கண்ணன் கவிதைகள்
எத்தனை முறை எரித்தாலும்
துளிர்ப்பதை
யார் தடுக்க முடியும்?
00
தொடர்வண்டிப் பயணத்தில்
நானும் என் தோழர்களிருவரும்
பாட்டி சுடும் அப்பமாய்
கூடவரும் நிலாவை
துரத்தியபடியே பயணித்தோம்
இருவரில் இளையவன் மிகச் சுட்டி
தோட்டத்துக் கொய்யாவாய்
நிலாவைப் பறித்துப்
பாக்கெட்டில் போட்டபடியே
தனது நிறுத்தத்தில்
இறங்கிப் போய்விட்டான்
00
வாழ்விடம் மறந்து போய்
வழிதவறிய புறாக்கள்
கோழிகளாய் மாறி
குப்பையைக் கிளறுகின்றன
00
குடுவை மீன்களுக்கு
அதுவே கடல்
00
நடிக்கச் சொன்னால்
வேண்டாமென்று
நிழல்கூட
வெட்கப்படுமளவிற்கு
இருக்கிறது அவன்
நிஜ வாழ்க்கை
00
எனக்கும் பிடித்த அம்மன் தான்
எல்லோருக்கும் பொதுதான்
நடந்தே செல்லலாம்
வீட்டுக்கு அருகில் தான்
சக்தி வாய்ந்த அம்மன் தான்
கேட்பதைக் கொடுப்பாளாம்
பெரியவர்கள் சொல்கிறார்கள்
எனக்கும் கும்பிட ஆசைதான்
ஆனாலும் கும்பாபிஷேகத்திற்கு
என் சாதிக்குப் பாத்தியப் பட்டதென்று
ஊரெல்லாம் நீ பேனர்
வைக்காமல் இருந்திருக்கலாம்
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

