பாலமுருகன். லோ
கார் உதிரிப் பாகம் உற்பத்தி நிறுவனமான ஸ்பேர்ஸ், ஒரு முன்னணி டயர்-1 நிறுவனம். தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு கார் நிறுவனத்திற்கு, இந்த ஸ்பேர்ஸ் ஒரு முக்கிய டயர்-1 சப்ளையராக இருந்தது. அந்த கொரிய நிறுவனம், தங்களது முக்கிய கார் உதிரிப் பாகத்தில் உள்ள ஒரு பகுதியை உற்பத்தி செய்து தரச் சொல்லி, ஸ்பேர்ஸிடம் ஒப்படைத்திருந்தது.
ஸ்பேர்ஸின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஹாசன். முழு நிர்வாகப் பொறுப்பையும் அந்த நிறுவனக் குழுமம் அவரிடம் கொடுத்திருந்தது.
ஹாசன், மற்ற பதவிகளில் இருந்தவர்களுக்கும் அங்கு வேலை செய்தவர்களுக்கும் ஒரு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
ஹாசன் வருகிறார் என்றாலே, எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். தேவையில்லாமல் யாரும் யாருடனும் பேச மாட்டார்கள். மீறி யாராவது பேசினாலோ, அல்லது வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது பார்த்துக்கொண்டிருந்தாலோ, அதை ஹாசன் பார்த்துவிட்டால் போதும்.
அந்த நபரைக் கூப்பிட்டு முதலில் திட்ட மாட்டார். அதற்கு பதிலாக, அவனது மேனேஜரை வரச்சொல்லி, கண்டபடி தாறுமாறாகப் போட்டு துவைத்து எடுத்துவிடுவார். வந்த மேனேஜருக்கு, இவர் எதற்காகக் கத்துகிறார் என்று கொஞ்ச நேரம் புரியாது.
இவர் கேங்வேயில் நடந்து வரும் போது ஒரு கம்பீரத் தொனி தெரியும். அந்தப் பதவிக்கே உரித்தான ஒரு தோரணம் என்று சொல்லலாம்.
ஆனா, இவரைப் பார்த்தா எல்லாரும் தெறித்து ஓடிவிடுவது வழக்கம்.
“எங்கப்பா, இவருகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறத விட, பேசாம ஓடிவிடலாம்…” என்று எண்ணுபவர்கள் அதிகம். ஏன்னா, அவர் யாருடனும் இணக்கமாக இருந்ததை யாரும் பார்த்ததில்லை.
தினமும் காலையில் ஷாப் ப்ளோரில் நடைபெறும் காலை மீட்டிங்கில், முக்கிய பிரிவில் உள்ள அனைவரையும் வரச்சொல்லி, அன்றைய உற்பத்தியின் நிலவரம், அனைத்து இயந்திரங்களும் ஒழுங்காக இயங்குகிறதா, ஏதாவது பழுதாகிவிட்டதா, அப்படி பழுதான இயந்திரத்துக்கு பதிலாக வேறு இயந்திரத்தில் அந்த உதிரிப் பாகத்தை உற்பத்தி செய்தார்களா, மூலப்பொருள் கையிருப்பு இருக்கிறதா, இன்று டிஸ்பேச்சுக்கு தடையாக ஏதாவது இருக்கிறதா என்று ஒரு அலசல் அலசுவார்.
காலையில் இயந்திரங்கள் இயங்கும் தருவாயில் இவர்கள் பேசுவது, மற்றவர் காதுகளில் சரியாகக் கேட்காது. இதனாலேயே அவர் மட்டும் அல்ல; கூட்டத்தில் உள்ள அனைவரும் சத்தமாகத்தான் பேசுவது வழக்கம். ஆனால் அவர் — ஹாசன் — எல்லாத்தையும் விட ஒருபடி மேலே போய், கத்தித்தான் பேசுவார்.
பேசினால் போதாது.
“ஏம்பா, மூலப்பொருள் இந்நேரத்துக்கு கேட்டுக்கு வந்திருக்கணுமே; ஏன் இன்னும் வரல? நீ என்ன மயித்துக்கு இங்கு இருக்கிற? உனக்கு தெரியுமில்ல, ஒரு மணி நேரம் லைன் நின்னுடுச்சுன்னா நாம எவ்வளவு நஷ்டஈடு கொடுக்கணும்னு? பின்ன மீட்டிங்கில் என்ன பண்ணுற? இந்த நேரத்துக்கு நீ அங்க இருக்க வேண்டாமா?”
என்று அந்த நபரை சரமாரியாகத் திட்டித் தீர்த்துவிடுவார்.
கொஞ்சம் கூட இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்ப்பதில்லை. அவருக்கு வேண்டியது, அந்த வேலை ஏன் நடக்கல — அவ்வளவுதான். அதனால் உண்டான கோபம்தான் இப்படி வெளியானது.
இதனாலேயே அங்குள்ள எண்பது சதவீத நபர்களுக்கு இவரைப் பிடிக்காது. மட்டுமல்ல, “இவரிடம் ஏன் வாக்குவாதம் பண்ணிக்கிட்டு?” என்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள்.
இப்படித்தான் பாருங்க… ஒரு நாள்…
“ஏம்பா சிவா, புரொடக்ஷன் பார்க்கிற விணோத்தை வரச்சொல்லு. அப்புறம் கஸ்டமர் குவாலிட்டி பார்க்கிற தாமோதரனையும் இங்கு என் கேபினுக்கு வரச்சொல்லு,” என்று தனது அசிஸ்டென்டிடம் சொன்னார் ஹாசன்.
“சரி, சார்,” என்று மறுப்பு தெரிவிக்காமல், உடனே ஓடிப்போய்த் தாமோதரனையும் விணோத்தையும் தனித்தனியாகப் பார்த்து விவரத்தைச் சொன்னான் சிவா.
இருவரும் தாங்கள் பார்த்துவந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, அவரது கேபினுக்கு விரைந்தனர்.
வரும் வழியில்—
“தாமோதரா, என்ன இந்தப் பக்கம்?” என்றான் விணோத்.
“அட, நீ என்னப்பா இந்தப் பக்கம்?” என்றான் தாமோதரன்.
“சிவா வந்தான். அவரு கூப்பிட்டாருன்னு சொன்னான். அதான் நான் வந்தேன்,” என்றான் விணோத்.
தாமோதரனும் அதே விஷயத்தை விணோத்திடம் சொல்ல, இருவருக்கும் பீதி ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டனர்.
அந்த ஒரு நிமிட மௌனத்தில், “இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ, கடவுளே…” என்ற உள்ளக்குமுறல்தான் தெரிந்தது.
இருவருக்கும் தெரியும் — அவர் வரச் சொன்னார் என்றால், ஏதாவது விஷயம் இல்லாமல் கூப்பிட மாட்டார்.
“ஏம்பா தாமோதரா, ஏதாவது விஷயம் தெரியுமா?”
“அட விணோத்து, அது தெரிந்தா நான் ஏன் இப்படி பீதி அடையணும், சொல்லு?”
“அப்ப உனக்கு தெரியாதா?” என்றான் விணோத்.
“உண்மையில், என்னத்துக்கு கூப்பிட்டாருன்னு தெரியாது. போனால் தான் தெரியும்,” என்றான் தாமோதரன்.
இருவரும் ஒன்றாக ஹாசனுடைய கேபினுக்கு சென்றனர்.
முகப்புக் கதவைத் தட்டினர்.
“எஸ்… உள்ளே வரலாம்,” என்றார் ஹாசன்.
“சார், கூப்பிட்டீங்கன்னு சிவா வந்து சொன்னான். அதான் நாங்க வந்தோம்,” என்றனர்.
ஹாசன் பதில் ஏதும் பேசாமல், மௌனமாகத் தன் தாடியைத் தடவியபடி இருந்தார்.
இருவருக்கும், அவர் தாடியைத் தடவியதைப் பார்த்தபோது, இறுக்கம் இன்னும் அதிகமானது. தொண்டைக்குழியில் எச்சிலை முழுங்கலாமா, வேண்டாமா என்ற படபடப்பு நிலை.
“ஏம்பா தாமு, நம்ம நிறுவனத்தின் தாரக மந்திரம் என்ன? சொல்லு பார்ப்போம்,” என்றார் ஹாசன்.
“சார்… குவாலிட்டிதான். ஜீரோ ரிஜெக்ஷன்,” என்றான் தாமு.
“சரி. நாம குவாலிட்டியா பாகத்தை உற்பத்தி பண்ணறோமா? ஜீரோ ரிஜெக்ஷன் நம்மால கண்ட்ரோல் பண்ண முடியுதா?”
“சார், அது வந்து…”
“என்ன ‘வந்து, போயின்னு’ நீட்டி முழக்குற? சொல்லு — நம்மால முடியுதா?”
அவர் உடனே விணோத்தை நோக்கித் திரும்பினார்.
“என்ன விணோத்து, நீ என்ன சொல்லுற? உன்னால் ஒழுங்கா ஜீரோ ரிஜெக்ஷன் கொடுக்க முடியுமா?”
இருவரும் மௌனமாக நின்றனர்.
“என்ன, நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க என்னடான்னா மரம் மாதிரி நின்னுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கா உங்களுக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்தேன்? எல்லாத்துக்கும் மௌனமா இருந்தா எப்படி? கொஞ்சமாவது வேலையில காட்ட வேண்டாமா?”
விணோத்து உடனே, “சார், இப்ப இருக்கிற பசங்க எல்லாம் புதுசு. கொஞ்சம் கத்துக்க நேரம் ஆகும்,” என்றான்.
“அப்போ பழைய ஆளுங்க எங்க போயிட்டாங்க?” என்றார் ஹாசன்.
என்னடா, எல்லாம் தெரிஞ்சும் இவரு இப்படி கேட்கிறாரே என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“சார், அதான் ஒரு வருடம் முடிந்தவுடன் அவுங்களை எல்லாம் அனுப்பிடுறோமல்ல,” என்றான் விணோத்து.
“அப்ப நீ என்ன பண்ணுற, விணோத்? புதுசா வந்தவங்களுக்கு நீ அல்லவா சொல்லித்தரணும்? அத விட்டுட்டு இப்படிச் சுத்திச் சுத்தி வந்தா எப்படி?”
“எதுக்கு உங்க மாதிரி பத்து வருஷம், பதினைந்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுகளை எடுத்து வேலைக்கு போடறோம்? நீங்க நாலு பேருக்கு சொல்லித்தருவீர்கள் தானே?”
“சார், சாரி… என்னால் ஆனமட்டும் நான் சொல்லித்தரேன்,” என்றான் விணோத்.
ஹாசன் தாமுவை நோக்கித் திரும்பினார்.
“என்ன தாமு, அது உனக்கும் தான். நீ உனக்குக் கீழே உள்ளவங்களுக்கு நீதான் சொல்லித்தரணும்.”
அதற்குப் பின், சற்றுக் குரலை அடக்கிக் கொண்டபடியே அவர் சொன்னார்:
“ஏம்பா, நமது குழுமத்திற்கு யாருப்பா பதில் சொல்லுவா? மாதம் ஒரு முறை மீட்டிங்குக்கு போயிப் பாரு… டவுசரை அவித்திட்டுதான் உடுறானுங்க.”
“சார்…” என்றனர் இருவரும் மெதுவாக.
“யோவ், இதை விட மோசமா போர்டுல இருக்கிறவங்க கேள்வியெல்லாம் கேட்பாங்க. நான் இப்ப சொன்னது, ஒரு சோத்துக்கு ஒரு சோறு பதம் என்ற விதத்தில் எடுத்துக்கொள்ளலாம்.”
சிறிது நேரம் அறை அமைதியாக இருந்தது.
அந்த அமைதிதான், அவருடைய குரலைவிட கனமாக இருந்தது.
பிறகு ஹாசன் நாற்காலியில் சாய்ந்தபடி, முன் மேசையை ஒரு முறை விரலால் தட்டினார். குரலில் இருந்த கடினம் மெதுவாகக் குறைந்தது.
“எனக்கும் தெரியும்பா… நான் உங்களை கடுமையா பேசறேன், திட்டறேன். எனக்கே புரியுது. ஆனா என்ன பண்ணச்சொல்ற? எனக்கு இருக்கிற அழுத்தம், உங்க யாருக்காவது இருக்கா?”
இருவரும் எதுவும் பேசவில்லை.
“காலையில வர்றீங்க… வேலை பார்க்கிறீங்க… மதியம் சாப்பிட்றீங்க… பின்ன மீண்டும் வேலை… மாலையில் பொட்டியை கட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிடுறீங்க.”
“நானும் உங்க மாதிரிதான் காலையில வர்றேன். ஆனா நான் வீடு திரும்புவதற்கு சுமார் இரவு பதினொன்னரை ஆகுது. அது ஒரு நாள் கூத்து இல்ல… தினமும் இந்தக் கூத்துதான்.”
அவரது குரலில் இப்போது கோபம் இல்லை. களைப்புதான் இருந்தது.
“என், பொண்டாட்டி என்னைப் பார்த்து, ‘நீங்க பேசாம உங்க கம்பனியையே கட்டிக்கிட்டு இருந்திருக்கலாம்; ஏன் என்னைக் கட்டினீங்க?’ன்னு கேட்கிறா…”
அவ்வளவு சொல்லிவிட்டு அவர் சற்றே முகத்தைத் திருப்பினார்.
“ஏன் உங்ககிட்ட இதைச் சொல்லணும்…”
அறைக்குள் மீண்டும் அமைதி.
விணோத்தும் தாமுவும் மௌனத்தைக் கடைப்பிடித்தனர். அவரது ஆற்றாமை வெளிப்பட்டபோது, இருவரும் எதுவும் பேசாமல் நின்றனர்.
அழுத்தத்தால் உள்ளே உள்ளே முறிந்து கொண்டிருந்த ஒரு மனிதர்.
வில்லனுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குப்பா…
00

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

