ஸ்ரீகாந்தன்
செல்லப்பன், கோப்பையில் பொங்கிக்கொண்டிருந்த பியரையே பார்த்துக்கொண்டிருந்தான். நுனி நாக்கு கீழுதட்டை நனைத்துவிட்டுப் பதுங்கியது. கவனம், எங்கோ சிக்குண்டுத் தவிப்பது பார்வையில் தெரிந்தது. கண்கள் சிவந்திருந்தன. உதடுகள், வன்மத்துடன் எதையோ முணுமுணுத்துக்கொண்டன. வாக்குவாதத்தின் உச்சத்தில் சூப்பர்வைசர் சொன்ன வசையை எண்ணி அவன் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.
“ஓய் கிள்ளிங், வேல செய்ய விருப்பம் இல்லாட்டி, வீட்ல உட்காந்துக்க வேண்டீதுதானே? ஏன், இந்த கெழட்டு வயசுலியும் வேலைக்கி வந்து எங்க உயிர வாங்குர சனியனே?”
செல்லப்பனால் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது இளமைக் காலங்களில் இப்படி யாராவது அசிங்கப்படுத்தியிருந்தால் இந்நேரம் சொன்னவன் முகத்தைப் ‘பேத்திருப்பான்’. இப்போது, வயது 65 ஆகிவிட்ட தளர்ச்சியில் மனத்திற்குள் கொந்தளித்துத் துடிக்க மட்டுமே முடிந்தது.
அன்வார் வேலைக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகியிராத உண்மையும், 35-தே ஆகியிருந்த வயதும் அந்த அவமானத்தை மேலும் சகிக்க முடியாததாக ஆக்கியது.
“ஏய், மலாய்க்கார மடையனே! யாராவது வேலைக்கி வராட்டி ‘கெந்திக்கு’ ஆள தேட வேண்டியது சூப்பர்வைசர் உன்னோட வேல தானடா? யாருமே கெடைக்காட்டி நீதான் செஞ்சிட்டு போ. ஏம் மயிருக்கு என்னா வந்துச்சி? 12 மணிநேர வேலைக்கி அப்பறமும் வேல செய்யச் சொல்ல நாங்க இன்னா மனுசனா, மாடா? அஞ்சடிக்கார நாயே!..”
செல்லப்பனுக்கு மூச்சு இரைத்தது. நெஞ்சில் நீண்ட நாள் சேமித்து வைத்திருந்த இனத் துவேஷத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஜாகா வேல செய்யிற நாய்க்கு இவ்ளோ திமிரா?” – அன்வார் அவனுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட எண்ணினான்.
* * *
‘கிள்ளிங்’
மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களுக்கு எதன் பொருட்டாவது இந்தியர்களுடன் வாய்த்தகராறு வந்து முற்றும்போது, இவர்களை வன்மத்துடன் அவமதித்து, அசிங்கப்படுத்த விரும்பும் வார்த்தைதான் கிள்ளிங்! ‘பறையா’ என்ற வார்த்தை தரும் ஆத்திரத்தை அறிந்த சில துவேஷிகள், அதையும் சேர்த்து ‘கிள்ளிங் பறையா’ என்றும் துவேஷம் செய்வதும் உண்டு. அவர்களுக்கு இந்தியர்கள் என்ற அடையாளம் ஒன்று போதும். எல்லோருமே ‘கிள்ளிங் பறையாதான்’! அதைக்கேட்டு இவர்கள் மிகவும் ஆவேசமுற்று கொந்தளிக்கும்போது, அடிதடி வன்முறையைவிடவும் அந்த வசை, வீரியமிக்கதாய் இருப்பது அவர்களுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் இவர்களுக்கு ரத்தம் கொதிக்கும். ஒண்டிக்கு ஒண்டியாய் இருக்கும் பட்சத்தில் உடனே கைக்கலப்பில் இறங்கத் தயங்காதக் காலமும் ஒன்றிருந்தது. ஆனால், ஜனத்தொகையில் மிகவும் குறைந்துபோன பிறகு, பல சந்தர்ப்பங்களில் ரோசம் பார்க்காமல் அடங்கிப் போவதே பாதுகாப்பாய் இருந்ததால் இவர்கள், நிறையவே அவமானப்பட வேண்டியிருந்தது..
கலிங்கப் பேரரசிலிருந்து வந்தவர்கள் என்பதுதான் காலப்போக்கில் ‘கிள்ளிங்’ என்று மருவியதாக ஒரு கதை இருந்த வேளையில், தென்னிந்தியாவிலிருந்து அடிமைகளாய் கொண்டுவரப்பட்டபோது இவர்கள் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகளின் ‘கிளிங்’ என்ற சத்தத்தாலேயே இந்தச் சொல் வந்தென்றும் வேறொரு கதை நிலவியது. எது எப்படியாயினும், இந்தியர்களை இழிவு படுத்தி அவமதிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதால் இவர்கள் மிகவும் மனம் புண்பட்டு, ஆத்திரம் கொண்டனர்.
பிழைக்க வந்த நாட்டில் இரண்டு தலைமுறைகளாக வன்னியக் கவுண்டன், படையாச்சி, முத்துராஜா, பறையன், உடையார் என்ற எந்த பேதமும் இல்லாமல் ஒரே லயத்தில், ஒரு தாய் மக்களாய் வாழ்ந்த எஸ்டேட்டுகள் துண்டாடப்பட்டபோது எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போயினர். சிலர், வேறு எஸ்டேட்டுகளிலிருந்த உறவினர்களின் உதவியுடன், பழக்கமான சூழலிலேயே தம்மை மறுநடவு செய்துக்கொண்டனர். அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் பட்டணப் பக்கம்போய், புறம்போக்கு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளைக் கட்டிக்கொண்டு, மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அஞ்சியஞ்சி வாழ சபிக்கப்பட்டனர்.
செல்லப்பனுக்கு இந்த இரண்டு வசதிகளுமே வாய்க்கவில்லை! முன்னாள் எஸ்டேட்வாசி, ரவாங் டவுனிலிருந்த தன் பிளாட்டை செல்லப்பனுக்கு வாடகைக்கு விட, வீட்டுப் பிரச்சினை உடனடியாக தீர்ந்தது. அதற்கு மாதாந்திர தலைவலி, 100 ரிங்கிட்! முதல் முறையாக சீன, மலாய் மக்களுடன் அண்டை வீட்டுக்காரனாக வாழும் சந்தர்ப்பம் வாய்த்தபோது, மனம் வெறுத்துப் போனான். ‘நம்ம ஜனங்களுடன்’ எஸ்டேட்டில் வாழ்ந்த வாழ்க்கை, சொர்க்கமாய்த் தெரிந்தது!.
சீனர்கள், எப்போதுமே இவனை மட்டமாகவே பார்த்தனர். இந்தியர்கள் எல்லோருமே குடிகாரர்கள் என்று குதர்க்கமாக எண்ணினர். சீன மொழியில் பேசிக்கொள்ளும்போதெல்லாம், அடிக்கடி ‘கிள்ளிங்’ என்ற வார்த்தையை பாவித்தே பேசிக்கொண்டனர்.
செல்லப்பனின் இடதுப்பக்க வீட்டு மலாய்க்காரனோ வேறொரு தொந்தரவைத் தந்து தொலைத்தான். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி போட்டு, மணி அடித்து, சாமி கும்பிடுவதை அவன் இடையூராக உணர்ந்து புகார் செய்தான்; சண்டைக்கு வந்தான். வீட்டில் இருக்கும் போதெல்லாம் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் தண்டனைப் போதாதென்று நிம்மதியாக சாமி கும்பிடுவதுகூட முடியாதது வேதனையைத் தந்தது. அந்த வேதனையிலேயே இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் புரண்டு, விடியற்காலையிலேயே கொஞ்சம் கண்ணயர்ந்தால், அதிகாலை பாங்கின் ஒலி அதையும் கெடுத்தது.
இனங்களுக்கிடையே இருப்பதாக சொல்லப்பட்ட ஒற்றுமையும், ஒருமைப்பாடும் சாலையோரங்களில் காணப்பட்ட அரசாங்கப் பதாகைகளில் மட்டுமே இருந்தன.
55 வயதில் கிடைத்த சொற்ப ஓய்வூதியத் தொகையில் வீட்டு வாடகைக்கு வெள்ளி 100-க்கு மேல் செலவு செய்யக் கட்டுப்படியாகாததால், வேறு வழியில்லாமல் பிற இனத்தவரின் எல்லாவித அராஜகத்தையும், அவமதிப்பையும் சகித்துக்கொண்டு ஊமையாய் வாழ செல்லப்பன் பழகிக்கொண்டான்.
மாதாந்திர செலவில் ஓய்வூதியம் கரைந்துகொண்டிருந்தது. நல்ல வேலையாக மனைவி, பக்கத்திலேயே இருந்த பேரங்காடி ஒன்றில் கழிப்பறைகள் சுத்தம் செய்து, அன்றாட உணவிற்கு உத்திரவாதமாய் இருந்தாள்.
செல்லப்பனுக்கு உடனடியாக வேலை தேவைப்பட்டது! ஒரு மூன்று வருடங்கள், கிடைத்த எந்த சில்லறை வேலையையும் மறுக்காமல் செய்து வந்தான். கடைசியாக வேலை செய்த கிடங்கு, திவாலானபோது அந்த வேலையும் இல்லாமல் போனது.
58 வயதில் வயதிற்கேற்ற வேலைக் கிடைப்பதென்பது அடுத்தவனின் தயவில் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு தயவில்தான் செல்லப்பனுக்கு இந்தச் செக்கியூரிட்டி வேலை கிடைத்தது.
அது ஒரு காண்ட்டிரக்ட் வேலை. எந்தவித பாதுகாப்பும், சலுகையும் கிடையாது. ஷிப்டுக்கு 12 மணிநேர வேலை என்பது எழுதாத சட்டமாக ஆகிப்போய், 8 மணிநேரத்திற்குமேல் செய்யும் வேலை ஓவர் டைம் கீழ் வராமல் போனது. தொழிலாளர் தினத்திற்கு அரசாங்கம் அறிவித்திருந்த கட்டாய விடுமுறையெல்லாம்கூட அங்கே செல்லுபடியாகவில்லை.
7 வருடங்கள் ஆகிவிட்டன! போன மாதம்வரை சூப்பர்வைசராக ‘நம்ம ஆளு’ ஒருத்தர் இருந்தார். மனிதாபிமானி! எல்லோரிடமும் மரியாதையுடன் பழகினார். சமயங்களில், அடுத்த ஷிப்டு காவலாளி இமேர்ஜன்சி லீவு எடுத்துவிட்டால், அவரின் முகத்திற்காகவே அடுத்த 12 மணிநேர வேலையையும் தொடர்ந்து செய்ய காவலாளிகள் சம்மதித்தனர். அந்தச் சகாய மனப்பான்மை புதிய சூப்பர்வைசராக அன்வார் வந்த கையோடு சிதைந்து போனது. அவனின் ஆட்டுத் தாடியும், மொட்டைத் தலையும், பருத்த உடம்புமான தோற்றமே காவலாளிகளுக்கு வெறுப்பைத் தந்தது. அதற்கேற்றார் போலவே அவனுடைய குணமும் இருந்தது. காவலாளிகளிடம் தனிப்பட்ட விரோதம் பாராட்டுபவன்போல் எப்போதும் எரிச்சலுடனேயே பேசினான். அவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்ய வந்த ‘கிழடுகள்’ என்றும், அவர்களுக்கு வேலை கொடுத்ததே பெரும் உபகாரம் என்பதால் மறுவார்த்தைப் பேசாமல் சொன்னதைச் செய்ய வேண்டியதே அவர்களின் வேலையென்று அதிகாரம் செய்தான். அவர்கள் எல்லோருமே பணி ஓய்வு பெற்றுவிட்ட முதியவர்கள் என்ற நிராதரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அடாவடித்தனம் செய்தான்.
* * *
“கிள்ளிங் கிழட்டு நாயே! உன்ன என்ன செய்யிறன் பாரு? உன்ன வேலையிலேர்ந்து தூக்காம உடறதில்லை?..” – அன்வார் கர்ஜித்தது நினைவில் சுழன்றுக்கொண்டேயிருந்தது.
செல்லப்பன் மேலும் அரை போத்தல் பியரை வாங்கிக் கோப்பையை நிரப்பிக்கொண்டான்.
‘என்னிய வேலைய வுட்டு தூக்குறதுன்னா தூக்கிட்டுப் போடா மயிரு. இது இன்னா பெரிய மானேஜர் வேலையா? கேட்ல நின்னுக்கிட்டு வர்றவங்க போறவங்களுக்கெல்லாம் வாலாட்டித் தொலைக்கிற நாய் பொழப்பு தான?’ – அன்வாரின் முகத்திற்கு நேராகச் சொல்ல முடியாததை நுரைத்துக்கொண்டிருந்த மதுவைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டான். கண்கள் லேசாக கிறங்கத் தொடங்கியிருந்தன. அவமானத்தைத் தணிக்க உதவிய கிறக்கத்திற்கிடையே ‘நாட்டான், கறுவியபடியே செய்துவிடுவானோ’ என்ற எண்ணம் எழுந்தபோது, தன்னுணர்வுக்கு வந்தவன்போல் தலையை ஒரு முறை சிலுப்பிக்கொண்டான்.
‘7 வருஷமா இங்க வேல செய்யிறன்! என்னால இதுவரிக்கும் ஒரு பிரச்சின வந்திருக்குமா? அத பத்தியெல்லாம் பெரிய மொதலாளி ஒன்னும் கண்டுக்க மாட்டாரா என்ன? அவரும் ஒரு நாட்டானா இருக்குறதுனால இனம் இனத்தோடு சேந்திருமோ?..’
பலவிதமான யோசனைகளுக்கிடையே செல்லப்பன் தத்தளித்தான்..
மனசு சங்கடப்பட்டது. பிளாட்டிற்கு பக்கத்திலேயே இருக்கும் குடியிருப்பு. நடந்தே வெலைக்கு வந்துவிடும் வசதி! சக பாதுகாவலர்களுடனும் நல்ல நட்பு இருந்தது. ஆபத்து, அவசரத்திற்கு 24 மணிநேரம் வேலை செய்து, பரஸ்பரம் உதவிக்கொள்ளும் நெருக்கமும் இருந்தது. அன்வாரைத்தவிர, வேறு கரைச்சல் இல்லை!
இப்போதெல்லாம் பாதுகாவலர்கள் இல்லாத ‘தாமான்களே’ இல்லை. உடனடியாக வேறொரு இடத்தில் வேலைத் தேடிக்கொள்வது ஒன்றும் பெரிய காரியமில்லைதான். இருந்தாலும், எங்கு போனாலும் அனுசரித்துப் போக முடியாதபடிக்கு அங்கேயும் ஓரிருவர் இருக்கவே செய்வார்கள் என்ற நிதர்சனம் தயக்கத்தைத் தந்தது.
‘ம்.. அந்தக் கமுலாட்டி மொத என்னிய வேலைய உட்டு துக்கட்டும். பெறவு பாத்துக்குவம்..’ என்று செல்லப்பன் சமாதானமடைந்தான்.
மதுவைக் குடித்தபடி சுற்றும்முற்றும் பார்த்தான். அதிக வாடிக்கையாளர்கள் இருக்கவில்லை. வலது மூலையில் இரண்டு சீனர்கள் நாய் சாப் கின்னஸ் ஸ்டவுட் குடித்துக்கொண்டிருந்தனர். அருகருகே அமர்ந்திருந்தாலும் சத்தமாய்ப் பேசிக்கொண்டனர். இடதுபுற கோடியில் ஓர் இந்தியர் மூன்றாவது போத்தலில் மூழ்கியிருந்தார். தட்டில் ஹாக்கியன் மீ பாதி மீந்து, ஈயொன்றின் கவனத்தை ஈர்த்திருந்தது. இவனுக்குப் பக்கத்து மேசையில் தமிழ் செய்தித்தாளொன்று கிடப்பதைப் பார்த்து, அதை எக்கி எடுத்தான்.
நேற்றைய சூதாட்ட முடிவுகள் வெளியாகியிருந்த தமிழ் மலர் நாளிதழ்!
‘கூரையைப் பீய்துக்கொண்டு கொட்டிய அதிர்ஸ்டம்’ என்ற தலைப்பின் கீழ் ஒரு சீனரின் புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. பக்கத்திலேயே மெக்னம், டா மா சாய், ஸ்போர்ட்ஸ் டோட்டோ நிறுவனங்களின் சூதாட்ட முடிவுகளும் அச்சாகியிருந்தன. ‘மெக்னம் லைஃப்’ என்ற சூதாட்டத்தில் சீனனொருவன் ஒரு வெள்ளிக்கு வாங்கிய டிக்கெட்டிற்கு பேரதிர்ஸ்டம் அடித்திருந்தது. பாவம், அவன்! பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் வாயடைத்துப் போயிருந்தான்!
பேட்டியில், அதிர்ஸ்ட எண்ணை ‘டத்தோ’ கனவில் தோன்றி கொடுத்தபோது, மறந்துவிடாதிருக்க உடனே தலைமாட்டிலிருந்த காகிதமொன்றில் எழுதிக்கொண்டதாக அக்காகிதத்தைக் கையில் ஏந்திக் காட்டிக்கொண்டிருந்தான்.
செல்லப்பனால் செய்தியை நம்பவே முடியவில்லை! ஸ்போர்ட்ஸ் டோட்டோ, மெக்னம் மற்றும் டா மா சாய் என்று வாரத்திற்கு புதன், சனி, ஞாயிறு மூன்று நாட்கள் நடைப்பெறும் சூதாட்டங்களில் என்றுமே அவன் அக்கறை காட்டியது கிடையாது. வரும் சம்பளத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாகிப் போனால் தற்கொலைதான் முடிவு என்று பயந்தான். அதனால் ‘மெக்னம் லைஃப்’ சூதாட்டத்தைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை! வியந்து போனான்! 1-லிருந்து 36-குள் 8 எண்களைத் தேர்வு செய்து, வாங்கும் ஒரு வெள்ளி டிக்கெட்டிற்குப் பரிசு விழுந்தால் தினமும் ஆயிரம் வெள்ளி என்று அடுத்த 20 வருடங்களுக்குப் பணம், வங்கியில் வரவு வைக்கப்படும் செய்தி அதிசயமாய் இருந்தது.
ஊழியர் சேமநிதி கணக்கிலிருந்து சுளையாக லட்சங்களைப் பெற்ற பலரும் ஒருசில மாதங்களிலேயே எல்லா பணத்தையும் இழந்துவிட்டு தெருவுக்கு வந்த கதைகளை செல்லப்பன் நிறையவே அறிந்திருந்தான். இந்த நிலையில், இப்படியொரு சூதாட்டமிருப்பதை அறிய உற்சாகமாய் இருந்தது.
ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களென்று மாதத்திற்கு 12 வெள்ளிகள் மட்டுமே தேவைப்படும் இலகுவில் அந்தச் சூதாட்டமிருந்தது. யோசித்துப் பார்த்தான். அந்தப் 12 வெள்ளிகள்கூட சூதாட்டத்திற்குச் செய்யும் செலவாகத் தெரியவில்லை. 20 வருட பேரதிர்ஸ்டத்திற்குச் செய்யும் முதலீடாகவே எண்ணத் தோன்றியது.
* * *
ஆரோக்கியம் கெட்ட மனைவியும் கடந்த மாதம் இறந்து போனாள்! ஒண்டிக் கட்டை! வரும் ஊதியத்தில் தினமும் பியரின் மயக்கத்திலேயே நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன. இப்போது, அதற்கும் ஓர் ஆபத்து வந்து தொலைந்திருக்கிறது.
நாளைக் காலை வேலைக்குப் போனால்தான் தெரியும், செல்லப்பனுடைய தலையெழுத்து! ஆன்வார் நினைத்ததைச் சாதித்துவிட்டால் கையில் கிடைக்கும் சம்பளம் தீர்ந்து போகும் வரையிலேயே அடுத்த வேலைச் சாப்பாட்டிற்கு உத்தரவாதம்!.
‘அந்த நாட்டுக்கார நாயி நாசமா போவ.’
அதற்குள் இன்னொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். ஒப்பந்தக் கூலியாகத்தான் வேலைக்கு எடுப்பார்கள். வயதைக் காரணம் காட்டி, சம்பளத்தில் நிச்சயமாக சமரசம் செய்யச் சொல்வார்கள்.
‘நானே ஒரு பிச்சைக்காரன். இடும் பிச்சைக்கு பேரம் பேசமுடியுமா என்ன? போகட்டும், ஒண்டிக்கட்டைதானே!’
எஞ்சியிருந்த மதுவையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தான். ‘கூரையைப் பீய்துக்கொண்டு கொட்டிய அதிர்ஸ்டம்’ இன்னும் கண்ணெதிரிலேயே திறந்து கிடந்தது. மதுவின் மயக்கம் தர்க்க அறிவை மழுங்கடித்திருந்தது. நினைவெல்லாம் சீனனுக்குக் கடவுள் தந்த அதிர்ஸ்டத்தை சுற்றியே வட்டமடித்தது.
எண்ணங்கள் கிளர்ந்தன!
‘திடீரென்று, ஏன் இந்த சூதாட்டப் பக்கம் என் கண்ணில் பட்டது? பத்திரிக்கையின் மற்ற பக்கங்கள் எதுவுமே அதிலில்லையே! அதற்குப் பின்னால் தெய்வ சமிக்ஞை ஏதும் ஒளிந்திருக்கிறதோ!’
‘சீனனின் கனவில் வந்து கஷ்டத்தைத் தீர்த்ததுபோல் கடவுள், எனது நிராதரவிற்குப் பாவப்பட்டு பரிதாபம் காட்டுகிறாரா என்ன? லாட்டரிச் சீட்டு அடிக்க வேண்டுமென்று எந்தக் காலத்திலும் நான் கையேந்தாததே அவரின் கருணைக்குக் காரணமோ?’
‘நான் தினமும் இந்தக் கடைக்கு தவறாமல் மதுவருந்த வருகிறேன். தமிழ் பத்திரிக்கை படிக்கும் எந்த வாடிக்கையாளனையும் பார்த்ததே கிடையாதே!’
‘யாரந்த, பத்திரிக்கையை அங்கே வைத்துவிட்டுச் சென்ற முகந்தெரியா ஆசாமி ’
‘ஆ! சாமி?’
‘அதிர்ஸ்டம் கதவைத் தட்டும்போது அடி முட்டாள்தனமாக நடந்துகொள்ளாதே!’ என்று சொல்வார்களே?
மதுவின் கிளர்ச்சி, அவனை எப்படியெல்லாமோ எண்ண வைத்து மயங்கடித்தது.
‘அப்படியொரு அதிர்ஸ்டம் எனக்கும் அடித்தால்!…’ அவன் மிதக்கத் தொடங்கினான்.
முதல்தடைவையாக சூது விளையாட ஆசை பிறந்தது. சூதாட்டத்தில் பங்கு பெறாமல் அதிர்ஸ்டம் எப்படி கிடைக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டான். பர்சை எடுத்துப் பார்த்தான். பத்து வெள்ளி இருந்தது.
மெக்னம் லைஃப் விளையாட ஒரு வெள்ளி போதுமே!
எந்த எண்களை எடுப்பது என்று யோசிக்கலானான். அவன் மற்றும் மனைவியின் பிறந்த மாதம், நேரம், திகதி, வீட்டு எண், தனது அதிர்ஸ்ட எண் என்று கீழ்க்காணும் வரிசையை தேர்வு செய்தான்.
1, 8, 12, 14, 15, 21, 23, 31
அவற்றின் கூட்டுத் தொகையை எண்ணிப் பார்த்தான். 125 வந்தது. 1 + 2 + 5-ஐ மேலும் கூட்டிய போது 8 வந்தது. மனைவியின் பிறந்த தேதி! சீன மொழியில் ‘Ba’ என்ற அதன் உச்சரிப்பு, செல்வத்தையும் அதிர்ஸ்டத்தையும் குறிக்கும் என்று சீனர்கள் சிலாகிப்பது ஞாபகம் வந்தது. எண் கணிதமோ 8-டிற்கு திடீர் அதிர்ஸ்டம் என்ற தகவலைக் கைப்பேசி காட்டியது.
அன்றைய மெக்னம் லைஃப் குலுக்கலில் இந்த வரிசைக்கே அதிர்ஸ்டம் அடிக்க வேண்டுமென்று மானசீகமாக வேண்டிக்கொண்டான். எங்கிருந்தோ பல்லியொன்று அதை ஆமோதித்துக் கத்தியது. செல்லப்பன், அந்த நல்ல சகுனத்தில் தன்னை மறந்தான்.
உற்சாகத்துடன் மெக்னம் கடையை நோக்கி நடந்தான்.
வழியில் அன்வாரின் நினைவு குறுக்கிட்டது.
‘நாளிக்கி எனக்கு வேல இருக்குமா இல்லியா?’
“அன்வார் புக்கி மா!. இந்த நம்பரு மட்டும் அடிக்கட்டும். அப்பறம் இருக்குடா உனக்கு!” செல்லப்பன் வாய்விட்டே கறுவிக்கொண்டான்.
ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்ட அதிர்ஸ்ட எண் வரிசையை மீண்டும் ஒரு முறைப் பார்த்தான்.
‘ஆமா, ஒரு நாளிக்கி 1000 வெள்ளின்னா 20 வருஷத்துக்கு எவ்ளோ வரும். ம்..? என்னால கணக்கு பண்ணகூட முடியிலியே? அது சரி, இப்பியே வயசு 65 ஆவுது. பணம் புல்லா கெடைக்கறங்காட்டியும் 85 ஆயிருமே! அதுவரிக்கும் நா உயிரோட இருப்பன்? அப்படியே நா பாதீலியே செத்துப் போயிட்டனா அந்த பணம் யாருக்கு போவும்? எனக்கு புள்ள குட்டிகளும் கெடையாதே.. ம்… அப்படின்னா…’ -செல்லப்பன் குழப்பத்துடன் மெக்னம் கடை வாசலில் நின்றான். வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருந்தது.
வாசல் சுவரில், ‘முஸ்லீம்கள் சூதாடுவது ஹராம். மீறுபவர்கள் தண்டிக்கப்படுவர்’ என்று தொங்கிய வாசகம் அவனை மேலும் குழப்பியது.
* * *

ஸ்ரீகாந்தன்.
இயற் பெயர் ஸ்ரீராமுலு. ஜெயகாந்தனின் பாதிப்பால் ஸ்ரீகாந்தன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறேன். ஆறு வருட தமிழ்க் கல்வியும், நான்கு வருட ஆங்கிலக் கல்வியுமே கல்வித் தகுதி.
எனது 20 -களில் எழுதத் தொடங்கிய நான், எனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஒரு 50 வருடங்கள் வாசிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, எழுதுவதை முற்றாக நிறுத்திக்கொண்டேன். 2020 பிறகு மீண்டும் தீவிரமாக எழுத தொடங்கியிருக்கிறேன்.
எனது சிறுகதைகள் காலச்சுவடு, சொல்வனம், கலகம், வாசகசாலை, கனலி, வனம் (இலங்கை), ஆகிய இதழ்களில் மலேசியா ஸ்ரீகாந்தன் என்ற பெயரில் வெளிவந்துள்ளன. வல்லினம் (மலேசியா) மற்றும் மலேசிய ஞாயிறு பதிப்புகளில் ஸ்ரீகாந்தன் என்ற பெயரில் வெளியாகியுள்ளன.

