உமாமகேஷ்.

பூசாரி குளத்துச் சேற்று மண்ணை ஒரு வாளியில் அள்ளினார்.

அரசமரத்தடியில் ப வடிவில் எல்லைச் சுவர்  அமைத்தார். முகப்பில் ஒரு நுழைவாயில் போல் நீட்டினார். ஏழு களிமண் உருண்டைகள் உள்ளே வைத்தார்.

“கோட்டைக்குள்ள சப்த கன்னிமார்கள் மா”

உருண்டைகளின் மேல் பொட்டு வைத்து  முன்னால் வெற்றிலை பாக்கு பழம் பூ வளையல் அடுக்கினார்.

வெளியே இரண்டு உருண்டைகள்.

“காவலாளிகள்”

பக்கத்தில் இன்னொரு உருண்டை.

நிமிர்ந்து பார்த்து துப்புரவுத் தொழிலாளியை குறிக்கும் ஜாதிப் பெயரைச் சொன்னார். 

பரிவாரங்களுடன் கோட்டை எழுந்து நின்றது.

பூசாரி விவரித்துக் கொண்டே வேலைசெய்தார்.

கன்னியருக்குப் பின்னால் மண்ணைக் குழைத்து ஏதோ செய்ய அது அமர்ந்த நிலையில் ஒரு பெண்ணுருக்கொண்டது. பூவிதழ்களைக் கண்ணில் வைத்ததும் சட்டென்று உயிர் பெற்றது. தலையில் ஒரு எலுமிச்சை உட்கார்ந்தது.

எதிரில் வாழை இலையில்  இடித்த அரிசி மாவில் வெல்லம் கலந்து பரத்தி வைக்கப்பட்டிருந்தது.

விநயா பார்த்துக் கொண்டிருந்தாள்.  தான் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கின கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோ-பிசிக்ஸையும் இடித்து உருண்டையாக்கி எதிரில் படைத்தது போல் இருந்தது.

அறிவியலை அலம்பித்தள்ளி இப்படி நம்பிக்கையுடன் இருப்பவர்கள் பாக்யவான்கள் என்று தோன்றியது.

ரகு குனிந்து பூசாரிக்கு உதவிக்கொண்டிருந்தான்.

இந்த விளையாட்டு அவனின் யோசனை. அபிக்காக.

நேர்க்கோட்டில் போய்க்கொண்டிருந்த வாழ்வை அபினயாவின் நோய் தடம் மாற்றியது.

“அபி .. தட்டில போட்டதெல்லாம் ஏன் அப்படியே இருக்கு?”

“பசிக்கலம்மா”

உண்மையில் பசிக்கும். சாப்பிட்டால் குண்டாகி விடுவோம் என மனம் சொல்லும். சாப்பாட்டின் மேல் வெறுப்பு வரவைக்கும் ஒரு வியாதி.. இது மாத்திரை கொண்டு குணமாக்கும் வியாதியில்லை.

டாக்டர் வயதானவர். அவரின் குரலும் விரலசைவுகளுமே ஆறுதலாய் இருந்தன.

“நீங்களே ஸயின்டிஸ்ட். உங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். இது மனம் சார்ந்த நோய். மருந்து மாத்திரைகள் தேவையில்லை. தரப்போகும் சிகிச்சை – பேச்சு. பேசிப் பேசி அவள் மனதிற்குள் ஊடுருவி சொற்களால் ஒரு அறுவை சிகிச்சை. இதை நாம் எல்லோரும் சேர்ந்து செய்யப் போகிறோம். குடும்பமா..”

“எங்கள் துறை வேறு டாக்டர்.  எங்களால் என்ன செய்ய முடியும்? என்னுடைய படிகங்களும் அவருடைய மென்பொருளும் அபிக்கு வந்திருக்கும் நோயும் … எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன? புரியவில்லை..”

கண்ணாடியைக் கழற்றி வைத்தார் பெரியவர்.

“உங்கள் பெண்ணிற்கு உணவின் மேல் கோபம் இல்லை. அவள் மனதிற்குள் ஒரு தீவிரமான பயம் இருக்கு. ‘நான் சாப்பிட்டால் குண்டாகி விடுவேன், அழகில்லாமல் போய் எல்லாரும் என்னை வெறுப்பார்கள்’. அப்படி அவள் ஆள்மனசு அவளிடம் இடைவிடாமல் பொய் பேசுகிறது. அந்தத் தவறான குரலை அவ மனசுல இருந்து நாமதான் அவிழ்க்கணும். கண்ணாடியில அவள் உடம்பை அவளே ஒரு எதிரியா பார்க்கும் பார்வையை மாத்தணும்.”

அவர்கள் முகங்களில் கறுமை படர்வதைப் பார்த்தார்.

“முழு நேரமும் இல்லை.. ஆனால் நிறைய நேரம். சிகிச்சை மாதிரி தெரியக்கூடாது. இயல்பாய் நிகழ்த்த வேண்டும். அதற்கு முன்னால் நீங்கள் இரண்டு பேரும் உங்கள் குற்ற உணர்ச்சி, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துதல் – இந்த விளையாட்டுகளிலிருந்து வெளியே வரவேண்டும். மௌனங்களை முகமூடிகளைக் கழற்ற வேண்டும்..”

ரகு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். விநயா தலையைக் குனிந்து கொண்டாள்.

“அவ தட்டுல சாப்பாட்டை அப்படியே வச்சிட்டுப் போகும்போது நாம பாத்திருக்கணும்.. எங்க அம்மா ஒரு தோசை கம்மியா சாப்பிட்டாலே பத்து கேள்வி கேப்பாங்க.. “

கவனித்திருக்கலாம். ஆனால் கவனிக்கவில்லை.

வேலை வீடு புடவை நகை சம்போகம் குழந்தை சினிமா கோயில் உழலும் சாதரணர்களின் உலகத்தில் சாத்தியம். விநயா ஒரு விஞ்ஞானி. மிகப்பெரிய நிறுவனத்தின் இருக்கிறாள்.  விநயாவின் ஆராய்ச்சி பல புதிய சாளரங்களைத் திறக்கப் போகிறது. தலைமயக ஹவாயில் முக்கிய பொறுப்பு காத்திருக்கிறது.

ரகுவும் நிற்கவில்லை. முதலீடுகளைக் கவனிக்கும் ஒரு நிறுவனத்தின் மென்பொருள் பகுதியில் வேலை.  அது சண்டியடிக்கும் போதெல்லாம் தடைகளைக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். எப்போது அலைபேசி அலறும் என்றே தெரியாது.

இருவருக்கும் வேலை ஒரு அடையாளம்.

இருவருக்கும் அந்த ஓட்டம் பிடித்திருந்தது. அதிகாரம், பதவி அது தரும் பணம் எல்லாமும்.

இருவரையும் அண்ணாந்து பார்த்தது சுற்றமும் நட்பும்..  அது தரும் போதை இன்னும் ஓட வைத்தது..

அப்போதுதான் காலடியில் கண்ணிவெடி வெடித்தது.

டாக்டரின் குரல் அவர்களை நிகழ்காலத்திற்கு அழைத்தது.

“இது உடனே பலன் தரும் வலி நிவாரணி இல்லை. நீண்ட செயல்முறை. வார்ததைகள் வெறும் ஒலியில்லை.. அதுவும் ஒரு மருந்து. அது அமிர்தம் . அதுவே விஷம். நீங்கள் கேட்டிருப்பீர்கள் – ‘ஆதியில் வார்த்தையிருந்தது. அது தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தையே தேவனாக இருந்தது.’ அந்தக் குழந்தையின் மனதிற்குள் இருக்கும் பயம் கரைந்து வார்த்தைகளாக வெளியே வர வேண்டும்.. அவள் சக்தி இழந்து மெலிந்து கொண்டே இருக்கிறாள்.. உடனே நாம் ஆரம்பிக்க வேண்டும்..”

பெரியவர் என்னாதான் விவரித்தாலும் நடைமுறையில் அது அவ்வளவு எளிதாய் இல்லை.

எதிர்பார்க்கும் நேரத்தில் எதுவுமே நடப்பதில்லை. நடக்காத போது எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கையும் கோபமும் வர ஆரம்பித்தது.

அகர்வால் விநயாவின் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி. விநயாவைப் பார்க்க  வந்தார். டேபிள் முழுவதும் சிதறிக்கிடந்த ரிப்போர்ட்டுகளைப் பார்த்தார்.. புரட்டிப் பார்த்துத் தள்ளி வைத்தார்.

அபியின் ஜாதகத்தைக் கேட்டார்.

விநயா  புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்

ஜாதகம் இல்லை.  கம்ப்யூட்டரில் பிறந்த தேதி நேரம் இடம் பதிவிட கட்டங்களில் கோள்கள் அமர்ந்தன.

அவர் சொன்னவற்றை ரகு குறித்துக்கொண்டான்..

அவர்தான் கேட்டார்…

‘உங்க குலதெய்வம் எங்க இருக்கு?”

அகர்வாலிடமிருந்து இதை விநயா எதிர்பார்க்கவில்லை.. ரகுதான் விவரங்கள் சொன்னான்.

“வேலூர் தாண்டி ஒரு கிராமம். குளத்தங்கரையில் வானம் பார்த்தபடி ஒரு மாடம். அதன் கரையில் ஒரு ப்ரத்யேக முறையில் வழிபாடு.. “

அகர்வால் முதலில் அங்கே போகச்சொன்னார்.

அறிவியல் கைவிரிக்கும் இடத்தில் பற்றிக்கொள்ள ஏதாவது ஒன்று தேவைப்பட்டது.

காற்றில் அரசமரம் சலசலத்தது.

சிறிய மேளம் கொட்டி பாட ஆரம்பித்தார் பூசாரி.

அம்மன் தலையில் இருக்கும் பழம் விழ வேண்டும். அப்போதுதான் சாங்கியம் நிறைவு பெறும்.. நினைத்த காரியம் நிறைவேறுமாம்..

ஆச்சர்யமாக அந்தச் சூழலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா,  சட்டை போடாத கரிய வலுவான உடலுடன் மாடு மேய்க்கும் தாத்தா.. கையில் மொபைலுடன் பெண்கள், பையன்கள்.. நாய்கள், மாடுகள், பனைமரங்கள்..

வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அங்கங்கே உட்கார்ந்தார்கள்.

நேரம் நகர்ந்தது..

திடீரென தூறல் விழ ஆரம்பித்தது..  தொலைவில் ஒரு மின்னல் வெட்டியது..

பெரும் சத்தத்துடன் அருகில் இடி..

பழம் விழுந்தது..

பூசாரி கற்பூரம் காட்டினார்..

சிறு தூறலாய் ஆரம்பித்துப் பின் சட்டென்று மழை பிடித்துக் கொண்டது.. எல்லோரும் ஒடி சற்றுத் தள்ளியிருந்த மண்டபத்தில் ஒதுங்கினார்கள்..

அத்தனை பேருக்கும் இடம் போதவில்லை.

களிமண்ணால் செய்யப்பட்ட கோட்டை மெல்லக் கரைந்து ஓடும் நீரில் கலந்தது.

அபினயா சோகையாய் அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்..  குளிர்ந்த அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு..

“கிளம்பலாம் ரகு…” என்றாள் விநயா.

000

உமாமகேஷ்

மகேஷ் மகாதேவன் என்ற பெயர்களில் கவிதைகள் கதைகள்  எழுதி வருபவர். தனியார் ஷிப்பிங்க் கம்பெனியில் 30 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.  கடந்த மாதம் அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் இவரது கதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. சென்னையில் வாசம்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *