1
மூக்கிலிருந்து நீர்வழிந்தால்
அந்த சிறப்பு மருத்துவமனை
மூக்கு புடைத்தால்
வேறு மருத்துவமனை
மூக்கு அடைத்தால் வேறு
மூக்கு நுனியில் வேர்த்தால் வேறு
மூக்கு வடிவ மாற்றுக்கு வேறு
மூக்கில் கொசு அமர்ந்தால் வேறு
கடித்தால் வேறு
மூக்குக்கு மேல் கோபம் வந்தால்…
அதற்கு ஏற்கெனவே
வேறு மருத்துவமனை இருக்கிறது
மனிதர்களை
பகுத்துப் பிரித்து
அதனிலும் பிரித்துப் பிரித்து
காக்கிறது
மருத்துவ உலகம்
உடலெங்கும்
வெவ்வேறு நிபுணர்களின்
கைவண்ணம் படிந்தால்தான்
வாழ முடியும்
ஒரே நிபுணரை நம்பியிருந்தால்
தவணை முறையில்
பிரியக்கூடும்.
2
கிழக்கு வாசல்
திறந்திருக்கிறது
என்றாலும்
அந்த வழியாக
எல்லோரும் போகமுடியாது
வீட்டுக்குவீடு
வாசப்படி.
3
கலைந்த மேகங்களை
உற்றுக் கவனித்தவருக்கு
சிந்தனை கைகூடியது
பொழிந்தது எழுத்து
கழிந்தது பொழுது
நாளையும்
கலைய வேண்டும்
மேகம்
இல்லையெனில்
கூடாது
மீதம்.
4
தரங்கம்பாடி வருகிறான்
அரங்கம்பாடி
வாடி என் தோழி
பணி அழுத்தம்
பனியா கரைந்து போகும்
மன அழுத்தம்
மாயமாய் மறைந்து போகும்
யோசிக்காதே…
உன் பொழுதின் சுவை
முன் எப்போதையும்விட
மேலே ஒரு படி
அதெப்படி என்றெல்லாம்
கேட்காதே…
அப்படித்தான் அது.
5
படிக்கட்டில் அமர்ந்து
குளித்துக் கொண்டிருந்த
குறுக்கு துரை
வழுக்கி நீரில் விழுந்துவிட்டார்
நல்வாய்ப்பாக
ஆற்றில் நீர் ஓட்டமில்லை
பிழைத்துக் கொண்டார்
வற்றினாலும்
மனிதனுக்கு
ஆறு உயிர்நாடி
ஜோசியக்காரன் சொன்ன
கண்டம் கழிந்துவிட்டது என்ற
பூரிப்புடன் படியேறினார்
மேல் படியிலிருந்து
சாலையில் கால் பதித்து
நடக்க எத்தனிப்பதற்குள்
பின்னாலிருந்து
கட்டுப்பாடிழந்து வந்த
வாகனம்
மோதித் தூக்கியெறிந்ததில்
கடைசிப் படிக்கட்டில் விழுந்தார்
தலையில் பலத்த அடியுடன்
நினைவிழந்து
நீரில் சரிந்தார்
இயற்கையிலிருந்து
தப்பித்தாலும்
மனிதனிடம் முடியாது.
*****

சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).