காலையில் எழுந்ததும் ஆரம்பித்த தலைச்சுற்றலும் வாந்தியும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்ததால், படுக்கையை விட்டு எழாமல் படுத்து இருந்தேன்.

வரவேற்பறையில் அம்மாவுடன் யாரோ பேசும் குரல் கேட்டது. சிறிது நேரம் கழித்து அம்மா உள் அறைக்கு வந்து, பீரோவைத் திறந்தார்.

“யார் கூட பேசிட்டு இருந்தீங்க அம்மா?” என்று வினவினேன் நான்.

“பக்கத்து வீட்டு தேவகி அக்கா வந்து இருக்காங்க. தண்ணி விடுற பையனுக்கு தீபாவளி போனஸ் எல்லாரும் கொஞ்சம் பணம் போட்டு கொடுத்திடலாம் அப்படின்னு முடிவு பண்ணி இருக்காங்களாம். நம்ம தான் ரெண்டு நாளா ஊர்லையே  இல்லையே.. அதை சொல்லிட்டுப் பணம் வாங்கிட்டுப் போலாம்னு வந்திருக்காங்க” என்று சொல்லியபடியே கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, பீரோவைப்  பூட்டினார்.

“நீ ஊர்ல இருந்து வந்தது தெரிஞ்சு,  உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. எந்திரிச்சு கொஞ்ச நேரம் வெளிய வா. படுத்துட்டே இருக்காதே சாமி ” என்று அம்மா சொன்னார்.

படுத்திருந்த நான் மெல்ல எழுந்து வெளியே வந்தேன்.

என்னைப்  பார்த்ததும்,

“கண்ணு நல்லா இருக்கியா? ஏஞ்சாமி உடம்பு சரியில்லையா? படுத்திட்ட?” என்று அக்கறையோடு தேவகி அக்கா கேட்டார்.

“காலையிலிருந்து ஒரே வாந்திங்க அக்கா. ரொம்ப சோர்வா இருந்தது அதுதான் படுத்துட்டேன்”

“மசக்கையில் வாந்தி வர்றது  சகசம் தானே. ஒரு சிலருக்குப் பிள்ளை பிறக்கிற வரைக்கும் கூட வாந்தி வரும். நல்லாச் சாப்பிடு. தல பிரசவம் . நல்லா சத்தான சாப்பாடு சாப்பிடணும்” என்று அந்த அக்கா எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

“அக்கா வீட்டில் யாரும் இல்லைங்களா?” என்ற குரல் அவர்கள் வீட்டு வாயிலில் ஒலித்தது.

 “அந்த தண்ணி எடுத்து விடும்  பையன் குரல்தான். வந்திருக்கான் போல போய் பாத்துட்டு வரேங்க அக்கா. அப்புறம் வரேன் கண்ணு” என்று சொல்லிக் கொண்டே தேவகி அக்கா அவர்கள் வீட்டுக்குச்  சென்றார்.

” டேய் பழனி இந்நேரத்துக்கு வந்திருக்கிற. உன்னைச்  சாயந்திரம் தான வர சொன்னேன்” என்று உரத்த குரலில் அவர்கள் வீட்டு வாயிலில் நின்றிருந்த நபருடன் பேசிக்கொண்டு போனார்.

தேவகி அக்காவும் அந்த நபரும் உரையாடுவது மெல்லக் காதில் விழுந்தது. அந்த நபரின் குரல் எங்கேயோ கேட்டது போல் இருந்தது. ஆனால் யாருடைய குரல் என்று நினைவிற்கு வரவில்லை.  அந்த நபர் யாராக இருக்கும்?  என்றும் அறியும் ஆவல் எனக்குள் வந்தது.

 உடனே நான் வெளி வாயிலுக்கு அருகே வந்து தேவகி அக்காவுடன் பேசிய அந்த நபரைப் பார்க்க முற்பட்டேன். எனக்கு முதுகு காட்டியபடி அந்த நபர் அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

முகத்தைப் பார்க்க முடியவில்லை. திடீரென்று அந்த நபர், பின்னால் திரும்பி எங்கள் வீட்டை பார்க்கும் பொழுது அந்த முகம் எனக்குத் தென்பட்டது. என்னைப் பார்த்த உடனேயே பதட்டத்துடன் , அந்த நபர் முகத்தைத்  திருப்பிக் கொண்டது போல் தோன்றியது.

அந்த முகம்.. எனக்கு மிகப் பரிச்சயமான முகம் போலத் தெரிந்தது. எவ்வளவு யோசித்துப் பார்த்தும் உடனே நினைவிற்குக் கொண்டு வர முடியவில்லை.

அன்று நாள் முழுவதும் அவ்வப்போது அந்த முகம் என் நினைவில் வந்து எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது.

நன்கு நடந்தால்தான் சுகப்பிரசவமாகும் என்று அம்மா அறிவுறுத்தியதன் பேரில் மொட்டை மாடிக்குச் சென்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.  

“நீ நல்லா படிக்கிற புள்ள. உனக்குத்தான் இதெல்லாம் வேணும். எனக்கு இது வேண்டாம்”  என்றுப் பக்கத்து வீட்டு தொலைக்காட்சித்  தொடரில் ஒலித்த குரல் காற்றில் மிதந்து வந்து, என் காதில் நுழைந்தது.

பளீர்  என்று மின்னல் வெட்டியதைப் போல அந்த முகம் உடனே நினைவிற்கு வந்தது. வாய் மெல்ல,

‘அட அந்த ஆளு பழனி மாதிரி இருக்காரே. ஒருவேளை நம்ம பழனி தானோ ‘ என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.  பழனி என்ற பெயர் நினைவிற்கு வந்ததும், என் பள்ளிப் பருவ நாட்கள் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுக்கு வரத் துவங்கியது. நடந்து கொண்டே மெல்ல மெல்ல என் மனது  சிறு வயது நினைவுகளை அசைப்போட்டது.

++     

அதிக நாகரிகங்கள் எட்டிப் பார்த்திடாத ஒரு அழகிய கிராமம்  காளியாபுரம் தான் எங்கள் ஊர். எங்கள் ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்  நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

இந்தியா எனது தாய்நாடு

இந்தியர்கள் அனைவரும் எனது சகோதரர்கள்.

இந்நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்.

என்று காலை நேர வழிபாட்டுக் கூட்டத்தில் நான் உறுதிமொழியைச் சொல்லச் சொல்ல அனைத்து மாணவர்களும் அதை பின்தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். வழிபாடு முடிந்ததும் வகுப்புக்குச் செல்ல மணி ஒலித்தது. அந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் வாயிலில் மூன்று நபர்கள் உள்ளே வருவதைப் பார்த்தேன்.  அதில் ஒருவன் எங்களைப் போன்ற சிறுவன். அவனைப் பார்த்ததும் அத்தனை குதூகலம் என்னிடம் தோன்றியது.

‘ஏய் நம்ம பழனி நம்ம பள்ளிக்கு வர்றானே..’

என்று சத்தமாய்ச்  சொல்லிவிட்டேன். என் தோழி சாரதாவும், எட்டிப் பார்த்துவிட்டு “அட ஆமா நம்ம பழனி.” என்று அவளும் மகிழ்ச்சியோடு சொன்னாள்.

உடனே ஓடிப் போய் அவனுடன் பேச வேண்டும் என்று இருந்தது என்றாலும் வகுப்பிற்குச் செல்ல நேரமாகிவிட்டதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு  வகுப்பிற்குச் சென்றோம்.

முதல் பாடவேளை. எங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த சிவசாமியாசிரியரின் வகுப்பு. வகுப்பறைக்குள் எப்படி உரையாடல்களைத்  தொடங்கிக் குழந்தைகளை தன் வசப்படுத்துவது என்பதை இவரிடம்தான் கற்க வேண்டும். ஏனென்றால் எப்பொழுதும் ஒரு கதையோடுதான் வகுப்பைத்  தொடங்குவார். கதையால் வகுப்பறைக்குள் ஒரு கலகலப்பான சூழ்நிலை உருவாகிவிடும்.

இன்றும் அதுபோல திருவாத்தான் கதையோடு வகுப்பை ஆரம்பித்தார். திருவாத்தான் கதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது-

“சார்..சார்..” என்ற  எங்கள் பள்ளிப் பியூனின் குரல் கேட்டது.

“என்னங்க ஆறுமுகம்.. என்ன விஷயம் ?”என்று கேட்டபடி அவர் அருகே சென்றார் சிவசாமி ஆசிரியர்.

” சார் இந்தப் பையன நம்ம பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேத்தி இருக்காங்க.  உங்க வகுப்பில் விடச் சொல்லி HM சொன்னாருங்க” என்று சொன்னார்.

யார் அந்தப் பையன் என்று வகுப்பில் இருந்து அனைவரும் எட்டி விழுந்து பார்த்தோம்.

பார்த்தவுடனே “ஹேய் பழனி தான் அந்தப் புதுப் பையனா? ”  என்ற மகிழ்ச்சியில் கத்திய என் குரலைப் பார்த்து ஆசிரியர்

“உனக்கு தெரிஞ்ச பையனா? “

” ஆமாம் சார், எங்க பிரண்டு” என்று  மகிழ்ச்சி பொங்கச் சொன்னேன்.

 “ஏய் ஏன்டா இந்த பள்ளிக்கூடத்தில் வந்து சேர்ந்த.. நீ கான்வென்ட்லதான படிச்சிட்டு இருந்த” என்ற கிசுகிசுப்பாய் அவனிடம்  இடைவேளையில் கேட்டேன்.

“நான் நல்லாவே படிக்கிறது இல்லையாம். ரொம்ப சேட்டை வேற பண்றதா சொல்லி அந்த ஸ்கூல் பிரின்சிபல், அம்மா அப்பா கிட்ட தினமும் கம்ப்ளைன்ட் பண்ணிட்டே இருந்தார். அதனால் அப்பா டிசி வாங்கிட்டு வந்து இந்தப் பள்ளியில்  சேர்த்து விட்டுட்டார்”

” டேய்.. அந்தப் பள்ளிக்கூடத்தை விட இங்கதான்டா செம ஜாலியா இருக்கும். நல்லாச் சொல்லிக் கொடுப்பாங்க. அடிக்கவே மாட்டாங்க. மார்க் கம்மியானாக்  கூட திட்ட மாட்டார் எங்க சார். விடு உனக்குப் படிப்பு வராவிட்டால்  என்ன? உன் திறமையைக் கண்டு பிடிச்சு,  அதுல உன்னைப் பெரிய ஆள் ஆக்கிடலாம் அப்படின்னு சொல்லுவாரு.” என்று மகிழ்ச்சியோடு எங்கள் பள்ளியைப் பற்றி அவனிடம் சொன்னேன்.

இந்த பழனி யாருன்னு உங்களுக்கு இன்னும் சொல்லலையே? இவன் என் அப்பா வகையில் உறவினன். என்னை விட இரு வயது மூத்திருப்பான். அண்ணன் என்பதை விட எனக்கு நல்ல நண்பன். எங்க தெருப்  பிள்ளைகளுக்கே இவன்தான் குரு.

முள்ளு வேலிக்குள்ள புகுந்து குருவி பிடிக்கிறதுல இருந்து, வெள்ளரிக்காய் தோட்டத்துல வெள்ளரிக்காய் திருடுற  எல்லாத்துக்கும்  இவன் தான் எங்களுக்கு குரு. அதுவும் இல்லாம எப்பயும் நகைச்சுவையா பேசுறவன். அவன் இருக்கிற இடம் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும். அவன கான்வென்ட் பள்ளியில் சேர்த்ததனால எங்க கூட அதிகம் விளையாட விட மாட்டாரு அவங்க அப்பா. லீவு நாட்கள் மட்டும்தான் எங்களோட விளையாடுவான். இனிமேல் எப்பவுமே எங்க கூட ஜாலியா விளையாடுவான் அப்படிங்கற சந்தோஷம் எங்களுக்கு.

ஒரு நாள் சிவசாமி ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். பழனியின் கவனமோ, வெளியே மைதானத்தில் இருந்தது. அதைக் கவனித்த ஆசிரியர்,

” டேய் பழனி ..” என்று கூப்பிட்டார். அவன் அதை கவனிக்கவே இல்லை. மீண்டும் ஒருமுறை

“டேய் பழனி” என்று கொஞ்சம் சத்தமாகக கூப்பிட்டார்.

பழனி திடுக்கிட்டு போய், எழுந்து நின்று, “சார் சொல்லுங்க சார்”  என்று வேகமாய் கேட்டான்.

 “டேய் நான் பாட்டுக்கு இங்க பாடம் எடுத்துட்டு இருக்கேன்.  உன் மண்டையில் என்ன டா ஓடுது? கவனம் வகுப்பில் இல்லையே”

பதட்டத்தில் ஆசிரியர் சொல்வதை முழுவதும் கேட்காமல், என்ன ஓடுது என்ற வார்த்தை மட்டும் அவன் காதில் விழுந்தது போலும்,

“ஆமாம் சார் கிரவுண்ட்ல ஒரு நாய் ஓடுதுங்க. அதைத்தான் பாத்துட்டு இருந்தேனுங்க சார்” என்று  அவன்  சொல்ல நாங்கள் சிரிக்க, ஆசிரியரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

 அதேபோல மற்றொரு முறை, அவனிடம் ஒரு அறிவியல் சோதனையை விளக்குவதற்காக பலூன் ஒன்றை ஆசிரியர் கையில் தந்தார்.

 “சார் பலுவன் ஊதி விளையாட போறோமா? “

“என்னது பலுவனா?.. டேய் இதுக்கு பேர் பலூன்.”

“சார் இத பலுவன்னு சொல்லலாம். நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாமுங்க சார்”

என்று அவன் சொன்னதும் பூவ  பூ ன்னு சொல்லலாம்.. புய்ப்பம் என்றும்  சொல்லலாம் என்ற நகைச்சுவை எங்கள் நினைவிற்கு வந்து அனைவரும் வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.

எவ்வளவு விளையாட்டுத்தனங்கள் நிறைந்த பையனோ அதே அளவு அன்பும் கொண்டவன்.

தினமும் அவன் வீட்டில் இருந்து சீக்கிரத்தில் கிளம்பி வந்து எங்கள் வீட்டில் எனக்காகக் காத்திருப்பான். வரும்போது அவர்கள் வீட்டுக் கொய்யா மரத்திலிருந்து கை நிறையப் பழங்களைப் பறித்து எனக்காகக் கொண்டு வருவான்.

அன்று வழக்கம் போல எனக்காக அவன் காத்திருந்தபொழுது, நான் அவசர அவசரமாக என் பேனாவிற்கு மை ஊற்றிக் கொண்டிருந்தேன்.. கைத்தவறி பாட்டில் கீழே விழுந்து சுக்கு நூறாய் உடைந்து விட்டது.

அச்சச்சோ ..அம்மாக்கு தெரிஞ்சா..நல்லா  அடி விழும் கொஞ்சம் கூட உனக்கே பொறுப்பே இல்ல என்று திட்டப் போறாங்க என்ற பயத்தில் செய்வதறியாது நின்றிருந்தேன். பழனி வேகமாய் அவனுடைய வீட்டிற்கு ஓடிச்சென்று, கையில் ஒரு பொருளை எடுத்து வந்தான்.

அது புத்தம் புது camel மை பாட்டில்.

“இந்தா இத வச்சுக்கோ” என்றபடியே என்னிடம் நீட்டினான்.

“எனக்குக் குடுத்துட்டு நீ என்ன பண்ணுவ?” என்று கேட்டவுடன்,

“நீ நல்லாப் படிக்கிற புள்ள. உனக்குத்தான் இது வேணும். எனக்கெல்லாம் தேவையில்ல” என்று அசால்ட்டாகச் சொன்னான்.

“உங்க வீட்ல உங்க அம்மா அடிக்க மாட்டாங்களா?”என்று கேட்டதும்,

“அதுக்கெல்லாம் ஐயா ஒரு ஐடியா வச்சிருக்கேன். நீ கவலைப்படாத” என்று சொல்லியபடி என்னை இழுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினான்.

உஜாலா சொட்டு  நீலத்தில் தண்ணீரைக் கலந்து அதை மையாகப் பயன்படுத்தி எழுதி , சிவசாமி ஆசிரியரிடம்  நன்கு திட்டும் வாங்கினான்.

” என்னால தான நீ திட்டு வாங்குற” என்று நான் வருத்தத்தோடு சொன்ன போது,  இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்ல என்பது போல் என்னைப் பார்த்து சிரித்தான்.

மற்றொரு நாள் என்னுடைய rough note  தீரப்  போவதை கவனித்துக் கொண்டே இருந்து,  அவனுடைய ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்திலிருந்தும் பாதிப் பக்கங்களைக் கிழித்து, அதை அழகாகத் தைத்துப் பைண்ட்  செய்து கொண்டு வந்து என்னிடம் தந்தான்.

“ஏண்டா இப்படி பண்ற?” என்று கேட்டதும் வழக்கம் போல,

” நீ நல்லாப் படிக்கிற புள்ள உனக்கு தான் வேணும். எனக்கு எல்லாம் இது தேவையில்லை.” என்று  சொன்னான்.

ஏன் அவனுக்கு என் மீது இவ்வளவு பாசம் என்று ஆச்சரியமாய் இருக்கும்.  ஒருநாள் இதற்கான காரணம் அவன் அம்மா சொன்னதிலிருந்து எனக்கு புரிந்தது.

பழனிச்சாமிக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை அவர்கள் வீட்டில் பிறந்ததாம். கிட்டத்தட்ட நானும் அந்த குழந்தையும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். திடீரென்று ஏற்பட்ட காய்ச்சலால் அந்தக் குழந்தை இறந்து விட்டது. என்னைப்  பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு  அந்தக் குழந்தையின் ஞாபகம் வருமாம். அதனால் என்னை அவர் மகள் போல என்று சொல்லிக் கொண்டே இருப்பதாக அவன் அம்மா ஒரு நாள் சொன்ன பொழுது தான் , அவன் என் மீது ஏன் இவ்வளவு அன்பாக இருக்கிறான் என்பது எனக்குப் புரிந்தது.

பழனிச்சாமி அவனுடைய சொந்தத் தங்கையின் இடத்தில் வைத்து என்னை பார்க்கிறான் என்பதை அறிந்து கொண்டேன். வீட்டின் ஒரே பெண் பிள்ளையான,  எனக்கு, எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறான் என்பது மகிழ்வைத் தந்தது. அப்படியே இரண்டு வருடங்கள் கடந்தது. தினமும் பழனிச்சாமி உடன் சேர்ந்து எங்கள் ஊரில் நாங்கள் சுற்றாத இடமே இல்லை.

எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பிற்கு, பக்கத்து நகரத்தில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில்  என்னை சேர்த்தார்கள்.. பழனிச்சாமி எட்டாவது பெயில் ஆகி மீண்டும் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அதனால் அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் குறைந்தது. விடுமுறை நாட்களில் தான் சந்திப்போம். நான் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேரும் வரை, அவன் எட்டாம் வகுப்பில்  தேர்ச்சி பெறவே இல்லை.

சுட்டு போட்டாலும் அவனுக்கு படிப்பு வராது என்று அவன் அப்பா தெரிந்து கொண்டு,  அவனுடைய படிப்பை நிறுத்திவிட்டு, அவருடைய வேலைக்கு உதவியாக அவனை வைத்துக் கொண்டார் என்று பார்க்கும் போது சொன்னான். அவன் தம்பி நன்கு படித்து நகரத்தில் தொழிற்கல்வி பயில்வதாகவும் சொன்னான். படிப்பு வராவிட்டாலும் தந்தை சொன்ன வேலையை தட்டாமல் செய்து அவரிடம் நல்ல பெயரை பெற்றிருந்தான்.

 நானும் என் முதுகலை பட்டப்படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்தேன். நான் வேலையில் சேர்ந்த கல்லூரி எங்கள் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. எனவே அங்கிருந்த விடுதியில் தங்கிப் பணிபுரிந்தேன்.  மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வர முடிந்தது. 

எப்போது விடுமுறை கிடைக்கிறதோ அப்போது ஊருக்கு வருவேன்.  நான்  ஊருக்கு வரும் தகவல், எப்படித்தான் பழனிச்சாமிக்கு தெரியுமோ?  ஒரு பை நிறைய  சிவந்த கொய்யாப் பழங்களோடும் , நாவல் பழங்களோடும் வந்து நிற்பான்.

அப்படி ஒரு நாள் ஊருக்குச் சென்று இருந்த பொழுது தான் பழனியின் அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அம்மாவுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

பழனி சமையலறையில் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தான். எங்களைப் பார்த்தவுடன் வெகு மகிழ்ச்சியோடு வந்து “அம்மணி எப்ப வந்த?” என்று இந்த வருத்தத்திலும் கூட என்னை பார்த்த மகிழ்ச்சியில்  பேசினான்.

எத்தனை மகிழ்வோடு பேசினாலும் அம்மாவும் அப்பாவும் இறந்த  பிறகு தனக்கென்று யாரும் இல்லை என்ற வருத்தம் அந்த குரலில் ஒலித்ததை என்னால் உணர முடிந்தது.. நானும் அம்மா, அப்பாவை பற்றி துக்கம்  விசாரித்துவிட்டு அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

 “ஒரு நிமிஷம் இரு வரேன். ” என்று சொல்லியபடி எங்கோ சென்று விட்டு ஒரு பையோடு திரும்பி வந்தான்.. அந்தப் பை முழுக்க,  எனக்கு பிடித்த கொய்யாப்பழங்களும் நாவல் பழங்களும்..

“டேய் . ரொம்ப தேங்க்ஸ் டா” எப்படி இந்த துக்கமான நிலையிலும் கூட எனக்கு பிடித்ததை கொண்டு வந்து தந்த் அவன் அன்பு பிடித்திருந்தது.

“அம்மணி இப்பயாவது என்னை அண்ணா  என்று சொல்ல மாட்டியா? ” என்று ஏக்கத்தோடு அவன் குரல் ஒலித்தது. தாய் தந்தையை இழந்த பின்பு அவன் அன்புக்காக ஏங்குவது நன்கு புரிந்தது.

“போடா உன்னை அண்ணா என்று எல்லாம்  கூப்பிட மாட்டேன். எப்பவும் பழனி என்று தான் கூப்பிடுவேன்.” என்று நான் சொன்னவுடன்,

“இரு இரு ..ஒருநாள் என்னை நீ அண்ணன்னு கூப்பிடுவ ” என்று சவால் விடுவது போல் சிரித்துக் கொண்டே சொன்னான்.

அதற்குப் பிறகு என் திருமணத்தன்று பார்த்தது.பிறகு நானும் பெங்களூர் சென்றுவிட்டேன்.. அம்மா அப்பாவும் பக்கத்தில்  எங்கள் கிராமத்தில் இருந்து சற்று தள்ளி நிறைய குடியிருப்புகள் ஆகிவிட்ட பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.  ஆறு வருடங்கள் கழித்து உண்டாகி இருப்பதால் பிரசவத்திற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். ஆறு வருடங்களுக்குப் பிறகு பழனிச்சாமியை நேற்றுதான் பார்த்தேன். இந்த ஆறு வருடங்களில் அம்மாவுடன் பேசும் பொழுது எப்போதாவது அவரைப் பற்றி விசாரிப்பேன். அவரும் பட்டும் படாமல் பதில் சொல்வார். பிறகு என்னுடைய வாழ்க்கை ஓட்டத்தில் அவனை மறந்திருந்தேன் என்றே சொல்லலாம். ஆறு வருடங்களுக்குப் பிறகு தூரத்தில் இருந்து அவனை நேற்று தான் பார்த்தேன்.

அது எப்படி ஆறு வருடங்களில் இவ்வளவு தோற்றம் மாறி இருக்கிறான். சிறுவயதில் இருந்து பழகிய என்னால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவு  தோற்றத்தில் எவ்வளவு மாற்றம்? அந்தக் குரல் மட்டும் தான் மாறாமல் இருக்கிறது .

 மாலை ஓய்வாக அமர்ந்து அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது,

” அம்மா நம்ம பழனி தானே அந்த தண்ணி விடுற ஆளு?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“அவன்தான்” அம்மாவின் குரலில் ஒரு சலிப்பு தென்பட்டது.

“என்னம்மா ஆளு இப்படி மாறிப் போயிட்டான். இந்த வேலைக்கு எப்படிம்மா வந்தான்?”

“அட அவன பத்தி யோசிக்கிறது விட்டு போட்டு உன் வேலையை பாரு. அவன் பண்ண காரியத்துக்கு, நம்ம சொந்தக்காரங்க யாரும் அவன வீட்டுக்குள்ள கூட விடறதில்லை” எரிச்சலோடு அம்மாவின் குரல் வெளிப்பட்டது.

“அப்படி வீட்டுக்குள்ளே விடமுடியாத அளவுக்கு என்ன தப்பு பண்ணினான்?”

 “வேற சாதிப் பொம்பள கூட ஒண்ணா இருக்கிறான். அவ ஏற்கனவே கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தையோட இருக்கிறாள். புருஷன்  வேற செத்து போயிட்டான்”

அம்மா சொன்னதை கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக  இருந்தது. வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை. இந்த சாதி மதம் இதெல்லாம் பெருசா எனக்கு நம்பிக்கை இல்லை. சின்ன வயசுல இருந்து பெரியார், காரல் மார்க்ஸ் இப்படி புத்தகங்கள்ல படித்து வளர்ந்ததால் அது எனக்கு அது தப்பாக தோன்றவில்லை. அதுவும் இல்லாமல் என்னுடைய கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் கலப்பு திருமணம் செய்து இருக்கிறார்கள். ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் அளவு அத்தனை முற்போக்கானவனா? என்பது மட்டும் எனக்கு ஒரே யோசனையாக இருந்தது.

அடுத்த நாள் காலை, அம்மா வேலைகளை முடித்து உறங்கிக் கொண்டிருந்தார்.  நான் வராண்டாவில் அமர்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.

வாசலில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தால், அங்கே பழனிச்சாமி நின்று கொண்டிருந்தான்.

“டேய் பழனி. நேத்து பார்த்தும் பாக்காத மாதிரி போயிட்ட இல்ல. போடா என் கூட பேசாத”  என்று  ஒரு பள்ளி குழந்தையைப் போல நான் அவனிடம் சண்டை கட்டினேன்..

“இல்ல அம்மணி. நான் உனக்கு சொந்தக்காரங்கன்னு தெரிஞ்சா, உங்களை  மத்தவங்க எல்லாம் ஒரு மாதிரி பாப்பாங்க . அதுவும் இல்லாம உங்க வீட்ல அம்மாவும் என் கூட பேச மாட்டாங்க. நீ பேசினாலும் அவங்க விரும்ப மாட்டாங்க அப்படின்னு தான் பேசாம போயிட்டேன். “

” அப்புறம் எதுக்கு இன்னைக்கு வந்த?” சிறிது கோபத்தோடு கேட்டேன்.

” ஆறு வருஷத்துக்கு அப்புறம் நீ விசேஷம்னு தேவகி அக்கா பேச்சு வாக்கில் சொன்னாங்க. மனசு கேக்கல அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்று சொல்ல சொல்ல, என் கோபம் பனியாய் உருகியது.

“அதெல்லாம் விடு இந்தா..” என்று  சொல்லியபடியே ஒரு பையை நீட்டினான்.

 அதில் என்ன இருக்கும் என்று பார்க்காமலேயே நான் யூகித்து  விட்டேன். என்ன இருக்கும் என்று நீங்களும் யூகித்திருப்பீர்கள் தானே..

எத்தனை வருடங்கள் ஆனாலும் எப்படி எனக்கு பிடித்ததை மறக்காமல் நினைவு வைத்திருக்கிறான்? என்று  எனக்கு கொஞ்சம் திகைப்பாய் தான் இருந்தது.

எவ்வளவு கூப்பிட்டும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டு அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.  பழைய  கதைகளை எல்லாம் மகிழ்வோடு பேச ஆரம்பித்து விட்டோம். எங்கள் பள்ளி நாட்கள், விடுமுறையில் ஊர் சுற்றியது, வேலியில் குருவி பிடித்தது, ஓனான் அடித்தது, வெள்ளரிக்காய் திருடியது என்று கிட்டத்தட்ட எங்கள் 10 வயது நினைவிற்குள் சென்று விட்டோம்.

அவன் அம்மா அப்பா இறந்து பிறகு, சொந்தங்கள் பணத்திற்காக மட்டும் இவர்களைச் சுற்றி வந்ததும்,  தம்பியும் நல்ல வேலை கிடைத்ததும், சொத்தை பிரிவினை செய்து கொண்டு, அவன் பங்கை பெற்றுக்கொண்டு  பக்கத்தில் இருந்த நகரத்திற்குச் சென்று விட்டதையும் என்னிடம் பகிர்ந்து கொண்டான்.

இவன் மட்டும் யாரும் இன்றி அந்த வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, அவர்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில். தோட்டத்தில் வேலைக்கு வரும் மயிலா என்ற பெண்மணிக்கு இவன் மீது சிறிது இரக்கம் ஏற்பட்டதாம்.. அந்தப் பெண்மணி ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடையவர். அவளுடைய கணவன் இரண்டாவது குழந்தை பிறந்த போது இறந்து விட்டதால் அவள், சொந்த ஊரை விட்டு இந்த ஊருக்கு வந்து வசிப்பதாகவும் சொன்னான்

இவன் சமைக்க தெரியாமல் தனியே சமைத்து சாப்பிடுவதை பார்த்து  முதலில் சமைத்துக் கொடுத்திருக்கிறாள்.  இவன் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த பொழுது ஒரு தாயைப் போல அருகே இருந்து கவனித்துக் கொண்டாளாம். அன்பு காட்ட யாரும் இல்லாமல் இருந்த அவனுக்கு, இந்த அன்பு பிடித்துப் போக, அவன் மனதில் அப்போது ஒரு எண்ணம் தோன்றியதாம்.

அடுத்த நாள் தோட்ட வேலைக்கு வந்த மயிலாவிடம்ம்

“நான் ஒன்று கேட்பேன் தவறாக நினைத்துக் கொள்ளாதே. நான் உன்னை திருமணம் செய்து கொள்ளவா?” என்று கேட்டதும் அவள் அவள் கொஞ்சம் அதிர்ந்து தான் போய் இருப்பாள்.

“சாமி நீங்க என்ன சாதி நாங்க என்ன சாதி? அதுவும் இல்லாம உங்கள விட நான் நாலு வயசு மூத்தவ” என்று தயங்கிக் கொண்டே சொல்லி இருக்கிறாள்.

“இங்க பாரு இந்த சாதி அதெல்லாம் குப்பையில தூக்கி போடு. நான் அனாதையா நின்னபோது ,  எந்த ஜாதிக்காரனும் என் பக்கத்துல வரல . நான் நல்லா இருக்கேனா சாப்பிட்டேனா  என்று கூட கேக்கல. எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை.

என் மேல அன்பு காட்டின ஜீவன் நீ. உனக்காக இல்ல உன் பிள்ளைகளுக்காக நான் இதை கேட்கிறேன்” என்று அவன் எத்தனை விளக்கம் சொல்லியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் உனக்கு கணவனாக இருக்க  முடியாவிட்டாலும், இந்த குழந்தைகளுக்குத் தகப்பனாக இருந்தால் போதும் என்றும் கேட்டும் அவள் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. 

ஒருமுறை  வெளியூர்  சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மயிலாவுக்கு  ஒரு அதிர்ச்சி. பழனி அவள் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, அவள் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் பிள்ளைகள் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

“ரெண்டு நாளா நீ ஊர்ல இல்ல. வயசான உன் அப்பா எப்படி பிள்ளை பாத்துக்குவார் அப்படின்னு தோணுச்சு. ரெண்டு நாளா இங்க தான் இருக்கேன். ” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

 பிள்ளைகளும் “இவர் நம்ம கூடவே இருந்தா ரொம்ப ஜாலியா இருக்கும்மா” என்று மகிழ்வோடு கூறினார்கள்.

 முதலில் அவள் எதுவும் பேசவில்லை.ஆனால் குழந்தைகள் அவனுடன் அன்புடன் பழகுவதைப் பார்த்து, மெல்ல அவளும் அவன் அன்புக்கு ஏங்கத் துவங்கி இருக்கிறாள்.

அவளும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட பின்பு தன்னுடைய உடமை பொருட்களை அங்கு எடுத்துச் சென்று விட்டதாகவும் அவர்களுடன் இணைந்து வசிக்கத் தொடங்கியதாகவும் பழனி கூறினான்.

இந்த உலகத்துக்கு தேவை ஒரு தாலி. இல்லையென்றால் அவளை கண்டபடி பேசுவார்கள் என்று, அவ கழுத்தில் ஒரு  மஞ்ச கயிறு ஒன்னு கட்டியதாக அவன் கூறக் கூற , விளையாட்டுத்தனமாய் வெள்ளந்தியாய் இருந்த பழனிச்சாமியா  இப்படி பேசுவது?  என்று எனக்கு ஒரே வியப்பு.

ஒரே சாதி, மதம் அப்படின்னு வெறும் பெருமை பேசாம, கஷ்டப்படுற ஒருத்தனுக்கு உதவி செய்ய முன்னாடி வரணும். அதை யாருமே செய்யல. அவன் சாப்பிட்டானா? என்று  கேட்கக் கூட ஆள்  ஒரு சொந்தம் இல்லை. அப்போ அவன் செஞ்சதுல என்ன தப்பு இருக்கு? இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு உசுரும், தன் மேல் அன்பு வச்சு இருக்கிற  ஒரு உசுர தேடி தானே காலம் பூரா இயங்கிட்டு இருக்கு. பழனியோ தன் மேல அன்பு காட்டின மயிலா கூட சேர்ந்து வசிக்கிறதுல எந்த தப்பும் இல்லை என்று எனக்குத் தோன்றியது.

அப்போது அவன் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

“ஹலோ சொல்லு..”

…………..………

“அப்படியா.. கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று  சொல்லிக்கொண்டே அழைப்பை துண்டித்தான்.

“மயிலாதா போன் பண்ணுச்சு. பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் சேர்க்க போனா. நம்ம படிச்ச பள்ளிக்கூடத்துல தான். குழந்தைகளோட அப்பா கையெழுத்து போடணும்னு சொல்லி இருக்கிறாங்க. அதுதான் நான் போயி கையெழுத்து போட்டுட்டு , பசங்களப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டுட்டு , இன்னொரு நாள்  சவுரியமா வர்றேன்” என்று சொல்லியபடியே எழுந்தான்.

“ஒரே நிமிஷம் ..இரு வரேன்” என்று சொல்லிக்கொண்டு அவசரமாய் வீட்டிற்குள் வந்து, பழங்கள் ,இனிப்பு சாக்லேட்  என்று ஒரு பை  நிறைய திணித்துக் கொண்டு,

“அண்ணா… “

என்று நான் பாசத்தோடு அழைத்தேன்.

நான் யாரையோ கூப்பிடுகிறேன் என்று நினைத்துக் கொண்டு அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய்  பழனிச்சாமி அண்ணா உன்னைத்தான்.. உன் பிள்ளைக கிட்ட அத்தை கொடுத்தாங்கன்னு சொல்லிக் கொடுத்திரு” என்று பையை அவனிடம் நீட்டினேன்.

இன்ப அதிர்ச்சியோடு  என்னையே பார்த்து கொண்டு நின்றிருந்தான். உடனே எப்போதும் போல வெள்ளந்தியாய் சிரித்து விட்டு, வருகிறேன் என்று தலை அசைத்து விட்டு, வேகமாய் அவனுடைய டிவிஎஸ் 50 ஓட்டிக்கொண்டு  பள்ளியை  நோக்கிப் பறந்தான்.

+++

பூங்கொடி பாலமுருகன்

ஊர் மடத்துக்குளம். கதை சொல்லி, சிறார் எழுத்தாளர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *