மோனிகா மாறன் 

             அந்த பெரிய ஆலமரத்தின் கிளைகளில் எல்லாம் இளம்பச்சை வண்ண தளிர்களும்,உருண்டை உருண்டையான சிவப்பு பழங்களும் நிறைந்திருக்கின்றன. அதிகாலைப் பனி விலகி வெளிச்சம் பரவுகிறது. சாம்பல் வண்ண அடிமரத்திலும், சருகுகள் படர்ந்திருக்கும் தரையிலும் பனியின் ஈரம் கசகசக்கிறது.மரத்தில் பல்வேறு பறவைகளின் ட்வீட் கிளிக் கீச் கூகூ கெக் கெக் ஒலிகள் சேர்ந்து கேட்கிறது.சருகுகளில் ஓணான்கள் தலைதூக்கிப் பார்க்கின்றன. இரண்டு சிறிய அணில்கள் கிளைகளில் ஓடுகின்றன.

                இதையெல்லாம் அச்சத்துடனும் ஆச்சர்யத்துடனும் பாரக்கிறாள் மீனா. அவள் இந்த ஜவ்வாது மலைக்கு ஆசிரியப் பணி நியமனம் பெற்று வரும் வரையில் அவளுக்கு மலையைப் பற்றி எதுவும் தெரியாது. கடலூரின் ஒரு சின்னஞ்சிறு மீனவ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு மலையின் ஒவ்வொரு காட்சியுமே புதுமையாயிருந்தது. எப்பொழுதும்  உப்புக்காத்து வீசும் கடற்புறங்களையும், பொழுதுகளுக்கேற்ப நிறங்கள் மாறும்  பறந்த ஆகாசத்தையும், ததும்பிச் சீறி உறங்கும் கடலையும், மணற்பரப்புகளையும், கருவாட்டு வீச்சத்தையும், கடலில் எழும்பும் விநோத ஒலிகளையும், ஓதங்களையும் உணர்ந்திருந்தவளுக்கு இவ்விடத்தின் பேரமைதி முதலில் பயத்தையே தந்தது. சவ்வாது மலைக்காடுகளின் பனிக்குளிரும்,அடர்ந்த வனங்களும், தேன் வாசம் வீசும் பூக்கள் மலர்ந்த வெளிகளும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கிறது.

 அன்று அவள் ஏழாம் வகுப்பில் நுழைகையில் பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக நின்னுக்கிட்டிருந்தாங்க. இவள் போய் பார்க்கையில் யூனிபார்மில் ஒரு குழந்தை அழுதுக்கிட்டு இருக்கா. கூடவே ஒரு வயசான அம்மா.

     “ டீச்சரம்மா இஸ்கோலுக்கு வர மாட்டேன்னு அடம் பண்ணுது. என் பின்னாடியே ஓடியாருது பாரு யம்மா” 

    “நீங்க யாரும்மா?

      “அதுக்கு அம்மையும் அப்பனும் இல்ல. நான் அதுக்கு ஆசா”என்கிறாள் அந்த பாட்டி.

   “ சரி நீங்க போங்க” சொல்லிவிட்டு அந்த பிள்ளையை பாக்குறா. சுருண்ட மயிரும் பெரிய கண்களுமாய் கண்ணீருரோட சின்ன கன்னுக்குட்டி போல பார்க்கும் அந்தக் குழந்தையின் முகம் இவளை என்னமோ செய்யுது. எதுவும் பேசாம மற்ற பிள்ளைகளை அவங்கவங்க எடத்துக்கு போகச் சொல்றா.

       ஆங்கில பாடத்தை நடத்த தொடங்கறா. டீச்சர் எதாவது சொல்வாங்க என எதிர்பார்த்த அந்தக் குழந்தை இவளையே பார்க்கிறாள்.

       பள்ளி உதவியாளர் ஆண்டனி தாத்தா சர்குலர் நோட்டைக் கொண்டு வருகிறார்.

    நாளை மறுநாள் இரத்னகிரி, வேலூருக்கு ஒருநாள் சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் தரலாம். இருநூறு ரூபாய் கட்டணம் எனத் தலைமையாசிரியர் எழுதியிருந்தார். வகுப்பில் சொன்னவுடன் மாணவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கிளாஸ் லீடரிடம் பொறுப்புகளைச் சொல்லிவிட்டு வெளியே வருகிறாள் மீனா டீச்சர். காலையில் அழுது கொண்டிருந்த பிள்ளை இவளை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்.

       மறுநாள் வகுப்பில் சுற்றுலா வரும் பிள்ளைகளின் லிஸ்டை வாங்கிட்டு வரப்  போனாள்.

  “ மிஸ் துளசி மட்டும் வரல. மத்த எல்லாரும் பேர் குடுத்த இருக்காங்க” லீடர் அழகுத்தம்பி சொல்றான்.

     “ ஏன் அந்த பொண்ணு வரலை? யார் அது?”

    அமைதியா எழுந்து நிக்கறா அவ. நேத்து வகுப்புக்கு வர மாட்டேன்னு சொன்ன அதே பிள்ளை தான்.

   “’மிஸ் அவங்க ஆசாகிட்ட காசில்லை. அதான் வரலை” வேறொரு பெண் சொல்லுது. தலையை குனிஞ்சிக்கிட்டு நிக்கறா துளசி.

  பக்கத்துல வரச்சொல்லி கூப்பிடறா மீனா டீச்சர். தயங்கிக்கிட்டே வரா துளசி. ஏழாம் வகுப்புக்கு உயரம் குறைவு தான். நல்லகருப்பில் வெடவெடன்னு ஒல்லியா இருக்கா. தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். ஒரு சின்ன ஆட்டுக்குட்டி போலத் தெரியாறா. தாய் தகப்பனற்ற பிள்ளைகள் ஏதோ ஒரு கோணத்தில் அந்த இன்மையை வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

   “ நான் உனக்கு பணம் கட்டுறேன். நீயும் டூருக்கு வா”

  “இல்லை மிஸ் வேணாம். எனக்கு இஸ்கோல் வரவே புடிக்கல. படிக்க எனுக்கு நெம்ப காசாரமாக் கீது. நான் எங்க ஆசா கூடவே கொல்லி வேல பார்த்துக்குனு வூட்டுல கீறேன்.   நா படிச்சு  இன்னா பண்ணப் போறேன்? பத்தாவது தாண்டுனா எங்க சீயான் கட்டிக் குடுத்துடும்.மிஸ் என்ன வுட்டுடுங்க”

.  மீனா டீச்சரால் வயதுக்கு மீறிய அவள் கவலைகளைத் தாள இயலவில்லை. இரக்கப்பட்டு ஒரு வார்த்தை சொன்னாலும் அந்தக் குழந்தை உடைந்து விடுவாள்.

     “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீ நாளைக்கு டூருக்கு வா”

.    டீச்சரின் குரலில் இருந்த அழுத்ததத்தினால் தலையசைக்கிறாள் துளசி.

      மலைப்பாதைகளில் பேருந்து இறங்குகிறது. இருபுறங்களிலும் பசுங்காடுகள் ஓடுகின்றன. சுற்றுலாக்கள் தரும் மகிழ்வு இப்படி கூடி பயணிப்பது தானே. ஆடலும் பாடல்களுமாய் வாத்தியார்களும் பிள்ளைகளும் ஆர்ப்பரிக்கிறார்கள். துளசியின் முகத்தை பார்க்கிறாள் மீனா டீச்சர். அதில் எந்தச் சலனமும் இல்லை.

      இரத்னகிரி மலைக் கோவிலைப் பார்த்துவிட்டு வேலூர் கோட்டைக்கு போறாங்க. மிகப்பெரிய அகழியும், நீண்ட கருங்கல் மதில்களும், பெரிய கோட்டைச்சுவரும், மேலே தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரமும் மீனாவைத் திகைக்க வைக்கின்றன. அந்தக் கருங்கற்கள் அவளைக் காலங்களைத் தாண்டி அழைத்துச் செல்கின்றன. காண்டாமணிகளும், நகராக்களும் ஒலிக்க முகபடாம் தரித்த யானைகளும் குதிரைகளும் வாளேந்திக் குடுமி வைத்த வீரர்களும், கூந்தலில் மலர்கள் சூடி பெரிய கலன்களை இடையில் ஏந்திவரும் மகளிரும் அவள் கண்முன்னே தெரிகிறார்கள்.

    பெரிய பெரிய ஆலமரங்களும், ஆங்கிலிக்கன் சர்ச்சும், மொகலாய கட்டிடக்கலையின் வளைவுகள் கொண்ட மசூதியும், அற்புதமான சிற்பங்களும் , கல் தூண்களும் நிறைந்த கல்யாண மண்டபமும்,பெரிய பிரகாரங்களுடன் கூடிய ஜலம் கண்ட ஈஸ்வரனையும் காண்கையில் மனம் பூரித்தது.பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கோட்டையின் எதிர்ப் புறமாக அமைந்துள்ள சர்ச்சுக்கு போகிறார்கள். 

      பெரிய வெண்மைநிற ஊசிக் கோபுரமும் அதன் மேலிருந்த  வெண்கல மணியும் ஆலயத்தின் புறங்களில் இருந்த ஐரோப்பிய கால கல்லறைகளுமாய் அவ்விடமே ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கிலேய குடியிருப்பு போலத் தெரிகிறது.

    பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அந்தக் கல்லறைகளின் சுவர்களில் உள்ள பெயர்களை படிக்கிறாள் மீனா. இரண்டாம் உலகப்போர், கோட்டையில் நடந்த சிப்பாய் எழுச்சி போன்ற போர்களில் இறந்த ஐரோப்பிய வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிறு குழந்தைகள் பலரின் பெயர்கள் இருக்கின்றன.

    இவங்க படிச்சிட்டு இருக்கையில்  

  “வெல்கம் சில்ட்ரன்” என்ற குரல் கேட்டு திரும்பினால் ஒரு வயதான அம்மா புன்னகைத்தாள். தலை முழுக்க வெளுத்து கண்ணாடி அணிந்து அழகாக இருக்கிறாள்.

   “ஐயம் நான்சி” என்று பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த சாக்லெட்டுகளும் அழகான சின்ன பைபிள் வசன அட்டைகளையும் தருகிறாள்.

    இந்த மத்திய ஆலயத்தை பத்தி உங்களுக்கு சொல்லட்டுமா என்கிறாள். எல்லாரும் அந்த மரத்தடியில் அவளைச் சுற்றி அமர்கிறார்கள்.

     “ நீங்கள் எல்லாம் மலைமக்கள் இல்லையா?. என் பேர் நான்சி.எங்க தாத்தா எபனேசர் தான் என்னை வந்தாரு. அவரோட தாத்தா நெல்சன்மாணிக்கம்பிள்ளை இந்த வேலூர் சென்ட்ரல் சர்ச்சுல அநாதப் பிள்ளையா வளந்தவரு. அந்தக் காலத்துல யாருக்கும் படிப்பறிவெல்லாம் கிடையாது. ஒரு வேளை சோத்துக்கு ஜனங்க நாள் முழுக்க வேல செய்வாங்க. அதோ தெரியுதே இந்தக் கோட்டையை பாத்து நீங்கல்லாம் ஆச்சரியப் படறீங்க.இநதக் கோட்டையை பெரிய பெரிய ராசாக்கள் எல்லாம் ஆண்டாங்க.தெலுங்கு மன்னன் முஸ்லிம் மன்னன், இங்கிலீஷ் தொரைமாருங்க எல்லாரும் இருந்தாங்க.யார்கிட்ட அதிகாரம் இருநதுச்சோ அவங்க கையில இந்தக்கோட்டை இருந்தது. இப்ப அவங்கெல்லாம் எங்க? அது தான் உலகம். இந்த சர்ச்சே ஒரு பெரிய கல்லறைத்தோட்டத்துக்காக உருவானது தான். இங்க இருக்கற வெண்கல மணி கோட்டை கோயிலில் இருந்து எடுத்துட்டு வைத்தது தான்.

    எங்க தாத்தா ஒரு நெசக்கதை சொல்வாரு. மகளே நான்சி இந்த வேலூருக்கு ஒரு சின்னப்பெண் அமெரிக்காவுல இருந்து வந்துச்சி. இந்தியாவுல ஒருநாள் அவங்க பெத்தவங்களோட இருக்கையில் மகப்பேறு பாக்க பெண் மருத்துவர் இல்லாம ஒரே இரவில் மூன்று கர்ப்பவதிகள் செத்துப் போனதை பாத்துட்டு மனம் இரங்கி நாம் எதாவது செய்யனும்னு நெனச்சது. ஏன் அப்படி தோணுச்சி?.அது தேவதை மனசு. உலகத்துல எத்தனை சாவு நடக்குது.எல்லாருமா அதை நெனைக்கறாங்க. அந்தப் பொண்ணு நெனச்சி பாத்து கடவுள் பேரால இங்க ஒரு பெண்கள் நர்ஸ் பயிற்சி தொடங்கிச்சி. அது இந்த சரச்சுக்கு கொஞ்சந்தள்ளி ஷெல் மருத்துவ மையமாக இன்னிக்கும் இருக்கு. அந்தம்மா எல்லாருக்கும் மருத்துவமும் பெண்பிள்ளைங்களுக்கு கல்வியும் தரனும்னு நெனச்சதுல உருவானது தான் இங்க இருக்கற பெரிய கிறித்தவ மருதுவமனை. இந்தியாவில் பெண்களுக்கு தொடங்கப்பட்ட முதல் செவிலியர் பயிற்சி நிறுவனம் இது தான். அவங்களோட அர்ப்பணிப்பை தெரிஞ்சு தான் மகாத்மா காந்தி வந்தார். காந்தி நடந்து வந்த சாலை தான் இன்னிக்கும் வேலூர்ல இருக்கற காந்திரோட்.அப்ப சென்னை மாகாண கவர்னர் பெண்டலண்ட் வந்து மருத்துவக் கல்லூரியைத் திறந்து வச்சாரு.இதுக்கெல்லாம் காரணம் ஒரு பெண்தான். எங்க தாத்தா சொல்வாரு சோறில்லாம துணியில்லாம திரிஞ்ச எத்தனையோ பேருக்கு படிப்பு தான் வாழ்க்கை குடுத்துச்சி.நீங்க எல்லாருமே படிச்சு உங்கள் சுத்தி இருக்கவங்களுக்கு உதவுங்க” நான்சியம்மா சொல்லச் சொல்ல பிள்ளைகள் அப்படியே ஆச்சர்யமா பாக்கறாங்க.

      ஓரமா உக்காந்திருந்த துளசி மீனா டீச்சரை கண்கள் மலரப் பார்க்கிறாள். மீனா டீச்சருக்கு மனம் பொங்குகிறது.

   “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

   ஆலயம் பதினாயிரம் நாட்டல்

  அன்னவினும் புண்ணியங்கோடி

  ஆங்கோர் ஏழைக்கு ஏழுத்தறிவித்தல்.

 000

வட்டார வழக்கு சொற்கள் 

ஆசா_ ஆயா

சீயான்- தாத்தா

நெம்ப _நிறைய

காசாரம்_ தொல்லை

+++

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *