முகங்கள்-

நம்மைக் கடந்து செல்லும் அல்லது நாம் கடந்து போகும் மனிதர்களில் ஒரு சில முகங்கள் தனது செய்கையாலோ அல்லது வேறு ஏதோ ஒரு விதத்திலோ நம் மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும்; ஆனால் சில முகங்களோ நமக்கு வெறுப்பை மட்டுமே கொடுக்கும், இப்படிக் கடந்து வந்த முகங்களில் சில முகங்களை நம்மால் மறக்கவும் முடியாது, மனதில் இருந்து எளிதில் விலக்கி வைக்கவும் முடியாது.

கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி, நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்; வாசித்திருப்போம். எனக்குத் தெரிந்த நண்பர் ‘முகங்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவர் சந்தித்த முகங்கள் குறித்த அருமையான சிறுகதை போன்றதொரு தொகுப்பு அது.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் சிலரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும். யாரும் நமக்குப் படிப்பித்துக் கொடுப்பதில்லை என்றாலும் நாம் விருப்பப்பட்டதை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். நம்மிடம் இருந்து அவர்கள் எதைக் கற்றுக் கொண்டார்கள் என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. ஒருவேளை நமக்குத் தேவையானது அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்… அந்த இடத்தில் பெரியவன் சிறியவன் என்ற பேதமெல்லாம் தேவையில்லை என்பதே என் எண்ணம்.

வேலை நிமித்தம் தினமும் ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ்க்கையில் தினம் தினம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நான் சந்திக்கும் முகங்களில் பல முகங்கள் பரிதாப முகங்களே. நம்ம நாட்டில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் மனிதர்களில் இந்த பரிதாப முகம் கண்டிப்பாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இருவரின் மனைவியர் பற்றியதாய் இருந்தது என்றாலும், இரண்டு மனைவியரில் ஆரம்பிக்கும் கவிதை பயணித்துப் போய் இறுதியில் முடியும் போது அந்த மனிதர்களில் முடியும். அவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில்தான் வேலை செய்கிறார்கள்; கட்டிட வேலை. இவர் மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் கவிதை பேசிச் செல்லும். ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் வலிகள், கவலைகள் இருக்கும். அது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். மிகவும் நெருக்கமான நட்பாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கஷ்டங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியில்லை என்றால் வேலை நிமித்தம் பேசுவதுடன் சரி, வலிகளை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை.

சில வருடங்களுக்கு முன் நாங்கள் -நானும் இன்னொரு தமிழ் நண்பரும் -காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது; அதற்கான வாய்ப்பும் இல்லை. காரணம், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் என்பதால் சன்னல் எல்லாம் இருக்காது. கண்ணாடி அடைத்திருக்கும். அடித்துப் பிடித்து ஏறவும் தேவையில்லை; எல்லாரும் ஏறும் வரை பேருந்து நிற்கும் என்பதால் ஒவ்வொருவாராக இடிக்காமல், தள்ளாமல் ஏறுவார்கள். நாங்களும் அப்படித்தான் நமக்கு முன் நிற்பவர் ஏறட்டும் எனக் காத்திருப்போம்.

அப்படியான நாட்களில் இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.  பேருந்து வந்ததும் ஓடிப் படிக்கு அருகில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். உள்ளிருந்து இறங்குபவர்களுக்கும் வழி விடமாட்டான்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மொபைலில் முகம் பார்த்து, அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது அவன் கோபமாய் காலை உதறுகிறான்; வாய்க்குள் ஏதோ முணங்குகிறான். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! எல்லோருக்கும் அத்தனை மகிழ்ச்சி.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். இவர்களில் ஆண்களும் பெண்களும் அடக்கம். அப்படித்தான் ஒருமுறை ஒரு நடுத்தர வயது மனிதன் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டையைக் கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். அது பார்ப்பவர்களை ஏமாற்றி, பரிதாபப்பட்டு கையில் இருப்பதைப் போட்டு விட்டுப் போவார்கள் என்ற எண்ணத்தில்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. கடந்து போனவர்கள் அவனைப் பார்த்தபடி பயணித்தார்கள். அவனைப் பார்க்கும் போதே கடுப்புத்தான் வந்தது. உழைக்கச் சோம்பேறிப்பட்டுக் கொண்டு இப்படி பிச்சை எடுப்பதில் என்ன கிடைத்துவிடும். இதற்கு ஊரில் இருந்திருக்கலாமே.

மற்றொரு முறை அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி, ரோட்டைக் கடப்பதற்காக சுரங்க நடைபாதை வழி  நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து, தனக்கு முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார்; அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்… அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது.

இதைவிட இன்னொரு விதமாய் பிச்சையெடுக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் வரும்போது காரில் வந்து, காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்துக்கு நடந்து போய் பிச்சை எடுப்பார்கள். கடை கடையாகவும் போவதுண்டு. ஒரு குறிப்பிட்ட நேரம் பிச்சை எடுத்தபின் மீண்டும் தங்கள் காருக்குப் போய் கிளம்பிப் போய்விடுவார்கள். பணக்காரப் பிச்சைக்காரர்களோ என்னவோ… யார் கண்டா.?

நண்பர்களுடன் பேசிச் கொண்டிருக்கும் போது ஒரு பெண் எங்களைக் கடந்து போனார். கொஞ்சத் தூரம் போனவர் திரும்பி வந்து ‘நீங்க தமிழா..?’ என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னதும் அவர் வேறொரு இடத்தில் இருந்து தோழியை நம்பி வந்து, அவரால் ஏமாற்றப்பட்டேன் என்று ஒரு கதையைச் சொன்னார். அதன்பின் பேசியதில் நிறையச் சொன்னார். பேருந்துக்குக் கூட கையில் பணமில்லை என்றார். நண்பர் பேருந்து நிலையத்தில் விடுகிறேன். அங்கிருந்து பஸ் ஏறிப் போங்க என்றதும் சரி என்றார். முன்னுக்குப் பின் முரணாகவே பேசினார். நாங்கள் விபரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் காரை எடுத்துக் கொண்டு வந்து கூட்டிச் சென்றார். காரில் போகும் போது என்னைக் காவல் நிலையத்திற்கு கூட்டிப் போங்க என்று சொல்லவும், இதென்னடா உதவி செய்ய வந்து உபத்திரவமாப் போச்சே என நினைத்த நண்பர், எனக்கு வேலை இருக்குங்க. இந்தா பேருந்து நிலையத்துக்குள்ளே காவல் நிலையம் இருக்கு. போய் பாருங்க… உங்க பிரச்சினையைச் சொல்லுங்க எனச் சொல்லிவிட்டு வந்தார். எங்களிடம் வந்து தேவையில்லாம மாட்டிக்கத் தெரிந்தேன் எனப் புலம்பினார்.

அதன்பின் டீ குடிக்கலாம் என ஒரு மலையாளி கடைக்குப் போனோம். டீயை வாங்கிக் கொண்டு காருக்கு அருகில் நின்று பேசிக் கொண்டே குடித்தோம். அப்போது ஒருவர் வந்தார், எங்களைப் பார்த்ததும் ஒரு பையைத் திறந்து மாத்திரைகளை எடுத்துக் காண்பித்து, உடம்புக்கு முடியலை, மாத்திரை சாப்பிடுறேன். தீர்ந்து போச்சு; இப்ப வாங்கணும் நூறு திர்ஹாம் வச்சிருந்தாக் கொடுங்க என இந்தியில் கேட்டார். அவரைப் பார்க்கும் போது உடம்பு முடியாதவரைப் போலெல்லாம் இல்லை. இப்படி பலரிடம் கேட்க, ஒரு சிலர் பணம் கொடுக்கலாம், அது அவருக்கு அன்றைய தினச் செலவுக்குப் போதுமானதாகவும் இருக்கலாம்.

நண்பர் அவரிடம் என்ன ஏது என விசாரிக்கும்போது அந்தக் கடையில் வேலை பார்க்கும் மலையாளிப் பையன் இவர் தினமும் மாத்திரை வாங்குறார் எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனான். உடனே எங்களின் நண்பர் இப்பத்தான் ஒருவருக்கு உதவிட்டு வந்தோம். இன்னைக்கு இது போதும் என்று சொல்ல, அவர் ஏதோ திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

இங்கே எல்லாக் கட்டிடங்களிலும் – பெரும்பாலும் அலுவலகங்கள் இருக்கும் கட்டிடங்கள் – கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வங்கதேசத்தவர்களுமே இந்த வேலைக்கு வருவார்கள். பார்க்கும் வேலைக்கு வாங்கும் சம்பளம் ரொம்பக் குறைவுதான். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே… சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை.

அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறிதான் இருப்பார்கள். சரி இருந்துட்டு சுத்தம் பண்ணிட்டு போவானுங்களான்னா அதுவும் இல்லை.வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க… அதைச் சுத்தம் செய்பவர்கள் நம்மிடம் எப்படிப் போட்டிருக்காங்க பாருங்க எனச் சொன்னாலும் தனது பணி இதுதானே என்பதாய் சுத்தமாகத் துடைத்து எடுப்பார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து பார்க்கும் போது மீண்டும் அதே போல் தொளி அடித்துப் போட்டு வைத்திருப்பார்கள்.

இங்கு எல்லா அலுவலகத்திலும் ஒரு சிறிய கிச்சம் – டீ, காபி போட, சாப்பாட்டை சூடு பண்ண – இருக்கும். நாங்க எல்லாருமே அதைப் பயன்படுத்துவோம். சாப்பிட்ட பாத்திரங்களை அங்குதான் கழுவுவோம். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்களை அங்குதான் கழுவுவார். அவர் அந்தச் சிறிய அறைக்குள் வந்து சென்றார் என்பதை அந்த அறையெங்கும் சிதறிக் கிடக்கும் தண்ணீர் சொல்லும். ஒவ்வொரு நாளும் ஆபீஸ் உதவியாளராய் இருக்கும் நம்ம ஊரு அண்ணன் ஒருவர், பாருங்க… அவனுங்கதானே சுத்தம் பண்ணுறானுங்கன்னு நினைப்பாரு போல எனப் புலம்புவார். சுத்தம் பண்ணுபவன் இருக்கானுல்ல பண்ணிக்கட்டும் என்ற மனநிலை இவரைப் போன்றோருக்கு. இவர்கள் தங்கள் வீடுகளில் இப்படிச் செய்வார்களா என்றால் சத்தியமாகச் செய்யமாட்டார். ஏன்னா அது அவர்களின் வீடு அல்லவா…!

இதேபோல் தற்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கும் ஒரு பாலஸ்தீனி, மதியம் சாப்பிட்டு விட்டு கிச்சனில் வந்து வாய் கொப்பளிக்க ஆரம்பித்தான். அது காபி, டீ சாப்பிட்ட கோப்பைகள், தட்டுகள் கழுவ பயன்படுத்துவது அதில் வாய் கொப்பளித்துத் துப்பலாமா என்ற எண்ணம் துளி கூட அவருக்கு இல்லை. நாம சொன்னால் நீ யார் சொல்ல என்று சொல்லுவார்கள். இதே சில அரபி பெண்கள் சொன்னதும் இனி இங்க கழுவலை என்று சொன்னவன், இப்போதெல்லாம் சாப்பிட்ட பாத்திரத்தை ஆபீஸ் பாயிடம் கழுவக் கொடுத்து விடுகிறார். நாம் சாப்பிட்ட பாத்திரத்தைக் கழுவ அவர்கள் அங்கு வேலைக்கு வரவில்லையே, டீ, காபி கொடுக்க… பிரிண்ட் கொடுத்ததை எடுத்துக் கொடுக்க… சின்னச் சின்ன வேலைகள் பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது கூட தெரியாதவனல்ல அவன் என்றாலும் நான் இஞ்சினியர், இவர்கள் பாத்திரம் கழுவுபவர்கள் என்ற எண்ணம். இரு நாட்களுக்கு முன் ஒரு அரபி பெண் ஆபீஸ் பாய் இருவரிடம் அவன் கழுவ மாட்டானா..? அவன் தின்ன பாத்திரத்தை நீங்க ஏன் கழுவுறீங்க…? எனக் கத்திக் கொண்டிருந்தது என்றாலும் இன்று வரை சாப்பிட்ட கழிவுகளைக் கூட குப்பைக் கூடையில் போடாமல் அப்படியேதான் வைத்துச் செல்கிறான். அதைக் கழுவித் துடைத்து அவனிடம் கொண்டு போய்க் கொடுப்பவருக்கு அவனின் அப்பா வயது. நானுமே அவரைப் பல முறை திட்டியிருக்கிறேன் இந்த வேலைகள் எல்லாம் பார்க்க முடியாது எனச் சொல்லுங்கள் என.

நான் முன்பு தங்கியிருந்த அறை இருந்த கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போதும் பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊர்ல போய் இருக்கலாமே என்று கேட்டால் அங்க இருந்து என்ன பண்ண… இன்னமும் கடனிருக்கு; ஏதாவது ஒரு செலவு வந்துருது என்று சொல்லிக் கொண்டே வேகவேகமாக சுத்தம் பண்ணி கொண்டு இருப்பார். அந்த ஹோட்டல் அவரால்தான் ஓரளவுக்கு ஓடியது என்றாலும் திடீரென அதை விட்டு விட்டு – கடன் அதிகமானதால் – ஊருக்கு ஓடிவிட்டான் மலையாளி. இவர் என்ன செய்வதெனத் தெரியாது நின்று நண்பர்கள் உதவியால் மற்றொரு கடையில் வேலைக்குப் போனார். இப்போது கனடாவில் இருக்கும் மகளுடன் மகிழ்வாக வாழ்வைக் கழிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர்  பார்த்த நிகழ்வு இது. நானும் நண்பரும் பேருந்துக்கு நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்களுக்கான சிகரெட் இங்கு எல்லாக் கடைகளிலும் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை வாங்கிப் பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சிரித்துக் கொண்டே சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி கையில் சிகரெட்டுடன் ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே; அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இந்த லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க… இங்க எல்லாம் சகஜம்தானே… அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை.  இப்போது எல்லாரும் பல வகை நறுமணங்களுடன் விற்கும் மின்னணு சிகரெட்டுகளை வாங்கி, ஊத ஆரம்பித்துவிட்டார்கள்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய், புதிய வேலையைச் செய்யச் சொல்லி, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பான், மேலும் நமக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்பவனாகவும் இருந்தான். அதன் பின்னர் அதே போல் எகிப்து நண்பர் ஒருவருடன் வேலை பார்த்தேன். அவர் மிகவும் நல்லவர்… இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். வேறு கம்பெனிக்குப் போனாலும் இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான்.

இப்படிப் பல முகங்களை – மனிதர்களை – சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இப்படியான நிறைய முகங்களை நமது பயணங்களில் சந்திக்கலாம். நம்முடன் நிறைய விசயங்கள் பேசிக் கொண்டே வருவார்கள். அதன் பின் அவருக்கும் நமக்கும் தொடர்பே இருக்காது என்றாலும் அந்த முகம் மறக்கவே மறக்காது. அப்படித்தான் இங்கே நான் பேசிய மனிதர்களுடைய முகம் என்னால் இன்னமும் மறக்க முடியாத முகங்களாய்…

000

நான் பரிவை சே,குமார், நித்யா குமார் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம். இதுவரை எதிர்சேவை, வேரும்

விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு

என்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும்

எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன்

பொற்கிழி விருது பெற்றிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *