மேடையில படுத்துக் கெடந்தா கருவாய. ஒடம்புல சட்ட இல்ல. இடுப்புல    கைலி கட்டியிருந்தா. நொட்டாங்கைய நீட்டி தலைய அதுக்குமேல வச்சு கால ரெண்டையும் மடக்கி குறுகிப் படுத்துக் கெடந்தா. அஞ்சரமணி மரத்து நெழல் வெயில்ட்ட இருந்து அவென பாதுகாத்தாலும் ஒவ்வொரு எலைக்குள்ள கூடி வெயிலு அவெ முதுகுல அடிக்குது. அந்த அடி ஒன்னு பெருசா ஒரச்சது மாதிரி தெரியல. மத்தியான நேரம். வீட்டுல கஞ்சி இருந்திருக்காது. பசியோட படுத்திருப்பா போல. அப்பிடி இருந்தாலும் நல்ல தூக்கம். காவயித்து கஞ்சிய குடிச்சிட்டு தூக்குனா நல்லா தூக்கலாம் போல. செக்கடியிலருந்து கட்டு ஒடம்புல சட்ட இல்லாம ரெண்டு பச்ச வாழப்பழத்த கொண்டுகிட்டு வர்றா பால்வாடி வழியா. மடத்துல சேகரு சீட்டு வெளாண்டுகிட்டுருந்தப் பாத்த கட்டு ரெண்டு வாழப்பழத்துல ஒன்ன திங்க ஆரம்பிச்சா. இல்லாட்டி சேகரு பாத்தா ரெண்டையும் புடிங்கிருவானு. ஒன்ன தின்னுக்கிட்டு இருக்கும்போது கருவாய மடத்துல படுத்துக் கெடந்ததப் பாத்ததும் தின்னுகிட்டே நடந்து வந்து கருவாய பக்கத்துல ஒக்காந்து “என்னையா இப்பிடி தூங்குற”னு சொல்லிட்டு கருவாய தொடையில ஒரு அடிவிட்டா. அடிய வாங்குனதும் யாருனு தலைய தூக்கிப் பாத்தா. கட்டு வாழப்பழம் தின்னுகிட்டு இருந்ததப் பாத்ததும் எந்திருச்சு “எனெக்கு ஒன்னு தாடானு”னு கேட்டா. கட்டு சேகரப் பாத்தா சேகரு கட்டப் பாக்கும்போது கட்டு கருவாயன்ட இன்னொரு வாழப்பழத்த குடுத்தா. “போடா ங்கோக்காகுண்ட”னு கட்டப் பாத்து வைஞ்சா. கட்டு அவென பாத்து சிரிச்சுகிட்டே செல்லத்துர நடந்து வர்றதப் பாத்ததும் “ஏண்ணா அவாட்ட கேட்டையா”னு செல்லத்துரைட்ட கேட்டா. கருவாய வாழப்பழத்த தின்னுகிட்டே “என்னத்தடா”னு கேட்டா. கட்டு அதுக்கு பதிலு ஏதும் சொல்லல. செல்லத்துரையும் வந்ததும் இவெனுககிட்ட ஒக்காந்தா. வெள்ளக் கலர் கட்டம் போட்ட சட்ட. ப்ளு கலர் கைலி கட்டிருந்தா. கால்ல பேட்டா செருப்பு வேற. கட்டு கேட்ட கேள்விக்கு எந்த இதும் சொல்லாம ஒக்காந்த செல்லத்துரைட்ட “என்னத்தாட அவாட்ட கேட்டையானு இவெ கேக்கா”னு கருவாய வாழப்பழத்த தின்னுட்டு தோல காலுக்கில போட்டா.

            “கண்டாரோளி தோல இங்னையப் போடுவா. எடுத்து சாக்கடையில போடுடா”னு செல்லத்துர சொன்னா.

            “இதுப் பெரிய இதாக்கும்”னு சொல்லிட்டு கருவாய வாழப்பழத்தோல எடுத்து மேடைக்கு பின்னாடி போர சாக்கடையில எறிஞ்சா.

            “பெரிய இதா. கெழடு கெட்டைக நடந்து வந்து வலுக்கி விழவா”          “சரி எடுத்துப் போட்டேல”

            “வீட்டுல சோறு இல்லைய இந்த சமயத்துல வாழப்பழத்த திங்கிற”

            “இந்த நேரத்துல வாழப்பழத்த தின்னா என்ன? அதும் மத்தியானத்துல. ஒடம்புக்கு நல்லதுதானே”.

            “இந்தப் படிச்ச புளித்திய என்ட காட்டுறையாக்கும்”

            “வாழப்பழத்த தின்னதுக்கும் படிச்சதுக்கும் என்னணா சம்மந்தம்”னு கட்டு கேட்டா.

            “இவா லைப்ரரி போரல. அதா படிச்சதக் காட்டுரா”

            “ஏலே இப்ப இது எதுக்கு எனெக்கு. அவெ நீ வரும்போது ஒன்னு கேட்டா. அது என்னனு சொல்லு.

            “இந்த ஒக்காகுண்டதாளி தாசில்தாரு அவா மகெனுக்கு கம்யூனிட்டி சர்டிபிகேட் தரமாடேங்கீரா”

            “எவா மகெனுக்குடா”

            “இந்தா மச்சா கென்னடி மகெனுக்கு”

            “என்ன சொல்லுரா. எதுக்கு தரமாட்டா”னு கட்டு கேட்டா.

            “இவா கிருத்துவ தெருவுல இருக்காலாம், அதனால”

            “நம்ம தெரு கிருத்துவத் தெருவுல இருந்தா ஏ தரமாட்டானா”

            “தரமாட்டேனு இல்ல. எஸ்.சி சர்டிபிக்கேட் தரமாட்டானா”

            “அவா இந்து. அந்த மச்சானு இந்து. இவாளிக பள்ளிக்கொடத்துக்கும் போகல. அதனால சர்டிபிக்கேட்டு அவாளுககிட்ட இருக்காது. இருந்தா அதக் காட்டி வாங்கிறலாமா. இத அவா தாசில்தார்ட சொல்லிருக்கா. ஆனா தரமாட்டேன்டானா. அது எப்பிடி கிருத்த தெருவுல இந்துங்க இருப்பாங்கனு”

            “இவா நம்ம கிருத்துவக் கோயிலுக்கூட வரமாட்டாளே”

            “எல்லா சொல்லிப் பாத்துட்டா. அவெ முடியாதுண்டா”

            “இது என்ன அநியாயமா. கிருத்துவ தெருவுல இந்து இருக்கமாட்டாங்களா”

            “இந்தா பள்ளத் தெருவுல அஞ்சாறு கிருத்தவக் குடும்பம் இருக்கு. இந்துக் குடும்பம் அதிகமா இருக்கு. தி.ரு.விகா தெருல ரெண்டு குடும்பமும் இருக்கு”

            “ஏலே எதுக்கு, இப்ப போய் அவென்ட என்னெனு கேப்போம். அவெ என்ன சொல்லுரானு பாப்போம். கட்டு சட்டையப் போட்டுவாடா தாலுகா ஆபிஸ்க்கு போவோம்”           இப்பிடியா அவெனுககுள்ள பேசிகிட்டு இருந்தானுக. கட்டு கருவாயனு எந்திருச்சு சட்டையப் போட வீட்டுக்குப் போனானுக. செல்லத்துர மேடைல ஒத்தையில ஒக்காந்திருந்த. இவெனுக வீடு ஒன்னும் மேடைலருந்து தூரத்துலு இல்ல. ரெண்டு எட்டுல வீட்டுக்கும் போய்ரலாம்.

            மடத்துக்குள்ள சேகரோட சேத்து ஏழு பேரு தொள்ளாயிரத்தி நாலு சீட்டு வெளாண்டுகிட்டு இருந்தானுக. ரெண்டு மூணு பெருசுக படுத்துக் கெடந்தானுக. மேடையில டைசா அய்யா வேலைக்குப் போகாம தூங்கிட்டு இருந்தா. எம்எஸ்சு அய்யாவும் படுத்துக் கெடந்தாரு.

            அந்தோனியார் குருசுக்கிட்ட அதிசம் அய்யாவும் அந்த மச்சா அந்தோனியும் என்னத்தையோ வெட்டி முறிக்கிற மாதிரி மும்முரமா பேசிகிட்டு இருந்தானுக. பால்வாடி சாக்கடையில ராசு மகெ என்னத்தையே நோன்டிகிட்டு இருந்தா. கம்ப வச்சு.

            வேற யாரு மடத்துலையும் மேடையிலையும் ஆளுங்களக் காணும். திங்கக் கெழமைனால ஆம்பளையாளுக ஊர்குள்ள பாக்குறது செரமம். அதுமட்டுமா பொம்பளைகளுதா. தெருவுல ஆளுகள திமுத்துமுன்னு பாக்கனும்னா சாய்காலம் ஆறு மணிக்கு மேல ஆகும்.

            கட்டுக்கு வீடு மடத்துப் பக்கத்துல. அதனால சட்டையப் போட்டு அவெ வந்துட்டா. அவெ வந்து ஒக்காந்த செத்த நிமிசத்துல கருவாயனு செவப்பு சட்டையப் போட்டுகிட்டு கைய மடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்கும்போது “ஏலே கருவா சீட்டு வெளாட வாரையா”னு கொழந்த மச்சா கேட்டாரு. இவெ “இல்லணா”னு சொல்லிட்டு நடந்தா. “எங்கட போர”னு சீட்ட எடுத்துட்டு கேட்டாரு.

            “வத்ராப்புக்கு. தாசில்தாரப் பாக்க”

            சீட்டு வெளாடும்போது பேச்சு வேண்னும்ல. இதப் பேச ஆரம்பிச்சானுக

            “இன்னைக்கு அந்த தாசில்தாரு செத்தா”னு குமாரு சொன்னா. எல்லா இதக் கேட்டு சிரிச்சானுக.

            “இவெனுக மூணு பேர்ட மாட்டுனா அவெ”னு சேகரு சொன்னா.

            “எதுக்கு போரானுக”னு பன்டுதரு கேட்டா. ஒத்தக் கையில சீட்ட வச்சுகிட்டு. புளிய மரத்துல தொட்டு வெளாட்டு வெளாடும் போது கீழே விழுந்து ஒரு சோத்துக் கையி ஒடஞ்சு போச்சு.

            “கென்னடி மகெனுக்கு கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்க. பாவம் அந்தப் பிள்ள தாலுக ஆபிஸ்சுக்கு நடைய நடந்ததுதா மிச்சம்”னு ஐஸ்டின் மச்சா சொன்னாரு.

            “பறப் பெயலுகளுக்கு இந்துனு சர்டிபிகேட் போட்டுக்குடுக்க தாசில்தாருக்கு கடுப்பு”னு கொழந்த மச்சா சொன்னாரு.

            “ஏதோ பள்ளிக்கொடத்துக்கு காலேஜ்க்கும் படிக்க அந்த சர்டிபிகேட் பயன்படும்”னு விக்னேஷ் கெழவரு நாலு சீட்ட எறங்குனா.

            “அந்தா கருவா போரான்ல. அவெ கிருத்தவதா. ஆனா வீட்டுல குடிக்க கஞ்சி இல்ல. எல்லா எக்சாமையும் துட்டக் கட்டி எழுதுரா. இன்னேரம் எஸ்.சி.னா ப்ரியா பரீச்ச எழுதி பாசும் ஆகிரும்பா. பி.சி.னால படிச்சிகிட்டு எழுதிக்கிட்டு இருக்கா. தலித் கிருத்தவங்களா எஸ்.சி. யாத்தா மாத்துனதா என்ன”னு பரலோகம் சொல்லிகிட்டு இருந்தா.

          பேச்சு மட்டு நிக்கவே இல்ல.

            கருவாய இவெனுககிட்ட வரவும் ஒரு பேப்பர பையிலருந்து எடுக்கும்போது “இது என்னதுடா”னு செல்லத்துரக் கேட்டா.

            “ஏ அக்கா மகளுக்கு இன்கம் சர்டிபிகேட் வாங்கனும். இதோட அப்பிடியே அதையும் கேட்ருவோம்”னு சொல்லிட்டு கம்மா கரவழி நடந்தா. “பாத்தையா. காரியமாத்தா இருக்கானு”னு செல்லத்துர கட்டுட்ட சொன்னா.

            “விடுணா. இன்கம் சர்டிபிகேட் தானே”னு கட்டு செல்லத்துரக் கூட நடந்து கம்மா கரைக்கு போனானுக.

            அப்ப பள்ளிக்கொடத்துக்கு போகாம கென்னடி மூத்த மகெ கெணத்துல குளிச்சுட்டு வெறும் டவுசரோட ஓடியாந்துகிட்டு இருந்தா. இதப் பாத்த கருவாய. ”இவெனுக்காகவா போகப்போரம்”னு கட்டுட்ட கேட்டா. அவெ பள்ளிக்கொடம் போகாதது கருவாயனுக்கு கோவம். 

            “இவனுக்கு இல்ல. இந்தக் கண்டாரோளி பள்ளிக்கொடத்துக்கு எங்கப் போரா. அவெ அய்யா சனந்திர இவென அடிச்சும் பாத்துட்டாரு. இவெ கேட்டப்பாடு இல்ல. அவரு மகெ எளையவானுக்கு. அவெ சாந்தரம் வீட்டுக்கு வந்தா புத்தகத்த எடுத்து தெருவுல படிக்கிறா. டெய்லி என்னத்தையாவது எழுதுரா. ஒருநா என்னைய இங்கிலீசு வாசிக்க சொல்லிக்குடுக்க சொன்னா. நானும் கொஞ்ச நேரம் அவெனுக்கு சொல்லிக் குடுத்தே. இந்த போராள இவாளுக்குனா எவெ வருவா. அவெ எளையவ நல்ல படிப்பாம் போல”னு கட்டு சொல்லச் சொல்ல இவெனுக கேட்டுகிட்டு கம்மா கரையில நடந்து போரானுக. புதுப்பட்டி பஸ்டாண்டுலருந்து வத்துராப்புக்கு போகப் பஸ் டிக்கெட்டு அஞ்சு ரூவாதா. யார்ட்ட துட்டு இருக்கு. அதுனால கம்மா கரவழியா நடந்துப் போனா வயக்காட்டத் தாண்டுனதும் ஓடவரும் அதுக்கடுத்தா தாலுகா ஆபிஸ்சு. பெரும்பாலும் இப்பிடி நடந்துப் போரதுதா பக்கம். என்ன அந்த ஓடைய ஒட்டி இருக்குற காட்டுக்கிட்ட மேலப்பாளையத்து தேவமாருக்காரனுக இங்கிட்டு கூடி பள்ள பறைய நடந்து வந்தா வம்பிழுப்பானுக. ஒத்தையில சித்தையில வர்றவங்கள.

            மத்தியான வெயிலானாலும் அதத் தாங்கி கிட்டு கர வழியா நடந்து வயக்காட்டுக்கு வந்துட்டானுக. செலகாடுகல்ல கதிர அறுத்திருக்காங்க. இன்னு செல காடுகல்ல அறுக்கல. அந்தக் கதிருக நட்டம நிக்காம படுத்துக் கெடக்குதுக. நடுக் காட்டுல இருக்கிற கதிருக நின்னுகிட்டு இருக்கு. வரப்பு மேலையும் அறுத்தக் காட்டு வழியா நடந்து வர்றானுக இவெனுக. அந்த காட்டுக்கு வரும்போது பம்பு செட்டுக்கிட்ட ஒரு பெரிய உயிர்வேலி மரம் இருக்கு. அதுக்கடியில நாலு பேரு என்னத்தையோ கத்திக் கத்தி பேசிகிட்டு இருக்கானுக. ஒருத்த சட்டப் போடல. இன்னெருத்த வெள்ளக் கலர் பனியன் போட்டுரந்தா. கைலி கட்டிருந்தானுக. ரெண்டு பேரு சட்டப் போட்டுருந்த கைலியும் கட்டிருந்தானுக. நாலுப் பேரும் வாலிபப் பெயலுகதா. ஒருத்த வைக்க கட்டுல ஒக்காந்திருக்கா. ரெண்டுப் பேரு கீழ தரயில ஒக்காந்திருக்கானுக. ஒருத்த அந்த உயிர்வேலி மரத்துல சாஞ்சுகிட்டு இருந்தா.

            இவெனுக அவனுகளப் பத்தி ஏதும் நெனைக்காம கதைகளப் பேசிகிட்டு வர்றானுக. அந்த உயிர்வேலி மரத்துக்கும் ஓடைக்குப் போற பாதைக்குமான எடைவெளி பத்து பதினஞ்சு மீட்டர் தொலவுதா இருக்கும். இவெனுக கலகலனு பேசிகிட்டு வர்றதக் கேட்டதும் ஒரு பெய “ஏ எங்கப் போர”னு கேட்டா அவெ வைக்ககட்டுல ஒக்காந்திருக்க.

            என்னத்தா கூப்டுரானு மூணு பேரும் நின்னானுக. அவனுகளப் பாக்குரானுக.

            “ஒன்னத்தா எங்கப் போர”னு அவெனே கேட்டா.

            “வத்ராப்புக்கு”னு செல்லத்துர சொல்லிட்டு நகந்தா.

            “எதுக்குப் போர”னு உயிர்வேலி மரத்துல சாஞ்சுகிட்டு இருந்தவ கேட்டா இவனுகளப் பாத்தானானு தெரியல. காலுத்து கெழக்குப் பக்கமா இருக்கு.

            “அது எதுக்கு ஒனக்கு”னு கட்டு சொல்லிட்டு நடந்தா.

            “ஏலே, எதுக்கா. இங்க வா”னு ஒக்காந்ததுல ஒருத்த கூப்டா.

            “என்னது ஏலேய”னு செல்லத்துர அவனுககிட்ட போக நடந்தா. அவனுக நாலுப் பேரும் சின்ன வெடலப் பெயகதா. ஒடனே கருவாய செல்லத்துரையப் புடிச்சுட்டு “வாடா போலாம்”னு புடிச்சு இழுத்தா.

            “சுன்னி வாடா”னு அங்ன இருந்துகிட்டு வைக்கப்படப்புல ஒக்காந்தவ கீழ எறங்கிட்டு சொன்னா.

            “என்னது சுன்னியா”னு செல்லத்துர கருவாய புடிச்ச புடிலருந்து முன்னாடி எட்டு வச்சு நடக்கும்போது கருவாய அவென புடிச்சு இங்கிட்டு இழுத்தா.

            “ஏய் விடுயா. அவெ என்ன செஞ்சிருவா”னு கட்டு அவனுக முன்னாடி நடந்து போகும்போது ‘ஏலே போகாத நில்லுடா’னு கருவாய செல்லத்துரைய புடிச்சுகிட்டே சொன்னா.

            “ஏண்ணா இங்க வா”னு வெள்ள கலர்ல சுபாஷ் சந்திரபோஸ் பனியன் போட்டுருந்தவ நடந்து வரும்போது தள்ளாடுனா. நல்லா எட்டு வைக்க முடியல.

            “இப்ப என்ன ஒனக்கு”னு செல்லத்துர மொறைச்சுக்கிட்டு அவனுககிட்ட போக நடந்தா. ஆனா கருவாய விடல. அப்பிடியே அவென இழுத்துக்கிட்டு ஓடைக்கிட்ட நடந்தா.

            “அப்பிடியே போய்ரு இனிமே இங்கிட்டு வரக்கூடாது”னு ஒருத்த சிரிச்சிகிட்டு சொன்னா. இவெனுக பயந்துட்டானுகனு நெனச்சுட்டாம் போல.

            “வந்தா என்ன செய்வ”னு கட்டு நின்னுக்கிட்டு சொல்லவும் “ஏலே வாடா”னு கருவாய கூப்டா. கட்டு கருவாய கூப்டுரானு நடந்து இவெனுககிட்ட வந்து ஓடவழியா மூணுப் பேரும் நடந்தானுக.

            அவனுக சிரிச்சுகிட்டே இருந்தானுக. பயந்து போய்டாங்கனு கெட்ட கெட்ட வார்த்தையில வைஞ்சானுக.

            ஓடைய தாண்டுனா தேவமாரு தெருதா.

            “சுன்னி என்னைய எதுக்குடி இழுத்த”னு கோவத்துல செல்லத்துர கேட்டா.

            “ஏலே அங்கிட்டுப் போய் பேசுவோம். இது அவனுக தெரு”னு கருவாய சொன்னா. தெருவுல ஒரு ஆளக் காணும். ஒரு கெழவி வீட்டு முன்னாடி ஒக்காந்திருந்தா. இவெனுக தெருவழியா மேக்காம பக்க நடந்தானுக. மேக்கதா தாலுகா ஆபிஸ்சு இருக்கு.

            “அவனுக தெருனா இப்ப என்ன” ரெண்டு மூணு பெரியாளுக எதுத்தாப்ல வேலைக்குப் போய்ட்டு நடந்து வந்தாங்க. கையில மம்முட்டி தூக்கு சட்டி தோள்ல துண்டு இருந்துச்சு.

            “அங்கிட்டு வாடா. என்னனு சொல்லுரா”னு கருவாய சொன்னா.

            “இப்ப எதுக்குப் பயப்புடுற”னு கட்டு கேட்டா.

            “சுன்னி அமைதியா வா”னு சொல்லிட்டு கருவாய வேகமா நடந்தா. அவெ மட்டும் தனியா.

            இவெனுக ரெண்டுப் பேரும் அவெ பின்னாடி நடந்து போய்ட்டு இருந்தானுக.

            தாலுகா ஆபிஸ்கிட்ட வரவும் “இப்ப சொல்லுரையா”னு செல்லத்துர கேட்டா.

            “அவனுக தேவமார்காரனுக”

            “அது மொதையே தெரியும். ஒருத்த சந்திரப் போஸ் பனியன் போட்டுருந்தா. இப்ப என்ன”னு கட்டு சொன்னா.

            “அதுல ஒருத்த ஏ கூடப் படிச்சவ. படிக்கும்போது கஞ்சா குடிப்பா. இப்பையும் அவனுக கஞ்சா குடிச்சுகிட்டுதா நம்மட்ட வம்பு இழுத்தானுக”னு கருவாய சொல்லிட்டு அங்ன இருந்த வேப்ப மரத்துகிட்ட ஒக்காந்தா.

            “நம்ம வம்பு இழுக்கலைல”னு செல்லத்துர சொன்னா.

            “நம்ம சண்டப் போட்டா. இப்ப போலீஸ்கார நம்மளத்தா குத்தமா பாப்பானுக. அதுபோக தெருவே பக்கத்துல இருக்கு. எதுக்கு வம்புனுதா வரச் சொன்னே”னு கருவாய சொன்னா.

            “திரும்ப போனா என்ன பண்ணுரது”னு கட்டு கேட்டா

            “திரும்ப போவோம் அவனுக இருந்து இதே மாதிரி சல்லித்தனம் பண்ணானுக அடி வாங்கு வானுகடா. அவனுகள அடிச்சுப் போட்டு அப்பிடியே நம்ம ஊருக்குள்ள போய்றலாம்”னு கருவாய சொன்னா. அவெ சொன்னது சரினு எல்லாத்துக்கும் பட்டுச்சு.

தாலுகா ஆபீஸ்க்கு உள்ள போனானுங்க. உள்ள போகும்போது கைலிய எறக்கி விட்டானுங்க. ஒரு டேபிள் சேர். அந்தச் சேர்ல அவர் ஒக்காந்து இருந்தாரு. கெழக்க பாக்க. அவர் தலைக்கு நேர இந்து சாமி படம் வரிசையா இருந்துச்சு. எளவட்ட மாதிரிதா இருக்காரு பாக்க. ஆனாலும் வயசானவர்தா. கட்டுப் போனதும் “வணக்கம் சார்”னு சொன்னா.

“என்னப்பா”

“சார் நாங்க புதுப்படிலருந்து வறோம். இந்த மாதிரி இந்த பையனுக்கு நீங்க எஸ்சி சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொன்னீங்களாமே”

“அதுவா அந்த அம்மா வந்து அடிக்கடி கேட்டுகிட்டு இருந்துச்சு. கிறிஸ்தவத் தெருக்குள்ள எப்பிடி எஸ்சி இருப்பாங்க. அதும் இந்து.”

“சார் அவங்க எங்க சமூகம்தா. ஆனா அவங்க கிறிஸ்தவங்க இல்ல. இந்துதா”

“அது எப்பிடி நீங்க சொல்றீங்க”

“நாங்க ஒரே தெருவுலதா சார் இருக்கோம். எங்களுக்கு தெரியாதா. அந்தப் பெய படிக்கிற பெய. நீங்க இந்த சர்டிபிகேட் குடுத்தீங்கன்னா கொஞ்சம் ஒதவியா இருக்கும்.”

“நாளைக்கு அந்த அம்மாவ வர சொல்லுங்க. நா பேசிட்டு கையெழுத்து போட்டு விடுறே”.

“சரிங்க சார”னு கட்டுச் சொல்லி முடிச்சா

மூணு பேரும் “நன்றி சார்”னு சொல்லிட்டு பேசாம வெளியே வந்தானுங்க. இந்தா வந்து  சொல்லவும் கையெழுத்து போடுறேன்னு சொல்லுறா. இப்ப போய் நாளைக்கு அவள இங்க வர சொல்லணும். ஒரே தெருவுல இந்துவும் கிறிஸ்டின் இருக்க மாட்டானுகளா. இந்த சர்டிபிகேட் தர இவனுகளுக்கு என்ன பாடுனு பாரு. ஏதோ இவனுக காசு பணத்தக் கேட்டது மாதிரி பேசுறானுக. இன்னைக்கு மட்டும் தர மாட்டேன்னு சொல்லிருப்பா நாளைக்கு இன்னும் பத்து பேர கூட்டிட்டு வரணும். நம்ம படிக்கிறதுலையும் அரசாங்கம் குடுக்கிற சலுகைகள வாங்குறதுல இவனுகளுக்கு பொச்சு எரிச்சல் அப்பிடி இருக்கு. என்னமோ இவெ அப்ப வீட்டு காச வாங்குறது மாதிரினு இப்பிடியே பேசிக்கிட்டு அந்த ஓடைய தாண்டி வரும்போது அவனுக இருக்கானுகளானு பாத்தானுக. இருந்தா எப்பிடியும் அடிக்கனும்னுதா இருந்தானுக. பெற அவனுக இல்லாததுனால இந்த சர்டிபிகேட் பத்தி பேசிகிட்டு வந்தானுக. கட்டு வீட்டுக்கு வரவும் அவா கிட்ட சொன்னா. அவளும் சரின்னு சொல்லிட்டு அடுத்தநா போய் சர்டிபிகேட் வாங்க போனா.

00

அ. பிரகாஷ்

நான் “கிணத்து மேட்டுப்   பனமரம்” சிறுகதை தொகுப்பு ஒன்று எழுதி இருக்கிறேன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *