-டீன் கபூர்

அலுவலகத்தின் கடைசி வரிசையில் ஒரு காலி நாற்காலி இருந்தது. அதை யாரும் பயன்படுத்தவில்லை. பயன்படுத்த முடியாததாலா, அல்லது பயன்படுத்த விரும்பாததாலா? யாருக்கும் தெரியாது.

அன்று ரஹீம் அதில் உட்கார்ந்தான்.

அவன் மேசையில் இருந்த கோப்புகள் அவனைப் பார்த்து “நாங்கள் உன்னைவிட வயதில் பெரியவர்கள்” என்று சிரித்தது போல தோன்றின.

கணினித் திரையில் மின்னிய மின்னஞ்சல்: “இன்று அவசியம் பதில் தரவும்.” அவசியம் என்ற சொல் அவனுடைய காலைத் தேநீரைக் கசப்பாக்கியது.

அவனுக்குத் தெரியும். பதில் தரவில்லை என்றால் அடுத்த வாரம் வேறு நாற்காலி கிடைக்கும். அது இந்த அலுவலகத்தில் இருக்காது.

அவன் பதில் எழுத ஆரம்பித்தான். முதல் வரி: “சரி.”

அதை அழித்தான்.

இரண்டாம் வரி: “பரிசீலிக்கப்படுகிறது.”

அதையும் அழித்தான்.

மூன்றாம் வரி: “மனிதன் சில நேரம் தாமதமாகிறான்.”

திரையை மூடிவிட்டான்.

அவனுக்குப் பின்னால் சுவர்க் கடிகாரம் இருந்தது. அது ஓடிக்கொண்டே இருந்தது.

ஆனால் யாருக்காக?

இடைவேளையில் அவன் அந்த காலி நாற்காலியைப் பார்த்தான். அதில் முன்பு யார் உட்கார்ந்திருப்பார்? ஓய்வு பெற்றவரா? வேலை விட்டுச் சென்றவரா?

அல்லது இன்னும் பதில் எழுதிக் கொண்டிருப்பவரா?

மாலை நேரம். அலுவலகம் காலியாகத் தொடங்கியது. ரஹீம் எழுந்தான். நாற்காலி அப்படியே இருந்தது. அவன் மட்டும் இல்லாமல்.

அவன் வெளியேறும்போது அந்த நாற்காலி மெதுவாக சத்தமிட்டது. இரும்பின் சத்தமல்ல. நினைவின் சத்தம்.

அடுத்த நாள் அந்த நாற்காலி இல்லை. அதன் இடத்தில் ஒரு செடி வைத்திருந்தார்கள்.

யாரும் கேட்கவில்லை: “நாற்காலி எங்கே?”

செடி மட்டும் ஒவ்வொரு நாளும் நீருக்காகக் காத்திருந்தது. செடிக்கு முதல் நாள் யாரும் நீர் ஊற்றவில்லை. இரண்டாம் நாள் கூட.

மூன்றாம் நாள் ரஹீம் தான் கவனித்தான்.

அது அலுவலகத்தின் நடுவில் இருந்ததை

யாரும் கண்டுகொள்ளவில்லை.

அவன் அருகில் நின்றான். செடியின் இலைகள் முந்தைய நாற்காலியின் கைகள்போல் சோர்ந்து தொங்கின.

அவன் மெதுவாகச் சொன்னான்:

“நீ யாருக்காக இருக்கிறாய்?”

செடி பதில் சொல்லவில்லை. ஆனால் காற்று கணினி விசைப்பலகையின்  வழியாக சிறு சத்தம் செய்தது.

அன்று மாலை ரஹீம் ஒரு தண்ணீர்ப் போத்தலை மேசையிலிருந்து எடுத்தான்.

அதை செடிக்கு ஊற்றப் போனான்.

அப்பொழுது உயரதிகாரி வந்தார்.

“இது அலுவலகச் செடி. தனிப்பட்ட கவனம் தேவையில்லை.” என்றார்.

ரஹீம் பாத்திரத்தை மூடிவைத்தான்.

அந்த இரவு அவனுக்கு கனவு வந்தது.

அந்த நாற்காலி செடியாக மாறி

அலுவலகம் முழுக்க வேர்கள் விட்டிருந்தது.

ஒவ்வொரு வேரும் ஒரு மின்னஞ்சலுக்குள் நுழைந்து “அவசியம்” என்ற சொல்லை

மண்ணாக்கிக் கொண்டிருந்தது.

காலை அலுவலகத்திற்கு ரஹீம் தாமதமாக வந்தான். அவன் மேசையில் ஒரு கடிதம் இருந்தது:

“இன்று உங்கள்கள் இருக்கை மாற்றப்பட்டுள்ளது.”

அவன் சிரித்தான்.

புதிய இருக்கை ஜன்னலுக்கு அருகில் இருந்தது. வெளியே ஒரு உண்மையான மரம் இருந்தது. அவன் உட்காரும் முன்

செடியைப் பார்த்தான். ஒரு இலை மட்டும்

நிமிர்ந்து இருந்தது.

ரஹீம் மெதுவாக தண்ணீர்ப் பாத்திரத்தைத் திறந்தான். இந்த முறை யாரும் அவனைத் தடுக்கவில்லை.

ரஹீம் தண்ணீர் ஊற்றிய அடுத்த நாள்

அலுவலகத்தில் ஒரு விசித்திரமான அமைதி இருந்தது.

மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் “அவசியம்” என்ற சொல்லைக் காணவில்லை.

கடிகாரம் ஓடியது. ஆனால் நேரம் யாரையும் துரத்தவில்லை. மதிய இடைவேளையில்

சிலர் செடியைக் கவனித்தார்கள்.

“நேத்து இப்படி இல்லையே?” என்றார் ஒருவர்.

“இலைகள் பெரிசா இருக்கே.” என்றார் இன்னொருவர்.

யாரும் ரஹீமைக் கவனிக்கவில்லை.

அவனுக்கு அது புதுமையாக இருந்தது.

கவனிக்கப்படாமலிருப்பது ஒரு விடுதலை போல இருந்தது.

அன்று மாலை அவன் கணினியை அணைக்கும் போது திரை ஒரு கணம்

கண்ணாடிபோல் மாறியது.

அதில் அவன் முகம் இல்லை.

அவன் பதில் எழுதாத மின்னஞ்சல்கள்,

அவன் உட்காராத நாற்காலிகள், அவன் சொல்லாத “சரி”கள் ஒன்றாகக் கூடி

ஒரு மனித உருவம் எடுத்தன.

அந்த உருவம் செடியின் அருகில் போய்

நின்றது.

ரஹீம் மூச்சை நிறுத்திக் கொண்டான்.

உருவம் மெதுவாகச் செடிக்குள் கரைந்தது.

அடுத்த நாள் அலுவலகத்தில் ஒரு கூடுதல் நாற்காலி இருந்தது. அது காலியாக இருந்தது. அதில் யாரும் இல்லை. ஆனால் எல்லாரும் அதைத் தவிர்த்து நடந்தார்கள்.

ரஹீம் மட்டும் அதில் உட்காரவில்லை.

அவன் ஜன்னலின் அருகே அந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். காற்றில்

இலைகள் அசைந்தன. அவை ஒப்புதல் கடிதங்கள் அல்ல. அவை பதில்கள் கூட அல்ல. அவை கேள்விகள்.

அந்த கூடுதல் நாற்காலி. ஒவ்வொரு நாளும் சற்றுச் சற்றாக ரஹீமின் மேசைக்குச் அருகில் வந்தது. யாரும் நகர்த்தவில்லை. ஆனால் இடம் மாறியது.

ரஹீம் கவனித்தான். கவனித்ததை யாரிடமும் சொல்லவில்லை. சொல்லத் தொடங்கினால் அது விளக்கம் கேட்கும். விளக்கம் கேட்டால் உண்மை ஓடிவிடும்.

செடி இப்போது மேசையின் நிழலுக்குள் வந்திருந்தது. அதன் வேர்கள் தரையின் மேல் வரைபடம் போலத் தெரிந்தன.

அதில் அலுவலகத்தின் அறைகள், மனிதர்களின் பெயர்கள், மின்னஞ்சல் தலைப்புகள் எல்லாம் கலந்திருந்தது.

ரஹீம் தன் பெயரை ஒரு வேரில் பார்த்தான். அது வேரல்ல கையெழுத்து. அன்று மாலை அலுவலகத்தில் மின்சாரம் போனது. இருட்டில் நாற்காலிகள் பேசத் தொடங்கின.

“நான் நிரப்பப்பட்டேன்.” என்றது ஒன்று.

“நான் மாற்றப்பட்டேன்.” என்றது இன்னொன்று. “நான் நீக்கப்பட்டேன்.”

என்று மெதுவாக ஒரு குரல் சொன்னது.

ரஹீம் எழுந்தான்.

அந்த கூடுதல் நாற்காலி இப்போது

அவனுக்காக காத்திருந்தது. அவன் உட்காரவில்லை. அவன். அவன் செடியை நோக்கிச் சென்றான்.

முதல் முறையாக செடி அவனைப் பார்த்தது. இலைகள் அல்ல நிழல்.

அந்த நிழலில் அவனது பழைய அடையாள அட்டை அசைந்தது. அவன் அதை எடுத்தான். அட்டையில் பெயர் இல்லை.

பதவி இல்லை. ஒரு வரி மட்டும் இருந்தது:

“நீர் ஊற்றுபவன்.”

ரஹீம் சிரித்தான்.

வெளியேறும் கதவைத் திறந்தான். அலுவலகம் அவனுக்குப் பின்னால் சற்று நேரம் மூச்சை நிறுத்தியது.

ரஹீம் வெளியே வந்தபோது வெயில் இல்லை. மழையும் இல்லை. நேரம் மட்டும்

அலுவலகக் கடிகாரத்தை விட்டுத் தப்பித்து நின்றது.

வாசலின் அருகில் அதே செடி இருந்தது.

அலுவலகத்துக்குள் இருந்தது போலவே.

ஆனால் இப்போது அது தனியாக இல்லை.

அதன் சுற்றி சிறிய முளைகள். ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் இல்லை. ஒரு பதவி இல்லை.

ரஹீம் குனிந்து மண்ணைத் தொட்டான்.

மண் குளிராக இருந்தது. மனித குரல்கள் இல்லாமல் அமைதியாக இருந்தது.

அவன் தன் அடையாள அட்டையை

மண்ணில் வைத்தான். காற்று அதை மெல்ல மூடியது. அவன் திரும்பிப் பார்த்தான். அலுவலகக் கட்டிடம் ஒரு பெரிய நாற்காலி போல தெரிந்தது.

யாருக்காகவோ காத்திருந்தது. ஆனால் யாரும் அதில் உட்காரவில்லை.

ரஹீம் நடந்தான். அவன் நடந்த இடமெல்லாம் முளைகள் முளைத்தன.

அவை செடிகளாகும் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் நீர் ஊற்ற வேண்டியது

தான் தெரிந்தது.

முதல் முறை அவனுக்குப் பதில் தேவையில்லை. அவனே ஒரு இடைவெளி.

ஒரு மௌனம். ஒரு தொடக்கம்.

அந்த தொடக்கம் யாருக்கும் அறிவிப்பாகவில்லை. அடுத்த வாரம் அலுவலகம் ஒரு புதிய சுற்றறிக்கை வெளியிட்டது: “பணியாளர்கள் அனைவரும் இயற்கைச் சூழலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

யாரும் ரஹீமின் பெயரைச் சொல்லவில்லை. ஆனால் செடிகள் அதிகரித்தன. முன்னர் நாற்காலிகள் இருந்த இடங்களில் இப்போது மண் வாசனை.

ஒரு நாள் உயரதிகாரி ஜன்னலின் அருகே நின்றார். வெளியே பார்த்தார். அவர் பார்த்தது மரங்களா, அல்லது அவருக்காக காலியாக இருந்த ஒரு பெரிய இடமா என்று அவருக்கே தெரியவில்லை. அவர் திரும்பி வந்து ஒரு நாற்காலியை இழுத்தார். அது சத்தமிட்டது. இரும்பின் சத்தமல்ல. நினைவின் சத்தமும் அல்ல. பயம்.

அந்த நாளிலிருந்து “அவசியம்” என்ற சொல் மின்னஞ்சல்களில் மெதுவாக குறைந்தது. பதில்கள் தாமதமானது. தாமதம் மனிதராக்கப்பட்டது.

ரஹீம் எங்கே சென்றான் என்று யாரும் விசாரிக்கவில்லை. விசாரிக்கத் தொடங்கினால் ஒரு கேள்வி முளைக்கும். அந்த கேள்விக்கு நீர் ஊற்ற வேண்டியிருக்கும்.

நகரத்தின் ஓரத்தில் ஒரு பழைய பேருந்து நிறுத்தம் அருகே ரஹீம் ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவனுடன் யாரும் இல்லை. ஆனால் தனிமையும் இல்லை.

அந்த செடியின் இலைகள் அலுவலகக் காகிதங்களைப் போல இல்லை. அவை கிழிக்கப்படவில்லை. திருத்தப்படவில்லை. அங்கீகாரம் கேட்கவில்லை.

ஒரு குழந்தை கேட்டது: “இது என்ன செடி?”

ரஹீம் சொன்னான்: “இது பதிலில்லாத கேள்வி.” குழந்தை சிரித்தது. அது புரிந்த சிரிப்பு அல்ல. வாழ்க்கை புரியாமல் வரும் சிரிப்பு.

மாலை வந்தபோது அவன் கைகளில் மண். கால்களில் களைப்பு. மனதில் ஒரு காலி நாற்காலி கூட இல்லை.

நகரம் முழுக்க சிறுசிறு முளைகள். யாருக்கும் சொந்தமில்லாதவை. ஆனால் யாரையும் மறுப்பதில்லை. அவை வளர்ந்தால் அலுவலகங்கள் காடாகும். நாற்காலிகள் நிழலாகும். “சரி” என்ற சொல் மண்ணுக்குள் போகும்.

அது நடந்தால் இதைக் கதை என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அப்பொழுது எழுதுபவன் தேவையில்லை.

நீர் ஊற்றுபவன் போதும்.

ரஹீம் ஒரு நாள் தண்ணீர் பாத்திரத்தை கீழே வைத்தான். அது விழவில்லை. அதை யாரும் எடுத்ததும் இல்லை. மண் மெதுவாக அதைச் சுற்றி வந்தது.

அவன் காலடியில் சிறு முளைகள். ஒவ்வொன்றும் ஒரு முடிக்கப்படாத வாக்கியம். ரஹீம் நடந்தான். நடந்தான் என்று சொல்ல முடியாது. அவன் நகர்ந்தான். நகர்ந்தான் என்றும் இல்லை. மண் அவனைத் தன் வேகத்தில் உள்ளிழுத்தது.

அவன் கால்கள் வேர் போல மாறின. கைகள் இலைகளுக்குள் கரைந்தன. முகம் மண்ணின் நினைவாகியது.

அவன் பயப்படவில்லை. ஏனெனில் இப்போது அவனுக்குத் தாமதம் இல்லை. அவசியமும் இல்லை.

காற்று வந்தது. அவன் பெயரை உச்சரிக்க முயன்றது. முடியவில்லை. பெயர்கள் மண்ணில் நீடிப்பதில்லை.

அடையாள அட்டை முழுவதும் கரைந்தது. “நீர் ஊற்றுபவன்” என்ற வரி மட்டும் சிறிது நேரம் மேலே மிதந்தது. பின்னர் அதுவும் மண்ணின் எழுத்தாக மாறியது. நகரம் விழித்தது. ஒரு புதிய செடி. அதன் பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் நிழல் அவசரப்படவில்லை.

அலுவலகம் தொலைவில் ஒரு காலி நாற்காலி போல. அது இன்னும் யாருக்காகவோ காத்திருந்தது. ஆனால் யாரும் மீண்டும் உட்காரவில்லை. மழை வந்தது. முதலில் மண்ணைத் தொட்டது. பிறகு வேறெதையும் கேட்கவில்லை.

ரஹீம் இப்போது ஒரு மனிதன் அல்ல. ஒரு கதாபாத்திரமும் அல்ல. ஒரு முடிவும் அல்ல.

அவன் மண்.

•••

டீன் கபூர்

ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை  (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *