-இலட்சுமணப் பிரகாசம்

எப்போதும் போலவே வழக்கமாக நடைபயிற்சிக்காக செல்லும் பாதையில் நகரின் நுழைவாயில் வழியாகத் தான் அன்றைய ஞாயிறின் காலைப் பொழுது நடைபயிற்சியை தொடங்கினேன். சூரிய கிரணங்கள் முளைத்தெழும் இளங்காலையின் காற்றின் மென் தீண்டலான குதூகலிப்பு நடையின் வேகத்தை அதிகரிக்கத் தூண்டியது. மெல்ல மெல்ல நடையின் வேகம் கூடியது.

நகரின் நுழைவாயில் மெயின் ரோட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. எல்லோருடைய பார்வைக்கும் படும்படியான பெரிய எழுத்தில் நுழைவாயிலின் முகப்புப் பக்கத்தில் “முருகப் பிரியா நகர் நுழைவு” என எழுதப்பட்ட நுழைவாயிலின் தொடக்கத்திலேயே சிறிய பிள்ளையார் கோயில் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. சாலையின் ஓரத்தில் வரிசையாக வளர்ந்திருந்த மரத்தின் கடினப்பகுதியில் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கவர்ச்சியான வண்ணத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. பிள்ளையார் கோயிலின் எதிரே அனுமதியின்றி யாரும் நுழைய முடியாத பெரிய இரும்புகேட், மதில் சுவரில் கம்பிவேலி அமைத்த பண்ணைத் தோட்டம். அது எப்பொழுதுமே மர்மமான பிரதேசம் போல தோற்றம் கொள்ளும். பரந்து விரிந்துகிடந்த சதுப்பு நிலமொன்று எப்போதோ யாரோ சிலரால் கூட்டுசேர்ந்து வாங்கி திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகள். அதில் சில மனைப் பிரிவுகள் வீடுகளாகவும், அவற்றில் சில வெறும் காலி மனைகளாகவும் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. காலி மனைகளில் மரங்களும் செடிகளும் புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. சதுப்பு நிலத்தில் வளரும் அரசு, வேம்பு மரங்களும், சில தென்னை, மா, நாவல் போன்ற மரங்களும் வளர்ந்து காடுபோன்ற சூழலோடு காட்சியளித்தது. மரக்கிளைகளில் பலவகைப் பறவைகளும் அவ்வப்போது வந்தமர்ந்து செல்வதை பார்க்கிற போது உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி ரேகை நெளிந்து ஓடும். சிறு நத்தைகளும், ஆமைகளும் சதுப்பு நிலத்திலிருந்து நகருக்காக போடப்பட்ட சாலையைக் கடக்க முயல்வதையும் அவ்வப்போது பார்த்து ரசித்தபடியே அவ்வழியே நடைபயிற்சிக்காக நடப்பவர்களின் நடை மெல்ல மெல்ல வேகமெடுக்கத் தொடங்கும்.

 நகர்ப்புறமும் அல்லாத கிராமப்புறமும் அல்லாத எளிதில் எல்லா ஊர்களுக்கும் போக்குவரத்துக்கு ஏற்றபடியான இடமாக அமைய வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கப்ட்டதென நுழையும் முன்பே நமக்கு அப்படியொரு தோற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது முருகப்பிரியா நகர். ஏற்றார் போலவே கடலூர்- நாகப்பட்டினம் வரையிலான விரைவுச் சாலை வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நுழைவாயிலை கடந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையை நடைபயிற்சிக்கு தேர்ந்தெடுத்தேன். சில வேகமான நடைகளுக்குப் பின் உள்ளே தெருக்கள் கிளையாய் பிரிந்து செல்லும் மற்றொரு நகரின் சிறிய பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருதைக் கடந்தேன். பழைய வீட்டின் வாசலுக்குச் செல்லும் பாதை அது. அங்கு உள்ளே சென்று “ப” வடிவில் நடந்துவிட்டு வீடு திரும்பலாம் என தோன்றியது. பழைய வீட்டின் ஞாபகம் மனதில் சலனித்து ஓடத்தொடங்கியது.

இப்பாது குடியிருக்கும் வீடு கூட பத்து மாதங்களுக்கு முன்பு குடியேறிய வீடுதான். முன்பு பக்கத்து நகரான எம்,ஆர்.வீ நகரில் வாடகைக்கு இருந்த பழைய வீடு சிறியதாகவும், நெருக்கடியானதாகவும் இருந்தது. ஒரு சிறிய வராண்டா அதைக் கடந்து உள்ளே செல்வதற்கான படிக்கட்டுகள். வீட்டு வாசப்படியை ஒட்டி மாடிக்குச் செல்ல படிகட்டுகள். மாடி படிக்கட்டுகளுக்கு கீழே ஒரே காம்பவுண்டில் இருக்கும் இரண்டு வீடுகளுக்கான மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. பின் பக்க வீடுதான் வாடகைக் குடியிருப்புக்காகப் பார்த்த வீடு. ஒரு படுக்கையறை, குறைவான பாத்திரங்களையும் பண்டங்களையும் வைத்துக் கொள்கிற அளவுக்கான சமையலறை கொண்ட வீடு. முன்பக்க வீடு பெரியது. ஆறு பேர் ஏழு பேர் கொண்ட பெரிய குடும்பம் வாழ்வதற்கான வசதிகள் கொண்ட வீடு. அதற்கு அடுத்து ஒரு சந்தில் நுழைந்து உள்ளே சென்றால் இரண்டு பெரியவர்கள் ஒரு குழந்தை என சிறிய குடும்பம் வாழப் போதுமான இடங்களைக் கொண்ட வீடு அது என்பது முதலில் அந்த வீடு பற்றிய தகவல் எதுவும் எனக்குத் தெரியவில்லை. உடன் பணியாற்றும் ஆசிரியர் இந்நகரில் ஒரு வீடு காலியாக இருப்பதாகவும் தன்னுடைய உறவினர் யாரோ ஒருவரின் மூலமாக தகவல் அறிந்து என்னிடம் சொன்னார். அவருடைய தகவல் அவ்வளவு நம்பகமானதாக அவரது குரலில் இல்லை. இருப்பினும் ஒரு நம்பிக்கை துளியளவு இருந்தது.

எம்.ஆர்.வீ நகரில் வீடுதேடி அலைந்து கொண்டிருந்த போது பத்தாவது குறுக்குத்தெரு என வழிகாட்டும் சிறிய கற்பலகையைத் தாண்டி சிறிய கட்டிடமும் அதையடுத்து காலி மனையும் அடுத்து ஒரு தெருவுக்குப் பிரிந்து செல்லும் வழியின் முக்கில் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட கேட்டின் முன்பு “டூலெட்- தொடர்பு எண்” என எழுதப்பட்ட அறிவிப்புப் பலகையின் அட்டை மங்கிப் போன நிறத்தில் காற்றில் அசைந்து தொங்கிக் கொண்டிருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் முன்பு சென்று பக்கத்து வீட்டில் யாராவது இருக்கிறார்களா?. வீட்டைப் பற்றி அருகில் யாரையாவது கேட்டுப் பார்க்கலாம் என தேடியபோது எதிரே கிளையாய்ப் பிரிந்து செல்லும் தெருவின் முனையில் இருந்த மாடிவீட்டை நெருங்கிய போது அதுவும் பூட்டுப் போடப்பட்டு இருந்தது. என்ன செய்வதென சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, மங்கிப் போன நிறத்தில் இருந்த டூலெட்- போர்டில் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். முதலில் எண் தெளிவாகத் தெரியவில்லை. மழைநீர் பட்டு நாளடைவில் அதன் கருமை நிற மை எழுத்துகள் எண்கள் கரைந்து மங்கிப் போயிருக்கக் கூடும்.

செல்போன் திரையில் ஒவ்வொரு எண்ணாக கவனமாக டைப் செய்து முழு எண்ணையும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

“ஹலோ”

சில நொடிகளுக்கு எதிர் முனையில் எந்த பதிலும் இல்லை. மீண்டும் தொடர்ந்தேன்.

“ஹலோ”

சற்று கணத்த குரல் கேட்டது. எதிர் முனையில் பேசுபவர் ஆண் என்பதை உறுதிசெய்து கொண்டேன். அவரது குரல் எனது குரலுக்கு பதில் அளித்தது. முதலில் தெளிவில்லாமலும் பிறகு ஒரு கரகரப்புக்குப் பின் தெளிவாக கேட்டது.

“……. சொல்லுங்க….. யார் பேசுறீங்க?”

“எம்.ஆர்.வீ நகர்ல வீட்டு கேட் முன்னாடி டூலெட் போர்டு மாட்டியிருந்தது.”

“ஆமாம். …. சொல்லுங்க.!”

