பல்லபுரம் பிரபாகரன்

டீவி அதிக நேரம் பார்க்காத! பார்த்தாலும் கொஞ்ச நேரத்தில் நிறுத்திடு.

மொட்டை வெயிலில் விளையாடாதே!

தம்பியிடம் அன்பு செய்ய மறந்து, வம்பு செய்யாதே; அவன் உன்னோடுகூட பிறந்தவன் மறக்காதே!

சைக்கிள் எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி வராதே.

ஐஸ் வேண்டும்; காய்கறிகள் வேண்டாம்…  அடம்பிடிக்கக் கூடாது.

மொத்தத்தில் தாத்தா பாட்டியைத் தொந்தரவு செய்யாதே! …

எப்போதும் போல் அலுவலகம் செல்லும் முன்பு செய்யக்கூடாததை பட்டியலிட்டுப் பின் வேலைக்குப் புறப்பட்டார், அப்பா.

தினம் தூங்கி எழுந்ததும், அவருக்கு இதுதான் முதல் வேலை. பிறகுதான் அலுவலகம்.

அவர் சொல்லும்போது மூன்று பிள்ளைகளும், ‘ம்ம்ம், ம்ம்ம்…’ என்று தலையாட்டும்.

அவர் வேலைக்குச் சென்றதும், எல்லாம் மறந்து பிள்ளைகள் சேட்டைகளை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

கோடை விடுமுறை தொடங்கி பத்து நாட்கள் ஆகியிருந்தது. பிள்ளைகள் பாட்டி இருக்கும் கிராமத்துக்கு வந்திருந்தனர்.

நகரத்தில் உயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் வசித்த அவர்களுக்கு, கிராமத்தில் கிடைத்த வாழ்வு புதுமையாக இருந்தது.

விடுமுறைக்கு வந்த பேரன்களிடம் தாத்தா பாட்டி கண்டிப்புக் காட்டவில்லை. பிள்ளைகள் விரும்பியதை கொடுப்பது செய்வதுதான் அன்பு என்று அவர்கள் போக்கிலே விட்டிருந்தனர்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வரும்போதே அவர்களைச் சமாளிக்க முடிவதில்லை. விடுமுறை முடிய மீதம் முப்பது நாட்கள் இருக்கிறது. அதை நினைத்தாலே பாட்டிக்கு இரத்தம் அழுத்தம் அதிகரிக்கும்.

‘ரோட்டில் வண்டி, வாகனம் வரும். விளையாடாதே’ என்ற பாட்டியின் சொல் பேச்சைக் கேட்கவில்லை. வெயில் என்று பார்க்காமல் ரோட்டிலே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் மாட்டியிருப்பான் மூத்தவன். கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிப் போனான்.

சாப்பிடுவதற்கு கூப்பிட வந்த பாட்டி பார்த்துப் பயத்தில் கதிகலங்கி போனாள். உடனே அப்பாவிற்கு போன் செய்தாள்.

“சொல்றதையே கேட்க  மாட்டேங்குறாங்க. ரோட்டிலயே ஆட்டம் போடுறானுங்க. வண்டி வாகனங்கள் அதிகம் போகுது. ஒரு நேரம் பார்த்தாப்ல இருக்காது…

சாப்பிட சொன்னால், டிவி போட சொல்லி அடம் பிடிக்கின்றனர். டிவி போட்டால், காய்கறிகள் கீரைகள் சாப்பிட மாட்டோம்னு ஒதுக்குகின்றனர். அப்படித்தான் கேட்காமல் ரோட்டில்…

அடுக்கிக்கொண்டே போனாள் பாட்டி.

“அவனிடம் போனைக் குடுங்க” கடுகடுத்த குரலில் குறுக்கிட்டார், அப்பா.

பாட்டி, “இந்தா தம்பி! அப்பா பேசுகிறார்” என்றாள்.

“டேய், டேய்! பேசுறது கேக்குதா? ஒழுங்கா இருக்கீங்களா இல்லையா? வீட்டுக்கு வந்ததும் உண்டு இல்லைனு செஞ்சிடுவேன்.” என்று சொல்ல,

“இல்லப்பா… அவன் போனை வாங்க மாட்டேனு ஓடிட்டான்.” என்றாள் பாட்டி.

“அவர்களை வந்து வச்சுக்கிறேன்” சொல்லிவிட்டு அலுவலக வேலையில் மூழ்கினார்.

“அவர்களை என்ன செய்வது?” என்று தெரியாமல் தவித்த அப்பாவிற்கு ஒரு புரிதல் ஏற்பட்டது.

மாலை வீட்டிற்கு வந்து பார்த்ததும், அவர்கள் அமைதியாக வரைபடங்களுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

அப்பாவின் கோபம் ஒருவாறு தணியத் தொடங்கியது.

காலத்தை வீணாக்க கூடாது; திரும்ப கிடைக்காது. ஏதாவது ஒன்றை உருப்படியாக செய்ய பழக வேண்டும்.

இதையெல்லாம் அவர்களுக்கு சொன்னால் புரியாது.

காலையில் வேலைக்குச் செல்லும்போது எப்போதும்போல் செய்யக்கூடாததை பட்டியலிடாமல் மாற்றிப் பேசினார்.

“ஓவியம் வரைந்து வை. நான் வந்ததும் மார்க்கு போடுறேன். நல்லா இருந்துச்சுன்னா உனக்குப் பிடித்ததை பரிசாக வாங்கித் தருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பினார்.

‘படம் வரைந்து இருப்பான்’ என்று ஆவலுடன் வீடு திரும்பிய அப்பாவுக்கு ஏமாற்றம். அவன் படம் வரையாமல் இல்லை. மேகம், சூரியன், மரம், மலை, கடல்… எல்லாம் வரைய முயற்சி செய்து இருந்தான். ஆனால் எந்தப் படமும் முழுமை பெறாமல் இருந்தது.

மூன்று நாட்கள் கடந்து போனது.

அப்பா தன்னைத்தானே பரிசீலித்தார். ஓர் உண்மை புரிந்தது.

‘ஏதாவது செய்’ என்று சொல்லிவிட்டு, நீ செய்வது சரியா? என்று கேட்பது நியாயமில்லை. அப்படி இப்படி, அதை இதை செய்யாதே என்று பட்டியலிட்டுச் சென்றவர், செய்ய வேண்டிய ஒன்றை மட்டும் தெளிவாக சொல்ல முடிவு செய்தார்.

பொதுவாக படம் வரை, படி என்று சொல்லாமல், மாற்றிப் பேசினார்.

‘ஒரு குதிரை ஓவியத்தை வரைந்து வண்ணம் தீட்டி வை. அழகாக இருந்தால் செய்தித்தாளுக்கு அனுப்பி வைக்கலாம்.

அதுபோல, ‘திருக்குறள் எண்: 240-யை படித்துப்பார்’ என்று சொல்லி இருந்தார்.

அப்பாவுக்கு அன்று இரவு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஓர் உயிரோட்டமான குதிரையை தத்ரூபமாக வரைந்து இருந்தான்.

அதை அவன்தான் வரைந்தானா!

அப்பாவால் நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

அப்பாவுக்கு அப்போதுதான் புரிந்தது. பிள்ளைகளின் மொழி எது என்று?

எதையும் குறிப்பிட்டுச் சொல்லும்போது கவனம் குறையாமலும், குழப்பம் ஏற்படாமலும் இருக்கும்.

அதுபோலவே குறளை படித்துவிட்டு அதற்கான விளக்கத்தையும் தெளிவாகப் படித்து மனப்பாடம் செய்து இருந்தான். அப்பா, அந்தக் குறளை வாசிக்கும்போது உதடுகள் ஒட்டுவதில்லை என்று சொன்னான்.

செய்தித்தாள் ஒன்றுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாரம், வார இதழில் அந்தக் குதிரை ஓவியமும், வரைந்தவர் பெயரும், புகைபடமும் இடம் பெற்றிருந்தது. அந்த மகிழ்ச்சியை எல்லோரும் கொண்டாடினர். எல்லையற்ற மகிழ்ச்சியின் பக்கம் அவர்களைச் சுமந்து ஓடிக் கொண்டிருந்தது செய்தித்தாளில் வந்த குதிரை.

00

பல்லபுரம் பிரபாகரன்

பி.டெக். (வேளாண் பொறியியல்)

எண் 140, சாத்தார வீதி,

ஸ்ரீரங்கம்-திருச்சி – 620006

மற்ற பதிவுகள்

One thought on “செய்தித்தாளில் வந்த குதிரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *