மூலம் : முகுந்தன்

 தமிழில்: தி.இரா.மீனா

கல்லூரி வளாகத்தை விட்டுப் புறப்பட்டு வீட்டுக்குப் போகும் வழியிலான பஸ் ஸ்டாப்பில் சுரேஷ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ராதாவிற்குச் சந்தோஷமாக இருந்தது. நேற்று மாலையில்தான் காற்றின் வேகத்தில் உப்புத் தண்ணீர் தெறிக்க, சிப்பிகள் கலந்து கிடந்த கடற்கரை மண்ணில், ஒரு மணி நேரம் நடந்து கழித்திருந்தனர். இவ்வளவு சீக்கிரம் அவனைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவேயில்லை. தெருவைக் கடந்து அவனை நோக்கி நடந்தாள். தொலைவில் எதையோ வெறித்தவாறு நின்றபடி சுரேஷ் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். திட்டமிடப்படாத அந்தச் சந்திப்பு அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும், வியப்பையும் தருமென்று நினைத்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுக்கு முன்னால் போய் அவள் நின்ற போதும், அவளை கவனிக்காமல் வெறிப்பைத் தொடர்ந்தவனாக நின்றிருந்தான். அவள் இன்னும் அருகில் போய் நின்றாள். அவர்களின் தோள்கள் உரசிக் கொண்டன. வாய் முழுவதும் நிறைந்திருந்த புகையை வெளியே விட்டபடி அவன் நேரடியாக அவளைப் பார்த்தான். சிறிது நகர்ந்து போய் சிகரெட்டை இன்னொரு முறை இழுத்தான். அவளைப் பார்த்ததிலான  ஒரு பொட்டு சந்தோஷமோ, வியப்போ அவன் முகத்தில் தெரியவில்லை.

“சுரேஷ்..”

அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.

“சுரேஷ். எங்கே போகிறீர்கள்?”

எதுவுமே புரியாதது போல அவளைப் பார்த்தான்.மார்போடு அணைத்திருந்த புத்தகங்களிலிருந்து ஒரு பத்திரிக்கையை உருவி, “இங்கே பாருங்கள், ’குறுஞ்செய்தி ’உள்ளே இருக்கிறது.” என்றாள். பின் பத்திரிக்கையைப் பிரித்து, சாமுவேல் பெக்கட்டின் கவிதை பிரசுரமாகியிருந்த பக்கத்தைத் திறந்து அவனிடம் நீட்டினாள். அவள் முகத்திலிருந்த தன் பார்வையை விலக்கிப் பத்திரிக்கையைப் பார்த்தான்.

“நீங்கள் முதலில் படியுங்கள்., அப்புறம் நான் படிக்கிறேன்.” சொல்லி விட்டு அவனிடம் நீட்டினாள்.

கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு காலணியால் தேய்த்து அணைத்து விட்டு, “பெண்ணே ,நீ யார்?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு அவள் பெரிதாகச் சிரித்தாள். கூட்டம் நிறைந்திருக்கிற பஸ்–ஸ்டாப்பில் தாங்கள் நின்றிருக்கிறோம் என்பதை மறந்தவளாய், “இதை எடுத்துக் கொண்டு போய் படியுங்கள்.சனிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வரும்போது திருப்பித் தாருங்கள்.”

“சனிக்கிழமையா ?உங்கள் வீடா?”

“சனிக்கிழமை டின்னர் எங்கள் வீட்டில்தானே? ஞாபகமிருக்கிறதா?”

“நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை…”

“சரி, போதும் இந்த விளையாட்டு.”

அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை மறைந்தது.

நேரடியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு, “ இங்கே பாருங்கள், நீங்கள் என்னோடு விளையாடுகிறீர்களா என்ன? நான் இதற்கு முன் உங்களைப் பார்த்ததேயில்லை…”

அவன் என்ன சொல்கிறானென்று அவளுக்குப் புரியவில்லை. அவனுடைய அந்தப் போக்கு அவளுக்கு வருத்தம் தந்தது.

“நான் ஒன்றும் விளையாடவில்லை. நீங்கள்தான்.” அவள் முகம் வாடிப் போனது.

“நீங்கள் என்னை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைக்கும் ஆளில்லை நான்.”

“சுரேஷ். நீங்கள் சுரேஷ்தானே? நான் யாரிடம் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா?”

“நான் சுரேஷ்தான். ஆனால் உங்களை எனக்குத் தெரியாது.”

“ஓ..உங்களுக்கு என்னைத் தெரியாதா? ராதாவை உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாது.” அவன் குரல் உறுதியாக இருந்தது. இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையை வெளியே விட்டான்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் என்னைப் பார்க்க என் கல்லூரிக்கு வரவில்லையா? நேற்று நாமிருவரும் சேர்ந்து கடற்கரைக்குப் போகவில்லையா?”

”இல்லை. நான் யாரையும் பார்ப்பதற்குக் கல்லூரிக்குப் போகவில்லை. யாருடனும் கடற்கரைக்கும் போகவில்லை.”

அவள் முகம் வெளுத்துப் போனது.

“தயவு செய்து போய் விடுங்கள். எல்லோரும் நம்மை வெறித்துப் பார்ப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்றான்.

அவன் அவளை விட்டு நகர்ந்தான். பஸ் வந்து விட, சிகரெட்டைத் தூக்கி எறிந்து விட்டு, பஸ்ஸூக்குள் ஏறினான். பஸ் தெருவைக் கடந்து மறைந்தது. பத்திரிக்கையைப் புத்தகங்களுக்கு இடையில் சொருகி வைத்துக் கொண்டு, தலையைக் தொங்கப் போட்டபடி நடந்தாள். நான் வீட்டிற்குப் போய் விட்டால் போதும், எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தாள்.

மெயின் சாலையைக் கடந்து, செம்மண் பாதை வழியாகத் தன் வீட்டை நோக்கி ்நடந்தாள். வழியிலிருந்த பாஸ்கரனின் தேநீர்க் கடையைக் கடந்த போது, பாஸ்கரன் அவளை நிமிர்ந்து பார்த்தார். தேநீருக்காகக் காத்திருந்த கண்ணன் மாஸ்டரிடம் “யார் இந்தப் பெண் “ என்று கேட்டார்.

மாஸ்டர் கையை விரித்தார்.

பாஸ்கரன் கடைக்கு மிக அருகில்தான் அவர்கள் வீடு. அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்த அப்பா வழக்கம் போல முற்றத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அவள் முற்றத்தை அடைந்த போது, கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, தலையைத் தூக்கி அவளை நேராகப் பார்த்தார். அவள் குனிந்தபடி வராந்தாவில் ஏறினாள்.

“உம்…யார் நீங்கள்? யாரென்று தெரியவில்லையே..” கண்ணாடியைக் கையில் எடுத்தபடி சொன்னார்.

நெஞ்சு பதற அவள் உறைந்து நின்றாள்.

“எங்கிருந்து வருகிறீர்கள்? உட்காருங்கள்…. மாதவி!…”

“அப்பா!” அவள் குரல் நடுங்கியது.

“அப்பா!”

அப்பா நாற்காலியிலிருந்து எழுந்து, தன் வேட்டியைச் சரி செய்து கொண்டு அவளை நோக்கி வந்தார்.

“நீ யார் பெண்ணே ? எங்கிருந்து வருகிறாய்?”

என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பத்தோடு அப்பாவின் முகத்தை வெறித்தபடி நின்றிருந்தாள்.

“மாதவி..மாதவி….”கதவருகே போய் நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தார். குளித்து, உடை மாற்றிக் கொண்டு, நெற்றியில் சந்தனக் கீற்றோடு அம்மா வெளியில் வந்தாள்.

அப்பா அம்மாவினருகே போய் மிக மெல்லிய குரலில்,“யாரோ ஒரு பெண்…என் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. ஏதோ நடந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை…”என்று சொன்னார்.

“எங்கிருந்து வருகிறாள் என்று சொல்லவில்லையா?’

“அவள் அதைச் சொல்ல வேண்டாமா? பேசவேயில்லை என்றால் எனக்கு எப்படித் தெரியும்?”

“பாவம், நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண்ணாகத் தெரிகிறாள்.” அவளைத் தலையிலிருந்து கால் வரை பார்த்து விட்டு அம்மா சொன்னாள்.

“பெண்ணே.. இங்கே..இங்கே உட்கார்.” அப்பா ஒரு நாற்காலியைக் காட்டிச் சொல்ல, அவள் சிலையாக நின்றாள்.

அம்மா அவளருகே வந்து தோளைத் தட்டி, நாற்காலி அருகே அழைத்துப் போய் உட்கார வைத்தாள் .புத்தகங்ளைப் பிடித்துக் கொண்டிருந்த கைகள் நடுங்கின.

“உன் பெயரென்ன பெண்ணே? நீ எங்கிருந்து வருகிறாய்?”

“அம்மா!”

“உனக்கு என்ன கஷ்டமென்று சொல். எங்களால் முடிகிற உதவியைச்

செய்வோம்… இல்லையா மாதவி?” அம்மாவைப் பார்த்தபடி அப்பா

கேட்டார்.

அவள் கையிலிருந்த புத்தகங்கள் நழுவி, விழுந்து ,அவள் காலைச் சுற்றி

சிதறின.

“ஏன் என்னிடம் இப்படிப் பேசுகிறீர்கள் அப்பா? எனக்குப் புரியவில்லை…”

“அப்பா ?” அப்பா அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

“நான் உன் அப்பாவா?’

“ஏன் இப்படி என்னை வேதனைப் படுத்துகிறீர்கள்? என்னால் தாங்க

முடியவில்லை.”

“யார் உன்னை வேதனைப்படுத்துவது பெண்ணே?” அம்மாவின் குரலில்

பரிவு தெரிந்தது.

“ஐயோ! உங்கள் இருவருக்கும் என்னைத் தெரியவில்லையா? உங்களுக்கு….எல்லோருக்கும் என்ன ஆயிற்று? என்னால் பொறுக்க முடியவில்லை.. முடியவேயில்லை…”

அவள்.கண்கள் குளமாயின. அப்பாவும்,அம்மாவும் எதுவுமே புரியாமல் அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். நாற்காலியிலிருந்து எழுந்து, உள்ளே போக விரும்பினாள்.. மாடியிலிருந்த தன் அறைக்கு ஓடி ,தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு அழ நினைத்தாள். அவள் நடக்கத் தொடங்கியதும், அம்மா முன்னே வந்து அவளை நிறுத்தினாள்.: “எங்கே போகிறாய்?”

“என் அறையில் போய்ப் படுத்துக் கொள்ள விரும்புகிறேன். என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை!:”

“உன் அறையா?”

“இவளுக்கு ஏதோ மனக்கோளாறு என்று நினைக்கிறேன்.” அப்பாவிடம் அம்மா சொன்னாள்.

“நாம் ஒன்றைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம்.” அப்பா கையைப் பிசைந்தபடி சொன்னார்.

“உங்களுக்குத்தான் ஏதோ ஆகி விட்டது. ஓர் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் நேரில் பார்த்த பிறகும் எப்படித் தங்கள் சொந்த மகளைத் தெரியாமல் போகும்!? ” முகம் அழுகையில் சிவந்தது.

“நீ எங்கள் மகளில்லை.”

“நான் ராதா. என்னைப் .பார்த்த பிறகும் உங்களுக்கு ராதாவைத் தெரியவில்லையா?”

“நீ ராதா இல்லை.”

“நான் ராதாதான்.. ராதா..”

“இல்லை….இல்லை..”

“அம்மா, இந்தப் பதினெட்டு வருடங்களாக நீதானே எனக்குச் சமைத்துப் போட்டிருக்கிறாய்? நீ எப்படி இப்படிப் பேசலாம்.”

அம்மா பதிலெதுவும் பேசாமல் வருத்தத்தோடும், இரக்கத்தோடும் அவளைப் பார்த்தாள்.

“அப்பா, நீங்கள் தானே எனக்கு அரிச்சுவடி கற்றுத் தந்தீர்கள்? தேர்வின் போது தூக்கத்தைத் தியாகம் செய்து நீங்கள் தானே கணக்குப் பாடம் சொல்லித் தந்தீர்கள்? போன ஞாயிற்றுக் கிழமை என்னைச் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போனது நீங்கள் தானே? எப்படி இதையெல்லாம் உங்களால் மறக்க முடிந்தது?’

“அருமை.. எப்படி உன்னால் அற்புதமான தேவதைக் கதைகளைச் சொல்ல முடிகிறது?” அவளுடைய தோள்களைத் தொட்டுக் கொண்டு சிரித்தபடி சொன்னார்.

“தேவதைக் கதைகளா?”

அடக்க முடியாமல் பெருகிய கண்ணீர் முன்னால் நின்று கொண்டிருந்த அம்மாவையும், அப்பாவையும் மறைத்தது.

மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு அப்பா தன் நாற்காலியை  நோக்கிப் போனார்.

“உனக்கு என்ன வேண்டும் ,எங்கிருந்து வருகிறாய் என்பதை தயவு செய்து சொல். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். இந்த விளையாட்டுக்கள் போதும். இப்போதே இருட்டி விட்டது. இன்றிரவு இங்கே தங்கி விட்டு, நாளைக் காலையில் எங்கு போக வேண்டுமோ நீ போகலாம்.”.

“நான் எங்கே போவது ? இதுதான் என் வீடு!.”

“இது உன் வீடில்லை”

“மாதவி, எதுவும் பேச வேண்டாம். அவள் மனம் ஒரு குழப்பமான நிலையிலிருப்பதால்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாள்…”

“இன்றிரவு இங்கு தங்க உனக்கு விருப்பமில்லாவிட்டால் நீ கிளம்பிப் போய் விடலாம். நீ வேறெங்காவது போக விரும்பினால், இருட்டுவதற்கு முன்னால் போய் விடு.” என்று அம்மா சொன்னாள்.

அப்பா செய்தித்தாள் படிக்கத் தொடங்கி விட்டார்.

“நான் எங்கே போவேன் அம்மா? உன்னையும், அப்பாவையும் விட்டால் எனக்கு வேறு யாரைத் தெரியும்?

மேலே பேச முடியாமல் அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அழுது கொண்டே முன் வாசலில் சில நிமிடங்கள் நின்றாள். அப்பா செய்தித்தாளிலிருந்து கண்களை விலக்கவேயில்லை. அம்மா சுவரில் சாய்ந்தபடி அமைதியாக நின்றிருந்தாள். அம்மாவின் வெளிறிய முகத்தில் வருத்தம் தெரிந்தது. அதை உணர்ந்தவளாய் அம்மா உள்ளங்கையால் கண்களைக் துடைத்துக் கொண்டாள். நடுங்கத்துடன் அவள் கால்கள் மெதுவாக இறங்கின; முற்றத்தைக் கடந்து, தெருவிற்குள் காலெடுத்து வைத்து, நடக்கத் தொடங்கினாள். வீடுகளின் ஜன்னல்களில் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு புதிய முகத்தைக் கண்ட உணர்வில் கடவுள் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிறிது நிறுத்தின. தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பறவைகள், அந்தப் புதியவளைக் குனிந்து பார்த்தன. கடல் காற்று வீச்சில் மரங்கள் ஊசலாடின. கடல் கரையோடு மோதியது. பூமியையும், வானத்தையும் இருள் கவ்வியது. பறவைகள், மரங்கள், கடல் காற்று, பூமி, வானம்—எல்லாமே ஒற்றைக் குரலில் பாடின :

      “நீ ராதா இல்லை. உன்னை எங்களுக்குத் தெரியாது.”

                  ————————————————                        நன்றி : The Train That Had Wings ,  University of Michigan Press 2005

[Radha , Just Radha ]

எம்.முகுந்தன் நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளில் தலைமையானவர். மய்யழிப் புழியுடே தீரங்களில், தெய்வத்தின்டே விகுருதிகள், ராவும் பகலும், நிங்கள் உள்ளிட்டவை மிகச் சிறந்த படைப்புகளில் குறிப்பிடத் தக்கவை. வயலார் விருது, சாகித்ய அகாதெமி விருது, முட்டத்து வர்க்கி விருது எழுத்தச்சன் விருது, பிரெஞ்ச் அரசாங்கத்தின் செவாலியர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *