இரு கட்டில்களுக்கிடையில் ஒரு உள்ளம்

டீன் கபூர்

இரவு நேரங்களில் வைத்தியசாலைகளில் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. சுவரிலிருக்கும் கடிகாரம் அங்கே நேரத்தைச் சொல்லாது; அது காத்திருப்பின் அளவைத்தான் காட்டும். எனக்குக் கொடுக்கப்படாத கட்டிலிலொன்றில் நான் படுத்திருக்கிறேன். படுக்கைச் சீட்டின் வெள்ளை நிறம் அங்கே எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒவ்வொருவரின் கவலையும் வெவ்வேறு நிறத்தில் இருக்கிறது.

​எதிர்க் கட்டிலில் எனது குழந்தை தூங்குகிறது. அதன் தூக்கம் மிகவும் அமைதியாக இருக்கிறது. குழந்தைகள் இவ்வுலகத்தை நம்பிக்கையோடு நம்பித் தூங்குகிறார்கள்; பெரியவர்களோ நாளையைக் கணக்கிட்டு விழித்திருக்கிறார்கள்.

​சுற்றிலும் நோயாளர்கள். ஒருவர் இருமுகிறார், இன்னொருவர் திரும்பிப் படுக்கிறார். யாரோ மெதுவாகக் குர்ஆன் ஓதுகிறார். யாரோ தமது உறவினரின் பெயரை உறக்கத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

​வைத்தியர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள். அவர்களின் காலணிச் சத்தம் இந்த இரவின் அதிகாரப்பூர்வ மொழி. தாதிகள், எடுபிடிகள், உறவினர்கள் என எல்லோரும் இந்தக் கட்டிடத்தின் உள்ளே ஒரே மாதிரி நடந்தாலும், ஒவ்வொருவரும் வேறு வேறு கதைகளிலிருந்து வந்தவர்கள்.

​எனது குழந்தை தூக்கத்தில் சிரித்த அந்த ஒரு கணம் நான் நினைத்தேன்: இந்த வைத்தியசாலை அறையில் இப்போது உண்மையில் உடல்நலமில்லாதவர்கள் யார்? காய்ச்சலுடன் இருப்பவர்களா? கவலையுடன் இருப்பவர்களா? அல்லது நாளை காலை என்ன நடக்கும் என்று தெரியாமல் விழித்திருப்பவர்களா?

​நான் எனது கட்டிலில் இருந்து எழுந்து குழந்தையைப் பார்த்தேன். அதன் முகத்தில் எந்தப் பயமும் இல்லை. அப்போது எனக்குத் தோன்றியது இந்த இரவு முழுவதும் வைத்தியசாலை தூங்கவில்லை, வைத்தியர்கள் தூங்கவில்லை, நோயாளர்கள் தூங்கவில்லை. தூங்கியது ஒரு குழந்தை மட்டும் தான்.

​அதன் தூக்கத்தைப் பாதுகாக்கவே அங்கிருந்த எல்லோரும் தங்களது விழிப்பைச் செலவழித்துக் கொண்டிருந்தார்கள். ​நான் மீண்டும் கட்டிலில் படுத்து சுவரைப் பார்த்தேன். எனது உள்ளம் மட்டும் ஒரு நோயாளியாக இல்லை; ஒரு கட்டிலுக்கும் மறு கட்டிலுக்கும் நடுவே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறிய பிரார்த்தனையாக இருந்தது. பிரார்த்தனைகளுக்கு எப்போதும் மொழி இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் அவை விழித்திருக்கும் கண்களாக இருக்கும், சில நேரங்களில் குழந்தை மீது போர்வையை இழுத்து வைப்பதாய் இருக்கும்.

​எதிர் கட்டிலில் குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தாதி வந்து அதன் நெற்றியைப் பார்த்துச் சென்றார். அவர் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை. ஆனால் அந்தச் சிரிப்பில்லாத முகத்திலும் ஒரு பழகிய இரக்கம் இருந்தது. தினமும் நூறு பேரின் பயத்தைப் பார்த்தவர்கள் பேசுவதைக் குறைத்துக்கொள்கிறார்களோ என்று நினைத்தேன்.

​அருகில் இருந்த நோயாளியின் உறவினர் தரையில் சாய்ந்து தூங்கினார்; அவரது கை மட்டும் கட்டிலின் மேல் இருந்தது. தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்குக் கூட யாரையாவது பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றியது.

​திடீரென்று தொலைவில் ஒரு குழந்தை அழுதது. அந்த அழுகை இந்த அறையின் எல்லைகளைத் தாண்டி வந்தது. ஒரு நிமிடம் எல்லோரும் விழித்தது போல இருந்தது. பிறகு மீண்டும் அமைதி. அப்போதுதான் புரிந்தது. அமைதி என்றால் சத்தம் இல்லாத நிலை அல்ல. இங்கே அமைதி என்றால் மருந்து வேலை செய்கிறது, காய்ச்சல் குறைகிறது, அறிக்கை இன்னும் வரவில்லை. யாரும் ஓடவில்லை. யாரும் அழவில்லை என்பதுதான்.

​எனது குழந்தையைப் பார்த்தேன். அது இன்னும் வேறொரு உலகத்தில் இருந்தது. அதன் கனவில் வைத்தியசாலை இருக்காது. இந்த வெள்ளைச் சுவர் இருக்காது. என் கவலையும் இருக்காது. அங்கே ஏதோ ஒரு மைதானம் இருக்கலாம்; ஓடிக்கொண்டிருக்கும் பறவைகள் இருக்கலாம்; அல்லது வீட்டின் வாசலில் அது விட்டுவந்த செருப்புச் சோடியாக இருக்கலாம்.

​அப்போது எனக்குள் ஒரு வாக்கியம் வந்தது: குழந்தைகள் நாளையை நம்பித் தூங்குகிறார்கள். பெரியவர்கள் நாளையை வேண்டிக்கொண்டு விழிக்கிறார்கள். நான் கண்களை மூடினேன். தூங்குவதற்காக அல்ல. இந்த இரவு நாளையாக மாறுவதைக் கொஞ்சம் அருகில் இருந்து பார்ப்பதற்காக.

​இரவு எப்போது அதிகாலையாகிறது என்பதை வைத்தியசாலைகள் அறிவிப்பதில்லை. அதை முதலில் அறிந்து கொள்வது ஜன்னலின் கண்ணாடிதான். கருப்பாக இருந்த வெளிச்சம் மெதுவாக சாம்பல் நிறமாக மாறியது. எனக்கு இன்னும் தூக்கம் வரவில்லை.

​ஒரு இரவு முழுவதும் விழித்திருந்தவர்கள் அதிகாலையில் வேறொரு மனிதர்களாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு நேரம் மணிநேரமாக அல்ல. சுவாசங்களாக நினைவில் இருக்கும். குழந்தை திரும்பிப் படுத்தபோது போர்வை கீழே வந்தது; எழுந்து மீண்டும் போர்த்திவைத்தேன். நாம் நினைவில் வைத்திருக்காத பல அன்புகளை நம் உடல் நினைவில் வைத்திருக்கிறது என்பதை அப்போது உணர்ந்தேன்.

​காலை வந்தது. குழந்தை கண்களைத் திறந்து என்னைப் பார்த்து. “வீட்டுக்குப் போவோமா?” என்று கேட்டது. நான் சிரித்தபடி “போவோம்” என்றேன். ஆனால் எப்போது என்று சொல்லவில்லை. குழந்தைகள் நேரத்தைக் கேட்க மாட்டார்கள். வாக்குறுதியை மட்டும் நம்புவார்கள்.

​சிறிது நேரம் கழித்து அது மீண்டும், “நேற்று இரவு நீ தூங்கினாயா?” என்று கேட்டது. நான் அதற்குப் பதில் சொல்லாமல். “நீ நல்லா தூங்கினியா?” என்று கேட்டேன். அது தலையசைத்தது. அப்போது புரிந்தது. நான் தூங்காதது வீணாகவில்லை. யாரோ ஒருவர் நிம்மதியாகத் தூங்குவதற்கு நான் அருகில் இருந்திருக்கிறேன்.

​வெளியேறுவதற்கு முன் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். இரவு முழுவதும் என்னைத் தாங்கிய கட்டில் அங்கே இருந்தது. வெளியே காலை வெளிச்சம் படர்ந்திருந்தது. ​குழந்தை, “வீட்டுக்குப் போனதும் நான் மீண்டும் தூங்கப் போறேன். நீயும் தூங்கு” என்றது. அந்தச் சொல் மருந்துச் சீட்டைப் போல என் உள்ளத்தில் மடிந்து கொண்டது.

​பின்னால் வைத்தியசாலை, முன்னால் வீடு, நடுவில் ஒரு இரவு. அந்த இரவு எனக்கு ஒன்றைக் கற்றுத்தந்தது: நோய் எப்போதும் உடலுக்கு மட்டும் வராது. காத்திருப்பும் ஒரு காய்ச்சல், கவலையும் ஒரு வலி, அன்பும் ஒரு சிகிச்சை.

​அன்று இரவு நான் தூங்கவில்லை என்றாலும், மறுநாள் காலை எனது குழந்தையின் முகத்தில் சிறிது நிம்மதி தூங்கியிருந்தது. அதைப் பார்த்தபோது புரிந்தது. சில இரவுகள் ஓய்வுக்காக அல்ல; நாம் யாருக்காக விழித்திருக்கிறோம் என்பதை அறிவதற்காகத்தான்.

​ஆனால் கதை அங்கே முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பிறகும் சில இரவுகள் வைத்தியசாலையை நமக்குள் வைத்துக்கொள்கின்றன.

​குழந்தை வீட்டின் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகில் உட்கார்ந்து, இந்தத் தூக்கத்துக்கும் நேற்று இரவு தூக்கத்துக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்தேன். அங்கே தூக்கம் கண்காணிக்கப்பட்டது. இங்கே தூக்கம் வீட்டிலிருந்தது. அங்கே ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்பட்டது. இங்கே ஒவ்வொரு அமைதியும் நம்பப்பட்டது.

​குழந்தை தூங்கும்போது அதன் முகத்தில் எந்த நினைவும் இல்லை. வைத்தியசாலை அதற்கு ஏற்கனவே நேற்றைய கதையாகிவிட்டது. ஆனால் எனக்குள் அது இன்னும் இன்றைய நிஜமாகவே இருந்தது. ஒரு கட்டில், எதிர் கட்டில், இரண்டு விழிப்புகள், ஒரு தூக்கம் என எல்லாம் இன்னும் அங்கேயே இருந்தன.

​தேநீர் குடிக்க சமையலறைக்குச் சென்றேன். கோப்பையின் சூடு விரல்களில் இருந்தபோது, திடீரென்று நேற்று இரவு தண்ணீர் குடித்த அந்த நோயாளி, தரையில் சாய்ந்து தூங்கிய உறவினர், குழந்தையின் நெற்றியைத் தொட்ட தாதி ஆகியோர் நினைவுக்கு வந்தார்கள்.

​அவர்களுடைய கதைகள் எங்கே போயின? நாம் ஒரே இரவில் ஒரே அறையில் இருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையில் மற்றவர் பெயரில்லாத மனிதர்களாகவே இருந்து விடுகிறோம். ஆனால் சில நேரங்களில் இத்தகைய பெயரில்லாத மனிதர்கள்தான் நமக்குள் நீண்ட நாட்கள் தங்கிவிடுகிறார்கள்.

​குழந்தை தூக்கத்தில் திரும்பிப் படுத்தபோது, நான் எழுந்து அதன் போர்வையைச் சரிசெய்து மெதுவாகச் சிரித்தேன். ஏனெனில் வைத்தியசாலை முடிந்துவிட்டது, ஆனால் அந்த இரவில் நான் கற்றுக்கொண்ட அன்பு இன்னும் முடியடையவில்லை.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், பகல் முழுமையாக வந்திருந்தது. ஆனால் என் உள்ளம் இன்னும் அந்த இரண்டு கட்டில்களுக்கு நடுவேதான் நின்றுகொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது. சில இடங்களிலிருந்து மனிதர்கள் வெளியேறுகிறார்கள், சில இடங்கள் மட்டும் மனிதர்களுக்குள் என்றென்றைக்குமாக தங்கிவிடுகிறன.

​அந்த வைத்தியசாலை இப்போது எனக்கு ஒரு கட்டிடம் இல்லை; என் குழந்தை நிம்மதியாகத் தூங்கிய ஒரு இரவின் வடிவம்.

​அடுத்த சில நாட்களில் வாழ்க்கை வழக்கம்போலத் திரும்பிவிட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். காலையில் கதவுகள் திறந்தன. தேநீர் தயாரானது. அழைப்புகள் வந்தன. வீட்டில் வழக்கமான சத்தங்கள் திரும்பின. ​ஆனால் சில நினைவுகள் கதவைத் தாண்டி வெளியே போகாது. அவை வீட்டிற்குள் வந்து ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்துகொள்கின்றன. அந்த இரவு அப்படித்தான் இருந்தது.

​குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது; சில நேரங்களில் சிரித்தது. சில நேரங்களில் ஓடிவந்து ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் மறைந்தது.

​ஒரு முறை அது வந்து, “அங்கே இருந்த அந்த அறை நினைவிருக்கா?” என்று கேட்டது. நான் அதை நோக்கிப் பார்த்து, “நினைவிருக்கு” என்றேன். அது கொஞ்சம் யோசித்துவிட்டு, “எனக்கு அதிகம் நினைவில்லை” என்றது. நான் சிரித்தேன். குழந்தைகளின் மறதி ஒரு ஆசீர்வாதம். பெரியவர்களின் நினைவு ஒரு பொறுப்பு என்பதை அன்று இரவு நான் புரிந்துகொண்டேன்.

​எனக்குக் கடிகாரம், வெள்ளைச் சீட்டு, காலணிச் சத்தம், எதிர் கட்டில், அதன் தூக்கம், எனது விழிப்பு எல்லாம் நினைவிருந்தன. ஆனால் அதற்கு, ‘ஒரு இரவு, வாப்பா அருகில் இருந்தார்’ என்பது மட்டும்தான் நினைவிருந்திருக்கலாம். மாலை நேரத்தில் குழந்தை மீண்டும் தூங்கிவிட்டது. அதன் அருகில் உட்கார்ந்தபோது, நான் இப்போது அதன் மூச்சைக் கேட்கவில்லை, மாறாக அதன் அமைதியைக் கேட்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

​அந்த இரவு எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருக்கிறது. முன்பு குழந்தை தூங்குவது ஒரு வழக்கம். இப்போதோ அது ஒரு நிம்மதி. முன்பு இரவு என்பது வெறும் நேரம், இப்போது அது ஒரு ஒப்படைத்தல். முன்பு இரவு என்பது வெறும் சொல். இப்போது அது அன்போடு அருகில் இருப்பது.

​குழந்தையின் நெற்றியில் கை வைத்தேன்; காய்ச்சல் இல்லை, பயம் இல்லை, தூக்கம் மட்டுமே இருந்தது. அப்போது நான் மெதுவாகக் கண்களை மூடினேன். இந்த முறை நாளை வருவதைக் காண்பதற்கு அல்ல, நிம்மதியாகத் தூங்குவதற்காக. ஏனெனில், சில கடினமான இரவுகளுக்குப் பிறகு உள்ளமும் ஓய்வு எடுக்க வேண்டுமல்லவா?

​ஆனால் தூங்குவதற்கு முன் ஒரு கணம் மீண்டும் அந்த வைத்தியசாலை அறை நினைவுக்கு வந்தது. இரண்டு கட்டில்கள், நடுவே ஒரு சிறிய இடைவெளி. அந்த இடைவெளியில்தான் அன்று இரவு எனது உள்ளம் தங்கியிருந்தது.​ அதற்குப் பிறகு பல இரவுகள் கடந்தன. சில இரவுகள் எதுவும் நடக்காமல் முடிந்தன. சில இரவுகள் நீண்டன. சில இரவுகள் நினைவில் இல்லாமலேயே போயின. ஆனால் அந்த ஒரு இரவு மட்டும் நாட்காட்டியில் இல்லாமல் என் உள்ளத்தில் அழியாத தேதியாக இருந்து விட்டது.

​ஒரு நாள் குழந்தை தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பொம்மைகளை வரிசையாக வைத்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து அழைத்துக்கொண்டிருந்தது. பிறகு இரண்டு தலையணைகளை எதிரெதிரே வைத்தது. ​நான் சிரித்துக்கொண்டு, “இது என்ன?” என்று கேட்டேன். அது சாதாரணமாக, “இது ஹொஸ்பிட்டல்” என்றது. நான் ஒன்றும் பேசவில்லை. அது ஒரு தலையணையைத் தொட்டு, “இங்க ஒரு குழந்தை தூங்குது” என்றும், மற்றொன்றைக் காட்டி, “இங்க வாப்பா” என்றும் சொன்னது. பிறகு நடுவில் ஒரு சிறிய இடத்தை விட்டுவிட்டு அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. “அங்க என்ன?” என்று கேட்டேன். அது உடனே பதில் சொல்லாமல், சிறிது நேரம் கழித்து, “அங்க யாரும் இல்லை” என்றது.​ நான் சிரிக்கவில்லை. ஏனெனில் திடீரென்று எனக்குத் தோன்றியது. அங்கே யாருமில்லை என்பது உண்மையல்ல. அங்கேதான் அந்த இரவு முழுவதும் நின்றிருந்தது; ஒரு பயம், ஒரு காத்திருப்பு, ஒரு அன்பு, ஒரு சிறிய பிரார்த்தனை என எல்லாமும் அங்கேயேதான் இருந்தன. குழந்தை மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டது. அதற்கு அது ஒரு விளையாட்டு, எனக்கு அது ஒரு வாழ்நாள் நினைவு.

​அந்த மாலை நான் ஜன்னலருகில் நின்றபோது வெளியில் சூரியன் மறைந்துகொண்டிருந்தான். ஒளி மெதுவாக அறைக்குள் இருந்து வெளியேறிய அந்த வேளையில் எனக்குப் புரிந்தது. வாழ்க்கையில் சில அனுபவங்கள் முடிவதில்லை. அவை வடிவம் மாறுகின்றன.

​வைத்தியசாலை வீடாக மாறுகிறது, விழிப்பு நினைவாக மாறுகிறது, பயம் நன்றியாக மாறுகிறது, அன்பு வழக்கமாக மாறுகிறது.

​அன்று இரவு நான் குழந்தைக்காக விழித்திருந்தேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது புரிகிறது. அன்று இரவு என் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது என்னைத்தான் அது விழித்தெழச் செய்திருக்கிறது.

​இரவு முடிந்துவிட்டது, வைத்தியசாலை தூரமாகிவிட்டது, கட்டில்கள் பிரிந்துவிட்டன. ஆனால் இன்னும் சில நேரங்களில், குழந்தை தூங்கும் போது நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன். ஏனெனில் எனக்கு நன்றாகத் தெரியும். சில உள்ளங்கள் எப்போதும் இரு கட்டில்களுக்கு நடுவில்தான் வாழ்கின்றன.

00

டீன் கபூர்

ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை  (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *