கல்நிறத்துக் கௌதாரிகள்
பொசுக்கென்று எழுந்து பறக்க
பாறைகள் கூட்டிச் சுட்டெடுத்த
சோளக்கதிர் மணக்கும்
பிற்பகல் ஒளியையே
எப்போதும் ஏந்தி வருகிற
“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சில்லென்ற காற்றே” பாடலுக்குள்
ஏங்கித் தவிக்கிற ஸ்ரீ தேவிகளை
திசையெங்கும் பரப்புகிற
இளையராஜாவைத்
தொழுது அழ
ஆட்பட்ட வயதைக்
கடந்து இன்னும் போகவில்லைதானே?
நாம்.
++

த.விஜயராஜ்
சோழன் மாளிகை கும்பகோணத்தில் பிறந்தவரான இவர் நீலகிரியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2011-ல் ‘தேவதைகளின் மூதாய்’ என்கிற இவரது கவிதைத்தொகுப்பை அகரம் வெளியிட்டுள்லது. 2021-ல் ‘யானைகளைக் கண்டிராத ஃபிளமிங்கோக்கள்’ சூழலியல் கவிதை நூலை வாசகசாலை வெளியிட்டுள்ளது.