பரிவின் இசையை இசைத்துக் கொண்டே நடக்கிறேன்
உடன் வரும் நதியின் கூழாங்கற்கள்
என்னிடம் கேட்காமலே
பாசத்தைத் தடவி வழுக்குகின்றன
வழுக்கி விழுகிறேன்
போகப் போக கூழாங்கற்கள் இல்லை
பாசம் இல்லை
வழுக்கி விழுதல் இல்லை
தாடி வளர்கிறது
நகம் வளர்கிறது
மணலைப் பற்றிக்கொண்டு நடக்கின்றன கால்கள்
எவருமற்ற வெட்ட வெளியில்
சில சமயம்
பரிந்து கொண்டு நிற்கிறேன்
தலை மேல் பறக்கும் பறவைகள்
எச்சமிடுகின்றன
அவற்றை எடுத்துக் கொண்டு
புதிய வனத்தைப் படைக்க
பறந்தோடுகின்றன கால்கள்
*****
செத்துக் கிடக்கும் எருமைக்கூட்டத்தில்
எத்தனை தானாக செத்ததென கேட்டால்
எல்லாம் அப்படித்தான் என்பான்
எப்படித் தானாக செத்ததென்றால்
தொப் தொப்பென சகதி தெறிக்க
விழுந்ததாம்
எப்படி தானாகச் சாகுமென்றால்
தலையைச் சொறிகின்றான்
சொறிய சொறிய
ஒவ்வொன்றாய் விழுகிறது
சாகிறது
மயிரென உதிர்கிறது
*****
ஒவ்வொரு அலைக்கற்றையும்
ஒவ்வொரு நிறத்தில் ஊடுபாய்ந்து தெறிக்கின்றன
சிகப்பு நீலம் பச்சை மஞ்சளொடு
ஊதா வெள்ளை பிங்க் நிறங்களும்
அடர்ந்தும் மங்கியும் ஆங்காங்கே இடர
பல்கலைக்கழகத்தின் பாழடைந்த நூலகத்தில்
சிலந்தி வலைகளை மேற்கையால் கிழித்து
காலடித்தடங்கள் தூசியில் படிய நடந்துசென்ற
அற்றை நாளின் நிழலாட்டத்தில்
,
அலைக்கற்றைகளை ஒதுக்கும் முயற்சியில்
தொடர்ந்து தோற்றவாறே நகர்கிறேன்
ப்ளூடூத் ப்ளூ நிறத்திலும்
வைஃபை பச்சை நிறத்திலும்
அலைபேசியில் சிகப்பு நிறத்திலும்
எப்எம் ஊதா நிறத்திலுமென
சைபர் கற்றைகளின் ஒத்திசைவற்ற ஓட்டத்தில்
பின்னப்பட்ட வலையில் அலங்காரத்திற்கென
மனித மூளை முடிச்சிட்டு பிணைந்து நிற்கிறது
மூளைகளைப் பொறுக்கிக்கொண்டும்
வலையைக் கிழித்துக்கொண்டும்
நகர்வதைப் பார்த்து
தூரம் தள்ளிப்போய் நின்று கொண்ட சிலர்
பைத்தியக்காரத்தனமான ஆட்ட சைகை
பயத்தின் வெளிப்பாடு என
ஒவ்வொருவர் ஒவ்வொன்று பேசுகின்றனர்
ஒன்றும் தெரியாதவர்களாக
*****
,
பழங்கதையிலிருந்து உதிர்ந்த எழுத்துகள்
தனித்தனி உடலாகி
உடலில் முளைக்கும் கதைகளாக உருதிரிந்து
வெவ்வேறு அளவுகளில் வனையப்பட்ட
மட்கலங்களுக்குள் பொறிக்கப்பட்டு
வரலாறாகவும் புனைவாகவும் நீந்தி பறந்து
நூற்றாண்டு போர்களுள் புதைந்திருக்கும் தொன்மத்தையும்
அலுமினியத்தகடுகளால் நீட்டப்பட்டிருக்கும் நவீனத்தையும்
ஒவ்வொரு முறையும் உள்ளிழுத்து
நிறமற்ற மழையாகி நடுக்கடலில் ஓய்ந்தது
0
அவ்வளவு வெளிச்சம் அங்கே என்றான்
எவ்வளவு என்றேன்
இவ்வளவு சத்தம் எதற்கு என்றான்
எவ்வளவு என்றேன்
எவ்வளவு கூட்டம் போகிறது பார் என்றான்
எவ்வளவு என்றேன்
கண்ணை மூடிக்கொண்டு
காதை மூடிக்கொண்டு இவ்வளவையும் நான் சொல்லி
மெதுவாய் திறக்க
இப்போதுதான் தெரிகிறது
இது ஒரு கொண்டாட்டம்
கொண்டாட்டமென என் நாவசையும் சத்தம்
செவிக்கு எட்டாத தூரத்திற்கு அவன் நகர்ந்திருந்தான்
,
நானும் போக வேண்டும் எப்படிப் போவது
மூடிய கண்ணைத் திறந்துகொண்டா
மூடாத காதைத் திறந்துகொண்டா
வாய் தானாக திறந்து சிரிக்க
அதனோடு நுழைகிறேன்
00

அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

