மா.அன்பரசு

சின்னக்கண்ணு வீடே விழாக்கோலமாக இருந்தது. அவனது மகளின் முதல் பிறந்தநாள் விழா. கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப்பில் அழைப்பிதழ் அனுப்பியிருந்தான். அதோடு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைத்தும், “நீ கண்டிப்பாக வர வேண்டும் நண்பா!” என்று சொல்லியிருந்தான். என்னையும் அழைத்திருந்தான். தவிர்க்க முடியாமல் நானும் சென்றேன்.

வீடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகளின் சிரிப்புகள், புகைப்படங்கள், வாழ்த்துகள் என மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அந்த மகிழ்ச்சியின் நடுவில் நான் மட்டும் அந்நியனாக நின்றேன். நண்பர்களுடன் பேசினாலும், மனம் எங்கோ வேறு இடத்தில் இருந்தது.

சிறிது நேரத்தில் குழந்தையை அழகாக அலங்கரித்து, சின்னக்கண்ணும் அவனது மனைவியும் குழந்தையை நடுவில் நிறுத்தி கேக் வெட்டினர். அனைவரும் ஒன்றாக “ஹேப்பி பர்த்டே” பாடினோம். கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பலர் குழந்தைக்குப் பொம்மைகள், ஆடைகள், பரிசுப்பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். சிலர் என்னைப் போல கவர் கொடுத்தனர். ஆனால் அந்தக் கவர்களில் பணம் இருந்தது.

என் கவரில் மட்டும் பணம் இல்லை.

ஒரு சிறிய சீட்டில்,

“நண்பா… நீ எனக்குத் தர வேண்டிய ஆயிரத்து ஐநூறு ரூபாயை உன் குழந்தைக்கான என் பிறந்தநாள் பரிசாகக் கணக்கில் வைத்துக்கொள்.” என்று எழுதி வைத்திருந்தேன்.

அந்தக் கவரைக் கொடுத்துவிட்டு, புகைப்படமும் எடுத்துக்கொண்டு, சாப்பிடாமல் அமைதியாக வெளியேறிவிட்டேன்.

பேருந்து நிலையம் நோக்கி நடந்தபோது மனம் அமைதியாக இல்லை.

“கவரைப் பிரித்துப் பார்த்திருப்பானா? சின்னக்கண்ணு பார்த்திருப்பானா? அவன் மனைவி பார்த்திருப்பாளா? என்ன நினைப்பார்கள்?”

அடுத்த நொடியே இன்னொரு குரல்.

“அவன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் இருந்தது சரியா? நான் செய்தது மட்டும் தவறா?”

கேள்வியும் பதிலும் என்னுள் மாறிமாறி ஒலித்துக் கொண்டே இருந்தன.

சின்னக்கண்ணு மட்டுமல்ல. பெரியசாமி, ராஜ்குமார், ராஜா, முருகேசன்… இப்படிப் பல நண்பர்கள். அனைவரும் என்னுடன் கல்லூரியில் படித்தவர்கள். இன்று ஒவ்வொருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

நானும் நன்றாகத்தான் இருந்தேன்.

ஆனால் வேலை பார்த்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தபோது, என்னையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

அதுவரை வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை நண்பர்களிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும்.

“மச்சி… ஒரு ஐநூறு ரூபாய் போடுடா.”

“நண்பா… மெடிக்கல் ஷாப்புல இருக்கேன். ஆயிரம் ரூபாய் குறையுது.”

“மாப்பிள… ரெண்டாயிரம் மட்டும் அனுப்பு.”

“சம்பளம் வந்ததும் தர்றேன்.”

“நாளைக்கே அனுப்பிடுறேன்.”

“அடுத்த வாரம் கண்டிப்பா.”

இப்படி எத்தனை வாக்குறுதிகள்!

ஐநூறு ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை எத்தனையோ முறை அனுப்பியிருக்கிறேன்.

ஒருமுறை கேட்டேன்.

இரண்டுமுறை கேட்டேன்.

அதற்குப் பிறகு, “பணத்துக்காகத் தொந்தரவு செய்கிறான்னு நினைப்பானோ?” என்று நினைத்து கேட்பதையே விட்டுவிட்டேன்.

ஒருநாள் தருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தேன்.

அப்போது சம்பளம் இருந்ததால் எனக்குப் பணத் தட்டுப்பாடு தெரியவில்லை.

இப்போது நிலைமை வேறு.

அப்பாவின் மருத்துவச் செலவு, மாத்திரைகள், வேலை தேடும் செலவு…

கடன் வாங்கியே வாழ்க்கை ஓடுகிறது.

அதனால் நண்பர்களிடம் நேராகக் கேட்டேன்.

என் நிலைமையையும் சொல்லினேன்.

ஆயிரம் வாங்கியவன் ஐநூறு அனுப்பினான்.

இரண்டாயிரம் வாங்கியவன் ஆயிரம் அனுப்பினான்.

அதற்கும் நன்றி சொன்னேன்.

பலர் என் அழைப்பையே எடுக்கவில்லை.

எடுத்தால், “கொடுத்த காசை கேட்பானோ?”, “கடன் கேட்பானோ?” என்ற பயம்தான்.

பேருந்து என் ஊரை அடைந்தது.

வீட்டிற்கு நடந்து வரும்போதும் நினைவுகள் தொடர்ந்தன.

மாதக் கடைசியில் என்னிடம் ஆயிரம் வாங்கி, அடுத்த மாத முதல் வாரமே ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கிச் சென்றவர்கள்கூட இன்று உதவவில்லை.

“ஏன் அவர்கள் உதவ வேண்டும்? வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலே போதுமே…”

என்று நினைத்தபடியே வீட்டை அடைந்தேன்.

அம்மா காலையில் மீதமிருந்த பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். அதனுடன் வெங்காயத்தைச் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டேன்.

அந்த இரவு முழுவதும் அப்பா வலியால் தூங்கவே இல்லை.

காலையில் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

மருத்துவர் பரிசோதித்துவிட்டு,

“குறைந்தது இரண்டு நாட்கள் அனுமதிக்க வேண்டும்.”

என்றார்.

ஊசி, குளுக்கோஸ், மாத்திரை, மருத்துவர் கட்டணம் என முதல்கட்டச் செலவே மூவாயிரம் ரூபாய்.

இன்னும் இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்தால் எப்படி சமாளிப்பது?

மருத்துவமனை முன் இருந்த புளியமரத்தின் அடியில் விடியற்காலையிலிருந்து காலை எட்டு மணி வரை அமைதியாக அமர்ந்திருந்தேன்.

அப்போது ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது.

பெரியசாமியும், ராஜாவும் இறங்கினர்.

“வீட்டுக்குப் போயிருந்தோம். பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக்காரங்க ஹாஸ்பிட்டல்னு சொன்னாங்க.”

என்று சொல்லிவிட்டு, ஒரு கவரை என் கையில் தந்தனர்.

“இதுல இருபதாயிரம் ரூபாய் இருக்கு.”

நான் அதிர்ச்சியடைந்தேன்.

பெரியசாமி தொடர்ந்தான்.

“சின்னக்கண்ணு நேத்து இரவு உன் கவரைப் பார்த்திருக்கான். அதுல இருந்த சீட்டைப் படிச்சதும் எங்களுக்கெல்லாம் போன் பண்ணினான்.”

“அவன் இப்ப வேலை இல்லாம இருக்கான். அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை. வாங்குன காசை ஒழுங்கா கொடுங்கன்னு எல்லாரையும் திட்டினேன்.”

மன்னிப்பும் கேட்டான்.

” அவனையும் சேர்த்து எட்டு பேரு உடனே பணம் அனுப்பிட்டாங்க. இதுதான் முதல் தொகை.”

“வாட்ஸ்அப் குழுவில் யாரெல்லாம் எவ்வளவு வாங்கினீங்கன்னு கேட்டோம். கணக்கு பார்த்தோம். மொத்தமாக ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய் நீ கொடுத்திருக்க.”

“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எல்லாரிடமிருந்தும் வசூல் பண்ணி முழுப் பணத்தையும் உன்கிட்ட கொடுக்கிறோம்.”

“இப்போ அப்பாவைப் பார்த்துக்க.”

அவர்கள் உள்ளே சென்று அப்பாவை பார்த்து, பழங்களைக் கொடுத்து நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்தனர்.

என்னால் பேச முடியவில்லை.

கைகளை இணைத்து,

“ரொம்ப நன்றி டா…”

என்றேன்.

“லூசு மாதிரி கையெடுக்காதடா…”

என்று சிரித்தான் பெரியசாமி.

“நண்பனுக்குள்ள நன்றி எதுக்குடா?” பாத்துக்கலாம்… விடு நண்பா.”

என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்.

அவர்கள் சென்ற வழியையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“பணம் இருக்கும்போது சேமித்து வைத்திருக்க வேண்டும்…” என்று ஒரு மனம் சொன்னது.

“யார் கேட்டாலும் யோசிக்காமல் கொடுக்கக் கூடாது…” என்று இன்னொரு எண்ணம் எழுந்தது.

அதே நேரத்தில்,

“நீ கொடுத்ததால்தானே இன்று அது திரும்பி வந்தது?”

என்று மனசாட்சி அமைதியாகக் கேட்டது.

பதில் சொல்ல முடியவில்லை.

மெதுவாக மருத்துவமனைக்குள் நடந்தேன்.

நேற்று என் கவருக்குள் இருந்தது ஒரு துண்டுச் சீட்டு.

இன்று அவர்கள் கொடுத்த கவருக்குள் இருந்தது இருபதாயிரம் ரூபாய்.

கவர்கள் மாறியிருந்தன. ஆனால் நட்பு… இன்னும் காலியாகவில்லை.

அந்த நிம்மதியோடு அப்பாவின் கையை இறுகப் பிடித்தேன்.

000

மா. அன்பரசு

வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (PDF) பட்டம் பெற்றவர். உழவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *