– ச.முகிலன்

எந்திரிடா!

“டேய்… எந்திரி! கழுத வயசாகுது. காலாகாலத்துல எந்திச்சு பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பணும்னு புத்தி வருதா? டெய்லி இவனுக்காக நாமதான் பாடுபட வேண்டியிருக்கு!”

அம்மாவின் பொலம்பலோடுதான் அந்த நாள் எனக்கு விடிந்தது.

அம்மா எப்போதும் இப்படித்தான். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் புலம்புவாள். ஆனால் வாழ்க்கையின் பெரிய புயல்களை ஒரு பெருமூச்சோடு கடந்து விடுவாள்.

எங்கள் கிராமத்திலிருந்து தினமும் வெளியூருக்குப் போய் வேலை பார்த்துவிட்டு வருபவர்களில் அப்பாவும் ஒருவர். காலையில் முதல் பஸ்சில் போனால், இரவில் கடைசி பஸ்சில்தான் வீடு திரும்புவார்.

வீட்டில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. அவர் பகல் முழுக்க எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்பது வீட்டில் யாருக்கும் தெரியாது. எங்கள் வாழ்க்கை அப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று காலையில் கண் விழித்தபோது, கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இடுப்புப் பகுதி ஈரமாக இருந்தது. தூக்கத்திலேயே படுக்கையை நனைத்துவிட்டேன் என்று புரிந்ததும் இதயம் படபடத்தது.

‘அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்…’

எப்படியாவது அவள் கண்ணில் படாமல் குளித்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.

அம்மா சமையலில் மும்முரமாக இருந்தாள். நான் படுத்தபடியே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அப்பாவுக்கு அருகில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது என் கண்ணில் பட்டது.

அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

நான் உற்றுப் பார்த்தேன்.

எங்கள் சொந்தங்களிலோ, உறவினர்களிலோ இதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை.

“யாரு இவங்க?”

அந்த ஒரு கேள்வி என் மனசுக்குள் முள்ளாக உறுத்தியது.

உண்மையில் அவர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை. ஆனால் அப்பாவைப் பற்றிய பயம் இருந்தது.

பெண்களோடு பழகுவது அப்பாவுக்குப் புதிதல்ல. அதனால் வீட்டில் சண்டை வருவதும் புதிதல்ல. சில நேரங்களில் அம்மா கேட்டால், பதில் சொல்லாமல் சண்டை போடுவார். சில நேரங்களில் அடிப்பார்.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து அப்பா மீது இருந்த பாசம் மெதுவாகக் கரைந்து போயிருந்தது. பயம் மட்டும் மிச்சமிருந்தது.

அம்மாவை நினைத்து அவளுக்குத் தெரியாமல் நான் எத்தனையோ முறை அழுதிருக்கிறேன்.

இப்படிப்பட்ட அப்பாதான் இன்று யாரோ ஒரு பெண்ணை வீட்டுக்கே கூட்டி வந்திருக்கிறார்.

“இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ?”

அந்த எண்ணமே என்னை நடுங்க வைத்தது.

ஆனால் அம்மாவோ…

எதுவுமே நடக்காதது போல, அந்தப் பெண்ணுக்கே சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தாள்.

அம்மாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

“இன்னும் எந்திக்கலையா?”

அம்மாவின் குரல் கேட்டதும் அவசரமாக எழுந்து குளிக்க ஓடினேன்.

திரும்பி வந்தபோது அப்பாவும் இல்லை. அந்தப் பெண்ணும் இல்லை.

காலையில் அம்மாவிடம் கேட்க நினைத்தேன்.

“பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. சீக்கிரம் கிளம்பு. லேட்டா போயி வாத்தியார்கிட்ட அடி வாங்காத!”

என்று என்னை விரட்டிவிட்டாள்.

அந்தப் பெண் யார் என்ற கேள்வி மட்டும் என்னை விட்டுப் போகவில்லை.

பள்ளியில் வாத்தியார் என்ன பாடம் எடுத்தார் என்பது கூட நினைவில் இல்லை.

எப்படா மாலை ஆகும்…

எப்படா வீட்டுக்குப் போவேன்…

அந்த எண்ணம்தான் நாள் முழுக்க என்னோடு இருந்தது.

மாலை மணி அடித்ததும் பையைத் தூக்கிக்கொண்டு நேராக வீட்டுக்கு ஓடினேன்.

அம்மா எப்போதும்போலவே இருந்தாள்.

அதுதான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

விளையாடப் போகாமல் வீட்டைச் சுற்றியே திரிந்தேன்.

இறுதியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தாழ்வாரத்தில் அரிசி புடைத்துக்கொண்டிருந்த அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்தேன்.

என் முகத்தைப் பார்த்தவுடனே அவள் புரிந்துகொண்டாள்.

“என்ன வேணும் சாமி?”

என்று கேட்டபடியே என் தலையை வருடினாள்.

வார்த்தைகள் வருவதற்கு முன்பே கண்ணீர் வந்துவிட்டது.

அம்மா பதறிப்போனாள்.

“என்ன சாமி? ஏன் அழுற? வாத்தியார் அடிச்சாரா? பசங்க ஏதாவது சொன்னாங்களா? உடம்பு சரியில்லையா?”

என்று கேட்டுக்கொண்டே என் கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள்.

“இல்லம்மா… அப்பா…”

என்றதும் அவள் முகம் மாறியது.

“அப்பாவுக்கு என்ன?”

என்று அவசரமாகக் கேட்டாள்.

“அப்பா… காலைல ஒரு பொண்ணு…”

என்று நான் சொல்லத் தொடங்கியதும், அம்மா என் வாயைப் பொத்திவிட்டு சிரித்தாள்.

“அடக் கிறுக்குக் கழுத! இதுக்கா இப்படி அழுதுட்டு இருக்க?”

பிறகு மெதுவாகச் சொன்னாள்.

“நீ பொறக்குறதுக்கு முன்னாடி நாம வேற ஊர்ல வாடகை வீட்டுல இருந்தோம். அந்த வீட்டோட ஓனர் மகதான் இந்த அக்கா. கல்யாணம் ஆகி, புருஷன்கூட சண்டை போட்டுட்டு அம்மா வீட்டுக்குப் போக சாத்தூருக்கு வந்திருக்கா. அவ வர்றதுக்குள்ள கடைசி பஸ் போயிருச்சாம். என்ன பண்ணறதுன்னு தெரியாம நின்னப்போ அப்பாவைப் பாத்து சொல்லியிருக்கா. அதனாலதான் அப்பா நம்ம ஊருக்குக் கூட்டிக்கிட்டு வந்தாரு. காலையிலேயே அவங்க ஊருக்குப் போயிட்டாங்க.”

இப்போது என் மனசு கொஞ்சம் லேசானது.

இருந்தாலும் தயக்கத்தோடு கேட்டேன்.

“ஆனா… அப்பா அப்படியெல்லாம் இல்லையேம்மா…”

அம்மா சிரித்தாள்.

என் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்.

பிறகு மெதுவாகச் சொன்னாள்.

“தம்பி… உங்க அப்பா கெட்டவர்தான். அதை நான் மறுக்கல. ஆனா, அதுக்காக ஊர்ல இருக்குற எல்லா பெண்களையும், நாம சந்தேகப்படக் கூடாது” என்றாள்.

00

ச.முகிலன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டு பல்வேறு இதழ்களில் கவிதைகளையும், நூல் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.”கரையேறும் கவிதைகள்” மற்றும் “நீயே ஒளி” ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்களின் நிலை, இயற்கை, பகுத்தறிவு, மனிதம், சாதியம் மற்றும் சமூக அவலங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படைப்புகளை எழுதி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *