ரமீஸ் பிலாலி
மாலை ஐந்தேகால். வானம் மூடிக் கொண்டிருக்கிறது. மண் வாசத்துடன் காற்று சில்லென்று வீசுகிறது. திறந்த வெளியில் ஜனாஸா தொழ வேண்டும் என்பதால் அஸர் தொழுகையைப் பத்து நிமிடம் முற்படுத்தி முடித்துவிட்டார்கள். பள்ளிவாசக்கு வெளியே மேற்குப்பக்கத்தில் இருபதுக்கு எண்பது அடியளவில் சிமெண்ட் தளம் போட்டிருந்தார்கள். அங்கேதான் ஜனாஸா தொழுகை நடக்குமாம். கூட்டம் அங்கே வரிசை கூடியது. முன் வராந்தாவில் கழற்றிப் போட்டிருந்த செருப்பை அணிந்து கொண்டு வந்து நான் முன் வரிசையின் ஓரத்தில் நின்றேன். எனக்குப் பின்பும் நான்கைந்து பேர்கள் வந்து நின்று வரிசை மேலும் நீளமாகிவிட்டது. சற்று குனிந்து இடது பக்கமாக எட்டிப் பார்த்தேன். தங்க நிற இழைகளால் பூவேலைப்பாடும் அறபி வாசகங்களும் தைத்திருந்த பச்சை நிற சாட்டின் துணி விரித்த சந்தூக்கு இறக்கி வைக்கப்பட்டிருந்தது.
“எல்லாரும் வந்தாச்சா?” என்று உரத்த குரலில் கேட்டபடி ஒருவர் சந்தூக்குக்கு அப்பால் எங்களை முன்னோக்கியவராக வந்து நின்றார். தோராயமாக ஐம்பது வயது. கல்லி வைத்துத் தைத்த வெள்ளை ஜிப்பா அவரின் நெரிய ஒடிசலான உருவத்துக்குப் பாந்தமாக இருந்தது. மைநீலக் கைலி காற்றில் படபடத்தது. தொண்டைக்குழி வரை புல்லுக்கட்டு மாதிரி நீண்டிருந்த பாதி நரைத்த தாடியை விரல்களால் ஒருமுறை கோதிவிட்டபடி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பேச ஆரம்பித்தார். அந்த ஊரின் ‘தப்லீக் ஜமாஅத் பொறுப்புதாரி’யாக இருக்கும் என்று அனுமானித்தேன். பொதுவாக ஜனாஸா தொழுகைக்கு முன் பயான் பண்ண மாட்டார்கள். ஒருவேளை இங்கே அது ஊர்ப்பழக்கமாக இருக்கலாம் என்று நினைத்தேன். எனினும், இப்போது அவர் பேச ஆரம்பத்தது சற்று எரிச்சலாக இருந்தது. இந்த ஜனாஸாவிலுமா? என்று யோசித்தபடி முகத்தைத் திருப்பி நேரே பார்த்தேன். பள்ளியை அடுத்து பெரிய ஏரிப் பள்ளம். ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது. ஓரமெல்லாம் கருவேலம். அதற்கப்பால் நஞ்சைக்காடு. அதற்கும் அப்பால் ரோட்டில் வாகனங்கள் சரேலென்று பாய்ந்து கொண்டிருந்தன.
“வளநாட்ல இந்த மாசம் மட்டும் இது மூனாவது ஆக்ஸிடெண்ட் ஜனாஸா…” என்று அவர் சொன்னதும் என் எண்ணம் மாறிவிட்டது. அந்தக் குரலில் தொனித்து என் காதில் விழுந்த உண்மையாய வேதனையும் அக்கறையும் உடனே நெஞ்சுக்குள் பாய்ந்து சோகத்தைக் கிளறிற்று. நான் மீண்டும் அவரை நோக்கினேன். “எல்லாம் வாலிப வயசுப் பசங்க. வாழ வேண்டிய வயசுல இப்படி விபத்துல உசிர விட்டீங்கன்னா இந்த ஊரு என்னத்தா ஆவுறது? கலியாணம் பண்ண வேண்டிய வயசுல இப்படி ஜனாஸா நடக்குதே, கொஞ்சம் யோசிங்கத்தா. எங்களுக்கெல்லாம் வயசாய்க்கிட்டுப் போகுது. குடும்பத்துக்கும் ஊருக்கும் எங்களால ஆனத செஞ்சு முடிச்சு ஓயப்போறோம். அடுத்த தலைமுறை நீங்கதான். நீங்க இப்படி அஜாக்கிரதையா மவ்த்தாய்ட்டீங்கன்னா ஒங்க குடும்பம் என்னாகும்னு யோசிங்கத்தா. தயவு செஞ்சு ராத்திரி பத்து மணிக்கு மேல ஊர விட்டு வெளீல போறத நிறுத்துங்க. அப்புறம், பள்ளிவாசலுக்குத் தொழுக வர்றீங்கன்னா தொழுது முடிச்சதும் வீட்டுக்குப் போயிருங்க. நாலஞ்சு பசங்கள நான் டெய்லி பாக்குறேன், நேரா அம்மன் கோயிலு அரச மரத்தடீல போயி உக்காந்து அடுத்த தொழுக வரய்க்கும் பேசிக்கிட்டிருக்கீங்க. தயவு செஞ்சு வெட்டிப் பொழுது போக்குறத நிறுத்துங்க. அப்படிப் போயி உக்காராதீங்க… … …” அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நான் சந்தூக்கைப் பார்த்தேன். உள்ளே சடலமாகக் கிடக்கும் வாலிபனுக்கு இருபத்தெட்டு வயது. தூரத்துச் சொந்தத்தில் எனக்குத் தம்பி முறை. தன் அண்ணனின் நிச்சயத்துக்காக ஒருமாத விடுமுறை எடுத்துக்கொண்டு மலேசியாவில் இருந்து ஏழு வருசம் கழிச்சு வந்தவனுக்கு இப்படி விபத்தில் உயிர் போக வேண்டும் என்று எழுதியிருக்கிறது.
ஜனாஸா தொழுகை முடிந்ததும் சந்தூக்கைத் தூக்கிக் கொண்டு பள்ளியின் பக்கவாட்டில் இருந்த ஒரு வாசலின் வழியாக கப்றுஸ்தானுக்கு விரைந்தார்கள். கூட்டத்தில் சிலர் மட்டும் கலைந்து அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். அது பள்ளியின் தெற்குப் பக்கத்தில் இருந்தது. ரியல் எஸ்டேட்காரன் பிளாட் போடது போல் சச்சதுரப் பகுதிகளாகப் பிரித்து இடையே நடந்து செல்ல சிமெண்ட் பாதைகள் பாவியிருந்தார்கள். நிழலிட்டபடி அதன் ஓரங்களில் மரங்களும் நின்றன. தெற்கு எல்லையின் சுவருக்கு முன் இருந்த சதுரப் பரப்பில் ஏற்கனவே கப்றுக்குழி வெட்டி ஆயத்தமாக இருந்தது. லேசாகத் தூரல் ஆரம்பித்திருந்தது. அவசரமாக அடக்க வேண்டியிருப்பது எல்லாருக்கும் தெரிந்தது. மழைக் காற்றுக்கு மரங்கள் ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்தன. நெட்டையாக வளர்ந்திருந்த சரக்கொன்றை ஒன்று மஞ்சள் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தது. கப்றுக்குள்ளும் சில பூக்கள் விழுந்தன. மய்யித்தை மண்ணறைக்குள் வைத்துவிட்டு விரைந்து சவுக்கங் கழிகளைச் சாய்மானமாக அடுக்கி முட்டுக் கொடுத்து ஓலைப் பாயை மடக்கி மூடிவிட்டு இரண்டு ஆட்களும் ஏறி மேலே வந்த பின்னர் வேறு இரண்டு பேர் மம்மட்டியால் மண்ணைச் சரித்து கப்றை மூட ஆரம்பித்தனர். அரை மயக்கத்தில் விசும்பி அழுது கொண்டிருந்த மூத்தவனை இரண்டு பேர் தாங்கிப் பிடித்தபடி நின்றனர். அத்தாவின் இறப்புக்குப் பின்னர் கடந்த பத்தாண்டுகளாகக் குடும்பத்தைத் தாங்கும் தூணாக நின்றவன் மண்ணுக்குள் அடங்கிவிட்டான் என்பதை அவனால் எப்படித் தாங்க முடியும்?
மண்ணை நீள வாக்கில் மேடாகக் குவித்து மம்மட்டியின் அடிப்பக்கத்தால் வைத்து அழுத்தி அழுத்தி ‘மக்பரா’வை ஒரு ஷேப்பாக வடிவமைத்த பின்னர் அதன் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு பசுங்கிளைகளை நட்டு வைத்தனர். மோதீனார் சிறிய வாளி ஒன்றில் இருந்த தண்ணீரை தன் கையால் அள்ளி அள்ளி மக்பராவின் மீது தெளித்தார். இமாமுடன் சேர்ந்து மோதினாரும் சிச்சாவும் மல்லிகைப்பூச் சரங்களை அதன் மீது பரத்திவிட்டு ரோஜாப் பூக்களையும் தூவினார். “அல்ஃபாத்திஹா” என்று இமாம் தன் இரு கைகளையும் ஏந்தியபடி உரத்தக் குரல் எழுப்பினார். நின்றிருந்தவர்களும் கைகளை ஏந்தி ஓத ஆரம்பித்தனர். தொடர்ந்து, அடக்கப்பட்டவரின் பாவ மன்னிப்புக்காகவும் மறுமையில் சொர்க்க வாழ்வுக்காகவும் இமாம் துஆ ஓதினார். நாலைந்து பேர் ஓதாமல் நிற்பதையும் பார்த்தேன். வேறு இயக்கவாதிகள். இவர் முடித்த பின்னர் அவர்கள் தனியாக ஓதிக் கொள்வார்கள். மீண்டும் அனைவரும் மவ்த்து வீட்டை நோக்கி கூட்டம் நகர்ந்தது. ஒரு ஐம்பது பேர் இருக்கும். அங்கே ஒரு ஃபாத்திஹாவும் துஆவும் ஓதிவிட்டுத்தான் ஊரார் கலைந்து போவார்கள்.
சிறிய வீடு என்பதால் பெண்கள் கூட்டத்துக்கு இடம் போதவில்லை. பக்கத்தில் இருந்த காலி மனையில் பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த பெண்கள், ஜமாஅத் கூட்டம் வருவதைப் பார்த்ததும் வீட்டுக்குள் போக முண்டியடித்தார்கள். அது முடியாத சிலர் மாடிப் படிகளில் ஏறி நின்றுகொண்டார்கள். அந்தக் காலி மனையில்தான் மதியம் சாப்பாடு நடந்தது. வெள்ளைச் சோறும் கறி மணக்கும் தாழியானமும். மரண வீட்டில் கறி விருந்தா என்று சிலருக்குத் தோன்றும் போலும். “மட்டன் இல்லாம சால்னா மட்டும் ஊத்துத்தா” என்று கேட்டு வாங்கி கொண்டார்கள். (கலியாணம் என்றால் ‘இன்னும் ரெண்டு மட்டன் பீஸ் போடுத்தா’ என்று கேட்பார்கள். இது மவ்த் வீடு என்பதால் தொட்டுக்கொள்ள வைக்கும் அவித்த முட்டையும் அப்பளமும் வாழைக்காய் ரசமும் இல்லை.) டேபிள் சேர்கள் எல்லாம் மடக்கி ஓரமாக வைக்கப்பட்டிருந்த அந்தக் காலி மனையைப் பார்த்தேன். அதுவும் மலேசியா தம்பி காசு சேர்த்து வாங்கியதுதான் என்று பானு சொன்னது நியாபகம் வந்தது. தொடர்ந்து அந்தப் பையனைப் பற்றிய செய்திகள் மீண்டும் நினைவகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து வந்தன.
மூத்தவனால் நடக்கவே முடியவில்லை. வெயிலில் வதங்கிய கொத்தமல்லிக் கட்டு மாதிரி துவண்டு போயிருந்தவனை இரண்டு பேர் தாங்கலாகப் பிடித்துக் கூட்டி வந்து பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர வைத்தார்கள். ஒருவர் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தார். எதிர் பாராமல் அத்தா இறந்ததும் அடுத்து என்ன செய்வது என்று தத்தளித்தபோது, அண்ணன் படிக்கட்டும் நான் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி மலேசியாவுக்குப் போனவன், அண்ணன் எம்.சி.ஏ வரை படிக்கவும், இந்தக் காலி மனையை வாங்கிப் போடவும், இரண்டு தங்கச்சிகளைப் படிக்க வைக்கவும், மூத்த தங்கச்சிக்குத் திருமணம் முடிக்கவும், இப்போது அண்ணனுக்கு நிச்சயம் பண்ணவும் என்று எல்லாத்துக்கும் சம்பாதித்திருக்கிறான். அவன் இப்போது திடீரென்று விபத்தில் மரணித்ததை எதிர்கொள்ள முடியாமல் அந்தக் குடும்பமே தவிக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன் இரவு பதினொன்னே முக்காலுக்கு பானுவின் கைப்பேசி ஒலித்தபோது நான்தான் எழுந்து எடுத்தேன். அவளின் தம்பி மனைவி பேசினார். “அண்ணே, வளநாட்ல ஷபானாவோட ரெண்டாவது அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சாம். மணப்பாற ஜிஹெச்சுல அட்மிட் பண்ணீருக்காங்களாம். அஷ்ரஃப் மச்சான் கெளம்பி போய்க்கிட்டிருக்காங்க. மச்சிகிட்ட சொல்லீருங்க. துஆ செய்ங்க.” கைப்பேசியை வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். பேச்சரவம் கேட்டு பானு தூக்கம் கலைந்தவள், “யாரு இந்த நேரத்துல?” என்றாள்.
“சஹானா பேசுச்சுப்பா”
“என்னவாம்?”
“ஷபானாவோட ரெண்டாவது அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட்டாம்”
அல்லாஹ்வே என்று பானு எழுந்து உட்கார்ந்துவிட்டாள். “என்ன ஆக்ஸிடெண்ட்டு? எப்படி ஆச்சாம்?”
“அந்த வெவரமெல்லாம் அந்தப்பிள்ள சொல்லல. தெரிஞ்சிருக்காதுன்னு நெனக்கிறேன். அஷ்ரஃப் கெளம்பிப் போய்க்கிட்டிருக்காருன்னு சொன்னுச்சு.”
“வளநாட்டுக்கா?”
“இல்ல, மணப்பாற ஜிஹெச்ல அட்மிட் பண்ணீருக்காங்களாம். அங்கெ போறாரு. இந்த ஜாமத்துல பைக்ல தனியாப் போறதும் ரிஸ்க்தான்”
“பைக்ல போகமாட்டாரு. நஸீமாவோட காரு இங்கெதான் இருந்துச்சு. அத எடுத்துக்கிட்டுப் போயிருப்பாரு. இப்ப ஃபோன் பண்ணவும் முடியாது. அவருதான் ஓட்டிக்கிட்டுப் போவாரு. காலைல கேட்டுக்கலாம். அல்லாஹ் காப்பாத்தணும்” என்றூ சொல்லிவிட்டு என்னையும் படுக்கச் சொன்னாள். நான் தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்தேன்.
காலையில் ஃபஜ்ரு தொழுது விட்டு அஷ்ரஃபை அழைத்துக் கேட்டபோது திருச்சி ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொன்னார்.
“சஹானா மணப்பாறை ஜிஹெச்னு சொன்னுச்சே?”
“தலைல பலமா அடிபட்டிருக்கு. இங்கெ ஒன்னும் பண்ண முடியாது திருச்சிக்குக் கொண்டு போங்கன்னு சொல்லிட்டாங்க மாமா. காவேரிக்குக் கூட்டிட்டு வந்தோம். அங்கயும் முடியாதுன்னுட்டாங்க. நியூரோ ஒன் ஹாஸ்பிடல்லையும் அதேதான் சொன்னாங்க. அப்புறம் ஜிஹெச்சுக்குக் கூட்டிட்டு வந்தோம். ஆப்பரேஷன் பண்ணாலும் பொழைக்க ரெண்டு பெர்சண்ட் சான்ஸ்தான் இருக்கு. அதை முயற்சி பண்ணிப் பாக்கலாமான்னு டாக்டர் கேட்டாரு. சரின்னு சொல்லீருக்கோம்.”
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் கிளம்ப ரெடியாகிவிட்டேன். மகனையும் கிளம்பச் சொன்னேன். “திருச்சி ஜிஹெச்சுக்கு வந்துட்டாங்களாம். நானும் ரூஸ்பியும் போய்ப் பாத்துட்டு வந்துர்றோம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். காலை ஆறரை மணிக்கு டிராஃபிக் இல்லாமல் ரோடு அமைதியாகக் கிடந்தது. டோல்கேட் வழியாகப் பாலம் ஏறி கண்டோன்மண்ட்டைக் கடந்து ஜிஹெச்சுக்குப் போக கால்மணி நேரம்தான் ஆனது. மெய்ன் கேட்டுக்குள் நுழைந்து இடது பக்கம் பார்க்கிங் பண்ணியிருந்த டூவீலர் வரிசையில் நிறுத்திவிட்டு அஷரஃபுக்கு அழைத்தேன். மெய்ன் கட்டடத்தையும் டீக்கடைகளையும் தாண்டி உள்ளே கடைசிக்கு வரச் சொன்னார். வலது பக்கம் புதுக் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தது. நூத்திப்பத்துக் கோடியில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை விரிவாக்கப்படுகிறது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையில் செய்தி வந்தது. விபத்துகளுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு உள்ள கட்டடம் கடைசியில் இருந்தது. முன் பக்கத்தில் ஒரு பெரிய மரமும் அதன் அடியில் வட்டமாகப் பசும்புல் மேடையும் இருந்தது. அதில் சிலர் தூங்கிக் கிடந்தார்கள், ஈரிழைத் துண்டை விரித்தும் சும்மாவும். எத்தனை சனம் எத்தனை நாட்கள் கிடக்கிறதோ?
அஷ்ரஃப் வாசலில்தான் நின்றார். என்ன ஆச்சு? எப்போ ஆச்சு? என்று விசாரித்தேன். இரவு பத்தரை மணிக்கு என்று சொன்னார். நண்பன் ஒருவனைப் பார்ப்பதற்காக அப்துல்லாஹ்வும் அவரின் நண்பர்கள் இரண்டு பேரும் வளநாட்டில் இருந்து புத்தாநத்தம் போயிருக்கிறார்கள், பைக்கில் ட்ரிபிள்ஸில். திரும்பி வரும்போது கைக்காட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் பஞ்சாபி தாபாவில் சாப்பிடலாம் என்று பேசி அங்கே போய் சாப்பிட்டிருக்கிறார்கள். திரும்பி வளநாட்டுக்கு வரும்போது எதிரே வந்த பைக்கில் நேருக்கு நேர் மோதியிருக்கிறது. எதிர் பைக்கில் வந்த ரெண்டு பேரும் செம போதையாம். டாஸ்மாக்கில் இருந்து கிளம்பி வந்திருக்கிறான்கள். அடித்துத் தூக்கிப் போட்டதில் ஐந்து பேரும் ரோட்டிலேயே சிதறிக் கிடந்திருக்கிறார்கள். அரை மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று பார்த்துவிட்டு அக்கம் பக்கத்து கிராமங்களில் தனக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லி அப்படியே சம்பந்தப்பட்ட ஆட்களுக்கும் செய்தி போய் ஆம்புலன்ஸுடன் வந்து மணப்பாறை ஜிஹெச்சுக்குக் கொண்டு போய்விட்டார்களாம்.
“திருச்சி திண்டுக்கல் ரோட்லகூட மெதுவாப் போவானுங்க. மதுர ரோடு ஸ்ட்ரெய்ட்டா ஒரே ஸ்ட்ரெச்சுல இருக்குறதுனால ஹைஸ்பீடுல பறக்கத்தான் செய்வானுங்க” என்றார் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒருத்தர். ஆனால் இந்த விபத்து நெடுஞ்சாலையில் நடக்கவில்லை. தாபாவில் இருந்து ஓரமாக ஓட்டி வந்து சர்வீஸ் ரோட்டில் வரும்போது நடந்திருக்கிறது என்று அஷ்ரஃப் சொன்னார். மற்ற நான்கு பேருக்கும் கை கால்களில் முறிவுடன் உடலில் சிராய்ப்புகளும் ஊமைக் காயமும்தான் என்பதால் நினைவு திரும்பிவிட்டதாம். இவருக்குத்தான் பின்னந்தலையில் அடி. பைக்கில் இவர் மூன்றாவதாகப் பின்னாடி உட்கார்ந்திருந்ததால் மல்லாக்க ரோட்டில் அடித்துவிட்டது. கோமா நிலைக்குப் போய்விட்டாராம்.
“இப்ப எப்படி இருக்கார்?”
“அப்சர்வேஷன்ல இருக்கார். ஆபரேஷனுக்கு ரெடி பண்ணிக்கிட்டிருக்காங்க மாமா. இப்பத்தான் வந்து மொட்டை அடிச்சாங்க. உள்ளே போய்ப் பாருங்க”
“பாக்கலாமா?”
“பாக்கலாம். போய்ப் பாருங்க.”
நானும் மகனும் உள்ளே போனோம். வளநாட்டுக்காரர் ஒருத்தர் உடன் வந்தார். குள்ளமான உருவம். வட்டமான தொப்பி அணிந்திருந்தார். நடந்து போகும்போது அவருக்கு சலாம் சொன்னேன். பதில் சொல்லிவிட்டுப் பேசினார். “நைட்டு நான்தான் ஆம்புலன்ஸ்ல மணப்பாறை கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போனேன். அப்பவே ஹோஷு இல்ல தம்பி. அங்கெ முடியாதுன்னுட்டான்னு நடுராத்திரியே கெளம்பி திருச்சிக்கு வந்தோம். நான் அப்பவே சொன்னேன் கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கே போவலாம்னு. அது என்னமோ கவர்மெண்டுன்னா சரிப்படாதுன்னு நெனக்கிறாங்க. பிரைவேட் ஆஸ்பத்திரிலதான் எல்லா வசதியும் இருக்கு, நல்லாப் பாக்குவான்னு நெனக்கிறாங்க தம்பி. இப்ப என்னாச்சு, பிரைவேட் ஆஸ்பத்திரிக்காரன்லாம் கைய விரிச்சிட்டான். ஒரு லட்சம் கட்டு, ரெண்டு லட்சம் கட்டு, ரூம் போடுறேன்னு சொல்லுவான். நாம என்னடா பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சம்னா, பணம் இல்லாதவங்க, இவங்கள்ட்ட ஒன்னும் தேராதுன்னு அனுப்பிச்சிருவான். இங்க பாருங்க, எல்லா வசதியும் இங்கயும் இருக்கு. ஆயுசு ஆண்டவன் தர்றது. டாக்டர் என்னா செய்வாரு? படச்சவன் நாடுனா எல்லாம் சரியாயிரும். இங்கெ வந்து பெரிய டாக்டர் பாத்தாரு. ஆபரேஷன் பண்ணலாம், ரெண்டு பெர்ஷன் வாய்ப்பிருக்குன்னு சொல்றாரு. அத ஏன் பண்ணாம விடணும்னு யோசிச்சுதான் சரின்னு சொல்லீருக்கோம். நான் முன்னாடியே சொன்னேன் தம்பி, கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப் போவலாம்னு. மணப்பாறைல கிளம்புறப்பவே நாடி புடிச்சுப் பாத்தேன். நாடி பலமா இருந்துச்சு. நான் நாடி புடிச்சுப் பாத்தே ஒருத்தருக்கு என்ன வியாதி இருக்கு, என்ன நெலமன்னு சொல்லீருவேன் தம்பி. அல்லாஹ் நமக்கு அந்தத் திறமைய கொடுத்திருக்கான். அவன் கொடுத்த திறமைய அவன் பாதைல நாம செலவு பண்றோம் தம்பி.”
‘நாடி பாய்’ சொல்வதற்குத் தலையாட்டியபடி நடந்தேன். அறையின் மூலையில் இருந்த ஒரு கட்டிலில் அப்துல்லாஹ் படுத்திருந்தார். கட்டுமஸ்தான உடல்வாகு. அண்ணனை விட இவர்தான் உசரமும் பலமும் சிவந்த நிறமுமாக இருப்பார். தாடி ஒதுக்கி அழகாக இருந்தது. வாய் வழியாக குழாய் செருகி இருந்தார்கள், மூச்சுக்காக. இதயத்துடிப்பையும் மானிட்டர் பண்ணிக் கொண்டிருந்தார்கள். முடி இறக்கிய மண்டை வலது பக்கமாக வீங்கி இருந்தது. மூக்கின் துவாரத்தில் ரத்தம் உறைந்திருந்தது. இடது துவாரத்தின் வழியாக சன்னமாக மூச்சு பிரிந்து ரத்தம் குமிழியிட்டு அடங்கியதைப் பார்த்ததும் எனக்கு உடலெல்லாம் ஏதோ அலை ஓடி என்னமோ பண்ணிற்று. முகத்தைச் சில நொடிகள் திருப்பிக் கொண்டேன். தொட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஏனோ அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
வாசலுக்கு வந்து அஷ்ரஃபின் அருகில் நின்றேன். மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு வந்து ஆஸ்பத்திரிகளுக்கு அலைந்து கடைசியில் இங்கே சேர்க்கப்பட்ட கதையை விரிவாகச் சொன்னார். ஆபரேஷன் முடியும்வரை அவர் சாப்பிட அவகாசம் இராது என்று தோன்றியது.
“ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்று கேட்டேன்.
“இல்ல மாமா” என்றார்.
“ஒரு டீயாவது குடிங்க அஷ்ரஃப்” என்றேன்.
“இல்ல மாமா. இப்ப இருக்குற நெலைமைல எப்படி மாமா சாப்பிடுறது? தோனவே இல்ல. அப்புறம், இங்கே ஒருத்தராவது இருக்கணும்” என்றார்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ்வின் அண்ணன் முஜீபும் அஷ்ரஃபின் தம்பி நவ்ஃபலும் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வந்தார்கள். முஜீப் அந்தப் பையை அஷ்ரஃபிடம் கொடுத்துவிட்டு, “பக்கத்துல போய்ட்டு வந்துர்றேன் மச்சான்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
பக்கத்தில் ‘நாடி பாய்’ நின்று கொண்டிருந்தார். “நீங்க இங்க இருந்து பாத்துக்குறீங்களா? பக்கத்துல போய்ட்டு வந்துர்றோம்” என்று கேட்டேன். “நீங்க போய்ட்டு வாங்க தம்பி” என்றார், என்னிடமும் அஷ்ரஃபிடமும். நாங்கள் நாலு பேரும் மெல்ல பேசிக்கொண்டே நடந்தோம். ஜிஹெச் உள்ளேயே தேநீர்க்கடைகளும் உணவகங்களும் உள்ளன. ஆவின் பாலகத்தில் நின்றோம் காபியும் ஹார்லிக்ஸும் குடித்தோம். “எதுன்னாலும் ஃபோன் பண்ணுங்க அஷ்ரஃப். ஆபரேஷன் எப்போ பண்றாங்கன்னு தகவல் சொல்லுங்க. நான் காலேஜ்ல இருப்பேன். அக்காவுக்குக் கூப்பிட்டுச் சொல்லுங்க” என்று கூறிவிட்டு நானும் ரூஸ்பியும் வீட்டுக்குத் திரும்பினோம்.
அடுத்து வந்த செய்தி அப்துல்லாஹ்வின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்று சொன்னது. பானுவுக்குதான் அஷ்ரஃப் அழைத்து விவரம் சொல்லியிருந்தார்.
“ஆபரேஷன் பண்ணுனா சான்ஸ் இருக்குன்னு சொன்னாங்களே?”
“அதுவே சந்தேகமாத்தானே சொன்னாங்க? பல்ஸ் ரேட் திடீர்னு நூத்தித் தொன்னூறுக்கு ஏறுச்சாம், அப்புறம் திடீர்னு எறங்கி இருபதுக்கு வந்துருச்சாம். அவுங்களும் ரொம்ப டிரை பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாரு.”
“ஷபானா, அவுங்க அம்மா, தங்கச்சில்லாம் வந்து பாத்தாங்களா?”
“ஆபரேஷனுக்கு முன்னாடி ஒரு தடவ பாத்துக்கட்டும்னு ஷபானாவையும் ஜுமானாவையும் மட்டும் கூட்டீட்டு வந்திருக்காரு. இந்த நிலைமைல மகனைப் பாத்தா தாங்க மாட்டாங்கன்னு ஷபானா அம்மாவக் கூட்டீட்டு வரல.”
“ம்…”
“ஷபானாவும் ஜுமானாவுமே ஒரே அழுகையாம். எங்கள இப்படி விட்டுட்டுப் போவனும்னு எப்படீண்ணே நெனச்சன்னு ஷபானா அழுதுச்சாம். அப்போ அந்தப் பையனோட கை மட்டும் நடுங்குச்சாம். கண்ணுலேர்ந்து தண்ணி வடிஞ்சுச்சாம்” என்றாள் பானு.
ஆண்டவனே! அப்படியென்றால் வெளியே பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது. ஆனால் வெளியே ரெஸ்பான்ஸ் பண்ண முடியாமல் தவிக்கிறார் என்றல்லவா தெரிகிறது. எவ்வளவு கொடுமையான நிலைமை என்று நினைத்தேன்.
அன்று இரவு இறப்புச் செய்தி வந்துவிட்டது. அஷ்ரஃபுக்கு அழைத்தேன். உறுதிப்படுத்தினார். உடலை கிடங்கில் வைத்திருக்கிறார்கள் என்றார். விபத்து என்பதால் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்துதான் தருவார்கள் என்றார். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. விபத்துக்கான எஃப்.ஐ.ஆர் போட்டது மணப்பாறை காவல் நிலையத்தில். அங்கிருந்து என்.ஓ.சி வாங்கி வந்தால்தான் போஸ்ட்மார்ட்டம் நடக்கும் என்று ஜிஹெச்சில் சொல்லிவிட்டார்கள். இன்று நாளை என்று இழுத்துக் கொண்டிருந்து மூன்றாம் நாளில்தான் உடல் கிடைத்தது. காலையிலேயே கிடைத்துவிடும் என்று சொன்னதால் வளநாடு ஜமாத்தில் சொல்லி அன்று ளுஹருக்கு ஜனாஸா என்று அறிவித்துவிட்டார்கள்.
பானுவும் நானும் பிள்ளைகளையும் மாமியையும் அழைத்துக்கொண்டு பத்து மணிக்குக் கிளம்பி பதினொரு மணி வாக்கில் வளநாட்டை அடைந்தோம். வீடு முழுக்கப் பெண்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. உள்ளிருந்து அவ்வப்போது கேவலும் அழுகையும் கலந்த துயரக் குரல்கள் எழும்பி ஓய்ந்தபடி இருந்தன. யாராவது புதிதாக உள்ளே போனால் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தன. மூன்று பெண்களின் குரல்கள் – அப்துல்லாஹ்வின் அம்மாவும் இரண்டு தங்கைகளும். ளுஹர் நேரம் நெருங்கி கொண்டிருந்தபோதும் உடல் வருவதாகத் தெரியவில்லை. முஜீபுடன் அஷ்ரஃபும் நவ்ஃபலும்தான் திருச்சி ஜிஹெச்சில் இருந்தனர். அஷ்ரஃபுக்கு அழைத்தேன். மதியம் மூன்று மணிக்குதான் கிடைக்கும்போல் தெரிகிறது என்றார். ளுஹர் தொழுது முடித்தவுடன் சொந்த பந்தங்கள் மீண்டும் வீட்டு வாசலில் வந்து நின்றுவிட்டது. முகையித்தீன் ஆண்டகையின் பெயர் கொண்ட பெரிய பள்ளிவாசலில் இருந்து பக்க வாட்டில் ஓடும் குறுகிய தெருவில் ஐம்பது அடியில் இடது பக்க குறுக்குத் தெருவுக்குள் மூன்றாவது மனையில் அப்துல்லாஹ்வின் வீடு. இரண்டாவதாக இருந்த காலி மனையிலும் தெருவிலுமாக பந்தல் போட்டிருந்தார்கள். அப்போதுதான் அண்டாவில் இருந்து அள்ளிய தாழி ஆனம் ஆவி பறக்கப் பரிமாறப்பட்டு மதிய உணவு முடிந்ததும் ஆண்கள் ஆளாளுக்கு அமர இடம் தேடி கலைந்து கொண்டிருந்தார்கள். ஒரு குழு பள்ளிவாசலை நோக்கி நகர்ந்தது. டிரைவர் எங்கள் காரை அம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த குளத்து மேட்டில் அரச மர நிழலில் நிப்பாட்டி வைத்திருந்தார். காரில் ஏசி போட்டு உட்காரப் போகிறேன் என்று ரூஸ்பி போனான். கம்பத்தில் இருந்து வந்திருந்த மச்சானும் அவனுடம் போய்விட்டார். பந்தலுக்கு அடியில் உட்கார்ந்திருந்ததில் சட்டைக்குள் வேர்த்து வழிந்தது. ஆண்கள் ஒரு இருபது இருபத்தைந்து பேர் மட்டுமே அங்கே அமர்ந்திருந்தோம். அப்போது எங்கிருந்தோ சந்தில் ஓடி வந்த ஆறு குரங்குகள் எதிர்ப் பக்கக் காலிமனையில் இருந்த தென்னை மரங்களில் விறுவிறென்று ஏறின. அதில் ஒன்று குட்டி. அதுவும் படு வேகமாக ஏறி மேலே போனது. சோகத்தால் முகம் தொங்கிக் கிடந்த கூட்டத்தில் சலசலப்புக் கிளம்பிவிட்டது. “மச்சான், அங்க உக்காராதீங்க. மண்டைல தேங்காய பறிச்சுப் போட்டுறப் போவுது” என்று ஒருவர் சொன்னதும் சிலருக்குச் சிரிப்பும் கிளம்பிவிட்டது. மேலே போன குரங்குகள் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு மீண்டும் சரசரவென்று கீழே இறங்கின. பாதி இறங்கியதும் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்துக்குப் பாய்ந்தன. ஒன்றன் பின் ஒன்றாகப் பாய்ந்து வந்த குரங்குகள் அடுத்து எதிர் வீட்டின் முன் போடப்பட்டிருந்த தகரக் கூரையில் பாய்ந்து மாடிக்கு ஏறின. மடேர் மடேர் என்று அவை தகரத்தில் விழுந்ததும் கீழே பிளாஸ்டிக் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஏழெட்டுப் பேர் பதறிக்கொண்டு எழுந்து சிதறினார்கள். அந்த வேடிக்கையும் சில நிமிடங்களுக்குச் சிரிப்பலையை எழுப்பியது.
பெண்களுக்கான பந்தியில் பானுவும் மாமியும் சாப்பிட்டு முடித்ததும் நானும் காருக்குச் சென்றேன். பள்ளி வாசலுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய பங்களா இருந்தது. மேலே உச்சியைப் பார்த்தபோது அதன் கட்டட அமைப்பு வித்தியாசமாக இருப்பதை அவதானித்தேன். அது ஒரு ஏரோப்ளேனின் வடிவம். முதலில் அது தண்ணீர்த்தொட்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பின்பக்கம் பார்த்தபோது பாதி விமானமும் அதன் ஒரு ரெக்கையும் உடைந்திருப்பது தெரிந்தது. விமானத்தின் உள்ளே பார்க்க முடிந்தது. டொப்பையாகக் கிடந்தது. பக்கவாட்டில் விமானத்துக்கு ஜன்னல்கள் இருந்தன. பச்சை சிவப்பு நீலம் என்று ஒவ்வொன்றும் ஒரு நிறமாக இருந்தது. பிள்ளைகள் விளையாடுவதற்காக அந்த பங்களாக்காரர் இப்படி ஓர் அறையைக் கட்டி வைத்தாரோ என்னவோ? விசித்திரமாக இருந்தது. இந்த ஊரின் முஸ்லிம்கள் பலரும் மலேசியா சிங்கப்பூர் என்று பயணம் போய் பொருள் ஈட்டுபவர்கள்தாம். இது சிறு வயசிலிருந்தே பயணக் கனவுகளை விதைத்து வளரும் சமுதாயம் அல்லவா? அப்படி வளர்ந்த ஒருவர் தன் பயணக் கனவின் அடையாளமாக பங்களாவின் உச்சியில் ஏரோப்ளேன் வடிவில் அறை கட்டி வைத்தார் போலும்! ஆனால் கனவு இப்படி உடைந்து கிடப்பதன் பின்னால் ஒரு பெரும் கதை இருக்க வேண்டும் என்று யோசனை ஓடியது.
நாலு மணியை நெருக்கித்தான் ஆம்புலன்ஸில் உடல் வந்து சேர்ந்தது. அங்கேயே கஃபன் செய்து கொண்டு வந்திருந்தார்கள். விபத்தில் இறந்தவருக்கு ஜனாஸா குளிப்பாட்டுவதில்லை. வீட்டுக்குள் உடலை எடுத்துச் செல்வதற்குள் கூட்டம் அல்லோல கல்லோலப்பட்டது. அம்மாவும் தங்கைகளும் கதறினார்கள். “மணமகனாப் பாக்க வேண்டிய என் மகன இப்படி மய்யித்தா அனுப்புறேனே” என்று அம்மா கதறியது கேட்டு லேசாகக் கண் கலங்கியது. பத்து நிமிடத்தில் மய்யித்தை வெளியே கொண்டு வந்து காலி மனையின் நடுவில் வைத்தார்கள். ஆண்கள் வரிசையாக வந்து ‘தீதார்’ பார்த்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். “ஆம்பளைங்க இங்கெ பார்க்க வேணாம். பள்ளிவாசல்ல பாத்துக்கலாம். பெண்கள் மட்டும் இங்கே பார்க்கட்டும்” என்று ஒருவர் குரல் கொடுத்தார். கூட்டத்தில் பாதி பேர் பள்ளிக்குப் புறப்பட்டார்கள். ஐந்து நிமிடம் ஆகவில்லை. மீண்டுமொரு குரல் மாற்றிச் சொன்னது, “மழ வர்றாப்ல இருக்குறதுனால ஆம்பளைங்களும் இங்கயே தீதார் பாத்துருங்க. பள்ளிவாசல்ல காட்ட மாட்டாங்க.” எனவே வெளியே இருந்த கூட்டம் பந்தலுக்குள் புகுந்ததில் தள்ளு முள்ளாகிவிட்டது. ஆண்கள் பார்த்துப் போனதும் பெண்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். முதலில் அப்துல்லாஹ்வின் அம்மாவையும் தங்கைகளையும் அழைத்து வந்தார்கள். ஷபானாவை பானுவும் அஷ்ரஃபும் தாங்கிப் பிடித்து அழைத்து வந்தார்கள். “தயவு செஞ்சு யாரோட ஃபோன்ல வீடியோ இருந்தாலும் அழிச்சிருங்க. அத நீங்களும் பாக்காதீங்க யாருக்கும் அனுப்பாதீங்க. என் அண்ணன கொடுமப் படுத்தாதீங்க. தயவு செஞ்சு வீடியோவ அழிச்சிருங்க” என்று ஷபானா கத்தினாள். அஷ்ரஃப் அவளைச் சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துச் சென்றான். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. பிறகு அஷ்ரஃப் சொன்னதும்தான் விளங்கியது. ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்தில் முதலில் பார்த்த மினிலாரிக்காரன் அதை வீடியோ எடுத்துதான் அக்கம் பக்க ஊர்களுக்கு அனுப்பியிருக்கிறான். அடிபட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது மயக்க நிலையிலேயே அப்துல்லாஹ் இரண்டு மூன்று தடவை வாந்தி எடுத்திருக்கிறான். அதையும் அந்த மினிலாரிக்காரன் வீடியோ பிடித்து அனுப்பியிருக்கிறான். அது பலருக்கும் பரவி ஷபானாவே அதைப் பார்த்துவிட்டாளாம். அதைத் தாங்க முடியாமல்தான் அப்படிப் பேசினாள் என்றார்.
ஒருவழியாக அடக்கம் முடித்து ஃபாத்திஹா ஓதுவதற்காக வீட்டுக்கு வந்த கூட்டத்துடன் வந்து குரங்குகள் ஏறிய தென்னை மரத்தின் கீழ் நானும் ரூஸ்பியும் மச்சானும் நின்று கொண்டிருந்தோம். திருமணம் பண்ண வேண்டிய வயசில் இப்படி இறந்துவிட்டானே என்றுதான் பலரும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். பானு இதைப் பற்றி ஒரு சந்தேகம் கேட்பாள் என்று என் மனதில் தோன்றியது: “ஒவ்வொரு ஆணுக்கும் அவனோட விலா எலும்புல இருந்து ஜோடியா ஒரு பெண் படைக்கப் பட்டிருப்பாள்னு சொல்லுவீங்கள்ல. இப்ப இவரு கல்யாணம் ஆகாமலே இறந்துட்டாரு. இவரோட ஜோடின்னு படைக்கப்பட்ட பெண் எங்கேயாவது இருப்பாள்ல. அவளோட கதி என்ன? அவளுக்குக் கல்யாணமே ஆவாதா?” இப்படி அவள் கேட்கக் கூடும் என்று நான் யோசித்துக் கொண்டே பார்வையை மிதக்க விட்டேன். எதிர்க் காலி மனையில் நான் பார்த்த காட்சியில் என் கண்கள் சட்டென்று கலங்கிவிட்டன. சிவப்பு நிறப் புள்ளிகளிட்ட கறுப்புப் பட்டாம்பூச்சிகள் இரண்டு – ஜோடியாக இணை சேர்ந்த நிலையிலேயே – மெல்ல பறந்து போய்க் கொண்டிருந்தன.
அரபிச் சொற்களின் அர்த்தம்:
அஸர் – பிற்பகல் நேரம்.
அஸ்ஸலாமு அலைக்கும் – இஸ்லாமிய முகமன். ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று பொருள்.
இமாம் – ஹஜ்ரத். பள்ளிவாசலில் தொழுகைக்குத் தலைமை தாங்குபவர்.
கப்றுஸ்தான் – முஸ்லிம்களின் மண்ணறைத் தோட்டம்.
கஃபன் – சடலத்தை வெண்ணிறத் துணிகளால் பொதியும் இஸ்லாமிய முறை.
சந்தூக்கு – இறந்தவரின் உடலை ஊர்வலமாக கப்றுஸ்தான் வரை எடுத்து வர பயன்படுத்தப்படும் பெட்டி.
சிச்சா – சித்தப்பா
தப்லீக் ஜமாஅத் – இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்று.
தீதார் – காட்சி என்று அர்த்தம்; இறப்பு வீட்டில் இது இறந்தவரின் முகத்தைக் கடைசியாகப் பார்ப்பதைக் குறிக்கும்.
துஆ – பிரார்த்தனை / இறைவேட்டல்.
பயான் – பிரசங்கம் / சொற்பொழிவு.
ஃபஜ்ரு – வைகறை, விடியல் நேரம், புலரிப் பொழுது.
ளுஹர் – நண்பகல் நேரம்.
மக்பரா – மண்ணறைக்கு அடையாளமாக அதன் மேல்பகுதியில் இருக்கும் மேடு.
மவ்த் – மரணம்.
மய்யித் – சடலம்
மோதீனார் – முஅத்தின் என்பதன் மரூஉ. பள்ளிவாசலில் ஐவேளைத் தொழுகைக்கு பாங்கு என்னும் அழைப்பு ஓதுபவர்.
ஜனாஸா தொழுகை – மரணித்தவருக்காக நடத்தப்படும் தொழுகை.
ஹோஷு – சுதாரிப்பு, பிரக்ஞை, உணர்வு நிலை.


