பாலமுருகன்.லோ
சங்கும் சேகண்டியும் ஒலித்துக்கொண்டிருந்தது. வீட்டு முகப்புப் பகுதியில் தென்னை ஓலையினால் பந்தல் வேயப்பட்டிருந்தது. வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. துக்கம் விசாரிக்க வருபவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தனர்.
வயதான முதியவர்கள் வெள்ளை வேட்டி சட்டையும் தோள்பட்டையில் ஒரு துண்டும் அணிந்துகொண்டு வந்து அமர்ந்தனர். கிழவிமார்களின் அழுகுரல் வீட்டினுள் இருந்து வெளியே கேட்டது.
“என்ன பெத்த மவராசி இப்படி போயிட்டாளே! கல்லு மாதிரி நான் இன்னும் இந்த பூமிக்கிப் பாரமா இருக்கேன். இது சாவுற வயசு இல்லையே,” என்று சொல்லிக்கொண்டே முந்தானையை எடுத்து மூக்குல வைத்து சளியை ஒரு சிந்து சிந்தினாள்.
“ஏம்மா கோகிலா, காபி போட்டு எடுத்து வரச்சொன்னையா? பாரு, பொம்பளைங்கள்லாம் ஒப்பாரி வச்சு சோர்ந்து போயிட்டாங்க.”
“ஆத்தா, காபி வாங்கியாரப் போயிருக்காரு எம்புட வீட்டுக்காரரு. வந்துடுவாரு இப்ப,” என்றாள் கோகிலா.
“ஏண்டி பாக்கியம், நீ உன் மவ வீட்டுக்கு போறேன்னு சொன்னீயே! ஏன் போலையா?”
“அதை ஏண்டிக் கேட்கிற? போன வாரம் அவ வீட்டுக்குப் போலாமுன்னுதான் யோசிச்சு துணிமணியெல்லாம் எடுத்து வச்சேன். ஆனா அவளே போன் போட்டு, ‘ம்மா, நீ இப்ப வரவேண்டாம்ன்னு சொல்லீட்டா,’” என்றாள் பாக்கியலட்சுமி.
“அம்மாடி கோகிலா, இங்க வாம்மா. உன் அத்தகாரி தலமாட்டுல இருக்கிற காமாட்சி விளக்கு அணையாம பார்த்துக்கோ. எண்ணை இல்லேனா ஊத்து.”
“சரி ஆத்தா. ஏண்டிம்மா, ராக்கம்மா இறக்கிறப்போ ஏதாவது நேரம் குறிச்சு சொன்னாங்களா? ஏன்னா அடப்பு கீது இருக்கானு பார்க்கணும்.”
“ஆத்தா, நான் அவருகிட்ட கேட்டு சொல்லுறேன். சரிம்மா, கலா குடும்பத்தோட ஊரிலிருந்து வந்துட்டாளா?”
“இன்னும் இல்ல ஆத்தா, வந்துகிட்டே இருக்காங்க. செய்தி சொல்லிட்டோம்.”
“ஆமாம், அதுவும் சரிதான்,” என்றாள் கிழவி பாப்பாயி.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் கலா தன் பிள்ளைகளுடன் காரிலிருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்தாள். தன் அம்மாவை அந்தக் கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
“ஏம்மா, நான் உன்ன இப்படியா பார்க்கணும்? ரெண்டு மாசம் முன்னக்கூட வந்தேனேம்மா, நல்லாத்தானே இருந்த. இப்ப என்னவாம்?” என்று புலம்பினாள்.
“ஏம்பா சரவணா, கலா, வர வேண்டியவங்களெல்லாம் வந்தாச்சா? ராக்கம்மா ஆஸ்பத்திரியில இருந்தவ, ரொம்ப நேரம் வச்சுருக்க முடியாது,” என்றாள் கிழவி பாப்பாயி.
“நம்ம சொந்த பந்தமெல்லாம் வந்திருக்காங்க,” என்றான் சரவணன்.
“அம்மாவுக்கு தேரு ஏதாவது சொல்லிருக்கையா? ஊரே மெச்சுற மாதிரி செய்யணும்.”
“சரி விடுக்கா, ஆம்புலன்ஸ் இருக்கு, அதுலேயே அம்மாவை ஏத்திக்கலாம்.”
அப்போது வெளியிலிருந்த அம்மாவுடைய மாமா, “சரவணா, நம்ம வழக்கப்படி காட்டுக்குப் போயி புதைக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சாச்சா?” என்றார்.
“தாத்தா, குழியெல்லாம் வெட்டச் சொல்லல.”
“ஏம்பா?”
“அம்மா பத்து இருபது நாளா ஆஸ்பத்திரியில இருந்தாங்கல. அதான் நாம பேசாம தகனம் செய்திடலாமுன்னு நினைச்சோம். கலா கிட்டையும் கேட்டோம். அக்காவும் சரின்னுட்டா. இங்க ஒரு கிலோமீட்டர்ல மின் தகனம் இருக்கு. அங்க போய் ஆக வேண்டிய காரியங்களையெல்லாம் செய்திடலாம்னு தெரிஞ்சவங்க சொன்னாங்க.”
“அதுக்குன்னு வழக்கத்த எப்படி மாத்தறது?” என்றார் மாமா.
பக்கத்திலிருந்த ஒருவர், “ஆஸ்பத்திரியில இருந்த உடம்புதானே. அதான் சரவணன் இப்படி முடிவெடுத்திருக்கான்,” என்றார்.
தாய் மாமன் சிறிது யோசித்துவிட்டு, “சரி, அப்போ நம்மெல்லாரும் அந்த தகனம் செய்யும் இடத்துக்குப் போகணுமில்ல?” என்றார்.
“ஆமாம் தாத்தா. செய்யும் முன்னர் நம்ம வழக்கப்படி செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுவிடாம செய்திடலாம்,” என்றனர் சரவணனும் கலாவும்.
“சரிம்மா, அப்படியே பண்ணுங்க.”
“தண்ணி ஊத்துறது, நெய்ப் பந்தம், கோடி சாத்துறது எல்லாம் நம்ம வீட்டுலேயே செய்திடலாம்,” என்றான் சரவணன்.
“சரி. நேரம் ஆகுது. செய்ய வேண்டிய காரியத்த ஆரம்பிங்க,” என்றார் மாமா.
“எப்பா, ஒரு நாலு பேரு வாங்க. தங்கச்சிய தூக்கிட்டு கீழே கொண்டுவாங்க. இதுக்கப்புறம்தான் தண்ணி ஊத்துறது தொடங்கி எல்லாம் செய்யணும். நகருங்க, வழி விடுங்க.”
இவர்கள் அனைவரும் பேசினபடி சரவணனின் அம்மாவை மின் தகனத்தில் வைத்து எரியூட்டிவிட்டு வீடு திரும்பினர். தகனத்திற்குப் போய்வந்தவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டவுடன், ஒவ்வொருவராக தங்கள் கால்களை அலம்பிவிட்டு வீட்டினுள் நுழைந்தனர்.
சரவணன், கலா குடும்பத்தினர், உறவுக்காரர்கள் எல்லோரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். அடுத்து என்ன செய்யலாம், அம்மாவின் அஸ்தியை எப்போது வாங்குவது, அதை எங்கு கரைப்பது, கருமாதி, கறி விருந்து, கருமாதி பத்திரிக்கை அடிப்பதிலிருந்து கறிசோறு போடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாகப் பேசி முடிவெடுத்தனர்.
அப்போது உறவுக்காரர் ஒருவர், “ஏம்பா, அம்மா ஏதாவது எழுதிவச்சுட்டு போயிருக்காங்களா? உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது தெரியுமா?” என்றார்.
“என்ன மாமா, பெரிய சொத்து? இந்த வீடுதான். அப்புறம் கொஞ்சம் நகைங்க இருக்கு.”
“வேற ஏதாவது நிலம் வாங்கி வச்சுருக்காங்களா? இல்ல உங்க அப்பாரு அதைப் பத்தி உங்க அம்மாவுக்கு ஏதாவது சொல்லீட்டு போயிருந்தாரா?”
கலா சொன்னாள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல. சரவணன் சொன்ன மாதிரி இந்த வீடு, அப்புறம் கொஞ்சம் நகை மட்டும்தான்,” என்றாள்.
உறவுக்காரர்ல ஒருவர், “அண்ணா, ராக்கம்மாவுக்கு உங்க வீட்டிலிருந்து சேர வேண்டிய பங்கும் இருக்குல,” என்றார்.
ராக்கம்மாவின் மாமா, “ஆமாம்மப்பா. அவளோட கூடப் பொறந்தவங்களுக்கு கொடுத்தது போக, அவளுக்குன்னு அரை கிரவுண்டு நிலம் வெங்கமேடு பக்கத்துல இருக்கு. அதை இப்ப உங்க ரெண்டு பேருல யாருக்கு? எழுதச் சொல்றது?” என்றார்.

சரவணன் அமைதியாக இருந்தான். உடனே கலா, “மாமா, தம்பிக்கு ஆட்சேபனை இல்லேனா, நான் அதை எடுத்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு சரவணனைப் பார்த்தாள்.
“என்ன சரவணா, சொல்லுற?”
அவன் கோகிலாவைப் பார்த்தான். அவளோ, “சரிங்க, அப்ப கலா அக்கா வேணும்னா எடுத்துக்கிட்டும்,” என்றாள்.
“அதான் உன் சம்சாரமே சொல்லீட்டாளோ. புறவு என்னவாம்?” என்றார் ஒருவர்.
சரவணனும் “சரி” என்றான். கலாவின் முகத்தில் ஒரு பளீர் ஒளி தெரிந்தது. துக்க வீடு என்பதால் அதை உடனே மறைத்துக்கொண்டாள்.
“சரிம்மா, அப்போ இந்த வீட்டை சரவணனுக்குக் கொடுத்திடலாமுல்ல,” என்றார் உறவுக்காரர்ல ஒருவர்.
அதற்கு கலா, “ஏன் சித்தப்பா, அம்மா சொத்துல புள்ளைகளுக்குப் பங்கு கிடையாதா?” என்றாள்.
சித்தப்பா உடனே, “எம்மா, அதான் நீ அம்மாவோட பூர்விக நிலத்தை வாங்கிட்டியே. அப்புறம் இதுலயும் பங்கு கேட்டா எப்படி? உன் தம்பிக்கும் ஏதும் வேண்டாமா? அவனும் உங்க அம்மா வயித்துல உனக்கு அப்புறம் பொறந்தவன்தானே,” என்றார்.
“இல்ல சித்தப்பா, அம்மா சொத்துன்னு ஏதாவது இருக்கணுமுல்ல. அதான் சொன்னேன்,” என்றாள் கலா.
கூட்டத்தில் இருந்த அனைவரும் கலாவையே பார்த்தனர்.
ராக்கம்மாவின் மாமா, “ஏண்டிமா கலா, இந்த வீட்டிலயும் உனக்கு பங்கு வேணும்னா, அந்த பூர்விக நிலத்தை ரெண்டாப் பிரிச்சு எழுதச் சொல்லலாமா?” என்றார்.
கலாவின் வீட்டுக்காரர் கலாவிடம், “கலா, நிலத்தை யாராவது ஒருவர் பெயருல இருக்கட்டும். ரெண்டு பேரு பெயருல வேண்டாம். பின்னாடி ஏதாவது அவசரம், ஆத்திரம்னா ரெண்டு பேரோட கையொப்பம் போட்டாத்தான் விற்க முடியும். என்ன, நான் சொல்லுறது?” என்றார்.
“உனக்கு வேணும்னா மச்சாங்கிட்ட சொல்லிட்டு நீயே எடுத்துக்கோ. இல்ல, வேண்டாம்னா மச்சானிடம் கொடுத்திடு,” என்றார்.
கலா என்னச் சொல்லுவது என்று அறியாமல் சிறிது தயங்கி, “சரி, நானே அந்த நிலத்தை எடுத்துக்கிறேன்,” என்றாள்.
“அப்புறம் சரவணா, நீ இந்த வீட்டை வச்சிக்கோ. ஒரு நல்ல நாளா பாத்து, அந்த நிலத்தையும் இந்த வீட்டையும் அவுங்க அவுங்க பேருக்கு மாத்தி எழுதிடலாம்,” என்றார் ராக்கம்மாவின் மாமா. கூட்டத்தில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
அப்போது ஒருவர், “சரி, வீடு, நிலம் முடிஞ்சுடுச்சு. இப்ப நகை எவ்வளவு இருக்கு?” என்றார்.
“சுமார் நாற்பத்திஐந்து சவரன் இருக்குமுங்க,” என்றான் சரவணன்.
“அப்படின்னா இன்னைக்கு மதிப்பு பிரகாரம் சுமார் நாற்பத்திஐந்து லட்சம் பெறுமே.”
“ஏம்மா கலா, சரவணா, இதுல எது உனக்கு வேணும்னு யோசிச்சு வச்சிருக்கீங்களா?” என்றார்.
“அண்ணா, அது வந்து…” என்று சரவணன் இழுக்கையில்,
கலா நடுவில் புகுந்து, “கல்லு வச்ச நகையெல்லாம் ரொம்ப பழசா இருக்கு. எனக்கு ரெண்டு பொட்டப் பிள்ளைங்கதான். அதனால அந்த கல்லு வச்ச நகையெல்லாத்தையும் சரவணனுக்குக் கொடுத்துட்டு, மத்த நகைகளை எனக்குக் கொடுத்தானா நல்லா இருக்கும்,” என்றாள்.
கோகிலா மெதுவா சரவணனின் கையைக் கிள்ளினாள்.
“என்னங்க, அக்கா கேட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்க ஒண்ணும் பேசாம இருந்தா எப்படி?” என்றாள்.
“அவுங்க பாட்டுக்கு கல்லு வச்ச நகையை எல்லாம் நம் தலையில கட்டிட்டா என்ன செய்ய? நகைக் கடையில இந்த கல்லுக்குப் மதிப்பு கிடையாது. கல்லை கழட்டித்தான் விலை நிர்ணயம் செய்வாங்க,” என்றான்.
சரவணன் அவளைப் பார்த்தான். அவள் சொன்னது சரி என்று மனதில் படவே பேசாமல் இருந்தான்.
சில மணித்துளிகள் கழித்து அவன், “கலா அக்காவுக்கு ரெண்டு பொட்டப் புள்ளைங்கன்னு நமக்குத் தெரியுமே. அவுங்களை நாங்க விட்டுடுவோமா? தாய் மாமன் முறையில செய்ய வேண்டியதெல்லாம் கண்டிப்பா செய்வோம். ஆனா இந்த கல்லு வச்ச நகையெல்லாம் நம்ம நினைக்கிற மாதிரி விலைக்கு போகாது. கல்லை கழட்டித்தான் விலையை நிர்ணயம் செய்வாங்க,” என்றான்.
“ஏன் புள்ள கலா, அவன் சொல்லுறதுலயும் நியாயம் இருக்குல்ல. பண்ண வேண்டிய உரிமையெல்லாம் ஒண்ணுவிடாம பண்ணுவேன்னு சொல்றான். அப்புறம் நீயும் பிடிவாதமா இருந்தா எப்படி?” என்றார்.
கலாவின் உள்மனம் ஏற்கவில்லை என்றாலும், எல்லோரும் ஆமோதித்ததால், “சரி, நாங்க கல்லு வச்ச நகையை சரி பாதியா பிரிச்சுக்கிறோம்,” என்றாள்.
“அவ்வளவுதான். எல்லாம் சுமூகமா முடிஞ்சுடுச்சு. இப்ப இரவு சாப்பாட்டைப் பாருங்க. விடிஞ்சதும் அவுங்க அவுங்க பொழப்பைப் பார்க்கப் போகணுமுல்ல. காரியத்துக்கு எல்லாரும் வந்துடுங்க. முறைய சரியா செய்யணும்,” என்று அவர் பெரியதனமாகச் சொல்ல, அனைவரும் தலையசைத்தனர்.
சரவணனுக்கும் கலாவுக்கும், உறவினர்களுக்கும் எல்லாம் சுமுகமாக முடிந்தது. ஆனால் அம்மா இல்லாத அந்த வீட்டில் இனி ஒரு பெரிய வெற்றிடமே நிலவியது. அந்த வெற்றிடத்தை, இனி அம்மாவின் நினைவுகளால் மட்டுமே அவர்கள் இருவரும் நிரப்ப முடியும்.

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

