வன்மி

தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி துவங்கிய நாள். சுந்தரவள்ளியும், அபியும் மிகுந்த ஆவலுடன் பள்ளிக்குள் நுழைந்தனர். அன்றைக்கு எல்லா மணவர்களுமே சிறப்பான ஆடைகளுடன் வந்திருந்தனர். மழைநாளுக்கு பின்னாள் தோட்டங்களில் மலரும் மலர்களைப் போல.

சுந்தரவள்ளியின் வகுப்பறைதான் அபியும். இருவரும் நெருக்கமான நண்பர்கள். சுந்தரவள்ளிக்காக மதியம் உருளைக்கிழங்கு பொறியல் செய்து அபி எடுத்து வருவாள். சுந்தரவள்ளிக்கு உருளைக்கிழங்குப் பொறியல் மீது தீராத ஆசை. இரண்டு நாளுக்கு ஒருமுறை அபி அதனை அவளுக்காக எடுத்து வருவாள்.

அபிக்காக சுந்தரவள்ளி நெய் முறுக்கு எடுத்துவருவாள். இருவரும் வகுப்பறையில் ஒரே இடத்தில் அருகருகேதான் அமர்ந்திருப்பார்கள். இருவரும் எதாவது பேசிக்கொண்டே இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

ஆசிரியர் அவர்கள் இருவரையும் தனித் தனியாக உட்கார வைத்தாலும் அடுத்த நாளே இருவரும் ஒன்றாக இருப்பார்கள். வகுப்பறையில் மொத்தம் இருபது மாணவர்கள் உண்டு. அதில் ஆண் பிள்ளைகள் எட்டுப்பேர்தான். மிச்சம் பனிரெண்டு பெண் பிள்ளைகள்.

தேர்வு விடுப்பிற்கு பிறகு பள்ளி ஆரம்பிப்பதால் அன்றைக்கு ஆசிரியர் சுகுணா நல்ல கைத்தறி உடையில் வந்திருந்தார். இளஞ்சிவப்பு கோடுகளில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பரந்து கிடப்பது மாதிரியான கைத்தறி சேலை அது. அவர் வந்ததும் எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்தினர்.

ஆசிரியர் சுகுணா மகிழ்ச்சியோடு கையசைத்து வணக்கம் சொன்னார். அவரது தோள்பையையும் குட்டிக் குடையையும் அவரது இருக்கையில் வைத்துவிட்டு கரும்பலகையில் அன்றைக்கான நான் கிளமையை எழுதிவிட்டு சற்று பெரிதான எழுத்தில் பகிர்தல் வகுப்பு என்று எழுதினார்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்குள் வியப்பு. ஆசரியர் சுகுணா மாணவர்கள் பக்கம் திரும்பினார்.

“இது என்னெவென்று படிக்கமுடிகிறதா? பகிர்தல் வகுப்பு. அப்படின்னா… விடுமுறையில் நீங்கள் உங்கள் வீடுகளில் என்ன செய்தீர்கள். அல்லது வெளியில் போனபோது என்னவெல்லாம் பார்த்தீர்கள் என்பதை பகிர்ந்துகொள்ளும் வகுப்பு இது. என்ன ஆரம்பிக்கலாமா?” 

முதல் வரிசையில் சமரன் முதலில் எழுந்து நின்றான். எல்லோரும் அவனுக்காக கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

“நான் என் வீட்டில் ஒரு குட்டித் தோட்டம் செய்தேன். என் அப்பா எனக்கு உதவினார். அதில் சில மலர்ச் செடிகளை வைத்து தினசரி தண்ணீர் ஊற்றுகிறோம். சாயந்தர வேலையில் என் தோட்டத்திற்கு பறவைகள் வருகின்றன. சில செடிகள் பூக்கத் தொடங்கிவிட்டன.” என்று சொல்லிவிட்டு அமர்ந்தான்.

ஆசிரியர் சுகுனா கைத்தட்டிப் பாராட்டினார். கூடவே எல்லோரும் கைத்தட்டினார்கள்.

“அடுத்து…”

அடுத்த மாணவன் எழுந்து சொல்ல ஆரம்பித்தபோது, சுந்தரவள்ளிக்கு பயம் வந்திருந்தது. தேர்வு விடுமுறை முழுவதும் அவள் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே நேரத்தை செலவிட்டாள். மற்ற நேரங்களில் உறக்கம்தான். அதனை எப்படி ஆசிரியடம் சொல்வது என்று குழப்பமானாள்.

அடுத்து அடுத்து எழுந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதில் பெரும்பாலும் செடி வளர்ப்பது பற்றிதான் சொன்னார்கள். அபியும் அவ்வாறே சொல்வாள் என்று அவளுக்குத் தோண்றியது.

சட்டென்று நாமும் அது மாதிரியே ஒரு பொய்யை சொல்லிவிடலாமா? என்று சுந்தரவள்ளி யோசித்தாள். பொய் சொல்வது தவறுதான். ஆனால் அந்தப் பொய்யால் யாருக்கும் தீமை இல்லையே… அதனால் சொன்னால் என்ன என்றும் யோசித்தாள்.

அவள் யோசித்தபோதே அவள் முறை வந்துவிட்டது.

“வள்ளி… என்ன யோசனை… நீ சொல்லு…” என்று ஆசிரியர் சொன்னதும் சட்டென்று அந்தப் பொய்யைத்தான் சொன்னாள்.

“எங்க வீட்டுப் உப்பரிகையில் நான் புதுசா ஒரு பூச்செடி வளர்த்தேன்… அது ஒரு வித்தியாசமான பூக்கள் பூக்கும் செடியென்று அப்பா சொன்னார். ஆனால் அது இன்னும் பூக்கவில்லை. நான் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறேன். அது பூத்ததும் நான் உங்களுக்கு எடுத்துவருகிறேன்.”

“அருமை சுந்தரவள்ளி… அது பூக்கும்போது எனக்காக சில பூக்களை எடுத்துவா…” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்  ஆசிரியர்.

அன்றைய வகுப்பறை முழவதும் சற்று பயத்துடன்தான் கழித்தாள் சுந்தரவள்ளி. பள்ளி முடிந்ததும் அபியும் சுந்தரவள்ளியும் வெளியே நடந்தார்கள்.

“ஏன் வள்ளி பொய் சொன்னே…”

“அபி… என்னை மன்னித்துவிடு… நான் தொலைக்காட்சியை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொல்ல மனம் வரவில்லை. சட்டென்று தோன்றியது சொல்லிவிட்டேன்… இப்போது நான் அந்தப் பூவுக்கு எங்கே போவது…”

அபி சிரித்தாள். “இதுக்குத்தான் பொய் சொல்றது ஆபத்தென்பது. இப்போ பாரேன் பொய்க்கு மேல் பொய் சொல்லவேண்டும். சரி விடு பாத்துக்கலாம்.”

சுந்தரவள்ளியின் முகம் வாடிவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்தாள்.

“நீ எனக்காக வித்தியாசமான பூக்களை எடுத்துட்டு வர்றீயா அபி?”

“என் தோட்டத்தில் ரோஜா மலர்களும் மல்லிகை மலர்களும் செம்பருத்தி பூக்களும்தான் இருக்கிறது வள்ளி… நான் எங்கிருந்து வித்தியாசமான பூக்களைத் தருவது?” அபியும் குழம்பி நின்றாள்.

அன்றிரவு சுந்தரவள்ளிக்குத் தூக்கமே வரவில்லை. கண்கள் செருகினாலும், அவள் மனக்கண்ணில் ஆசிரியர் சுகுணா அணிந்திருந்த அந்த இளஞ்சிவப்புச் சேலையும், அதில் சிதறிக்கிடந்த மஞ்சள் பூக்களும் வந்து போயின. ‘உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை’ என்று அவள் பாட்டி அடிக்கடிச் சொல்வார். இன்று ஒரு சிறிய பொய் அவளை இவ்வளவு தூரம் வாட்டும் என்று அவள் நினைக்கவில்லை. அவள் மனம் உருகி வேண்டினாள். அந்தப் பொய்யை எப்படி சாமாளிப்பது. ஆசிரியர் சுகுனா கண்டிப்பானவர் இல்லை. ஆனாலும் பொய்யென்று தெரிந்தால் எப்படி பதில் அளிப்பார் எனத் தெரியவில்லை.

நான் என்ன செய்வேன்…அந்த வித்தியாசமான பூச்செடிக்கு நான் எங்கே போவேன்… அவள் கண்கள் கலங்கின. அவளை அறியாமலேயே அவள் உறங்கிப்போனாள். அப்போதுதான் அது நடந்தது. செம்போத்து பறவை ஒன்று அவளுக்கு முன் வந்து அமர்ந்தது. பனிக்கட்டியின் மேல் இருக்கும் வைரம் போல் அதன் கண்கள் மின்னின.

“உன் வருத்தத்தை போக்கவே நான் வந்தேன்” என்றது செம்போத்து.

‘என் வருத்தம் உனக்கு எப்படி தெரியும்’ என்று அவள் கேட்க மறந்துவிட்டாள். அதன் அழகில் மயங்கினாள். புன்னகைத்தாள். பேச வார்த்தைகளின்றி பரிதவித்து விழி மலர்ந்தாள்.

“ஒரு அழகிய மலர்ச்செடியை நான் உனக்குத் தருகிறேன். நீ அதனை பத்திரமாக வைத்துக்கொள். உன் ஆசிரியரிடம் அதனை காட்டி உன் பொய்யிலிருந்து தப்பித்துக்கொள். இனி பொய் பேசாதே! அழகிய அடர் நீல வண்ணத்தின் நடுவில் சிறிய கண் போன்ற மஞ்சள் வண்ணம் எல்லோருக்குமே பிடிக்கும்.”

சுந்தரவள்ளி கண்சிமிட்டிச் சிரித்தாள். என்ன அற்புதம். மனதின் கவலையை போக்க வந்த பறவையை அவன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அப்பறவையிடம் பேச நாக்குத் தடுமாறியது. ஆனாலும் அவள் மெல்லிய ஒலியில் கேட்டாள். “எப்போது தருவாய் நீ தந்தபிறகு அதனை நான் வளர்க்க வேண்டும். ஆசிரியர் கேட்பதற்குள் அந்த அழகிய மலர்களை அந்தச் செடி தந்துவிடுமா தெரியாது. ஆகவே சீக்கிரம் தரமுடியுமா?”

“மேலும் மேலும் கவலைகொள்ளாதே வள்ளி…”

“ஐ… என் பேரு கூட உனக்குத் தெரியுமா?”

தெரிந்துதானே வந்தேன் என்று தன் இறக்கைகளை உதறி பறக்க ஆயத்தம் ஆனது.

சட்டென்று அதனிடத்தில் “மறவாதே” என்றாள்.

செம்போத்து இறக்கையை தளர்த்தி மீண்டும் அமர்ந்தது.

“நான் சொல்லமறந்தேன். அந்த பூவின் பெயரே ‘மறவாதே’ மலர்தான்” என்றதும் சுந்தரவள்ளி மிகவும் ஆச்சர்யமானாள்.

“இதன் பெயரான ‘மறவாதே’ என்பதற்கு ஒரு அழகான கதை உண்டு. ஒரு போர்வீரன் தனது காதலிக்காக ஆற்றங்கரையில் இந்த மலரைப் பறிக்கச் சென்றபோது ஆற்றில் விழுந்துவிட்டானாம். அவன் மூழ்கும் தருவாயில் இந்த மலரைத் தூக்கி எறிந்து ‘என்னை மறந்துவிடாதே’ என்று கத்தினானாம். அதிலிருந்து இப்பெயர் வந்தது.”

“அது போலவே நீயும் என்னை மறந்துவிடாதே…” என்று சிரித்தாள் சுந்தரவள்ளி.

வெண்பனிச் சாரலோடு விடிந்தபோது. சுந்தரவள்ளி எழுந்துவிட்டாள். இரவு நடந்தது கனவா அல்லது நனவா? என்று அவளுக்கு யோசனை வந்தது. செம்போத்து வந்தது உன்மை என்றால் ‘மறவாதே’ மலரை எப்போது தரும் என்று அவள் சிந்தித்தாள்.

முகம் கழுவிக்கொண்டாள். அபியிடம் இரவு நடந்ததை சொல்லியாக வேண்டும். அவள் அதனைக் கேட்டு மிகவும் மகிழ்வாள். முதலில் நான் சொல்வதை நம்புவாளா? தெரியவில்லை. ஒருவேளை ‘உன் கவலைதான் மனக்கோளாறாய் மாறி கனவு வந்திருக்கிறது.’ என்று சொல்லிவிடுவாளோ என்றும் தோன்றியது.

அப்படியானால் என்ன செய்வது. வித்தியாசமான மலர்ச் செடிக்கு கடைசியாய் அப்பாவிடம்தான் கேட்க வேண்டும். ஏற்கனவே அவர் சில செடிகளை வாங்கி உப்பரிகையில் வைத்திருந்தார். அதனை பராமரிக்காமல் பட்டுப் போய்விட்டது. இப்போது இருக்கும் நான்கு தொட்டிகளிலும் மண் காய்ந்து போய் இருக்கிறது.

இரவு வந்த செம்போத்துப் பறவை இப்போது வராதா என்றிருந்தது. அம்மா அவளுக்காக உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அம்மாவிடம் பூச்செடியைப் பற்றி சொல்லலாம் ஆனால் அம்மா கண்டிப்பானவர்.

அதற்காக நான் பொய் சொன்னேன் என்று தெரிந்தால் அவ்வளவுதான். நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாய் உட்கார்ந்திருந்தாள் சுந்தரவள்ளி.

அப்பா தினசரி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். வள்ளி எழுந்து உப்பரிகைப் பக்கம் நடந்தாள். பனி கொஞ்சம் விலகியிருந்தது. மெல்லிய சூரியக் கதிர்கள் படரத்தொடங்கியிருந்தது. அவள் உப்பரிகைக்குள் நுழைந்ததும் நூறு பங்கு பரவசமடைந்தாள்.

ஆமாம். அவள் கண்களை அவளாள் நம்பமுடியவில்லை. இத்தனைக் கொத்துக் கொத்தாய் மலர்களைக் கொண்ட செடிகள் நான்கு தொட்டிகளிலும் இருந்தது. அவள் மகிழ்ச்சி அளவிடமுடியாத அளவிற்கு பெருகியது. கண்கள் சிலிர்க்க அந்தக் காட்சியை அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

செம்போத்து பறவை சொன்னது மாதிரியே செய்துவிட்டது என்று எண்ணி ஆச்சர்யமடைந்தாள். அடிமேல் அடிவைத்து நடந்து அத்தொட்டிச் செடியை இளம் விரல்களால் வருடினாள். ஆமாம் உண்மையிலும் உண்மைதான். அவள் பொய்யைக் கரைக்க வந்த அதிசயச் செடி அதுதான்.

“மறவாதே” என்று மெல்லக் குரலெடுத்து செடிக்கு கேட்குமாறு சொல்லிக்கொண்டாள். நீல வண்ணத்தின் நடுவில் கண்போன்ற மஞ்சள் வண்ணம் அற்புதம். ஒரு செடிக்கு நான்கு கொத்துப் பூக்கள்.

அச்சமயத்தில் செம்போத்து பறவைக்கு மனதால் நன்றி சொல்லிக்கொண்டாள் சுந்தரவள்ளி. சுகுணா ஆசிரியரிடம் காண்பித்தாள் நன்கு மெச்சுவார். அதனை மற்றவர்களிடமும் காண்பித்து மகிழ்வார். அது ஓர் அதிசய மலர்தான் என்று எல்லோருமே ஏற்பார்கள்.

சட்டென்று அம்மாவிடம் ஓடி அம்மாவை கையோடு அழைத்து வந்து ‘மறவாதே’ மலர்களை காண்பித்தாள். அம்மாவிற்கு ஆச்சர்யம். அந்த நிமிடமே அப்பாவும் உப்பரிகைக்குள் வந்து பார்த்துவிட்டார்.

“யார் இதனை கொண்டு வந்தது?”

சுந்தரவள்ளி செம்போத்துப் பறவையைப் பற்றி ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. அப்பா அந்த மலர்களை தொட்டுப் பார்த்தார்.

“அப்பா…. கொஞ்சம் பூக்களை நான் பள்ளிக்கு எடுத்துச் செல்லவா? அபிக்கும் ஆசிரியருக்கும் காண்பிக்கிறேன்.”

அதனை அப்பா மறுக்கவில்லை. அவரே ஒரு கொத்து மலர்களை பறித்து சுந்தரவள்ளியில் கைகளில் தந்தார். வள்ளி அதனை நசுங்கிவிடாமல் மென்மையாக பற்றிக்கொண்டாள்.

போகிற வழியில்தான் அபியின் வீடு முதலில் அவளிடம்தான் இந்த மலர்களை காண்பிக்க வேண்டும் என்று எண்ணினாள் சுந்தரவள்ளி.

அவள் அபியின் வீட்டுக்கு போகும்போது ‘அவள் இப்போதுதான் கிளம்பி போனாள்’  என்று அவள் அம்மா சொன்னதும். சுந்தரவள்ளி வேக வேகமாக நடந்தாள். சற்று வேகமாக நடந்தால் அபியை சுண்ணாம்புக்காரத் தெருவை தாண்டுவதற்குள் பிடித்துவிடலாம் என்று நினைத்து வேகமாகவே நடந்தாள் சுந்தரவள்ளி.

அம்மாதிரியே முருகன் கோவில் தாண்டி பூக்கடைகளை ஒட்டி நடந்து போய்க்கொண்டிருந்தாள் அபி. சட்டென்று அவன் முன்னால் நின்று ‘மறவாதே’ மலர்களை பின்புறம் மறைத்துக்கொண்டாள்.

“ஏன் இன்னைக்கி சீக்கிரமா கௌம்பிட்ட அபி… உன்கிட்ட ஒண்ணு காண்பிக்கனும்… கண்ணை மூடேன்… காண்பிக்கிறேன்.”

“கண்ணுல்லாம எப்பிடி பாக்கறதாம்? நீ காண்பி வள்ளி…”

சுந்தரவள்ளி அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்கவில்லை பின்புறம் மறைத்திருந்த மலர்க் கொத்தை அவள் முன்னால் நீட்டினாள். அபி அதனைப் பார்த்ததும் மகிழ்வாய் முகம் விரிந்தாள்.

“அய்யோ… என்ன அழகாயிருக்கு… எங்க வாங்கினே… உங்கப்பா வாங்கித் தந்தாரா?”

“இல்லையில்லை…” என்று முதல்நாள் நடந்த கதையை அபியிடம் சொல்லிக்கொண்டே நடந்தபோது பள்ளி வந்திருந்தது. வகுப்பிற்குள் நுழைந்ததுமே எல்லோருமே அம்மலர்க் கொத்தைப் பற்றிதான் பேசினார்கள். தொட்டு தொட்டுப் பார்த்தார்கள்.

ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்ததும் எல்லோரும் அமைதியானார்கள். என்ன ஆச்சர்யம். ஆசிரியர் சுகுணா அன்றைக்கு நீலப்பூக்கள் கொண்ட சேலையைத்தான் கட்டியிருந்தார். சுந்தரவள்ளி அதனைப் பார்த்தும் இரட்டிப்பாய் மகிழ்ந்தார்.

அபி சட்டென்று எழுந்து “சுந்தரவள்ளி மலர்க்கொத்து கொண்டுவந்திருக்கிறாள்…” என்றதும் ஆசிரியரின் முகமும் மலர்ந்தது.

“சுந்தரவள்ளி அதனை எடுத்து வா…அந்த அதிசய மலரை நான் பார்க்க வேண்டுமே!” என்றதும் வள்ளி எடுத்துக்கொண்டு முன்னால் நகர்ந்து ஆசிரியர் முன்னால் நீட்டினாள்.

“அடடா! இத்தனை அற்புதமான பூக்களா? எவ்வளவு அழகு… நான் இந்த மாதிரியான மலர்க்கொத்தை இதுவரை பார்த்தில்லை வள்ளி… அருமை அருமை…” என்று முகம் மலர சிரித்து சுந்தரவள்ளியை கட்டிக்கொண்டார்.

சுந்தரவள்ளியை மலர்க்கொத்தோடு நிற்க வைத்து எல்லோரையும் கைத்தட்டச் சொல்லி பாராட்டினார். ஆசிரியர்.

“நான் இதனை வைத்துக்கொள்ளவா சுந்தரவள்ளி” என்று ஆசிரியர் கேட்டதும். வள்ளிக்கு இன்பம் ததும்பியது. வாயெல்லாம் பற்களாய் நின்றாள். உடனே ஆசிரியரிடம் நீட்டினாள்.

“இல்லை சுந்தரவள்ளி நான் வகுப்பு முடிந்ததும் வாங்கிக்கிறேன்… அது வரை உன்னிடமே இருக்கட்டும். ஆமாம் இந்த அழகிய பூவின் பெயரென்ன?” என்றதும். தெரியவில்லை என்று சொல்வதா அல்லது இரவு செம்போத்து பறவை சொன்ன பெயரைச் சொல்வதா என்று யோசித்து நின்றாள். ஆனால் அதற்குள் அபி எழுந்து அதன் பெயர் ‘மறவாதே’ மலர் என்றாள்.

“அட மறக்கமுடியாத பெயராய் இருக்கிறதே! மலரைப் போல அதன் பெயரும் அதிசயம்தான் போல…” என்று சிரித்துக்கொண்டார்.

சுந்தரவள்ளி தனக்கருகில் அம்மலர்க்கொத்தை வைத்துக்கொண்டாள். காந்தக் கண்கள் போல் அதன் நடுவில் மஞ்சள் நிறம் சுந்தரவள்ளியைப் பார்ப்பது போல் இருந்தது. அவள் உற்றுக் கவனித்தாள். அம்மலர்க் கொத்து யாருக்கும் கேட்காமல் அவளிடம் “உண்மையை மறவாதே” என்று சிரித்தது.

00

வன்மி.

வன்மி என்னும் பெயரில் அச்சு இதழ்களில் சில கவிதைகள் வந்திருக்கிறது. பட்டுக்கோட்டைதான் சொந்த ஊர். புகைப்படக் கலைஞன், வடிவமைப்பாளன், எழுத்தாளன், ஓவியன் எனும் பணிகளில் விருப்பத்துடன் இயங்குகிறேன். தற்போது பள்ளிக் கல்வித்துறையிலிருந்து வரும் ‘தேன்சிட்டு’  ‘ஊஞ்சல்’ சிறார் இதழ்களின் வடிவமைப்பாளராக பணி செய்கிறேன். ‘பறக்கும் வெண்குதிரை’ ‘எறும்புகளின் நகரம்’ என இரண்டு சிறார் நாவல்கள் எழுதியிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *