சொல்லவில்லை என்று தோன்றியது. அவனுக்கு திடீரென தலையாரியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற நினைவு வர வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினான்.
தலையாரி வந்து போட்டோ எடுத்து கொண்டு விஏஓவிடம் போனில் பேசினார். பிறகு ஆதார் கார்டை போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
“என்னடா பண்ணப் போறே. கவுன்சிலர்க்கிட்ட சொல்றா. அவர் எல்லாத்தையும் செஞ்சுத் தருவார். ” என்றார்.
அவன் கவுன்சிலரைப் பார்த்து விவரத்தை சொல்ல சென்றபோது அவர் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
‘நாளைக்கு தொப்பியைப் போட்டு முன் வரிசையில் நாலு பேர் நிப்பாங்க. கவலைப்படாதீங்க.’ என்றபோது அவன் உள்ளே நுழைந்தான். பல முறை ஹக்கீமை அழைத்தபோது அவன் கூட்டத்திற்கு வர மறுத்துவிட்டான். இப்போது தான் வந்திருக்கக்கூடாது என்று நினைத்தான்.
அவரிடம் விவரங்களைச் சொன்னான்.
“அதை நீங்க இருக்கிற சாக்கடையிலையேப் பொதச்சிற வேண்டியதுதானேடா. அவ பேர் என்னடா. “
“ஜிக்னி அண்ணே. “
“ஜிக்னியோ பக்கினியோ. அத தூக்கி ரிக்சாவுலப் போட்டு காட்டாத்துக்கரையில பொதச்சிற்றா. அனாதைக் கிழவி தானே அது. நீயே முஸ்லீமான்னு எனக்கு சந்தேகம் இருக்குடா. இப்ப வாக்காளர்கள் லிஸ்ட் வந்தா. உன்னைய எங்கத் தொரத்தப்போறாங்கண்ணு தெரியும். உங்கள நாட்ட விட்டு வெரட்டுனாதான்டா. நாடு உறுப்புடும். “
அவன் வெளியே வந்தான். அவர் பேசியதும் எதுவும் அவனுக்கு கோபம் வரவில்லை. வடக்கிலிருந்து வந்தக் கட்சி இங்கு கால் ஊன்றியதும். இவரைப் போன்றவர்களை உருவாக்கி வைத்துவிட்டது. இவர்கள் அவர்கள் கொடுக்கும் சாவிக்கு பொம்மை மாதிரி ஆடுகிறார்கள்.
அவனுக்கு கோவம் வந்தது எல்லாம், கிழவியை அநாதை என்று சொன்னதால் தான். இன்னொரு முறை அநாதை என்று சொல்லி இருந்தால் அவன் சண்டை போட்டுவிடுவோமோ என்று பயம்தான்.
ஹஜ்ரத்தைப் பார்த்து பேசலாம் என பள்ளிவாசலுக்கு சென்றான். அவர் நோம்பு திறந்துவிட்டு அவர் அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். நடந்த விவரங்களை அவரிடம் சொன்னான்.
“இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹீ ராஜீஊன்.” என்றார்.
“நம்ம மையத்தான் கொல்லையில அடக்கம் செய்ய முடியுமா ஹஜ்ரத். “
“யா… அல்லாஹ்”
அவர் மௌனமாக இருந்தார்.
“அடக்கம் பண்ட்றதுல பிரச்சினை இல்லைப்பா. ஊர் நிலவரம் தெரியும் உனக்கு. இப்ப உன்னையத் திட்டின கவுன்சிலரே வந்து பிரச்சினைப் பண்ணுவார். நம்ம ஆளுங்கல்லையும் பலபேர் நமக்கு எதிரா இருக்காங்க. நான் சொல்றது. உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன். நீ போலீஸ்ல சொன்னா அநாதைப் பிணம்ன்னு அவுங்களே. அடக்கம் பண்ணிருவாங்கப்பா.”
“அத அநாதைன்னு சொன்னா எனக்கு கோவம் வருது ஹஜ்ரத். அது என் வாப்பாவோட அக்கா ஹஜ்ரத்.”
“என்னப்பா சொல்ற. “
அவன் எல்லாவற்றையும் சொல்லிக் காண்பித்ததும் அவர் இரண்டு கைகளையும் மேலேத் தூக்கினார்.
“அல்லாஹ் மாலிக். இன்ஷா அல்லாஹ். அவன் உங்களுக்கு நன்மையை நாடட்டும்.என்னப்பா செய்யப்போறே.”
“கிழவி எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும். என்னைய இவன்க செத்தாலும் மதிக்கமாட்டாங்க. என்னைய காட்டாத்துல பொதைச்சிரு. காட்டாத்துல பொதைச்சிருன்னு சொல்லும். அங்க தான் பொதைக்கலாம்ன்னு இருக்கேன்.”
அங்கு இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
“ஜனாஸா தொழுகை எப்படி வைக்கிறது ஹஜ்ரத்”
அவர் அவனுக்கு சொல்லிக்காட்டினார். அவனுக்கு அது எளிமையாகத்தான் இருந்தது. அவன் பையில் வைத்திருந்த ஒரு லட்சம் பணத்தை ஹஜ்ரத்திடம் கொடுத்தான்.
“எதுக்குப்பா இது. “
“கிழவி தன்னோட இடத்தை என் பேர்ல உயில் எழுதி வச்சிருக்கு. இந்த பணம் வச்சிருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு தெரியல. அதனால இதைப் பள்ளி வாசலுக்கு ஏதாவது செலவு பண்ணுங்க ஹஜ்ரத்.”
“இதை வச்சு ஆட்டோ வாங்கி பொழப்பைப் பாருப்பா.”
“வேணாம் ஹஜ்ரத். அது பள்ளிக்கே வச்சிக்குங்க. கிழவிக்கு போற இடத்தில அல்லாஹ் அதுக்கு ஏதாவது நன்மைகளை செய்யட்டும்.”
“பள்ளியோட மாடியில ஷெட்டு போடலாம்ன்னு இருக்கோம். இதை வச்சி அதை செஞ்சு முடிச்சிறலாம். தொழுகையில் அறிவிக்கட்டுமாப்பா.”
“வேணாம் ஹஜ்ரத். அது கிழவிக்கு அல்லாஹ்ஹூக்கும் உள்ள கணக்கு. அவர்கள் அதை பார்த்துக்கட்டும். இது பத்தி நீங்கள் யார் கிட்டையும் சொல்ல வேணாம்.”
“செலவுக்கு பணம் இருக்கா. “
“தலையாரிக்கு கொடுத்தது போக என்கிட்ட நானு நூறு ரூபாய் இருக்கு. அது போதும் ஹஜ்ரத். “
அவர் ஏதோ பேச நினைக்க. அவன் சலாம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
கிழவி மேல் இருந்த வெள்ளை சேலையை அழகாக உடல் முழுவதும் சுற்றினான். அவன் இதற்கு முன்பு ஒரு ஜனாஸா வீட்டில் நாற்காலி இறங்கியபோது பார்த்தை நினைவு படுத்தி சேலையை கபன் துணியாக சுற்றி முடித்தான்.
ஒளூ செய்துவிட்டு மஹ்ரீப், இஷா எல்லாத் தொழுகையையும் முடித்தான். இரவு பத்து மணியைக் கடக்கட்டும் என்று காத்திருந்தான்.
அவன் வேலைகளை தெளிவாக செய்வதை நினைத்து அவனே ஆச்சரியப்பட்டான். காத்திருக்கும் போது தான் இனி வாழ்க்கையை இப்படி இப்படித்தான் வாழ வேண்டும் என பல முடிவுகளை எடுத்தான். சுலைகாவிற்கு ஜனாஸா அடக்கம் செய்த பிறகு தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
பைப்புகள் சுற்றி வந்த பெரிய வெள்ளை சாக்கை மூட்டையாக கட்டி வீட்டில் வைத்து இருந்தான். அதில் கிழவியைச் சுற்றி ஒரு பார்சல் போல மாற்றினான். அப்படியே தூக்கி ரிக்சாவில் வைத்தான். மண்வெட்டி, கருவாடு காயப்போட வைத்திருந்த ஓலைப்பாயையும் எடுத்து வைத்து கிளம்பும்போது சட்டைப் பையில் அத்தர் பாட்டில் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். புளிய மரத்தடியில் யாரோ கஞ்சா அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
கருவேலம் மரங்கள் வழியாக சென்றால் நாடியம்மன் கோயிலுக்கு சென்றுவிடலாம். அங்கிருந்து அப்படியே காட்டாற்றுப் பாலத்திற்கு சென்றுவிடலாம் என்று முடிவு எடுத்தான். படுத்து இருந்த பன்றிகள் எழுந்து ஓடியது. வழியில் அவனை யாரும் எதுவும் கேட்காதது நிம்மதியாக இருந்தது.

குழியைத் தோண்டி முடித்ததும் களைப்பாக இருந்தது. ஏதாவது சாப்பிட்டு இருக்கலாமோ என்று நினைத்தான். அப்போது தான் ரிக்சாவில் கொண்டு வந்திருந்த நோம்பு கஞ்சி நினைவுக்கு வர வாளியை எடுத்து வந்து ஓலைப் பாய்க்கு பக்கத்தில் வைத்தான்.
கயிறு எடுத்து வராததால் சேலையை மண் வெட்டியால் கிழித்து ஓலைப்பாயில் சுருட்டிக் கட்டி குழிக்குப் பக்கத்தில் நகர்த்தி வைத்து விட்டு உள்ளே இறங்கினான்.
உள்ளே இறங்கி ஜனாஸாவைத் தூக்கி வைத்த பிறகு,நோம்பு கஞ்சி வாளி, ஹஜ்ரத் எழுதிக் கொடுத்த காகிதத்தை வைத்து விட்டு அத்தரை தெளித்து விட்டான். மேலே ஏறி வந்தபோது மிகவும் சோர்வாக உணர்ந்தான்.
‘அஸ்ஸலாமு அலைக்கும் ஜிக்னி கிழவி’ என்று சொல்லி மண்ணைத் தள்ளி மூட ஆரம்பித்தான். பாதி மாத நோம்பு முடிந்து இருந்ததால் நிலா வெளிச்சத்தில் கபுர் அவனுக்கு அழகாக தெரிந்தது. ஆற்றுக்குள் சென்று ஒளூ செய்துவிட்டு ஜனாஸா தொழுகையைத் தொழுதான்.
ஜிக்னி கிழவி கலிமா சொன்னாரா என்பது அவனுக்கு தெரியாது. அவர் இந்துவா செத்தாரா இல்லை இஸ்லாமியரா செத்தாரா என்பதும் அவனுகுத் தெரியாது. அவனுக்கு ஜிக்னி என்ற பெயர் பற்றியும் தெரியாது. அந்த பெயர் யார் வைத்தார் என்று அவன் கிழவியிடம் கேட்காமல் போனதற்காக இப்போதுவரை வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.
ஜிக்னி கிழவி மீன் வெட்டிய இடத்தில் அவன் காலை நேரங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மீன் வெட்டிக் கொடுக்கிறான்.
‘ஜிக்னியோட மவனோ பேரனாக இருப்பான்ன்னு’ நினைக்கிறேன் என்று பேசிக் கொண்டார்கள்.
சுலைகா மௌத் அடக்கிய செய்தி கேள்விபட்டு சொல்லாததற்கு திட்டினாலும் பிறகு சமாதானம் ஆகிவிட்டாள்.
பள்ளி வாசலில் ஹஜ்ரத்தாக இருந்தவர் வேறொரு ஊர் பள்ளி வாசலுக்கு தொழுகை வைக்க வேலைக்கு சேர்த்துவிட்டார். அவருக்கு பதிலாக வட மாநிலத்திலிருந்து வந்த ஹஜ்ரத் இமாமாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். ஹக்கீமிற்கு பழைய ஹஜ்ரத் இருந்தது ஒரு ஆறுதலாக இருந்தது.அவனுக்கு மார்க்க விசயமாக ஏதாவது தெரிய வேண்டும் என்றால் அவரிடம் தான் வருவான். இப்போது அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.
ஒரு நாள் காலையில் பஜ்ஜிர் தொழுது விட்டு ஜமாத் வந்திருந்தவர்களின் அமீர்(தலைவர்) குரான் ஓதி விட்டு பிறகு பயான் (பேசுவது) செய்தார். அவர் பயான் செய்து முடித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்றார். அப்போது ஹக்கீம் கேட்டது சாதாரணமாக அறியும் ஆர்வத்தில் கேட்டது. அவனையே அசௌகரியமாக பார்க்கும்படியாகிவிட்டது.
“ஆதாமுடைய மக்களே… ஒவ்வொரு மஜ்ஜித்திலும் உங்களுடைய அழகை எடுத்துச் செல்லுங்கள்..” என்று குர்ஆனில் இருக்கு. ஒவ்வொரு பள்ளி வாசலிலும் அழகை எடுத்துச் செல்றது என்றால் எப்படி அமீர் ஸாப்.” என்றான். அமீர் சொன்னதில் அங்கிருந்தவர்கள் எவருக்கும் தெளிவாக புரியவில்லை. அவர் காலை ஏழு மணி வரை பேச்சை நீட்டித்ததால் ஹக்கீம் பாதியிலேயே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அவனுக்கு ஆறு மணிக்கு சென்னைப் பேருந்தில் வந்து இறங்கிய பார்சல் மூட்டைகளை கடைக்கு கொண்டு செல்ல வேண்டியதாக இருந்ததால் அவன் அமீர் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கிளம்பிவிட்டான். அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.
இதே போல் முன்பு ஒரு முறை அவன் ‘முஹமது நபி அவர்கள் தொழுகையில் சுவை இருக்கிறது’ என்று சொன்னார்களே அந்தச் சுவை எப்படி இருக்கும். நான் தொழுகும்போது எந்த சுவையும் இல்லையே என்றான்.அதற்கு ‘முஹம்மது நபி அவர்களை ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்’ என்று சொல்ல வேண்டும் என்று சொன்னதற்கு.அவன் சரி என்றான். அப்போதும் அவனுக்கு மனம் ஏற்கும் பதில் கிடைக்கவில்லை. அப்போது ஏனோ பெரிதாக இதை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது ஜமாத் தலைவராக இருப்பவர் கறிக்கடை பாய். அவர் கொஞ்சம் கறாரான ஆள். நேர்மையானவரும் கூட. அவன் எழுந்து சென்றதை அவர் பள்ளிக்கு வந்த விருந்தினர்களை அவமதித்ததாக நினைத்தார். பிறகு ஒரு நாள் அவன் தொழுகைக்கு வந்தபோது எல்லோரின் முன்னிலையில் மோசமான முறையில் திட்டி விட்டார். அவன் பரம ஏழை அவனால் தலை குனிந்துதான் நிற்க முடிந்தது.அவனது கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அவனுக்குள் அப்படியேதான் இருந்தது.அவனின் கேள்வி பற்றி எவரும் பேசியதாக அவனுக்குத் தெரியவில்லை.
இது போன்ற சிக்கல்களுக்கு அவன் பரக்கத் ஸ்டோரிலிருந்து சைபுதீன் பாய் கொடுத்த காலண்டரில் இருந்து தான் வருகிறது என்று நினைத்தான் ஹக்கீம். அவனுக்கு குர்ஆன் ஓதத் தெரியாது. அந்த தினசரி காலண்டரில் இருக்கும் குர்ஆன் ஆயத்துகள், ஹதீஸ்கள் தான் அவனுக்கு வழி காட்டுவதாக நம்பினான். அவன் வாங்கச் செல்லாத வருடங்களில் அவனுக்காக சைபுதீன் பாய் பத்திரமாக காலண்டரை எடுத்து வைத்திருப்பார். சுலைகாவை நிக்காஹ் செய்த பிறகு வீட்டிற்கு குர்ஆன் வந்தாலும் அவனுக்கு என்னவோ பரக்கத் ஸ்டோர் காலண்டர் சீட்டை கிழித்து முதல் நாள் சீட்டை யாரிடமாவது படிக்கச் சொல்லி கேட்பதை மிகவும் விரும்பினான். அவனைக் கஞ்சாக்குடிக்கி என்று சொன்னாலும் அதைப் படிக்க சிலரை அவன் வைத்து இருந்தான். சுலைகா வந்த பிறகு அவர்கள்’என்னடா பொண்டாட்டி வந்ததும் எங்கள கண்டுக்க மாட்டேங்கிறே’ என்பார்கள். அவர்களும் இவன் கஞ்சா அடிப்பதை நிறுத்தியதை நம்பவில்லை. முத்து இவனை சிறு வயதிலிருந்து வைத்துக்கொண்டு செய்த செயல்கள் தான் இதற்கெல்லாம் காரணம்.
அவன் கஞ்சா அடிப்பதை நிறுத்தினாலும் அவர்கள் யாரும் அதை நம்புவதாக இல்லை.’கஞ்சா அடிக்கிறவன் எல்லோரும் ஏடா கூடமாக’ பேசுவார்கள் என்று பேசிக்கொண்டார்கள். அவன் அந்தப் பள்ளி வாசலுக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா மட்டும் தொழுவ வந்தான். அதற்கு அவனிடம் யாருக்குமே தெரியாத ஒரு காரணம் இருக்கிறது. அது தெரிந்த ஹஜ்ரத் இப்போது இங்கு இல்லை.
“இப்பல்லாம் யாரும் வெயில்ல நின்னு தொழுவுறதில்லைப் பார்த்தியாடா.”என்றான் சையது.
“ஆமாம்.”
இவர்கள் வெவ்வேறு இடங்களில் தட்டு ரிக்சா ஓட்டுவதால் ஜூம்மா அன்று சந்தித்துக் கொள்வார்கள். காரணம் பள்ளிக்கு வெளியே வெயிலில் தொழுவதில் பழக்கமாகிக் கொண்டவர்கள்.
ஜும்மா தொழுதுவிட்டு வரும்போது மேலேப் போட்ட ஷெட்டைப் பற்றி எல்லோருமே பேசுவதாக சொல்லிக்கொண்டு வந்தான்.
“நீ ஏதாவது ஒரு ஜமாஅத்ல சேர்றா.நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் உதவிக்கு வருவாங்க. “
“எல்லா ஜமாஅத்தும் அல்லாஹ் ஒண்ணுன்னுதானே சொல்லுது. அதைத் தாண்டி அவரவர்கள் புரிந்ததை சொல்றது பித்அத்ஹ்(வழிகேடு)தான்டா. அவர்கள் எல்லாரும் இன்னொருவர் பார்வையில் வழிகேட்டில் இருக்கிறார்கள். பிடறி நரம்புக்கு சமீபமாக இருக்கிறேன்னு. அல்லாஹ் சொல்றான். அதைப் பார்க்கத் தெரிய துப்பில்லை. பேச வந்துட்டாங்க.எல்லாரும்.”
“அப்பவே என்கிட்ட சொன்னாங்கடா. அவன் கஞ்சாக் குடிக்கி அவன்கிட்ட பார்த்துப் பழகுடான்னாங்கா. அது சரியாகத்தான் இருக்கு.”
அல்லாஹ் நாடினால் எல்லாமே மாறிவிடும் என்று சுலைகாதான் அடிக்கடி சொல்வாள். ஹக்கீம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவனது கவலை ‘முன் நெற்றியை கீழே வைக்கும் சுஜூதுவில் அல்லாஹ்வை நெருங்கலாம்’ என்று நாயகம் சொல்கிறார்கள். அதுக்கு நேர் பின்னால் ‘பிடறி நரம்பிற்கு சமீபமாக நான் இருக்கிறேன்’ என்று அல்லாஹ் சொல்கிறான். இதில் ஏதோ இருக்கிறது என்று அவன் சுஜூதிலையே அதிகம் கிடக்கிறான்.
கஞ்சாக் குடிக்கி என்று சொல்வது மாறி அல்லாஹ் குடிக்கி என்று அனைவரும் அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் அல்லாஹ்வையும் ரசூலையும் தவிர வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை.
ஜிக்னி கிழவி மௌத்திற்குப் பிறகு ஹக்கீம் ரொம்ப மாறிவிட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.அவனும் அதை உணர்ந்தான்.
***

