முனைவர் சா. கிருத்திகா அசோக்

            இரண்டு காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். எனக்கு இந்த இடம் புதிதாகத் தெரியவில்லை . ஏற்கனவே நான் வந்த இடம்தான். மீண்டும் அதே இடத்திற்குத்தான் அழைத்துச் செல்வார்கள் என்று எண்ணி இருந்த வேளையில் ‘தடம் மாறி’ வேறு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

எளிய குடும்பத்தில் பிறந்து மிகவும் வழுவான  குடிமகனுக்கு  மனைவியானவளும் பூக்கட்டி விற்று, தான் பட்டினி கிடந்து  எங்களின்  கால் வயிற்றை நிரப்ப பாடுபட்டவள்தான் என் அம்மா. மூன்று வேலை உணவு கிடைக்கும் அளவுக்கு வெயிலில் நனைந்து அம்மா சம்பாதிக்கும் பணத்தைத் தன் குடிப்பழக்கத்தால் நாங்கள் கால் வயிறு நிரப்புவதற்குக் காரணமானவர்தான் என் அப்பா.

“மதுபானத்தை நேசிக்கும் மிகச் சிறந்த குடிமகன்களுக்குத் தன் தெளிவான சிந்தனையால் தன் மனைவியின் நடத்ததையில் சந்தேகம் தோன்றத்தானே செய்யும்”. அப்பாவும் இதற்கு தப்பியவர் இல்லை. அம்மாவை வசைச்சொல்லால் வதைப்பதோடு மட்டுமல்லாமல் அடியினையும் விட்டுவைக்க மாட்டார். அம்மா தன் வாழ்வை நினைத்து அழுத நாட்களை விட எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அழுத நாட்கள் தான் அதிகம்.

“கல்வியின் இன்றியமையாமையினைக் கற்றவர்களைவிட கல்லாதவர்கள்தான் அதிகம் உணர்ந்திருப்பார்கள்”. சாந்தியினைப் பெயரில் மட்டும் அல்லாது வாழும் வாழ்க்கையிலும் கடைபிடிக்கும் என் அம்மாவிற்கு அது நன்றாகவே தெரியும். கல்விக்காக மட்டுமன்றி இரண்டுவேளை உணவுக்காகவும் நாங்கள் பள்ளி செல்லுவோம். அம்மாவின் போராட்டமும் அதற்குத்தான். 

விடிந்தவுடன் எங்களின் வயிரை நிரைக்கவும், அப்பா எங்களை அடிக்காமல் இருப்பதற்காகவும் வாங்கிய அடிகளின் வரியைப் புடவையால் போத்திக்கொண்டு, மனதின் சோகத்தினை வெளிப்படுத்தும் கண்ணாடியாகத் திகழும் முகத்தினை மஞ்சளால் மாற்றி மோதிரவிரலால் காசளவு வைக்கப்பட்ட பொட்டுமாய் பூ கட்டும் வேலைக்குக் கிளம்பி விடுவார். கட்டிய பூவில் சிறிது  நூலை இழுத்து  அளவில் பெரிதாக்கி, அப்பா இழுத்து கீழே போட்டதுபோக இருக்கும் முடியில், போட்ட கொண்டையில் சுற்றிக் கொள்வார். அம்மாவைப் பார்ப்பதற்கு லட்சுமி கடாட்சம் நிரம்பியிருக்கும்.

 பெண்கள் பெரும்பாலும் இப்படியான தோற்றம் உள்ளவர்களிடமே பூ வாங்குவதற்கு விரும்புவர். வயிற்றுப் பிழைப்பிற்கு இப்படியான தோற்றம் தேவைப்படுகிறதே என அம்மா நொந்து கொள்வது உண்டு.

பூ வாங்குவோருக்கு என் அம்மாவின் துயரம் தெரிவதில்லை என்றாலும், அக்கம் பக்கத்து வீட்டார் பார்வை எல்லாம் எங்கள் வீட்டில்தான். ஏன், என்ன? என்று கூடக் கேட்பதில்லை; பார்வை மட்டும்தான்; இரவு எட்டு மணிக்குப் பார்க்கும் தொடர்கதையும் எங்க வீட்டுக் கதைதான். யாரேனும் கேட்க நினைத்ததாலும் அப்பா பேசும் பேச்சுக்குப் பயந்து உதடுகளைப் பிரிப்பதும் இல்லை .

