-பரிவை சே.குமார்

பாரி இறந்து போய்விட்டான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ரெண்டு நாள் முன்னால் கூட போனில் இந்தத் திருவிழாவுக்காவது குடும்பத்தோட வாடான்னு சொன்னான். அவனும் வருடாவருடம் கூப்பிடத்தான் செய்வான்; என்னால்தான் வரமுடிவதில்லை. அதுவும் இப்பல்லாம் முக்கியமான நல்லது கெட்டதுக்கு மட்டும் ஊருக்கு ஓடி வந்துட்டு ஓடிப்போற வாழ்க்கையாகிப் போச்சு, இதுல எங்கிட்டு ரெண்டு மூனுநாள் வந்து தங்கியிருக்கது. இந்த முறை புவனாவையாச்சும் அனுப்பி வைக்கணும் என்று நினைத்திருந்தேன்.

இந்தா இந்தத் திருவிழாவுக்கு அவனே இல்லாமப் பொயிட்டான். பாரி வீட்டுக்கு எதிர்லதான் நாங்க எட்டாவது வரைக்கும் படிச்ச முத்தாத்தாள் நடுநிலைப்பள்ளி. அந்தப் பள்ளிக்கூட நுழைவு வாயிலின் இரு பக்கமும் இருந்த திண்டுலதான் காலையில இருந்து உக்கார்ந்திருந்தேன். கிட்டத்தட்ட நாப்பது வருசத்துக்கு முன்னால நாங்க படிக்கும் போது இருந்த அதே ஒத்தைக் கட்டிடம் அப்படியேதான் இருந்தது. சமீபத்தில் வெள்ளை அடித்திருந்திருக்கிறார்கள். அப்போது சிறிய மரங்களாக நின்ற வேம்பும், வாகையும் தூர் பெருத்து பெருமரங்களாய் நின்றன. பூங்கை, பூவரசு எனப் புதிதாய் நிறைய மரங்களை வைத்திருந்தார்கள்.

நாங்க படிக்கும் போது ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரைக்கும் மொத்தமே மூணு வாத்தியார்தான். பெரும்பாலான வகுப்புகள் மரத்தடியில்தான் நடக்கும். இப்போதும் அப்படித்தான் நடக்கிறது என்பதைப் பறைசாற்றும் விதமாக வேப்பமர நிழலில் ஒரு கரும்பலகை நின்று கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஆங்கிலப் பள்ளியை நோக்கிப் பயணித்து விட்டதால் இது போன்ற கிராமப்புற பள்ளிகளில் எல்லாம் அவ்வளவாக மாணவர்கள் இருப்பதில்லை; ஆசிரியர்களும் இருப்பதில்லை. ஏதோ இந்தப்பள்ளி இன்னும் உயிர்போடு இருப்பதே பெரிய விசயம்தான் என்றாலும் சுத்து வட்டாரத்தில் வேறு எதுவும் பள்ளிகள் இல்லாததும் ஒரு காரணம்.

பள்ளிகூடத்துக்கு என்று அதிக இடமெல்லாம் இல்லை. அந்த ஒத்தைக் கட்டிடம், அதற்கு முன்னே இருக்கும் சிறிய இடத்தில் ஒரு கொடிமரம். நாங்க படிக்கும் போது சுற்றுச் சுவரெல்லாம் இல்லை. பனை மட்டையை வைத்து தட்டி கட்டித்தான் அடைத்து வைத்திருப்பார்கள். இப்போது சுற்றுச் சுவர் இருந்தது. வெளிப்புற கேட்டின் மேலே ‘அல்லிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி’ என்ற பெயர் வளைவாய் இரும்புக் கம்பியில் எழுதப்பட்டிருந்தது. அப்போது பள்ளிக்கூடச் சுவரில் உள்ளூர் பெயிண்டர் கிறுக்கலாய் எழுதிய பெயர்தான் இருந்தது.

பள்ளிக்குள் விளையாடவெல்லாம் இடமில்லை என்பதால் ஊரில் கிடந்த கோவில் திடலில்தான் விளையாட விடுவார்கள். விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் அங்கேதான் நடக்கும். போட்டி அன்னைக்கு காலையில சீக்கிரமா பள்ளிக்கூடத்துக்குப் போய் நாற்காலி, பெஞ்சு, தண்ணீர்க்குடம் என எல்லாவற்றையும் படிக்கிற பிள்ளைகள் கொண்டு போய் சேர்த்து, நிகழ்வு முடிந்ததும் திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கணும். விளையாட்டுப் போட்டி நடந்ததுக்கு அடுத்த நாள் லீவு விடுவாங்க. இப்ப கோவில் திடலெல்லாம் பஞ்சாயத்துத் தலைவரோட சொந்த இடமா மாறிடுச்சு. இன்னக்கி புள்ளைங்க விளையாட இடம் இல்லாமல் போய்விட்டது என்பதை பாரி பலமுறை  சொல்லியிருக்கிறான்.

உள்ளே சுவத்தையொட்டி கழிவறை இருக்கிறது என்பதைப் பறைசாற்றும் விதமாக மூத்திர வாசம் நானிருந்த இடத்தை நிரப்பி வைத்திருந்தது. அப்போதெல்லாம் பதினோரு மணிக்கு பியூன் சின்னப்ப அண்ணன் மணி அடிப்பார். அந்த மணிக்குப் பேரே ஒண்ணுக்குப் பெல்தான். வகுப்புவாரியா பையன்களும் புள்ளைகளும் வரிசையில் பயணப்படுவோம். பசங்க கம்மாய்க்கரைப் பக்கமும், பிள்ளைங்க களத்து மேட்டுப் பக்கமும் முத்திரம் பெய்யப் போய்விட்டு வரவேண்டும். அதேபோல் மூணு மணிக்கு ஒரு முறை சென்று வருவோம். இப்ப அதைச் சொன்னோம்ன்னா ஒண்ணுக்கு இருக்க வரிசையில போகணுமான்னு சிரிப்பானுங்க. இன்னக்கி கழிவறை இல்லாத பள்ளிகள் குறைவுதான் என்றாலும் எல்லாப் பள்ளிகளிலும் கழிவறைகள் அத்தனை சுத்தமாக இருப்பதில்லை.

பாரி வீடு பள்ளிக்கூடத்துக்கு நேரெதிரே இருந்ததால் மத்தியானம் சத்துணவை வாங்கிக்கிட்டு அவுக வீட்டுக்குத் திண்ணையில போயி உக்காந்துதான் சாப்பிடுவோம். அது அந்தக் காலத்து சுத்துக்கட்டு வீடு… பெரிய திண்ணை, உள்ளே முற்றம்ன்னு செட்டியவீடு கணக்கா பெருசா இருக்கும். வீட்டுக்குப் பின்னால மா, பாலா, கொய்யா, அரைநெல்லி, தென்னையின்னு நிறைய மரங்கள் இருக்கும். தோட்டத்து மூலையில ஒரு கிணறு, அதன் மேலே இரும்பு வலை அடித்திருப்பார்கள். அதில் மோட்டார் போட்டுத்தான் செடி, கொடி, மரங்களுக்குத் தண்ணீர் விடுவார்கள்.

கத்திரி, வெண்டை, சுண்டை, கீரை என எதாவது ஒன்று வடக்கு மூலைப் பக்கம் பயிரிட்டு வைத்திருப்பார்கள். பீர்க்கை, சுரை, பாவை, புடலை, பூசணி, பரங்கி என எதாவது ஒன்றுக்குப் பந்தல் போடப்பட்டிருக்கும். தைப்பூசத்துக்கு வடிச்சிப் போடுறதுக்காக அந்த நேரத்தில் பழுத்த பரங்கி ஒன்று கொடியில் உயிர்போடு இளவட்டக்கல்லைப் போல கிடக்கும். தோட்டத்தில்தான் கோழிக் கூண்டும் இருக்கும். செவலைப் பசு கூட மூலையில் இருக்கும் கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும்.

சிவப்புக் கொய்யாவோ நெல்லிக்காயோ காய்த்துக் கிடக்கும் நாட்களில் சத்துணவைச் சாப்பிட்டதும் பின்னால போயி பிடிங்கித் திண்ணது போக, டவுசர் பாக்கெட்டையும் நெறச்சிக்கிட்டு வகுப்புப் போவோம். நான் கொண்டு போகும் கொய்யாவில் ஒன்று எப்போதும் செல்விக்குப் போய்விடும். அவளும் கூட வீட்டில் என்ன செய்தாலும் எனக்கு கொண்டு வந்து தராமல் இருக்கமாட்டாள். அப்போது எது காதல் எது நட்புன்னு தெரியாத வயசு. ரெண்டு பேரும் சப்பாத்திக் கள்ளியில் எங்களது பெயரை எழுதி வச்சிருந்தோம். இப்போது ஊருக்குள் சப்பாத்திக் கள்ளி, திருகுகள்ளி, எருக்கலை, கொட்டச்செடி என எதையுமே காணோம். வயலெல்லாம் சீமைக்கருவைதான் நிறைந்திருக்கிறது.

கல்லூரி படிக்கும் போது கூடப்படித்த கண்ணனின் வீட்டு விசேசத்துக்குப் செல்வி ஊருக்குப் போனபோது அவளைப் பார்த்தது. பாவடை தாவணியில் பார்க்க அழகாக இருந்தாள். அப்போது என்னைப் பார்த்து ரொம்பவே வெட்கப்பட்டாள். வெட்கத்தின் ஊடே என்னுடன் பேசியதில் அவளுள் எழுந்த மகிழ்ச்சி வெளிப்பட்டது. இப்போது எங்கு இருக்கிறாளோ..?

‘பாடியை எப்பத் தூக்குறாகளாம்… வெய்யிலு இப்பவே இந்தப் போடு போடுது. நேரம் போகப் போக வாட்டி எடுத்துரும் போலவே’ என்ற சப்தம் கேட்டு நினைவில் இருந்து மீண்டேன். பள்ளிக்கூட வாசலை ஒட்டி நின்ன அந்தப் பெரிய வேப்ப மரம்தான் கேதத்துக்கு வந்தவுக ஒதுங்கி நிக்கக் கூடிய இடமாக இருந்தது. பேசிக்கிட்டு நின்னவங்க ரெண்டு பேரும் சட்டை இல்லாத உடம்போடு வேட்டியின் மீது துண்டைக் கட்டிக்கிட்டு நின்னாங்க. பாரி பாடியாகிப் போய்விட்டான் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

எல்லாருக்குமே ஒரு நாள் இங்க நிக்க வேண்டியதால நம்ம பிழைப்பு போகுதேங்கிற வருத்தம் இருக்கத்தானே செய்யும். நாங்ககூட எல்லாத்தையும் போட்டது போட்டபடி போட்டுட்டுத்தானே வந்திருக்கோம். சீக்கிரம் தூக்கிட்டா நாங்களும் சின்னவன் கல்லூரியில் இருந்து வர்றதுக்குள்ள வீடு போயிச் சேர்ந்திடலாம்ன்னு எனக்கும் தோன்றியது. ச்சை என்ன நினைப்பு இது. அவன்தான் அவசரப்பட்டுப் போயிட்டான்னா அவனை அனுப்புற அவசரம் நமக்கெதுக்கு. ஓடிக்கிட்டே இருந்தவன் கொஞ்ச நேரம் அவன் வீட்டுல கிடந்து உறங்கட்டுமே. இதுதானே அவனோட கடைசி உறக்கம்.

மாப்ள பாரி… நீ இப்படித் தவிக்க விட்டுட்டுப் போவேன்னு நினைக்கவே இல்லைடா. உன் முகத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு உன்னை அடைத்து வைத்திருக்கும் கண்ணாடிப் பெட்டி மேலே மலையைப் போட்டவனின் காலை உன் மகள் கட்டிக் கொண்டு ‘மாமா எங்கப்பாவைப் பார்க்க வந்தியளா…?’ன்னு கேட்டு அழுத போது நான் செத்துட்டேன்டா. ஏன்டா இப்படி எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போனே. எங்க போனாலும் சொல்லிட்டுப் போவியேடா… பாவி… இப்ப மட்டும் ஏன் சொல்லாமல் போனே…?. உடைந்து வந்த அழுகையை அடக்கினேன். நிறை கண்மாயில் மடையை அடைத்து வைத்தாலும் வெளிப்பக்கம் கசியும் நீரைப் போல் கண்ணீர் கசிந்தது. வேஷ்டியில் துடைத்துக் கொண்டேன்.

பாரி ரொம்ப வேகமானவன். எந்த வேலை என்றாலும் மலைக்கவே மாட்டான். எப்படி வேலை என்றாலும் அதை ஒரே மூச்சில் செய்து முடிப்பதில் அவன் கில்லாடி. மச்சி இந்த வேலையைப் பார்க்கணும்டா… அப்பாக்கிட்ட சொன்னா அவரால அலைய முடியாதுடா எனச் சொன்னால் போதும், இதுக்கு எதுக்குடா மாமா அலையணும். ரெண்டு நாள்ல முடிச்சிடலாம் விடு, நான் பார்த்துக்கிறேன்னு சொல்வான். பரபரப்பா கடையில இருக்கவன் என்ன செய்வான்… எப்படி முடிச்சான்னு எல்லாம் தெரியாது சொன்னமாரி ரெண்டே நாள்ல வேலை முடிஞ்சிருக்கும். எனக்கு மட்டுமில்ல எங்க நட்பு வட்டத்துல எல்லாருக்கும் இதேபோலதான். எதையும் எதிர்பார்த்து அவன் இதுவரை எங்களுக்குச் செய்ததில்லை.

கார்த்திக்கும், சுந்தரமும் வெளிநாட்டில் இருப்பதால் பாரியை இறுதியாப் பார்க்கிற கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது. மாத்தி மாத்தி போன் அடிச்சிக்கிட்டேதான் இருந்தானுங்க. ரமேஷ் இன்னைக்கு வரமுடியாத நிலையில இருக்கேன்னு சொன்னான். படிக்கும் போது ஒண்ணா இருந்தமாதிரி எல்லாக் காலமும் எல்லாரும் ஒண்ணா இருக்கமுடியாதுல்ல. வாழ்க்கைப் பாதையில் அவரவர் வேலை அவரவருக்கு.

பாரி படிப்புல சுமார்ன்னாலும் பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டிகள்ல, குறிப்பா ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் பரிசுகளை வாங்கியவன். அவன் ஓடுறான்னு சொன்னா ரொம்பப் பேரு ஓடுறதுக்கே யோசிப்பானுங்க. இவ்வளவுக்கும் மத்தவங்க மாதிரி சூவெல்லாம் போட்டு ஓடமாட்டான், வெறுங்கால்லதான் ஓடுவான். எவ்வளவு தூரம் ஓடினாலும் அவனுக்கு மூச்சிரைக்கவே மாட்டாது. ஓடுறதுக்கு முன்னால எப்படியிருந்தானோ அப்படித்தான் ஓடிட்டு வந்த பின்னாடியும் இருப்பான். பள்ளிக்கூடத்துல எட்டாப்பு வரைக்கும் அவன்தான் சாம்பியன். அதேதான் தேவகோட்டையில் ஒன்பதாவது படிக்கும் போதும் நடந்தது.

அவனோட விளையாட்டுக்காகவே இரண்டு வருடம் ஒன்பதாவதுலயே போடப்பட, அதற்கு மேல் படிக்க மாட்டேன்னு நின்னுட்டான். படிப்பை விட பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டால பேர் வாங்கிக் கொடுப்பான்னு அந்த வாத்தியார் நினைக்காம இருந்திருந்தா ஒருவேளை அவன் கூட ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை செய்திருப்பான். ஆனா இப்ப அதைவிட அதிகமாகவே பணத்தையும் மனிதர்களையும் சம்பாரித்து வைத்திருந்தான். ஆட்கள் வந்த வண்ணமாய் இருக்கிறார்கள்.

விடுமுறை நாட்கள்ல பக்கத்து ஊர் தோட்டத்துல எளநி வெட்டிக் குடிக்கப் போகும்போது அவனும் கார்த்தியுந்தான் உள்ள போவானுங்க. பாரிதான் மரத்துல ஏறுவான், அவன் வெட்டிக் கொடுக்க, கார்த்தி அதை வெளியில தூக்கிப் போட, நாங்க அள்ளிக் கொண்டு போய் கொட்டச் செடிக்கு உள்ளே மறைச்சி வைப்போம். காவல்காரர் ‘யார்ரா அது’ன்னு குரல் கொடுத்த ரெண்டு பேரும் மின்னல் வேகத்துல ஓடிவந்து வேலியைத் தாண்டிருவானுங்க.

நானெல்லாம் உள்ள போனா மாட்டிப்பேன்னு அவனுங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால எப்பவும் உள்ள இறக்க மாட்டானுங்க. நான் காலேசுல படிக்கும் போது பெரும்பாலும் ராத்திரியிலதான் இளநி வெட்டப் போறது. ரெண்டு இளநி குடிச்சதும் வயிறு புல்லாயிரும். அத்தோட நானும், ரமேஷூம் போதும்ன்னு உக்காந்துருவோம். பாரியும், கார்த்தியும், சுந்தரமும் ரோட்டுல ஓடிட்டு ஓடிட்டு வந்து வெட்டிக் குடிப்பானுங்க. பாரி மட்டும் பத்து இளநிக்கு குறையாமக் குடிப்பான். இதுக்காகவே செகண்ட் ஷோ படத்துக்குப் போவோம். போகும்போது வெட்டி ஒளிச்சி வச்சிட்டுப் போயிட்டு வரும்போது ஆசை தீரக் குடிச்சிட்டு வருவோம். மீதமிருந்தா கொட்டச்செடிக்குள்ளயே போட்டு வச்சிட்டு வந்து மறுநாள் போய் வெட்டிக் குடிப்போம். இப்போ அந்தத் தோட்டமெல்லாம் வீட்டெடமாயிப் போச்சு. செண்டு அஞ்சு லெட்சத்துக்கு மேல போகுது, செட்டியாரு எனக்கு ரொம்பப் பழக்கம்டா, நம்ம மூணு மூணறைக்கு முடிச்சிடலாம். நீ ஓகேன்னு சொன்னியன்னா உனக்கு ஒரு இடம் வாங்கிப் போடுவோமுடான்னு பாரி சொன்னப்போ பின்னால பாத்துக்கலாம்ன்னு சொல்லியிருந்தேன். இனி எங்கிட்டு பின்னால பாக்குறது..?

‘இதெல்லாம் சாகுற வயசா…? கட கடயின்னு ஓடிக்கிட்டே கிடக்கும். இனி அத யாரு எடுத்துச் செலுத்த…’ எனக்கு முன்னே நிழலில் அமர்ந்திருந்த இரண்டு கிழவிகளில் சிவப்பு கோபுரக்கரைச் சேலையின் முந்தானையை விசிறியாக்கி வீசிக் கொண்டிருந்தவர் சொல்ல, ‘ஆமா… அந்தப் புள்ளக்கி மிஞ்சிப்போனா நாப்பத்தஞ்சி இருக்குமா..? அப்ப பாரிக்கு அம்பதுக்கிட்டதானே இருக்கும்’ என்று சொன்ன பச்சைக்கலர் கோபுரக்கரைச் சேலை முந்தானையை வாயில் அழுத்திக் கொண்டாள்.

அவனுக்கு அம்பத்தி ரெண்டாயிருச்சு எனச் சொல்ல எழுந்த நாவை அடக்கினேன். ‘இந்த மாசி வந்தா உனக்கு பதினாறு, மார்கழியில பாரிக்குப் பதினாறு, ரெண்டு பேருக்கும் சரியா ரெண்டு மாசம்தான் வித்தியாசம்’ அப்படின்னு எங்கம்மா சொல்லும். அவனுக்கு அம்பத்தி ரெண்டுன்னா எனக்கும் அதுதான்… இதுல மாசக்கணக்குல வேணுமின்னா நான் சின்னவன்னு பெருமையாச் சொல்லிக்கலாம். காலம் வயித்தையும் தலையையும் ரெண்டு பேருக்கும் ஒரேமாதிரித்தான் மாத்தி வச்சிருந்துச்சு.

‘அம்புட்டுத்தானிருக்கும்… வேலவேலயின்னு உடம்பக் கவனிக்காம விட்டதுதான் மாரடப்புல வந்து நிக்கிது. இன்னக்கி சாப்பாடும் சரியில்ல… உடம்புல கவனமும் வக்கிறதில்ல’ என்றது சிவப்புச்சேலை. இருவரும் எங்கோ பார்த்த முகமாகத் தெரிந்தார்கள் என்றாலும் என் மனதில் உடனே அவர்கள் யார் என்பது மலரவேயில்லை; அவர்களும் என்னைக் கவனிக்கவில்லை. பாரிக்காக வருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாம் வாய்விட்டுப் பேச பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்கள், நான் பாரியைப் பற்றி யாரிடம் பேசுவேன்..?

“ஆயா இது சாகுற வயசான்னு வருத்தப்படுறீங்க. கொரோனாவுக்கு அப்பறம் நடக்குற சாவுகள்ல பாதி இந்தக் கேள்வியைத் தன் இறுதிப் பயணத்தில் சுமந்துதானே செல்லுது. மாரடைப்பும், கேன்சரும் இப்போ எங்கு பார்த்தாலும் பரவிக் கிடக்குல்ல ஆயா” என நான் சொன்னதும், என்னைத் திரும்பிப் பார்த்த பச்சைச்சேலை ‘பேராண்டி சொல்றது சரிதானே. என்னக்கி அந்தக் கருமம் புடிச்ச ஊசியப் போட்டோமோ அப்போல்ல இருந்து எங்கிட்டுப் பார்த்தாலும் சாவுதான்’ என்றது. சிவப்புச் சேலையோ கண்களை இடுக்கி என்னைப் பார்த்தது, ‘ஏன்டி இவளே… அது நம்ம கண்ணம்மாச் சின்னத்தா பேரன்மாரிக்க இருக்கு… அதப் போயி பேராண்டிங்கிறே. மொற கெட்டவளே… அது நமக்குத் தம்பி மயனில்லயா…?’ என்றதும் எங்கப்பத்தா பேரைச் சரியாச் சொல்றாங்களே… இவுக யாரு என யோசித்தேன். எனக்கு ஞாபகம் இல்லை.

‘அட நீ பாட்டுக்கு மொகந்தெரியாத ஆளுவளப் பாத்து இன்னாரு பேரன்னு சொல்லாத. கண்ணம்மாச் சின்னத்தா மவந்தான் வெவசாயம் அத்துப் போனப்போ இங்க பொழப்புத்தழப்பு சரியில்லன்னு வெளியூருப் பக்கமாப் போயிருச்சுல்ல. அதோட புள்ளகுட்டிகளெல்லாம் எங்க இருக்குகளோ… இங்க எதுக்கு வரப்போவுதுக… சும்மா யாரப்பாத்தாலும் அவுக சொந்தம் இவுக சொந்தமுன்னு…’ என அதட்டியது பச்சைச் சேலை.

‘அடத் தெரியாமத்தான் சொல்றேனாக்கும். மொகச்சாயல் அப்புடியே அந்தக்கா மாரியேயிருக்கு. அந்த ஒத்தநாடி காட்டிக் கொடுத்துடுதுல்ல…’ எனச் சொன்னதும் சிவப்புச் சேலை என் பக்கம் நன்றாகத் திரும்பி, “தம்பி நீங்க…” என ஆரம்பிக்க, “ஆமாங்க… நானும் இந்த ஊருதான். நீங்க சொன்ன அதே கண்ணம்மா பேரன்தான்” என்றேன்.

“சொன்னேன் பாத்தியா… ஆளப் பாத்தாத் தெரியாதா…? வாயடி குண்டியடி அடிச்சே. தம்பி நீங்கள்லாம் இப்ப இங்கிட்டு வர்றதே இல்லயில்ல. ஆமா எங்களத் தெரியிதா…?”

“அப்பா அம்மாவோட இறப்புக்குப் பின்னால இங்கிட்டு வர்றதே இல்லை. பார்த்த முகமா இருக்கீங்க, ஆனா சட்டுன்னு ஞாபகத்துல வரலங்க”

“ஆமாமா… ஊருப்பக்கம் வரப்போக இருந்தா ஞாபகத்துல இருக்கும். ஆடிக்கொரு தரம் அம்மாசக்கி ஒரு வாட்டி வர்றவுகளுக்கு எப்புடி ஞாபகத்துல இருக்குங்கிறேன். அதுவும் உள்ளூரா இருந்தாகூட பாத்ததும் சட்டுன்னு அவுக யாருன்னு கண்டுக்கலாம். பக்கத்து ஊருக்காரியள எப்புடித் தெரியும்” என்ற சிவப்புச் சேலை, “நாங்க கீழச்செம்மாரி, இவ எந்தங்கச்சி… உங்கப்பத்தா எங்களுக்கு சின்னத்தா மொற, உங்கப்பாரு தம்பி வேணும்” வெற்றிலைக் கறை படிந்த பல் தெரியச் சிரித்தாள்.

“அப்ப நீங்க எனக்கு அத்தை” உறவு முறையைச் சொன்னேன்.

“ஆமாமா அயித்ததான்… அயித்ததான்…” வெட்கப்பட்டது பச்சை சேலை.

“இந்தப் பாரியோடதானே நீங்கள்லாம் இந்தப் பள்ளிக்கொடத்துல படிச்சிய… பாத்திருக்கேன், அப்ப நீங்க எல்லாரும் ஒண்ணாவே திரிவீங்கள்ல. ஆமாமா நெனவிருக்கு… எங்கூரு கார்த்தி, நீயெல்லாம் எங்க பாத்தாலும் ஒண்ணாத்தான் இருப்பிய. இப்புடிப் போவான்னு நெனக்கலயேப்பா. அவனோட பொண்டாட்டி எங்கூர்க்காரிதான். பாவம், இனி அந்தப்புள்ள பொட்டப்புள்ளயள வச்சிக்கிட்டு எப்புடிக் காலத்த ஓட்டப் போறாளோ தெரியல. பொண்டாட்டிய எங்கயும் அலய விடாது பாரி. வெளி வேல அம்புட்டயும் அதுவே பாத்துக்கும். அவ பொறந்த வீட்டுல மூணு மாப்ள, இது நடுவுலது… அங்க எல்லாருக்கும் இதத்தான் புடிக்கும். மாமனாரு வீட்டு வேலயவும் இழுத்துப் போட்டுப் பாக்கும். இனி அவதானே எல்லாத்தயும் பாக்கணும்”

“ஆமா… எப்பவும் அவனோடதான் கெடப்போம். இப்ப வரக்கிம் எனக்கும் அவந்தான் எல்லா வேலையும் பாத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தான். எல்லாருக்கும் எல்லாமுமா இருந்தவன் இப்ப எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டுப் பொயிட்டான். அவன் செத்துட்டான்னு கேள்விப்பட்டதும் ராத்திரியே கிளம்பி வந்துட்டோம். இந்தா நீ முன்னால போடான்னு அவனை வழி அனுப்பத்தான் நாங்க படிச்ச பள்ளிக்கூட வாசல்ல காத்துக்கிட்டுக் கிடக்கேன்” சொன்னபோது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

“செரி… செரி… விடுப்பா. அழுது என்னாவப்போவுது. போன உசுரு வரப்போவுதாக்கும்… அந்தப்புள்ளயளுக்கு ஒத்தாசயா இருங்க. அப்புடியே விட்டிருறாதிய” சிவப்புச் சேலை அருகில் வந்து முதுகில் ஆறுதலாய் கையால் தட்டியது. அவரின் சேலையில் அம்மாவின் வாசனை. இந்த வாசனையை எல்லாம் இழந்து எத்தனை வருசமாச்சு… ம், காலம் எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டே வருது. அம்மா, அப்பா வரிசையில இதோ இப்ப பாரி.

‘ஏம்ப்பா வெயில் ஏறிக்கிட்டே போவுது, அப்பறம் சுடுகாடு போயி எல்லாம் முடிச்சி வர நேரமாயிருமுல்லப்பா… பக்கத்துல இல்லயில்ல, ஆத்தங்கரக்கில்ல போவணும். எல்லாரும் வந்துட்டாகன்னா நீர்மால எடுக்கப் போகலாமுல்ல…’ பாரி வீட்டு வாசலில் நின்று கொண்டு ஒரு மீசை கத்தினார்.

வீட்டுக்கு உள்ளே இருந்து வந்த பாரியோட மாமா சாமிநாதன், ‘இன்னம் அவனோட அண்ணன், மூத்தவன் வரலப்பா… கொஞ்சம் பாப்போம்’ என்று சத்தமாச் சொன்னார்.

“இருக்க வரைக்கும்தான் எல்லாமே… இல்லயாத்த. இறந்துட்டா வேகவேகமா கொண்டேயி பொதைக்கவோ எரிக்கவோ செஞ்சிடுறோமுல்ல… அம்புட்டுத்தான் மனுசப்பய வாழ்க்கை” உறவு சொல்லிப் பேசியதும் பச்சைச் சேலை எனக்கருகில் இருந்த இடத்தில் அமர்ந்து “பின்ன என்னப்பா… இந்த உடம்பு ஊறுகா போடக்கூட ஆவதுல்ல. செத்த மீனு கருவாடு, அறுத்த ஆடு உப்புக் கண்டம்ன்னு எல்லாத்தயும் காயப்போட்டு நாக்குக்கு ருசியா சாப்பிடுவோம். ஆனா நாம செத்தா நாறிப் போயிருவோமுல்ல. அன்னக்கி தவிடு, அயிசுன்னு போட்டு ரெண்டு நாக்கூட வச்சிருந்தாவ. இப்பல்லாம் நம்மள அயிசுப் பெட்டிக்குள்ள வக்காட்டி நாத்தமெடுத்துப் போயிருமுல்ல” பெரிய விசயத்தை சாதாரணமாச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார்.

தன்னுடன் நின்றவரிடம் ஏதோ வேலை சொல்லிவிட்டு பள்ளிக்கூடப் பக்கமாய் பார்த்த சாமிநாதன், என்னைப் பார்த்துவிட்டு “ஏய் செந்தி… மூணாவது மனுசனாட்டம் அங்கன உக்காந்திருக்கே. இங்கிட்டு எந்திரிச்சி வா… அவனுக்கு நீங்கதானேப்பா எல்லாம் பாக்கணும்” எனக் கத்த, நேத்து வரைக்கும் அவன்தானே மாமா எனக்கு எல்லா வேலையும் பாத்துக் கொடுத்தான் என மனசுக்குள் நினைத்தபடி பாரி வீட்டுக்கு எழுந்து சென்றேன்.

மாமா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பெரிய புள்ளக்கி ஒரு மாப்ள வந்திருக்கு மாமா. சனிக்கெழம நாம போயி பாத்துட்டு வருவோமுன்னு முந்தாநாளு ராத்திரித்தான் போன்ல சொன்னான். அப்பக்கூட உன்னயப் பத்தித்தான் பேசினான். இப்புடி விட்டுட்டுப் பொயிட்டானே மாப்ள” எனக் கலங்கினார். பதில் சொல்லத் தெரியாமல் மௌனித்திருந்தேன்.

அவர் உள்ளே போக, நான் அங்கு கிடந்த சேரில் உட்கார்ந்தேன். திண்ணை இருந்த வீட்டை இடித்துப் பெரிதாகக் கட்டியிருந்தான். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாரியை வெளியே எடுத்துக் கிடத்தியிருப்பது வாசலில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது. அவனது மனைவி, மகள்களின் அழுகை மனதை ஏதோ செய்தது. அவர்களைப் பார்க்க முடியாமல், குறிப்பா பாரியைப் பார்க்கக் கூடாது என்பதால்தான் பள்ளிக்கூடப் பக்கம் போய் இருந்தேன்.

புவனா உள்ளேதான் இருந்தாள். கொஞ்ச நாளாவே அவளுக்கு கால் வலி வேற. நீ இரு, நான் மட்டும் பொயிட்டு வாறேன்னு சொன்னாலும் கேக்கலை. அண்ணனைப் பார்க்கணும்ன்னு விடாப்பிடியா வந்துட்டா, அவ வந்ததாலே கார்லயே வந்துட்டேன். எங்கிட்ட எல்லாம் சொல்லும் பாரி, எனக்கிட்டச் சொல்லாததைக்கூட புவனாக்கிட்ட சொல்வான். எப்பவும் தங்கச்சிதான்… புவனான்னு ஒருநாளுக்கூட சொன்னதில்லை. எதாயிருந்தாலும் எந்தங்கச்சி சொன்னாச் சரியா இருக்கும்ன்னு அவ சொல்ற பதிலை வச்சித்தான் மேற்கொண்டு போவான். பெரிய பொண்ணுக்கு மாப்ளை வந்த விசயத்தைக் கூட அவளிடம்தான் முதலில் சொல்லி, நல்ல குடும்பம்… பிக்கல் பிடுங்கல் இல்லை, செய்யலாமுல்லத்தான்னு கேட்டிருக்கான். படுபாவி எல்லாத்தையும் கேட்டுக் கேட்டுச் செய்யிறவன் இப்ப சாகுறதுக்கு முன்னால புவனாக்கிட்ட ஒருவார்த்தைகூட கேக்கலையே… கண் கலங்க, துடைத்துக் கொண்டேன்.

பாரியோட அப்பா ஒத்தக்கடையில பலசரக்குக் கடை வச்சிருந்தாரு. பாரி கூட நல்ல வியாபாரிதான். ஆறாப்பு படிக்கும் போதே சாமுண்ட்ரி பாக்ஸ்ல அல்லா வச்சிக் கொண்டாந்து விப்பான். ஒரு ரூபாய் பாக்கெட் வாங்குனா இருபத்தி நாலு பீசு இருக்கும். ஒண்ணு அஞ்சு காசு… இருபது காசு லாபம் கிடைக்கும். ஒரு நாள்ல மூணு, நாலு பாக்கெட் விப்பான். கடலச்சு, மாவுருண்டை, கல்கோனான்னு எல்லாமே விப்பான்.  அவனோட அல்வா வியாபாரத்துல நானெல்லாம் பார்ட்னர். ஒரு பாக்கெட் வித்துக் கொடுத்தா லாபத்துல எனக்குப் பத்துக்காசு கிடைக்கும்.

பொன்வண்டு சீசன்ல வாகமரத்துல இருக்க பொன்வண்டைப் பிடிச்சாந்து, விப்போம். அதுல நாங்க நாலைஞ்சி பேர் பார்ட்னருனாலும் பாரிதான் விப்பான்.  அது போடுற அழகான கலர் முட்டைக்காகவே அவன் சொல்ற காசுக்கு வாங்குவானுங்க. படிப்பை விட்டதும் அப்பாவோட பலசரக்குக் கடையைப் பார்த்தவன் அவரோட இறப்புக்குப் பின்னால முதலாளி ஆயிட்டான். கடையையும் விரிவு படுத்திட்டான். நல்ல உழைப்பாளி… கடைக்கு இப்போ நல்ல பேரு. ஓடிக்கிட்டே இருந்தான். இப்பத்தான் படுத்திருக்கான். இனி நீண்ட தூக்கம், இது நிலையான ஓய்வுதானே.

சாமிநாத மாமா என்னருகில் வர, “மாமா பெரிய அண்ணனுக்கும் பாரிக்கும் பேச்சு வார்த்தையில்லையில்ல… அவரு வரணுமின்னு நீர்மாலை எடுக்கப் போவாம இருக்கியளே… வெயில் அதிகமாயிருக்கு, அவர் வருவாரா… இல்ல ஆகவேண்டியதைப் பார்க்கலாமா” என்றபடி எழுந்தேன்.

“விபரம் சொல்லியாச்சு. வர்றேன்னு சொன்னானாம். இதுவரக்கிம் காணோம், கொஞ்ச நேரம் பார்ப்போம். இது சாவுல்ல… தூக்குனதுக்கு அப்பறம் வந்து சண்டக்கி நின்னா…” என்ற மாமா, “என்னத்தக் கொண்டு போப்போறோம் மாப்ள… இருக்கும் போது ஏதோ கோபத்துல அத்துக்கிட்டுருறோம். அதுவே உறவ முறிச்சிருது. அப்பறம் பொறக்கவா போறோம். எல்லா வீம்பயும் விட்டுட்டு கடேசிய அந்த முகத்தப் பாத்துட்டுப் போறதுல என்ன வந்துறப் போகுது சொல்லு. வீராப்புலயும், வீம்புலயும்தான் இந்த மனுசப் பயக வீணாப் போறோம் மாப்ள. எனக்கும் எந்தம்பிக்கும் அடிதடி, வெட்டுக் குத்து வரை போச்சு, பாரி உங்கிட்ட எல்லாம் சொல்லியிருப்பானுல்ல… அவம் பொண்டாட்டி திடீர்ன்னு செத்துட்டா, எல்லாரும் நீங்க அங்க போவாதீங்க உங்க தம்பி சொல்லி விடலயில்லன்னாங்க. பொண்டாட்டிய சாகக் கொடுத்தவன், எங்கிட்டு வந்து சொல்வான்னு நானே போனேன். அவனும் ஒண்ணும் சொல்லல, நானும் ஒண்ணும் பேசல. அந்தப்புள்ளய அப்படிப் பாக்கமுடியாம அழுதுட்டேன். பயலும் பெரிய பொம்பளப்புள்ளயும் ஓடியாந்து பெரியப்பான்னு கட்டிக்கிச்சுக. உடஞ்சிட்டேனுல்ல… பாசத்துக்கு முன்னால வீம்பு, வீராப்பெல்லாம் எம்மாத்திரம் மாப்ள” கண்ணைத் துடைத்துக் கொண்டு, செருமிக் கொண்டார்.

வெயில் நேரத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

எனக்கு புவனா கால்வலியோட எப்புடி உக்காந்திருக்காளோங்கிற எண்ணம் மனசுக்குள் இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல பாரி போயிருவானுல்ல என்ற நினைப்பு அதை அழுத்தி மேலெழுந்தது. வலித்தது.

‘ஏம்ப்பா… நேரமாகுது அப்பறம் வெயில்ல போயித் திரும்ப முடியாது. இருக்க கூட்டமும் போயிருமப்பா… அவரு வர்றமாரித் தெரியல’ மீண்டும் மீசை குரல் கொடுத்தது.

மாமாவும் அதை ஆமோதிக்க, நீர்மாலை எடுக்கக் கிளம்பினார்கள்.

பாரியைக் குளிப்பாட்டி, எண்ணெயும் சீயக்காயும் தொட்டு வைக்கும் போது நான் ஒதுக்கி நின்றேன். எனக்கு பாரியை அப்படிப் பார்க்கும் மனநிலை சுத்தமாக இல்லை என்பதால்தான் அவன் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் போதே பார்க்க மனமில்லாமல்… முடியாமல் எங்கோ வெறித்தபடி மாலையைப் போட்டுவிட்டு வேகமாக வெளியில் வந்தேன்.

வச்சிட்டியா எனக் கேட்ட மாமாவிடம் தலையாட்டினேன். அவனுக்கு எப்படி நான் முறை செய்வது..? உடைந்து உடைந்து அழும் மனதை அடக்க முடியாமல் தவித்தேன். என் தவிப்பை கண்கள் நீரால் கழுவிக் கொண்டே இருந்தன.

‘எல்லாரும் தொட்டு வச்சாச்சா..?’ என்ற கேள்விக்குப் பின் பாரிக்கான எல்லாச் செய்முறைகளும் முடிந்து பாடையில் ஏறினான்.

அவன் பொண்டாட்டியும் பிள்ளைகளும் கிடந்து கதற, வீட்டு வாசல்வரை போனவன் காட்டைப் பார்க்க முகத்தை வைத்துக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தான்.

நான் சுடுகாட்டுக்குப் போகும் கூட்டத்தோடு நடக்காமல் ஓரமாக நிற்க, என்னருகே வந்த புவனா “நீங்க போகலயா..?” என்றாள். “என்னால முடியாது புவி… அவனை எரிக்கிறதை நானெப்படி பார்ப்பேன்” என உடைந்தேன்.

அவள் புரிந்து கொண்டவளாய் என் தோளில் அழுத்தி, ‘கிளம்புவோம்’ என்றாள்.

‘அடுத்து எப்படா வருவே…?’ எனக் கேட்கும் என் நண்பன் பாரி, எங்களுக்கு முன்னே போய்க் கொண்டிருந்தான்.

நாங்கள் அவன் பின்னே காரை நிறுத்தியிருந்த இடம் நோக்கி கனமான இதயத்துடன் நடக்க மறுக்கும் கால்களை வலுக்கட்டாயமாய் நகர்த்தி நடந்தோம்.

‘ஆத்தா இவனைக் காரை மெதுவா ஓட்டச் சொல்லு. இங்க வந்தாத்தான் மாப்ள மாப்ளயின்னு குலாவுவான்… ஊரு எல்லையைக் கடந்துட்டா அவன் பேசமாட்டான் நீ மறக்காம போன் பண்ணு’ என அவன் சொல்லும் குரல் என் காதுக்குள் கேட்க, அவன் வலப்புறமாக திரும்பிக் கொண்டிருந்தான்.

“போனோடனே போன் பண்ணுத்தான்னு அண்ணன் சொல்லும்… இன்னக்கி நான் யாருக்குப் போன் பண்ணுவேன்” என்றபடி புவனா உடைந்தாள்.

அவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டேன், என் மனசு நொறுங்கிக் கொண்டிருந்தது.

000

பரிவை சே.குமார்

இதுவரை எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார், அறுகு, மாதரசி என்ற சிறுகதைத் தொகுப்புகளும்; வேரும் விழுதுகளும்,  திருவிழா, காளையன், சாக்காடு, மருள், உன்மத்தம், கறுப்பி என்ற நாவல்களும்; உள்ளூர் இலக்கியம் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன. எதிர்சேவை சிறுகதைத் தொகுப்புக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் வட்டார வழக்குக்கான பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். விண்மீன் மின்னிதழில் ஆசிரியராகவும் இருக்கிறார். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *