ஆதிரை தமிழ்
ஒரு ஆலமரமே பேருந்து நிலையமாக பரந்து விரிந்து நின்றிருந்தது. அதன் நிழலில் ஒன்றிரண்டு கடைகள். கலவையான பறவைகள் சத்தத்தில் ஒரே ஒரு குயில் மட்டும் விடமால் யாரிடமோ இறைஞ்சிக் கொண்டிருந்து. சிறிது நேரத்திலேயே அதை தாள முடியாமல் போன போது இலைகளின் செறிவில் தேட துவங்கினேன். காணும் வினாடியில் பேருந்து உள்ளே நுழைந்தது. மணிக்கொரு பேருந்து என்பதாலும், நெரிசல் மேலும் காலை நேரம் என்பதாலும் பள்ளி பிள்ளைகள் பணியாளர்கள் என கூட்டம் அதிகம். தயங்கி நின்ற என்னை அம்மா உந்தினாள் “போ..அடுத்த பஸ்க்குனு நின்னா நேரமாகிட்டே இருக்கும்..ஏறு” என்றாள். கடைசி படியில் ஏறி அடுத்த படியில் ஒரு காலை ஊனும் அளவிற்கே இடம் இருந்தது. ஒரு கையில் பையை வைத்துக்கொண்டு கிடைத்த இடைவெளியில் கம்பியை பிடித்ததும் பேருந்து கிளம்பிவிட்டது. திரும்பி அம்மாவை பார்க்க பரிதவிப்போடு நின்றிருந்தாள். இந்த ஊருக்கு குடி வந்து ஒரு மாதமே ஆகிறது. உடல்நலமில்லாத அப்பாவை பார்த்துவிட்டு வீடு திரும்பும் என்னை வழியனுப்புகிறாள்.
எப்படியோ இன்னொரு காலையும் எடுத்து அடுத்த படியில் வைத்துக்கொண்டேன். எனக்கு பின்னும் சிலர் தொங்கினார்கள். முன்னால் இருந்த மாணவர்களின் புத்தகப்பையின் கனம் வேறு அழுத்த துவங்கியது. எந்த நிமிடமும் கை நழுவ அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. சின்ன டவுன்களின் தனியார் பேருந்துகளில் இரு நடத்துனர் உண்டு. ஒருவர் முன் பக்கமும் மற்றொருவர் பின் பக்கமும். பேருந்தின் அத்தனை இரைச்சலையும் தாண்டி வழமைப் போல இளையராஜா இசைத்துக் கொண்டு இருந்தார். ஒரு வரியும் உள்ளே செல்லவில்லை. சமீபமாக எதுவும் உள்ளே நுழைவதில்லை காதில் வேறு ஒரு சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டுக்கிறது. குரல் அல்ல, வெறும் ஒரு சத்தம். டிக்கெட் எடுக்கச் சொல்லி ஒரு குரல் கூவியது. எப்படி எடுப்பது? பையில் இருக்கும் பர்ஸை எடுத்து திறந்து காசை எடுக்க வேண்டும். கம்பி மேல் நடனம் ஆடுவது போல் இருக்கும் நிலையில் என்ன செய்வது? திரும்ப “டிக்கெட்..டிக்கெட்” அந்த குரலின் முகத்தை பார்க்க முடியவில்லை. கைகள் மாத்திரமே தெரிந்தது. நான்கு விரல்களுக்கிடையே ரூபாய் நோட்டுகளை பிரித்து செருகி வைத்தும் பெருவிரலில் பொன்நிற ஊதலும் இருந்தது. எதையோ நினைத்து சட்டென்று சிரிப்பு வந்தது. டிக்கெட் எடுக்க கையை எடுத்தால் மொத்தமா டிக்கெட் வாங்கிட வேண்டியது தான் என்று. சிரித்தேனா..நானா எனக்கே வியப்பு. வியர்வையில் கை நழுவ துவங்கியது.
நழுவும் பிடியை இறுக்கிக்கொண்டேன். நான் நழுவ விட்டால் சிதற காத்திருக்கிறது இங்கே எல்லாமும். அதில் முதன்மையாக உள்ளது மனமும் அதில் சதா பிரதிபலிக்கும் நீயும். இதே போன்ற நெரிசல் மிகுந்த ஒரு பேருந்து பயணத்தில் பிறர் தொடுகைக்கு அஞ்சியும் பிடிமானம் ஏதும் இல்லாமலும் நின்ற என்னை இழுத்து உன் முன்னால் நிறுத்திக்கொண்டாய்.. உன் இடுப்பை மெல்ல அணைத்தப் படி நிற்கும் என்னை விழிகளுக்குள் நோக்கி புன்னகைத்தாய். வீடு வந்து சேர்ந்தும் மேலும் சில மணித்துளிகள் என் மேல் நீடித்தது உன் வாசம். ஐந்நூறு மைல்கள் அப்பால் இருக்கிறாய், மண்டையை குடையும் உன் வாசம் எப்படி வந்தது இப்போது? இல்லை இது சாத்தியமில்லை ஆனால் வருகிறதே..தலையை குலுக்கி மெல்ல எனக்குள்ளே சொல்லிக்கொள்கிறேன் “நீ தூங்கி வாரங்கள் ஆகிறது அமைதியாக இரு” . இரண்டு மூன்று நிறுத்தங்கள் கடந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை. எனக்கு பின்னால் ஒன்றிரண்டு பேர் இறங்கி இடைவெளி உருவாகி காற்று ஆடையை பறக்க செய்தது.
பேருந்தின் உள்ளே யாரோ யாரையோ “ஏன்”? என்று கேட்டார்கள். ஆமாம் ஏன்? கடந்த நாட்களில் பல்லாயிரம் முறை நான் கேட்டது, ஒருமுறை கூட விடை என்று எதுவும் இல்லாதது. என்னிடம் இருக்கும் ஒரே கேள்வியும் எஞ்சியதும் அது ஒன்று தான். ஒருவரிடம் மட்டுமல்ல ஒவ்வொருவரிடமும் இங்கே இருக்கும் அனைத்திடமும் கேட்ட ஒன்று. மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் “ஏன்?” சரியாக அக்கணத்தில் அடுத்த நிறுத்ததிற்கான அறிவிப்பாக விசில் சத்தம் எழுந்தது. திடுக்கிட்டு பார்த்தேன். அந்த பொன் ஊதலை அது இப்போது எதையோ சொல்லியது வார்த்தையாக மாற்ற இயலாத ஒன்றை நிச்சயமாக சொல்லியது. என்னது என்னது என்று தவிக்கும் மனதை பிடித்து நிறுத்துவதற்குள் மிக வளைவான பாதையில் பேருந்து வேகமாக திரும்பியதும் பிடி நழுவியது.
சிதார் மிக மென்மையாக இழைந்தது அந்த பாட்டில். அவ்வளவுதான் முடிந்தது பின் பக்கமாக விழுவதால் தலை பிளந்து விடுமா? அல்லது சக்கரத்தில் சிக்கி சிதைந்து விடுமா உடல்? எதுவோ ஒருவேளை உயிர் போகாமல் இருந்தாலும் நினைவுகள் அற்று போய்விட வேண்டும் அல்லது செத்து போவதாக இருந்தாலும் முதலில் நினைவு போய்விட வேண்டும் உயிர் பின்பு போகட்டும். ஏனென்றால் ஞாபகங்களின் வதை தாள முடியாததாக இருக்கிறது. ஆனால் எதுவும் நிகழவில்லை சில வினாடிகளுக்கு பின் தன்னிலை அடைந்து கண்களை திறந்து போது யாரோ என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தார்கள். முழுவதும் உணர்வு வந்து பார்ப்பதற்கு முன் அவன் சட்டென ஒரு படி இறங்கி பின்னால் நின்று ஒரு கையால் என் பையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு அரணாக நின்றான். நான் மெதுவாக சுற்றும் ஒரு பார்வையை செலுத்தினேன். ஒரு கோர விபத்து காட்சியை அதற்குள் மனத்திரையில் கண்டுவிட்ட பயணிகள் அவர்களின் நெஞ்சின் துடிப்பை சரிசெய்து நிதானத்திற்கு திரும்பினார்கள். பேருந்தும் தன் வேகத்தை குறைத்துக் கொண்டு முன்னால் ஓடியது.
நான் தெளிந்து என் பின்னால் நிற்பவனை காண முயன்று தயங்கி அமைதியானேன். திரும்பாமல் நோக்க துவங்கினேன். யார் இவன்? அவனுடைய ஒரு தோளில் என் பையை மாட்டி இருந்தான் அந்த கையாலே கம்பியும் பற்றி இருந்தான். அவனுடைய இன்னொரு கை என்னை பற்றி இருந்தது. வலுவான கரம் ஆனாலும் மென்மையான தொடு உணர்வு. குனிந்து அவன் கரத்தை பார்த்தேன். அதில் முன்பு பார்த்த அதே விரல்களுக்கிடையே ரூபாய் தாள்கள், பொன் நிற ஊதல். நான் அந்த ஊதலையே உற்று நோக்கினேன். இது என்னிடம் ஏதோ சொல்லியது அல்லவா? அதன் மொழி என்ன? எதை என்னிடம் விடை எனச் சொல்லி இருக்கும்? அதை ஆளுபவனின் உள்ளத்தில் இருக்குமா அதன் மொழி அப்படியானல் அவன் சொன்னது என்ன? எத்தனை உரிமையோடு என்னை பற்றி இருக்கிறான் அதை பற்றிய எந்தவொரு தனித்த உணர்வும் அவனுக்கில்லை தன்னியல்பாக பிடித்து இருக்கிறான். எதிலிருந்து இவன் இப்போது என்னை காக்கிறான்? சாவில் இருந்தா …உயிர் வாழ்தலின் அவஸ்தையை அனுபவித்து கொண்டு இருக்கும் இந்நாட்களில் வாய்ப்பாக வந்த மரணத்தை ஒத்திப்போடும் இவனை என்ன செய்வது? கடுங்கோபத்தில், “கையை எடுடா..என்னைத் தொட நீ யார்?” என்று உள்ளே எழுந்த எண்ணத்தை ஒரு துளிக்கூட நான் வெளியே காட்டவில்லை ..இயலவுமில்லை. குறைந்தபட்சம் அவனிடமிருந்து விலகாவது செய்யலாம் என்றால் அதுவும் ஆகவில்லை அல்லது நான் விரும்பவில்லை. எரிச்சலும் கழிவிரக்கமும் தணிந்து பெருமூச்சு எழும் நேரத்தில் மின்னல் என ஒரு எண்ணம் எழுந்தது. நடந்த நிகழ்விற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாமல் அப்படியே என்னை ஒப்புக் கொடுத்ததை போல வாழ்வில் தற்சமயம் நடக்கும் நிகழ்விற்கும் நடக்க போகும் நாடகவியல் தருணங்களுக்கும் என்னை நான் ஒப்புக்கொடுப்பதே செய்ய வேண்டியதோ. வேறு என்ன செய்ய இயலும்? செய்ய கூடுவதற்கு ஒன்றுமில்லாத சம்பவங்களின் அலை நம்மை இழுக்கும் போது அதன் பாதையில் ஒழுகுவதைத் தவிர வேறு வழி என்ன. எப்படியாகினும் இப்பயணத்தை நான் தொடர்வதைப் போல. விளிம்பு நிலையிலும் பாதுக்காப்பிற்கு எதையுமே பிடித்துக்கொள்ளாமலும் பயணம் தொடரவே செய்கிறது. எவனோ ஒருவன் என் சுமையை தாங்கிக்கொண்டு என்னையும் பற்றிக்கொண்டு பின்னால் நிற்கிறான் அரணாக. என் பிடிகள் நழுவிய நொடியில் எங்கிருந்து வந்தது அந்த மாயக்கரம்?.ஒரு சொல்லும் இல்லாமல் இதுவரை உடன் பயணிக்கிறது. எதுவும் செய்ய முடியாதவைகளின் பெருக்கில் அதன் போக்கில் ஒழுகுவது ஒன்றே செய்யக்கூடுவது. இந்த எண்ணம் வந்ததும் மீள மீள சொல்லிக்கொண்டு முதலில் தளர்ந்து பின் தெளிந்தேன். குனிந்து அக் கையை பார்த்தேன் அந்த பொன் ஊதலை கண்களால் வருடிய போது ராஜா வந்து இணைந்துக் கொண்டார் “யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்லை” . இம்முறை பெரிதாகவே புன்னகைத்தேன்.
பேருந்து நகரப்பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. மெல்ல பிடியை தளர்த்தி தன் ஊதலை இசைக்க துவங்கினான். அந்த இசைக்கு ஏற்ப பேருந்து அசைந்து ஆடி இயங்கிக் கொண்டிருக்கிறது.
000

பெயர் : தேவி. க
புனைபெயர் : ஆதிரை தமிழ்
வயது : 44
ஆவடி
சென்னை 71.
இதுவரை கவிதைகள் பற்றிய கட்டுரைகளே வெளி வந்துள்ளன. சிறுகதை எழுதுவதில் இப்போது தான் ஆரம்ப நிலையில் உள்ளேன்.

