வயிற்றில் குத்தப்பட்ட

சிலுவைக்கு

பற்களுண்டு

பிடுங்கி எறியப்படவில்லை

அறுக்கிறது சீவுகிறது

மென்று கடிக்கிறது

கடுகடுவென பொறிகிறது

உடலெங்கும் சிலுவையின்

தடங்கள் பொதிந்த

நரம்புகள் துடிக்கும் வேளையில்

இதயம் சுருங்கும்.

குடல்கள் கொதித்தெழும்பி

குங்குமக் குழம்புடன்

இதய நரம்புள் முந்தித் தள்ள

முட்கள் நகர்வடையும்

சடையற்ற விரிந்த முடியில்

பின்னிக் கிடக்கும்

முட்களின் நுனிக்கூர்மை

கண்ணின் வெண்மையுள்

ஊடுருவி முறைத்திட

எரிக்கும் கண்கள்

செந்தீ எழும்ப கனல்கிறது

கொஞ்சம் ஈனோ குடிக்க சொல்லும்

வலையனின் பார்வைகள்

கூடக்கூட அவன் பசி தீர்கிறது

சிலுவைகளுக்கு மட்டும்

சிரிக்கத் தெரியவே இல்லை

கற்றுக்கொடுக்க கிறிஸ்து வருவார்

*****

யாருமற்ற அந்தப் பெரிய

குழாயினுள் படுத்திருந்தேன்

படிப்படியாக வேகம் ஏற்றி

யாரோ ஒருவர்

பக்கத்தில் வருவது மட்டும்

கொஞ்சம் கொஞ்சமாக உறுதியானது.

கண்டிப்பாக அது போலிஸ் அல்ல

அவர்கள் காலடிச்சத்தமும்

குழாயில் லத்தியை அடித்து

அழைக்கும் சைகையும்

எனக்கு நன்றாகவே தெரியும்

வேறு யாராக இருக்கும்

என்னைப் போன்ற வேறொரு

பரதேசியாக இருக்கலாமென

நினைத்துக்கொண்டே

எழுந்து உட்காரும்போது

நேரம் தன்னை மெதுவாக நகர்த்தி

தள்ளிச் செல்கிறது

நேரம் கழியக் கழிய

வருவது ஒருவர் அல்ல

பலரென தெரிந்தது

மனிதக்கூட்டமா என்ற சந்தேகத்தை

சப்தம் எழுப்ப

வந்திருந்த கூட்டம்

வெளியிலேயே

குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்

அங்கே வாயில் எச்சில் வடிய

வாலைச் சுருட்டி ஓடும்

நாய்களெல்லாம் எனக்கு பழக்கம்

அந்த நாயின் கால்களாகவும்

வெளியே குதிக்கும் கால்கள் இல்லை

உட்கார்ந்திருந்த நான் தவழ்ந்து

குழாயின் முகப்பு வாசலருகே

ஏறும் போது தான் தெரிந்தது

அங்கு குதித்துக் கொண்டிருப்பது

கால்களே அல்ல மழைத்துளிகள்.

*****

முத்தமிட்ட யூதாஸ் உதடுகள்

இயேசுவின் கன்னத்தில் பதிந்தாலும்

அவனால் இயேசுவின் தசையை

ருசிக்க முடியவில்லை

இயேசுவின் சரீரத்தை

நேரில் காணாத

தொட்டுணராத

எத்தனையோ பேர்

அந்த சரீரத்தை ருசிக்கின்றனர்

குருதியின் ஈரமின்றி உலர்ந்த

இயேசுவின் சரீரத்தில்

இரத்தத்தின் வாடை

உடல் மீது போர்த்திய

சிகப்பு துணியில்

குருதியின் கறை

மூன்றாம் நாள்

இயேசு உயிர்த்தெழுந்த போது

சரீரத்தோடு சிந்திய குருதியும்

உயிர்த்தெழுந்தது

தழும்புகள் பட்ட உடலிலிருந்து பிதுக்கப்பட்ட குருதி

மீண்டும் ஈரமாகி

காயத்தைத் துடைத்து

சொஸ்தமாக்கும் போது

பேசிக் கொண்டே இருக்கிறது

இரத்தத்தின் சொற்களும்

உடலின் ருசிகர உணர்ச்சியும்

உயிருடனேயே அசைவாடுகிறது

யூதாஸால் கேட்க முடியாத

சப்தத்தை

பாரபாஸோடு இணைந்து

எத்தனையோ பேர்

கேட்கின்றனர்.

*****

மண்ணைப் பிணைந்தெடுத்து

சுழலவிட்டு அறுத்தெடுத்து

சுட்ட அந்த பானையின்

பழுப்பேறிய செந்நிறத்தின் மேலோ

சூட்டின் மிகுதியில்

ஆங்காங்கே மாறி நின்ற

கச்சிதமான கருநிற

கவின்பொழில் புள்ளிகள் மீதோ

அந்த பானையை முதலில்

பார்த்ததாலோ

அடிக்கடி அதனைப் பார்க்க

நேர்ந்ததாலோ

ஒருமுறை அருகில் நின்று

அளவளாவி பேச ஆசை

வீச்சமற்ற நெடிகளுள் ஏதுமற்ற

ஒரு குடிநீர்த் தொட்டியின்

பின்னே நின்று

அந்த வழியாக பானை

போகும் போதெல்லாம்

நான் பார்த்திருக்கிறேன்.

ஊரின் மேற்பாகத்தில்

நான் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம்

அந்தப் பக்கம் வந்துபோன

பானைகளோடு அதையும்

அடிக்கடி பார்த்ததுண்டு.

பானைக்கார குயவன்

எடுத்துச் செல்லும் நேரங்களில்

பார்வையை விடாமல்

அது உடையக்கூடாதென

கவனமாகப் பார்த்த என்மீது

பானையைக் களவாட முயன்ற

குற்றமிருக்கிறது.

குடிநீர்த் தொட்டியும்

ஊரின் மேற்பாகமும்

சாட்சிக்கு நிற்கின்றன

நானோ யார் திருடியிருப்பான் என

யோசித்துக்கொண்டே நிற்கிறேன்.

*****

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *