மாரி.கிருஷ்ணமூர்த்தி
கண்ணாடியின் முகம் பார்த்து சடை பிரித்துக்கொண்டிருந்த போதுதான் கல்பனாவிடமிருந்து இருந்து அந்த அழைப்பு வந்தது. ‘சாமியாடி தாத்தா இறந்துட்டாரு நேத்துதான் ஜெயில்ல இருந்து கூட்டி வந்தாங்க, ஏனோ உனக்கு சொல்லனும்னு தோனுச்சி அதான் சொன்னேன். அப்புறம் உங்கிட்ட சொன்னேன்னு யாருக்கிட்டேயும் சொல்லிடாதீடி’ என்று யாரோ பக்கத்திலிருந்து வேவு பார்க்கிறது போல போனை துண்டித்தாள்.
கடையிலிருந்து வாங்கி வந்த ஏர் டையை அடிக்கலாமா, வேண்டாமா என்று யோசித்த போதா இந்த செய்தி வந்து தொலைக்கனும். நரைத்த முடியை டை அடித்து மறைப்பது போல உள்ளூர் நினைவுகளை மறப்பது அவ்வளவு சுலபமானதல்ல என்று நினைத்துக்கொண்டேன்.
கொஞ்ச நாட்களாக நானே மறக்க நினைத்தாலும் இம்மாதிரி செய்திகள் வந்து அதை பற்றின நினைவோட்டத்தை கிளப்பிவிடுகிறது.
எனக்கும் அந்த ஊருக்குமான தொடர்பை நீடித்துக்கொண்டிருப்பது பள்ளி தோழியான கல்பனா மட்டும் தான். இரண்டு வருடத்து முன்பு ஒரு துணிகடையில் பார்த்த போது நெம்பர் வாங்கிக்கொண்டு போனவள்..
ஊரில் நல்லது கெட்டது என்றால் பேசுவாள்.
நினைவுகள் சாமியாடி தாத்தா பக்கம் போனது.
காட்டோரம் இருக்கும் நிலத்து குடிசையில் தாத்தன் குடும்பத்தில் வாழவெட்டியாய் தங்கி போன அம்மாவுக்கு ஒரே பெண்ணாய் பொறந்து வளர்ந்து காட்டில் ஆடு மேய்ந்திருந்த மாலையில் அடிவயிறு வலித்து தொடையில் ரத்தம் கசிந்த நாளின் இரவு சடங்குக்கு மூகூர்த்த நாள் பார்க்க வந்த தாத்தாவுக்குள் இருக்கும் சாமியாடியை முதல் முறையாக பார்க்க முடிந்தது
சாமியாடி வந்து போன பிறகு என்னோடு விளையாடிய,என்னை சந்தோஷப்படுத்திய என்னை தோள் மேல் தூக்கிக்கொண்டு போய் மரத்தேரை காட்டிய தாய் மாமனின் முகம் மறைந்து வேறு உருவத்தில் தெரிந்த மாமாவின் முகம் இன்னும் அப்படியே எதிரில் இருக்கும் கண்ணாடியில் தெரிவது போல அவ்வளவு துலக்கமாக நினைவில் இருக்கிறது
”இன்னும் ஆறு மாசத்துல இவளுக்கு கல்யாணத்தை வைச்சிடனும் அதான் ஊட்டுக்கும்,ஊருக்கும் நல்லது”ன்னு ஜாதகம் இல்லாத என் முக குறியை பார்த்து அவர் சொல்லிவிட்டு போன சொல்தான் அதன் பிறகு தாத்தன் வீட்டில் வேத வாக்காக இருந்தது.
ஊரை விட்டு தூரத்தில் இருந்த காட்டு அடிவாரத்தில் இருந்தாலோ என்னவோ ஊரின் சட்ட திட்டங்கள் எதுவும் தெரியாமல் விடிந்ததும் நிலத்தில் பூ பறிப்பது அதன் பிறகு கிளம்பி காட்டோடை ஓரமாகவே போய் பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு போவது,மாலை பள்ளி விட்டதும் கூட படிக்கிறவர்களை கூட்டிக்கொண்டு போய் காடுகளுக்குள் கலாகாய்களையும்,நாவல் பழங்களையும் மடி நிறைய பறித்து கொடுத்து அனுப்புவது,பள்ளி இல்லாத நாட்களில் பக்கத்து நிலத்து தோழியான கல்பனாவோடு காட்டுக்குள் ஆடு மேய்ப்பது தவிர ஊர் வாசம் என்பது சொந்தகாரர் கல்யாணம் அல்லது சாவு நடக்கிற நாளில் மட்டுமே ஆனது எனது பால்ய வயதின் அதிர்ஷடம் தான்.
அவர்களுக்கு நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்காவது இந்த சாவுக்கு போக வேண்டும் என்று வைராக்கியம் தோன்றியது. எப்படி போவது என்று யோசித்த போதுதான் ஆலா அக்காவின் ஞாபகம் வந்தது
அவர் இரண்டு முறை போன் எடுக்காத போது போலாமா,வேண்டாமா என்று இன்னொரு தடவை மனம் யோசித்தது. அதற்குள் அவரே போன் பண்ணினார்
“அக்கா எனக்கு திருவண்ணாமலை வரைக்கும் ஓலோவுல கார் புக் பண்ணி தரமுடியுமா” என்று கேட்டபோது அவர் தயங்கியதும் இரண்டு நாள் தான் மீண்டும் திரும்பி வந்துவிடுவேன் என்றதும்
’சரி நானும் கூட வர்ரேன் ஏதாவது பிரச்சனையின்னா உதவியாக இருக்கும்’ என்று சொல்லியவருக்கு என்னிடம் இருந்து கசப்பான புன்னகை மட்டுமே தரமுடிந்ததில் கொஞ்சம் வருத்தம் தான்
நாற்பது வயதான சிரித்த முகமான டிரைவருடன் ஆலா அக்கா வீட்டுக்கு முன் காத்திருந்தார். படிந்து வாரிய தலையும் நெற்றியில் சந்தனமும் வைத்து சாதுவான முகமாக இருந்தார்
சுருட்டை முடி காற்றில் ஆட காரருகில் நின்றிருந்த அக்காவை பார்த்ததும் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்து போலவே இருந்தாள்.நரைத்த முடி வருவதற்கு வயதெல்லாம் காரணம் இல்லை போல என்று நினைத்துக்கொண்டேன்
ஏனோ அவருக்கு வர வர வயது குறைந்துக்கொண்டே போவது போல தெரிந்தது.
கார் கிளம்பி பைபாஸ் சாலையில் போகும் போது இயர் போனை எடுத்து காதில் மாட்டிக்கொண்டேன். ரம்மியமான பழைய பாடல்களை கேட்டபடி எதிரே வரும் மலைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சட்டென வானம் கருத்து மழை பெய்ய மலை முகட்டில் மேகங்கள் சூழந்தன.
இந்த ஊருக்கு வந்த பிறகு நிதானமாக பார்க்கும் முதல் மழை.
சிறு வயதில் மழை விட்டவுடன் மலையை உரசி செல்லும் வெண் மேகத்தை பூ பறிப்பதை கூட மறந்து கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். இலை,
தழையெல்லாம் கழுவி நிற்கும் பசு மலையை பார்க்க பார்க்க நானே நனைந்தது போல் உணர்வேன்
ஆலா அக்காவை நினைக்கும் போதெல்லாம் இதே உணர்வு தோன்றியிருக்கிறது
தாத்தனும்,மாமனும் எவ்வளவு சொல்லியும் கேட்கமால் கல்யாண ஏற்பாடு பண்ணிய மூன்றாவது நாள் காட்டோடையில் அழுதுக்கொண்டிருந்த என்னை இரண்டு பேர் வந்து வீட்டுக்கு கூட்டி போனார்கள்
தாத்தனும்,மாமனும் வீட்டின் தாழ்வாரத்தில் உட்காரந்துக்கொண்டிருந்தார்கள்.
”ஏங்க என் பெயர் ஆலா இவர் பேரு மூர்த்தி நாங்க லைல்டு லைனுலேயிருந்து வந்திருக்கோம்”
“இந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாண வயசு வராததால இப்ப கல்யாணம் பண்ண முடியாது. அப்படி மீறி செய்தா உங்கள போலிஸ்ல புடிச்சி கொடுக்க வேண்டிது இருக்கும்”னு தாத்தனிடம் சொல்ல சொல்ல அவர்கள் முன்னாடியே என் மீது மாமா தாண்டவம் ஆடினார்.
அவர்களிடமிருந்து காப்பாற்றி ஹோமுக்கு கூட்டி போன இரவில் நிம்மதியாக தூங்கினேன்.
ஒரு நாள் பள்ளிகூட மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பர்வீனா டீச்சர் வாஞ்சையோடு தலைகோதி ”உங்க வீட்டுல இப்ப எந்த பிரச்சனையில்ல” என்று கேட்டதும் தான் புரிந்து கொண்டேன் அவர் தான் ஹோமுக்கு சொல்லியிருப்பார் என்று.
தாத்தன் வந்து கையெழுத்து போட்டு கூட்டி வந்த பிறகு ஒரு வருஷம் சாமியாடிதாத்தாவும்,கல்யாண பேச்சு இல்லாமல் மறுபடியும் பள்ளிக்கூடம்,காடு,கலாய்காய் என்று சுற்றிக்கொண்டிருந்தேன்.
அப்பொழுதுதான் குட்டி ஆட்டின் பரிசம் போல எனக்குள் இருந்த இளமையின் கதவுகளை பக்கத்து நிலத்து செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டிருந்த முருகன் எனக்கே திறந்து காட்டினான். அந்த சூளைக்கு எங்கள் கிணற்றில் இருந்துதான் தண்ணிக்கொண்டு போனார்கள்.
சுட்டெரிக்கும் வெயியில் பகலெல்லாம் வேலை செய்து விட்டு சாயங்காலத்தில் காட்டோடையின் ஈர மணலில் கை அளந்தபடி தினமும் எனக்காக காத்திருந்த நாட்கள் இன்னும் பசுமையாக இருக்கிறது.
ஒவ்வொரு இரவும் சூளை கொட்டைகையில் இருந்து எனக்காக ரேடியோ வழியாக காதலை சொல்லிக்கொண்டிருந்தான்.
“கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே” அதில் முதல் பாடலாக இருக்கும். அவன் சுபாவம் போலவே அவன் காதலும் கூதல் காற்று போல மென்மையாக என்னை தொட்டது.
மேகங்களில்லாத கார்த்திகை குளிரில் பவுணர்மி நிலவை பார்த்தபடி சூளை கனலில் கயிற்று கட்டலில் ஒன்றாக படுத்து அப்பாடலை கேட்பதாக என் கனவில் முருகன் விரிந்தான்
அவனை சுற்றியே என் ஞாபகங்களும் நாட்களும் இனிமையாக நகர்ந்தது.
ஒரு வாரம் வேறு சூளைக்கு வேலைக்கு போயிருந்த முருகனை காணாமல் தத்தளித்த போது எனக்குள் அவன் எவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்று புரிந்தது.
ஊரிலிருந்து வந்தவுடன் நானும் தாத்தனும் மட்டுமே இருந்த ஒரு மத்தியானத்தில் ஏதோ பொருள் கேட்பது போல் என் முன் தோன்றியதும் எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
ஆனால் தாத்தன் அவனை தூரத்திலியே நிற்க வைத்து பேசி விட்டு வந்து
“கீழ் சாதி பையனுக்கு எவ்வளவு திமிர் பார் வீடு வரைக்கும் வந்து நிக்குது”
என்று சொல்லியதை கேட்டு அவன் தலை குனிந்து போன முகத்தை பார்த்து
எனக்குள் பறந்த பட்டாபூச்சி சட்டென மறைந்து அழுகையாக வந்தது.
எதுவுமே நடக்காதது போல அதே ஓடை மணலில் கை அளந்த படி எனக்காக மறு நாள் காத்திருந்தான்.
அதே பாடல் அதே கனவு என எங்கள் காதல் வளர்ந்தது.
இதே மாதிரி மழை பெய்த ஒரு மாலையில் காட்டில் ஆடு மேய்த்திருந்த போது காடே பூத்தது போல என் முன் தோன்றி மயில் பாறையில் நின்று காட்டு பூவை கொடுத்து தைரியமாக தன் காதலை சொன்ன போது கான மயிலும் வான மழையும் எங்களை சுற்றி வாழ்த்தியதாக பிரமை எழுந்தது.
வெகு நேரம் மயில் பாறையில் அவன் மடியில் படுத்து கிடந்தேன். சிறு வயதிலிருந்து அப்பன் மேல் இருந்த கோவத்தால் தள்ளி வைத்து வளர்த்த அம்மாவின் வாசமறியாத ஏக்கமெல்லாம் அவன் உடலில் ஒட்டியிருந்த ஈர மண் எனக்கு கொண்டு வந்தது.
தினம் தினம் அவன் வருகைக்காக மயில் பாறையில் காட்டின் ஈர வாசத்தையும்,பறவைகளின் பாடல்களையும்,பூக்களின் நடனத்தையும்,பொத்தி பொத்தி வைத்து காத்திருந்தேன்.
அவன் வந்தவுடன் என் காட்டுடல் மறைந்து அந்த ஈர மண் என்னை உள்ளிழுத்துக்கொள்ளும் நான் நிலத்தின் மகவாவும்,அவன் காட்டின் மகவாவும் உயிர் மாற்றி சுற்றி திரிந்தோம்.
ஆனால் அவன் மேல் இருந்த சூளை மண்ணின் ஈரம் வாசம் முழுதும் அறியும் முன்னே எப்படியோ எங்கள் சங்கதி வீட்டுக்கு தெரிய ஒரே வாரத்தில் அவசர அவசரமாக தாய்மாமனோடு கல்யாணம் செய்துவைத்தார்கள்.
கனவும்,காதலும் ஒற்றை கயிறில் சுருண்டு வீடு,நிலத்து வேலை என அங்கேயே சுழன்றது.
தாய் வீட்டில் அம்மா தஞ்சம் புகுந்த போது நான் தவழ்ந்த வயது பேண்டதை துடைத்தது,வளர்த்தது,பள்ளிகூடம் கூட்டி போனது எல்லாமே மாமாக்கள் தான்
மாமனுக்கும் இந்த கல்யாணத்தில் பெரிய விருப்பம் இல்லை என்று தெரியும்.
நாங்கள் இருவருமே ஏதோ சிலந்தி வலைக்குள் மாட்டிக்கொண்ட பூச்சியை போல ஒரே வீட்டில் கொஞ்ச நாள் சுற்றிக்கொண்டிருந்தோம். இரவின் படுக்கைகள் ஒன்றாக இருந்தாலும் மனம் மட்டும் வேறு வேறாக இருந்தது. முருகனின் நினைப்பை மறக்க கொஞ்ச நாள் அந்த ஓடையின் பக்கமே போகாமல் இருந்தேன்.
கல்யாண ஏற்பாடான இரண்டாவது நாளே முருகனை வேறு ஊருக்கு துரத்திவிட்டதாக எங்களுக்கு தூது போன சூளையில் வேலை செய்யும் கருப்பி வந்து சொன்னாள்.
நினைவுகள் பின்னி அவனை சுற்றியே இருக்க கொஞ்சம் கார் முன்னாடி பார்த்தேன். மழை பெய்து நனைந்திருந்த ரோட்டின் இரு புறமும் மரங்கள் பின்னோக்கி போவதையே பார்த்துக்கொண்டு வந்தேன். சட்டென கார் படாரென நின்றது.
முகமெல்லாம் வியர்க்க காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடினார் டிரைவர்.கொஞ்சம் பதட்டமாக இருக்க காரை விட்டு இறங்காமல் உள்ளேயே இருந்தேன்
காரை சுற்றி பார்த்துவிட்டு உள்ளே வந்தவர்,
”ஒரு பன்னி குருக்கால வந்திடுச்சிம்மா! நல்ல நேரம் கார் மேல இடிக்காம ஓடிடுச்சி” என்றதும் மனம் பதட்டமடைவது குறைந்தது.
போனது தாய் பன்னி. எதிர்ல இருக்கற காட்டுல எங்கேயோ குட்டி போட்டிருக்கும் போல மழைக்கு குட்டிக்கு எதனாவது ஆயிடுமோன்னு அவ்வளவு வேகமா போகுதுண்ணா என்றதும், அவர் முகம் மாறுவதை பார்க்க முடிந்தது.
என்னை போலவே அந்த பன்னி காரில் அடிபடாமல் தப்பித்தது அவருக்கு ஒரு ஆசுவாசத்தை கொடுத்திருக்கும் போல.
பதினாறு வருடம் தூங்கி எழுந்தவுடன் காட்டில் முழித்த நாட்களும் மான்,கவுதாரி,பன்னி,புது ஓடையில் வரும் செம்மண் மழை,தினமும் காட்டிலிருந்து வந்து சினேகித்து போன பெண் மயில் என நினைவுகள் எல்லாம் ஒரு நிமிடம் வந்து போனது.
மீண்டும் கார் நகர்ந்ததும்
மனம் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தொடங்கியது. அந்நினைவோடே கண் அயர்ந்தேன்
பிடிக்காத கல்யாணமானலும் அடுத்த மூன்றாவது மாதத்திலியே கருவுற்றேன். வயிற்றில் அசைவுகள் நெளிய ஆரம்பித்ததும் ஏனோ என் மீதே ஒரு வாஞ்சை தோன்றியது. ஒரு நாள் விட்டால் தோட்டமே பூத்து கிடக்கும் மல்லி பூவிலிருந்து வரும் வாசம் போல என்னை உணர ஆரம்பித்திருந்த காலமது.
ஒரு சுழல் காற்று அடித்து முடிந்து அமைதியானது போல இருந்த நேரத்தில் தான் வீட்டில் உள்ளவர்களின் பார்வைகளெல்லாம் மறுபடியும் வேவு பார்க்க தொடங்கிய நாளில் தெரிந்துக்கொண்டேன். முருகன் அதே சூளைக்கு வேலைக்கு வந்திருக்கிறான் என்று.
தாய்மாமனின் முகத்தில் மறுபடியும் வேதாளம் ஏறிக்கொண்டது
எதை தொட்டாலும் குத்தம்,சந்தேகம் ஒரு நாள் வெளிப்படையாகவே, ’நீதான் அந்த நாயை வர சொன்னையா ராத்திரில்லாம் சோக பாட்டா போட்டுட்டுருக்கான்.’

’புள்ளதாட்சியா இருக்கேன்னு பார்க்கிறேன் இல்லனா இரண்டு பேரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்’ என்று ஆத்திரமாக சொல்லும் போது உண்மையாக அவன் தலை வெட்டுண்டு கிடக்கும் காட்சி ஒரு நிமிடம் வந்து போனது.
பகை ஒரு நாள் முடிந்து விடுவது ஆனால் வெறுப்பு அப்படியில்லை காட்டில் வைத்த தீ போல மொத்த காட்டையும் எரிந்து தான் அடங்கும் ஏன் எதற்கு என்று தெரியாமலே முருகன் மீது வெறுப்பு வீட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல சுற்றத்தாரிடமும் அது பரவியிருந்தது.
அது கொடுத்த பரிதாபமோ என்னவோ மறுபடியும் எனக்குள் முருகன் கனவாக உலவிக்கொண்டிருந்தான்.
சுற்றி இருந்த எந்த வெறுப்பும் அண்டாமல் வயிற்றில் இருந்த குழந்தையை பெற்றெடுத்தேன். அது ஒரு சபதம் போல இருந்த நாட்கள் நான் நடமாடிய இடத்திலெல்லாம் துணைக்கு தனிமையை மட்டுமே சூடிக்கொண்டிருந்தேன்.
ஆனால் எனக்குள் அந்த தனிமை பல கேள்விகளை கொண்டு வந்தது எந்த தவறும் செய்யாத எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என மனம் யோசித்தது.
பெற்ற பிள்ளையை வந்து கூட பார்க்காத ஓடி போன அப்பனுக்காக என்னை தள்ளி வைத்த அம்மா, யாரோ சாமியாடி சொன்னான் என்பதற்காக மொட்டு விரியாமலே என் வாழ்க்கையை கிள்ள நினைத்த தாத்தா, தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லமுடியாமல் சாதி பெருமைக்காக தாலி கட்டிய தாய் மாமன், இவர்கள் மத்தியில் என் குழந்தை வளர்வதா? என்ற கேள்வி புகை போல் என்னுள் எழுந்தது.
அந்நினைப்பு வந்ததும் ஒரே நாளில் பெரிய மனுசி ஆனது போல உணர்ந்தேன்.
சோக பாடல்களும் நின்ற நாளில்தான் தெரிந்துக்கொண்டேன் என்னை மறக்கமுடியாமல் தினமும் முருகன் குடித்துக்கொண்டிருக்கிறான் என்று.
கான மயிலும் வான மழையும் வாழ்த்திய எங்கள் காதல் வெற்று பாறையில் தெரியும் கானல் போல ஆகி போனது.
என் முகமோ,என் பேச்சோ முருகனை பழைய நிலைமைக்கு திருப்பும் என நினைத்தேன். புழுக்கமான ஒரு சாயங்காலத்தில் மயில் பாறையில் நானும் கருப்பியும் அவனுக்காக காத்திருந்தோம்.
சட்டென வீசிய ஈர காற்றில் சூளை மண் வாசம் வருவதற்கு முன்
மோப்பம் பிடித்து வந்து நிற்கும் நாய் போல என் தாய்மாமனும்,சாமியாடி தாத்தாவும் முருகனை வழியிலியே அடித்து இழுத்து வந்தார்கள். அவர்கள் வெறுப்புக்கு முதல் பலியாய் காட்டோடையில் கருப்பி சுருண்டு கிடந்தாள்.
அடுத்த அடிக்கு நினைவிழந்திருந்த எங்கள் வாயில் தண்ணி ஊற்றுவது போல விஷத்தை ஊற்றினார்கள். நினைவு மங்க மங்க அவனின் முனகல் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.
கண் திறந்து பார்த்த போது ஆஸ்பத்திரியில் உடல் முழுக்க நீல பாரிக்க கிடந்தேன்.
அந்நினைவு வந்ததும் தூக்கி போட்டது போல எழுந்து உட்கார்ந்தேன். மனம் ஏனோ வேகமா படபடக்க காதடைத்து. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது பக்கத்தில் வைத்திருந்த பையில் எவ்வளவு தேடியும் மன பதட்டத்தின் போது போடும் மாத்திரை கிடைக்காமல் விரல்கள் எல்லாம் நடுங்க ஆரம்பிக்க
”அண்ணா காரை எங்காவது நிறுத்துங்க” என்றதும்
ஒரு டீ கடையோரம் காரை நிறுத்தினார்.
காரை விட்டு இறங்கி வெளி காற்றை வாங்கியதும் தான் மூச்சே திரும்பி வந்தது போல இருந்தது.
வேண்டாம் நான் இருக்கிறேன் என்று சொல்லி மட்டும் இவர்களுக்கு என்ன ஆக போகிறது திரும்பி விடலாம் என்று காரில் ஏறும் போதும் தான்
கையில் டீயோடு வந்த டிரைவர் அண்ணன் ‘ஏம்மா ஆலா அக்காவுக்கு நீங்க சொந்தமா? இல்ல அக்காவ எனக்கு பத்து வருஷமா தெரியும், ஹோம்ல இருக்கிற
யாருக்கும் இவ்வளவு அக்கறை எடுத்து பார்த்தில்லை. வண்டி கிளம்பியதிலிருந்து மெசேஜா போட்டிருக்காங்க” என்றதும் எனக்குள் நம்பிக்கை துளிர்த்தது
ஆமாம்! என்று மட்டும் அவரிடம் தலையசைத்தேன்
நினைவின் முடிச்சுகளில் இருந்த பாரம் கொஞ்ச கொஞ்சமாக இறங்கியதும் கண்கள் தெளிந்து சுற்றி இருந்தவையெல்லாம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது.
கனவுருக்கு பிறகு தேங்கி நிற்கும் நினைவுகள் போல அக்காட்சி இன்னும் அகலாமல் மனதில் ஓடிக்கொண்டே இருக்க..
அப்பொழுதான் அந்த இடத்தை பார்த்தேன் இருளிட்டிருந்த சாலையில் ஓரமாக காட்டடிவாரம் தெரிய பாதையின் ஒட்டியிருந்த நிலத்தில் வந்த ஓடையோரம் ஏழு எட்டு சூளைகள் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தன.
நான் திரும்பி டிரைவர் அண்ணாவை பார்த்தேன். “ஊர் வர இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தான் இருக்கு புதுசா காட்டோரம் மடிச்சிருக்கிற பைபாஸ்ல நிக்குறோம் சீக்கிரமா போயிடலாம்மா” என்றதும்
ஏனோ எனக்கு அசட்டு தனமாக சிரிக்க வேண்டும் போல இருந்தது.
கனவுருக்கு பிறகு தேங்கி நிற்கும் நினைவுகள் போல அக்காட்சி இன்னும் அகலாமல் மனதில் ஓடிக்கொண்டே கிடக்க, அதே இடத்தில் வண்டி நிற்பது எனக்கு எந்த வியப்பும் அளிக்கவில்லை.
கொஞ்சம் தள்ளியிருந்த ஓடை நடுவில் போட்டிருந்த வாரவதியில் போய் உட்கார்ந்தேன். கிழக்கில் விடி வெள்ளி லேசாக முளைத்திருந்தது.
கனவுருக்கும்,நனவிலிக்கும் மத்தியின் யதேட்சையின் கைகள் இப்படித்தான் இப்பொழுதெல்லாம் என்னை இழுத்துக்கொண்டு போகிறது என்று நினைத்துக்கொண்டேன்.
அன்றும் இதோ போல மலையில் மரம் நட்டுவிட்டு வெளியே வந்தவர்கள் பார்த்து தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் வரும் வழியிலே முருகன் இறந்து போனதாகவும் என்னை அங்கு காப்பாற்ற முடியாமல் சென்னை பெரியாஸ்பெட்டலுக்கு அனுப்பி விட்டதாகவும் பக்கத்து பெட்டில் ஒரு பாட்டி சொன்ன போது இதே போல தேங்கிய நினைவுகள் போல அந்த காட்சி இன்னும் கிடக்கிறது.
மூன்று மாதம் அனாதை போல ஆஸ்பெட்டலில் கிடந்தேன். யார் யாரோ வந்தார்கள் என்ன என்னவோ எழுதிக்கொண்டு போனார்கள்.
ஊரிலிருந்தோ,வீட்டிலிருந்தோ ஒருவரும் வந்து பார்க்கவேயில்லை.
மனம் முழுக்க குழந்தையின் நினைப்பில் வாடிகிடந்த போது ஒரு நாள் காலையில் துர் கனவு போல என் குழந்தையின் முகமும் இந்த உலகத்தை விட்டு மறைந்து போன செய்தி மட்டும் வந்தது.
யாருமற்றவளாக படுக்கையில் கிடந்து உழன்றேன்.
அந்நேரம் பார்த்து ஆலா அக்கா அந்த ஆஸ்பெட்டலுக்கு வந்தது தற்செயலோ,தெய்வாதிதமோ தெரியாது. அவளோடவே என்னை கூட்டி போனார். மூன்று வருடம் அவருடனே வைத்து படிக்க வைத்து அவர் நடத்தும் ஹோம்லேயே வேலைக்கும் சேர்த்துக்கொண்டார்.
மொத்த நினைவும் சுழல் காற்று போல வெளியேற விடியல் கருக்களில் காட்டோடை ஓரமாக நடந்து போனேன். சூளையில் வேலை செய்ய ஆட்கள் வர தொடங்கினர்.
என் கண்கள் முருகனையும்,கருப்பியையும் தேடியது.
எங்கள் குடிசை இருந்த இடம் பிளாட்டுகளாக மாறிபோயிருந்தது.
நினைவுகளில் வழியை மறக்காமல் ஒன்றிரண்டு மயில்கள் மட்டும் அங்கு சுற்றிக்கொண்டிருந்தது.
தூரத்தில் கொட்டு சத்தம் கேட்க காரருகில் வந்த போது யாரிடமோ டிரைவர் அண்ணன் பேசிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் சிரிப்பின் களை தொலைந்து துயரத்தின் ரேகை படிந்திருந்தது.
வண்டி ஊர் பாதையில் போகும் போது மொத்தமாக விடிந்திருந்திருந்தது.
வீட்டருகில் போட்டிருந்த சாமியான பந்தலில் சாமியாடி தாத்தா கிடத்தியிருக்க மொத்த ஊரும் சுற்றி இருப்பது போல இருந்தது.
காரை விட்டு இறங்கியதும் எல்லோர் கண்களும் என்னை எதிர்பார்த்தது போலவே தெரிந்தது. ஊரே வழி விட நான் மிடுக்காக வாங்கி வந்த மாலையை போடும் போது ஒரு கை வந்து தடுக்க அந்த கையை பார்த்தேன். அது என் வயிற்றில் அசைந்த கை போலவே இருந்தது.
00

மாரி.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர்
கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும் கடந்த பத்து வருடமாக இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்”சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும்,ஊர் பொது கிணறு புணரமப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார்.அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார்.தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.அப்பா மாரிமுத்து.அம்மா ஜெகநாதம்மாள்.மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.


மிகவும் ஆழமான சிறுகதை…
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மிகவும் ஆழமான சிறுகதை…
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்