–சரிதா ஜோ
கோடை வெயில் மெதுவாக பூமியை ஆக்கிரமிக்கத் தொடங்கிய நாட்கள் அவை.
காட்டின் ஓரத்தில் இருந்த சிறிய குளம் ஒன்றின் அருகே ஒரு நத்தை வாழ்ந்து வந்தது. அதன் பெயர் நந்து.
நந்து மிகவும் மெதுவாக நகரும். ஆனால் அதற்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் மிகவும் நெருக்கமான நண்பன் ஒரு சிறிய தேள். அதன் பெயர் தேனு.
நந்துவும் தேனுவும் தினமும் ஒன்றாகவே இருக்கும்.
அன்று
காலைச் சூரியன் உதித்தவுடன் குளக்கரையில் சந்தித்தது.
“இன்று எங்கே போகலாம்?” என்று தேனு கேட்டது.
“அங்கே இருக்கும் பெரிய பாறை வரை போகலாம்!” என்றது நந்து.
தேனு சிரித்துவிட்டு.
“நீ அந்தப் பாறையை அடைவதற்குள் அடுத்த வாரம் வந்துவிடும்!”
அதைக் கேட்டு நந்துவும் சிரித்தது.
இரண்டும் சிறிய இலைகளின் மீது ஏறின. பனித்துளிகளைப் பார்த்து ரசித்தன. சில நேரங்களில் குளத்தின் கரையில் கிடக்கும் கூழாங்கற்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு விளையாடின.
ஒரு கல்லுக்கு “யானை மலை” என்றும், இன்னொரு கல்லுக்கு “சிங்கக் கோட்டை” என்றும் பெயர் வைத்தன.
ஒருநாள் அவை நிறைய சிறிய கற்களைச் சேர்த்து ஒரு குட்டி மலை கட்டின.
“இது சாதாரண மலை இல்லை!” என்றது தேனு.
“மந்திர மலையா?” என்று கேட்டது நந்து.
“அட! இது கூட நல்லா இருக்கே! இது மந்திர மலை” என்றது தேனு.
“அப்படியானால் நான் இந்த மந்திரமலையின் அரசன்” என்று சொல்லிச் சிரித்தது நந்து.
“நான்தான் படைத்தளபதி!” என்றது தேனு.
அந்த நேரத்தில் ஒரு எறும்பு அந்தக் கல் மலையின் மீது ஏறிச் சென்றது.
“பாரு! முதல் படை வீரன் வந்துட்டான்!” என்று தேனு கத்தியது.
“அய்யய்யோ! மந்திரமலை மேல ஏறிடுச்சே! மறஞ்சு போய்டுவானே!” என்று கூறியது நந்து.
இதைக்கேட்ட எறும்பு திரும்பிப் பார்த்தது. உடனே இரண்டும் ஒன்றையொன்று பார்த்து சிரித்துக்கொண்டன.
மற்றொரு நாள் நந்து மணலில் நீண்ட பாதை ஒன்றை வரைந்தது.
“இது என்ன பாதை?” என்று கேட்டது தேனு.
“இது நத்தை நாட்டிலிருந்து தேள் நாட்டுக்குப் போகும் பெரிய சாலை!” என்றது நந்து.
“அப்படியா?”
“ஆமாம். ஆனால் இந்தச் சாலையில் வேகமாகப் போகக் கூடாது”
“ஏன்? இதுவும் மந்திரச் சாலையா”
“ஆமாம், இந்தச் சாலையில் வேகமாகப் போனால் மாயமாக மறைந்து விடுவார்கள்”
என்று நந்து கூறியவுடன் சிரித்துக் கொண்டே அந்தச் சாலையில் வேகமாகப் போனது தேனு.
சற்று நேரத்தில் “தேனு! நீ எங்க போயிட்டே? உன்னப் பார்க்க முடியலையே? நீ மறஞ்சு போயிட்டியா?” என்று பதட்டத்துடன் கேட்டது நந்து.
“நந்து விளையாடாதே!” என்று சிரித்துக் கொண்டே வந்து அருகில் வந்தது தேனு. “நிஜமாலுமே நீ எங்க இருக்கன்னு தெரியல. இது உண்மையாலுமே மந்திரச் சாலைதான் போல இருக்கு” என்று கூறிவிட்டுச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது நந்து.
இப்போது தேனு சற்றே பயந்து போய்த் தன்னுடைய கொடுக்கை ஆட்டி ஆட்டிக் காண்பித்தது
“நம்பிட்டியா? பயந்து போயிட்டியா?” என்று கேட்டபடி தேனுவைப் பார்த்துச் சிரித்தது நந்து.
“உனக்கும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கட்டுமேன்னு தான் நடிச்சேன். நீ நம்பிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே சிரித்தது தேனு.
இப்படி அவைகளின் உலகம் மிகவும் சிறியது. ஆனால் அவைகளின் மகிழ்ச்சி மிகவும் பெரியது.
ஒருநாள் அவைகள் குளக்கரையில் அமர்ந்திருந்தபோது, தூரத்தில் கருமேகங்கள் மிதந்து சென்றன.
சில நாட்களில் வெயில் இன்னும் கொடூரமானது. நாட்கள் கடந்தன.
குளத்தில் இருந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.
பச்சைப் புற்கள் மஞ்சள் நிறமாக மாறின. மண்ணில் சிறிய விரிசல்கள் தோன்றின.
காற்றுக் கூட சூடாக வீசத் தொடங்கியது.
ஒருநாள் தேனு வழக்கம்போல் நந்துவைத் தேடி வந்தது.
ஆனால் நந்து மகிழ்ச்சியாக இல்லை. அது ஒரு சிறிய கல்லின் அருகில் அமைதியாக இருந்தது.
“என்ன ஆயிற்று?” என்று கேட்டது தேனு.
நந்து சிறிது நேரம் அமைதியாக இருந்தது.
“கோடை வந்துவிட்டது” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறியது நந்து.
“அதனால்?”
“நான் இனி உன்னோடு விளையாட முடியாது”
தேனுவின் முகம் வாடியது.
“ஏன்?”
நந்து வானத்தைப் பார்த்தது.
பிறகு தன் கூட்டிற்குள் மெதுவாக நுழையத் தொடங்கியது.
“நந்து! எப்போது திரும்பி வருவாய்?”
“நான் திரும்பி வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை”
“நந்து அப்படியெல்லாம் சொல்லாதே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று கூறியது தேனு.
“ஆமாம் எனக்குக் கூட்டிக்குள் தண்ணீர் இல்லாமல் சில காலம் வாழ முடியும். அந்தக் காலகட்டத்திற்குள் மழை பெய்து விட்டால் நான் வந்து விடுவேன்”
“இல்லையென்றால்” என்று பதட்டத்துடன் கேட்டது தேனு.
“இல்லையென்றால் அதோ கிடக்கிறது பார் நாம் விளையாடும் நத்தைக் கூடுகள். வெற்று ஓடுகள். அது போல் தான் என் வீடு மட்டும் தனியாகக் கிடக்கும்” என்று சோகமாக முதுகில் தான் சுமந்து கொண்டிருக்கும் தன் வீட்டைப் பார்த்தபடியே கூறியது நந்து”
தேனுவின் கண்கள் கலங்கின.
“நீ போய்விடாதே.”
நந்து சிரித்தது.
“நான் போகவில்லை. காத்திருக்கிறேன்”
நந்து மெதுவாக சென்று தன் கூட்டிற்குள் முழுவதுமாக மறைந்துவிட்டது.
மறுநாள் தேனு வந்தது.
நந்து இருந்த இடத்தில் அதே கூடு இருந்தது.
ஆனால் எந்த அசைவும் இல்லை.
“நந்து!” இன்று தேனு அழைத்தது.
பதில் இல்லை.
நாட்கள் நகர்ந்தன.
தேனு தினமும் வந்தது.
“இன்று ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தேன்”
“குளத்தில் இப்போது தண்ணீர் இல்லை. ஆனால் வானம் மழை பெய்வது போல் இருக்கிறது விரைவில் வந்துவிடும். கவலைப்படாதே! நாம் இருவரும் விளையாடலாம்”
“நேற்று ஒரு காகம் என்னைப் பயமுறுத்திவிட்டது. நீ உடன் இருந்திருந்தால் நான் தைரியமாக இருந்திருப்பேன்”
இப்படிப் பேசியது.
பதில் மட்டும் வராது.
வெயில் இன்னும் அதிகமானது.
ஒருநாள் தேனு வழக்கம்போல் வந்துகொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது.
டக்…
டக்…
டக்…
டக்…
அது திரும்பிப் பார்த்தது.
ஆடுகளின் கூட்டம் ஒன்று அந்த வழியாக வந்துகொண்டிருந்தது.
வறண்ட குளத்தின் அருகே இருந்த புற்களை மேய்வதற்காக அவை வந்திருந்தன.
தேனுவின் இதயம் வேகமாகத் துடித்தது.

ஏனென்றால் சில சிறிய நத்தைகளின் காலியான கூடுகள் மண்ணில் நசுங்கிக் கிடந்தன.
உடனே தேனுவுக்கு நந்து நினைவுக்கு வந்தது.
“ஐயோ!” இன்று அலறியபடி
நந்துவின் கூட்டை நோக்கி ஓடியது.
ஆடுகள் நெருங்கிக்கொண்டே வந்தன.
டக்…
டக்…
டக்…
அந்த சத்தம் தேனுவுக்கு பயமாக இருந்தது.
அது நந்துவின் கூட்டைத் தள்ளிப் பார்த்தது.
நகரவில்லை.
“நந்து! எழுந்திரு!”
பதில் இல்லை.
அது சுற்றிலும் பார்த்தது.
அப்போது அதன் கண்களில் பழைய நினைவு நிழலாடியது.
ஒருகாலத்தில் நந்துவோடு சேர்ந்து கட்டிய கல் மலை!
உடனே அது வேலையில் இறங்கியது.
சுற்றிலும் கிடந்த சிறிய கற்களை உருட்டி உருட்டிக் கொண்டு வந்தது.
ஒரு கல்.இன்னொரு கல்.
மற்றொரு கல். நந்துவின் கூட்டைச் சுற்றி அடுக்கியது.
வெயில் கொளுத்தியது.
தேனுவுக்குச் சோர்வு வந்தது.
ஆனாலும் நிறுத்தவில்லை.
சிறிது நேரத்தில் அந்தக் கூடு ஒரு சிறிய கோட்டைக்குள் இருப்பது போலத் தோன்றியது.
அந்த நேரத்தில் ஆடுகள் வந்துவிட்டன.
ஒரு பெரிய ஆடு தேனு நந்துவைச் சுற்றி அடுக்கி வைத்திருந்த கற்குவியலுக்கு அருகே வந்தது.
தேனு பயத்தில் நடுங்கியபடி ஒரு பெரிய கல்லின் பின்னால் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தது.
ஆட்டின் கால் ஒரு கல்லைத் தட்டியது. சில கற்கள் உருண்டு விழுந்தன. தேனு கண்களை மூடிக்கொண்டது. ஆனால் நந்துவின் கூடு உடையவில்லை.
சிறிது நேரத்தில் ஆடுகள் அனைத்தும் அங்கிருந்து நகர்ந்துவிட்டன. தேனு நிம்மதியாக மூச்சுவிட்டது.
“பத்திரமா இருக்கிறாய் நண்பா,” என்று மெதுவாகச் சொன்னது.
தேனு தினமும் காலையில் எழுந்தவுடன் வானத்தைப் பார்த்து இன்று மழை வரும் என்று சொல்லிவிட்டுத் தான் வேறு வேலையையே பார்க்கும்.
மாதங்கள் நகர்ந்தன.
அந்த இரவு வானம் மாறத் தொடங்கியது. தூரத்தில் கருமேகங்கள் தோன்றின.
காற்று குளிர்ந்தது. மரங்கள் மகிழ்ச்சியாக அசைந்தன.
தேனு வானத்தைப் பார்த்தது.
“ஐ!மழை”
முதல் துளி மண்ணில் விழுந்தது. அடுத்த துளி ஒரு இலையில் விழுந்தது.பிறகு இன்னொரு துளி. இன்னொரு துளி.
சில நொடிகளில் மழை கொட்டத் தொடங்கியது. மண்ணின் மணம் எங்கும் பரவியது. தேனு மகிழ்ச்சியில் துள்ளியது.
உடனே நந்து இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தது.
அது ஒரு நிமிடம் அப்படியே அசையாமல் நந்துவைப் பார்த்தது.
மிக மிக மெதுவாக…
ஒரு அசைவு. மீண்டும் ஒரு அசைவு. கூட்டின் வாயில் மெதுவாக ஒரு தலை எட்டிப் பார்த்தது. அது நந்துதான்.
“நந்து!” என்று மகிழ்ச்சியுடன் கத்தியது தேனு.
நந்து மெதுவாக வெளியே வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உலகத்தைச் சுற்றிலும் பார்த்தது.
பிறகு தன்னைச் சுற்றி அடுக்கப்பட்டிருந்த கற்களைக் கவனித்தது.
“இது என்ன? என்னைச் சுற்றி மந்திரமலையா? நான் என்ன மந்திரவாதியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டது நந்து.
தேனு சிரித்தது.
“நினைவிருக்கிறதா? நாம் கட்டிய கல் மலை?”
நந்து தலையசைத்தது.
“அதே விளையாட்டுதான் உன்னைக் காப்பாற்றியது.”
தேனு நடந்ததையெல்லாம் சொன்னது.
நந்துவின் கண்கள் நெகிழ்ந்தன.
“நன்றி நண்பா.”
தேனு சிரித்தது.
“நண்பர்களுக்குள் நன்றி சொல்லக்கூடாது”
மழைத்துளிகள் இரண்டின் மீதும் விழுந்துகொண்டிருந்தன.
குளத்தின் பள்ளங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கத் தொடங்கியது.
உலகம் மீண்டும் உயிர் பெறத் தொடங்கியது.
நந்துவும் தேனுவும் அந்த மழையில் நனைந்தபடி விளையாடின.
00

சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