எங்கள் பசிக் கொடுமையைத் தெரிஞ்சுகிட்ட அக்கம்பக்கத்தார் வீட்டு விசேஷம்னா மீதி இருக்கும் உணவைத் தந்து சமைத்த பாத்திரங்களை விளக்கச் சொல்லுவாங்க. அறுசுவையில் உவர்ப்பு சுவை மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அந்த உணவில் ஏக்கம் இல்லை. காரணம் “இருப்பதில் வாழ கற்றுக்கொண்டால் ஆசையின் துயரில் மூழ்க வேண்டியதில்லை” என்று என் அம்மா அடிக்கடி சொல்வதுதான்.

ஒரு நாள் ஏற்பட்ட சண்டையில் அப்பா எட்டி உதைத்து அந்த உவர்ப்பு சுவையும் கிட்டாமல் போனது. அன்றிரவு உமிழ்நீர் மட்டுமே உணவானது. இதுபோன்ற சூழலில் வேலை களைப்பையும் பொருட்படுத்தாது அம்மா, மீண்டும் சிதறிய சோற்றினை அலசி உவர்ப்பு சுவையைக் கூட்டிவிடுவார். “இரண்டடியில் வாழ்வைக் கடத்தி செல்லும் திருவள்ளுவரின் பண்பையும் விஞ்சிய குணம் என் அம்மாவிற்கு”.

எங்கள் வீட்டின் நிலைமையறிந்து உவர்ப்பு சுவையைப் பங்கிட்டுக் கொள்ள வரும் எறும்பும் நீரில் நீந்தி உயிரோடு வரும். ”பசி வந்தால் புலி புல்லைத் திண்பதைப்போல இனிப்பைத் தேடும் எறும்பும் எங்க வீட்டுச் சூழ்நிலையை அறிந்து உவர்ப்பைப் பகிர்ந்து கொள்ளும்“.

திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் தொடர்ந்து  இரண்டு நாட்கள் அம்மா வேலைக்குப் போகவில்லை. அன்றாடம் வாங்கும் அரிசியில் ஒருகைப்பிடி எடுத்து வைக்கும் பழக்கம் அம்மாவிடம் இருந்ததால் ஒருநாளைக் கடந்து இரண்டாவது நாளும் நகர்ந்தது. காய்ச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வு மூன்றாவது நாளும் அம்மாவால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அன்று பானையைத் துடைத்து எடுக்கப்பட்ட அரிசியில் செய்த கஞ்சி இரவு உணவுக்குத் தயாராக இருந்தது.

கல்விக்காக மட்டுமன்றி இரண்டுவேளை உணவுக்காக நாங்கள்  பள்ளி செல்லுவோம். அம்மாவின் போராட்டமும் அதற்குத்தான். அன்று அம்மாவினை விட்டு போகவேண்டாம் என்று தோன்றியது. நானும் ஆதியாவும் வீட்டை சுத்தம் செய்துகொண்டு அம்மாவிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தோம்.

பள்ளி செல்லாதலாதல் இரண்டுவேளை உணவு இல்லாமல் இரவு உணவுக்காகக் காத்திருந்தோம். குடிப்பதற்கு மூன்றுநாளாக பணம் தரவில்லை என்ற கோபத்தில் கஞ்சி பானையை எட்டி உதைச்சதும் அப்போதான் எங்க அம்மா கோபப்பட்டு பார்த்தேன்.

‘‘ஐயோ உடம்பும் மனசும் நொந்து போகும்போது கூட நான் வருத்தப்படல. இப்படி ஏன் புள்ளைங்களுக்குக் கிடைச்ச கஞ்சி சோத்தையும் குடிக்கவிடாம மண்ணாக்கிட்டியே. என் வாழ்க்கைய மண்ணாக்குனது பத்தாதா?. கிடைக்கிற அரவயித்து கஞ்சும் புள்ளைங்க வாயில போட விடாம பண்ணிட்டியே’’ என கத்தி அழுத அம்மாவ,

‘‘ஏய் வாய மூடுடி’’ என்று அவுந்த கைலியை ஒரு கையால சுருட்டிப் புடிச்சிக்கிட்டு எட்டி உதைச்சார் அப்பா. உதச்ச வேகம் கைலி அவுந்து விழுந்து அவரும் விழுந்துட்டாரு. கீழே விழுந்த அம்மா “சாய்த்து பிடித்தாலும் மேல்நோக்கி எரியும் மெழுகுவர்த்தி போல” வெடுக்கென எழுந்து “இனி இந்த மனுசன் காலையிலதான் முழிப்பாரு. இந்த மனுசன கட்டுனதுக்கு நான்தான் நொந்துபோறனா நீங்க ஏன் சாப்டாம கிடக்கணும்னு சொல்லிக்கிட்டே சிதறிய சாப்பாட்ட மேலாவ எடுத்து எங்கள சாப்பிட வச்சாங்க. சாணத்துகள் சாப்பாட்டுல கலந்திருந்தாலும் அதனை சாப்பிடவில்லையென்றால் இரவு பகலாக மாறிவடும் என்பதனை உணர்ந்து வயிறு நிரஞ்சா போதும்னு சாப்பிட்டோம்.

அம்மா பிறர்  வீட்டு  வேலைகள் செய்வதனைப் பார்க்கும்பொழுது என் உயிர் குருதியில் அலசி எடுக்கப்படும். சிறுவனான என்னால் வேதனை மட்டும்தான் கொள்ள முடிந்தது. மூன்று வயது சிறுமி என்பதால் தங்கை ஆதியாவிற்கு விளையாட்டுதான் பெரிதாக இருக்கும். வறுமையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தாலும் “யாரிடமும் பொருள் கேட்டு கையேந்தக்கூடாது, யார் பொருளுக்கும்  ஆசைப்படக்கூடாது” என்று தான் என் அம்மா கூறுவார். இதோடு எப்பொழுதும் “இல்லாம இருந்தாலும் கல்லாமை மட்டும் இருக்கக் கூடாது அன்பு” என என்கிட்ட அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

ஒருநாள் பூக்கட்டி விற்று விட்டு வீடு திரும்பிய வேளையில் தன்னுடன் தொடக்கக் கல்வி பயின்ற கண்ணன் மாமாவை அம்மா சந்தித்துப் பேசியதாகவும், இருவரும் இருபது பேர் கூடியிருக்கும் டீக்கடையில் அமர்ந்திருந்ததையும் அப்பாவிடம் “அண்ணாமல… அண்ணா மல…” என காதில் கூர்பட விழும்படி பக்கத்து வீட்டு எட்டியப்பன் மாமா  வந்து சொல்லவும், அடுத்த நொடி அப்பா வீட்டில்  இல்லை. ஆதியாவினைப்  பத்திரமாக இருக்க வைத்துவிட்டு வெளியில் வருவதற்குள் “டேய் அன்பு! உங்க அம்மாவ உங்க அப்பா அடிச்சு கொன்னுட்டாருடா” என்று  என்னோடு விளையாடும் குமார் கூறினான்.  கூறிய நொடிப்பொழுதில் எப்பவும் போல அவன் அம்மா வெடுக்கென கையைப் பிடித்து அவனை அழைத்துச் சென்றார்.

சேதியைக் கேட்டதும் மயங்கி விழுந்துவிட்டேன். ஆதியா தான் “அண்ணா! அண்ணா!” என்று தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டாள். அம்மாவின் உடல் வீடடைந்தது. வயிற்றில் எட்டி உதைத்ததால் காலுக்கு கீழே இரத்தம் வழிந்து ஓடியது. யாரும் துணைக்கு வந்து நிற்கவில்லை. அம்மாவின் திருமணம் தன்னால்தான் நடந்தது என்ற மன உளைச்சலில்  நித்தம் அல்லோலப் பட்டு நல்ல அறிவுரையை அம்மாவிற்குத் தேற்றுதல் உரையாக வழங்கிய ராஜகண்ணு தாத்தாதான் உடன் இருந்து எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருந்தார்.  

“இருக்கும் பொழுது செலவு செய்து உயிரைக் காப்பாற்ற உதவாதவர்கள், இறந்த பின்பு அடக்கம்  செய்ய செலவு செய்வது மனித இயல்புதான்”. ராஜகண்ணு தாத்தாவிடம் எங்களிடம் பேசாதவர்கள்கூட இறப்பு சடங்கிற்குப் பணம் கொடுத்தனர். எங்க அம்மா விளக்குன பாத்திரத்தின் வெளிச்சம்தான் அது.

 என் கையைப் பிடித்து  அம்மாவிற்குக் கொள்ளி வைக்கும் பொழுது அவர் அழுததற்கு அளவே இல்லை. “கணவன் செய்ய வேண்டிய கடைசிக் காரியத்தை இப்படி சின்னப் புள்ளைய செய்ய விட்டு குடிச்சிட்டு கீழே  கிடக்கிறியேடா. “குடியில மூழ்குனவனுக்குக் குடித்தனம் என்னான்னு தெரியாம போயிரும்னு” சரியாதான் இருக்கு.

மூன்று சுற்றில் உடைக்க வேண்டிய பானையை ஒரு சுற்று முடிவதற்குள் விழுந்து நொறுங்க வச்சிட்டியே.  ராஜகண்ணு தாத்தா  தன்னையும் மீறி “படுபாவிப் பயலே மூன்று முடிச்சு ஒழுங்கா போடாம ஒரே முடிச்சுல விட்ட! அவ மூச்சு நின்னபின்னும் முழுசா எதையும் செய்யாமல் இப்படி குடிச்சிட்டு விழுந்து கிடக்கிற. படுபாவி! படுபாவி!” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். 

ஒவ்வொரு நாளும் எங்களுக்காக உயிர் சுமந்து உள்ளத்தில் வெந்து கொண்டிருந்த என் அம்மா இன்று உண்மையாக நெருப்பில் வெந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அம்மா வுடன் போய்விடுவோம் என எண்ணிய வேளையில் தங்கை ஆதியாவின் முகம் நினைவுக்கு வந்தது. தாயாய் மாறி தானாக வளர்க்கவும் எனக்கு வயது இல்லை, அன்பு மட்டுமே இருந்தது.

 வெறும் அன்பு இந்த உலகத்தில் என்ன தந்துவிடும். அழுதுகொண்டு படுத்திருக்கும்பொழுது அம்மா தலையைத் தூக்கி மடியில் வைப்பது போன்ற உணர்வு. அண்ணாந்து பார்த்தேன்! தூங்கு அண்ணா! என்றாள் ஆதியா. அம்மா இல்லாத வீடு உவர்ப்பு சுவையும்  இல்லாமல் போனது.

அண்ணா! பசிக்குது என்றாள் ஆதியா. ஓடிப்போய் குண்டானில் அரிசி இருக்கா என்று பார்த்தேன். இல்லை என்பதனை அவளிடம் சொல்லாமல் இருமா என்று சொல்லி வீட்டிற்கு அருகில் இருந்த டீக்கடையில் ஒரு மணி நேரம் கொடுத்த வேலைகளைச் செய்துவிட்டு டீயும் பண்ணும் வாங்கி வந்து கொடுத்ததும் அவள் சிரிப்பில் என் கவலை சிறிது நேரம் மறைந்து போனது.

எங்களின் நிலை உணர்ந்த ராஜகண்ணு தாத்தா அவர் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார். ராக்காயி ஆத்தாவிற்கு எங்களைப் பிடிக்காது எனத் தெரிந்தும் வேறு வழியின்றி ராஜ கண்ணு தாத்தா வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் உள்ளே சென்றதும் ராக்காயி ஆத்தா ஒரே சத்தமிட்டு தாத்தாவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

“மகனும் மகளும் மருமகள் வீட்டு ஆளுங்களால கொல்லப்பட்டு நாலு வருஷமாச்சு. வயசான காலத்துல நம்மள பாத்துக்க வேண்டியவங்கள பறிகொடுத்து விட்டு. அவங்க பெத்து போட்டுட்டுப் போன பொண்ண இப்ப நாம பாத்துக்க வேண்டி இருக்கு. ஒத்த பொண்ண வளர்க்க இந்த வயசான காலத்துல நாம படுற கஷ்டம் சொல்ல முடியல. இதுல இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வளர்த்து மூன்று வேளையும் சோறு போட நமக்கு  தெம்பு இருக்கா? நீங்களும் உழைக்கும் வயசு கடந்துட்டீங்க, நல்லா யோசிங்க”.

”சரி ராக்காயி, இரண்டு நாள் பாத்துக்க ராக்காயி, சாந்தியின் அக்கா விசாலாட்சி பக்கத்து ஊர்ல தான் வாக்கப்பட்டு இருக்கா. அவளுக்குக் குழந்தை  இல்லேன்னு அவ புருஷன் அவளைக் கொல்லாம கொல்றான். விசாலாட்சிகிட்ட  பேசிட்டு அவங்க வீட்ல விட்டுட்டு வந்துடுறேன்.” ராஜகண்ணு பேசியதும் ராக்காயி அமைதியானாள்.

இரண்டு நாள் மூன்று வேளை உணவு எனக்கும் ஆதியாவுக்கும் கிடைத்தது. மூன்று வேளை உணவு கிடைத்தது புதிதாக இருந்தாலும் மகிழ்ச்சி எங்களிடம் இல்லை. தன் அம்மா இல்லாத நிரந்தரம் போன்று இந்த உணவும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்ததால் மகிழ்ச்சி எங்களிடம் தலை காட்டவில்லை.

மூன்றாவது நாள் காலையில ராக்காயி ஆத்தா போட்ட சத்தத்துல நாங்கள் இருவரும் ராஜகண்ணு தாத்தாவுடன் விசாலாட்சி பெரியம்மா வீட்டு தெருவில் நின்றோம்.

அப்பொழுது வீட்டை விட்டு வெளியில் வந்த பெரியப்பா மாடசாமி எங்களை யாரென்று தெரியாததுபோல் கடந்து சென்றார். வெயில் உச்சந்தலையை வலுவிழக்கச் செய்தது. பெரியப்பா சென்றதும் பெரியம்மா ஓடி வந்து எங்களை அணைத்துக் கொண்டார். மூவருக்கும் தண்ணீர் கொடுத்தார். வெயிலில் வந்த எங்களின் கண்கள் அப்பொழுதுதான் இமையை மேல் தூக்கி நின்றது. குழந்தை இல்லை என்பதால் தான் படும் கொடுமைகளை ராஜகண்ணு தாத்தாவிடம் புலம்பி கொண்டிருந்தார்.

இறுதியில் ‘‘என்ன மனசோ! அவரு  சாந்தி இறந்தப்பக்கூட என்னை சாந்திய பார்க்க விடல’’ என்று சொல்லி அழுது கொண்டே இருந்தார் பெரியம்மா. இடையில் உணவையும் எங்களுக்கு பரிமாறினார். கிடைத்த சாப்பாடும் நடந்து வந்த களைப்பும் தரையில் அப்படியே படுத்து விட்டோம். நாங்கள் எழுந்தபொழுது ராஜகண்ணு தாத்தா வீட்டில் இல்லை.

பெரியம்மா எங்களை நன்றாக தன் பிள்ளைகளைப்போல் கவனித்துக் கொண்டார். வீட்டுக்கு வந்த பெரியப்பா ஆதியாவைக் கூர்ந்து கவனித்து விட்டு  சென்றார். ஒரு மணி நேரம் இருக்கும் மீண்டும் வீட்டுக்கு வந்து உன் தங்கச்சி இங்க நல்லபடியா இருக்கணும்னா நீ இங்கே இருக்க கூடாது என்றதும் விசாலாட்சி பெரியம்மா கண்கலங்கி தழுதழுத்த குரலில் “நமக்குத்தான் பிள்ளைகள் இல்லையே” என்றார். “நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் இங்கே இரு. இல்லை என்றால் மூணு பேரும் வீட்டை விட்டு  வெளியில்  கிளம்புங்க. எல்லார்க்கும் என்னால சோறு போட்டெல்லாம் பாத்துக்க முடியாது”.

குழந்தைப் பெத்துக்குற தகுதி உனக்கு தான் இல்லை. எனக்கு எல்லா தெம்பும் இருக்கு. நீ போனா இன்றைக்கே எனக்கு பொண்ணு கொடுக்க வரிசையில நிப்பாங்க” என்றார்.

‘‘அவர் கட்டிய அடிமை விலங்கை அவரிடமே கொடுத்துவிட்டு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வெளியில் வரவேண்டும் என்று தோன்றினாலும், கணவன் இருக்க கழுத்தில் தாலி இல்லாமல் வாழ்பவர்களுக்குச் சமூகம் தரும் பெயரைச் சிந்தித்தால் இந்த அடிமை வாழ்வே சகித்துக் கொள்ளலாம்’’ என்று பெரியம்மா சிந்தித்திருக்க வேண்டும்.

“என்ன யோசிக்கிற?” சிந்தித்து நின்றவர், மாடசாமி போட்ட அதட்டல் குரலில் திடுக்கிட்டு நின்றாள். அன்பை ஏறிட்டுப் பார்த்தாள். சிறுவன் ஆனாலும் விசாலாட்சி பெரியம்மாவின் பார்வையின் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொண்டு  வீட்டை விட்டு வெளியில் சென்றான்.

தஞ்சாவூர் ரயில் நிலைய மேடை இரண்டு நாட்கள் வீடாக மாறியது. இதனைக் கவனித்த ரயில் நிலைய பணியாளர் ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். பாதுகாப்பு அலுவலர்கள் என்னைக் குளிக்கச்சொல்லி வேறு ஆடை உடுத்தச் செய்து, வயிறு நிறைய உணவினை கொடுத்து, பிறகு என் சூழ்நிலையைக் கேட்டு அறிந்தனர்.

பெயர் அன்பு என்றும் தனக்கு நேர்ந்த கதையனைத்தையும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களிடம் எடுத்துக் கூறினேன். ஒரு வாரம் தன்னைப்போல் பல வேதனைகளைச் சுமந்தவர்களின் துயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு என் துயரைத் தேற்றிக் கொண்டேன். ஒரு வாரம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன்.

தங்கை ஆதியா நினைவு வரவே இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுது, நான் படிக்கப் போகிறேன் என்னை பெரியம்மாவிடம் அனுப்பி விடுங்கள் என்றேன். குழந்தைகள் இல்லத்திலே நீங்க படிக்கலாம் என பாதுகாப்பு அலுவலர்கள் சொல்லியும் நான் கேட்கவில்லை. அலுவலர்கள் கொண்டுவந்து விசாலாட்சி பெரியம்மா வீட்டில் விட்டுச்  சென்றனர். அன்று  மாடசாமி, பெரியப்பா விசாலாட்சிக்கு வருமானம் தந்த கறவை மாட்டை விற்பதற்காக மணப்பாறை சென்று இருந்ததால், எந்த பிரச்சனையும் இல்லாமல் இரண்டு நாட்கள் பெரியம்மா வீட்டில்  தங்கியிருந்தேன்.

நான் தங்கி இருந்ததைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் தான் வைத்திருந்த செல்போனைத் தானே ஒளித்து வைத்துவிட்டு தெருவையே தேட வைத்துக் கொண்டு இருந்தான். செல்வம் சொன்னால் அந்தத் தெருவில் யாரும் தட்டுவதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் கடன் சுமை அழுத்தும் பொழுது ஐந்து பைசா வட்டிக்கு கேட்டவுடன் பணம் கொடுப்பது அவர்தான். சிறிதுநேரம் கழித்து  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் டவுசர் பாக்கெட்டில் செல்போனைத் திணித்து வைத்துவிட்டு, இதோ! இதோ! என்னோட செல்போன் என கூச்சல் போட்டான். உடனே எல்லோரும் கூடிவிட்டனர்.

யாரும் நான் சொல்வதைக் கேட்பதாக இல்லை. “செல்வமே எல்லா இடங்களிலும் மேலோங்கும்” என்பது நமக்குத் தெரிந்ததுதானே. விசாலாட்சி பெரியம்மாவும் புரிந்து கொள்ளாமல் “இதுக்குத்தான் என் புருஷன் உன்ன  வீட்டில் வைத்திருக்க கூடாதுன்னு சொன்னாரு” என்றார். அவளும் செல்வத்திடம் ஐயாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியவர் தான். ஆதியா வாயைத் திறந்தவுடன் சட்டென பெரியம்மா உள்ளங்கையால் அவள் வாயை மூடிவிட்டார்.

காவலர் இரண்டு பேர் கூட்டத்தினை நோக்கி வந்தனர். “சித்தரிக்கும் கதை தகுந்த ஆவணங்களோடு அமைக்கப்பட்டு விட்டால் போதும் தீர்ப்பு உடனே கிடைத்துவிடும்.” செல்வம் மிக சரியாக ஜோடித்து வைத்திருந்தால், காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். அழைத்துச் செல்லும்பொழுது ஆதியா தரையில் புரண்டு அழுத அழுகை மறக்க முடியாது. ஆதியாவின் கையைப் பிடித்து வெடுக்கென பெரியம்மா வீட்டிற்குள் இழுத்துச் சென்றார் .

“வறுமைக்கு உறவுகளானதால் என்னவோ நானும் என் தங்கையும் சேர்ந்து வாழவே முடியவில்லை”. காவலர்கள் இருவரும் அழைத்துச் செல்லும் பொழுது இத்தனையும் என் நினைவைக் கசக்கி எடுத்தது. என்னைக் காவலாளிகள் அழைத்துச் சென்ற இடம் “அரசு கூர்நோக்கு இல்லம்”.  

“வறுமையாலும் வெறுமையாளும் வாடிய என் குடும்பத்தில் சமூகம் கூர்ந்து நோக்கியிருந்தால் என் அம்மா இறந்திருக்க மாட்டார், நானும் கோபம் கொண்டிருக்க மாட்டேன். அங்கு இருந்த சில நாட்களும் யாரிடமும் பேசவே நான் இல்லை. அழைத்து வந்தபொழுது கதறிய தங்கையின் நினைவே என்னுள் நிரம்பி இருந்தது. பதினெட்டு வயதிற்கு குறைவாக இருப்பதால் எந்த தண்டனையும் கொடுக்கப்படாமல் அரசால்  விடுவிக்கப் பட்டேன்.

தன்னை அழைத்துச் செல்ல வந்தது பெரியப்பா மாடசாமி என்றதும், மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உன் தங்கச்சிக்காகத் தான் அழைக்க வந்தேன். அவள் உன் நினைவாகவே அழுது கொண்டே இருக்கிறாள்.  பேசுவது நுனி நாக்கு என்று தெரிந்தும் தங்கையைப் பார்ப்பதற்காக எந்த முரண்டும் பிடிக்காமல் சென்றேன்.

 அன்றைய இரவு உறக்கம் வராமல் அம்மாவின் நினைவுகளோடு அசையாமல் படுத்திருந்தேன். காலையிலிருந்து இரவு வரை மாடசாமியின் வீட்டுக்காக மாடு போல் உழைத்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் பெரியம்மா. தூக்கத்தில் இருந்த தங்கையிடம் பெரியப்பா நடந்து கொண்டது எனக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது.

காலையில் எழுந்ததும் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆதியாவும் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். உள்ளிருந்த அனல் மூச்சு உடம்பு எரிச்சலை உண்டாக்கியது. வீட்டில் எல்லோரும் கம்பங்கூழைக் குடித்துக்கொண்டிருந்தனர். பெரியம்மா அன்பு வாப்பா, கூழு குடிக்க என்று கூப்பிட்டார். நான் அப்புறம் சாப்பிடுகிறேன் பெரியம்மா என அமைதியாக இருந்து விட்டேன்.

மாடசாமியை வைத்த கண் வாங்காமல் என் சிந்தனையிலிருந்தது. மதியம் பன்னிரண்டு மணி இருக்கும், பக்கத்து வீட்டு செல்வத்துடன் பைக்கில் ஆதியாவை அழைத்துச் சென்றார்.

உன் தங்கச்சி மேல இப்பொழுது எல்லாம் அதிக பாசம் அவங்க பெரியப்பா வச்சிருக்காங்க என்றாள், பெரியம்மா. எங்கு சென்றாலும் அழைத்துக்கொண்டு செல்கிறார். கேட்டதை எல்லாம் வாங்கித் தருகிறார். என்னையும் இப்பெல்லாம் திட்டுவதே இல்லை. அவள் அழுததால்தான் உன்னையும் அழைத்து வந்திருக்கிறார்.

உள்ளிருக்கும் அனல் காற்று கனலாக மாறி, வேகமாக வெளிவரத் தொடங்கியது. விறகு வெட்டி வருகிறேன் என பெரியம்மாகிட்ட சொல்லியதும், இந்த இரண்டு நாட்களில் சிறுவனாக இருந்தாலும் வீட்டு வேலைகள் அனைத்திலும் பங்கெடுத்து செய்தேன் என்பதால் சரி என்று அவரும் சொன்னார். பைக் எடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

பைக் மூங்கில் காட்டு பக்கம் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். மறைந்து நின்று நடப்பதைப் பார்த்தேன். பெரியப்பா யாரும் வராமல் காவல் காத்துக் கொண்டிருப்பதையும் செல்வம் தங்கையைச் சீண்டிக் கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ந்து போனேன்.

“பெரியப்பா வலிக்குது பெரியப்பா” என பல முறை சொல்லியும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. கொஞ்ச நேரம்மா… கடையில மிட்டாய் வாங்கிட்டு போகலாம்… என்று காவல் வேலையைக் கச்சிதமாக செய்து கொண்டிருந்தார். தட்டிக் கேட்கும் தைரியம் உள்ளே புகுந்ததும், கையிலிருந்த கருவியும் கூடுதல் தைரியத்தை எனக்குக் கொடுத்தது.

பெரியப்பாவின் பின்னால் சென்று திரும்பி பார்க்க நேரம் விடாமல் தலையில் தாக்கியதும் மயங்கிக் கீழே விழுந்தார். இதைக் கண்ட செல்வம் டேய்… டேய்… என ஓடிவந்தார். சட்டென அவரைத் தாக்கியதும் அவரும் மயங்கிக் கரையான் புற்றின்மீது விழுந்தார். சிறிதும் யோசிக்காமல் இருவரும் அருகில் இருந்த காவல் நிலையத்தை அடைந்தோம்.

காவல் நிலையத்தில் நடந்த உண்மைகளை நான் கூறவே ஆதியாவிற்குத் தகுந்த மருத்துவம் அளித்து  குழந்தைகள் இல்லத்திலும் மீண்டும் என்னை கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.

 “வறுமையிலும் சரியாக வளர்க்கப்பட்ட நான் இன்று கொலைகாரனாக இங்கு வந்ததற்குக் கவலைப்படவில்லை. வெளிநாட்டில் நடுரோட்டில் வைத்து தீர்ப்பு கொடுப்பதை டிவியில் பார்த்திருக்கிறேன். நான் நடுக்காட்டில் வைத்து தீர்ப்பு கொடுத்திருக்கிறேன். நான் செய்ததில் என்ன தவறு”. உயரத்தில் காற்று தராமல் சுத்திக்கொண்டிருக்கும் மின்விசிறி என் நினைவலைகளை வட்டமிடச் செய்தது.

 பாதுகாவலர்கள் சாப்பிட அழைத்ததும் தட்டை எடுத்தேன். தட்டின் மேலிருந்த குவளையில் சிறுநீர் கிடந்தது. அந்நீரில் எறும்பு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். எறும்பினை ஆள்காட்டி விரலால் எடுத்து கீழே விட்டதும், அது செல்லும் அழகைக் கண்டு மகிழ்ந்தேன். பின்புதான் பசி உணர்வு ஏற்பட்டது.

000

முனைவர் சா. கிருத்திகா அசோக்

                                உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

                        த.உ.க.கலைக்கல்லுரி

                        கரந்தைத் தமிழ்ச்சங்கம்

                                 தஞ்சாவூர் -613002.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *