“என் புள்ளய இப்பிடி அநியாயமா கொன்னுட்டியேடா? பாவி. நீ நல்லாயிருப்பியா. நாசமா போயிடுவடா. ஒனக்கு நல்ல சாவே வராதுடா” என உரத்த குரலில், தாத்தா சொக்கலிங்கத்தைத் திட்ட ஆரம்பித்தாள் ஆயா செல்லம்மா. நெஞ்சு நெஞ்சாக இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

அப்பாவின் தம்பி தயாளனின் உடல் தண்ணீர் குடித்து நன்றாக உப்பிப் போய், வீட்டின் முன்புறம் ஒரு பாயில் கிடத்தப் பட்டிருந்தது.

உடலைப் பார்த்ததும் தாத்தா அப்படியே தடாலென்று காலடியில் விழுந்தார். அதைப் பார்த்த அவர் அண்ணன் வரதன், “டேய், சொக்கலிங்கம்” என கத்திக் கொண்டே ஓடி, அவரைப் பிடித்துக் கொண்டார்.

தாத்தா மாறி மாறி கைகளால் தலையில் மடார் மடாரென அடித்துக்கொண்டே அழுதார்.

தாத்தாவின் பூர்வீகம் ராசிபுரம் சீராப்பள்ளி. கைத்தறி நெசவு முதன்மையான தொழிலாக இருந்தது. விவசாயத்தில் மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளையும் பகுதியாக இருந்தது. அதனால் நிறைய ஜவ்வரிசி ஆலைகள் இருந்தது.பக்கத்தில் நாமகிரிப்பேட்டை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான செவ்வந்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. அப்போது மன்னன் வல்வில் ஓரி இங்கு வந்து வணங்குவாராம்.

தாத்தா அப்போதெல்லாம் வீட்டிலிருப்பது மிகவும் அரிது. எப்போதும் எங்கேயாவது பிரசங்கத்திலிருப்பார்.

சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம். தாத்தாவுக்கு சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு. பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார். காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம். கதை சொல்லுவார். பாரதியார் பாடல்கள் பாடுவார். அவரது குரலுக்கு மைக் எதுவும் தேவைப்படவில்லை. ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் குரல் வளம்.

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்று ராகத்தோடு பாடினால், மக்கள் கூட்டம் சின்ன சத்தமும் எழுப்பாமல் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்து கேட்பார்கள்.

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே’

என்று பாரதியார் பாடல்களைப் பாட மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, ஜனங்கள் மயங்குவார்களாம்.

மடங்களிலோ சத்திரங்களிலோ படுத்துக் கொள்வார். கோவில் அன்னதானத்தில் பசியைப் போக்கிக் கொள்வார். இப்படியே ஒரு நாடோடியைப் போல, ஊர் ஊராக நடந்தே சென்று பிரசங்கம் செய்தார். காந்தி மீதும் நேரு மீதும் சுபாஷ் சந்திர போஸ் மீதும் அவ்வளவு பற்று. வெறி என்று தான் சொல்ல வேண்டும். தலைவர் காமராஜர் அய்யா, “வாடா, சொக்கலிங்கம்” என்று அழைக்கும் அளவுக்கு பழக்கம். தியாகி கக்கன் அவர்களுடன் வேலூர் சிறையில் இருந்தவர். ஆனால் இது எதுவும் குடும்பத்திற்கு உதவவில்லை. திடீரென எப்போதாவது தான் வீட்டுக்கு வருவாராம்.

சித்தப்பா தயாளன் அவ்வளவு அழகு. நடிகர் ஜெமினி கணேசன் போன்ற தோற்றம். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட சிகை. மீசையில்லாமல் மொழு மொழுவென்றிருந்த முகம்.

அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தருணம். எப்படியோ பசங்களுடன் சேர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தாத்தாவிற்கு கடைசி வரை தெரியாமலேயே ஆயா இந்த ரகசியத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது.

தாத்தாவுக்கு சித்தப்பா மீது மிகுந்த பாசம். ஆனால் எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.

வெளியூரிலிருந்து வந்தால், சின்னவன் சாப்புட்டானா எனக் கேட்காமல் தாத்தா சாப்பிட்டதேயில்லை. “அவனுக்குப் புடிக்குமின்னு காராசேவு வாங்கிட்டு வந்தேன். காலையில குடு” . “அவன் என்னய மாதிரி. தயாள குணம். அதனால்தான் தயாளன். வாரிக்குடுத்துடுவான். ஒன்னய மாதிரி இல்ல”.

ஆயாவுக்கு சித்தப்பாவை விட, அப்பாவை ரொம்பவும் பிடிக்குமாம். முதல் ஆண் பிள்ளையல்லவா. பண்டிகைகளில் அப்பாவுக்குக் கொஞ்சம் கூடுதலாகக் கறியும் பலகாரங்களும் கிடைக்கும்.

தாத்தாவுக்கு நிரந்தரமாக ஏதும் வருமானம் இல்லாததாலும், அவர் வீட்டில் எப்போது இருப்பார் என்று தெரியாததாலும், ஆயா வீட்டிலேயே பணியாரம் சுட்டு விற்றுக் குடும்பத்தை நடத்தியிருக்கிறது. ஆறு பிள்ளைகளை வளர்ப்பது அவ்வளவு சாதாரண காரியமா என்ன? மூன்று அத்தைகளும் ஆயாவுக்கு மாவு ஆட்டுவதிலிருந்து, வருபவர்களுக்குப் பரிமாறுவது, காசு வாங்கிப் போடுவது, பாத்திரம் கழுவி வைப்பது எனப் பம்பரமாய்ச் சுழன்றார்கள். முதல் இரண்டு அத்தைகள் பார்வதிக்கும், அம்பிகாவுக்கும் படிப்பு ஏறவில்லை. மூன்றாவது அத்தை லட்சுமி மட்டும் நன்றாகப் படித்தார்.

கடைசி அத்தை சரஸ்வதிக்குப் பிறவியிலேயே கண் பார்வை குறைபாடு. எல்லா வைத்தியமும் செய்து பார்த்தும் பலனில்லை.

சித்தப்பாவுக்கு அப்பாவை ரொம்பவும் பிடிக்குமாம். அண்ணா அண்ணா என்று அவர் பின்னாலேயே சுற்றியிருக்கிறார். இருவரும் சேர்ந்து சீராப்பள்ளியில் சுற்றாத இடமில்லை. தனக்கு கிடைக்கும் திண்பண்டங்களை சித்தப்பா அண்ணனுக்குத் தருவார்.

அப்போதெல்லாம் மாரியம்மன் திருவிழா என்றாலே பத்து நாட்களுக்கு நாடகம் போடுவார்கள். சித்தப்பா ஏதாவது ஒரு சின்ன வேடத்திலாவது தலையைக் காட்டிவிடுவார். அவர் ஏதோ ஒரு நாடகத்தில் போலீஸ் வேடத்தில் இருந்த புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து அந்த பத்து நாட்களில் தினமும் நாடகம் முடியும் வரை பார்த்து விட்டு நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்புவர். நல்ல தங்காள், பக்திப் பிரகலாதன், வீர சூர கர்ணன் எனப் பல நாடகங்கள்.

வழக்கம்போல அருகிலுள்ள ஏதோ ஒரு ஊரில் பிரசங்கம் செய்து விட்டு, வீடு திரும்பும் சமயம், வழியில் தனது நண்பர்களுடன் சித்தப்பா புகைத்துக் கொண்டிருப்பதைக் பார்த்து விட்டார். எதுவுமே சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.

சித்தப்பா சற்று நேரத்தில் வீடு திரும்பும் போது, தாத்தா வாசலிலேயே திண்ணையில் அமர்ந்து இருந்தார். “செல்லம்மா, அவன வீட்டுக்குள்ள நொழய வேணாம்னு சொல்லு” என்றார். பதறிப் போன ஆயா, ”என்னங்க ஆச்சி?” என்றாள் பதட்டத்துடன்.

“அவனயே கேளு. படிக்கச் சொல்லி அனுப்புனா, கண்ட பசங்களோட சேர்ந்து பீடி குடிச்சிட்டு இருக்கிறான்”.

வாசலிலிருந்த வெட்டி அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளில் ஒன்றை உருவியவர் கண் மண் தெரியாமல் சித்தப்பாவை அடிக்க ஆரம்பித்தார்.

“வேண்டாங்க. இனிமேல் இப்படி செய்ய மாட்டாங்க. அப்பாகிட்ட மன்னிப்பு கேள்றா” என சமாளிக்க முயன்று தோற்றார் ஆயா.

சித்தப்பாவும் கடைசி வரை வாயைத் திறந்து மன்னிப்பு கேட்கவே இல்லையாம். “எப்படியோ தறுதலையாப் போய்த் தொல” என்று கட்டையைப் போட்டு விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார் தாத்தா.

ஆயாதான் சித்தப்பாவின் காயங்களைப் பார்த்து அழுதபடியே, மரச் செதால்களை எடுத்து விட்டு, மஞ்சள் அப்பி விட்டிருக்கிறது. தாத்தா தூங்கிய பிறகு மெதுவாக சித்தப்பாவை வீட்டுக்குள் படுக்க வைத்து கஞ்சி காய்ச்சிக் கொடுத்திருக்கிறது ஆயா.

அடுத்த நாள், வழக்கம் போல, சொல்லாமல் பக்கத்து ஊரான நாமகிரிப்பேட்டைக்குப் பிரசங்கம் செய்யச் சென்று விட்டார்.

சித்தப்பாவுக்கு அவமானத்தைத் தாங்க முடியவில்லை. ஆயா மிரட்டியதால் மீண்டும் நண்பர்களைச் சந்திக்கச் செல்லவில்லை.

மதியம் சாப்பிட்டு விட்டு, ஆயா சற்று நேரம் கண்ணயரும் வழக்கம் . சித்தப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆயாவை எழுப்பாமல் எழுந்து விடுவிடுவென தோட்டத்தில் இருந்த கிணற்றுக்கு நடக்க ஆரம்பித்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் வழியில் பார்த்து விட்டு,”என்ன தயாளா, இந்தப் பக்கம்?” எனக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறிப் பின்னர்,”சும்மா நடக்கலாம்னு வந்தேன்” என்று சொல்லி விட்டு, நிற்காமல் சென்று விட்டார்.

ஆயா சாயந்திரம் வரைப் பார்த்து விட்டு, சித்தப்பாவைக் காணாமல், பக்கத்து வீட்டில் புலம்ப, அவர் தான் சொல்லி இருக்கிறார் “பையனத் தோட்டத்துக் கெணத்துப் பக்கம் பார்த்தேனே”.

ஆயாவுக்கு கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. “அய்யோ, என் பையனுக்கு என்ன ஆச்சோத் தெரியலையே” எனப் பெருங்குரலெடுத்து அழுதபடியே கிணற்றை நோக்கி ஓடியதாம். பக்கத்து வீட்டு ஜனங்கள் எல்லாரும் பின்னால் சேர்ந்து ஓடினார்களாம்.

அந்த தோட்டக்காரர்களும், தாத்தாவின் சொந்தம் தான். எல்லோரும் சேர்ந்து ஓடி வருவதைப் பார்த்து விட்டு, ”என்ன செல்லம்மா, என்ன ஆச்சி” என்றார் தோட்டத்தில் இருந்த பலநாதன்.

“பையனக் காணம். பக்கத்து வீட்டுக்காரர் இந்தப் பக்கமா வந்ததாச் சொன்னாரு. எனக்கு ரொம்ப பயமாயிருக்குது”.

“பயப்படாத, அப்படியெல்லாம் இருக்காது. பாக்கலாம்” என்றபடியே, “டேய், ஆறுமுகம். இங்க வாடா. அப்படியே கெணத்துல ஏதாவது தெரியுதாப் பாரு”.

நல்ல ஆழமானக் கிணறு. குறைந்தது எண்பது அடி ஆழமிருக்கும். நல்ல மழை என்பதால், கிணறு முக்கால் வாசி நிரம்பி இருந்தது.

ஆறுமுகம் நல்ல நீச்சல் தெரிந்தவன். எந்த வேலை கொடுத்தாலும் செய்யக் கூடியவன். மேலிருந்து கிணற்றில் குதித்துத் தேடலானான். மாலை நேரமானதால் சரியாக எதுவும் தெரியவில்லை. நீந்தியபடியே கிணற்றைச் சுற்றி வந்தவன், மூலையில் ஏதோ மிதப்பது போலிருக்க, ஒரு கணம் பயந்து போனான். பிறகு மெதுவாக அருகில் சென்று பார்த்தால், சித்தப்பா பிணமாக மிதந்து கொண்டிருந்தாராம். மேலேறி வந்து மெதுவாக விஷயத்தைச் சொல்ல, ஆயா மயக்கமடைந்து விழுந்து விட்டாள்.

பலநாதன் படபடவென ஆட்களை வரவழைத்து, கயிற்றுக் கட்டிலைத் தொட்டில் போலக் கட்டி, பிணத்தை மேலே கொண்டு வர வைத்திருக்கிறார். ஆயாவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆட்கள் அதே கட்டிலில் வைத்து, தாத்தாவின் வீட்டு வாசலில் இறக்கி வைத்துப் பிறகுப் பாயில் படுக்க வைத்திருக்கிறார்கள்.

வரதன் தாத்தாவின் அண்ணன். அவருடைய வீடும் பக்கத்தில் தான் இருந்தது. தம்பியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

தாத்தா மாறி மாறி கைகளால் தலையில் மடார் மடாரென அடித்துக்கொண்டே இருந்தார். கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. யாரிடமும் அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் அவரது செய்கை தான் தப்பு செய்து விட்டோம் என்ற குற்றவுணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

திடீரென சன்னதம் வந்ததுபோல், தாத்தா எழுந்து சித்தப்பாவின் உடலருகே சென்றார். இரண்டு கைகளாலும் வயிற்றைப் பிடித்து அழுத்தினார்.  தண்ணீர் வாயிலிருந்து வரத் தொடங்கியதும், தனது வாயை வைத்து உறிஞ்சலானார். ஒரு துளியையும் கீழே துப்பவில்லை. உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக் கொண்டே இருந்தார். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை.

கூடி இருந்த எல்லோரும் தாத்தாவின் செயலைப் பார்த்து அழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவரை நெருங்கவோ, அவரை விலக்கவோ அனைவருக்கும் பயம்.

சிறிது நேரம் கழித்து, வரதன் தாத்தா, தாத்தாவின் அருகே சென்றார். “டேய், சொக்கலிங்கம். அவன் போய்ட்டான்டா. திரும்ப வர மாட்டான்டா. ஒன்னோட தப்பு மட்டும் இல்லடா. அவனுக்குத் தலயில எழுதுன ஆயுசு அவ்வளவுதான்டா. எந்திரிச்சு ஆக வேண்டிய காரியங்களைப் பாருடா” எனக் கூறியபடியே தாத்தாவின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார்.

தாத்தாவுக்கு சுய நினைவு திரும்பியது போலிருந்தது. “அண்ணா, நான் செஞ்ச பாண்டத்த நானே போட்டு ஒடச்சிட்டனே” எனக் கூறியபடியே தனது அண்ணனின் தோளில் சாய்ந்து மீண்டும் அழ ஆரம்பித்தார்.

000

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *