– சு. ராம்தாஸ்காந்தி
அறந்தாங்கி சென்று இறங்கியதும் பேருந்து நிலையக் கழிவறைக்குச் சென்று பைக்குள் வைத்திருந்த ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டேன். துவைத்து நேர்த்தியாக இஸ்திரி செய்யப்பட்டிருந்த உடைகளிலிருந்து எழுந்த மெல்லிய மணம் என் மனநிலைக்கு உற்சாகமூட்டியது. பாத்ரூம் பேசினில் கழுவிய முகத்தை அழுந்தத் துடைத்து தலைசீவி வெளியே வந்த என் தோற்றத்தைப் பார்த்த பேருந்திற்குக் காத்திருக்கும் பெண்கள் சிலரின் முகத்தில் நேர்மறையான அறிகுறிகள் தென்பட்டன.
நித்யா சொன்ன ஊர் நினைவுக்கு வரவும்,
“கட்டுமாவடி போக எந்த பஸ் ஏறணும்?“ என்று கேட்டேன்.
“நாங்களும் அதுக்குத்தான் உக்காந்திருக்கம்“ என்றனர் கோரஸாக.
’நல்லதாப் போச்சு. ஸ்டாப் தெரியாம அல்லாட வேண்டியதில்ல. இவங்களோடயே போய் எறங்கிக்கலாம்.’ என்ற எண்ணத்தில் அங்கேயே நின்றுவிட்டேன். நகரிலிருக்கும் தொழிற்சாலைகளிலோ கடைகளிலோ வேலையை முடித்துவிட்டு இரவு சொந்த ஊர் செல்லும் பேருந்திற்குக் காத்திருக்கும் பெண்கள். முகத்தில் களைப்பும் கைகளில் சாப்பாட்டுக் கூடையும் எல்லோரிடமும் தென்பட்டது. மாறி மாறி அவர்களின் முகம் பார்க்கும் சங்கடம் தவிர்க்க அருகேயிருந்த டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டேன். பேருந்து வர இன்னும் நேரமாகுமோ என்ற பயத்தில் கறம்பக்குடியில் வசித்த கவிஞர் ஒருவருக்கு அழைத்துப் பயணத்தின் நோக்கத்தை விளக்கி வழிதடம் விசாரித்துக் கொண்டிருந்தேன். என் அலைபேசி உரையாடல் இலக்கியத்தில் நிலைகொண்டிருந்தபோது பயணிகள் தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு ’விருட்டென்று’ எழுந்தோடும் ஓசை கேட்டுத் திரும்பினேன். ஒளிரும் மரப்பலகையில் ’கட்டுமாவடி’ என்கிற ஊர்ப்பெயரைத் தாங்கியபடி எதிரே வந்து கொண்டிருந்தது ஒரு அரசுப்பேருந்து. முன்புறப் படிக்கட்டின் இடப்புற வரிசையில் முதல் இருக்கையின் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன். மெல்லப் பேருந்து நகரத்தொடங்கியது. கண்மாய்களும் கருவேல மரங்களும் ஜன்னலுக்கு வெளியே கடந்து மறைந்தன. ஒவ்வொருவரும் அவரவர் நிறுத்தத்தில் இறங்கிச் சென்றார்கள். பேருந்து காலியானதும் நடத்துனர் முன்னே வந்து கியர்பாக்ஸ் மீது அமர்ந்து கொண்டார். டிரைவர் கண்டக்டர் மட்டுமின்றி போக்குவரத்துக் கழகப் பணிமனையில் வேலை செய்வது போலான தோற்றத்தில் காக்கி உடையணிந்த இன்னொரு நபரும் சூழலுக்குள் இருந்தார். காலியாகிவிட்ட முழுப் பேருந்திற்கும் பயணியென நான் ஒருவனே இருந்ததால் அவர்கள் மூவரின் கவனமும் என் பக்கம் திரும்பியது. முதலில் மூக்குக் கண்ணாடி அணிந்த ஓட்டுநர் தான் கேட்டார்.
“நீங்க எங்க போகணுந் தம்பீ? “
“நான் திணையாகுடி போகணும். அதுக்குக் கட்டுமாவடியில எறங்கணும்னு தகவல் சொன்னாங்க“ என்றேன்.
பதிலுக்கு “ எங்கருந்து வரீங்க? அங்க என்ன வேலையாப் போறீங்க? “ என்றார் ஓட்டுநர்.
“நான் ஒரு பத்திரிகையாளன். பழனிலருந்து வரேன். இன்னைக்கு நைட்டு அங்க நடக்குற திருவிழாவைப் பதிவு செய்ய வந்திருக்கேன்.“ என்றேன்.
உடனே ஓட்டுநர் குதூகலமாக “அப்டியா? இந்தப் பஸ்சும் பழனிலருந்து தான் வருது“ என்றார். எனக்கும் ஞாபகம் வந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் இந்த மஃப்சல் பேருந்து மணப்பாறை, புதுக்கோட்டை, அறந்தாங்கி வழி ’மணமேல்குடி’ செல்வதாக போர்டு போட்டுக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கும் உள்ளூர் பேருந்து என்றதும் மனதுக்குள் ஒரு உற்சாகம் பெருகியது.
“திணையாகுடி போகணும்னா நீங்க கண்டிச்சாங்காட்டுல எறங்கிக்குங்க. இவரும் அங்க தான் எறங்குவாரு.“ என்று பணிமனையாளைக் காட்டினார் ஓட்டுநர்.
“கூப்ட்டுப் போக ஆளு யாரும் வராங்களா?“ என்ற ஓட்டுநரின் கேள்விக்கு நான் பதிலேதும் சொல்லாமல் இருந்தபோது தான் பணிமனை ஆள் பேசத்துவங்கினார்.
“ஆட்டோ எதுவும் பேசுவோமா?“ என்ற பணிமனை ஊழியரின் கேள்விக்கு
நான் ஒப்புக்குச் சரி என்று சொன்னாலும் மனம் சட்டைப்பையின் கனத்தை ஆராய்ந்தபடியிருந்தது. பயமாகவும் இருந்தது.
மணி பதினொன்றைத் தாண்டியிருக்கும். பேருந்தின் முகப்புக் கண்ணாடிக்கு வெளியே வனாந்தரமெனப் பரவியிருந்த இருட்டு ஒருவித அச்சத்தைக் கிளர்த்தியது. ஆளு அம்பு தெரியாத ஊரில் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வந்திருப்பது என் முட்டாள்தனத்தை எனக்கே உணர்த்தினாலும் இந்த சாகசப் பயணத்தின் வாயிலாக நான் அடையவிருக்கும் அனுபவத்தைத் தான் நான் பெரிதாகக் கருதினேன்.
ஒருவழியாகப் பதினொன்றரை மணிக்கு ’கண்டிச்சாங்காட்டில்’ பேருந்து நின்றது. நான் ஓட்டுனரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு கீழிறங்கினேன். நிறுத்தத்திற்கு அருகேயிருந்த ஸ்டாண்டில் ஆட்டோக்கள் ஏதுமில்லை. ஓரிருவரை அலைபேசியில் அழைத்துப் பார்த்தார் பணிமனையாள். பதிலில்லை.
“இங்கருந்து தெணயாகுடி ஆறு கிலோமீட்டர் ஆகும். நீங்க நடந்து போக முடியாது.“ என்று கூறி யோசித்தபடியே ஒரு மரக்கடை செட்டப்பிலிருந்த கடையைக் காண்பித்து “நீங்க இங்க இருங்க. நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்“ என்று கூறி அந்தக் கடைக்காரரிடம் சொல்லி என்னை அங்கு அமரவைத்துவிட்டுப் போனார். கடைக்காரன் லைட்டான போதையில் புரோட்டாவைப் பிச்சுப் போட்டு சால்னா வார்த்து விளாசிக் கொண்டிருந்தான். நான் வந்த நோக்கத்தைக் கேட்டுவிட்டு “ஆமாமா.இங்க நிகழ்ச்சி நல்லாருக்கும்“ என்றான்.
திடுமென அரசியல் பேசினான். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியைக் குறித்த தனது நல்லதொரு அபிப்ராயத்தைப் பகிர்ந்தான். அது தர்க்கபூர்வமாக இல்லாமல் பிற்போக்குத்தனமான சுய நம்பிக்கைப் பற்றாக இருந்ததை அவனது சிரிப்பு எனக்கு அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்தது. கடைக்கு எதிரே வந்து நின்ற ஒரு நபரை அழைத்து “யோவ்… ரமத்துல்லா… யோவ்… ரமத்துல்லா நிகழ்ச்சி பாக்கப் போவம் வாய்யா“ என்றான். எதிரே இருந்தவன் “இரு மாமா வந்திடுறேன்“ என்று கூறிக் கிளம்பிவிட்டான். நேரமாகிக் கொண்டிருந்தது. பணிமனையாள் விரைவாக வந்தாரென்றால் ’தேவலை’ என்று தோன்றியது. சிறிது நேரத்திற்குப் பிறகு பக்கத்துச் சந்திலிருந்து ஒரு டூவீலரின் பின்புறம் அமர்ந்து வந்தார் பணிமனையாள். குளித்திருந்த புத்துணர்ச்சியிலும் அவரது முகத்தில் உறக்கச்சடவு தெரிந்தது. என்னைப் பார்த்துப் “போலாமா? “ என்றார். நான் குதூகலமாக எழுந்து மரக்கடைக்காரனிடம் விடைபெற்றுக் கொண்டு டூவீலரின் பின்புறம் இரண்டாவதாக அமர்ந்தேன். மூன்றாவதாக பணிமனையாள் அமர்ந்தார். வண்டி கிளம்பியது. வண்டியை ஓட்டியவன் இளந்தாரி தான் என்றாலும் உடல் மெலிந்து சருமம் சுருங்கி ஒருவித நோய்மையை அவனிடம் உணர முடிந்தது. என்னைப் பற்றி விசாரித்துவிட்டுத் தானும் பிஎட் தான் முடித்திருப்பதாகக் கூறினான். நான் “சரி“ என்றேன். இந்த ஊருக்கு நிகழ்ச்சி பண்ண வருகிறவர்கள் தொடர்ந்து வரும் ஆட்கள் தான் என்றான். அவன் என்ன பேசினாலும் ஈர்க்க முடியாததாக என் கவனம் முழுவதும் நிகழ்விடத்தில் நித்யாவின் மீது சென்று படிந்திருந்தது. ஏதோ யோசனை வந்தவனாக “இங்கருந்து கட்டுமாவடி எவ்ளோ தூரம்? “ என்று கேட்டேன்.
“கட்டுமாவடி கடல் எட்டு கிலோமீட்டர்ண்ணே“ என்றான்.
“என்னது கடலா? “ என்றேன்.
“ஆமண்ணே கடல் தான்“ என்றான்.
மேற்குத் தொடர்ச்சிமலைக் குன்றுகளின் அடிவாரத்தில் மயில்தோகை பொறுக்கித் திரிகிற குறிஞ்சித்திணையின் பிள்ளை இருநூற்று எண்பது கிலோமீட்டர் தாண்டி வந்திருப்பதன் அசட்டுத்தனம் என் சுயம் பற்றிய வெட்கத்தைத் தருவதாக இருந்தது.
இத்தனை உரையாடலுக்கும் தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல மௌனமாக பின்னமர்ந்திருந்தார் பணிமனையாள். வழி நெடுகிலும் சுற்றப்பட்டிருந்த சீரியல் பல்புகளும் தூரத்தில் சன்னமாக ஒலிக்கும் தவிலோசையும் என் இதயத்தில் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தின. சாலையின் இடதுபுறத்தில் தலை திருப்பிப் பார்த்தேன். அவ்வூரின் பெயர்ப்பலகை என் கண்ணில் பட்டது. இந்த ஊரில் தான் தனது நிகழ்ச்சி நடைபெறப் போவதாக ஒரு வாரத்திற்கு முன்பாக நித்யா தனது வாட்சப் ஸ்டேட்டஸில் போட்டிருந்தாள். அந்த நாள் முதல் இணையம் மற்றும் என் தொடர்பில் இருக்கும் நண்பர்களிடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் அந்த உள்ளொடிங்கிய காட்டுக்கிராமம் எங்கேயுள்ளது என்கிற என் தேடுதல் இன்று மாலை பேருந்து ஏறியதில் நிறைவடைந்திருக்கிறது.
என் எண்ணத்தில் சிறுபாம்புக்குட்டியென நெளிந்த அந்த ஊரைத்தான் இப்பொழுது படமெடுத்து நிற்கும் ராட்சத சர்ப்பமாக எதிர் கொள்கிறேன். நான் உள்நுழைவது வெறும் ஒரு ஊருக்குள் அல்ல. மனதின் எண்ண அலைகளால் கட்டப்பட்ட ஒரு கனவுக்குள் வாழ்ந்து பார்ப்பவன் கண் விழிக்கும்போது அதன் பிரம்மாண்டம் தன்னை மிரட்சியூட்டவதாகத் தோற்றம் கொள்ளும் மாயாதீதம். என்னுடல் சிலிர்த்தது. இது வெறும் ஒரு ஆட்டக்காரியைப் போய்ப் பார்க்கும் நிகழ்வு மட்டுமல்ல. இந்தச் சோதனை மாதிரியின் வழியே அகமும் புறமும் என் தலைமேவி நிற்கும் அந்தப் பேராற்றல் என்னுடைய மொத்த வாழ்விற்குமாக வழங்கும் ஒரு செய்தி என்பதை உணர்ந்து கொண்டேன்.
தார்ச்சாலை கடந்து, காட்டுத்தடம் கடந்து கோவில் மேட்டிலிருந்து வயல் பள்ளத்திற்குள் இறங்கியது நாங்கள் சென்ற வண்டி. அறுவடை முடிந்திருந்த நன்செய் நிலத்தை வண்டியை விட்டு ’ஓட்டிப்போட்டு’ நிகழ்ச்சிக்கான களம் அமைத்திருந்தார்கள். மனிதக் காலடிபட்ட வயல்மண் நெகுநெகுவென இளகியிருந்தது. இறுக்கமின்றி புழுதி பறந்தது. தேநீர், திண்பண்டக்கடைகள் ஆங்காங்கே மடக்குக் கட்டில் போட்டு பரப்பப்பட்டிருந்தன. நாங்கள் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு எட்ட நின்றே நிகழ்விடத்தை நோட்டமிட்டோம்.
’நான் அவளைப் பார்த்துவிட்டேன்.’
சுருட்டை முடி, நீண்டிருந்தும் முனை மழுங்கிய வடிவான நாசி, கறுத்துத் தடித்த அகலமான உதடுகள், நீளமான இரட்டைத்தாடை, வலிமை பொருந்திய கனமான தோள்கள், சதைப்பற்று மிகுந்த இறுக்கமான தொடைகள், திண்மை மிகுந்த கரும்பனையொத்த உடல்வாகு, திமிரான பார்வை, உயர்த்திய நெஞ்சு, குதிகாலைத் தூக்கிய பிரத்யேகமான நடை.
“பார்த்துவிட்டேன். அவளேதான்.“
ஸ்டாண்டிங் மைக்கின் முன்பு நின்று பாடிக் கொண்டிருப்பவள் நித்யா தான். உடன் இரண்டு கரகமும் ஒரு பஃபூனும் ஒரு குறவன் வேடதாரியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். புவனா குறத்தி போட்டிருப்பாள் போல. குறவனுக்குத் தக்க பதிலடி கொடுத்து அவளுக்குப் பேசத் தெரியவில்லை. அவளது முதிராத குழந்தைக் குரலில் நையாண்டிப் பேச்சு வாய்கூடவில்லை. சரி வளரும்பிள்ளை தொழில் பழகட்டும் என்று நித்யா தான் குறத்தி போட்டிருக்க வேண்டும். நல்ல சிவந்த நிறத்தில் அறுத்த மாம்பழத்தைப் போன்ற தொடை குலுங்க ஆடிக்கொண்டிருந்தவள் பெயர் ’மாலதி’ என்றார்கள். நான் அவளை அன்று தான் நேரில் பார்த்தேன். லாரியில் லோடேற்றும் பாரக்கயிறு கொண்டு தடுப்பு அமைத்திருந்தார்கள். மையத்தில் நிறைய இடம் விட்டு மிகவும் அகலமாக மைதானம் இருந்ததால் பார்ப்பவர்களுக்கே அது அபத்தமாக இருந்தது.
“இந்த கிரவுண்டு போட்டவங்க யாரோ அவங்க இப்போ இங்க வந்தாகணும்“ என்று அதிகாரத் தொனியில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தாள் நித்யா.
“இவனுங்க வேற. பக்கத்துல போய்ப் பார்க்காம இவ்வளவு எட்டத்துலயே நிக்க வச்சுட்டானுங்களே. நாமளா பக்கத்துல போனா இவன் பொம்பளக் கேசு போலன்னு நெனச்சுருவானுங்களோ “
என்று எனக்குள் நானாக மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது பணிமனையாள் மெல்லிய தூக்கமும் சாந்தமுமான கலவையான முகக்களையில் நின்றிருந்தார்.
“வழக்கமா இந்தக் குரூப்ல ஆடுற இன்னொரு ஆள் இந்த வருஷம் வரலண்ணே“ என்றான் வண்டியோட்டி.
நான் “ம்ம்“ என்பது போல் பதில் பேசிவிட்டு மௌனமாக இருந்தேன். நேரம் போய்க் கொண்டிருந்தது. கூட்டம் நிறைய இருந்ததால் நான் நித்யாவின் அருகில் செல்ல முடியாதோ என்ற தவிப்பும் அதிகாலைக்கு முன்பாகவே நிகழ்ச்சி முடிந்துவிட்டால் எங்கே செல்வது என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஒரு நாற்காலி கிடைக்கவும் அதில் சோர்ந்து அமர்ந்துவிட்டேன். உறக்கம் வந்த சுவடே தென்படவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது தான் வெகுநேரம் தூங்கியிருந்ததை உணர முடிந்தது. திரும்பிப் பார்த்தேன். பணிமனையாளும் வண்டியோட்டியும் மாயமாகியிருந்தார்கள். அப்பொழுது அழைத்து வந்தவர்கள் மீதான நன்றியுணர்வு துளியுமற்று எனக்கு ஆசுவாசமும் நம்பிக்கையுமே ஏற்பட்டது. ஏனைய மக்கள் கூட்டத்தின் முக்கால்பங்கும் குறைந்து போயிருந்தது. அருகேயிருந்த மடக்குக் கட்டில் கடையொன்றில் சென்று முகம் கழுவி ஒரு டீக்குடித்துவிட்டு வந்தேன். சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் கூடியிருந்தது. கயிற்று வளையத்திற்கு அருகே சென்று மைக்செட் ஆபரேட்டரின் அருகே நின்று கொண்டேன். கூட்டத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. வயல்பகுதி என்பதால் பாம்புகள் நடமாட்டம் மிகுந்திருக்கும். தனது கால்களுக்கிடையில் ஊர்ந்து போன பாம்பைக் கண்டு அலறிய நித்யா “அய்யோ அம்மா“ என்றாள். ஆட்கள் தடி எடுப்பதற்குள் பாம்பு எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரைக் குறிப்பிட்டு, “கூட்டிட்டு வந்து கொல்லவா பாக்குற? “ என்று மைக்கில் கத்தினாள் நித்யா.
ஏற்பாட்டாளர் தூரத்தில் ஒரு ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு சிரித்தான். வண்டியின் பக்கவாட்டில் இரு சக்கரங்கள் கூடுதலாக இருந்ததைக் கவனித்தபோது ’மாற்றுத்திறனாளி’ என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக மாற்றுத்திறனாளிகளின் முகத்தில் தென்படும் இறுக்கம் அவனிடமும் இருந்ததைக் கவனித்தேன். கூட்டத்தை கலகலப்பாக்க
“நித்யா வயசுக்கு எத்தனை பாம்பப் பாத்துருக்கும் தெரியுமா?“ என்று மைக்கில் கேட்டான் குறவன் வேஷம் போட்டிருந்த சுரேஷ். கூட்டம் சிரித்துக் குதூகலித்தது.
“ச்சீ அப்டீலாம் பேசாத தம்பீ. நான் ஒரேயொரு பாம்பு தான் பாத்திருக்கேன்“ என்று செல்லமாகக் கோபித்த நித்யாவிடம் “எது ராம்நாட்டுப் பாம்பா? “ என்றான் சுரேஷ்.
“திருச்சிப் பாம்பு“ என்றாள் நித்யா.
நையாண்டி பேச்சின் இடையில் கூட்டத்தைக் குஷிப்படுத்த “போட்டமா வச்சமா கழுவுனமான்னு போயிரணும்“ என்றாள் நித்யா. கூட்டம் கத்தி ஆரவாரித்தது. நான் நின்றிருந்த மைக்செட் ஆபரேட்டர் இடத்திற்கு சரிநிகர் முன்பாகத் தான் நித்யா நின்று மைக்கில் பேசிக்கொண்டிருந்தாள். திரட்சியாய்ப் பதம் சேர்ந்து நின்று மினுங்கும் அவளது தொடைகளைப் பார்த்தபோது எனது நெஞ்சின் ரோமம் சிலிர்த்தது.
கோணங்கித்தனமான உடலசைவுகளுடன் பாடத்தொடங்கினான் பஃபூன் குருசாமி.
“துள்ளித்துள்ளி நீ பாடம்மா…சீதையம்மா“ கலைந்தது போக மீதமிருந்த கூட்டம் உறக்கத்தில் மயங்கிக் கிடந்தது.
“கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன? “
கூட்டம் சலனமற்றிருந்ததால் எவரையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவையின்றி சோகத்தை உருக்கி வார்த்துக் கொண்டிருந்தான் குருசாமி பஃபூன்.
“நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்தப் பூமியும் வானமும் நனைந்ததம்மா!“
இந்த வரியை இரண்டு முறை அழுந்தப் பாடினான்.
“அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு“
என்றபடி பஃபூன் நித்யாவைப் பார்த்தான். விழியோரத்தில் அரும்பி நின்ற கண்ணீர்த்துளிகளை விரலால் சுண்டியபடி
“அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட“
என்று நித்யா பாடி முடித்தபோது தவில்காரர்கள் எழுந்து மீண்டும் தட்டத் தொடங்கியிருந்தார்கள். அந்தச் சுற்றில் சுழன்று ஆடிக்கொண்டிருந்தபோது தான் நித்யா மின்னல் பளிச்சிடும் விநாடிக் காலத்தில் என்னைக் கவனித்துவிட்டாள் நித்யா. அவள் என்னைக் கண்டுகொண்ட தீர்மானத்தின் மீதான மகிழ்ச்சி ஒரு தீப்பொறி போல என் இதயத்தில் பற்றியது. ஆடியபடியே என்னைப் பார்த்துச் சிரித்தவள் “சாப்டீங்களா? “ என்று சைகையில் கேட்டாள். “சாப்டேன்“ என்று தலையாட்டிய மறுகணம் என் மனம் மகிழ்ச்சியில் திளைத்து நிரம்பியது. அவளை எட்ட நின்று பார்த்தால் போதுமென்று வந்தவனுக்கு அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும் “சாப்டீங்களா?“ என்று கேட்டதும் அந்தக் கணத்தில் மிக உன்னதமான விஷயங்களாகத் தோன்றின.
சிறிதுநேரம் ஆடி முடித்தவள் ஸ்டாண்டில் தொங்கிய மெல்லிய துணியை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு கயிற்றுக்கு வெளியே வந்தாள்.
“வாங்க…“ என்று என்னையழைத்துக் கொண்டு ஒரு கடைக்குச் சென்றாள்.
போகும் வழியிலேயே “சாப்ட்டு வந்தீங்களா?“ என்று கேட்டாள்
“ம்ம்ம் சாப்ட்டுத்தான் வந்தேன்“ என்றேன்.
நேராக ஒரு கடைக்காரம்மாவிடம் சென்று “ஒரு பூஸ்ட்டு போடுங்க“ என்றாள்.
நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். பூஸ்ட்டைக் கையில் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தபோது
“கல்யாணம் ஆயிடுச்சா? “ என்று கேட்டாள். நான்
“இன்னும் இல்ல பண்ணிக்கலாம்“ என்று கூறியதைக் கேட்டதும்
“ஏன்?“ என்று கேட்டுச் சிரித்தாள்.
தூரத்தில் மைதானத்தில் ஆடும்போது உயரம் கூடியவளாக ஓங்குதாங்காகத் தெரிகிற நித்யா என் பக்கத்தில் நிற்கும்போது அண்ணாந்து பேசுகிற அளவில் தான் இருந்தாள். அவள் சிரிக்கும்போது முகத்தசைகள் விரிய, பூசியிருந்த அரிதாரம் வியர்வைத்துளிகளில் கலைந்து அவளது மூக்கில் மென்மையாக படர்ந்து கொண்டிருந்த ’மங்கு’ வெளித்தெரிந்தது.
பூஸ்ட் குடித்து முடித்ததும் “வாங்க போலாம்“ என்றவளிடம்
“நாதம் என் ஜீவனே பாட முடியுமா? “ என்று தயங்கியபடி கேட்டேன்
“இன்னும் நேரம் இருக்குல்ல… பாடுவோம்“ என்றாள்.
வரும் வழியில் நான்கைந்து இளந்தாரிகள் வந்து
“அக்கா செல்ஃபி“ என்றார்கள்.
பதில் எதுவும் பேசாமல் என் தோள்களை அணைத்தபடி
கொஞ்ச தூரம் மௌனமாக வந்தவள்
“தண்ணியடிச்சிருக்காய்ங்க“ என என் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
அவள் என்னைத் தோளோடு சேர்த்து அணைத்திருந்த நொடிகள் மீண்டும் மீண்டும் நினைத்துச் சிலிர்த்துக் கொள்ளும் கௌரவமிக்கதாக இருந்தன.

மணி மூன்றைக் கடந்துவிட்ட விடியலுக்கு முன்பான புலர்காலைப் பொழுதில் தான் ’என் வாழ்வு துலங்கும் அந்தப் பாடலை’ நித்யா பாடத் தொடங்கினாள்.
“ தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்“
அவள் இதனைப் பாடி நிறுத்தியபோது பழனியிலிருந்து பஸ் ஏறியதன் மொத்த நோக்கமும் நிறைவேறியது போலத் தோன்றியது எனக்கு. உண்மையில் அந்தப் பாடலுக்குள் ஏக்கத்தைக் கையேந்தும் ஒரு கன்னித்தெய்வம் வசித்தது என்றால் அச்சொற்கள் என்னளவில் மிகையானவை அல்ல. நிறைவு செய்து கொள்வதற்கு முன்பான தீவிர அடவுகளில் நித்யாவின் உடல் கரைந்து கொண்டிருந்தது. நம் பார்வைக்கு பருமனாகத் தெரியும் அவ்வுடல் அவள் அளவில் எப்படி இருக்குமோ தெரியவில்லை. காற்றுக்கு ஒப்புக்கொடுத்து வானமும் பூமியும் அளக்கும் ஒரு பட்டத்தைப் போல அடிக்கு ஏற்றவாறு தன்னைப் பரத்தி வைப்பாள். ஒரு கணம் அந்தத் தீவிர நிமிடங்களில் அவள் உடல் எடையிழப்பது போலவும் எனக்குத் தோன்றும். மைக்செட் ஆபரேட்டருக்குக் கொஞ்சம் தள்ளி கையில் கோல்டன் வாட்ச் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைப் பார்த்து
“முடிச்சுக்குவமா? “ என்று சைகையில் கேட்டாள். அவன் தலையசைக்கவும் பிள்ளைகள் மூவரும் பூமியைத் தொட்டு வணங்கிவிட்டு ஸ்டாண்டில் கிடந்த மெல்லிய துணியையும் ஓரத்தில் போர்த்தி வைத்திருந்த கரகம் மற்றும் ஹேண்ட் பேக்கையும் எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
மிக இயல்பாக என்னை “வாங்க“ என்றழைத்தபடி நகர்ந்தாள் நித்யா. வயல் பள்ளங்களின் வழியே நடந்து சென்ற நித்யாவைப் பின்தொடர்ந்து நான் சென்று கொண்டிருந்தேன். மணி அதிகாலை 4.30 இருக்கும். கோவிலுக்குள் செல்வதற்கு முன்பாக அதன் வலதுபுறத்தில் நின்ற ஒரு காரின் அருகே சென்றாள். வண்டியின் பின்புறத்தில் ’ஸ்ரீ சாத்தார் உடையார் அய்யனார் துணை’ என்றெழுதி அய்யப்பன் சாயலில் ஒரு சாமியின் புகைப்படம் இருந்தது. அந்த வண்டி அவளுடையது தான் என்பதை ஊகித்துக் கொண்டேன். காரிலிருந்து உறங்கி எழுந்த முகத்துடன் உயரமாகவும் நித்யாவைப் போலவே கறுத்த முகத்துடனும் ஒருவன் வெளிப்பட்டான். அவனிடம் என்னை “இவரு கவிஞர்ண்ணே“ என்று அறிமுகம் செய்தாள். அவன் இருகைகளையும் குவித்து வணக்கம் வைத்தான். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தபோது நித்யாவுடன் ஆடிய குறவன் வேஷக்காரன் “நீங்க கவிஞரா? நானும் கவிஞர் தாண்ணே“ என்று மெலிதாகச் சிரித்தபடி என்னிடம் கூறிய போது நித்யா பெரிதாகவே சிரித்தாள். கோயிலுக்குள் நுழைந்தோம். திசை பற்றிய என் உள்ளுணர்வு சரியென்றால் மேற்கு நோக்கி வயல்வெளியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் ஒரு அம்மன் கோயில் அது. கோயிலின் பின்புறம் தென் மூலையில் அவர்களது அலங்காரப்பொருட்கள் மற்றும் உடைகள் வைக்கப்பட்டிருந்தன.
முன்னமே மாலதியும் புவனாவும் சென்று வேஷம் கலைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உடைமாற்றுவார்கள் என்கிற நாகரீகம் கருதி நான் கொஞ்சம் எட்டவே நிற்க “பரவாயில்லை வாங்க நம்ம புள்ளைக தான“ என்று நித்யா தான் அழைத்தாள். நித்யா அமர்ந்த இடத்திற்கு அருகில் என் பையை வைத்துக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் நான் அமர்ந்தேன். நான் உள்ளே வந்ததைக் கவனித்த பஃபூன் குருசாமியின் முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தது. பிறகு அவர் வெகு சீக்கிரத்தில் ஒப்பனையைக் கலைத்துவிட்டு கைலி மாற்றிக்கொண்டு கோவிலின் ஒரு மூலையில் பையைத் தலைக்கு வைத்துப் படுத்துக்கொண்டு போன் பார்க்க ஆரம்பித்துவிட்டார். பாவம் பெண்கள் முகப்பூச்சை எடுப்பதற்காக தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தார்கள். உடை மாற்றும் இடத்தில் அத்தனை நெருக்கமாக நான் உட்கார்ந்திருந்ததை வித்தியாசமாகப் பார்த்தார்கள் மாலதியும் புவனாவும். வேஷம் கலைத்தபடியே அவ்வபோது தலைதூக்கிச் சிரித்தபடி நித்யா என்னைப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. நித்யா வேஷத்தை முழுதாகக் கலைத்துவிடவில்லை அதற்குள் ஊர்க்கார ஆள் ஒருவர் அங்கு வந்து “காலப் பூசை ஆகப் போகுது“ என்றார். மாலதியையும் புவனாவையும் நோக்கி “ஏய் வந்தீங்கனா ஐந்நூறு ருவா“ என்றாள் நித்யா. அவர்கள் நகர்வது போலத் தெரியவில்லை. கரகத்தைத் தலையிலேற்றி சந்நிதியில் அம்மனுக்கு எதிர்ப்பில் தவில் சத்தம் கோவில் சுவர்களில் எதிரொலிக்க ஆடத்தொடங்கினாள் நித்யா. பூசை முடிந்ததும் நித்யாவின் கையில் ஐந்நூற்று ஒன்று காணிக்கை தந்து விபூதி குங்குமம் கொடுத்தார் பூசாரி. அவள் பூசிவிட்டு எனது உள்ளங்கையில் விபூதி குங்குமத்தைத் தந்தபோது உள்ளுக்குள் ஒருவித சிலிர்ப்பை என்னால் உணர முடிந்தது. கைகளின் ஸ்பரிசம் என் இதழை மலர்த்தியதை நித்யாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டேன். மீண்டும் போய் ஒப்பனை கலைக்கத் தொடங்கும் முன் கீழே கிடந்த எனது பையை எடுத்து நாற்காலியில் வைத்தபோது அவளை மிகவும் மரியாதையாகப் பார்த்தேன். மெலிதான சிரிப்புடன் என்னைப் பார்த்தபடியே அருகில் வந்தமர்ந்த நித்யாவை நிமிர்ந்து பார்க்காமல் நான் எனக்கு எதிரேயிருந்த இரண்டு தென்னை மரங்களையும், முள் வேலியையும் அதற்கப்பால் விரிந்திருந்த வயல்வெளியையும் வெறித்துக் கொண்டிருந்தேன்.
“ஏன் இவ்ளோ தூரம் வரணுமா?“ என்று கேட்டுச் சிரித்தாள் நித்யா.
“ஏம் பைத்தியக்காரத்தனமா இருக்கா?“ மழுப்பலாகச் சிரித்தபடியே கேட்டேன். “ஆமா“ என்பது போல் தலையாட்டியவள் பதிலுக்குச் சிரித்தாள்.
“அடுத்தவாரம் திண்டுக்கல் வரேன்“ என்றாள்.
“அப்டியா?“ என்ற ஆச்சரியத்துடன் கேட்டேன். “ஆமாம் “ என்றாள்.
மெல்ல தன் குடும்ப வாழ்க்கை பற்றிக் கூறத்தொடங்கினாள்.
“அவனுக்கு சந்தேக கொணம் அதிகம். நாம என்ன செய்ய முடியும். இந்த ஃபீல்டு அப்டி. ஒடம்பக் காட்டி நடத்துற பொழப்புல கைகால் படுறத குத்தம்னா பாக்க முடியும்? ஆடப்போற எடத்துல எல்லாருந்தான வருவாங்க? அவங்கூட ஆடாத இவங்கூட ஏன் இப்டி ஆடியிருக்கனு நெறய பிரச்சனை வந்திருக்கு. டைவர்ஸூக்காக வக்கீல் வரை போயிட்டோம். அப்பறம் சேர்ந்தோம். ஒருநாள் தவிலுக்குக் கட்டை வாங்க பணம் வேணும்னு வாங்கிட்டுப் போனவன் திரும்ப வரவேயில்லை. இந்தக் கொரனா டைம்ல கூட பையனும் நானும் என்ன பண்றோம்னு வந்து ஒரு எட்டு பார்க்கல தாயோளி“
என்று இதைச் சொல்லிவிட்டுத் தலைகுனிந்தாள். அவளது கதையைக் கேட்டபோது வருத்தமாக இருந்தது.
“இந்த சோகத்தை நிகழ்ச்சியில பஃபூனும் நீங்களும் பாடும்போதே என்னால உணர முடிஞ்சது“ என்றேன்.
“ஆமா. எங்க குருசாமி மாமாட்ட தான் இதெல்லாம் சொல்லி அழுவேன். என்ன செய்ய?“ என்றவாறு மேற்பல் வரிசையால் கீழுதட்டைக் கடித்தபடி நீர் பூத்த கண்களோடு என்னைப் பார்த்த நித்யாவை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.
“சரி பார்ப்போம். இருங்க வந்திடுறேன்“ என்றவாறு உடை மாற்ற ஒரு மறைவுக்குப் போனாள். நான் கோவிலின் அம்மன் சந்நிதியின் முன் வந்தேன்.
சிறிது நேரம் கழித்து நித்யா வந்தாள். அம்மா அடிக்கடி ’பாசக்கலர்’ என்று சொல்லக்கூடிய வெளிர்பச்சை நிறத்தில் ஒரு வெளுத்த காட்டன் நைட்டியை அணிந்தபடி லக்கேஜூகளை எடுத்துக் கொண்டு என் எதிரே வந்தாள். சற்று நேரத்திற்கு முன்பு அவளது வனப்பைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஒப்பனை மாயமாகி அவளது இயல்பான முகம் பார்க்கப் பாவமாக இருந்தது. உடல் இளைத்தது போலவும் தெரிந்தது. மெதுவாக எட்டு வைத்ததிலிருந்தே அவளது கால் வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சற்றே நேரத்திற்கு முன்பு சொன்னதைப் போல அமைதியாக என் முகம் பார்த்தபடி சிரித்த அதே முகபாவம். என்னருகில் வந்தாள்
“வாங்க கட்டுமாவடியில எறங்கிக்கங்க“ என்றாள். எழுந்து அவளைப் பின்தொடர்ந்தேன். அவளது அண்ணன் தான் காரை ஓட்டினான். அவனுக்கு இடப்புறம் சுரேஷ் அமர்ந்திருந்தான். அடுத்த வரிசையில் இடது ஜன்னலோரத்தில் புவனாவும் மையத்தில் மாலதியும் வலது ஓரத்தில் நித்யாவும் அமர்ந்திருந்தார்கள். மூன்றாவது வரிசையிலிருந்த எதிரெதிர் இருக்கையில் நானும் பஃபூன் குருசாமியும் அமர்ந்து கொண்டோம். வண்டி கிளம்பியது. பஃபூன் குருசாமி அமர்ந்தது தான் தாமதம் இருக்கையிலிருந்த லக்கேஜில் சாய்ந்து ஆழ்ந்து உறங்கிப்போனார்.
இடையில் ஒரு இடத்தில் வண்டி நின்றது. நித்யாவும் அவளது அண்ணனும் மட்டும் இறங்கிப் போய் பேசிக் கொண்டிருந்தார்கள். காரின் ஜன்னல் கண்ணாடி அடைக்கப்பட்டிருந்ததால் வெளியே நடப்பது எதுவும் துலக்கமாகத் தெரியவில்லை. எவ்வளவு கண்களை இடுக்கிப் பார்த்தும் எதுவும் புலப்படவில்லை.
“கணக்குத் தீர்ப்பார்களாக இருக்கும்“ என்று அமைதியாக இருந்துவிட்டேன்.
“கட்டுமாவடி வந்ததும் சொல்லுங்க “ என்று மாலதியிடம் சொன்னேன்.
“அண்ணே என்னண்ணே“ என்றவள் எடுத்த எடுப்பிலேயே கேட்டதில் பெண்களிடம் சென்று வழிகிற ஆண்களை வெடுக்கென்று பேசும் பெண்களின் தொனியிருந்ததால் மேற்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். சிறிது நேரத்தில் அண்ணனும் நித்யாவும் வந்தமர வண்டி கிளம்பியது.
சீரான வேகத்தை கார் போய்க்கொண்டிருந்தது. முன்புற வரிசையில் பிள்ளைகள் மூவரும் ஜாலியாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் உறக்கம் வரவில்லை. எதிரே குறட்டை விட்டுக் கொண்டிருந்த பஃபூனைப் பார்த்துப் பெருமூச்செறிந்தேன். முன்புற சீட்டின் மீது என் கை எதார்த்தமாகத்தான் இருந்தது. நித்யா தனது வலது கையை சீட்டின் மீது வைத்தாள். குழந்தைகளுடையதைப் போல சிறியதாக இருந்த அவளது கை என் கையை நோக்கி நகர்வதை என்னால் உணர முடிந்தது. அது இயல்பாக நடப்பதைப் போல எனக்குத் தோன்றவில்லை. இறுதியில் மென்மையாக என் விரல் மீது அவளது விரல்கள் பட்டேவிட்டன. கைகள் மட்டும் பேசிக்கொண்டிருந்தன. எனக்கு பயமாக இருந்தது. நிமிர்ந்து முன்னே அவளைப் பார்த்தேன். தொடுகையை அனுபவிப்பதைப் போல அவள் முகத்தில் இளநகை இருந்தது என்றாலும் நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். இப்படியே அவளோடு தொடரும் பயணத்தில் இறங்காமல் சென்று கொண்டேயிருந்தால் என்னவென எனக்குத் தோன்றியபோது ஓரிடத்தில் திடுமென கார் நின்றது
“இதான் கட்டுமாவடி“ என்றார்கள். நான் இறங்க வேண்டிய நிறுத்தம். அவளுடைய முகத்தை நேராகப் பார்க்கும் தைரியமின்றி தலைகுனிந்தபடியே விடைபெற்று பையை எடுத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினேன். சொல்லி வைத்தாற் போல் வந்தது பழுப்பு நிற பழைய அரசுப்பேருந்து ஒன்று. அது தான் முதல் ட்ரிப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். அந்தப் பேருந்தைப் பிடிப்பதற்காக அவசரமாக ரோட்டைக் கடந்து ஓடுகிறேன். பேருந்து ஏறுவதற்கு முன்பு ஒருகணம் நின்று திரும்பிப் பார்க்கிறேன். காருக்குள்ளிருந்து நித்யா விடியலில் மலர்ந்த செண்டுமல்லியைப் போல அலுங்காமல் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். தலையசைத்துப் பஸ் ஏறிவிட்டேன். இருக்கையில் அமர்ந்ததும் வாட்சப்பில் நித்யா எண்ணைத் திறந்து போட்டேன்.
“மிஸ் யூ“
பதிலுக்கு அவளும் போட்டாள்
“மிஸ் யூ டூ“
நித்யா கேட்டாள்
“உண்மையச் சொல்லுங்க எதுக்கு வந்தீங்க? “
நான் பதில் போட்டேன்
“உங்களப் பார்க்கத்தான். “
நிற்காமல் பேருந்து போய்க்கொண்டயிருந்தது. கருக்கலுக்கு மஞ்சள் வண்ணம் பூசியபடி மேலெழுந்த சூரியனிலிருந்து ஒரு கதிர் பேருந்தின் கூரை ஓட்டை வழி உறக்கமற்ற என் கண்களைத் தழுவியது.
00

சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்
அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

