– ஏ.நஸ்புள்ளாஹ்

​சென்னை பெருநகரம் தன் கோடை காலத்தின் உக்கிரத்தோடு, எந்த ஒரு பருவத்திற்கும் அடங்காத ஒரு விதமான அனல் காற்றோடு சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மணி மதியம் இரண்டு ஐம்பது. நங்கம்பாக்கம் கார்ப்பரேட் அலுவலக வளாகத்தின் ஏழாவது மாடியில் உள்ள கணேஷின் அறையின் கண்ணாடிக் கதவுகள், வெளியே கொதிக்கும் தார்ச்சாலையின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் வியர்த்துக் கொட்டின. மய்ய குளிர்சாதனப் பெட்டியின் இயந்திரச் சத்தம் கூட இந்த வெயிலின் மூர்க்கத்தனத்திற்கு முன்பு திணறி, முனகிக் கொண்டிருந்தது.

​கணேஷ் தன் மேஜையின் மீது மலைபோல் குவிந்து கிடந்த தணிக்கை ஃபைல்களை ஒவ்வொன்றாகத் தள்ளி வைத்துவிட்டு, சோர்வாகத் தன் நாற்காலியில் சாய்ந்தான். அவனது கண்களில் அந்த நள்ளிரவு விழிப்புகளின் களைப்பு தெளிவாகத் தெரிந்தது.

​”சார்… அந்தப் பெட்ரோலியம் கார்ப்பரேட் நிறுவனத்தோட பேலன்ஸ் ஷீட் கணக்குகள் இன்னும் ஓங்கலையே? ஆடிட் அப்ஜெக்ஷன் ஃபைல் பண்ணிடலாமா?”

​வாசலில் வந்து நின்றுகொண்டு கேட்டான் வசந்த். கையில் இரண்டு முறை ஆவி பறக்கக் காய்ச்சப்பட்ட ஸ்ட்ராங் டீயுடன் நின்றிருந்தான். அவன் கணேஷின் இளைய உதவியாளர். ஆபீஸின் ஒவ்வொரு கணக்கையும் விரல் நுனியில் வைத்திருப்பவன். கணேஷுக்கோ இப்போது அந்த எண்களைத் தாண்டிய ஒரு பிரமை மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

​”இல்லை வசந்த்… அந்த எண்ணெய்க் கம்பெனி கேஸ்தான் ரொம்பச் சிக்கலான ஒரு புதிராக இருக்கு. கணக்குகளின் வெளிப்படைத்தன்மைக்கும் கம்பெனியின் டைரக்டர்கள் காட்டும் லாபக் கணக்கிற்கும் எட்டடி தூரம் வித்தியாசம் இருக்கு. சுஜாதா சார் தன்னோட நாவல் ஒன்றில் சொல்லுவாரே… சமூகத்தில் எங்குமே இல்லாத நேர்மையைச் சட்டப் புத்தகங்களில் தேடுவதை விட, மனிதர்களின் பேராசை எங்கே முடிகிறது என்று தேடுவது எளிதுனு அப்படித்தான் இருக்கு இந்த முறைகேடும்” என்றான் கணேஷ், டீக் கோப்பையை வாங்கியபடியே.

​வசந்த் லேசாகச் சிரித்தான்.

 “சார், நீங்க எப்பப் பார்த்தாலும் சுஜாதா சார் வசனங்களையே பேசுறீங்க. நாமெல்லாம் ஆடிட்டர்கள் கணக்கைப் பார்க்கிறவர்கள். எங்கே லாபம், எங்கே நஷ்டம் என்று பார்ப்பதுதான் நம் வேலை. எதற்காக இந்தத் தத்துவங்கள்?”

​”இல்லை வசந்த்… சுஜாதா வெறும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் எழுத்தாளர் இல்லை. அவர் ஒரு மனித மனங்களின் லாஜிக் இன்ஸ்பெக்டர். கணேஷ் வசந்த் துப்பறியும் கதைகளைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு விஷயம் புரியும். உலகத்தில் குற்றங்கள் எப்போதுமே புதியதாக மாறுவதில்லை. குற்றவாளிகள் செய்யும் சின்னச் சின்னத்  பிழைகள்தான் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். அதுதான் ஆடிட்டிங்கிலும் நடக்கிறது.”

​கணேஷ் தன் மேஜை சுவரில் மாட்டப்பட்டிருந்த காலண்டரைப் பார்த்தான். தேதி ஆகஸ்ட் 18, 2026. திடீரென்று அவனுக்குத் தன் அண்ணன் நரேஷின் ஞாபகம் நெஞ்சை அழுத்திக் கொண்டு வந்தது. நரேஷ் இறந்து சரியாக இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  அவனது நிழல் மட்டும் அந்த வீட்டின் சுவர்களில், புத்தக அலமாரிகளில், ஏன் இந்தக் காற்றில் கூட இன்னும் கலந்து கிடப்பது போலிருந்தது. நரேஷுக்கும் சுஜாதா நாவல்களுக்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் உண்டு. நரேஷின் அறையில் சுஜாதாவின் நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், அசல் விகடன் இதழ்கள், கல்கி நாவல்கள் எல்லாமே ஒரு தனி நூலகம் போலவே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

​”வசந்த், எனக்கு ஒரு சின்னத் தலைவலி. நான் ஒரு அரை மணி நேரம் வெளியே போயிட்டு வரேன். அந்த ரிப்போர்ட்டை நாளைக்குக் காலையில ஃபைனலைஸ் பண்ணிடலாம்” என்று தன் கோட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினான் கணேஷ்.

​மாலை வேளையில் சென்னை நகரின் வாகன நெரிசலில் காரைச் செலுத்துவது என்பது ஒரு நரகாசுரப் போர் போல. ரிப்பட்டிங் சாலை தாண்டி சைதாப்பேட்டை வழியாக அடையாறு செல்லும் வழியில் கார்கள் ஊர்ந்து சென்றன. கணேஷின் மனம் முழுவதும் எதையோ இழந்த தவிப்பும் எதையோ தேடும் தீவிரமும் மாறி மாறி அடித்துக் கொண்டன.

​வீட்டை அடைந்தபோது மணி ஆறாகியிருந்தது. வீட்டின் வரவேற்பறையில் அவனது அம்மா சாந்தா பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு, சாமி படத்திற்கு முன் நின்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

​”கணேஷ்… இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வந்துட்டே? ஆபீஸ்ல வேலையெல்லாம் முடிஞ்சதா?”

​”ஆமாம்மா… கொஞ்சம் தலைவலி, அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்.”

​அவன் தன் அறைக்குள் நுழைந்தான். அந்த அறை நரேஷ் வாழ்ந்த அறை. நரேஷின் மறைவிற்குப் பிறகு அந்த அறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அவனது புத்தகங்கள் அப்படியேதான் இருந்தன. கணேஷ் தன் மேஜையின் கீழ் இருந்த மர டிராயரைத் திறந்தான். அதற்குள் தூசிகள் படிந்திருந்த ஒரு நீல நிற அட்டை போட்ட டைரி கண்ணில் பட்டது. அது நரேஷின் கைப்பட எழுதிய கடைசி டைரி. நரேஷ் இறந்த மாதத்திற்கு முன்பு வரை அவன் எழுதிய குறிப்புகள் அதில் இருந்தன. இதற்கு முன்பு கணேஷ் அந்தத் டைரியைப் படிக்கத் துணிந்ததே இல்லை. இன்றைய சூழ்நிலையில் ஏதோ ஒரு உள்நோக்கம் அவனுக்கு அந்தத் டைரியைத் திறக்கத் தூண்டியது.

​பக்கங்கள் மஞ்சள் நிறமாகிப் போய்விட்டன. நரேஷின் அழகிய, நேர்த்தியான தமிழ் எழுத்துக்கள். கணேஷ் அந்தப் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினான்.

ஜூன் 12, 2024:

“இன்று மெரினா கடற்கரை அருகில் ஒரு விசித்திரமான மனிதரைச் சந்தித்தேன். தன்னை ‘நிழல்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் என்னிடம் ஒரு ஆச்சரியமான தகவலைச் சொன்னார். சென்னை மாநகரத்தின் அடியில், பிரிட்டிஷ் காலத்து சுரங்கப் பாதைகளும் ஆவணக் காப்பகங்களும் உள்ளன. அங்கே சுஜாதா எழுதிய கையெழுத்துப் பிரதிகள் சில ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார். அது ஒரு சாதாரண இலக்கியப் பொக்கிஷம் இல்லை அதில் ஒரு பெரிய கார்ப்பரேட் ஊழலின் உண்மைக் குறிப்புகள் இருப்பதாக அவர் நம்புகிறார்.”

​கணேஷ் புருவங்களைச் சுருக்கினான். நரேஷ் கற்பனைக் கதைகள் எழுதுவதில் வல்லவன் என்பதால், இது அவனது கற்பனைக் குறிப்புகளாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தான். அடுத்த பக்கத்தைப் படித்தபோது அவனது ரத்தம் உறைந்து போவது போல் இருந்தது.

ஜூன் 15, 2024:

“அந்த நிழல் மனிதர் என்னை மீண்டும் தொடர்புகொண்டார். இந்த முறை அவர் ராயப்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடையின் விலாசத்தைக் கொடுத்தார். அங்கே சுஜாதாவின் கையெழுத்துப் பிரதி ஒன்று ஒரு குறிப்பிட்ட புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாம். அதை எடுக்கப் போனபோது ஏதோ ஒரு வாகனம் என்னைத் தொடர்வது போலிருந்தது. எனக்கு பயமாக இருக்கிறது. கணேஷிடம் இதைச் சொல்ல வேண்டுமா அல்லது நானே கண்டுபிடிக்க வேண்டுமா என்று குழப்பமாக இருக்கிறது.”

​அந்தக் கடைசி வரிகள் கணேஷின் நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போலிருந்தன. நரேஷின் மரணம் ஒரு சாதாரண கார் விபத்து என்றுதான் அப்போது போலீஸ் வழக்கு பதிவு செய்து முடித்துவிட்டது. ஆனால், இந்த டைரி குறிப்புகள் அது ஒரு கொலை அல்லது திட்டமிடப்பட்ட சதி என்பதற்கான அத்தனை முத்திரைகளையும் தாங்கி நின்றன. கணேஷின் உள்ளே இருந்த கார்ப்பரேட் ஆடிட்டர் தூங்கி எழுந்தான். அவன் ஒரு துப்பறியும் நிபுணரைப் போலச் சிந்திக்கத் தொடங்கினான்.

​மறுநாள் காலை, கணேஷ் தன் அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லிவிட்டு, நேரடியாக ராயப்பேட்டையின்  சந்தைப் பகுதிக்குச் சென்றான். சென்னை நகரின் அதிநவீன மால் கலாச்சாரத்திற்கு இடையில் இன்னும் தன் பழமையை விட்டுக்கொடுக்காமல் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த ஒரு குறுக்குச் சந்து அது.

​அங்கே சுவரெல்லாம் பாசி படிந்த, கூரை தகரங்கள் வெயில் பட்டுத் தகதகக்கும் ஒரு கடை இருந்தது. பெயர் பலகை மழையிலும் வெயிலும் வெளுத்துப்போய் கிடந்தது ஞாயிறு புத்தகக் கடை.

​கடையின் வாசலில் ஒரு வயதான முதியவர் உட்கார்ந்து, சிகை அலங்காரக் கண்ணாடி வழியாகப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் படர்ந்திருந்த அடர்ந்த மீசையும், கூர்மையான பார்வையும் அப்படியே எழுத்தாளர் சுஜாதாவை நினைவுபடுத்தின. கணேஷ் மெல்ல அந்த முதியவரை நெருங்கினான்.

​”வணக்கங்க ஐயா…”

​அந்த முதியவர் பேப்பரைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, கணேஷை நிமிர்ந்து பார்த்தார். அவரது உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது, அந்தப் புன்னகையில் சோகமும் கலந்திருந்தது.

​”வாங்க கணேஷ்… உங்களுக்காகத்தான் நான் கடந்த இரண்டு நாட்களாகக் காத்திருந்தேன்.”

​கணேஷ் திடுக்கிட்டான். “எனக்காகவா? உங்களுக்கு என்னை எப்படித் தெரியும் ஐயா?”

​”உங்க அண்ணன் நரேஷ் கடைசியாக இந்தக் கடைக்கு வந்தபோது உங்களைப் பற்றி என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறான். என் தம்பி கணேஷ் பெரிய ஆடிட்டர், அவனுக்கு எண்களின் மீது இருக்கும் பிடிப்பு எழுத்துக்களின் மீதும் உண்டுனு பெருமையாப் பேசுவான்” என்றார் அந்த முதியவர்.

​கணேஷ் தன் குரலில் ஒரு உறுதியைக் கொண்டுவந்தான். “ஐயா, என் பெயர் கணேஷ். என் அண்ணன் நரேஷின் மரணம் சாதாரணமானதல்ல என்று இப்போது எனக்குப் புரியவருகிறது. நீங்கள் யார்? என் அண்ணனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?”

​முதியவர் தன் கண் கண்ணாடியைத் கழற்றி மேஜை மீது வைத்தார்.

“என் பெயர் ரங்கநாதன். நான் இந்த மாநகரத்தின் புத்தகங்களை மட்டும் சேகரிக்கவில்லை. மறைந்துபோன உண்மைகளையும் சேர்த்துப் பாதுகாக்கிறேன். சுஜாதா சார் உயிரோடு இருந்த காலத்தில் அவருடைய பல கையெழுத்துப் பிரதிகளைத் தட்டச்சு செய்துகொடுத்தவன் நான். நரேஷ் என்னைத் தேடி வந்ததற்குக் காரணம், அவன் ஒரு ஆபத்தான உண்மையை மோப்பம் பிடித்துவிட்டான்.”

​”என்ன அந்த உண்மை?” கணேஷின் குரல் நடுங்கியது.

​”சுஜாதா தன் வாழ்நாளின் இறுதியில் எழுதிய ஒரு தொடர்கதை பத்திரிகையில் வெளிவருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? அது ஒரு கற்பனைக் கதை அல்ல சென்னை மாநகரத்தின் மிகப்பெரிய பெட்ரோலிய கம்பெனி நிலமோசடியை மையமாகக் கொண்ட ஒரு புலனாய்வு நாவல். அதன் பெயர் ‘நிழலின் எல்லை’.

​கணேஷ் அந்தப் புத்தகக் கடையின் உள்ளே சென்றான். கடையில் இருந்த புத்தகங்களின் வாசனை அவனுக்கு ஏதோ ஒரு காலத்திற்குக் கொண்டு சென்றது. மூலையில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதில் சுஜாதா எழுதிய குமுதம், ஆனந்த விகடன் இதழ்களின் பல வருடத் தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

​”கணேஷ்… சுஜாதா எப்போதும் ஒரு வாக்கியத்தைச் சொல்வார் ‘ எந்த ஒரு புதிர்க்கும் இரண்டு விடைகள் இருக்கும். ஒன்று நாம் விரும்பும் விடை, மற்றொன்று உண்மையான விடை’. நரேஷ் உண்மையான விடையைத் தேடிச் சென்றான். அதனால்தான் அவன் அந்தப் பேராசைக்காரர்களின் கண்ணில் முள்ளாகக் குத்தினான்” என்றார் ரங்கநாதன்.

​”போலீஸ் விசாரணையில் அது ஒரு விபத்து என்றுதான் சொன்னார்களே?”

​”போலீசார் பார்த்தது மேலோட்டமான தடயங்களை மட்டும்தான். நரேஷ் விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் இரவு அடையாறு ஆற்றங்கரையில் உள்ள அந்தப் பாழடைந்த ஐ.டி. பார்க் கட்டிடத்திற்குச் சென்றான். அங்கேதான் சுஜாதாவின் கையெழுத்துப் பிரதியும், இந்த ஊழலைப் பற்றிய அத்தனை டிஜிட்டல் ஆதாரங்களும் ஒரு பென் டிரைவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.”

​கணேஷ் யோசித்தான். சுஜாதாவின் நாவல்களில் வரும் கணேஷ் வசந்த் துப்பறியும் பாணியில் ஒவ்வொன்றும் எப்படித் துல்லியமாகப் பொருந்துகிறதோ, அதேபோல தன் குடும்பத்தில் நடந்த சோகமும் ஒரு தர்க்கத்திற்குள் அடங்குவதை அவன் உணர்ந்தான்.

​”சரி ரங்கநாதன் ஐயா, அந்தப் பென் டிரைவை நான் எப்படி எடுப்பது?”

​”அது அந்தக் கட்டிடத்தின் மின்சாரப் பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அதை யார் எடுக்க முயற்சித்தாலும் அவர்களைக் கண்காணிக்க அந்த மோசடிக் கும்பல் ஒரு ஆளை நியமித்துள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள் கணேஷ்.”

​மாலை மயங்கி, சென்னை நகரின் விளக்குகள் ஒவ்வொன்றாக ஒளிரத் தொடங்கிய நேரம். அடையாறு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள அந்தப் கைவிடப்பட்ட கட்டிடத்தின் முன்பு கணேஷின் கார் வந்து நின்றது. மாநகராட்சியின் சுவரொட்டிகள் அந்த இடத்தைப் பல மாதங்களாகப் பிரித்துவிட்டதாகச் சொன்னாலும் உள்ளே மனித நடமாட்டம் இல்லாதது போலிருந்தது.

​கணேஷ் காரிலிருந்து இறங்கி கையில் ஒரு சிறிய டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். கட்டடத்தின் சுவர்கள் முழுவதும் பாசிகள் படிந்து, ஒரு விதமான பூஞ்சை வாடை அடித்தது. மூன்றாவது தளத்திற்குச் செல்லும் சிமெண்ட் படிக்கட்டுகளில் அவனது காலடிச் சத்தம் மட்டும் எதிரொலித்தது.

​டைரியில் குறிப்பிட்டிருந்த அடையாளங்களின்படி, மூன்றாவது தளத்தின் மூலையில் இருந்த துருப்பிடித்த மின்சாரப் பெட்டியை அவன் அணுகினான். அதன் கதவை மெதுவாகத் திறந்தான். அதற்குள் ஒரு சிறிய கருப்பு நிற பென் டிரைவ் இருந்தது. அதன் மேல் ‘நரேஷ் – 2024’ என்று கைப்பட எழுதப்பட்டிருந்தது.

​கணேஷ் தன் மூச்சை அடக்கிவிட்டு அந்தப் பென் டிரைவை எடுக்கக் கை நீட்டினான்.

​”கணேஷ்… நீ இதைத் தேடி வருவாய் என்று எனக்கு முன்பே தெரியும்.”

​பின்னால் இருந்து ஒரு குளிர்ச்சியான குரல் கேட்டது. கணேஷ் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே இருளுக்குள் நின்று கொண்டிருந்தது வேறு யாருமல்ல அவன் அலுவலகத்தில் தினமும் அவனுடன் டீ குடித்துவிட்டு கணக்குகளைச் சரிபார்க்கும் அவனது உதவியாளர் வசந்த்!

​கணேஷ் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

“வசந்த்? நீ… நீ இங்கே என்ன பண்ற? உனக்கும் இந்த விபத்திற்கும் என்ன சம்பந்தம்?”

​வசந்த் மெலிதாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு கொடூரமான நிம்மதி இருந்தது.

​”கணேஷ்… நீயும் உன் அண்ணனும் ரொம்ப நல்லவர்கள். சுஜாதா நாவல்களைப் படித்துவிட்டுக் கற்பனைக் உலகத்தில் வாழ்ந்தீர்கள். நிஜ உலகத்தில் லாஜிக் என்பது பணத்தில்தான் இருக்கிறது. அந்த எண்ணெய்க் கம்பெனி முறைகேட்டில் ஈடுபட்ட பிரதான டைரக்டர்களுக்குப் பெட்டிப் பெட்டியாகப் பணத்தைக் கொண்டு சேர்த்தது நான்தான். உன் அண்ணன் நரேஷ் இதைக் கண்டுபிடித்தபோது அவன் பின்னாடி இருந்தவன் நான்தான். நாங்கள் அவனது காரின் பிரேக் ஒயரைத் துண்டித்துவிட்டு, அதை ஒரு சாதாரண விபத்து என்று நம்ப வைத்தோம்.”

​கணேஷின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவனது உடம்பில் உள்ள அத்தனை நரம்புகளும் துடித்தன. “நீதான்… நீதான் என் அண்ணனைக் கொன்ற கொலையாளி!”

​”ஆமாம் கணேஷ்! இன்றைக்கு உன்னையும் அதே மாதிரி விபத்தில்தான் முடிக்கத் திட்டமிட்டிருந்தேன்.  நீயே வலிய வந்து இந்த இடத்தைத் தேடி வந்துவிட்டாய். வேலையை எளிதாக்கிவிட்டாய்” என்று தன் கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான் வசந்த்.

​கணேஷ் சுவரோரமாகப் பின்வாங்கிச் சென்றான். அவனது மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. சுஜாதா நாவல்களில் கணேஷ் எப்போதுமே சிக்கலான சூழலில் தனது புத்திசாலித்தனத்தால் தப்பிப்பான். இப்போது அவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. இருப்பது அந்தப் பென் டிரைவும், அவனது கூர்மையான யோசனையும் மட்டுமே.

​”வசந்த், நீ நினைப்பது போல இந்தத் தகவல்களை உன்னால் அழிக்க முடியாது. இந்த பென் டிரைவில் உள்ள காப்பியைக் கிளவுட்டில்  செட் செய்துவிட்டேன். நான் ஒரு மணி நேரத்திற்குள் வெளியே வரவில்லை என்றால், இந்தத் தகவல்கள் நேரடியாக அமலாக்கத்துறைக்குச் சென்றுவிடும்” என்று ஒரு பொய் புனைந்து சொன்னான் கணேஷ்.

​வசந்த் ஒரு நிணமிடம் தயங்கினான். அந்தத் தயக்கமே கணேஷுக்குப் போதுமானதாக இருந்தது.

​வசந்த் துப்பாக்கியை உயர்த்திய கணத்தில், கணேஷ் தன் கையில் இருந்த டார்ச் லைட்டை அவனது கண்களை நோக்கிப் பலமாக அடித்து வீசினான். திடீர் வெளிச்சத்தால் வசந்தின் கண்கள் கூசின. அவன் சுட்ட குண்டு சுவரில் பட்டுத் தெறித்தது.

​அந்த வினாடியை நழுவவிடாமல் கணேஷ் வசந்தின் மீது பாய்ந்தான் இருவரும் கீழே கிடந்த  காகிதக் குவியல்களின் மீதும், உடைந்த செங்கற்களின் மீதும் உருண்டனர். பலத்த கைக்கலப்பு நடந்தது. வசந்தின் கையில் இருந்த துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. கணேஷ் தன் முழு பலத்தையும் திரட்டி வசந்தின் முகத்தில் குத்தினான். வசந்த் நிலை தடுமாறி கீழே கிடந்த இரும்பு கம்பியின் மீது சாய்ந்து மயக்கமடைந்தான்.

​கணேஷ் உடனடியாகத் தன் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து காவல்துறையின் அவசர எண்ணிற்கு 100 அழைத்து நடந்த அத்தனையையும் விவரித்தான்.

​அரை மணி நேரத்திற்குள் அடையாறு ஆற்றங்கரையைச் சுற்றி போலீஸ் வண்டிகளின் நீல நிற ஒளிரும் விளக்குகள் அந்த இடத்தையே சலசலக்கச் செய்தன. இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு வசந்தையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்து அழைத்துச் சென்றது. எண்ணெய்க் கம்பெனியின் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளுக்கான அத்தனை ஆவணங்களும் இப்போது அதிகாரப்பூர்வமாகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

​கணேஷ் தனது காரில் தனியாக அமர்ந்திருந்தான். நள்ளிரவு அமைதியில் சென்னை நகரின் தெருவிளக்குகள் அவனுக்கு ஆறுதல் சொல்வது போல ஒளிர்ந்தன. அவன் தன் லேப்டாப்பில் அந்தப் பென் டிரைவை இணைத்தான்.

​அதில் பதிவாகியிருந்த கடைசி ஆடியோ ஃபைலை இயக்கினான். அதில் சுஜாதாவின் மென்மையான, உறுதியான குரல் ஒலித்தது

​”வணக்கம். நீங்கள் இந்த ஒலியைக் கேட்கிறீர்கள் என்றால், அறிவும் உண்மையும் எப்போதும் தோற்றுப்போகாது என்று அர்த்தம். நிழல் எவ்வளவுதான் நீண்டு வளர்ந்தாலும், வெளிச்சம் வரும்போது அது மறைந்துவிடும். உண்மையை எப்போதும் தற்காலிகமாக வேண்டுமானால் மறைக்கலாம்.  நிரந்தரமாக மூடிவிட முடியாது. நன்றி.”

​கணேஷின் கண்களில் வழிகின்ற கண்ணீர் சோகத்தினாலோ அல்லது பயத்தினாலோ அல்ல. தன் அண்ணனின் ஆன்மா இப்போது முழுமையான அமைதியை அடைந்துவிட்டது என்ற பெருமிதத்தினால்.

​அவன் காரின் ஸ்டீயரிங்கை மெதுவாகத் தட்டிக் கொண்டு, இரவு வானத்தைப் பார்த்தான். சென்னை நகரத்தின் உயரமான கட்டிடங்களுக்கு அப்பால் விடிவெள்ளி தோன்றத் தொடங்கியிருந்தது. நிழல்கள் முற்றிலுமாக விலகி, அந்தப் பிரதேசம் முழுக்க வெளிச்சம் பொங்கி வழிந்தது.

அடுத்த நாள் ​சென்னை உயர்நீதிமன்றத்தின் பெரிய வளாகத்தில் வெயில் சற்று உக்கிரமாகக் குறைந்து, மாலை நேரக் குளிர் காற்று வீசத் தொடங்கியிருந்தது. நீதிமன்றத்தின் முப்பது மற்றும் முப்பத்து ஒன்றாம் இலக்க அறைகளுக்கு வெளியே வழக்கமான கூட்ட நெரிசல். வழக்கறிஞர்களின் கறுப்பு கோட்டுகள், கைகளில் தடிமனான காகிதக் கட்டுகளுடன் அலையும் ஜூனியர்கள், தேநீர்க் கடைகளில் பரபரப்பாகப் பேசிக்கொள்ளும் மனுதாரர்கள் என்று அந்த இடமே ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

​கணேஷ் நீதிமன்றத்தின் பெரிய மரக்கதவை ஒட்டியிருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனது கையில் நரேஷின் டைரியும், அந்தச் சிறிய பென் டிரைவ் பத்திரப்படுத்தப்பட்ட உறையும் இருந்தன. கடந்த சில மாதங்களாக அவனது வாழ்க்கை ஒரு சுழலில் மாட்டிய கப்பல் போல அலைக்கழிக்கப்பட்டிருந்தது. ஆடிட்டர் பணியில் இருந்து அவன் தற்காலிகமாக விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தாலும், மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் எப்போதுமே ஓய்ந்தபாடில்லை.

​”கணேஷ்… உள்ளே கூப்பிடுறாங்க.”

​வழக்கறிஞர் சுந்தரம் மெதுவாக அவன் தோளைத் தட்டினார். சுந்தரம், சுஜாதாவின் நாவல்களில் வரும் பாத்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் ஒரு மூத்த வழக்கறிஞர். எப்போதும் முகத்தில் ஒரு புன்னகையும், கண்களில் கூர்மையான சட்டப் பார்வையும் கொண்டவர்.

​கணேஷ் நிமிர்ந்து நின்று, தன் சட்டையைச் சரிபடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

​நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த மாண்புமிகு நீதிபதி பாஸ்கரன், பைல்களை மேய்ந்து கொண்டிருந்தார். எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் ஏதோ சதித் திட்டங்களுடன் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். வசந்த் மற்றும் அந்தப் பெட்ரோலியக் கார்ப்பரேட் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக இயக்குநர்கள் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களின் முகத்தில் இருந்த திமிர் இப்போது சற்றே குறைந்து, சட்டத்தின் பிடியில் அகப்பட்ட விலங்கின் பயம் குடி கொண்டிருந்தது.

​”கணேஷ் குமார்… வாருங்கள்” என்றார் நீதிபதி பாஸ்கரன்.

“இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட டிஜிட்டல் சான்றுகளையும், அந்தப் பென் டிரைவில் உள்ள ஆடியோ பதிவுகளையும் தடயவியல் துறை ஆய்வு செய்துவிட்டது. சுஜாதா அறக்கட்டடையின் பெயரில் பதிவாகியிருந்த அந்தப்  ஆவணங்களும், நரேஷ் சேகரித்த குறிப்புகளும் ஒன்றுக்கொன்று கச்சிதமாகப் பொருந்துகின்றன.”

​அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.

“மை லார்ட், இந்த வழக்கு சாதாரணமான ஒரு நிதி மோசடி வழக்கு அல்ல. இது ஒரு நிறுவனத்தின் மறைக்கப்பட்ட லாபத்திற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை மற்றும் ஆவணத் திருட்டு. கணேஷ் மற்றும் அவரது அண்ணன் நரேஷ் ஆகியோர் காட்டிய துணிச்சல்தான் இந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.”

​எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட முயன்றார்.

 “மை லார்ட், இந்த ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பென் டிரைவில் உள்ள குரல் பதிவை மட்டும் வைத்துக்கொண்டு எங்களை முழுமையாகக் குற்றவாளி என நம்ப முடியாது…”

​நீதிபதி அவரது வாதத்தைக் கையமர்த்தித் தடுத்தார்.

“மனுதாரர் தரப்பு சமர்ப்பித்த ஆதாரங்கள் குரல் பதிவுகள் அல்ல. பெட்ரோலியக் கம்பெனியின் இரட்டைப் பேலன்ஸ் ஷீட்கள், கணேஷ் தனது அலுவலகக் கணினியிலிருந்து மீட்டெடுத்த ரகசிய மின்னஞ்சல்கள் மற்றும் வசந்தின் கையெழுத்துடன் கூடிய பணப்பரிமாற்ற ரசீதுகள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையை வழங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டாது.”

​வசந்த் தரையைப் பார்த்தபடியே நின்றிருந்தான். அவன் கணேஷை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையில் கோபமோ ஆத்திரமோ இல்லை.  ‘நீ லாஜிக்கைத் தேடிவிட்டாய், நான் என் பேராசையால் தோற்றுவிட்டேன்’ என்ற குற்றவுணர்ச்சி மட்டுமே இருந்தது.

​தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் மாலை. கணேஷ் தன் காரை எடுத்துக்கொண்டு நேரடியாக அடையாறு ஆற்றங்கரையின் அந்தப் கட்டிடத்திற்குச் சென்றான். அன்று அங்கே போலீஸ் வண்டிகளின் கோலாலம்பலம் இல்லை. அமைதியான ஆற்றுக் காற்று மட்டும் வீசிக் கொண்டிருந்தது.

​சூரியன் மறைந்து மேற்கு திவானம் செந்நிறத்தில் ஜொலித்தது. மாநகராட்சியின் புதிய திட்டத்தின் கீழ் அந்தப் கட்டிடம் இடிக்கப்படுவதற்காகச் சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவிருந்தன.

​கணேஷ் காரிலிருந்து இறங்கி ஆற்றங்கரையை நோக்கி நடந்தான். அவன் கையில் சுஜாதாவின் கடைசி நாவலான ‘நிழலின் எல்லை’ என்ற பெயரிடப்பட்ட அந்தப் பிரதியைப் பிடித்துக் கொண்டிருந்தான். ரங்கநாதன் ஐயா அவனிடம் அந்தப் பிரதியைக் கொடுத்து,

 “இதை உன்னிடம்தான் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று நரேஷ் என்னிடம் சொன்னான்” என்று சொல்லியிருந்தார்.

​அவன் ஆற்றின் கரையோரத்தில் இருந்த ஒரு கல் மீது அமர்ந்தான். பக்கத்தில் மரங்களின் நிழல் ஆற்று நீரின் மீது நீண்டுகொண்டிருந்தது.

​”நரேஷ்…” கணேஷ் மெதுவாக முணுமுணுத்தான்.

 “நீ தேடிய உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். உன்னை என்னால் திரும்பக் கொண்டுவர முடியாது அல்லவா?”

​அவனது கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அது பலவீனத்தின் கண்ணீர் அல்ல; தன் அண்ணனுக்குத் தான் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றிவிட்டதற்கான நிம்மதி.

​அப்போது அவனது பாக்கெட்டிலிருந்த மொபைல் போன் ஒலித்தது. ஸ்கிரீனில் ‘ரங்கநாதன் ஐயா’ என்று காட்டியது.

​கணேஷ் போனை ஆன் செய்தான். “சொல்லுங்க ஐயா…”

​”கணேஷ்… நீ இப்போது எங்கே இருக்கிறாய்?” என்றார் ரங்கநாதன் புதிய குரலில் உற்சாகத்துடன்.

​”நான் அடையாற்றுப் பாலத்தில்தான் இருக்கிறேன் ஐயா. நரேஷ் ஞாபகமாக வந்தேன்.”

​”நன்றாகச் செய்தாய் கணேஷ். சுஜாதா சார் தன் வாழ்நாளில் அடிக்கடி சொல்வது உண்டு—வாழ்க்கை  ஒரு மேஜிக் ஷோ போன்றது. அங்கே மேடைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.  நிழலுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதை வெளிச்சம் கண்டுபிடிக்கிறபோதுதான் அந்த மேஜிக் உண்மையாகிறது என்று. நீயும் உன் அண்ணனும் அந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்.”

​”ஐயா, இனி நான் என்ன செய்ய வேண்டும்?”

​”உன் ஆடிட்டர் வேலையைத் தொடரு, கணேஷ். எப்போதுமே உன் மூளையில் அந்தத் சிந்தனை சார் பார்வையை இழந்துவிடாதே. உலகம் எவ்வளவுதான் ஏமாற்ற முயன்றாலும், கணக்குகளும் மனிதர்களும் எப்போதாவது ஒரு இடத்தில் மாட்டிக்கொள்வார்கள். அதுதான் நியதி.”

​”கட்டாயம் ஐயா. நான் என் அண்ணனின் நினைவாக இந்தத் துறையிலேயோ அல்லது அதற்கு வெளியில் இலக்கியத்திலேயோ ஏதாவது செய்யப் போகிறேன்.”

​போனைத் துண்டித்துவிட்டு, கணேஷ் தன் லேப்டாப்பைத் திறந்தான். அந்தப் பென் டிரைவில் இருந்த சுஜாதாவின் குரல் மீண்டும் ஒருமுறை மெதுவாக ஒலிக்கத் தொடங்கியது:

​”நிழல் வெளிச்சம் இருக்கும் வரைதான்… வெளிச்சம் வந்துவிட்டால் நிழல் மறைந்துவிடும்…”

​கணேஷ் புன்னகைத்தான். சென்னை நகரத்தின் தொலைதூரத்தில் ஒளிரும் அடுக்குமாடிக் கட்டிடங்களின் விளக்குகள் இரவின் இருளைத் துரத்திக் கொண்டிருந்தன. அங்கே நிழல்கள் முழுமையாக மறைந்து தூய வெளிச்சம் அந்தப் பெருநகரம் முழுக்கப் பரவியிருந்தது.

​அவன் தன் கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பினான். ஒவ்வொரு வரியும் அவனுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது. கணேஷின் வாழ்க்கை இப்போது ஒரு தெளிவான புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தது.

0

ஏ.நஸ்புள்ளாஹ் 1974

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பின்நவீனத்துவக் எழுத்தாளர்.

இலங்கை ​திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவைப் பிறப்பிடமாக கொண்டவர். இவர்,நாவல், கவிதை,சிறுகதை, திறனாய்வு மற்றும் நாவல்த்துறையில் பின்நவீனத்துவச் சிந்தனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்​. ​கிண்ணியா மண்ணிற்கு முதல்முறையாக ‘இலங்கை அரச சாகித்திய அகாதமி’ விருதைப் பெற்றுத்தந்த ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’.[2022] எனும் கவிதை நூல் இவரது மிகமுக்கிய படைப்பாகும்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *