தாத்தாவுக்கு மன சஞ்சலம் அதிகமானது. தன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்று நினைத்து மனசுக்குள் மிகுந்த வருத்தமடைந்தார்.
இரவு நேரத்தில் உணவுக்குப்பின் எல்லோரும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தபோது சொன்னார்:”அப்பு, என்னால தாண்டா இப்படி ஒரு சிக்கல். அந்த வெறும்பய என்ன பண்ணப் போறானோன்னு ஒரே திகிலா இருக்குடா”.
“அவனெல்லாம் ஒரு ஆளு. அவனுக்குப் போயி பயந்து கிட்டு. அவன் ஒரு வெத்து வேட்டு. குரைக்கிற நாயி மாதிரி. ஆபிஸில விசாரிச்சு வைக்கிறன். நமக்கும் வக்கீலுங்க இருக்கிறாங்க. அதுவுமில்லாம நாம யாருக்கும் துரோகம் செய்யல. அப்புறம் நாம எதுக்குப் பயப்படனும்?”.
அப்பா தைரியமாகப் பேசி விட்டாரேயொழிய, அவருக்கும் உள்ளுக்குள் சற்றே சங்கடம் இருக்கத்தான் செய்தது.
தோசை சுடச் சுட கொதிக்கக் கொதிக்க கையில் வாங்கி, நடந்தபடியே சாப்பிடும் தாத்தாவால், இட்லியின் சூட்டைக் கூடத் தாங்க இயலவில்லை.
இப்போதெல்லாம் ஆகாரம் மிகவும் குறைந்துபோனது. காலையில் ஒரு இட்லி, மதியம் ஒரு கைப்பிடி அளவு சாதம், இரவு ஒரு தோசை அல்லது சப்பாத்தி.
பெருமாள் தாத்தாவை வரச்சொல்லி, காட்டிலேயே தங்கச் சொல்லியாகிவிட்டது. தாத்தாவுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தாத்தாவுக்கு நடமாட்டம் குறைய ஆரம்பித்தது. திடீரென ஒரு நாள்,”அப்பு, நெஞ்சு வலி தாங்க முடியலடா” என்றார்.
உடனே பக்கத்து காட்டு சேட்டு மூலமாக ஒரு வாடகைக் காரை வரவழைத்து, மணல்மேடு அருகிலுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் சேர்த்தோம்.
தாத்தாவை பரிசோதித்த டாக்டர், இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது,உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்.
அப்போது அண்ணனுக்கு திருமணம் முடிந்திருந்தது. அம்மா மட்டும் காட்டிலேயே இருந்தார். அப்பாவும் அண்ணனும் டாக்டரிடம் பேசுவதில் இருந்து, பணம் ஏற்பாடு செய்வது வரை கவனித்துக் கொண்டனர்.
நான், நண்பன் பிரகாஷுடன் வந்து தினமும் பார்த்துக் கொண்டேன். தாத்தாவுக்கு ஒரு வழியாக அறுவை சிகிச்சை முடிந்தது.
கண்களைத் திறந்து சில வார்த்தைகள் பேசினார். “இன்னும் ஒரு வாரம் அப்சர்வேசன்ல இருக்கட்டும்” என்று டாக்டர் சொன்னார்.
தாத்தாவை அப்படிப் பார்ப்பதற்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது.
அவரின் வாழ்வில் தான், எத்தனை ஊர்கள், எத்தனை பிரசங்கங்கள், எத்தனை தலைவர்கள், எத்தனை மனிதர்கள். பெருந்தலைவர் காமராஜர்,”வாடா சொக்கலிங்கம்” என்று அழைப்பதற்கு எத்தனை கொடுப்பினை வேண்டும்.
நாமகிரிப்பேட்டை சீராப்பள்ளியிலிருந்து விடுதலைப் போராட்டக் களத்தில் போராடிய ஒரே காங்கிரஸ் தொண்டர் தாத்தா.
தாத்தாவுக்கு சிறுவயதிலிருந்தே தலைவர்களின் பேச்சைக் கேட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீது அளவில்லாத பற்று ஏற்பட்டது.
ஊர் ஊராகச் சென்று விடுதலையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார். யாரிடமும் காசு கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக் கொண்டு, இடமிருக்கும் திண்ணையில் தூங்கியபடி, தமிழ்நாடு முழுவதும் அலைந்திருக்கிறார்.
அவரது தந்தையும் தாயும் தனது மகனின் நிலையைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள்.ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால், பொறுப்பு வந்து விடும் என்று நினைத்து, ஆயாவுக்கு மணம் முடித்து வைத்தார்களாம். ஆனால் எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே. திருமணமான இரண்டாம் மாதத்திலேயே தனது சுற்றுப்பயணத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டார்.
ஆயாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேளை, உறவினர்கள் அனைவரும் அதே ஊர் என்பதால், குழந்தைகளை வளர்க்க முடிந்தது.
ஆயா பணியாரம் சுட்டு விற்றிருக்கிறது. பிள்ளைகளை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பி வைத்து, எப்படியோ சமாளித்து விட்டது.
பிரசங்கம் முடிந்து அவ்வப்போது வீட்டுக்கு வந்து போவாராம் தாத்தா.
ஒரு முறை, வேலூர் சிறையில் நீண்ட கால சிறைவாசம். ஏறக்குறைய இரண்டு வருடங்கள். ஆயா தவித்துப் போய் விட்டது. தாத்தாவுடன் கக்கன் முதலான தியாகிகளும் சிறையிலிருந்தனராம்.
ஒரு நாள் வெள்ளைக்கார ஜெயில் சூப்பிரண்டு வருகை தந்திருந்தார். அவர் பெயர் டவ். தாத்தாவின் அறையைச் பார்வையிடும் போது, தாத்தா கத்தியிருக்கிறார்:”டவ், வவ் வவ். டவ், வவ் வவ்”.
அவருக்கு வந்ததே கோபம். “டாமிட்” என ஒரு தாவு தாவி, பிரம்பால் அடி வெளுத்திருக்கிறார். கடுமையான தண்டனைக்குப் பரிந்துரை செய்யப் போவதாகப் பேச்சு அடிபட்டது.
அப்போது, சிறையிலிருந்த தலைவர்கள் எல்லாம் ஒன்று கூடிப் பேசி, “சொக்கலிங்கம் மனநிலை பாதிக்கப்பட்டவன். பௌர்ணமி நாளில் அவன் இவ்வாறு குலைப்பது வழக்கம்” என்று சொல்லி விடலாம் என்று முடிவு செய்து, ஜெயிலர் வழியாக மன்றாடினார்களாம்.
இறுதியில் இரண்டு மாதங்கள் தண்டனை நீட்டிப்போடு தப்பித்தாராம்.
பார்த்துப் பார்த்து வளர்த்த இரண்டு பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ள, தாத்தாவுக்கு மிகுந்த மன வேதனை.
பத்மா அத்தை அவ்வளவு அழகு. போட்டோவில் தான் பார்த்திருக்கிறேன். கருப்பு வெள்ளையில் செல்லரித்துப் போன, ஒரு போட்டோவில் தேவதை போல் இருந்தார். ஆனால் வயிற்று வலி தாள முடியாமல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்றி வைத்துக் கொண்டாராம்.
அப்பாவின் தம்பி குணாளன் அப்பாவை விட மிகவும் அழகாக இருப்பாராம். பழைய போட்டோவில் பார்த்திருக்கிறேன். நடு வகிடு எடுத்து சீவியிருப்பார்.
படிப்பு சரியாக வராமல் மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், ஏதோ பணம் குறைகிறது என்று முதலாளி தாத்தாவிடம் சொல்ல, கோபத்தில் கடையிலேயே அனைவரும் பார்க்க, அடித்து விட்டார் தாத்தா.
தாத்தா நாமகிரிப்பேட்டை சென்று விட்டுத் திரும்பி வருவதற்குள், சித்தப்பா அங்குள்ள பொதுக் கிணற்றில் விழுந்து, இறந்து விட்டார். வந்து பார்த்து விட்டுத் தாங்க முடியாமல், வாயை வைத்து உறிஞ்சி உறிஞ்சி நீரை எடுத்து துப்பினாராம் தாத்தா. ஆனாலும் போட்டுடைத்த பாண்டத்தைத் திரும்பச் சேர்க்க முடியாதல்லவா. கொஞ்ச நாட்களுக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். கடைசி வரையிலும் இந்த இரண்டு இறப்புகளும் தாத்தாவின் மனதை விட்டு நீங்கவில்லை.
ஆனாலும் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், விடுதலைக்காகப் போராடுவதை நிறுத்தவில்லை.
ஆயா சீராப்பள்ளியை விட்டு, சேலம் அம்மாபேட்டைக்கு வந்து சேர்ந்தது. அப்போது சின்ன அத்தைக்குத் திருமணம் நடந்திருந்தது. பெரிய அத்தை அம்மா பேட்டையில் இருந்ததால், ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, சீராப்பள்ளி எம்எல்ஏவாக வந்த வாய்ப்பையும், தனக்கு படிப்பு இல்லை என்று மறுத்து விட்டார் தாத்தா. மூன்றாம் வகுப்பு வரையுமே படித்த தாத்தாவால், எப்படி திருக்குறள், திருவாசகம், ராமாயணம், மகாபாரதம் என்று எல்லா நூல்களையும் மேற்கோள் காட்டிப் பேச முடிந்தது என்பது மிகப்பெரிய அதிசயம். ஒரு முறை நாங்கள் கேட்டதற்கு,”அதெல்லாம் பிள்ளையார் சாமி குடுத்த வரம்” என்று மட்டும் சொன்னார்.
தியாகிகள் நில ஒதுக்கீட்டில், மலை அடிவாரத்தில் அமைந்த, ஒன்றுக்குமே உதவாத,மேட்டாங்காடு ஒதுக்கப்பட்டது. அவருக்கு சமூக நல ஊழியர் என்ற பெயரில் சில வருடங்களுக்கு ஒரு வேலை கிடைத்தது.
அதற்குள் அப்பா, பட்டுக்கோட்டையில் டிரெய்னிங் சென்று, முட்டி மோதி, கிராம நல ஊழியராக வேலை வாங்கி விட்டார்.
இப்படித்தான் கோதமலை அடிவாரத்தில் குடியிருக்க வந்தது.
தாத்தாவுக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்றும், கோகுலம் மருத்துவமனையில் மட்டுமே அந்த வசதி இருப்பதால், அவரை அவசர ஊர்தியில் அழைத்துச் சென்றார்கள். நாங்களும் பேருந்தில் பயணம் செய்து, கோகுலத்தை அடைந்தோம். ஸ்கேன் செய்து பார்த்து விட்டு, மூளையில் எதுவும் கட்டி இல்லை என்று சொல்லி விட்டதால் அப்பாவுக்கு சற்று நிம்மதி.
அங்கிருந்து மீண்டும் ஆம்புலன்ஸில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை.
அடுத்த நாளிலிருந்து ஒரு புதிய பிரச்சினை ஆரம்பமானது. சிறுநீர் சுத்தமாக வெளியேறவில்லை. அதனால் கழிவுகள் வெளியேறாமல் வயிறு உப்பியிருந்தது. டாக்டர் பார்த்து விட்டு, சிறுநீரக நிபுணரை வரவழைத்தார்.
அப்போது நடந்தது, இன்றும் கண் முன்னே வந்து பயமுறுத்துகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு உடம்பு தாங்காது என்பதால், கொறடா போன்ற ஒரு கருவியை வைத்து, தாத்தாவின் உயிர்நிலையை நசுக்கினார். பார்க்க இயலாமல் வெளியே சென்று விட்டேன்.
அடுத்த இரண்டு நாட்களில் நிலைமை மேலும் மோசமாக ஆரம்பித்தது. டாக்டர் அப்பாவை அழைத்துச் சொன்னார்:”எங்களால முடிஞ்சத செஞ்சாச்சிங்க. இனிமேல் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டுங்க”. அங்கேயே அழுகை வந்தது.
எங்கள் பால்யம் தாத்தாவின் கதையில் வளர்ந்தது. தாத்தாவின் கட்டிலில் நான் ஒரு பக்கம், தம்பி மற்றொரு பக்கம், படுத்திருப்போம். மகாபாரதம், ராமாயணத்தில் ஆரம்பித்து, திருக்குறள், திருவாசகம் வரையிலும் நீண்டன அக்கதைகள்.
காந்தி பற்றியும், நேரு பற்றியும் அவரின் சிறை அனுபவங்கள் பற்றியும் பல கதைகள் சொல்வார்.
அவர் நன்றாக நடமாடிய போது, ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வாங்கச் செல்லும் போதெல்லாம், நாங்கள் மூவரும் வாங்கி வர வேண்டிய புத்தகங்களின் பட்டியல் கொடுத்தனுப்புவோம். சாயந்திரம் தாத்தா எப்போது வருவார் என்று காத்திருப்போம். புத்தகங்கள் மற்றும் பழங்களைச் சுமையாகத் தலையில் சுமந்து வருவார். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், அம்புலிமாமா என்று ஒரு புதையலே அச்சுமையில் இருக்கும்.
அதையெல்லாம் வாசித்து விட்டு, நான் கதை எழுதி அண்ணன் சந்துருவிடம் படித்துக் காண்பிப்பேன். பெரும்பாலும் எல்லா கதைகளையும் நிராகரித்து விடுவான்.
கொஞ்சம் வளர்ந்ததும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும், தாத்தாவும் நானும் மாடு மேய்ப்போம். அப்போதும் கதைகள் இருக்கும்.
பன்னிரண்டாம் வகுப்பு சேலத்தில் படித்தேன். தினமும் பேருந்தில் சென்று வருவதிலேயே நீண்ட நேரம் சென்றது.
பிறகு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் அப்பாவுடன் சண்டை செய்து, தாத்தாவின் ஆதரவுடன், சேர்ந்து விட்டேன். இரண்டு பேருந்துகள் மாறிச் சென்று வந்தேன்.
சிறிது சிறிதாக தாத்தாவுடன் இடைவெளி சற்று அதிகமானது. பொறியியல் படிப்பை முடித்து, வேலை தேட ஆரம்பித்தேன். அப்போது மீண்டும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.
தாத்தாவும் நானும், எனது புரொபைல் காப்பியுடன், சேலத்திலிருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவரின் பங்களாவுக்குச் சென்றோம். தாத்தாவுக்கு எப்படியும், தலைவர் மகனின் சென்னைக் கம்பெனியில்,வேலை போட்டுக் கொடுத்து விடுவார் என்று அபாரமான நம்பிக்கை.
நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின்னர், தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பயத்தில் பேச்சு வரவில்லை. தாத்தா தான் பேசினார்.”பேரன், காலேஜ் முடிச்சு இருக்கிறான். ஏதாவது ஒரு வேலை போட்டுக்குடுத்தீங்கன்னா குடும்பத்துக்கு ரொம்ப உதவியாக இருக்கும்”. தலைவர் கடுகடுவென்ற குரலில்,’வேல கெடைக்கறது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்ல. ஏதாவது இருந்தா, நானே சொல்லி அனுப்புறன். மறுபடியும் வந்து பாக்க அவசியமில்லை.” என்றார்.
தாத்தாவுக்குக் கடுமையான கோபம். ஆனாலும் வெளிக்காட்டாமல்,”சரிங்க தலைவரே. கொஞ்சம் உதவி பண்ணுங்க” என்று சொல்லி விட்டு, வெளியே வந்து விட்டார். வீடு வரும் வரையில், தலைவரைத் திட்டித் தீர்த்து விட்டார்.
தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்தபோது, நான் திருப்பதியில் வேலையிலிருந்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்திருந்தேன் . இப்போது ஒரு வாரம் ஓடி விட்டது.
தாத்தாவை ஆம்புலன்ஸில் வைத்து, காட்டுக்குக் கூட்டி வந்து விட்டோம்.
இப்போதும் நினைவில் இருக்கிறது. தாத்தா ஒரு கட்டிலில் படுத்திருந்தார். ஆகாரம் எதுவும் இறங்கவில்லை. டாக்டர் ஒரு வாரம் டைம் என கெடு வைத்திருந்தார்.
தாத்தாவுடன் திருப்பதிக்கு தொடர்வண்டியில் சென்றது ஞாபகம் வந்தது. அப்போது இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரம். தியாகிகள் அனைவருக்கும் தாமரைப் பட்டயம் வழங்கப் பட்டது. ஓய்வூதிய உத்தரவும் வந்தது. இந்தியா முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில், பாஸ்கள் வழங்கப்பட்டது.
முதல் பயணமாகத் திருப்பதி செல்லலாம் என்றும், தாத்தாவும் நானும் செல்வதாகவும் முடிவானது. அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்த ஞாபகம்.
சேலத்தில் இருந்து ரயில் ஏறி, திருப்பதியில் இறங்கினோம். அடிவாரத்தில் இருந்து, திருமலைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி, திருமலையை அடைந்தோம். தாத்தாவுக்குக் குளத்தில் குளித்து விட்டு, சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை. செய்த மிகப்பெரிய தவறு, தொடர்வண்டி பாஸ் மற்றும் பணம் எல்லாவற்றையும் கரையில் வைத்து விட்டுக் குளித்தது. எனக்கும் அந்தளவுக்கு விவரம் போதவில்லை. அவர் சொன்னவுடன் நானும் சேர்ந்து குளிக்க இறங்கி விட்டேன். குளம் பாசி படர்ந்திருந்தது. நிச்சயமாக ஆழமான ஒன்று. படிகள் மிகவும் வழுக்கின. முழுகப் போகிறேன் என்ற உயிர்ப் பயத்தில், தாத்தாவின் கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.
ஒரு வழியாக மூன்று முறை முங்கி எழுந்ததும் மேலே வந்தோம். தாத்தா,”அய்யோ, போச்சே” என்று கத்தினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, மேலே வைத்து விட்டுச் சென்ற,ரயில்வே பாஸ் மற்றும் பணம் இரண்டும் காணவில்லை. யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரோ ஒருவர் எங்களை அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த காவலருக்கு ஓரளவு தமிழ் தெரிந்திருந்தது. தாத்தா சொல்லச் சொல்ல அவர் கம்ப்ளெயிண்ட்டைத் தெலுங்கில் எழுதி வாங்கிக் கொண்டார்.
அங்கிருந்து பணமில்லாமல் எப்படி வீட்டுக்குத் திரும்பி வருவது என்று தெரியவில்லை. வழியில் இருவரும் அமர்ந்து கொண்டோம். அப்போது ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் கழுத்தில் நகைகளுடன் கும்பலுடன் வந்து கொண்டிருந்தார்.
தாத்தா அழுகையுடன் கையெடுத்துக் கும்பிட்டவுடன், அவர் எங்களிடம் நின்று, என்ன பிரச்சினை என்று கேட்டார். தாத்தா அரைகுறை தெலுங்கில் சொல்லியவுடன், ஒரு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
கையெடுத்துக் கும்பிட்டோம். அங்கிருந்து அடிவாரம் வந்து, சேலம் செல்லும் பேருந்தில் ஏறினோம்.
எங்களையும் அறியாமல் தூங்கி விட்டோம். “சேலம் இறங்குங்க” என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டோம்.
பழைய பேருந்து நிலையம் வந்து, வாழப்பாடி செல்லும் எழுபத்து நான்காம் நம்பர் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். தாத்தா தூங்கிக் கொண்டே வந்தார். நான் அவர் நாடியைப் பிடித்துப் பார்த்தபடியே வந்தேன்.
ஒரு வழியாக காலை ஆறு மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம். அப்பாவிடம் சகட்டு மேனிக்குத் திட்டு வாங்கினோம். எத்தனையோ பயணங்கள் அந்தத் திருட்டால் நின்று போனது.
ஒரு வாரம் நான் எடுத்த விடுமுறை முடிவுக்கு வர இருந்ததால், நான் கிளம்புவதற்குத் தயாரானேன்.
ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதெல்லாம் கட்டித் தழுவி, கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு வரவேற்பார் தாத்தா.
தாத்தாவுக்கு கைரேகை பார்க்கத் தெரியும். நல்ல வசதியான குடும்பத்தில் பொண்ணு அமையும், படிப்பு நல்லா வரும், ஆயுள் ரேகை கெட்டி என்று கை பார்த்துச் சொல்வார். தாத்தாவுக்குத் தெரியாததே எதுவும் இல்லை என்று தோன்றும்.
தாத்தாவின் சுதந்திரப் போராட்டக் கதைகள் மிகவும் சுவாரசியமானவை. அதே சமயம் அவர் வாங்கிய லத்தி அடிகளுக்கு மற்றவராய் இருந்தால், எப்போதே இறந்திருப்பர். அடி வாங்கித் தலையெல்லாம் சொட்டை. பெல்ட் பக்கிள்ஸின் ஆணிகள் குத்தி, கைகளின் கக்கங்களெல்லாம் புண்ணாகியிருந்தது.
தாத்தாவுக்கு அறச்சீற்றம் மிகவும் அதிகம். ஒரு முறை, அவருக்கு வரவேண்டிய பென்ஷன் வராமல் கால தாமதமாகிக் கொண்டே இருந்தது. நடையாய் நடந்தாலும் சரியான பதிலில்லை.
ஒரு நாள், போஸ்ட் ஆபிஸ் வாசலில் உட்கார்ந்து விட்டார். எங்கும் எழுந்து செல்லவில்லை. தண்ணீர் கூடக் குடிக்காமல், கோபத்தில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார். மாலை வரை உட்கார்ந்து இருக்க, யாரோ சென்று, தலைமை அதிகாரியிடம் சொல்லி இருக்கிறார்கள். அதிகாரி ஓடி வந்து விட்டார். நீண்ட நேர சமாதானத்திற்குப் பிறகு, பென்ஷன் அடுத்த வாரமே கிடைக்கும் என்று உறுதி அளித்த பின்னரே எழுந்து நின்று அவரை வணங்கி விட்டு, வெளியே வந்திருக்கிறார்.
பிறகு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில், பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பென்ஷன் வாங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் நாங்கள் மூவரில் யாரோ ஒருவர் அவருடன் செல்வோம். குளிர்ச்சியான சுவையான பாதாம் பால், ரோஸ் மில்க் எல்லாம் கிடைக்கும்.
தம்பி சந்துருவின் எம்சிஏ படிப்பு முடியும் வரை, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார் தாத்தா.
நான் குளித்து விட்டு, பேண்ட் சர்ட் அணிந்து, அறையில் இருந்த கண்ணாடியில் தலை சீவியபடி இருக்கும் போது, தாத்தாவிடமிருந்து ஒரு வித்தியாசமான சத்தம் வந்ததும், அவருக்கு பக்கத்தில் சென்றேன். தாத்தாவின் உடம்பு தூக்கிப் போட்டது. ஏதோ ஒன்று தாத்தாவின் உடம்பிலிருந்து வெளியேறியது போலத் தோன்றியது.
உடனே ஓடிப் போய் பெருமாள் தாத்தாவிடம் சொன்னேன். எல்லோரும் ஓடி வந்து விட்டார்கள். கையைப் பிடித்து நாடி பார்த்த பெருமாள் தாத்தா, “உயிர் போயிடுச்சி” என்றார். என்னால் நம்பமுடியவில்லை. தாத்தா எப்படி இறப்பார்? தாத்தாவுக்கு ஏது இறப்பு? பெருமாள் தாத்தா,”எதுக்கும் பெருமாள் கவுண்டரக் கூப்பிட்டு ஒரு தடவப் பார்க்கச் சொல்லலாம்” என்றவுடன், ஓடிப் போய், ஐந்து நிமிடங்களில் கூட்டி வந்து விட்டேன். அவரும் நாடி பிடித்துப் பார்த்து விட்டு, “உசுரு இல்லப்பா” என்றார். அப்போதும் எனக்கு மனசு ஆறவில்லை. “அப்பா, டாக்டர வரச்சொல்லி ஒரு தடவப் பார்க்கச் சொல்லலாம்பா” என்றேன் அழுதபடியே.
எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள். சேகரும் அவன் அப்பா ராமசாமியும் வந்து விட்டார்கள். அப்பாவும் சந்துருவும் ஆளுக்கொரு பக்கம், எல்லோருக்கும் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பிக் கொண்டு இருந்தனர். நான் என்ன செய்வது என்று தெரியாமல் தாத்தாவின் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தேன்.
தாத்தாவை வீட்டு வாசலில் ஒரு மர நாற்காலியில் அமர வைத்துக் குளிப்பாட்டினர். சந்தனம், குங்குமம் எல்லாம் கை கால்களில் பூசினார்கள். தலையைச் சுற்றி கட்டியபின், நெற்றியில் ஒரு ரூபாயை வைத்தனர்.
எங்கிருந்தோ மேளதாளக்காரர்கள் வந்து சேர்ந்தனர். பெண்களின் அழுகையொலியில் எனக்கு தலை மிகவும் வலித்தது. சாவு நடனம் ஆடும் ஒருவர் காலுக்கு சலங்கை கட்டி, மாரடிப்பது போல் ஆட ஆரம்பித்தார். பெண்களைப் போலவே மாரடித்து ஆடியதால், அவர் நடனத்தை அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். அவரைப் பார்க்கப் பார்க்க எனக்கு மேலும் அழுகை வந்தது.மற்றொரு புறம், காட்டின் வலது மூலையிலிருந்த மேட்டாங்காட்டில், குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
செல்லியாக்கோவில் ஓடைக்கும், கோதமலை அடிவாரத்துக்குமே ஒரு பெரிய சாவு. அவ்வளவு சனம் கூடி விட்டது.
சொந்தக்காரர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவர் நட்ட தென்னை மரங்களிலிருந்து அவருக்கு பாடை கட்டினார்கள். மூங்கில்களால் ஒரு பெரிய கூண்டு போல் செய்தனர். அதனை மலர்களால் அலங்கரித்தனர். தாத்தாவை அந்தப் படுக்கையில் படுக்க வைத்தனர். எல்லாப் பேரன்களும் நெய்ப்பந்தம் பிடித்தோம். நெருங்கிய சொந்தக்காரர்கள் அனைவரும் கோடி போட்டனர்.
வந்த உறவினர்களுக்கு சாப்பாடு பறிமாறிக் கொண்டே இருந்தனர். மறுபுறம் காட்டில் வேலை செய்தவர்கள், குழி தோண்டியவர்கள், பாடை கட்டியவர்கள், மேளம் அடித்தவர்கள், நடனம் ஆடியவர்கள் என அனைவரும் முழு போதையில் இருந்தனர். ஆறுமுகம் மட்டுமே அதிகம் குடிக்கவில்லை.
சம்பிரதாயங்கள் முடிந்து தாத்தா, தனது புதிய வீட்டிற்குப் பயணத்தை ஆரம்பித்தார். சொந்தக்காரர்களில் எவனோ சொல்வது காதில் விழுந்தது:”ஒரு பெருசு போய்டுச்சு. அடுத்தது எப்பவோ தெரியவில்லை”. நிச்சயமாக அவர்கள் பெருமாள் தாத்தாவைப் பற்றி சொல்லவில்லை.
அப்பாவும், சந்துருவும், தாத்தாவின் தம்பிகளும் தூக்கியபடி நடக்க ஆரம்பித்தார்கள். அம்மாவும், அத்தைகளும் இரண்டு வயல்கள் வரை கூட நடந்தபின் வீட்டுக்குத் திரும்பினர்.
தாத்தாவைச் சுமந்து வந்து, குழி மேட்டில் இறக்கி வைத்தனர். பிறகு குழியில் உப்பு நிறையக் கொட்டினார்கள். பிறகு எல்லோரும் பிடித்து, தாத்தாவைக் குழியில் இறக்கினர். எல்லோரும் மண்ணள்ளிப் போட்டோம். மம்பட்டியால் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை அள்ளிப் போட்டனர். “கடசியா எல்லாரும் ஒரு தடவ முகத்தைப் பாத்துக்குங்க” என்று சொல்லி விட்டு, ஒரு நிமிடம் இடைவெளி விட்டு, முகத்தை மூடி, மண்ணைத் தள்ளிக் குழியை மூட ஆரம்பித்தனர்.
அதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் விடாத அப்பாவின் முதுகு குலுங்கியது. அழுதே பார்த்திராத அப்பா, முதல் முறையாக அழுவதைப் பார்த்தேன்.
இறப்பு என்பதன் முழு அர்த்தம் தாத்தாவின் இறப்பில் தான் புரிந்தது. என் ஆதர்ஸம் போய்விட்டது. என் கவிதைக்கும் எழுத்துக்கும் விதை, அவர் போட்டது.
ஒரு முழு மனிதனாக வாழ்ந்தவர். தியாகத்தின் மறு உருவம். அவர் நினைத்திருந்தால், பெருந்தலைவர் காமராஜரின் நட்பையும் கக்கன் அவர்களின் நட்பையும் தனது நலனுக்காக உபயோகித்து இருக்கலாம். ஆனாலும் கடைசி வரையிலும் அதே எளிமையுடன் வாழ்ந்து மறைந்தவர்.
அவருக்கு மிகவும் பிடித்த திருக்குறள்:’தோன்றினும் புகழோடு தோன்றுக’. அவரின் வளர்ப்பு தான், அப்பாவை லஞ்சம் வாங்காமல் தடுத்தது. இதுவரையில் என்னைப் பொய் பேசாமல் பார்த்துக் கொள்கிறது. கையிலிருந்த பணத்தைப் பிரதிபலன் பாராமல் கொடுக்க வைக்கிறது.
மற்றொன்று சொல்வார்:”வெளிய சொல்ல முடியாத துன்பங்கள்”. அவரின் வார்த்தைகள் தான் இன்று வரை, எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மன உறுதியை அளித்திருக்கிறது.
அப்பா தனது பணி ஓய்வின் கடைசி நாளில் சொன்ன அவருக்குப் பிடித்த திருக்குறள்:
”இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண நன்னயம் செய்து விடல்”.
இதுவும் தாத்தாவிடம் இருந்து தான் வந்திருக்க முடியும். வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும், தாத்தா அங்கு தான் எங்கோ மின்னிக் கொண்டிருக்கிறார்.
-வளரும்.

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.