இப்படி ஒரு உலகத்துக்கு – இது வேறொரு உலகம் – வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டால் எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கும் என்று தோன்றியதால் அதை அணிந்திருந்தான். எல்லாம் கறுப்பாகத் தெரிந்தன. அதுபற்றி அவன் கவலைப்படவில்லை.
இந்த உலகத்துக்குள் எப்படி நுழைந்தோம் என்று யோசிப்பதற்குள் என்னென்னவெல்லாமோ நடந்து கொண்டிருந்தன. முதலில் கண்ணில் பட்டது, இந்த நகரத்தில் அங்கங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள். ‘இங்கே எந்தச் சட்டங்களும் இல்லை. எல்லாச் சுதந்திரங்களூம் உண்டு’ என்று பெரிய எழுத்துக்கள் கண்களை நிறைத்தன. ’எல்லாச் சுதந்திரங்களும்’ என்றால் என்னவென்றே அவனுக்குப் புரியவில்லை. எல்லாமே அவனுடைய ஊரிலிருந்தது போல்தான் இருந்தன. ஆனால் அந்த அறிவிப்புப் பலகைகள் அவனை அதிகமாகத் தொந்தரவு செய்தன. அவனுடைய ஊரில் இருமுவதற்கும் தும்முவதற்கும் கூடச் சட்டங்கள் இருந்தன. ஏன் மூச்சு விடுவதற்குக் கூடப் பயிற்சி அளிக்க ஒரு வணிகச் சாமியார் இருந்தார். பயிற்சிக் கட்டணம் ஐயாயிரம் ரூபாயில் அரசாங்கம் பாதியைத் திரும்பக் கொடுத்துவிடும். ஆனால் எல்லோருக்கும் பயிற்சி கட்டாயம். மற்றவற்றைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். கதையைப் படிக்க முடியாமல் துயரப்படுவீர்கள்.
அது ஒரு முக்கிய வீதியாக இருக்க வேண்டும். பலரும் பலவிதமான ஆடைகளோடு திரிந்து கொண்டிந்தார்கள். சிலர் ஆடைகள் எதுவும் அணியாமலும் போய்க் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் யாரும் சட்டை பண்ணுகிறமாதிரி உற்று நோக்கவில்லை. புகை பிடித்துக் கொண்டிருந்த சிலரிடமிருந்து போதை மருந்தின் வாசனை அல்லது துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. இளைஞர்கள் தாடி வைத்துக் கொண்டிருந்தார்கள். பலர் தலைமுடியை விதவிதமான வழிகளில் வெட்டிக் கொண்டும், மழித்துக் கொண்டும், நீட்டிக் கொண்டுமிருந்தார்கள். சில பெண்களின் தோளில் குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு மெல்லச் சந்தேகம் வரத் தொடங்கியது. ‘சொந்த நாட்டில் இருக்கிறோமா அல்லது வேறு நாட்டிலா?’
திடீரென்று பசிவயிற்றைக் கிள்ளியது. உணவின் வாசனை வந்ததுதான் காரணமாக இருக்க வேண்டும். சோற்றின் வாசனை, குழம்பின் வாசனை, கறிக்குழம்பின் மணம்… கடை வீதியில் நின்று உணவுக் கடைகளை கவனித்தான். அந்த சுற்று வட்டத்தில் பல கடைகள் தெரிந்தன. சாப்பாட்டுக் கடைகளிலிருந்து வெளியே வருகிறவர்கள் யாரும் கல்லாப் பெட்டிக்காரர்களிடம் காசோ பணமோ கொடுக்கவில்லை. ஏதோ நம்பரைச் சொல்லிவிட்டு வந்தார்கள். பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். பிறகு கடைக்குள் போய் மதிய உணவு அருந்தினான். சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது பர்ஸை எடுத்துத் திறந்தான். கல்லாப் பெட்டியில் இருந்தவன் அவனை வினோதமாகப் பார்த்தான். கண்ணாடி அணிந்த மனிதன் – அவனுக்குக் காமேஷ் என்று பெயர் வைப்போம் – தமிழ்நாட்டுக்காரன் அல்லவா? – ‘எவ்வளவு?’ என்று கேட்டான். அங்கே உட்கார்ந்திருந்தவன் இவ்வாறு சொன்னான் “நீங்கள் எங்கள் விருந்தினர். வெளியூர்க்காரர் என்று தெரிகிறது. விருந்தினர்களுக்கு இங்கே உணவு வழங்கப்படும்’. ‘என்ன, பணம் தர வேண்டாமா?’ என்று கேட்டான். ‘ஆமாம், உள்ளூர்க்காரர்களுக்கும் கிடையாது, இந்த ஊருக்கு வருகிறவர்களுக்கும் கிடையாது. ஊர்க்காரர்கள் அவரவர் வீட்டு எண்களைச் சொன்னால் போதும். நாங்கள் குறித்துக் கொள்வோம். நகராட்சி அதற்கான கட்டணத்தை எங்களுக்கு வழங்கிவிடும்.”
”ஓ! அப்படியா?”
இங்கே எங்கள் ஊரில் பணப்புழக்கம் கிடையாது. ‘கிரெடிட்’ என்று சொல்லும் முறை இருக்கிறது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் கிரெடிட் முறையில் வழங்கப்படும். அதை நகராட்சி தனது கணினிக் கணக்கில் ஏற்றிக் கொள்ளும். செலவு செய்ய வேண்டிய இடத்தில் அதன் விலை அல்லது கட்டணம் உங்கள் கணக்கி்ல் கழித்துக் கொள்ளப்படும். இந்த ஊரில் எல்லா வணிக நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் இப்படித்தான் செயல்படுகின்றன.
இதில் கடன் கிடையாது. குறைந்த சம்பளம், பேரம் என்று பேசுவது கிடையாது. அதீத லாபம் அடிக்க முடியாது. எல்லாம், ஆர்டிஃபீசியல் இண்டெலிஜென்ஸ் இயக்கும் கணினிகளால் இயங்குகின்றன.”
காமேஷுக்குத் தலை சுற்றியது. ‘இப்படியும் ஒரு ஊரா? இப்படி நடப்பது இந்த மாநில அரசுக்குத் தெரியுமா?’
’தெரியும் ஆனால், ஒரு நிபந்தனையின் பேரில் இதை அனுமதித்திருக்கிறார்கள். வேறு யாரிடமும் இது பற்றிப் பேசக் கூடாது. இந்த முறையைச் சொல்லித் தரக் கூடாது. இந்த ஊருக்குள் மட்டும் நடத்திக் கொள்ளலாம்.’
”இது நல்ல முறையாக இருந்தால், எல்லா ஊர்களிலும் நடத்தலாமே?”
”அதை அரசு விரும்பவில்லை. எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டால், அரசு என்ற ஒன்றுக்கு வேலை குறைந்துவிடும், அதிகாரம் குறைந்துவிடும் என்ற பயம்.
”ஏன்?”
”அதிகாரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் மக்களை அடக்கியாள முடியாது. நாட்டில் எதற்கு விதி முறைகள் இருக்காது”
காமேஷுக்குக் கோபம் வந்தது. “அதிகம் விதி முறைகள், அதிகாரிகள் இல்லாவிட்டால் நல்லது தானே?”
”விதி முறைகள் அதிகமாக இருந்தால்தான் தண்டிக்கும் அதிகாரம் அதிகமாக இருக்கும். அது இருந்தால்தான் அவர்கள் ஆள முடியும். இது புரியவில்லையா?”
”எதற்கும் விதிகள் இல்லையென்றால், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா?”
”ஆமாம், இருந்து கொள்ளலாம்.”
”ஏன், குடும்பம், மனைவி, மக்கள் நகராட்சி, மாநிலம் என்ற ஆட்சி அமைப்புக்கள் எதுவும் தேவையில்லையா?”
”மனிதனுக்கு மனிதன் அன்பாக நடந்து கொண்டால் சொத்துக்கள் யாருக்கும் இல்லையென்றால், சொத்துக்களைச் சேர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியாதென்றால், சட்டங்கள், குடும்பங்கள், எல்லாவற்றின் பங்கும் குறைந்துவிடும்”
காமேஷுக்குக் கிறுக்குப் பிடித்துவிடும் போலிருந்தது. “சொத்தும் வைத்துக் கொள்ள முடியாதா? அதை வாரிசுகளுக்கு எழுதி வைக்க முடியாதா?”
”முடியாது. நீங்கள் சம்பாதிப்பதை நீங்கள் அனுபவிக்கலாம். மீதம் இருந்தால், நகராட்சிக்குக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் யாருக்கு உங்கள் ‘கிரெடிட்டுகள்” தேவையோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்.”
”யோசிக்கவே முடியவில்லை. இப்படியெல்லாம் சாத்தியமா?” என்று சொல்லிவிட்டு வானத்தையும் பார்த்தான். கடவுள் இப்படியும் படைத்திருக்கிறானே!
”மனிதர்கள் நினைத்தால் … சமூகத்தைக் வெவ்வேறு வழிகளில் கட்டமைக்க முடியும். எத்தனையொ ஆயிரம் வழிகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் பற்றி யோசித்தால் தானே! அமெரிக்காக்காரனோ, ரஷ்யாக்காரனோ, இந்தியர்களோ இதுவரை யோசித்ததுமாதிரிதான் மற்றவர்களும் யோசிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறதா என்ன? நம்மால் நமக்கு ஏற்ற மாதிரி, நவீன உலகத்தை மாற்றியமைக்க முடியும் என்றுதான் இது காட்டுகிறது.
காமேஷுக்கு இதற்கு மேல் அந்த ஊரில் இருக்கப் பிடிக்கவில்லை. “அது என்ன? எந்தச் சட்டமும் இல்லாத ஊர்? அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்களாம். எல்லாம் புதியதாக இருக்கிறதே!” என்று யோசிக்கும் போதே இன்னொன்றும் தோன்றியது.
”நாந்தான் வௌவால் போலத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறேனோ? வௌவால்கள் இந்த உலகத்தை விவரித்தால் என்ன சொல்லும்? தலைகீழாகத் தொங்கும் அதற்குக் கண்களும் கிடையாது. அதே போலத்தான் நானும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறேன்.”
உடனே கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி எறிந்தான். இப்போது எல்லாம் அதனதன் வண்ணத்தில் தெரிந்தது. “இது போதுமப்பா! ரொம்பக் குழம்பிவிட்டது. இந்தக் கண்ணாடியும்… வௌவாலும்” என்று பெருமூச்சுவிட்டான்.
தனது ஊருக்குள் நடப்பதை அப்போதுதான் உணர்ந்தான். மண்டைக்குள் பெருவெளிச்சம் பரவியது போலிருந்தது. பணமிருந்தால் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்பது மனிதர்களாகப் பழகிக் கொண்ட நடைமுறையல்லவா? அதை மாற்றி, பணமும் அதன் விழுமியங்களும் இல்லாத உலகம் சாத்தியம்தானே என்று தோன்றியது. மனதுக்குள் தோன்றிய வெளிச்சத்தைப் ஒரு விளக்கில் பிடித்து ஒரு புத்தகத்தில் அதை ஏற்றி வைத்தான். அது படமாக இருந்தாலும் எரிந்து கொண்டுதான் இருந்தது.
அது அவன் வாழ்நாள் வரை அவனிடம் இருந்தது. அதற்குப் பின் அந்த தீபத்தை மற்றவர்கள் வரையத் தொடங்கினார்கள். அவர்களின் மனதில் அந்தத் தீபங்கள் எரிந்து கொண்டு இருந்தன. எல்லோர் மனதிலும் அந்தத் தீபம் எரியும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

வேலு இராஜகோபால்
இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.