பள்ளியில் வரலாற்றுப் பாடத்தை ஆசிரியர் நடத்தும் போது ஷாஜஹான்,பாபர், அக்பர்,மும்தாஜ், நூர்ஜஹான் என்ற பேர்களைச் சொல்லக் கேட்கையில் சந்தோஷமாக இருக்கும். அதற்கு காரணம் உறவினர்களின் பலரின் பெயர்களாக அவை இருந்ததே. அதிலும் குறிப்பாக அம்மா வழிச் சார்ந்தவர்களின் பெயர்கள் மட்டுமே அவ்வாறு இருந்தது. அப்பா வழியில் அப்படியில்லை. அவர்களின் பெயர்கள் எல்லாம் அரபியில் இருந்து உருவியதாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை.
அதேபோல் சில அரசிகள் பெயர்கள் வேறு மும்தாஜ் மஹால்,அக்பராபதி மஹால், ஃப்தேபூரி மஹால்,அவுரங்காபதி மஹால்,உதய்பூரி மஹால் என இருந்தது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியது.பத்தாம் வகுப்பிற்க்குப் பின் வரலாற்றை அப்படியே விட்டுவிட்டு பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பக்கம்போனதால் இந்த மஹால்கள் மறைந்தே போனார்கள்.
“சமீபத்தில் உருது இலக்கியம் சார்ந்து சில கட்டுரைகள் எழுதியதைத் தொடர்ந்து இந்த மஹால்கள் பற்றிய ஆர்வம் மீண்டும் எழுந்தது. ஏற்கனவே Lyane Guillaume ன் Jahanara நூலை வாசித்திருந்தேன் . தவிர, தமக்கை மகளின் பரிந்துரையின் பேரில் சில ஆங்கில நூல்களை அவரது நூற் சேகரிப்பிலிருந்து எடுத்து வாசித்தேன். நடுவில் கவிஞர் சுகுமாரனின் பெருவலியை மீண்டும் வாசித்தேன். முகலாய பேரரசிகள் பற்றிய கவித்துவமான நாவல் “பெரு வலி”. முகலாய இளவரசி பேகம் சாஹிபா ஜஹனாரவை மையப் பாத்திரமாக கொண்ட நாவல். தமிழில் வெளி வந்துள்ள முகலாய வரலாறு பற்றின நூல்களிலிருந்து இந்நூல் முற்றிலும் வேறுப்பட்டது .போர் முரசொலி, யானைகளின் பிளிரல், குதிரைகளின் கணைப்பு, மோதிக் கொள்ளும் வாள்களின் உரசல் ஒலி, எங்கும் கவியும் ரத்த வாடையைத் தவிர்த்து ஆனால் அந்த விளைவையும் , அதற்குப் பின்னிருக்கும் காரண காரியங்களைப் பேசும் நாவல் பெருவலி.
முதற்பாகம் ஜஹனாராவின் நம்பிக்கையான அடிமையும், சிநேகிதனுமான ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையில் சொல்லப்படுகிறது. எளிய சின்னச் சின்ன வாக்கியங்களில் ஷாஜஹானின் பெரும் சாம்ராஜ்யம் எப்படி உருக் கொள்ளத் துவங்கியது என்பதை விவரிக்கிறது.
ஜஹனாரா மனதில் ஓர் எளிய வாழ்வை நேசிக்கும் சிறு பெண்ணாகத்தான் இருக்கிறாள். ஆனால் சூழல் அவளை அவ்வாறு இருக்க விடுவதில்லை. ஷாஜஹான் பேரரசனாக பதவியேற்றியப் பின் குடும்பத்திற்குள் நிகழும் பனிப் போர் முடிவதேயில்லை. அர்ஜூமண்ட் பானு நூர்ஜஹான், ஜஹனாரா-ரோஷனாரா, தாரா-ஓளரங்கசீப் என வழி வழியாத் தொடரும் மவுன யுத்தம் அதிகாரத்தை முன்னிட்டே என்பதை நாவல் குறிப்புணர்திச் செல்கிறது.
ஜஹனாரா- நூர்ஜஹான் இடையேயான கடுமையான விரோதத்தை நாவலில் நூர்ஜஹானை ஜஹனாரா “ நச்சுப் பாம்பு” என விளிக்கும் ஒற்றைச் சொல்லில் தெளிவாக்கி விடுகிறது. அதிகாரம் எனும் போதை யாரையும் விட்டு வைப்பதில்லை. ஜஹனாராவையும். முதலில் கசப்பாகத் தோன்றும் மூத்த இளவரசி எனும் பட்டம் மெல்ல இனிப்பாக மாறுவதை “கசப்பு முற்றினால் இனிப்பாகி விடுமோ”என அவருக்குள் ஒரு கேள்வியாக முளையிடுகிறது.
இரண்டாம் பாகம் ஜஹனாரா எழுதும் நாட்குறிப்பின் வழியே சொல்லப்படுகிறது. முதல் வரியே இப்படித் துவங்குகிறது “என் வாழ்க்கை ஒரு நொறுங்கிய மகுடம்”.பெரிதும் அகம் சார்ந்த விஷயங்களைப் விவரிக்கிறது.
எல்லோராலும் அன்புடன் நேசிக்கப்படுபவள், தந்தையின் பிரியத்துக்குரிய மூத்த மகள் , சான்றோரால் மதிக்கப்படுபவள், ஒளரங்கசீப்பாலும் மரியாதையாக நடத்தப்படுபவள், அதிகாரமும், செல்வமும் ,அறிவுத்திறனும் கொண்டவள் ஜஹனாரா. ஆனாலும் அவளிடம் மிஞ்சியிருப்பது துயரமும், நிராசையும், காதலித்தவனை கைப்பிடிக்க முடியாமல் போனதன் வலியும் தான். அந்த வலியைப் போக்க அவள் அடைக்கலமானது சூஃபி ஞானி ஹசரத் நிஜாமூதின் அவுலியாவிடம். அது ஒன்றே அவளுக்கு ஆறுதல் தந்தது. நாவல் ஒரு நதியைப் போல் சில இடங்களில் நிதானமாய், அமைதியாய், ஆர்பாட்டமில்லாமலும் சில இடங்களில் பொங்கிப் பிரவாகமாய் விரிந்தும் செல்கிறது.
நாவலின் தலைப்பு “பெரு வலி”மிகப் பொருத்தமானதே. நிறைவேறாக் காதலில் மிஞ்சுவது வலிதானே.. . எனினும் முகலாய மஹால்கள் பற்றிய ஒரு சித்திரத்தை அறியத் தந்தது நாவல் .இந்நாவல் தந்த உத்வேகத்தில் முகலாய பேரரசிகள் பற்றியும், நூர்ஜஹான் பற்றியும், மஹால்கள் பற்றியும் இணையத்தில் தேடித் தேடி வாசித்தேன். நிறைய ஆச்சர்யமூட்டும், சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன. மஹால்களின் கதவுகள் மெல்லத் திறக்கத் தொடங்கின.“
சரணாலயம் என்று பொருள்படும் பாரசீகச் சொல்“ஹேரம்”.அரசிகள், இளவரசிகள், நூற்றுக்கணக்கான அழகானபெண்கள் , தாய்மை ஏய்த அனுமதிக்கப்படாத பெண்கள் ,திருநங்கைகள் விரும்பி வந்தவர்கள், கட்டாயத்தின் பேரில் அழைத்து வரப்பட்டவர்கள் என பலரும் இணைந்து வாழும் பலத்த பாதுகாப்பு கொண்ட இடம்தான் மொகலாய பேரரசின் Harems-அந்தப்புரங்கள். நாம் கற்பனை செய்ய இயலாத புதிரான இடம். முழுக்க முழக்க பெண்களின் அதிகாரத்திற்க்கு உட்பட்டது. அங்கே எத்தகைய சூழல்நிலவியது. இருட் குகையா? பொன்னிற கூண்டா? அங்கேவாழ்ந்த பெண்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது?
நீண்ட காலமாகவே நாம் அறிய வந்த முகலாயர்களின் வரலாறு என்பது பெரிய மனிதர்களின் வரலாறாக மட்டுமே இருந்தது. பேரரசை உருவாக்குபவர்களின், பேரரசை உடைப்பவர்களின் வரலாறு அது. ஆனால் காலம் செல்லச் செல்ல வரலாற்றுஅறிஞர்கள் முகலாய ஆட்சியை நிலைநிறுத்திய செயல்முறைகளை, சித்தாந்தங்களைப் புரிந்துக் கொள்ள புதிய அணுகுமுறையைக் கையாண்டனர். முகலாய சமூக அமைப்பு, அரசகுலப் பெண்கள், அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்த திருநங்கைகள் மேல் கவனம் செலுத்தினார்கள்.
முகலாய அந்தப்புரம் -மஹால் என்றழைக்கப்பட்டது. பிரமாண்ட அரண்மனையின் ஒரு பகுதியாக மஹால்கள் விளங்கின.
முகலாய ஆட்சியாளர்களுக்கு மஹாலிருந்த பெண்கள் சிறந்த ஆலோசகர்களாக விளங்கினர். அரசர்கள் தங்கள் சொந்த மகன்களை கூட நம்பவில்லை. முகலாய அரசவைப் பெண்களும். மஹாலிருந்த பெண்களும் புத்திசாலிகள், படித்தவர்கள், அரசருக்கு விசுவாசமானவர்கள். அரசாங்க விவகாரங்களைப் புரிந்துகொள்வதிலும், ஒரு பேரரசை நடத்துவதற்கான கூரிய மதியும் , சமயோசித அறிவும் கொண்டு இருந்தனர். அரசாங்கத்தின் வெவ்வேறு அங்கங்களைப் பற்றிநன்கு கற்றறிந்த அறிஞர்களாக, அரசனின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்களாக, பேரரசைக் கட்டியெழுப்புவதில் தீவிர பங்கேற்பாளர்களாக விளங்கினர். அரசர் அரச சபையில் அரசு பரிபாலனத்திற்கான விவகாரங்களைப் ஆராய அமர்கையில் , மூத்த அரசிகள் , இளவரசிகள் திரைக்குப் பின்னால் அமர்ந்து அரசு நடவடிக்கைகளைப் உற்று கவனித்தார்கள். விஷயங்களின் தீவிரத்தை புரிந்துக் கொண்டார்கள்.இதன் மூலம் அவர்கள் அனைத்து அதிகாரிகள்,பிரபுக்கள்,அமீர்கள், மத குருமார்கள்,வணிகர்கள் என சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களை நன்குஅறிந்து இருந்தனர்.பல்வேறு அரசு நியமன விஷயங்களில் மன்னரின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக விளங்கினர்.
சுமார் 300 ஆண்டுகால முகலாய ஆட்சியில், பாபர் காலத்திலிருந்து ஔரங்கசீப் வரை முக்கிய களமாக மஹால்கள் விளங்கின. பேரரசிகள், இளவரசிகள், காமக்கிழத்திகள்,நூற்றுக்கணக்கான பெண்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் மஹாலில் வசித்தனர். மஹாலில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கை சாதாரண பெண்களின் சமூக வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ஒரே சமயம் ஆடம்பரமான வாழ்க்கையும்,பாலியல் அடிமைத்தனமும் செயல்பட்டது. விருந்தும் களிப்புமாக நகர்ந்த நாளின் மறுபக்கம் அதிகாரத்திற்கான போட்டிகள், வஞ்சக நாடகங்கள், பழிவாங்குதல் என திகழ்ந்தது.
மஹாலில் நாம் காண்பது வெறும் அரச குலப் பெண்களை மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் துடிப்பான பெண்கள், பணிப்பெண்கள், சமையற்காரர்கள், தையல்காரர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், கை வேலைப்பாடு அறிந்த விற்பனர்கள்,மூத்த செவிலியர்கள் , இளைய இளவரசிகள், இளவயது இளவரசர்கள் , begis என்றழைக்கப்பட்ட ஆயுதம்தாங்கிய திறமைமிக்க மூர்க்கமான வலிமையான பெண்காவலர்கள்(இவர்கள் காஷ்மீர், உஸ்பெஸ்கிஸ்தான், அபிசீனியாபகுதியில் இருந்து வந்தவர்கள்..அரசருக்கு மிகவும் விசுவாசமானவர்கள்) என தனித்த சாம்ராஜ்யமாக திகழ்ந்ததுமஹால். அதனை வழி நடத்துபவராக மூத்த அரசி அல்லது மூத்தஇளவரசி இருந்தார். முன்னவர் பேகம் ஷாகிப் என்றும் பின்னவர்பாதுஷா பேகம் என்றும் அழைக்கப்பட்டார்.
மஹால்தார்கள் உயர் அதிகாரிகளாக இருந்தனர். அவர்கள் உயர் குடும்பங்களைச் சேர்ந்த படித்த, அனுபவம் வாய்ந்த மூத்த செவிலியர்களாக செயல்பட்டனர். அவர்கள் நேரடியாக பாதுஷாபேகத்தின் கீழ் பணிபுரிந்தனர். மஹால்தார்கள் மஹாலின்நிதி,பாதுகாப்பு,சமையலறை போன்ற பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பானவர்கள். அங்கே பாதுஷா பேகம் ஷாகிப் பார்வையாளர்களை சந்திப்பதற்க்காக தனியறையும் சிம்மாசனமும் இருந்தது. அதில் வீற்றிருந்து ஒவ்வொரு நாளும் மஹால்தார்களின் சபைக் கூட்டி, மஹால்தார்களிடமிருந்து பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து அறிக்கைகளைப் பெற்றார். இந்த அறிக்கைகள் பின்னர் மஹாலுக்கு உணவருந்த மன்னர் வரும் போது அவர் முன் வாசிக்கப்பட்டு தீர்வுகாணப்பட்டது.
மஹாலிற்கும் வெளி உலகிற்குமான தொடர்பாளர்கள் என்றால் அது Manucci எனப்படும் மருத்துவர்கள் மூலமே நடந்தது. பலத்த பாதுகாப்பும், பலகட்ட சோதனைகளும் கொண்ட அந்தப்புரத்தின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள்,அங்கிருக்கும் வெவ்வேறு படிநிலைகள் பற்றிய விஷயங்களை அவர்கள் மூலமே அறிய முடிந்தது. அரசிகள், இளவரசிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஜாகீர்களை நிர்வாகிக்கவும், தங்கள் வணிகத்தை நடத்தவும் khojas களையே சார்ந்திருந்தனர்.-கோஜாக்கள் பெரும்பாலும் ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியார்கள் .தனித்த சமூக குழுவாக ஆகாகானை பின்பற்றியவர்கள். அவர்கள் வணிகம், கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வந்தனர். Khojas தான் அவர்களுக்கான ஒரே வெளியுலக தொடர்பாளர்கள்.
மஹால் அந்நியர் படையெடுப்பின் போதும், சிம்மாசனத்திற்கான முடிவற்ற போர்களில் இருந்தும் பெண்களை, குழந்தைகளைப் பாதுகாக்கும் சரணாலயமாக விளங்கியது. படித்தவர்கள், திறமையானவர்கள், பண்பாடு,கலாச்சாரத்தைப் போற்றியவர்கள்என்ற போதிலும், இந்த பெண்களில் ஒரு சிலரே அவர்களின் பெயர்களால் நமக்குத் தெரிய வருகிறார்கள். குறிப்பிடத்தக்க அடையாளத்தை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.

பேரரசின் ஸ்தாபகரான பாபர், அவரது தாய்வழிப் பாட்டி இஹ்சான் தௌலத் பேகத்தின் மேற்பார்வையில் மஹாலில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டார். அவரது தந்தை திடீரென இறந்தபோது, 11 வயதேயான பாபர் அதிகார வெறி கொண்டஉறவினர்களால் பெரும் பாதிப்புக்குள்ளானார். பாபர் தனது பாட்டி இஹ்சான் தௌலத் பேகத்தின் உதவியுடன் தனது எதிரிகளை சமாளித்தார். ஒரு முகலாய ஆட்சியாளரின் மரணம் அல்லது உடல்நலக்குறைவு அரியணைக்கான இரத்தக்களரியான போராட்டத்திற்கான சமிக்ஞையாக இருந்தது.இளவரசர்களுக்கு இடையே மட்டுமல்ல, அனைத்து உறவினர்களிடையேயும் அதிகாரத்திற்கான போட்டியாகமாறுகிறது. கொலைகளும், ரத்தம் சிந்தப்படுவதும் இயல்பாக இருந்தது. முகலாய இளவரசிகள் ஏன் அரிதாகவே திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் அவர்களின் கணவர்கள் , மகன்கள் போட்டியாளர்களின் பட்டியலில் சேர்வதைத் தடுப்பதற்காகவே.
ஹமிதா பானு,மஹாம் அனகா, நூர்ஜஹான், குல்பதன் பேகம்போன்ற அதிகாரமிக்க மூத்த பெண்கள், ஜெபுன்னிசா போன்றகவிஞர்கள், ஜஹானாரா போன்ற ஆன்மீக சாய்வு கொண்டஇளவரசிகள் அவர்களின் தனித்த செயல்பாடுகளால் அழியாப்புகழ் பெற்றனர் .
ஜஹாங்கீருக்கு இணையாக ஆட்சியதிகாரத்தை பின்னிருந்து இயக்கியவர் நூர்ஜஹான்.முகலாயப் பேரரசின் விரிவாக்கத்திற்கும், நீண்ட காலங்கள் நிலைத்திருந்தற்க்கும் நூர்ஜஹானின் நிர்வாகத்திறமையும் அவர் உருவாக்கிய அடித்தளமே முழு முக்கிய காரணமாகும்.. ஒரு ராணிக்கு மட்டுமே ஃபிர்மான்(அரசாணைகள்)வெளியிடும் அதிகாரம்இருந்தது. அந்த சிறப்புக்குரியவர் நூர்ஜஹான் பேகம் மட்டுமே .
மஹால் பேரரசர்களின், இளவரசர்களின் பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்வதற்கான இடம் மட்டுமல்ல. தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அணுக முடியாததாக இருந்தாலும், அங்கிருந்த பெண்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவோ அல்லதுஅதிகாரத்தை இழந்தவர்களாகவோ இல்லை. குல்பதன் பேகத்தின் நினைவுக்குறிப்புகளிலிருந்து, பாபரின் தாயும், சகோதரியும், ஹுமாயூனின் மனைவி ஹமிதா பானோவும் அரச சபையில் மிகவும்செல்வாக்கு பெற்றவர்களாகவும், பேரரசர்களுக்கு ஆலோசனை கூறுபவர்களாகவும் இருந்ததை நாம் அறிவோம்.
குல்பதன் பேகம் தனியாளாக மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்க் கொண்ட பெண்கள் குழுவிற்க்கு தலைமை தாங்கி வழிநடத்திச் சென்றவர். மரியம்-உஸ் ஜமானி அக்பரின் ராஜபுத்திரமனைவி மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர். மகாம் அங்க, ஜிஜி அங்க போன்ற மஹாலின் பால் தாய்மார்கள் கூடபெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தனர்.
மஹாலின் திரையை விலக்கிப் பார்க்கையில் அரசகுலப் பெண்களையும் அவர்கள் ஆற்றிய சமூக, அரசியல் பங்கையும் தெளிவாக பார்க்க முடிகிறது . மரபுவழிகளைப் பின்பற்றுபவர்களாகவும் , அதேசமயம் அரசு நிர்வாகநடவடிக்கைகளில் புதிய அணுகுமுறையை புகுத்துபவர்களாகவும் விளங்கினர் முகலாய முடியாட்சியின் வரலாறுபற்றி பல நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும், அரசகுடும்பத்தின் முக்கியமான களமான மஹால் பற்றியோ அல்லது அதன் செயல்பாடு அங்கிருந்தவர்களிடையேயான உறவுச்சிக்கல் அல்லது குடும்பத்தில் வசிப்பவர்களின் உறவுமுறையை அறிவதில் கூட அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இந்தப் பெண்கள், அக்பரின் ஆட்சியிலிருந்து அரண்மனையில்தனிமையில் வாழ்ந்தாலும், அரசு மரபுகளைப் போற்றுவதில் , அரசு அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியத்துவம்வாய்ந்தவர்களாகவும்,இந்த மாபெரும் முடியாட்சியின் அடித்தளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருந்தனர்.
ஐரா முகோடியின் சூரியனின் மகள்கள், சொல்லப்படாதஅல்லது அறியப்படாத உலகத்தைப் பற்றி, அதாவது முகலாயமஹாலின், அதன் சலசலப்புகளைப் பற்றி நமக்கு நிறைய தகவல்களை அறியத் தருகிறது. திரைக்குப் பின்னிருந்த திறமையான முகலாய பெண்களை வெளிப்படுத்துகிறது. அவர்களின் புலமை, அரசியல் புத்திசாலித்தனம், துணிச்சல், காதல், தத்துவம், கவிதை, கட்டிடக்கலை, வாழ்க்கையின் உள்ளார்ந்த விஷயங்களில் அவர்களுக்கிருந்த அசாத்திய திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் பாட்டியான இஹ்சான் தௌலத் பேகம் ஒரு சிறந்த நிர்வாகி,விஷயங்களைத் திட்டமிடுவதில் சிறப்புத் திறமை பெற்றவர். ஆரம்ப ஆண்டுகளில் பாபரின் மனதை வடிவமைப்பதில் அவருடைய பங்கு முக்கியமாக இருந்தது. பாபர்-தில்தார் பேகத்தின் மகளான குல்பதன்,அக்பருக்கு தனது தந்தையைப் பற்றி, தாத்தாவைப் பற்றி அறிய உதவுவதற்காக, ஹ்யூமன்யூன்-நாமா (ஹுமன்யூனின் வாழ்க்கை வரலாறு) எழுதினார்.
ஜஹானாரா, ஷாஜஹான் -மும்தாஜ்தம்பதியரின்
மூத்தமகள். ஷாஜஹானின் விருப்பமானமகள். ஜஹானாரா, அவரது தாயார்மும்தாஜ் மஹால் இறந்தபோது 17 வயதுப் பிராயத்தில் இருந்தார். செல்வந்தர், அவர் ஒரு தொழிலதிபராக பெரும் செல்வம்ஈட்டினார். முழு முகலாய வரலாற்றிலும் நூர் ஜாஹனுக்குப் அடுத்து மிக மிகமுக்கியமானவர். சிறந்த அறிவத்திறமையும்,இரக்க குணமும், கொடைத்திறனும் நிர்வாகத்திறனும் என பன்முக ஆளுமை கொண்டவர் அவர்ஒரு ராஜதந்திரி. அவர் ஷாஹி, கஞ்சாவர் ஆகிய இரண்டு வர்த்தகக் கப்பல்களை வைத்திருந்தார். பிறநாட்டு வணிகர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு வணிக தொழிலில் நிறைய பொருளீட்டினார். அவர் கவிதைகளைவிரும்பினார். தத்துவ விவாதங்களில் ஈடுபட்டார். அவர் சூஃபித்துவத்தைப் நடைமுறைப் படுத்துவதற்க்காக உழைத்தார். அவர் மஹாலின் சிறந்த நிர்வாகியாக விளங்கினார். அரசியல் நுண்ணறிவுடன், வாரிசுப் போரில் தாராஷிகோவிற்கு ஆதரவுக் கொடுத்தார்.
பேகம் சாஹேபா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜஹானாரா, சிறு வயதிலேயே முகலாய மஹாலின் மிக உயர்ந்த பட்டமான பாதுஷா பேகமாக செயல்பட்டவர். சூஃபி துறவி ஹஸ்ரத் மொய்னுதின் சிஷ்டியின் வாழ்க்கை வரலாற்றை முனிஸ்அல்-அர்வா (ஆன்மாக்களின் நம்பிக்கையாளர்) என்ற நூலை எழுதினார், முல்லா ஷா படாக்ஷியைப் பற்றி ரிசாலா-இ-சாஹிபியா (ஒரு பெண்மணியின் உரை) என்ற நூலில் விவரிக்கிறார்.. இந்நூல் ஜஹானாராவின் ஆன்மீக பயணத்தையும் விவரிக்கிறது. அவரது அரசியல் சார்பு சகோதரர்கள் ஜெஹான் ஆரா, தாரா ஷிகோ இருவருக்கும் உத்வேகம் அளித்தது. மறுபுறம், அவரது தங்கையான ரோஷனாரா, தாராவை விட ஔரங்கசீப்பின் அரசியலை விரும்புகிறார். உண்மையில், ரோஷனாரா அந்த நேரத்தில் தக்காணத்திற்கு தலைமை தாங்கிய ஔரங்கசீப்பை விட அரச நிர்வாக செயல்பாடுகள், தாராவின் லட்சியங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அவர் பாதுஷா பேகம் என்ற பட்டத்திற்கான லட்சியத்தையும், ஆசையும் கொண்டுயிருந்தார். மயில் சிம்மாசனத்துக்கான அவர்களது சகோதரர்களின் போராட்டத்தில் ரோஷனாராவே வெல்கிறார்.முகலாயப் பேரரசில் அரசகுலப் பெண்களின் அதிகாரமும், ஒரு நிறுவனமாக மஹாலின் ஒட்டுமொத்த வீழ்ச்சியும் பேரரசுடன் எவ்வாறு இணைந்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் பல கதைகளில்இவருடையதும் ஒன்றாகும்.
மஹாலின் பாதுகாப்பையும் , அரண்மனையின் கட்டளைகளை நிறைவேற்றுதற்கும் பொறுப்பாளரான மன்சப்தார் மிர் மஹால்என்றும் , அரசு நெறிமுறைகளை (protocols) நடைமுறைப்படுத்துபவர் மிர் ஆர்ஸ் என்றும் அழைக்கப்பட்டனர் . அவரே அரசரிடமிருந்து வரும் மஹால் சம்பந்தமான பண உத்தரவுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் நிதித்துறை பொறுப்பாளரும்கூட.
ஜஹாங்கீர் தனது மஹால்தார் அகா அகாயனைப் பற்றி “33 ஆண்டுகளாக விசுவாசமாக கண்ணியத்துடன் சேவைசெய்தவர், நான் அவரை பெரிதும் மதிக்கிறேன், அவர் நேர்மையுடன் பணியை செய்தவர் என பதிவு செய்துள்ளார். மஹால்தார்களும், முஷ்ரிஃப்களும், தஹ்வில்தார்களும் பெரும்பாலும் வாரிசுமுறை அடிப்படையிலேயே பதவியைப்பெற்றனர். அவர்கள் அரசருக்கு மட்டுமே விசுவாசமாகஇருந்தார்கள். இளவரசர்களின் தவறான நடத்தை ,ஒழுக்கமின்மைப் பற்றி நேரடியாக அரசரிடம் தகவல் தெரிவிக்கும் அதிகாரத்தைப் மஹால்தார்கள் பெற்று இருந்தனர்.
எ.கா ஔரங்கசீப்பின் மகன் முஹம்மது ஆசம், நூருன்னிசாஎன்ற மஹால்தாரிடம், பேரரசரின் அனுமதியின்றி , அரண்மனையை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுத்ததால், அவரிடம் மோசமாக நடந்து கொண்டார். நூருன்னிசாவை ஆசாம் தனது அரண்மனையிலிருந்து வெளியேற்றினார். நூருன்னிசா அதை ஔரங்கசீப்பின் கவனத்திற்க்கு கொண்டுசென்றார் . ஓளரங்கசீப் உடனடியாக ஆசாமை வரவழைத்து கண்டித்து 50,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு நூருன்னிசாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தார் . ஔரங்கசீப்பின் உயிலில் மற்றுமொரு மஹால்தாரை பற்றிய குறிப்பும் உள்ளது. அதில் “நான் தைத்த ஒவ்வொரு தொப்பியையும் விற்கும் போதும் கிடைக்கும் பணத்திலிருந்து நான்கு ரூபாய் இரண்டு அணாக்கள் மஹால்தாரான ஆயியா பேகாவிடம் தர வேண்டும் அந்தத்தொகையை கொண்டு அவர் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வாங்க செலவிடட்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரண்மனையிலேயே மிகவும் பாதுகாப்பான பகுதி மஹால்ஆகும். அரசர்கள் பெரும்பாலன நேரத்தை அங்கேயேசெலவிட்டார்கள். முக்கியமான அரசாங்க கோப்புகளை, ஆவணங்களை சரிபார்த்தல், அமைச்சர்களை வரவழைத்து ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் , உளவாளிகளிடமிருந்து தகவல்களை பெறுதல் என பல பணிகளை அங்கிருந்தே மேற்க்கொண்டனர் . அரசர்கள் வெளியே அதிகம் உணவருந்துவதில்லை. பாதுகாப்பு கருதி மஹாலில் தான் உணவருந்தினார்கள்.
வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட சுவர்களுக்குப் பின்னால்வாழ்ந்த பெண்களைப்பற்றி ஆண்களால் எழுதப்பட்ட எல்லா எழுத்துக்களிலும், பெண்களின் பாலியல் வாழ்க்கையின் மீது ஒரு வெறித்தனமான ஈர்ப்புமட்டுமே உள்ளது. ஒரு வரலாற்றாசிரியர் அவர்களின் பாலுணர்வைப் பற்றி மட்டுமே எழுதி வைத்திருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கான இடம் என்பது ஒரு ஆணுக்கான பாலியல் விளையாட்டு மைதானமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் பாலியல் உறவு தவிர வேறு எந்த அம்சமும் இல்லை. போட்டிகள், சண்டைகள் நிறைந்த உலகில் வாழும் சோகமான, பொறாமைகொண்ட, விரக்தியடைந்த பெண்களின் படத்தையே அவர்கள்முன் வைக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, இளவரசி குல்பதன்பேகத்தால் வரையப்பட்ட படமோ அங்கிருந்த பெண்கள் வாழ்ந்த பரபரப்பான அர்த்தமுள்ள வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. அவர்களின் குடும்பங்கள், ராஜாங்க விஷயங்களை உணர்ந்து ஒற்றுமையாக வாழ உழைக்கிறார்கள். அவ்வுலகம் ஒரு ஒழுக்கமான, தாய்மார்களால் , அத்தைகளால் நிர்வாகிக்கப்பட்ட, வாழ்ந்த பெண்களைக் கவனித்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஆசார விதிகளைக் கொண்ட ஒரு தாய்வழி உலகம். அது ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை.அங்கு உணர்ச்சிபூர்வமான உறவுகள் இல்லாமல்இருக்கலாம் , ஆனால் அவர்களுக்கிடையே ஆழமான நட்பும் , புரிதலும் இருந்தது. முகலாயப் பேரரசின் மிகவும் போற்றப்பட இரு பெண்மணிகள் நூர்ஜஹானும், ஜஹனராவும்.

சமீபத்தில் கவிஞர். சுகுமாரனின் பெருவலி நாவல் Jahanara என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் கலைவாணி கருணாகரனால் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது .
நூர்ஜஹான் பற்றி சர்தார் ஜோகிந்தர் சிங் எழுதிய நூல் “நூர்ஜஹான்”- ச. சரவணன் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது (சந்தியாபதிப்பகம்).
ரூபி லாலின் பேரரசி நூர்ஜஹான் என்ற நூலை அருள் சித்தார்த் மொழி பெயர்த்துள்ளார். (நற்றினை பதிப்பகம்).
முகலாய பேரரசைப் பற்றி புதுகோணத்தில் அணுகும் நூல்கள் பல ஆங்கிலத்தில் வந்துள்ளன. அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். முகலாய அரசர்களைப் பற்றி, வாரிசுப் போர்ப் பற்றி தமிழில் சில நூல்கள் வந்துள்ளன. எனினும் நேரடியாக முகலாய அரசிகள் பற்றி, அவர்கள் வாழ்ந்த மஹால்கள் பற்றிய நூல்களும் வர வேண்டும். அவ்வாறு வருகையில் முகலாயப் பேரரசைப் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றங்கள் நிகழ ஏதுவாக இருக்கும்.
++
திரையை விலக்கிப் பார்க்கப் பயன்பட்ட நூல்கள்
1. Jahanara – Lyane Guillaume
2. Mahal-Subhadra Sen Gupta
3. Domesticity and power. In the early Moghul world- Ruby Lal
4. Daughters of the Sun- Ira Mukhoty
5. பெரு வலி– சுகுமாரன்
6. பல்வேறு இணையத் தளங்கள்.
++

அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.