“வீடு வாடகைக்கு கேட்டு தான் சார் உங்களுக்கு கால் பண்ணியிருக்கேன்”

“ஓ. சரி…. நீங்க? உங்க பேரு….?

“சிவஜோதி…. மருதூர் மிடில் ஸ்கூல்ல டீச்சர்”

“ஓ … சரி. சரிங்க சார்”

“வீட்டை உள்ளெ பாக்க முடியுமா?”

“பக்கத்து வீட்டுல யாரும் இல்லீங்களா. தாசில்தார் ஆபீஸ்ல வேலை செய்யறவர். அங்க யாராவது இருக்காங்களா முன்பக்கமா போய் பாருங்க. சாவி அவங்க வீட்டுலதான் கொடுத்திருக்கேன். யாராவது வீடு பார்க்க வந்தா வசதியா இருக்கும்னு”

“தெரியலங்க சார்.”

அவருடன் பேசிக் கொண்டே காம்பவுண்டின் சந்து வழியாகச் சென்று. முன்பக்க வீட்டு வாசலில் நின்றேன். விசாலமான போர்ட்டிகோ. அதன் சுவர் நீலநிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. போர்ட்டிகோ ஓரத்தில் அலங்கார பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மினுமினுப்போடு பூக்கள். வீடு பூட்டியிருந்தது. சங்கிலிகள் பிணைக்கப்பட்ட கறுப்புநிற நாய் அமைதியாக படுத்திருந்தது. என் காலடிச் சத்தம் வந்த திசையை நோக்கி வீட்டைக் காக்கும் பொறுப்பு தனக்கிருப்பதாக பாவித்துக் கொண்டு ஒரு உறுமலோடு எழுந்து நின்று சிறு அசைவை காட்டியபடி தனது கூறிய பற்களைக் காட்டி நாக்கிலிருந்து நீர் வடிய வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. உன்னை தொந்தரவு செய்யமாட்டேன் என்ற உடல்மொழியோடு வாசல்படியிலிருந்து விலகி டூலெட் போர்டு மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு வந்து நின்றேன்.

“யாரும் இல்லீங்களே சார். வீடு பூட்டியிருக்கு. ஒரு கறுப்பு நாய் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கு” என்பதை அவரிடம் தெரிவித்தேன்.

“அவரு ஆபீஸ் இல்லேன்னா வெளிய எங்கியாவது போயிருப்பாரு. வீட்டுல வேற யாரும் இல்லீங்களா நல்லா பாத்தீங்களா?” என்றார்.

“நல்லா முன்னாடி நின்னு பாத்தீங்களா?”

“நல்லா முன்னாடி நின்னு பாத்தேன் சார். யாரும் உள்ள இல்ல. வீடு பூட்டியிருந்தது” என்றேன்.

“சரிங்க சார்”.

பிறகு தன்னுடைய உறவினர் ஒருவர் புவனகிரியில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிவதாகவும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி உங்களுக்குத் தெரியுமா என்பது போல் இரண்டொரு வார்த்தைகள் கேட்டார். நடுநிலைப் பள்ளியா? அல்லது மேல்நிலைப் பள்ளியா? என கேட்கத் தோன்றியது. மொட்டை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. எதிரில் இருந்து மரத்தின் நிழலில் நின்று கொண்டே அவரோடு உரையாடல் தொடர்ந்தது. பின்னர் வாடைகைக்கு வீடு பற்றி கேட்ட போது, தான் சென்னையில் மகன் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் ஞாயிறு இரவுதான் திரும்புவதாகவும் தெரிவித்தார்.

செல்போன் உரையாடலில் “நான் திங்க கெழமை சாயந்திரம் வரட்டுங்களா?”. “ஓகே சார் வாங்க. நேரில் சந்திப்போம்” என்று அந்த உரையாடலின் இறுதியில், “ஓகே சார்.” என இருவரும் சொல்லிக் கொண்டு நான் அழைப்பை துண்டிக்கும் முன்பு அவர் அழைப்பைத் துண்டித்திருந்தார்.

வீட்டு உரிமையாளர் எண்ணைத் தொடர்பு கொண்ட போது அவரது பேச்சில் குரலில் அத்தனை கனிவு இருந்தது. அரவணைத்துக் கொண்டு முன்பின் தெரியாத நபர்களையும் தங்கள் வீட்டின் ஒருவராய் பாவிப்பதான தொனி.

திங்கள் கிழமை மாலை பள்ளிவேளை முடிந்த பின் அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டேன்.

“ஹலோ”

இம்முறை முதல் அழைப்பிலேயே எடுத்தார். “ஹலோ சார். வணக்கம்.” என்றார்.

“சார்.  வீடு வாடகைக்கு கேட்டு உங்களுக்கு கால் பண்ணிருந்தேனே.” சற்று யோசிப்பது போலிருந்தது “மருதூர் மிடில் ஸ்கூல்ல டீச்சர்”

சற்று நினைவுக்கு வந்தவராய், “ஆமாம். சார். வாங்க நான் ஊருக்கு வந்துட்டேன். நீங்க எப்ப வந்து பாக்குறீங்க.?”

“ஸ்கூல் இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சுடும். உடனே கிளம்பி அங்க வந்துருவேன். வந்து சேர அரைமணி நேரமாகும்” என்றேன்.

எதிர் முனையில் சில நொடிகளுக்கு அமைதி நிலவுவது போல இருந்தது. “சரிங்க சார் நீங்க வாங்க. நானும் அந்த வீட்டுக்கு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

சரியாக நாலு பத்துக்கெல்லாம் பள்ளியில் கடைசி மணி அடிக்கும். மாணவர்கள் சுதந்திரப் பறவைகளாக துள்ளித் திரிந்து “ஹோ” வென சத்தமெழுப்பியபடி வகுப்பறையிலிருந்து வெளியேறுவார்கள். கையில் கட்டியிருந்த மணியைப் பார்த்தேன். மாணவர்கள் கூட்டத்தை விலக்கி ஹாரன் சத்தமெழுப்பியபடி பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறி பைக்கில் எம்.ஆர்.வீ நகருக்குச் செல்ல இருபத்தைந்து நிமிடங்கள் பிடித்தது.

“டூலெட் போர்டு” நேற்று பார்த்தபடி கேட்டில் அமைதியாகவே தொங்கிக் கொண்டிருந்தது. அதே மங்கிப் போன நிறத்துடன். உள்ளுக்குள் ஒரு ஆசுவாசம். நிம்மதி. வேறு யாரும் வீட்டுக்கு அட்வான்ஸ் தொகையைத் தந்துவிடவில்லை என்பதை தொங்கிக் கொண்டிருந்த டூலெட் போர்டு உறுதிப்படுத்தியது.

இரண்டு, மூன்று, ஐந்து என்று கைக்கடிகாரத்தையும், பாக்கெட்டிலிருந்து செல்போனையும் எடுத்துப் பார்த்தபடி வீட்டு உரிமையாளர் எந்த வாகனத்தில் வருவாரென போர்டு மாட்டியிருந்த கேட்டின் படியருகே நின்றுகொண்டு மாலைநேரத்தில் பள்ளி வேன்களும், சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மாணவர்களையும், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருப்பவர்களின் முகத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

யாரோ ஒரு பெண். தெரிந்த முகம் போல இருந்தது. நடுத்தர வயது. ஆசிரியைகளுக்கே உண்டான உடல்மொழியோடு தோளில் நவநாகரிக பையையும், காதில் செல்போனில் பேசிக்கொண்டும் சென்றார். என்னை கவனித்திருப்பார்களா? கவனித்திருந்தால் அருகில் வந்து “ஜோதி சார். என்ன இந்த பக்கம்? வாங்களேன் எங்க வீடு இந்த பக்கம் தான். நீங்க அவசியம் ஒரு முறை எங்க வீட்டுக்கு வந்து ஒரு கப் டீ குடிச்சிட்டுத்தான் போகனும்” என கேட்பார் என மனதில் அப்பெண்மணியின் குரலில் ஒருமுறை மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

அதற்கு ” இருக்கட்டும் மிஸ் கலா. நீங்க இந்த தெரு தானா? இந்த வீடு காலியா இருக்குன்னு சொன்னாங்க. அதான் விசாரிச்சிட்டு போகலாமின்னு…” இப்போது எனது குரலிலேயே சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அது ஒரு நாடகத்தின் துண்டு காட்சி போல தோன்றியது.

ஐந்து நிமிடங்களையும் தாண்டியிருந்தது. அவருக்கு மீண்டும் போன் செய்யலாமா? அவர் இன்று வருவாரா? இல்லை வேறு ஏதாவது வேலை வர கொஞ்சம் தாமதம் ஆகலாம். “நாளைக்கு வாங்களேன் கண்டிப்பா வீட்டை பாத்துரலாம்” என்ற பதில் தான் வருமா என்ற கேள்விகளை மனதில் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தான் நீல வண்ண ஸ்கூட்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்த நபர், நான் நின்று கொண்டிருந்த வீட்டருகே வந்து நிறுத்தினார். அவர் அணிந்திருந்த கண்ணாடியில் இருந்து அவரது பார்வை என் மீது படர்வதை உணர்ந்து கொண்டேன். அவர் தான் அவ்வீட்டின் உரிமையாளர் என்கிற நடையும் பாவனையும் அவரது உடல்மொழி காட்டியது. என் அருகில் வந்தவர் அமைதியான முகபாவத்தோடு தெளிந்த முகரேகையோடு “வணக்கம்” வைத்தார்.

“நீங்கதானே சிவ ஜோதி”?  உதட்டில் புன்னகை தவழ கேள்வி.

“ஆமாம் சார்.” பதில் மரியாதையாக “வணக்கம்” தெரிவித்தேன்.

“நீங்க வந்து ரொம்ப நேரமாயிடுச்சா சார். மன்னிக்கனும் என்னோட பேத்தி எடிசன் ஸ்கூல்ல ஃபோர்த் ஸ்டாண்டர்டு படிக்கிறா. அவள ஸ்கூல்ல இருந்து வீட்டுல விட்டுட்டு வரேன். ரொம்ப அடம்.” மிக நெருங்கிய நபர். பக்கத்து வீட்டில் குடியிருப்பவரைப் போன்று பேச்சை தொடங்கினார்.

“ஓ அப்டிங்களா”

“——–“

“பக்கத்து வீட்டுல தான் சார் எப்பவும் சாவி இருக்கும்.” என்று பேசிக் கொண்டே முன்பக்க பெரிய வீட்டு வாசல் முன்பு நின்றார். “நீங்க எனக்கு போன் பண்ணீங்கள்ல நேத்து. அப்பவே இவருகிட்ட சொன்னேன். வீட்டுல பெரியவங்க இருப்பாங்க சாவிய வாங்கிக்கோங்க சார்… அப்படின்னு சொன்னார்”. சொல்லிக் கொண்டே வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார். அப்போது சங்கிலியால் பிணைக்கப்ட்ட நாய் எழுந்து கொண்டு வாலை ஆட்டி அவர் அருகே வர முயற்சித்தது. “டைகர். டைகர்” என இரண்டு முறை கொஞ்சுவது போல கூப்பிடவும் வீட்டிற்குள்ளிருந்து வயதான பெண் நிலைப்படியை விட்டிறங்கி வெளியே வந்தார்.

“வாங்க. நல்லா இருக்கீங்களா?” வயதான பெண்மணி.

“இருக்கேங்க அம்மா. ஐயா நல்லா இருக்காருங்களா?” –ஹவுஸ் ஓனர்.

“தம்பி இப்பதான் போன் பண்ணுச்சு. ஹவுஸ் ஓனர் வருவாரு. பின்பக்க போர்ஷன் வீட்டு சாவிய கொடு” ன்னு சொன்னாரு. நீளமான சாவியை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்த பின்பு தனது உருவத்தை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

“வீடு கட்டி ஒரு வருஷம் தான் சார் ஆவுது.”

“——-“

 “இதுவரைக்கும் பத்து பேரு பாத்துட்டு போயிட்டாங்க. இங்க இருக்க எடிசன் ஸ்கூல்ல பசங்க படிக்கறதுக்காக வீடு எடுத்து தங்கறதுக்காக ரெண்டு மூணு பேரு வந்து பாத்துட்டு போனாங்க.” என்று பேச்சை தொடர்ந்தபடி வீட்டைத் திறக்கும் முன் வெளியில் உள்ள டியூப்லைட்டின் சுவிட்சையும், வண்ண விளக்குகளின் சுவிட்சுளையும் போட்டுவிட்டார்.

நீளமான சாவியை துவாரத்தினுள் பொருத்தி இரண்டு மூன்று முறை வலதுபக்கமாகச் சுற்றித் திருகினார். வீடு திறந்தது. ஏற்கனவே வீட்டினுள் வெளிச்சம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக விடி பல்பை, ஹாலிலும் பூஜை அறையிலும் ஒளிரும்படியாக செய்யப்பட்டிருந்தது.

ஒரு ஹால், சமையலறை, படுக்கையறை, கழிப்பறை என அமைப்போடு இருந்த அவ்வீடு பெயிண்டின் நெடியோடு வரவேற்றது. புதிய வீடு என்பதால் அதற்கான பொலிவோடு அறைகள் இருந்தன.

“இது ஹால், இது கிச்சன்”. பாத்திரங்கள் கமுத்தி வைப்பதற்கான செல்ஃப்புகளை காட்டினார். கிச்சனில் இருந்த குழாயைத் திறந்துவிட்டபடி “உங்களுக்கு கவலையே வேணாம். தண்ணிக்கு இங்க எப்பவுமே பஞ்சமில்ல சார்” என்றார்.

“…………….”

என் கைகளால் குழாயைத் திறந்து தண்ணீரை கையில் அள்ளி வாயை கொப்புளித்தேன். தண்ணீர் சற்று துவர்த்து வருவது போல இருந்தது. சில வீடுகளில் அதிக நாட்கள் புழங்காமலிருந்தால் இப்படியான துவர்ப்பு வருமென மனதில் நினைத்துக் கொண்டேன்.

பிறகு, “இது பெட்ரூம், ஏ.சி கூட நீங்க ஃபிட் பண்ணிக்கலாம். பக்கத்துல காலி மனை. ஜன்னல திறந்து விட்டுக் கூட நல்லா தூங்கலாம். ஏ.சி போட்டது மாதிரி ஜில்லுன்னு இருக்கும்” என்றார்.

“———-“

“இது டாய்லெட்” கதவை திறந்து கழிவறையின் அமைப்பை சுற்றிக் காட்டினார். “இண்டியன் டாய்லெட்.”, வெள்ளை பேசின் அமைத்தபோது இருந்த சுண்ணாம்பு கறைகள் தூசுகள் படிந்திருந்தன. “டாய்லெட் க்ளீனர்” ஊற்றிவிட்டால் சரியாகிவிடும் என நினைத்துக் கொண்டே அருகில் இருந்த சாதாரண பல் துலக்க, முகம் கழுவ என சுவரில் மாட்டப்பட்டிருந்த வாஷ் பேசினை திறந்து தண்ணீரை சோதித்தேன். தண்ணீர் நல்ல வேகமாக பேசின் குழியில் விழுந்து தெறித்தது. அருகில் வாஷிங்மெஷினுக்கான அமைப்பும் இருப்பதை சுட்டிக் காட்டினார்.

இறுதியாக “மேலே மாடியில நீங்க துணியை காயப் போட்டுக்கலாம். உங்களுக்கு நல்லா கம்ஃபர்ட்டபுலா இருக்கும்.” என்று தனது நெற்றியில் சிறு நெளிவைக் கூட காட்டாது முகத்தில் அதே மாறாத புன்னகையோடு “வீடு கட்டி முடிக்க நாப்பது லட்சம் ஆச்சு சார்”. என்றார்.

வீட்டை நன்றாக சுற்றிக் காட்டியவர் வாடகைக்குத் தான் விடப் போவதென முடிவான பின் ஏன் “நாப்பது லட்சமென” அழுத்தி சொன்னார் எனத் தெரியாமல் விழித்தேன். தான் பி.எஸ்.என்.எல் –இல் பணியாற்றி ஓய்வுபெற்ற பணத்தில் இவ்வீட்டை கட்டியதாக பின்னர் தெரிவித்தார்.

வீட்டின் உள்ளே எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பின்னர் வாசல் நிலைப்படியருகே நின்று “இரண்டு போர்ஷனுக்கும் மீட்டர் பாக்ஸ்” இருப்பதை சுட்டிக் காட்டிய பிறகு இரண்டு வீடுகளுக்கும் பொதுவான நீரேற்றும் மோட்டாருக்கான சுவிட்சை காட்டினார்.

“இரண்டு வீடும் மாசம் ஒரு முறை உங்களுக்குள் ‘டர்ன்’ படி ஓட்டிக்கலாம். கரண்ட் பில் அவ்வளவா வராது” என்றார்.

இப்போதிருக்கும் ஒற்றையறை மேன்ஷனுக்கு இது பரவாயில்லை என தோன்றியது.

வாடகை, அட்வான்ஸ் தொகையைப் பற்றி அவரே ஏதாவது சொல்வாரென எதிர் பார்த்தேன். வீடு எனக்குப் பிடித்துப் போனதை என் முக பாவனையிலிருந்தே அவர் தெரிந்து கொண்டிருப்பார்.

“வாடகை, அட்வான்ஸ்…. எவ்வளவுன்னு சொல்லவே இல்லீங்களே.!”

“புது வீடு. வாடகை நாலாயிரத் தைந்நூறு, அட்வான்ஸ் நாப்பதாயிரம்” என்றார்.

வாடகையும் அட்வான்சும் இச்சிறு வீட்டிற்கு அதிகமெனப்பட்டது. ஆனாலும் ஒன்றையறை மேன்ஷனை விட இது பரவாயில்லை எனத் தோன்றியதால் வாடகை குறைக்க முடியுமாவென கேட்டுப் பார்க்கலாமென தோன்றியது. ஆனால் அவர் பணி ஓய்வுக்குப் பின் வந்த பணத்தில் வீடு கட்டியிருப்பதால் வாடகையை குறைக்க வாய்ப்பில்லை என தெரிந்தது. சரியென அவரிடம் “வீடு பிடித்திருக்கிறது. ஒரு நல்ல நாள் பார்த்து குடிவருகிறேன்” என சொல்லிவிட்டு டோக்கன் அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்துவிட்டு உறுதிசெய்து கொண்டு அவருக்கு நன்றி தெவித்துவிட்டு மேன்ஷன் திரும்பினேன்.

ஆடி மாதம் முடிந்து வந்த முதல் முகூர்த்தத்திலேயே குடியேறினேன். முதல் மாதம் முழுவதும் வீடு புழக்கத்திற்கு பிடிபடவில்லை. முதல் நாளில் கூட தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் பள்ளிக்கு செல்வதற்கு தூரம் எவ்வளவென கூகிள் மேப்பில் இடதூரத்தை பார்த்த போது மேன்ஷனில் இருந்து ஆறு கிலோ மீட்டர் அதிகம் காட்டியது. மேன்ஷனைக் காட்டிலும் இது அமைதியான இடம் போக்குவரத்துக்கு வசதிகள் இருக்குமிடம் என்பதால் இது பரவாயில்லை என மனம் சமாதானம் அடைந்தது.

முதல் இரண்டு மாதத்திற்கு நீரேற்றும் மோட்டார் இயந்திரத்துக்கான மின் கட்டணம் இரண்டு போர்ஷனும் சரிபாதியாக பங்கீடு செய்து கொண்டோம். முதலில் இது சரியென தோன்றினாலும் சிறிய வீட்டில் வாழும் எனக்கும், ஆறு பேர் வசிக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் சமமான மின் கட்டண பங்கீடு என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. நீர் பயன்பாடு கூட பக்கத்து வீட்டினர் பயன்படுத்தும் அளவுக்கு இல்லை என்பதையும் இது சரிசெய்யப்பட வேண்டுமெனவும் வீட்டு உரிமையாளரிடம் போனில் தெரிவித்தேன்.

அப்போது “அதெல்லாம் ஒன்னுமில்லே சார். எல்லாம் சரியாயிடும். அடுத்த முறையும் அப்படி வந்தா ஏதாவது கொறையிருந்தா சரி செஞ்சிரலாம்” என அமைதியான குரலில் சலனமில்லாமல் பதில் அளித்தார்.

அடுத்த மாதம் “டர்ன்” என்னுடையது. இம்முறை முன்பக்க வீட்டில் உறவினர்கள் வரவும் போக்கும் அதிகமென்பதால் அடிக்கடி மோட்டார் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. “வாங்குற சம்பாத்தியத்துல ரெண்டாயிரம் மூவாயிரம் செலவு செஞ்சா எப்படி பொழப்பை ஓட்டுவது” என கேள்வி எழுந்தது.

மின் கட்டண கணக்கீட்டாளர் மின் பயன்பாட்டை குறித்து விட்டு ரெண்டாயிரம் என்றார். ஆனால் நான் குடியிருக்கும் வீட்டின் பயன்பாட்டு மின் கட்டணம் நூற்றைம்பது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொது பயன்பாட்டு மீட்டரின் கட்டணம் என் நிம்மதியை குலைப்பது போலிருந்தது.

இரண்டு நாள் கழித்து வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டேன். மின் கட்டணம் அதிகரித்து வந்திருப்பதாகவும் கூறினேன். வீட்டைப் பற்றி குறை கூறுவது போல் தோன்றியிருக்க வேண்டும்.

“சார் நான் தான் உங்ககிட்ட சொன்னேனே. இரண்டு போர்ஷனும் தண்ணீ பில்லை ஷேர் பண்ணிக்குங்கன்னு சொன்னேனே.”

“சார் உண்மை தான். ஆனா பக்கத்து வீட்டுல அதிகம் பேரு இருக்காங்க. எங்க வீட்டுல நா ஒரே ஆளுதான். எப்பவாவது தான் அப்பா அம்மா யாராவது வருவாங்க.” என்றேன்.

“ஏற்கனவே பேசினது தானே சார். நீங்க தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்” என்றார். எனக்கு கோபமும் ஆத்திரமும் வெடித்துக் கொண்டு வந்தது. “அக்ரிமெண்ட்ல கூட இத பத்தி ஒன்னும் சொல்லலே.” என்றேன்.

“இப்ப என்ன சார்?. உங்களுக்கு மூணுமாசம் வாடகைக்கு விட்டுருக்கேன். வீடு புடிச்சா இருங்க இல்லாட்டி காலி பண்ணுங்க” என கரகரத்த குரலில் கடுமை தொனிக்க பேசினார்.

“இந்த சின்ன வீட்டுக்கு இவ்ளோ வாடகை வாங்குறீங்க. மூணுமாசம் வாடகை குடுத்துருக்கேன். நாப்பதாயிரம் அட்வான்ஸ் குடுத்துருக்கேன்.” என ஆவசேமாய் பேசினேன். இவ்வளவும் போனில் தான் நடைபெற்றது. இரண்டொரு வார்த்தைகள் என் வாயிலிருந்து கடுமையாக வெடித்தது.

“தாராளமா சார். நாளைக்கே கூட நீங்க வீட்டை காலி பண்ணிக்குங்க. எனக்கு ஒன்னுமில்ல” என்றார்.

எனது ஈகோவை தொட்டுப் பார்ப்பதாகப்பட்டது.

“நா காலி பண்ணிக்குறேன். நீங்க அட்வான்ஸ் நாப்பதாயிரம் எடுத்து வைய்யிங்க” என்றேன்.

“நாளைக்கே வாங்கிட்டு போங்க” என்றார்.

உண்மையில் அவருக்கு முன்பக்க போர்ஷன் வீட்டாரிடம் பேசிப்பார்க்க வேண்டுமென்று கூட தோணவில்லை. அதன் வாடகை ஆறாயிரத்தைந் நூறு. அவருடைய மாத வங்கிக் கடனை அடைக்க தேவைபட்டிருக்கலாம். குடியிருந்த மூன்று மாதம் கூட ஐந்தாந் தேதிக்குள்ளாக சரியாக வாடகையை கொடுத்து வந்தேன். ஏற்கனவே அவ்வீட்டிற்கு வாடகைக்கு குடி வருவதற்கு ஒரு சிறிய குடும்பம் தயாராக இருப்பதும் அவருக்கு தெம்பை கொடுத்திருக்கும்.

வாய் வார்த்தை மனஸ்தாபத்திற்கு பின் ஒரு வாரத்திற்குள்ளாக இப்போதிருக்கும் வீட்டிற்கு குடியேறினேன். வாடகை ஐயாயாயிரத்து ஐந்நூறு. இரண்டு பெட்ரூம் இரண்டு கழிவறைகள் கொண்ட வீடு. முருகப் பிரியா நகரில்.

எம்.ஆர்.வீ நகர் சிறிய வீட்டை காலி செய்த பின் அட்வான்ஸ் பணத்தை பெறுவதற்காக சென்றிருந்தேன். அவ்வீட்டின் கேட்டின் முன்பு பழையபடி மங்கிப் போன டூலெட் போர்டு காற்றில் அசைந்து கொண்டிருந்தது.

முதல் முறை என்னை பார்த்த அந்த அமைதியான வீட்டின் உரிமையாளரின் சாந்தமான முகம் அன்று காணாமல் மறைந்து போயிருந்தது. முற்றிலும் அவர் வேறொரு நபராக காட்சியளித்தார். இறுதியாகக் கூட அவர் முகத்தில் புன்னகை தோன்றவில்லை.

அந்நகரில் “ப” வடிவில் நடந்து பார்க்க வேண்டுமென்ற என்னுடைய ஆவல் அப்படியே தான் இருக்கிறது. அந்கரில் வேறு சில வீடுகளும் காலி மனைகளும் இருப்பதாக டூலெட் போர்டுகளும், அட்டைகளும் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. சற்றே மங்கிப் போன நிறத்துடன்.

000

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *