–கண்ணன்
செல்வியை அப்படி பார்க்க இயலவில்லை. களையான முகம் வாடிப்போய் கிடந்தது. ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார். அருகில் சற்றே வயதான இரு பெண்கள். அவருடைய கணவரை ஒரு ஐஸ் பெட்டியில் படுக்க வைத்து இருந்தார்கள்.
பலரும் வந்து மாலையிட்டு வணங்கியபடியே இருந்தனர். அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, வீட்டை விட்டு, நானும், அண்ணனும் வெளியே வந்தோம்.
வாசலில் அவருடைய மகன் அரவிந்த் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் நின்றிருந்தான். வந்தவர்கள் அவன் கையைப் பிடித்து, துக்கம் விசாரித்த வண்ணம் இருந்தனர். அவனிடம் தந்தையை இழந்த துக்கம் எதுவும் தெரியவில்லை.
வீட்டிற்கு முன்னால் சிறிய சாமியானா கட்டியிருந்தனர். அதற்குக் கீழே, ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தனர். சின்ன அத்தையும், பெரிய அத்தையும், ஒரு பழைய சோபாவில் அமர்ந்திருந்தனர். குமார் அண்ணனைப் பார்த்ததும், சின்ன அத்தை கட்டிக்கொண்டு அழுதது. “அறுவதே நாள்ல, எவன் மவன், என் மாப்பிள்ளையைக் கூட்டிக் கிட்டு போய்ட்டானே”. என்னைப் பார்த்ததும், என்னையும் கட்டிக்கொண்டு அழுதது.
சரியாக அறுபது நாட்கள் முன்னால், இதே போன்ற ஒரு நிகழ்வு. சின்ன அத்தையின் பெரிய மகன் சுரேஷின் இறப்பு. முரண் என்னவென்றால், செல்வி அக்காவின் கணவர்தான், முன்னால் நின்று, ஓடியாடி வேலை செய்தபடியிருந்தார். முன்பு பார்த்ததை விட, சற்று சதை போட்டிருந்தது. ஸ்ரெட்சரிலிருந்து இறுதி யாத்திரை வண்டிக்கு, சுரேஷை எங்களால் தூக்கி வைக்க முடியாமல் இருந்த போது, அவர்தான் தூக்கி வைத்தார். இரண்டே மாதங்களில் அவரை இப்படிப் பார்ப்போம் என்று, அன்று வந்தவர்கள் எவரும், நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
சுரேஷ் ஏற்கனவே சுகர் பேஷண்ட். மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருக்கும் போதே, சித்த வைத்தியமும் பார்த்திருக்கிறான். பத்தியம் ஏதோ முறை தவற, மாரடைப்பு. இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான், சுரேஷை, அவனது தம்பி மகனின் திருமணத்தில் பார்த்தோம். கை கால்கள், முகம் எல்லாம் வீங்கிப் போயிருந்தது. அப்போதே அனைவருக்கும் ஒரு சந்தேகம். சுரேஷுக்கு குழந்தைகள் இல்லை. தம்பதிகள் இருவரும், ஒருவர் மீது ஒருவர் மிகவும் பாசமாக இருப்பார்கள். ஒரு அறை முழுவதும் நாய் வளர்த்தனர். அங்கிருந்து வந்தவன் தான், எங்கள் வீட்டு ராக்கி.
சிறுவயதில் சுரேஷ் அவ்வளவு ஆரோக்கியமாக இருப்பான். விடுமுறையில் ஒரு முறை, கோதமலை வீட்டுக்கு வந்திருந்தான். கட்டு மஸ்தான உடல். தவறாமல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்தான். எடை தூக்குதல் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதேபோல், தண்டால் எடுப்பதும். காலை உணவுக்கு மட்டுமே, இருபத்தைந்து இட்லிகள் சாப்பிடுவான். குமாரும், சுரேஷ் அண்ணனும், அடிக்கடி படம் பார்க்க சைக்கிளில் சென்று வந்தனர். சிறிது நாட்கள் கழித்து, தாத்தா சுரேஷிடம், விடுமுறையை முடித்துக் கொள்ளுமாறு நேரடியாகச் சொல்லி விட்டார். அதற்குக் காரணமாக அவர் சொல்லியது இப்போது நினைத்தாலும், சிரிப்பை வரவழைக்கும். “சுரேசு, எங்களால ஒனக்கு சமைச்சுப் போட்டுக் கட்டுப்படியாகாதப்பா. ஒரு வேளைக்கு இருபத்திஞ்சு இட்லி எங்களால முடியாதப்பா. ஒங்க வீட்டுக்கே போயிடு”. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவனை விடுமுறையில் வீட்டில் காண முடியவில்லை. அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.
அப்போது பள்ளி விடுமுறைக்கு, அம்மா, தனது அண்ணன்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வாள். அப்பா எப்போதும் எங்களுடன் வந்ததில்லை. அப்போதெல்லாம் செவ்வாய்ப்பேட்டைக்கு, குதிரை வண்டி சவாரி இருந்தது. குதிரை சவாரி எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் சிலசமயம், குதிரைகளுக்கு கிறுக்கு பிடித்து, வேகமாக ஓடுவது சற்று பயமாகத் தானிருக்கும். அவற்றின் இரண்டு காதுகளை ஒட்டி, தகரங்கள் இருக்கும். இது அவைகளை வேறெதையும் பார்க்காமல் ஓடுவதற்கு உதவியாக இருந்தது. ஒரு சிறிய பையில் பச்சைப் புற்களை கட்டி இருப்பார்கள். குதிரைகள் அவற்றை கொறித்தபடியே இருக்கும். உட்கார்ந்தவுடன், ஒரு கொக்கியை எடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். அந்த கொக்கியை மாட்டவில்லையெனில், வண்டி நகராது. பேருந்துகளை விட, குதிரை வண்டி சவாரி செய்வோர் அதிகமிருந்தனர். இரண்டு மாமாக்களின் வீடுகளுமே, செவ்வாய்ப்பேட்டை ஏரியாவிலேயே இருந்தது. குதிரை வண்டியிலிருந்து இறங்குவது, ஒரு சாகசமாக இருந்தது. ஒரு சிறிய தகடு போன்ற ஒன்றில் காலை வைத்து இறங்க வேண்டும். இறங்கும் போது, குதிரை நகராமல் இருக்க வேண்டும்.
சின்ன அத்தை, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் வசித்து வந்தது. காட்டில் கூரை வேய்ந்த மண் வீட்டில் இருந்தவர்களுக்கு, அதுவே பெரிய மாளிகையாகத் தெரிந்தது. சின்ன மாமா பாசமாக இருப்பார். அவர் கண்கள் எப்போதும் சிவந்து இருக்கும். பின்னர் தான் தெரிந்தது, மாமா நிறையக் குடிப்பதால்தான் கண்கள் சிவந்து இருக்கிறதென்று. என்னை செல்லமாக, மலக்காட்டான் என்று கூப்பிடுவார். அப்போது அதற்கெல்லாம் எங்களுக்கு அர்த்தம் தெரியாது. அவர் வீட்டில் முயல்கள் வளர்த்து வந்தனர். எங்கள் மூவருக்கும், மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். வெள்ளை மற்றும் கிரே நிறத்தில் இருக்கும் முயல்கள், முன்னங்கால்களால் கேரட்டைப் பற்றிக் கொண்டு, தனது கூறிய பற்களால் கொறித்தபடியிருக்கும். கண்கள் கோலிக்குண்டுகளைப் போலிருக்கும். எங்கே கேரட்டைப் போல விரல்களைக் கடித்து விடுமோ என்று ஒரு பதற்றத்திலேயே வேடிக்கை பார்ப்பேன்.
செல்வி எனக்கும் மூத்தவர். குமார் அண்ணனுக்கும் ஒரு வருடம் மூத்தவர். முறைப் பெண் என்றால் என்னவென்றே தெரியாத வயது. அதனாலோ என்னவோ, மனதில் செல்வி அக்கா என்றே நின்று விட்டது. குமார் அண்ணன் மேல், அக்காவுக்கு காதலிருந்தது. அண்ணனுக்கும் தான்.
அப்போதெல்லாம் டீச்சர் டிரெய்னிங் முடிந்திருந்தாலே, டீச்சர் வேலை நிச்சயம். வீதிக்கு வீதி, டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்கள் புற்றீசல்கள் போல் திறக்கப்பட்டன. செல்வி அக்காவுக்கு அடித்தது ஜாக்பாட். டிரெய்னிங் முடித்ததும் சேலத்திலேயே போஸ்டிங் கிடைத்தது. குமார் அண்ணனோ பிகாம் முடித்து விட்டு, எம்காம் சேர்ந்தார். பிறகு பிஎட்டும் முடித்தார். ஆனால், ஏனோ, அவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.

செல்வி அக்கா ஆசைப்பட்டதால், திருமண விஷயமாகப் பேசுவதற்கு, சின்ன மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு தனது பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசை. அதுவுமில்லாமல், படித்து விட்டு, வேலைக்கும் செல்லும் பெண்ணை, யார் தான் வேண்டாமென்று சொல்வார்கள்?.
ஆனால் நடப்பதை யார் மாற்ற முடியும்? அப்பாவுக்கு முன்பிருந்தே மாமா குடும்பத்தின் மீது நல்ல எண்ணம் இல்லை. வரதட்சணை விஷயமா அல்லது சரியாக நடத்தவில்லையா என்று தெரியவில்லை. ஒரு முறை, மாமா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர், எச்சில் தட்டை தூக்கி சுவற்றில் அடித்தாராம். எப்போது சண்டை வந்தாலும், அம்மா இதைச் சொல்லிச் சொல்லி, அழுதுகொண்டே இருக்கும்.
இதனாலோ என்னவோ, அப்பா, அவர்களின் திருமணத்திற்கு மறுத்து விட்டார். “பிச்சைக்காரன் ஊட்டுல பொண்ணெடுக்க மாட்டேன்” என்று வார்த்தையை விட்டு விட்டார். தாத்தாவுக்கும் இஷ்டமில்லை. இப்படியாக ஒரு மனமொத்த இருவர் பிரிக்கப்பட்டனர்.
குமார் அண்ணன் அதற்குப் பிறகு, ஏர்போர்ஸ் செலக்சன், எஸ் ஐ செலக்சன் என வேலை தேடும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு, செல்வி அக்காவை மறந்து விட்டிருந்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, செல்வி அக்கா மீண்டும் காதல் வயப்பட்டார். இந்த முறை, அவரது தம்பியின் நண்பன். டெய்லரிங் செய்து கொண்டிருந்தவன். அடிக்கடி, செல்வியின் தம்பி ரமேஷைப் பார்க்க, வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தான். எப்படியோ அக்காவை மயக்கி விட்டான். அவரது தகுதிக்குச் சற்றும் தகுதியில்லாத ஒருவன். ஆனால் காதல் யாரை விட்டது.
ஒரு சுபமுகூர்த்த நாளில், இருவருக்கும் திருமணம் நடந்தது. கலந்து கொண்ட நினைவு இல்லை.
சில மாதங்களிலேயே, செல்வி அக்காவுக்குத் தான் தவறு செய்து விட்டோம் என்று புரிந்தது. அவர் கணவன் ஜெகதீஷ் ஒரு முழுநேரக் குடிகாரன். எப்படி அக்காவுக்குத் தெரியாமல் போனது, என்பது ஆச்சரியம்.
அக்காவுக்கு இவர்தான் எனது கணவர் என்று அறிமுகம் செய்வதிலேயே பிரச்சனை ஆரம்பித்தது. தினமும் குடித்து விட்டு, லேட்டாக வர ஆரம்பித்தான் ஜெகதீஷ். அக்கா, அவ்வளவு அழகு. அவர் பக்கத்தில் நிற்கவே தகுதியில்லாதவன், என்ற தாழ்வு மனப்பான்மை ஜெகதீசுக்கு வர ஆரம்பித்தது. அதுவே சந்தேகம் என்னும் சாக்கடையில் தள்ளியது.
தினமும் குடித்து விட்டு வந்து, பள்ளியில் செல்வியோடு வேலை செய்பவர்களைச் சேர்த்து வைத்து, கொச்சையாகப் பேச ஆரம்பித்தான். எதிர்த்துக் கேள்வி கேட்ட அக்காவுக்கு, அடி உதை ஆரம்பித்தது.
ஒரு நாள் வழக்கம் போல, சண்டையில், “நீ அவன வச்சிருக்குறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியாடி, தேவ—-” என வாய்க்கு வந்தபடி, போதையில், ஜெகதீஷ் திட்டிவிட்டான்.
அப்போது வீடுகளுக்கு நல்ல தண்ணீர் குழாய் இணைப்புகள் இல்லை. அருகிலுள்ள கிணற்றில் தண்ணீர் சேந்தி, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உபயோகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். அடுத்த நாள் காலையில், தண்ணீர் சேர்ந்தச் சென்றவர், என்ன நினைத்தாரோ திடீரென கிணற்றில் பாய்ந்து விட்டார். கூட வந்த பெண்கள் எல்லாம் ஓங்கிக் கத்தியபடி குரல் கொடுக்க, நீச்சல் தெரிந்த வாலிபர்கள், உடனடியாகக் கிணற்றில் குதித்து, எப்படியோ அக்காவை மீட்டு விட்டனர். விழுந்ததால் அடிபட்டு, மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்து, குணமாகி வீடு வந்து சேர்ந்தது.
இதற்குப் பிறகு, பெரியவர்கள் எல்லொரும் சேர்ந்து, இருவருக்கும் புத்தி சொல்லிச் சென்றனர். ஆறு மாதத்தில், மூத்த மகன் அரவிந்த் பிறந்தான். இந்த ஆறுமாதம் தான், அக்கா சந்தோஷமாக இருந்த காலங்கள்.
ஆனால், வாழ்க்கை அவ்வளவு சீக்கிரம் நிம்மதியாக வாழ விடுமா என்ன?
இடையே நிறுத்தியிருந்த குடியைக் தொடர ஆரம்பித்தான் ஜெகதீஷ். பையனைக் காட்டி,”இவன் எவனுக்குப் பொறந்தவன்?” என்று போதையில் அவன் ஆளுகையில், செல்வி அக்கா, இரண்டாவது முறையாக, தற்கொலை முயற்சிக்குத் துணிந்தாள்.
ஜெகதீஷ் பேசுவதைச் சகிக்க முடியாமல், ஒரு நாள், மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்து விட்டாள். விடிகாலையில் வயிற்று வலி தாங்க முடியாமல், கத்தியவளின் குரல் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள், கதவை உடைக்க, போதை தெளிந்த ஜெகதீஷ் கதவைத் திறக்க, செல்வி அக்கா உண்மையைச் சொல்ல, மருத்துவமனைக்கு வண்டியில் வைத்து, அழைத்துச் சென்றனர். ஒரு வாரம் வயிற்றைச் சுத்தம் செய்த பிறகு, வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் செல்வி. குழந்தை அரவிந்தைப் பார்த்தவுடன் தான், அக்காவுக்குத் தனது தவறு உரைத்தது. “ஒன்னய வுட்டுட்டுப் போகப் பாத்தனே” என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தபின், இனி குழந்தைக்காகவாவது வாழ வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகள் எப்படியோ, சண்டையும், சச்சரவுமாகக் கழிந்தது. இடையே தர்ஷினி பிறந்தாள். இவர்களை பார்த்துக்கொண்டு, பள்ளிக்கும் சென்று வருவதென்பது, ஒரு போராட்டமாகவே மாறிப்போனது. அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் அம்மா வீட்டில், குழந்தைகளை விட்டு விட்டு, பள்ளிக்குச் செல்வது சற்று, ஆறுதலாக இருந்தது.
ஆனாலும் நிம்மதி, அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஜெகதீஷ் இப்போது அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். கேட்டால் அடி, சண்டை. குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துப் போய்க் கொண்டிருந்தாள்.
ஜெகதீஷிடம் இப்போது புதிதாக ஒரு பழக்கம் ஆரம்பித்திருந்தது. கடையில் தைப்பது குறைந்து கொண்டே வந்தது. சீக்கிரமே தைப்பதை, ஏறக்கட்டி விட்டு, சீட்டாட உட்கார ஆரம்பித்தான். சீட்டாட்டத்தில் அவன் பெரிய ஆளெல்லாம் இல்லை. அதிர்ஷ்டமிருந்தால், வாரமொரு முறை ஜெயித்தான். ஆனால் அந்த ஒரு வெற்றி, இரண்டு வாரங்களுக்கு அவனை, ஆட்டத்துக்கு வர வைத்தது.
அவனுடன் சீட்டாட வந்தவர்களெல்லாம் பொறுக்கிகள். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம், குடிப்பதிலும், சீட்டாட்டத்திலும் அழிப்பவர்கள்.
ஆரம்பத்தில் தனது சம்பாத்யம் என்று சிறிய தொகையை, வாரா வாரம் கொடுத்து வந்த ஜெகதீஷ், சீட்டாட்டம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு பைசாவும், தருவதில்லை.
அன்று இரவும், அப்படித்தான் ஆரம்பித்தது. ஜெகதீஷ் அன்று மிதமிஞ்சிக் குடித்திருந்தான். அவனால் நிற்க முடியவில்லை. வந்ததும் சண்டையை ஆரம்பித்தான்.
“ஏண்டி, தேவ— முண்ட, எத்தனை தடவ கதவைத் தட்டறன், தெறக்கவே இல்ல. எவன் கூட இருந்த?”
“பாவி, பாவி. ஒன்னயப் போயி, லவ் பண்ண பாரு. என்னோட பிரெண்டு அப்பவே சொன்னா. நான்தான் கேட்கல. என்னய செருப்பால அடிக்கனும். இனிமேல நீயும் வேணா. ஒன்னோட குடும்பம் நடத்த முடியாது. நானும் என் புள்ளங்களும், என் அம்மா வூட்டுக்கேப் போறம். அங்கயும் வந்து நிக்காத” என்று சொல்லி விட்டு, அந்த ராத்திரியில் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு, பக்கத்தில் இருந்த, அம்மா வீட்டுக்கு வந்து, கதவைத் தட்டினாள்.
சின்ன அத்தைக்கு, கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை. “நான் அப்பவே சொன்னே கேட்டியாடி. இப்படி வந்து நிக்கறயே. அங்காளம்மா, உனக்கு நாங்க என்ன கொற வச்சோம். ஏன் இப்படி என் கொழந்தைகள சோதிக்கிற?” என்று செல்வியைக் கட்டிப்பிடித்து சிறிது நேரம் அழுதார்.
பிள்ளைகளிரண்டும் மிரண்டு போய், தூக்கக் கலக்கத்தில் அழுது கொண்டு இருந்தன. அத்தை தான்,”ஒண்ணும் இல்ல கண்ணுங்களா. பயப்படாதிங்க. ஒங்களுக்கு, இந்தப் பாட்டி இருக்கறன். என் கட்ட வேகற வரைக்கும் ஒங்களப் பாத்துக்குவன்” என்று சொல்லியபடி, இன்னும் கொஞ்ச நேரம் அழுதாள். மாமாவும் ஆறுதல் கூறினார்.
சின்ன அத்தைக்கு, நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். சுரேஷ் தான் எல்லோருக்கும் மூத்தவன். செல்வி அக்கா இரண்டாவது. அதற்கடுத்து, மலர். கடைசியாக ரமேஷ். மலரை தாரமங்கலத்தில் கட்டிக் கொடுத்தார்கள்.
ரமேஷ் தான் ஊதாரியாகத் திரிந்தான். எப்படியோ அவனுக்கும் திருமணம் ஆனது. அப்பாடா என்று, சின்ன அத்தை உட்காரப் போகும் போது, சின்ன மாமா, மாரடைப்பில் இறந்து போனார்.
எழவுக்கு வந்த பெரிய மாமாதான், ஜெகதீஷிடமும், செவ்வியிடமும் பேசி, சமாதானம் செய்து, மீண்டும் சேர்ந்து வாழ உதவினார். ஜெகதீஷ் அன்று செல்வி அக்காவிடம், நல்லவனைப் போல அழுதானாம்.
அதற்குப் பிறகு, சாவு முயற்சிகளைக் கைவிட்டு, பேரன், பேத்திகள் எடுத்து விட்டது அக்கா. மகனின் திருமணம், மகளின் திருமணம் என எல்லாமே, அக்காவின் சம்பாத்தியத்தில் தான்.
ஜெகதீஷ் குடியை மட்டும் இன்னும் விடவில்லை. ஆனால், முன்பு போல, சண்டை எல்லாம் இல்லை. குடித்து விட்டு, அமைதியாகக் தூங்கி விடுகிறான்.
இப்போது ஐஸ் பெட்டியில் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருக்கிறான். நானும் குமார் அண்ணனும், அத்தையிடம் பேசிக் கொண்டு இருக்கையில், யாரோ டீ சொன்னார்கள். மற்றொருவர் “டீ சொல்லியாச்சுப்பா, வந்துடும்” என்றார். அரவிந்த் எங்களுக்கெல்லாம் டீ கொடுத்தான்.
பெரிய மாமாவுக்கும் குடிப்பழக்கம் உண்டு. ஏத்தாப்பூரில் மகள் வீட்டிலிருக்கையில், குடித்து விட்டு, சாலையைக் கடக்கும் போது, லாரி மோதி இறந்து போனார். பெரிய அத்தையின், பெரிய மகன் ஜெகனும் சரியாக வாழவில்லை. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாம் திருமணம் கேரளாவில். அதிலும் தோல்வி. குடிப்பழக்கம் வேறு. சமீபத்தில் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்.
இத்தனை இறப்புகளையும் பார்த்தபடி, சாட்சியாக இரண்டு அத்தைகளும், உயிரோடு இருக்கிறார்கள். ஏன் இந்த குடும்பத்திற்கு மட்டும் இப்படி ஆகிறது என்பதன் விடை, சின்ன மாமா, அடித்து வீட்டை விட்டு விரட்டிய பாட்டியாக இருக்கலாம். பாட்டியைக் கடைசி வரையில் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அத்தைகளின் கைகளில் ஐந்நூறை திணித்து விட்டு, கனத்த மனதுடன், வெளியே வந்தோம். சாலையை ஒட்டி, செல்வி அக்கா வீட்டுக்குச் செல்லும் வழியில் பாழைடைந்து போன, ஒரு கிணறு இருந்தது.
சில நாட்கள் கழித்து, செல்வியக்காவின் மகள் பேசினார்: ”அப்பாவுக்கு ஞாயிற்றுக்கிழமை காரியம். அம்மா சொல்லச் சொன்னாங்க”.
பாழான நெற்றியுடன், செல்வி அக்காவை எப்படிப் பார்க்க முடியும்? அந்த தைரியம் எனக்கில்லை. வருகிறேன் என்று சொல்லி போனை துண்டித்தேன். அக்காவுக்கு தனது கணவன் இறந்ததில், எந்த வருத்தமும் இருந்திருக்காது. அக்காவின் மனசில், ஜெகதீஷ் எப்போதே, இறந்து விட்டான்.
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

