இத்ரீஸ் யாக்கூப்

சுற்றிலும் குளிரிருட்டு. அடைக்கப்பட்ட கதவைக் கண்டாலே அவளுக்குள் பல அடி பாறை நிலத்தை துளைத்து தண்ணீர் குடிக்கச் செல்லும் இறுக்கமும் தாபமும்  ஆட்கொண்டுவிடும். நகரவிருக்கும் காட்சிகளை பொம்மைக்கண்களுக்கு உயிர் வந்தது போல் காண ஆரம்பித்தாள். அந்த கதவு உடனே திறந்துவிட்டது. அட! அங்கே ஒரு திரைச்சீலையா? ஏன்? இருப்பினும் தாழிடப்பட்ட அழகான மரக்கதவிற்கு கேமமைல் பூக்கள் அச்சடித்த இந்த பனித்திரை போன்ற மறைப்பு அவ்வளவு மோசமில்லைதான். இவனிடமும் இத்தனை உடற்வார்ப்பா? ம்ஹூம்… என பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அவனை மட்டுமே ஊடுவுருவும் கதியில் அவனுடைய புது மனைவி பவளமல்லியை பரிதாபமாய் விட்டுவிட்டாள்.

கண்டுய்யும் கஜிராஹோ சிலைகள் போல வெளித்தோற்றத்திற்கு அழகாக, எடுப்பாகத் தெரிவதெல்லாம் சில நிலைகளில் நம் வேலைக்கு ஆவதில்லை. தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள் தொட்டே எந்நேரமும் ஆலாய் பறக்கும் துணையும் பஞ்சனைக்கு உதவாத அலங்காரச் சிற்பங்களை ஒத்ததுதான்.

அவளது கைப்பேசித் திரை ஒளிர ஆரம்பித்தது. அவளுடைய கணவன் வெங்கட்தான் அழைக்கிறான். அப்படியென்றால் மணி மதியம் ஒன்றாகி விட்டதென அர்த்தம். இனி அடுத்தது நான்கு மணிக்கு மேல் ஒரு அழைப்பு வரும். என்ன பேசப் போகிறான்..? சாப்பிட்டியா? என்ற ஒரே ஒரு கேள்வி. ஆம் என்று பதில் சொன்னால், சரி ரெஸ்ட் எடு என்று அழைப்பை… மன்னிக்கவும் தனது கடமையை நிறைவு செய்த திருப்தியோடு அந்த சுருக்க உரையாடலை(?) முடித்துக் கொள்வான். மறு அழைப்பு மாலை நான்கு மணிக்கு. ‘ரெஸ்ட் எடுத்தியா? டிவில படம் பாத்தியா?’ ‘ஓஹ், சரி. இன்னைக்கு மேட்ச் இருக்கு அல்லது ஆபிஸ்ல கொஞ்சம் பிஸி! வர எட்டு மணிக்கு மேலாகும். உனக்கு போர் அடிக்கலல?’ அத்தோடு அந்த வேளை கடமை முடிந்து விட்டது.

இப்போது அவளுக்கு ஃபோனை எடுக்க தயக்கமாக இருந்தது. விருப்பமும் இல்லைதான். அதே கேள்வி… ஆனால் அதே பதில் இன்னைக்கு சொல்ல முடியாது. சில சமயம் முதல் விசாரிப்பைத் தொடர்ந்து இன்று அடுத்தடுத்த கேள்விகள் கூட வரலாம் அல்லது ம்ம் என்று ஃபோனை வைத்து விடக் கூட செய்யலாம்.

திவ்யாவிற்கும் வெங்கெட்டிற்கும் திருமணமாகி ஆறு மாதங்களே ஆகின்றன. வெங்கட் அமீரகத்தில் சிவில் எஞ்சினீரியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறான். புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே திவ்யா அவன் கட்டழகில் கொள்ளைப் போனாள். அவளும் அவன் நடக்கையில் விழும் நிழலல்லவே! டோரோத்தி பாட்டில் ராஜா புகழ்ந்து பூத்தூவும் மாதங்கியையும் தோற்கடிக்கக் கூடும் அவளது வைரச்சிரிப்பும், பவள மேனி வனப்பும். அழகு, உயரம், கல்வி, மற்றும் பொருளாதாரப் பின்னணி இப்படி எல்லாவற்றிலும் இருவரும் ஒரு கோயிலின் நுழைவாயில் தூண்களைப் போல பிரம்மாண்டம் காட்டி பார்ப்பவரை வியக்க வைத்தாலும் உணர்வுகள் மட்டும்தான் நிறைய நேரம் மேலும் கீழுமாக சரிசமமற்ற தோள்களில் தள்ளாடிச் செல்லும் சாமி ஊர்வலங்கள் போல் ஆயின.

வசீகரமான சின்னச் சின்ன அன்பு, சிறு சிறு அக்கறையிலெல்லாம் திவ்யாவிற்கு அவனைப் பிடிக்கும் என்றாலும் கட்டில் வாழ்க்கையில் மட்டும்தான் எட்டாக்கனியாக அவளை ஒவ்வொரு நாளும் ஏங்க வைத்துக் கொண்டிருந்தான். அதுவும் இங்கு வந்த முதல் இரண்டு, மூன்று மாதங்களில் மட்டுமே என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அவளுக்கு எல்லாம் பழகி விட்டது அல்லது ஆற்றாமையின் விளிம்பிற்கே அவளைத் தள்ளிவிட்டது. உணர்வுகளால் உடல் பருத்து அடங்கிப் போவதை ஒரு வாடிக்கைப் போலவே அணுகவும் ஆரம்பித்தாள். எதிர்பார்ப்பு கத்திகளை ஒரு ஓரமாய் வைத்துவிட்டால் நாளங்கள் தப்பிக்குமென்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அவள் சூழ்நிலை புத்திசாலியா? கைதியா? அதில் அவளுக்கே குழப்பம்தான். வெங்கெட்டிற்கு எப்போதும் சைட் (site) அல்லது ஆஃபிஸ் அதை விட்டால் ஜிம் மற்றும் கிரிக்கெட்.

எப்போதும் எச்சில் ஊறும் ரன் அவே கேக்கை போலவே அவனைப் பார்ப்பாள். அத்தனை காசு கொடுத்தாலும் நாடுவதை பூர்த்தி செய்வானா? தனது இதழ்களின் துடிப்புகளை உணராத அவன் குழந்தைமையை வெறிப்பாள். எத்தனை போலியானது இந்த வெளி பிரமாண்டமென தனக்குள் சிரிக்கவும் செய்வாள்.

முறைவிட்டு எடுத்துக் கொள்ளும் அல்லது கொடுக்கும் பத்திய உணவு போல வாரம் ஒரு முறை இவளுடான இருபதிலிருந்து முப்பது நிமிட அவசிய சேர்க்கை. ரோசம் கொள்ளாமலேயே அதை காமதேனு தரும் அமுதமாக பாவித்து பணிந்து செல்லும் அவளது நிலையை நினைந்து அவளே கடிந்து கொள்ளும் நிலையையும் குறை சொல்ல முடியாதுதான்.

இவளுக்கென்று மாலை நேரங்களில் அவன் நேரம் ஒதுக்குவது குறைவு. அமீரக ‘தமிழ் டைட்டன்ஸ்’ கிரிக்கெட் அணியில் வெங்கட் முக்கியமான ஆட்டக்காரன். வாரவிடுமுறை நாட்களில் மேட்ச் ஆடிய நேரம் போக மனமிருந்தால் நண்பர்கள் வீட்டிற்கு, வெளியிடங்களுக்கு எப்போதேனும் அழைத்துச் செல்வான் அல்லது அவர்களை இவர்கள் வசிக்கும் டிஸ்கவரி கார்டனுக்கே வரவழைப்பான். இரண்டையுமே அவள் விரும்ப மாட்டாள். ஏனெனில் நண்பர்கள் மத்தியில் மோஸ்ட் பியூட்டிஃபுல், கம்பாட்டிபிள், ரொமான்டிக் ஜோடி என்ற பேர் அவர்களுக்கு உண்டு. இவள் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொள்வாள். அவன் பெருமையாக இவளைப் பார்த்து சிரிப்பான். திவ்யாவிற்கு ஆச்சர்யமாக இருக்கும் அவனது பூரிப்பும், செய்கைகளும். இல்லாத ஒன்றை அதீதமாய் விளம்பரம் செய்யப்பட்டு காலத்திற்கும் விற்றுத் தீர்க்கப்படும் மோனாலிசாப் புன்னகையைப் போல் ஊமை சாட்சியாய் கசப்போடு ஏற்றுக் கொள்வாள்.

அவளும் கூட வேலைக்குச் செல்லலாம். ஆரம்பத்தில் முனைப்புக் காட்டியவள் ஏனோ நாட்கள் செல்லச் செல்ல அந்த எண்ணங்களை கைவிட்டு சுவர்களுக்குள் அடைப்பட்ட சோம்பேறிப் பூனையாகிப் போனாள். அவள் வேலைக்குச் செல்வதில் வெங்கெட்டிற்கு எந்தவித பிரச்சனையுமில்லை. சொல்லப்போனால் சந்தோசப்படுவான். அப்படி அவள் சென்றால் தனக்கும் கூட கூடுதலான நேரம் வெளியில் நண்பர்களோடு செலவழிக்கக் கிடைக்கும் மேலும் அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள் என்ற குற்றவுணர்வு அவ்வப்போது எழுவதும் நின்றுபோகும்.

மனதின் அடைசலைப் போக்க, வெளிச்சத்தைப் பார்க்க எப்போதாவது வெளியில்… அருகிலிருக்கும் ஷாப்பிங் மாலுக்கு தனியாகச் சென்று வருவாள்.

ஃபோன் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. எடுத்துப் பேசினாள்.

“D சாப்டியா?”

வழக்கம் போல் ம் என்றுதான் சொல்ல நினைத்தாள்.

“இனிமேதான்”

“ஹே என்ன சவுண்ட் எஃபெக்ட்லாம் பலமா இருக்கு? என்ன சேனல்ல என்ன மூவி பாக்குற?”

திரையில் அவள் கண்டுருகிய நாயகன் தருண் கார்த்திக், நாயகி இஷானியை நெருங்கிப் படர்ந்துக் கொண்டிருந்தான். இசை ஹிஷாம் என்று ஒரு புதியவன். நல்லாத்தான் போட்டிருந்தான் பின்னணி இசையை அந்த குறிப்பிட்ட காட்சிக்கு. பூஜை நேரத்தில் கரடி போல் வெங்கட்டின் இந்த அழைப்பு அவளுக்கு. சற்று எரிச்சலாகத்தான் இருந்தது. ஒரு புருஷனை இந்நிலையில் அப்படி யாரும் ஒப்பீடு செய்வார்களா? அவள் மனம் செய்தது.

“தியேட்டர்ல இருக்கேன்”

“D என்ன சொல்ற? ஆர் யூ ஷுயோர்?”

“ம்”

“ஆர் யூ ஓகே?”

“ம்”

“என்ன படம்?” இன்றைக்கு எத்தனை கேள்விகள்! முப்பது வினாடிகள் தாண்டி நெடு நாட்களுக்குப் பிறகு ஆபிசிலிருந்துப் பேசிக்கொண்டிருக்கிறான்.

“ஹே பேக்கிரவுண்ட் ஸ்கோர் ‘பவளமல்லியோட பாய் ஃபிரண்ட்’ படம் மாதிரி இருக்கு?!”

“ஆமா”

“ஹே..! இது பயங்கரமான ரொமான்டிக் மூவினு ரிவீவ் பார்த்தேன்பா…”

“யெஸ்”

“நீ மட்டும் போயிருக்க? ஸ்ட்ரேன்ஜ்!”

“ம், ஸ்ட்ரேன்ஜ்”

***

இத்ரீஸ் யாக்கூப்,

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நுண்ணுயிரியல் முதுகலை பட்டதாரி. பணி நிமித்தம் தற்சமயம் அமீரகத்தில் வசித்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைய இதழ்களில் கதைகள், தொடர்கள் எழுதி வருகிறார். இதுவரை ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ என்ற நாவலும், ‘பிறைகள்’, ‘மழையில் நனையாத குடை’, மற்றும் ‘பிராத்தனைகள் தோற்பதில்லை’ எனும் தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *