1
அற்புதம் அபாரம்
என்பதற்குப் பதிலாக
அற்புதம் அபராதம்
என்று சொல்லிவிட்டார்
பேச்சாளர்
டங்க் ஸ்லிப்
கூட்டம்
கைதட்டி ஆர்ப்பரித்தது
அபாரம்.
2
தமிழில் மட்டும்
மதிப்பெண் குறைந்துவிட்டது
வருத்தமில்லை குடும்பத்தாருக்கு
“அவனுக்கு
தமிழ் மட்டும் வராது”
பெருமிதம் குறையாமல்
பகிர்ந்தார்கள்
இப்படித்தான்
பல தமிழ்க் குடும்பங்கள்
இங்கே
டமில் டுமீல்.
3
அவனுக்கு
கிறுக்குப் பிடித்துவிட்டதாக
உரக்கப் பேசிக்கொண்டார்கள்
எல்லோரும் கூடியிருக்கும்போது
உண்மையை
வழிய, வழிய முன்வைத்தால்
சொல்லாமலா இருப்பார்கள்?
றுக்குப்பிடி.
4
அவரும் எழுத்தாளர்
இவரும் எழுத்தாளர்
ஒருவருகொருவர்
எதிர்கொள்ள விரும்பவில்லை
வழிமாறிச் சென்றார்கள்
வேறிருவர்
இவர்களிருவரையும் குறுக்கிட்டார்கள்
அவர்களும் எழுத்தாளர்கள்தான்
சென்ற வழியிலேயே
இருவரும் திரும்பினார்கள்
அதே புள்ளியில் மீண்டும்.
இருவரது எழுத்துகளும்
வெவ்வேறு புள்ளியில் நகர்ந்தாலும்
இறுதியில்
ஒரே புள்ளியில் இணைவதாக
ஒரு விமர்சகர் எழுதியிருந்தார்.
இல்லையென்று மறுக்க முடியுமா?
5
கலைந்த முடியை
நீ சரி செய்யும் போது
யாரோ யாருடனோ
சண்டையிடுகையில்
“மயிரே போச்சு” என்று சொன்னால்
நான் கொந்தளிப்பாகிறேன்
நீ சரி செய்
அவர்கள் கிடக்கிறார்கள்
மயிரே போச்சு.
6
புத்தகங்களில்
கையெழுத்திட்டுக் கொடுக்கும் போது
அவரிடம் ததும்பும்
வாசக நேயம் பற்றி
ஒரு புத்தகமே எழுதலாம்
எத்தனை பக்கங்கள்
அவருக்கு
புரட்டினால்தான் தெரியும்.
7
நிகழ வேண்டிய தருணத்தில்
நிகழவில்லையெனில்
மனம் கலங்குகிறது
எப்போதும்
அப்படித்தான் நிகழும் என்று
உறுதியாகத் தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும்
அதே இடத்தில் போய்
படுத்துக்கொள்கிறது
எஜமானை எதிர்நோக்கும்
நாயைப் போல.

சுகதேவ் –
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

