பாலாஜி ராஜு

‘காலைலயே வெய்ய இந்தப் போடு போடுது!’

கிழவர் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு, வெளுத்த செம்மண் நிற ஓட்டுக் கூரை வீட்டின் சிமெண்ட் தள வாசலில் குத்த வைத்து அமர்ந்தார். பங்குனி மாத முன்காலைச் சூரியன் வீட்டின் பின்புறத்தை ஒட்டி வளர்ந்திருந்த தென்னை மரங்களின் கிளைகளுக்கு மேல் அவசரமாக ஏறிக்கொண்டிருந்தது. ஆண்டுகளாக மேலாடை கண்டிராத எலும்புகள் துறுத்தும் கிழவரின் கரிய முதுகில், வியர்வைத் துளிகள் திரண்டு தன்போக்கில் வழியத் தொடங்கின.

கிழவர் அமர்ந்திருந்த தோற்றம், குளத்தின் கரையில் தலையை மேல்நீட்டிச் சுவாசிக்கும் ஆமையைப் போல இருந்தது. அவருடைய நிழல், தலைக்கு கீழே மொத்த உடலையும் ஒரே உறுப்பாய் உருட்டிக் காட்டியது. நான்கு அடி உயரமுள்ள சீற்றை முள்மரக் கைத்தடியின் நீவினாற்போன்ற அடிபாகத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மெழுகாய்ப் பளபளத்த தடியில், ஆங்காங்கே கணுக்களும் மழுங்கித் தெரிந்தன.

கூன் விழத் தொடங்கியபோதே வீரராக்கியம் சங்கிலி ஆசாரியிடம், “நல்லாச் சீவிக் குடுறா!” என்று சொல்லிச் செய்துகொண்ட உறுதியான கைத்தடி அது. கிழவரின் முன் செங்குத்தாக நீண்டிருந்த கைத்தடியின் மேல்பாகம், வெயிலின் ஒளி பட்டு மின்னியது. மேல்பாகத்தில் தொடங்கிய வழுவழுப்பு, நன்றாகக் கீழிறங்கி தடியின் அடிபாகம் வரை வந்துவிட்டது.

வீட்டு வாசலின் எதிரில், ஊரின் மந்தையைச் சுற்றி எருக்கஞ் செடிகள் மொட்டுகளுடன் அசைவில்லாமல் நின்றிருந்தன. மந்தையின் ஓரத்தில் இருந்த இலைகள் பழுத்த ஒற்றை வேப்ப மரத்தில் காகங்கள் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தன. அவ்வப்போது கிளையை விட்டுப் எம்பிப் பறந்த காகங்களின் அசைவினால், வேப்ப மரத்தின் சிறிய மஞ்சள் நிற இலைகள் உதிர்ந்து காற்றைத் துளாவின. சுற்றி இருந்த வேலிப் புதரில் சில வெள்ளாடுகள் சுதந்திரம் கொண்டாடின. தொலைவில் மயில் ஒன்று அகவியதும் கிழவருக்கு கேட்டது.

புலியூர் பஞ்சாயத்தால் பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட புழுதி அலையும் தார் சாலையில் இரண்டு சக்கர வாகனங்களையும், அசமந்தமாய் வயலுக்கு நகரும் கால்நடைகளையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தார் கிழவர்.

எங்கிருந்தோ ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி…’ பாடலின் வரிகள் ஒலிபெருக்கியிலிருந்து வெளியேறி காற்றில் கரைந்தது. எப்போது இழவு வீட்டில் பாடல் கேட்டாலும், “எவனெவனோ எள வயசுக்காரனெல்லாம் போரையான், உன்னையப் பாரு, குத்துக்கல்லாட்டங் கோந்திருக்கர!” என்ற தொனியில் கிழவருடைய இருப்பைச் சீண்டும் சிலருக்கு, இன்றும் அதற்கான முகாந்திரம் கிடைத்துவிட்டது.

காற்றில் கசிந்த பாடல் வரிகளில் மனம் ஒன்றாமல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆட்டுக்கறிக் குழம்புக்கான பிரயத்தனங்களின் மணம் கிழவருடைய நாசியைத் தீண்டியது. காலையில் கிழவரை உறக்கத்திலிருந்து எழுப்ப ஊரின் சேவல்கள் தவறலாம், ஆனால் அவருடைய பசி என்றுமே  தவறியதில்லை.

முந்தைய நாள் இரவே மிதமிருக்கும் சோற்றில் நீர் மோர் விட்டு மையக் கரைத்து, பித்தளை கும்பாவை மூடி வைத்துவிடுவது அவருடைய பழக்கம். வாயைக் கொப்பளித்து துப்பியவுடன் அனிச்சையாக கைகள் நடுங்க கும்பாவின் ஆகாரத்தை அன்னாந்து குடித்துவிடுவார்; கிழவருக்கு மற்ற சிந்தனையெல்லாம் பிறகுதான். அன்று காலை குடித்த நீராகாரம் வயிற்றில் போன சுவடு தெரியவில்லை.

வடித்த ரேசன் அரிசிச் சோற்றுக்கு, அரைகுறையாக தோல் நீக்கிய சின்ன வெங்காயமும், மண் பிசுக்கோடு இருக்கும் அடிபாகத்தைக் கழுவிய குப்பை கீரைக் கடைசலையும், பால் சொசைட்டியில் ‘சும்மா’ கிடைக்கும் அரைத்த பாலில் புரை வைத்த நீர்த்த தயிரையும் சாப்பிட்டுச் சலித்தவருக்கு, ஆட்டுக்கறிக் குழம்பு தின்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றிவிட்டது. அப்படித் தோன்றியதற்கு கிழவரின் மகன் பெரியசாமியின் நினைப்பும் ஒரு காரணம்தான்!

வீட்டில் எப்போதுமே மாடுகளுடன் வெள்ளாடுகளையும் வளர்த்தவர். ஊரில் நோம்பி என்றால் விடிகாலை இரண்டு மணிக்கே எழுந்து ஒற்றை ஆளாக இளம் கிடாயை அறுத்து, பாத்திரத்தில் இரத்தம் பிடித்து, தொங்கவிட்டு தோல் உரித்து, பாகம் பாகமாக வெட்டி, வாழை இலைகளில் ஈரல் துண்டு தவறாமல் கூறு போட்டு, முன்கூட்டியே சொல்லி வைத்தவர்களுக்கு சூரிய உதயத்துக்கு முன்பே பகிர்ந்து கொடுத்தவர். ஆட்டுக் குடலை சாணம் போக உருவி, பலமுறை தண்ணீர் பீய்ச்சிக் கழுவி, குழம்புக்கும், வறுவலுக்கும் எடுத்து வைத்தவர். இப்போது ஆட்டுக் கறி வாசம் மட்டும் பிடித்துக்கொண்டு ஏங்கிக் கிடக்கும் நிலை.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஊருக்குள் பெரும்பாலானவர்கள் அசைவம் சமைப்பார்கள். புலியூர், வீரராக்கியம், வெள்ளாளபட்டி என இறைச்சிக் கடைகளில் காலையில் இருந்தே மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து காத்திருக்கும் காகங்களுடன், மக்கள் கூட்டமும் அப்பிக் கிடக்கும். கிழவருக்கு அவ்வப்போது மீந்த இட்லியோ, சாம்பாரோ, பொறியலோ கொடுக்கும் பொம்பிளைகள் கறிக்குழம்பு வைப்பதில் முசுவாக இருப்பார்கள். அவரைப் பற்றிய நினைப்பு யாருக்கு இருக்கப்போகிறது!

வடக்காலத் தோட்டத்துக்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு நடந்த வேலாயுதம், “என்னா மவராசரே, நகர்வலம் பாக்கறீங்களோ! ஒம்பாடு பரவால்லையப்பா, சொகஜீவன். என்னையப் பாரு, அன்னாடம் இதுகளோட ஓரியாண்டு கெடக்கேன்…,” என்று வழக்கமான பொருமலைப் பாடிச் சென்றார். 

கிழவர் கடைசியாக கறி விருந்து சாப்பிட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. சனப்பிரட்டி செல்லாண்டி அம்மன் கோவிலில் நடந்த ஊர்த் தலைவர் மகாலிங்கம் குடும்பத்தின் கிடாய் வெட்டு விருந்துக்கு, ஊரில் இருந்து கிளம்பிய டெம்போ வேனில் எப்படியோ மல்லுக்கட்டி ஏறி அமர்ந்துகொண்டார். இரண்டுபேராக பிடித்து நகர்த்திக்கொண்டே, மூங்கில் கூடைகளில் இருந்து பரிமாறப்பட்ட வெண்மையான பொன்னி அரிசிச் சோற்றின் கிறங்கடித்த வாசனை இன்னமும் கிழவருக்கு மறக்கவில்லை.

சோற்றின் மீது சூடாக ஊற்றப்பட்ட ஆட்டுக்கறிக் குழம்பிலிருந்து எழுந்த ஆவி, கிழவரின் முகத்தை வருடியது. சுடச் சுட வாழை இலையில் வைக்கப்பட்ட கொழுப்பு பிசுக்கிய கறித்துண்டங்களை சூடு கருதாமல் எடுத்து, விரல்களால் நசுக்கி எலும்பு நீக்கி, எஞ்சியிருந்த பற்களில் சதைத்துத் தின்றார்.

கிழவர் கும்பாவில் சாப்பிட்டே பழகியவர். கும்பா என்றால் சோறு, குழம்பு, காய்கறி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, இரண்டு பாதங்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு, பருக்கை சிந்தாமல் சௌகரியமாகச் சாப்பிடலாம். வாழை இலை, தட்டு இவையெல்லாம் அவரைச் சோதிப்பவை. இலையில் வழியும் குழம்புக்கு பாத்தி காட்டுவது பசியை இடைமறிக்கும் தேவையற்ற கவனச் சிதறல். தட்டு என்றால் எப்படியும் சோறு சிதறிவிடுகிறது.

கிழவர் வீட்டில் சாப்பிடும் பித்தளை கும்பா, அறுபது வருடங்களுக்கு முன் அவர் காளியம்மாளை கட்டியபோது வந்த சீதனம். இன்று அவருடன் எஞ்சியிருப்பதும் அந்த ஒரே சாதனம்தான்.

கிடாய் விருந்தில் அவருடன் அருகில் அமர்ந்து சாப்பிட்ட விஜயா, “மாமா, நீ சாப்பிடறதுக்குள்ள எம் பேத்தி வயசுக்கு வந்திருமாட்ருக்குது. வெரசாச் சாப்புடு,” என்று அவசரம் காட்டினாள்.

“வயசுக்கு வந்தா எனக்கே கட்டிவெச்சிரு. சோத்துக்கு அல்லாடறனல்ல!” என்றார்.

“ஒனக்கு ஒடம்புல நெய்யி வத்துனாலும் குசும்பு போவறதில்ல!” என விஜயா செல்லமாகக் கடிந்துகொண்டாள்.

வீட்டை ஒட்டி மாட்டுக் கொட்டகையாகக் கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட சிறு பாகத்தை, ஊருக்குள் உள்ள கொசுவலை கம்பெனிக்குப் போகும் ஹிந்திக்காரனின் குடும்பத்துக்கு, மாதம் ஆயிரம் ருபாய் வாடகை கணக்கிற்கு  குடி வைத்திருந்தார் கிழவர். அன்று ஞாயிறு என்பதால் கம்பெனி விடுமுறை; ஹிந்திக்காரன் வீட்டிலிருந்தான். அவனுடைய வீட்டுக்காரி கடுகு எண்ணையில் எதையோ வதக்கும் வாசனை எழுந்து வந்தது.

அவர்களை வாடகைக்கு வைத்த தொடக்க நாட்களில் கடுகெண்ணெய் வாசம் கிழவருக்கு விசித்திரமாக இருந்தது; சற்று குமட்டல் எடுப்பது போலவும், அந்த வாசனை பிடிக்கவும் இல்லை, பிடிக்காமலும் இல்லை என்பதைப் போலவும் இருந்தது. கைத்தடி, சமையல், பசி, நீர்த்த தயிர், தனிமை இவற்றுடன் இந்த வாசனைக்கும் கிழவர் பழகிக்கொண்டார்.

தெளிந்த அடர் கோதுமை நிற முகமும், தடித்த ஐந்தடி தேகமும், நெற்றியில் செஞ்சாந்துப் பொட்டுமாக, எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் சிறுமியைப் போன்ற உடலசைவுகள் ஹிந்திக்காரிக்கு. அதிகமில்லை, இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். மூக்கின் இடது பக்கம் குத்திய வளையத்துடன், எப்போதும் நைட்டித் துணியின்மேல் மார்பை மறைக்க துண்டைப் போட்டு மூடியிருப்பவள், “என்னா அய்யா, சாப்பட்டீங்களா?” என்று கொஞ்சலாகத் தமிழ் பேசுவதும் உண்டு.

ஹிந்திக்காரியின் இரண்டு குழந்தைகளும் வீட்டு வாசலை ஒற்றிய முற்றத்தில் எப்போதும் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும். “ங்கொப்பன் வேலைக்குப் போயிட்டானா?” என்று கிழவர் அதுகளிடம் அவ்வபோது பேசிக்கொண்டிருப்பார்.

ஹிந்திக்காரன் ஞாயிற்றுக் கிழமை மதிய வாக்கில், புலியூர் கடைவீதியில் நடமாட்டம் குறையும் போது, சற்று வெயிலில் வாடி செதில் குழைந்த ஐஸ் மீனை தனக்குத் தெரிந்த தமிழில் பேரம்பேசி, சல்லிசான விலைக்கு வாங்கி வந்துவிடுவான். கவிச்சி போகாத ஐஸ் மீனை எண்ணையில் பிரட்டி, சுடு சோறு பொங்கி, குடும்பமாக உட்கார்ந்து அவர்கள் சாப்பிடுவதை கிழவர் கண்டிருக்கிறார்.

வருடம் ஒருமுறை துணிப்பைகளைத் தலையில் சுமந்து ஊருக்குச் செல்லும் ஹிந்திரக்காரக் குடும்பத்திடம், “ரெண்டு நாள் ரயில்ல போவோனுமா? அதுக்குத்தான் ரவையெல்லாம் ரொட்டி தட்டிக்கிட்டிருந்தீங்களா? ஊருக்குப் போவறதுக்குள்ள வாடி வதங்கியில்ல போயிரும். சொந்த பந்தத்தப் பாக்குறத்துக்கு என்னா பாடு பட்டுப் போவுதுக, பாவம்!” என்று ஆச்சரியமும், கரிசனமுமாக விசாரிப்பதும் உண்டு. தேதி ஒன்று ஆனதும் வீட்டு வாடகையை கேட்காமலேயே கொடுத்துவிடுகிறார்கள். கிழவரும் ஆண்டுகளாக வாடகையைக் கூட்டாமல்தான் வைத்திருக்கிறார்.

கிழவருக்கு பசியுடன், ஒரு வாரமாகவே மகன் பெரியசாமியைக் காணவில்லையே என்ற வெசனமும் சேர்ந்துகொண்டது. மகன் குறித்து அவரால் ஊருக்குள் பெரும்பாலும் யாரிடமும் கேட்கவும் முடியாது!

அன்று காலை ஹிந்திக்காரியின் குழந்தைகளில் இளையது வீட்டு முற்றத்தில் கறிவேப்பிலை மரத்தின் கீழ் வெளிக்கிருந்துவிட்டது. கிழவர் இருந்த மனநிலையோ என்னவோ, “பொழைக்க வந்த கண்டாரோலிகளுக்கு திமிரப் பாரு!” என்று தொடங்கி வாயில் வந்த கெட்டவார்த்தைகளையெல்லாம் உதிர்த்துத் திட்டிவிட்டார். “தெரியாமப் பண்ணிருச்சய்யா,” என்று பதறிய ஹிந்திக்காரி, பாசை புரியாவிட்டாலும் வசையின் வீச்சு பொறுக்காமல் தேம்பி அழுதேவிட்டாள்.

மகன் பெரியசாமி கரூரில் சாயப்பட்டறை தொடங்கி குறுகிய காலத்திலேயே வளர்ந்து ‘பசை’ வைத்த நாட்களில், புலியூரில் வாங்கிய ஆட்டுக்கறியுடன் வருவான். காளியம்மாள் இறந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது. தனியாக இருக்கப் பழகியவர் நன்றாகச் சமைக்கவும் கற்றுக்கொண்டார்; கிழவருக்கு வேறு வழியும் இல்லை. தகப்பனும், மகனும் அதிகம் பேசிக்கொள்வதில்லை. பெரியசாமி பட்டறை தொடங்க வேண்டி நிலத்தை விற்கக் கேட்டபோதும் மறுபேச்சு ஏதுமில்லாமல் சம்மதித்தார்.

பெரியசாமிக்கு கிழவர் வைக்கும் ஆட்டுக்கறிக் குழம்பின்மேல் ஒரு மயக்கமே இருந்தது. கிழவர் காலையிலேயே கறிவேகவைத்த தண்ணிக் குழம்பை அவனுக்குப் பரிமாறுவார். மதியச் சாப்பாட்டுக்கு ஆட்டுக்கறியை குழம்பு மசாலாவுடன் சேர்த்து கிழவர் வதக்கும் வாசனையைப் பிடித்துக்கொண்டே, கயிற்றுக் கட்டிலில் அரைக் குப்பி பிராந்தியின் தயவால் சொக்கிப் போய் படுத்துக்கிடப்பான் பெரியசாமி.

சாயப் பட்டறை வேலைக்காக ஓயாமல் அலைபவன் அசந்து கிடக்கிறானே என்ற பரிவு கிழவருக்கு. கிழவரும் அவருடைய பங்கு பிராந்தியை சில்வர் டம்ளரில் ஊற்றி, சன்னமாகத் தண்ணீர் சேர்த்து ஒரு மிடறு அருந்திக்கொள்வார்.

பட்டறை தொடங்கிய சில வருடங்களிலேயே கூட்டாளிகள் இருவர் பெரியசாமியை ஏமாற்றிவிட்டதாகச் சொன்னார்கள். கரூர், ஈரோடு என ஃபைனான்ஸ்களில் மட்டுமில்லை, ஊருக்குள் சிலரிடமும் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய வீட்டுக்காரி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மானவாடியில் இருக்கும் அம்மா வீட்டுக்குப் பிரிந்துசென்றுவிட்டாள்.

சில மாதங்களுக்கு ஒருமுறை இரவுகளில் மட்டும் வருகைதந்து கிழவரைப் பார்த்துவிட்டு, கையில் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு, விடிவதற்கு முன்னே யார் கண்ணிலும் படாமல் கிளம்பிவிடுகிறான் பெரியசாமி.

எங்கோ வடக்குப் பக்கமாகப் போய்விட்டான் என்று சொல்கிறார்கள். அவனை ஒரு பைனான்ஸ் கும்பல் கரூர் சேலம் பைபாஸ் ரோட்டில் வழிமறித்து அடித்துக் காலை ஒடித்துவிட்டார்கள் என்றும் ஒரு பேச்சு உலவியது. கரூரில் கடைகளுக்கு வேலைக்குப்போகும் யாராவது அவ்வப்போது பெரியசாமியைப் பார்த்ததாகச் சொல்வார்கள்.

கிழவர் மகன் நினைப்பில் ஏக்கமாக இருப்பதைக் கண்டு, “அண்ணம் பீசு தூக்கிக்கிட்டு வணடீல போறதப் பாத்தந் தாத்தா!” என்று செய்தி சொல்லும் சில ஜீவன்களும் இருந்தார்கள். அப்படிக் கேள்விப்படும்போதெல்லாம் கிழவருக்கு புதிதாக உயிர் வந்தது போல இருக்கும். ஒரு மாதத்திற்கு மகன் குறித்த கவலை இல்லாமல் தானுண்டு, தன் பசியுண்டு என்று ஊருக்குள் உலவிக்கிடப்பார்.

வாசலில் கிழவருக்கு முன் மகுடபதியின் டி.வி. எஸ். எக்ஸல் வண்டி வந்து நின்றது. “ஒம் மவென் வந்தானா? ஒருநா உன்னெயும் அவனையும் ஒன்னாச் சேத்துச் சுருக்கு வெச்சூட்டுட்டு, மாயனூர் டேசனுக்குப் போய்ச் சரண்டரு ஆவரனா இல்லையான்னு மட்டும் பாரு. அப்பனும் மவனும் என்னா  நெனச்சுக்கிட்டிருக்கறீங்க, என்னயப் பாத்தாக் கேனக் கூதியாட்டந் தெரியுதா?” என்று முழங்கத் தொடங்கினான்.

கிழவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. வட்டிக்கு விட்டு அலைபவன் எப்போதாவது பொண்டாட்டியுடன் சண்டை போட்டால், காலையிலேயே சுருதி ஏத்திக்கொண்டு வந்துவிடுவான். அப்படி வரும்போதெல்லாம் அவனுக்கு பெரியசாமி வாங்கிய ஐந்து லட்சத்தின் நினைப்புத் தட்டிவிடும்.

“அவ்வளவு வெவரமிருக்கரவம் போயி அவனப் பாத்துக் கேக்கவேண்டியதுதான. அவெங் காசுவெச்சிருக்கறப்ப பங்காளி பங்காளின்னு இளிச்சுகிட்டு அலெஞ்சீல்ல, இப்ப வந்து ரவுசு போட்டா? காச ஒரச்சாக்கில போட்டு முடிஞ்சு அட்டாலீல வெச்சிருக்கறெம் போய் எடுத்துக்க போ! நானே வுத்துக்குச் சோறு கெடைக்குமானு கோந்திருக்கரென், வந்திட்டயான் ஆட்டிக்கிட்டு,” என்று கிழவர் மறுபேச்சுப் பேசினார். அவனும் முனகியவாறே வண்டியை உலட்டிக்கொண்டே கிளம்பினான்.

முன் மதிய வெயில் தகிக்கத் தொடங்கியிருந்தது. மந்தையில் மேய்ந்த ஆடுகளும், ஒற்றை வேப்பமரத்தில் உட்காந்திருந்த காகங்களும் வேறிடம் பார்த்துச் சென்றுவிட்டன. கிழவருக்கு வயிற்றுப் பசி உறுத்தியது. கைத்தடியை ஊன்றிகொண்டே கொஞ்சம் ஊருக்குள் உலாவி வரலாம் என்று நகர்ந்தார். கூன் விழுந்த உடலின் எடையை கைத்தடிக்கு தொடுத்து, தரையைப் பார்த்தவாறே நடந்தார்.

கிழவர் அணிந்திருந்த ரப்பர் செருப்பு மேடும் பள்ளமுமாகத் தேய்ந்து விசித்திரமான வடிவத்தில் இருந்தது. அவருடைய பாதங்கள் ஆற்று மணலில் பதிந்திருந்தால் ஏதோ வினோத மிருகம் ஒன்றினுடையதைப் போல தோன்றும். ஆண்டுகளாக தோட்டமும் வீடுமாக அலைந்து ஓய்ந்த பாதங்கள். பாதங்களின் கட்டைவிரல்கள் இரண்டும் அணிந்திருந்த ரப்பர் செருப்பை மீறி பக்கவாட்டில் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ள விழைவதைப் போல விலகியிருந்தன.

எதிர்த் தெருவில் இருந்த செல்வி வீடு வழியாகப் போனார். வானலியின் சூட்டில் ஆட்டுக் கறி சுட்டுப் பொசுங்கும் வாசம் எழுந்தது. வீட்டின் வாசலை பெரிய இரும்புக் கேட் மறித்தது. சமையலறை சன்னலை நோக்கி, “என்னா பேத்தி, இராசேந்திரன் இருக்கறானா?” என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். இராசேந்திரன் உப்பிடமங்கலம் வாரச் சந்தையில் அவ்வப்போது கிழவருக்கு புகையிலை வாங்கித் தருவது உண்டு.

“இல்ல, தோட்டத்துக்குப் போயிருக்கறாங்க. அடுப்புல வேலையா இருக்கறென் அப்புச்சி…” என்று சுதாரித்துக்கொண்டவளின் குரல், சமையலறைச் சன்னல் வழியாக கிழவரை மறைமுகமாக விரட்டியது.

மேற்குத் தெரு வசந்தா “இட்லியும் சாம்பாரும் இருக்குது எடுத்துட்டு போறியா தாத்தா?” என்று கேட்டபோது, அங்கு கறிக் குழம்பு சமைத்து முடித்த முழுமையான வாசனை எழுந்தது. கிழவர் அளிக்கப்படுவதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு பழகி வருடங்களாகிறது. தோல் தடித்த வரட்டு இட்லியும், சற்று சலித்த சாம்பாரும் சாப்பிடுவதில் அவருக்கு புகார் இருந்ததில்லை. இட்லியின் மேல் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, சலித்த சாம்பாரை அடுப்பில் சுடவைத்து சாப்பிடுவார். அன்று ஏனோ பசியை மீறி வைராக்கியம் தொற்றிக்கொண்டது.

“இல்ல வவுறு உப்புசமா இருக்குது, வேண்டாம்.” என்று நிராகரித்துவிட்டு நகர்ந்தார். மகன் பெரியசாமியின் மீதும், எப்போதோ போய்ச் சேர்ந்துவிட்ட காளியம்மாளின் மீதும் அளவு கடந்த கோபம் எழுந்து தன்னிரக்கமாய் மாறியது. அழுகைக்கு கூட உடலில் தெம்பு தேவைப்படுகிறது; உணர்வுகளை மீறிக்கொண்டு எழுந்த பசி கிழவரை விட்டுப் போக மறுத்தது.

ஊரின் மூன்று தெருக்களுக்குள் நடந்து வாசம் பிடித்தவர், தலையாரி வீட்டில் கொடுத்த நீர் மோரை மொடக்கு மொடக்கென்று குடித்து சற்று வயிற்றை நிரப்பிக்கொண்டார். ‘பேசாம சோத்தப் பொங்கி, கொஞ்சம் ஒரப்பா தக்காளி ரசம் கொதிக்க வெச்சுக்கலாமா!’ என்ற யோசனை வந்து பெருமூச்சு விட்டார். நினைவில் ஆழமாகப் பதிந்திருந்த கிடாய்வெட்டு விருந்தின் சுடு சோற்று வாசனை வேறு அனாவசியமாக குறுக்கிட்டு வதைத்தது.

பிள்ளையார் கோயில் வேப்பமரத்து கல்லுக்கட்டில் கொஞ்ச நேரம் உட்காந்திருந்தார். அன்று பேச்சுத் துணைக்கும் யாரும் இல்லை. கோனார் வீட்டு சோளக் காட்டோரமாக ஒதுங்கி, வேஷ்டியைத் தூக்கி ஒன்றுக்கு இருக்கப் போனவருக்கு அந்த கோழிக் குஞ்சு கண்களில் பட்டது.

கோழிக் குஞ்சின் அருகில் இருந்த நாட்டு நாயை கிழவர் முதலில் கவனிக்கவில்லை. ஐந்து ஆறு வாரங்கள் மட்டுமே ஆன குஞ்சு. எங்கிருந்தோ கோழிக் குஞ்சை கவ்விக்கொண்டு வந்து சோளக் காட்டின் ஓரமாகப் போட்டிருந்தது நாய். கோழிக் குஞ்சுக்கு கடிபட்ட இடங்களில் இறகுகள் பிய்ந்து, தோல் தட்டுப்பட்டது. உடல் நடுக்கத்துடன் நகர முடியாமல் ‘கொக் கொக்’ என்று ஹீனமாக சத்தமெழுப்பிக்கொண்டு கிடந்தது.

கிழவருக்கு நிலவரம் புரிய சில நொடிகள் ஆகிவிட்டது. கைத்தடியை ஆட்டி “ச்சூ ச்சு, போ அங்கிட்டு!” என்று நாயை விரட்டிவிட்டு கோழிக் குஞ்சை அருகில் சென்று பார்த்தார். தயக்கமாக விலகிய நாய், சில அடிகள் தள்ளி நின்று ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு ஓட்டமெடுத்தது.

“உசிரு இன்னும் இருக்குதா! எளங்குஞ்சு, அரக்கிலோ இருக்குமா? ஆரூட்டுதுன்னு தெரியலையே,” என்று சொல்லிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்த கிழவர், கோழிக் குஞ்சை எடுத்து வேஷ்டிக்குள் வைத்து அணைத்துக்கொண்டு, ஒரு கையால் கைத்தடியைப் பிடித்தவாறே வீட்டை நோக்கி நடந்தார். கிழவரின் அழுக்கு வேஷ்டிக்குள் அரைக் கண்களை மூடித் திறந்துகொண்டிருந்தது கோழிக் குஞ்சு.

‘பாவம் குஞ்சு, ரொம்ப நேரம் தாங்காது. நல்லா ரெக்கையப் புடிங்கியூட்டுட்டு சுடு தண்ணீல கல்லுப்பப் போட்டு மொக்கி எடுத்து, ஒடம்பு பூராம் மஞ்சளத் தடவுனா நாய்ப் பல்லு பட்ட கிருமியெல்லம் சுத்தமாப் போயிரும். சாறு வெச்சுக் குடிக்கலாம்.’ என்று வீடு வருவதற்குள் கிழவர் ஒரு கணக்கைப் போட்டார். ‘எப்புடியும் சாவப் போர குஞ்சுதான!’ என்று தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக்கொண்டார்.

சூரியன் உச்சி தாண்டிவிட்டது. வீட்டுக்கு வந்த கிழவருக்கு அசந்து போய் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. கோழியை முற்றத்தில் இருந்த வாழை மரத்தோரம் நிழலில் விட்டு, அதன் கால்களை சணல் கயிற்றால் கட்டினார். அப்போது இருந்த நிலையில் கிழவருக்கு கோழியைச் சமைக்க தெம்பு போதாது.

வெயிலுக்கு இதமாக கோழியின் மீது தண்ணிரைத் தெளித்துவிட்டு, திண்ணையில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டார். ஓடுகள் வழியாக இறங்கிய வெக்கை கிழவரையும், அவருடைய கைத்தடியையும் உலைபோலச் சுட்டது.  பசி மயக்கத்தால் சில நிமிடங்கள் கிறங்கியவர், சிறுவயது பெரியசாமியின் குரல் கேட்டு விழித்துக்கொண்டார்.

விழித்துக்கொண்டவர் கோழிக்குஞ்சின் அருகில் உட்காந்திருந்த ஹிந்திக்காரியின் பையன்களைப் பார்த்தார். “போங்கடா அங்கிட்டு,” என்று அவர்களை விரட்டிவிட்டு அருகில் சென்றார். குஞ்சு இன்னும் அரைக்கண்களில் உயிரைத் தாங்கிக்கொண்டு கிடந்தது.

“இரு வாறென்!” என்றாவாறு வீட்டுக்குள் சென்றவர், ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயும், மஞ்சளும் சேர்த்துக் குழைத்து கோழிக்குஞ்சின் இறகு உதிர்ந்த பகுதிகளில் மெல்லத் தேய்த்தார்.

காயங்களில் பட்ட எரிச்சலில் ‘கொக் கொக்’ என்று கொஞ்சம் வேகமாக சத்தம் போட்டது கோழிக் குஞ்சு. ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரைப் பிடித்து அதனருகில் வைத்து அங்கேயே உட்கார்ந்தார். சற்றுத் தயங்கிய கோழிக் குஞ்சு, அலகை விட்டு தண்ணிரை உறிந்து, கழுத்தை நிமிர்த்தி விழுங்கியது. கண்களை முழுதாகத் திறந்து தலையை இருமுறை சிலுப்பிக்கொண்டது.

“பொழச்சுக்குவியா!” என்று சொன்ன கிழவருக்கு பசியை மீறிக் காரணமே இல்லாமல் குஷி வந்துவிட்டது. மறுபடியும் வீட்டுக்குள் சென்று உள்ளங்கையில் கொஞ்சம் கம்பை அள்ளிக்கொண்டு வந்து போட்டார். வாழை மரத்தின் ஈரத் தரையை ஒரு குச்சியால் கிளறி, சில மண்புழுக்களையும் பிடித்து வைத்தார். கோழிக் குஞ்சு ஆவலாக மண்புழுக்களை விழுங்கியது.

திண்ணையில் வந்து அமர்ந்துகொண்ட கிழவர் பசிக் கிரக்கம் கூடி தடியைப் பிடித்தவாறே இற்றுப்போன மரத் துணில் சாய்ந்துகொண்டார். ஹிந்திக்காரியின் ஐந்து வயது மகன், கைகளில் எதையோ ஏந்திக்கோண்டு வருவதையும் அரைக் கண்களால் பார்த்தார்.

“எங்கம்மா இதெக் குடுத்துச்சு,” என்று சொல்லிவிட்டு கிழவரின் முன் பாத்திரத்தை வைத்தவுடன் ஓடிப்போனான் சிறுவன்.

கிழவர் அலுமினியத் தட்டை மூடியிருந்த இலையை நீக்கிப் பார்த்தார். அடியில் கருகிக்கொண்டிருந்த வாழை இலையின் மேல் சிவந்த வரியிட்ட சூடான கொட்டைச் சோறு குழம்புடனும், சில வறுத்த மீன் துண்டங்களுடனும் இருந்தது. சோற்றிலிருந்து எழுந்த ஆவி கிழவரின் முகத்தை வருடி மறைந்தது.

என்ன நிகழ்கிறது என்று சிந்தையில் உறைக்கும் முன், ஒரு கையால் தடியைப் பிடித்தவாறே, நடுங்கும் மறு கையால் சோற்றை அள்ளி ஆவேசமாக உண்ணத் தொடங்கினார் கிழவர்.

00

‘பெயர் பாலாஜி ராஜூ, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  தற்போது அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இணைய இதழ்களில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது படைப்புகள் சொல்வனம், ஆவநாழி, அந்திமழை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. அந்திமழை இதழின் 2025 ம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியில், இவருடைய ‘உறம்பரையான்’ சிறுகதை மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறது’

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *