-இளையவன் சிவா
உலகத்தின் முதல் மனித இனம் தோன்றி குகைகளில் வாழ்ந்து பிறகு சமூகமாக உருமாகிறது. சமூக வாழ்க்கையில் நெருப்பைக் கண்டறிந்த பிறகு இனக் குழுக்களாக பிரிந்து இடம்விட்டு இடம் நகரப் பார்க்கும் மனிதக் கூட்டம் விவசாயத் தொழிலை முதன்மையானதாக கைக் கொள்கிறது. தாயை மையமாக வைத்து உருவான குழுக்களின் நகர்வு நாகரீகங்களை நதிகளின் கரைகளில் விதைக்கத் தொடங்குகிறது. குடும்பம் என்ற அமைப்பிற்குள் மனிதன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் போது அவனுக்கான இடர்பாடுகளை கலைந்திட அவனுக்கு ஏதோ ஒரு போக்கிடம் தேவைப்படுகிறது. தனது இன்னல்களை மனம் விட்டுப் பேசுவதற்காகவாவது காது கொடுத்துக் கேட்டாலும் இல்லையென்றாலும் கவலைப்படாமல் தேவைப்படும் ஒன்றாகவே கடவுளைப் படைக்கிறது மனித இனம். குழுக்களின் நகர்வும் அவர்கள் மேற்கொண்ட வேலைகளின் நிமித்தமும் அவரவர் விருப்பக் கடவுள்களை உருவகம் செய்து வழிபட வைக்கிறது. கடவுளால் மனிதர்களுக்கு கிடைக்கப் போவது ஒன்றும் இல்லை என்று பகுத்தறிவு பேசினாலும் நம்பிக்கை சார்ந்தும் பயம் சார்ந்தும் நிறைவேறாத ஆசைகளின் தூண்டுகோலாகவும் கடவுளை நம்புவதில் மனிதன் இன்றும் கொள்கை வைத்துக் கொண்டிருக்கிறான். அப்படியான தனிப்பட்ட குழுவினருக்கான சிறு தெய்வ வழிபாடாக “கருப்பராயர்” என்ற கடவுளைக் கொண்டாடும் மக்களின் வழிபாட்டு முறைகளை அடிப்படைக் கருவாக்கி பெண் விடுதலை என்னும் பகுத்தறிவையும் மனிதர்களின் நேர்மையையும் படம்பிடித்துக் காட்டும் குறுநாவலாக மலர்ந்துள்ளது கருப்பராயர் நூல்.
கிராமத்துப் பண்பாடுகளை எளிய மக்களின் சிறு தெய்வ வழிபாட்டு நெறிமுறைகளை சிக்கலற்ற மொழியில் நகர்ந்தோடும் நதியின் போக்கைப் போல எழுப்பப்பட்டிருக்கும் நூலுக்குள் இடம்பெறும் திருவிழா உலாவில் நாமும் கலந்து கொண்டு மகிழ்கிறோம். கடவுள் உண்டா? இல்லையா? கடவுளால் ஆகப்போவது என்ன? என்ற வினாக்களைத் தாண்டி நம்பிக்கை சார்ந்தும் மண் சார்ந்தும் மனம் ஏற்கும் தெய்வ வழிபாட்டின் திருவிழாத் தருணங்களை அழகாகப் படம் பிடிக்கிறது நாவல்.
கந்தசாமி என்ற பூசாரியின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது நேர்மையின் தராசுத்தனத்தையும் எழுதி எல்லோருக்குமான ஒழுக்கத்தின் அறமாக வைத்துப் பார்க்கவும் நூல் வழி காட்டுகிறது.
கருப்பராயர் திருவிழா நிகழ்வின் ஆரம்பம் தொடங்கி இறுதி நிகழ்வான பூ கேட்டல் வரையிலான தருணங்களை முழுமையாகச் சொல்லும் மொழி நமக்கான வாழ்வியலாக மாறிவிடுகிறது. பட்டாசு விடுபவர், பம்பை அடிப்பவர், நாதஸ்வரம் வாசிப்பவர், மேளம் அடிப்பவர் என ஒரு திருவிழாவை உற்சாகப்படுத்தி கடவுளின் வருகையை எல்லோர் மனங்களுக்குள்ளும் காட்சிப்படுத்தும் கதையோட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையும் மதிப்பும் நமக்குள் பற்பல உணர்ச்சிக் குவியலாக மாறுகின்றன.
ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த திருவிழாவாகத் தொடங்கும் நிகழ்வானது ஒட்டுமொத்த கிராம மக்களின் ஈடுபாட்டினால் பொதுத் திருவிழாவாக புத்துயிர் பெறுகிறது. கிராமத்தை விட்டு வெளியே சென்றவர்களும் ஒவ்வொரு ஆண்டும் கருப்பராயர் தரிசனத்திற்காகவாவது ஊரைத் தேடி வருவதும் தமது அடுத்த தலைமுறையினருக்கும் அதை வழிகாட்டுவதும் தேசத்தின் பண்பாட்டை நிலை நிறுத்துகின்றன.
காட்சிப்படுத்தும் எல்லா மனிதர்களும் தங்களது அடிப்படையை மறக்காமல் அதை கடவுளோடும் வாழ்வியலோடும் தொடர்புபடுத்தி தங்களது வாரிசுகளுக்கும் அறிவுறுத்துவது மற்றும் நேர்மையை மட்டுமே தங்களின் வாழ்வியலாக மாற்றிக் கொள்வது நூலின் மீதான பிணைப்பை நமக்குள் இறுக்கி விடுகிறது
ஊருக்கே பூ வைத்து குறி சொல்லும் பூசாரியின் மகளுக்கு விடியல் இல்லை என்பதையும் அதற்கான முற்போக்குத்தனத்தை மகன் மூலமே அவருக்கு உணர்த்தும் கருப்பராயரின் விளையாட்டையும் நாவலின் இறுதிப் பகுதி எடுத்துரைக்கிறது.
நாவலில் இயல்பான கதையோட்டத்தோடு மண் மணக்கும் தத்துவங்களை விதைத்திருக்கும் தெளிவான நகர்வு நம்மையும் உயிர்ப்பிக்கிறது.
*நாட்டுப்புறக் கலைகள் வெறும் பொழுதுபோக்கு அல்ல அவை ஒரு சமூகத்தின் வரலாறு
*கல்வி என்பது மனிதனை உயர்த்தும் ஏன் மட்டுமல்ல பிறர் கண்களில் மரியாதையாக நிற்கச் செய்யும் ஒளியும் ஆகும்
*வாழ்நாள் முழுக்க யார் எப்படி பார்க்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே வாழ்ந்தவர்கள் சில நேரங்களில் பார்வைகளையே மறந்து விடுகிறார்கள்
*இங்கே யாரும் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை அவரவர் பலவீனங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்கள் ஆனால் அவர்களுக்குள் ஒரு அசாதாரண தேவை இருந்தது யாராவது வந்து தங்களின் துயரங்களுக்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்ற தேவை.
*அது ஒரு சிலையை எடுத்துச் செல்லும் ஊர்வலம் அல்ல ஒரு நல்ல எண்ணத்தை தோளில் சுமந்து வரும் மனிதர்களின் பயணம்
*மழை என்பது வானத்திலிருந்து விழும் தண்ணீர் மட்டும் அல்ல பசுமையின் கதவுகளை திறக்கும் சாவி
*சேவை என்பது கொடுப்பதில் இல்லை எப்படி கொடுக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது
*பயன் தருவது முக்கியம் ஆனால் அந்த பயனை மனிதனின் மரியாதையை காயப்படுத்தாமல் தருவது அதைவிட முக்கியம்
*மக்கள் வாழ்க்கை என்பது எப்போதும் தர்க்கங்களால் மட்டுமே நகர்வதில்லை சில நேரங்களில் நம்பிக்கைகள் தான் மனிதர்களை நாளை நோக்கி நடக்க வைக்கின்றன
*ஏழை மனிதனுக்கு உடம்பு தான் சொத்து அந்த உடம்பு உடைஞ்சா அவன் வாழ்க்கையே உடைஞ்சிடும்.
*மனிதன் எவ்வளவு உயரம் போனாலும் அவன் காலடியில் இருக்கும் மண்ணை மறந்துவிட்டால் அவன் உயரம் வெறும் நிழலாகிவிடும்
*பரம்பரை என்பது சொத்துக்களை பரிமாறிக் கொள்வது மட்டுமல்ல; நம்பிக்கைகளையும் பொறுப்புகளையும் தலைமுறைகளுக்கு கடத்துவதும் பரம்பரை தான்.
*அவர்கள் சங்கிலியில் முடிச்சுப் போடும்போது அது வெறும் துணி அல்ல இன்னும் வாழ்க்கையில் மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவர்கள் சாமிக்கு எழுதும் மௌனக் கடிதம்.
*சில நேரங்களில் விடுதலை என்கிறது கதவுகளை உடைத்துக் கொண்டு வருவதில்லை. ஒரு மனிதனின் வார்த்தையாகவே வருகிறது. ஒரு உறவின் கையாகவே நீள்கிறது.
*மனிதர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவர்களை மீண்டும் அழைத்து வர ஒரு வேரின் நினைவு போதுமானது.
*மனிதன் சந்திக்க நேரும் துன்பங்களால் தோல்விகளால் நிறைவேறாத ஆசைகளால் இழப்புகளால் துவண்டு போய் நம்பிக்கை இழந்து வீழ்ந்து விடாமல் தாங்கிக் கொள்ள ஒரு கரம் தேவைப்படுகிறது சரணடைய ஒரு தெய்வம் காரணமாக தோன்றுகிறது.
*ஒரு பொண்ணோட வாழ்க்கையை உடைச்சிட்டு போறவன் முழு உடம்போட இருந்தாலும் அவன் தான் உண்மையிலேயே ஊனமானவன்.
இப்படியான தத்துவங்கள் நூலுக்குள் கதையோட்டத்தோடு இணைந்து அழகு செய்கின்றன.
கடவுள் வழிபாட்டின் வழியே எல்லோரது மனங்களிலும் ஒற்றுமையை விதைத்து பண்பாட்டை நிலை நிறுத்தி கிராமத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்குள்ளும் நம்பிக்கையை விதைக்கும் கருப்பராயரின் அருள் வாசிக்கும் நமக்கும் கிராமத்தின் திருவிழாவைக் காட்சிப்படுத்துகிறது..
கருப்பராயர்
குறுநாவல், புன்னகை பூ ஜெயக்குமார்
வேரல் வெளியீடு, பக்கம் 116, விலை ரூபாய் 160
00

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

