ஆதிரை தமிழ்

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் மொத்த தொழிற்சாலையும் பரபரப்பாக இருக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே அதற்குண்டான வேலைகள் தொடங்கிவிட்டது. நான் பணிக்கு சேர்ந்து நடக்கும் முதல் விழா. மூன்று தெருக்கள் இணையும் இடத்தில் கம்பெனி வருவதால் சாஸ்திர நம்பிக்கையின் படி விநாயகர் கோவிலை நிறுவன வளாகத்தை ஒட்டி கட்டியுள்ளார்கள். எந்தவித சலிப்பும் இல்லாமல் மஹாகணபதி அருளியும் வருகிறார்.

இன்றுடன் நாலரை மாதங்கள் ஆகிறது இந்த தொழிற்சாலையில் நான் வேலைக்கு சேர்ந்து. பாண்டிச்சேரியில் இருக்கும் மூன்று பவுடர் கோட்டிங் கம்பெனிகளில் இதுவே முதன்மையானது. பவுடர் கோட்டிங் மட்டுமல்லாமல் ஒரு கார் கம்பெனிக்கு போல்ட், நட்டிற்கு ஜீங்க்(Zinc) கோட்டிங்கும் செய்யப்படுகிறது. முழுக்க கெமிக்கல் பயன்பாடு என்பதால் உள்ளூர்வாசிகளை விட வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளார்களே அதிகம். பிஹார் உத்திரபிரதேசம் போன்ற இடத்திலிருந்து வந்தவர்கள். ஒரு சில நேபாளிகளும் உண்டு. அலுவலகத்தில் மாத்திரமே உள்ளூர் நபர்கள் வேலையில் இருந்தனர். பாண்டிச்சேரி வந்து ஆறு மாதமே ஆகி இருந்தாலும் நானும் ஒரு மாதிரி உள்ளூர் என்றாகிவிட்டேன்.

வேலைக்கு செல்ல வேண்டிய அவசியமோ நிர்பந்தமோ ஏற்படும் என்று என்னுடைய 27 வயதை வரை நான் எண்ணியதில்லை. வாழ்வில் சில மாற்றங்கள் அதிரடியானவை. சொந்த ஊரிலிருந்து விலகி பாண்டிச்சேரி வந்தபோது குடும்பத்தில் நெருக்கடி ஆரம்பித்து வேலைக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புது ஊர் யாரையும் தெரியாது என்பதே ஒருவிதத்தில் வேலை தேடும் படலத்தை சுலபமாக்கியது ஏனென்றால் பெரிய கெளரவம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. தெருவில் செல்லும் போது யாராவது நம் பெயர் சொல்லி அழைத்தால் கூட திரும்ப வேண்டியதில்லை என்பது பெரிய சுதந்திரத்தை கொடுத்தது. நானும் தம்பியும் காலையுணவு முடித்து அவரவர் விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவோம். தொழிற்பேட்டை இருக்கும் இடத்திற்கு சென்று அவன் ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும் சென்று குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் சந்தித்து ஒன்றாக வீடு திரும்புவோம். அன்று இரவில் வேலை கேட்டு செல்லும் இடங்களில் நடந்த நிகழ்வுகளை சிரிப்போடு பகிருவோம். அன்றும் அப்படிதான் கிளம்பி நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் மேட்டுபாளையம் தொழிற்பேட்டைக்கு செல்வதாக முடிவு செய்து, நுழைவுவாயிலேயே பிரிந்து அவரவர் திசைக்கு சென்றோம். மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் வெயில் தெரியவில்லை. கையில் எடுத்து வந்து இருந்த தண்ணீர் பாட்டில் தீர்ந்த பின்னும் சொல்லும் படியாக எதுவும் இல்லை. மனம் மெல்ல சோர்வு நிலைக்கு சென்றது. அதுவொரு முச்சந்தி என்பதால் அங்கே ஒரு விநாயகர் கோவில் தொழிற்சாலை வளாகத்தை ஒட்டியே இருந்தது அழகான தொப்பை பிள்ளையார், ஒருவிதமான அமைதியை பார்த்ததும் உண்டாக்கிவிடும் தெய்வச்சிலைகளில் நான் பார்த்ததில் ஒன்று. ஏனோ ஒரு சொல்லும் இல்லாமல் மெளனமாக நின்றேன். எதையும் பிரார்த்திக்கவில்லை ஏன் என்று தெரியவும் இல்லை.

அதே கம்பெனியின் மெயின் கேட்டில் உள்ளே நுழைந்து செக்யூரிட்டியின் முன் போய் நின்றேன். பெரும்பாலும் செக்யூரிட்டி பணியில் இருப்பவர்கள் வேலை தேடி வருபவர்களை பார்த்ததும் கணித்து விடுவார்கள் ஆடு புதியதா பழையதா என்று புதியது என்றால் நேர்காணல் அங்கேயே துவங்கி விடும். மெல்ல மீசையை முறுக்கி, கொண்டு சென்ற பைலை ஒருமுறை பார்வையிட்டு அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே எந்தூரு? என்பதாக இருக்கும். இவரும் அதையே கேட்டார்,

“திண்டுக்கல்” என்றதும் முகம் மலர்ந்து “ நமக்கு மதுரை என்னோட அம்மாச்சி ஊரு திண்டுக்கல் சுக்காம்பட்டி” என்றார். நான் மையமாக தலையை அசைத்தேன். அவ்வகையில் அவருக்கு நான் உறவாகி விட்டதில் எனக்கு வேலையை வாங்கி தருவதில் உறுதியானார்.

“உள்ளே ஆபிசில் ஒரு புள்ள இருந்தது அது அடிக்கடி லீவு போட்டுகிட்டு எப்பவுமே லேட்டா வந்துட்டு இருந்துச்சு அதனால போன வாரம் நிறுத்திட்டாங்க. ஆள் தேவைப்படுது கண்டிப்பா உன்னைய எடுத்துகிடுவாங்க நான் பேசறேன் கொஞ்சம் இரு” என்று சொல்லி உள்ளே சென்று போனை எடுத்து யாரிடமோ பேசிவிட்டு வந்து பைலை என்னிடம் தந்து உள்ளே போக சொன்னார்.

“நான் பேசிட்டேன்..கிடைச்சுடும்..ஒண்ணும் பிரச்சனை இல்லே..நீ பயப்படாம உள்ளே போ மா” என்றார். அவருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

நல்ல நீளமான அறை. ஒருபுறம் மூன்று நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டு இருந்தது மறுபுறம் ஒரு சோபா இரண்டுக்கும் நடுவில் ஒரு சுழல் நாற்காலியும் மேசையும் இருந்தது. வரிசையாக இருந்த நாற்காலிகளில் நடுவில் இருந்தவர் தான் அங்கே மேலாளர். இதுவரையான என் வாழ்வில் சந்தித்த மிகச் சிறந்த மனிதரில் முதலில் இருப்பவர். நல்ல சிவந்த நிறம் நெற்றியில் விபூதி எப்போதும் ஒரு புன்னகை. நாற்பதின் துவக்கத்தில் இருந்தாலும் முதிர்ந்த கனிந்த மனம். பிறக்கும்போதே சிலர் பக்குவத்துடனும் பெருந்தன்மையுடனும் மற்றவர்களுக்கு ஏதேனும் கொடுப்பதற்கேன்றே வருவார்கள் இல்லையா அதில் இவரும் ஒருவர் பெயர் சண்முகம்.. இல்லை ..சண்முகம் சார்.

எதிரில் இருந்த சோபாவில் அமரும் படி சொல்லிவிட்டு பயோடேட்டாவை ஒருமுறை மட்டுமே பார்த்து, நிமிர்ந்து “ இப்போ இங்க ஒரு ஆபிஸ் அசிஸ்டன்ட் போஸ்ட் காலியா இருக்கு ராதா..உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க மேலே பேசுவோம்” என்றார்.

நான் திகைத்து வேகமாக சரி என்றேன் ஏனெனில் வேலைனு ஒண்ணு இருந்தா போதும் அதற்குள் தலையை விடுவதற்கு தயாராக இருந்தேன். அவர் “ அப்போ சரி. இந்த வேலைக்கு ஒரே நிபந்தனை தான் அடிக்கடி லீவு போடக் கூடாது லேட்டா வரக்கூடாது. மத்தபடி வேலையை நீங்க பொறுமையா கத்துக்கிட்டு செய்யலாம். பெரிய விஷயமில்லே ஒண்ணும் பதட்டம் தேவையில்லை” என்றார். எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிக் கொண்டு இருந்தேன்.

“இங்க எம்.டினு ஒருத்தர் இருக்கார். ஒரு மரியாதைக்கு அவர்ட்டயும் ஒரு வார்த்தைக்கு கேட்டுறுவோம். அவர்க்கு மதியம் ஒரு மணிக்கு மேல தான் விடியும். நான் கேட்டுட்டு போன் பண்றேன் சரியா” என்றார். வெளியே வந்ததும் நேராக கோவில் வாசலில் போய் நின்றேன். இம்முறையும் சொல் இல்லை வெறுமே கும்பிட்டு கிளம்பினேன்.

கம்பெனி முழுக்க மாவிலை தோரணங்களும் தென்னங்குருத்துகளும் நிறைந்து இருந்தன. குருக்கள் எழுதிக் கொடுத்து இருந்த பூஜைக்குரிய பொருட்களின் லிஸ்டை வைத்து இறுதியாக ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்தேன். விட்டு போய் இருந்த விளக்கு திரியை எடுத்து வைத்துவிட்டு என் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டேன். இரண்டு நாட்களாக உள்ளே ஒரு விஷயம் ஒடிக் கொண்டிருந்தது. இங்கே வந்த புதுதில் சில வாரங்களுக்கு கோவிலுக்கு எந்த குருக்களும் வந்து பூஜை செய்யவில்லை. வாசலை தினமும் சுத்தம் செய்து பூக்களை மாற்றி விளக்கு ஏற்றி பழங்களை படைத்தது இங்கே வேலை செய்யும் சீனியர் கற்பகம் அம்மாவும் செல்வநாதனும் தான். போன மாதத்தில் இருந்து தான் ஒரு ஐயர் வருகிறார் அதுவும் தினமும் இல்லை வெள்ளிக்கிழமை மட்டும். கோவிலில் பூஜை முடித்து அலுவலகம், பின்னாடி இருக்கும் தொழிற்சாலை எல்லாவற்றுக்கும் கற்பூர ஆர்த்தி காட்டப்படும் ஆனால் ஒருமுறை கூட அந்த ஐயர் வாயை திறந்து ஒரு மந்திரத்தையும் சொன்னதில்லை. உதடு மட்டும் சம்பந்தமில்லாமல் எதையோ முணுமுணுக்கும், முகம் எப்போதும் ஒரு சிரிப்பில் இருக்கும் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவரோ என்ற யோசனை பார்ப்போருக்கு வந்து போகும்.

மெளனமாகவே தீபாராதனை செய்யப்படும்போது எனக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் எதையும் உடனடியாக கேட்கும் குணம் இல்லை என்பதால் கேட்டதில்லை. இன்று அப்படியில்லை விநாயகர் சதுர்த்தி ஓனர் குடும்பமும் பக்கத்து கம்பெனி தொழிலாளார்களும் விருந்தினர்களும் என கூட்டம் இருக்கும்..இன்றைய பூஜை எப்படி நடக்கும்? அதே மெளன சைகைகள் தானா?

நேரே சண்முகம் சார் முன்னால் போய் நின்று கேட்டே விட்டேன். இரண்டு நிமிடங்களுக்கு அவர் எதுவும் பேசாமல் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தார். பின் மெல்ல..

“ராதா..இங்க இந்த வாழ்க்கைல நமக்கு தெரியாத புரியாத நிறைய காரியங்கள் இருக்கு.. சில விஷயங்கள் நடக்கும் போது ஏன் ஏன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும். கடைசிவரைக்கும் சில கேள்விகளுக்கு பதில் நமக்கு தெரியறதில்ல, இல்லேனா நம்ம அறிவுக்கு புரியறதில்ல. என்னமோ ஒரு கணக்கு..எங்கயோ கூட்டலும் கழித்தலுமா டேலி ஆகிட்டு இருக்கு.”

“சங்கரன் ஐயர் இந்த கம்பெனிக்கு அஸ்திவாரம் போட்டதில் இருந்து இப்போ வரைக்கும் எல்லா பூஜைக்கும் அவர்தான் சாஸ்திரி. நல்ல படிப்பாளி அவங்க வேத பாடசாலையில் பெரிய மரியாதை அவருக்கு. அவர் மந்திரம் சொன்னா மைக் தேவையில்லை, சும்மா கணீர்னு கேக்கும் ஆனா காலம் முழுக்க எந்த தெய்வங்களுக்கு பக்கத்தில் நின்னு சொன்னாரோ அவங்களுக்கு கேக்க வேண்டிய நேரத்துல கேக்கல…

அவருக்கு ஒரே பையன் பேரு வைத்தியநாதன். அப்பா எட்டடினா அவன் பதினாறு அடி. அப்படி ஒரு அறிவு, ஞானம். பாண்டிச்சேரியை சுத்தி நடக்கும் கோவில் கும்பாபிஷேகம் எல்லாத்துக்கும் அவன்தான் முக்கிய ஆளா இருப்பான். நம்ம பிள்ளையார் கோவிலுக்கும் வைத்தி தான் தலைமை. அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து வேத மந்திரங்களை சொன்னா ஒண்ணுமே புரியாத நமக்கு கூட எங்கயும் நகர தோணாது நின்னு கேட்டுட்டே இருக்கலாம். ரொம்ப சீக்கிரமாவே அவனுக்கு எல்லாமே அமைஞ்சது பெயர் புகழ் கல்யாணம் குழந்தை எல்லாம். கல்யாணத்துக்கு நாங்க எல்லோருமே போய் இருந்தோம். ஓனர்க்கு அவன் மேலே தனி பிரியம். ஒரு விஷயம் ரொம்ப முழுமையா இருந்தா அது இங்க நீடிக்காது போல..”

தொண்டை கமறி எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து “இரண்டே நாள் காய்ச்சல்.. சுயநினைவு தப்பியவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மூன்றாம் நாள் மாலையில் போய்ட்டான்..”

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. வேண்டாதை கிளறி விட்டோமோ என்று எண்ணினேன்.

“யாருக்கும் எதுவும் புரியவில்லை. சங்கரன் ஐயர் கலங்கிப் போய்ட்டார். அம்மாவும் மனைவியும் நிலையில் இல்லை. இரண்டரை வயதான பையன் எதுவும் புரியாமல் சிணுங்கிக் கொண்டே இருந்தான். ஊரில் பாதி பேர் அங்கிருந்தோம். நம்ம எம்.டி இரண்டு நாள் கதவை பூட்டிக் கொண்டு முழுக்க போதையில் இருந்தார். கடைசில அவனை தூக்கிக் கொண்டு போகும்போது “வைத்தீ”னு சங்கரன் ஐயர் ஒரே கத்தா கத்தினார். அவ்ளோ தான், அதுக்கு பிறகு அவருடைய தொண்டையில் இருந்து ஒரு வார்த்தையும் வரல. எல்லோருமே அதிர்ச்சியில் அப்படி இருக்கார் கொஞ்ச நாளில் சரியாகிடுவாருனு தான் நினைச்சோம் ஆனா அப்படி நடக்கல. எத்தனையோ டாக்டர்ஸ் பார்த்தாச்சு ஒண்ணும் ஆகல. குரல் மொத்தமா போய்டுச்சு..

“அதோட அந்த குடும்பமும் நொடிஞ்சு போச்சு. பெரிசா வருமானமும் இல்லே. மருமக பக்கத்துல ஏதோ ஒரு வேலைக்கு போகுது சும்மா உதவினு பணம் கொடுத்தா அவங்க வீட்ல வாங்க மறுத்துட்டாங்க அதான் எப்பவும் போல பெரியவரை பூஜைக்கு வர சொன்னார் ஓனர். வாரத்தில் ஒருநாள் மட்டும் வந்து பூஜையை பண்ணுவார் எந்த மந்திரமும் இல்லே மணியோசை மட்டும் தான். மத்தவங்க எல்லாம் கூட “எதுக்கு..அவரால எப்படி மந்திரம் சொல்ல முடியும் பூஜை எப்படி செய்வாருனு கேட்டாங்க, அதுக்கு நம்ம சார்  “சொல்லுக்கு அழிவில்லே அது எப்பவும் முளைக்கும் வாழும்னு பெரியவங்க சொல்றாங்கல அப்போ அவரும் அவருடைய மகனும் சொன்ன அத்தனை மந்திரமும் வேதமும் இங்க இருக்கும்ல, அவங்க ஓதினது இன்னமும் நாம காதிலேயே இருக்கே, உள்ளே இருக்குறதுக்கு இன்னும் பெரிய காது ஆச்சே அங்க இருக்கும்… போதும்.. இத்தனை காலமா அவரு ஓதி வேதம் கேட்டாச்சு ல கொஞ்ச காலத்துக்கு அவருடைய முணுமுணுப்பை கேக்கட்டும்னு” சொல்லிட்டார்.

சிறிது இடைவெளி விட்டு “ஆனா இன்னைக்கு பெரியவர் வீட்ல இருந்தே வேறு ஒரு குருக்களை அவருடன் அனுப்புவதாக சொல்லி இருக்கிறார்கள். விசேஷ நாளில் மட்டுமாவது முறைப்படி பூஜையை நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை வைத்தியின் மனைவி சொல்லி அனுப்பி இருக்கிறாள்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டார்.

எதுவும் தோன்றாமல் மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து கண் அருகே வைத்து அறையை நோட்டமிட்டேன். வெளியே ஹார்ன் சத்தம் கேட்டதும் எழுந்து உடையை சரி செய்து கோவிலை நோக்கி போனேன். பூஜை விரிவாக நடந்தது. கூட்டமும் இருந்தது. வெள்ளி கவசத்தில் மஹா கணபதி ஒளி விசிக்கொண்டிருந்தார். வேத மந்திரங்கள் ஒங்கி ஒலித்தது, எல்லோருமே விநாயகரை மனமார பிராத்தித்துக் கொண்டிருக்க நான் ஒருமுறை சுற்றும் பார்த்துவிட்டு உள்ளே கருவறையில் இருந்த பிள்ளையாரையும் ஓரத்தில் நின்றிருந்த பெரியவரையும் பார்த்தேன். மேலும் உற்று பார்த்த போது பெரியவரின் உதடுகள் எதையோ சொல்லிக் கொண்டு இருந்தன. நான் திகைத்து கண்களை அவர் மேல் வைத்து கூர்ந்து நோக்கினேன்.. என்ன சொல்கிறார் மந்திரமா? இல்லை வேறு ஏதோ.. ஒருவேளை “வைத்தி” என்றா என்னால் கணிக்க முடியவில்லை..உடல் நடுங்க ஆரம்பித்தது. மெல்ல விலகி வந்து தூரத்தில் நின்றுக் கொண்டேன். 

000

இயற்பெயர்.  க. தேவி.

புனைப்பெயர் : ஆதிரை தமிழ்.

சென்னை ஆவடியில் வசிக்கிறேன். இதுவரை கவிதைகளை பற்றிய கட்டுரைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும், சொல்வனம் மற்றும் கவிதைகள் இதழிலும் வெளிவந்துள்ளது. என்னுடைய முதல் சிறுகதை நடுகல் இணைய இதழில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *