சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் AC. Chair Car ன் C7 கம்பார்ட்மெண்டின் பதினான்காவது இருக்கை ஜன்னல் ஓரமாக எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களுக்குப்பிறகான இரயில் பயணமாதலால் ஒரு குழந்தையின் குதுகலத்துடன் பயணமானேன். ஜன்னலருகே அமர்ந்தபோது வெளிக்காற்று வரவில்லை. இரயில் நகர ஆரம்பித்தால்தான் காற்று வரும் என்பதால் காத்திருந்தேன்.
பதின் மூன்றாவது இருக்கைக்கு வந்து அமரப்போகும் அந்த நபரைப்பற்றிய எண்ணவோட்டங்களைத் தவிர்க்க முடியவில்லை. ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் அநாவசிய பேச்சு கொடுக்காதவராக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இருக்கையில் அமரும்போது எனது வரிசைக்கு இணையாக இடப்புறம் ஒரு புதுமணத் தம்பதியர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. இருவர் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருந்தது. இரயில் நகரத் தொடங்கியது. எதிர்பார்த்திருந்த காற்றும் முகத்தில் வீசியது.
முன் வரிசையில் கருஞ்சாம்பல் நிறத்தில் சீருடை அணிந்த சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் வீரர்கள் நால்வர் கம்பீரமாக அமர்ந்திருந்தனர். அவர்களது பூட்ஸ் முதல் தொப்பி வரையிலான சீருடையையும் கூடவே மிடுக்குடன் அழகாக ட்ரிம் செய்யப்பட்டிருந்த ‘ஹேர் கட்’ டையும் ஆர்வமாகப் பார்த்தேன். இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறை ஆகியவற்றில் பணிபுரிபவரின் சீருடையும் உடலைக் கட்டுகோப்பாக வைத்திருத்தலும் எனக்குப் பிடித்தமானவை. அவர்களது இடப்புற தோளில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த, இரு கரங்களாலும் பிடிக்கப்பட்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் வகைமையை இதுவரையில் ஆர்மியில் கூட நான் பார்த்திருக்கவில்லை. அவர்களைப்போலவே அத்துப்பாக்கிகளும் என்னை வசீகரித்திருந்தன .
எனக்கு முன்னால் நேர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தமிழர். மற்றவர்களில் ஒருவர் மலையாளியாகவும் இருவர் வட இந்தியர்களாகவும் இருந்தனர். அவர்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்தாலும் இடையிடையே தங்கள் அதிகாரிக்கு அடிக்கடி அப்டேட் செய்து கொண்டே வந்தார்கள்.
இரயிலில் உணவு தருபவர் ஒவ்வொருவர் பெயராக கேட்டுக்கொண்டே அவரவரக்குரிய உணவை விநியோகித்தபடி என்னிடம் வந்தார். நான் ஆர்டர் செய்யவில்லை என்றேன். இருப்பினும் ஒரு இரயில் நீர் பிளாஸ்டிக் பாட்டிலை என்னிடம் தந்துவிட்டு சென்றார். வீட்டிலிருந்து மனைவி கொடுத்தனுப்பிய தாமிரக் குடுவை நிறைய தண்ணீர் என்னிடம் இருந்தது வேறு விஷயம். அப்போது ஒர் இளைஞன் அந்த வீரர்களுள் ஒருவரிடம் “இது என்ன மாடல்” என்று துப்பாக்கியைப் பார்த்துக் கேட்டான். என்ன மாடல் என்று அந்த வீரர் சொன்னாரா இல்லையா என்பதை உறுதியாக சொல்லமுடியாதபடி அவருடைய பதில் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவசர அவசரமாக அந்த இளைஞன் டாய்லெட்டை நோக்கி ஓடினான். எனக்கு ஏற்கனவே இவர்களுடன் சேர்ந்து செல்ஃபி ஒன்று எடுக்கவேண்டும், அதை என் மனைவிக்கு அனுப்பி என் மகனிடம் காண்பிக்க சொல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்த இளைஞனின் கேள்வியால் சற்று கடுப்பான அந்த வீரர் என்னனைப் பார்த்த போது என் ஆசையில் மண்ணள்ளிப் போட்டாயிற்று என நினைத்துக்கொண்டேன்.
இதனிடையே சேலம் ஜங்ஷனில் இரயில் நின்றது .எனக்கு முன்னால் இருந்த தமிழ் வீரரும் அவரது நண்பரும் கீழிறங்கினர். என் இருக்கை ஜன்னலின் இடப்பக்கமாக ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கையில் ஒரு கட்டைப் பையுடன் நின்றிருந்தார். தமிழரின் மனைவி போலும். இரயில் கிளம்பியது. உள்ளே வந்த வீரர் கட்டைப் பையைத் திறந்து மற்ற நண்பர்களுக்குக் காட்டினார். எல்லோரும் “சேலம் மாம்பழம்” என்று உற்சாகமாக ஆளுக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டனர். அவர்களுடைய இந்த உற்சாகமான மன நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அந்தத் துப்பாக்கி குறித்தும் அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுப்பது குறித்தும் கேட்கலாம் என்று இருக்கையிலிருந்தவாறே சற்று எழுந்து அந்தத் தமிழ் வீரரை அணுகினேன் .
அவர் சற்றுமுன் எடுத்த தன் மனைவியுடனான செல்ஃபி புகைப்படத்தில் மனைவி மலர்ச்சியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. எழுந்த நான் அப்படியே இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
000

தாமரைபாதி (பெ.அரவிந்தன் )
இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள்
தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி(2021), காசினிக்காடு(2023), இங்குலிகம் (2024), தெறுகலம் (2024)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன் .