-கந்தசாமி சித்தையன்
அவரை முத்துராமன் என்று சொன்னால் ஊரில் யாருக்கும் தெரியாது, கஞ்சா என்றால்தான் ஊரில் இருக்கும் சிறு பிள்ளைகளுக்கும் கூட தெரியும். அவருக்கு வயது நாற்பது இருக்கலாம்.
ஆனால் பார்த்தால் ஐம்பது போல் இருப்பார். ஆள் ஒல்லி, அடிபட்டுக் காயம் ஆறியதுபோல் முகம். இதுவரை அவர் புது வேட்டி சட்டை அணிந்து யாருமே பார்த்ததில்லை. லுங்கி, கலர் சட்டைதான் அதிகம் கட்டியிருப்பார். ஏதாவது ஓர் நாளில் வெள்ளைவேட்டி சட்டையோடு நாம் பார்க்கலாம். ஆனால் அந்த வேட்டியில் வெள்ளைநிறத்தைவிட அதில்படிந்த அழுக்குதான் வெள்ளையினை ஆக்கிரமித்த மஞ்சள் நிறமாக அதிகம் தெரியும்.
கஞ்சாவிற்கு ஊரில் ஐந்து ஏக்கர் நிலம் இருந்ததாகவும்,திருமணம் அவருக்கு நடந்தாகவும்,திருமணம் ஆகி இரண்டு மாதத்திலேயே அந்த பெண் அவரை விட்டுச் சென்றதாகவும் ஊரில் பேசுவார்கள். கஞ்சாவிடம் எந்தப் பெண்ணும் குடும்பம் நடத்த முடியாது. அவர் அதிகம் நேசித்தது கஞ்சாவையும் கொஞ்சம் சாராயத்தையும்தான். அவர் எப்படி குட்டிமணி வீட்டிற்கு வந்து சேர்ந்தார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
அதை ஆய்வு செய்யவும் தேவையில்லை. குட்டிமணி வீடு அனைவரையும் ஏற்கும் ஓர் அன்னசத்திரம். அவர் வீட்டில் எப்போதும் ஊரார் பத்திலிருந்து இருபதுவரை இருந்துகொண்டே இருப்பார்கள். அவர் வீட்டில் சாராயவிற்பனை,சீட்டாட்டம்,பண்டிகை காலத்தில் லங்கர் கட்டையென சமுதாயம் எதையெல்லாம் தவறு என்றதோ அதுவெல்லாம் குட்டிமணிதான் ஊரில் அறிமுகபடுத்தினார்.
ஊர்கிணற்றில் கரைகட்ட வந்த குடும்பம் ஊரிலேயே தங்கியது. அந்தக் குடும்பத்தில் மூத்தவர் பார்ப்பதற்கு கடோத்கஜன் மாதிரி இருப்பார்,அவர் குட்டிமணி வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார். கிணற்றுவேலை முடிந்த பிறகும்கூட அவர் மாதத்தில் ஒருநாளாவது குட்டிமணி வீட்டிற்கு வந்து போவார்.
குட்டிமணிக்கு மூன்று குழந்தைகள் இரண்டுபெண்கள், ஒரு ஆண். மனைவி ராணி யாரையும் ஒன்றும் சொன்னவள் கிடையாது. அவளை ஊரார் தவறாகப் பேசினாலும் அது பற்றி அவள் காதில் வாங்கிக்கொள்ளமாட்டாள். எப்போதும் பத்து ஆண்கள் இருக்கும் வீட்டினை யார்தான் தவறாகப் பேசமாட்டார்கள். ஊர் வாயினை அடைக்க முடியுமா?.
ஊர் திருவிழாவிற்குக் கடை போட வந்த நரிக்குறவர்கள் குட்டிமணி வீட்டில் தங்கினார்கள். திருவிழா முடிந்து அவர்கள் ஊருக்குச் செல்லாமல் குட்டிமணிக்கு முயல்,வௌவால் காடை கௌதாரி காட்டுப் பூனை என அடித்து வந்து கொடுத்தார்கள். தினசரி குட்டிமணி வீட்டில் கவுச்சி இல்லாமல் இருக்காது. யார் இருந்தாலும் இல்லாட்டியும் கஞ்சா எப்போதும் குட்டிமணி குடும்பத்தோடுதான் இருப்பார்.
நிலம்விற்ற காசினை யாரிடமோ கஞ்சா கொடுத்துவைத்து இருந்தார்,அதை வாரம் ஒருமுறை அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி ஊர் அருகே இருக்கும் மலைக்கிராமத்தில் கஞ்சா வாங்கி வந்து புகைப்பார். ஒரு முறை கார்த்திகை மாத இரவில் மலையில் நரிக்குறவர்களோடு வேட்டை க்குச் சென்ற கஞ்சாவும் குட்டிமணியும் அன்று இரவு எதுவும் மாட்டவில்லை என்ற ஏமாற்றத்தோடு மலை இறங்கியவர்கள், விடியற்காலையில் அடிவாரத்தில் இருந்த மஞ்சள் சாரையினைப் பிடித்துவந்தார்கள். அன்று ஊர் முழுக்க அவர்கள் பேச்சுதான்.
“இந்தக் குட்டிமணி கண்ட சாதிக்காரனுங்கள ஊட்டுக்குள்ள உடுறான்,கஞ்சாவுக்குத்தான் பொண்டாட்டியா புள்ளையா?,குடும்பம் குட்டின்னு இருக்கும் குட்டிமணிக்கு இதெல்லாம் தேவையா? ரண்டு பொட்டப் புள்ளைங்கள வச்சியிருக்கான், நாளைக்கு யாரு வந்து பொண்ணு கேட்பாங்கா” ஊர்ப் பெருசுகள் பேசினார்கள்.
மின்னும் மஞ்சளில் இருந்த சாரைப்பாம்பினை தோலுரித்து தலையினையும் வாலினையும் நறுக்கிக் கொடுத்தார் நரிக்குறவர், பார்ப்பதற்குத் தோல் உரித்த அவுரி மீன்போல இருந்தது, ராணி மீன்குழம்பு வைப்பதுபோலவே சாரைப்பாம்பினை வைத்துக்கொடுத்தாள்.
அன்று குட்டிமணி வீட்டிற்கு யாரும் வரவில்லை, சென்றிருந்தால் அவர்களை ஊர் பார்க்கும் பார்வை வேறாக இருந்திருக்கும். ஊர்ப் பெண்கள் எல்லாம் காதும் காதும் வைத்தார் போல “ஏண்டி இந்த ராணிய பாத்தியா புருசங்காரனுக்கு சாரப்பாம்புக்கறி ஆக்கி போடுறாளாம், அவ எல்லாம் மனுசியா? குடியான பொம்பள மாதிரியா நடந்துக்குறா” என்றெல்லாம் பேசினார்கள்.
பாம்புக்கறி தின்பவர்களை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்ற எண்ணத்தில் சர்க்கஸ் பார்ப்பதுபோல் சிறுவர்களெல்லாம் குட்டிமணி வீட்டினை குழுகுழுவாகச் சுற்றி வந்தார்கள். அவர்கள் எப்போதும் வீட்டுநடையில்தான் உணவு உண்பார்கள். அன்று மட்டும் வீட்டிற்குள் உண்டார்கள், குட்டிமணியின் பிள்ளைகள் மூவரும் வீட்டு நடையில் ஐந்தாம்கல் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மூவரும் நடுவீட்டில் ஆக்கிய நெல்லரிசிச்சோறு சாரைப்பாம்புக் குழம்பினை நடுவில் வைத்து அமர்ந்து இருந்தார்கள். மூன்று தட்டிலும் சோற்றினைப் போட்டு குழம்பை நன்றாகக் கிண்டி சாரைப்பாம்பு துண்டினைத் தட்டில் போட்டார். இருவருக்கும் மூன்று துண்டுகளைப் போட்டு இரண்டு துண்டுகளை இட்டுக்கொண்ட நரிக்குறவர் “கஞ்சா ஒண்ணும் பயப்படாத சாப்பிடு ஒண்ணும் ஆகாது,தோல அரிச்சிக்கிட்டு இருக்கிற செரவாங்கி கிரவாங்கினு எது இருந்தாலும் பறந்து போயிடும், மீனுக்கறி மாதிரிதான் இருக்கும்”என்றார்.
“அட ஏய்யா நீ வேற! கஞ்சால்லாம் பயப்படுற ஆளா? அவ உசுரோட இருக்குற பாம்பையே புடிச்சித் திங்குர ஆளு. எனக்குத்தான் நீ பாம்பக் கையில புடிக்கும்போது மனசு ஒரு மாதிரியா இருந்தது, இப்ப கொழம்புல பாக்கும்போது ஒண்ணும் பெருசாத் தெரியல, அதுவும் நீ சொல்றதக் கேட்டா எடுத்துக் கடிக்கலாம் போல இக்குது” என்றார் குட்டிமணி.
பல்லால் முள்ளை விலக்கிக் கறியைக் கடித்த கஞ்சா,இருவரையும் பார்த்து பாம்பின் சுவையைப் பார்வையால் உணர்த்தினார். பிறகு இருவரும் கடித்தார்கள். நரிக்குறவருக்கு இது புதிதில்லை என்பதனால் பெரிதாக எண்ணாமல் உண்டார். குட்டிமணிதான் ஒருவாய் கறியை உண்டுவிட்டு, “கஞ்சா நம்ப ஆளு சொன்னமாதிரி அப்படியே மீனக் கடிக்கிற மாதிரியே இக்குது,ஆனா அதவுட இது கொஞ்சம் நல்லாதான் இக்குது”என்றார்.
நரிக்குறவர் “அப்ப வாரம் ஒண்ணு புடிச்சிக்கொடுக்கட்டுமா?”என்றார். குட்டிமணி “அட ஏய்யா இதுக்கே ஒரு பய்யன் ஊட்டுக்கு வரமாட்டேன்னு ஓடிட்டானுங்க,ஊருக்காரனுங்க என்ன பேசிக்கிரானுங்கண்ணு நாளைக்குதான் தெரியும். வாரம் ஒண்ணுனா அவ்வளவுதான்”என்றார்.
மூவரும் உண்டு முடித்தார்கள், நடையைக்கடந்து வாசலில் இருந்த கட்டிலில் அமர்ந்தார்கள்,கஞ்சா வாசலில் இருந்த தென்னை விளக்குமாற்றுக் குச்சியை உடைத்துப் பல் குத்தினார். பிறகு கஞ்சாபோட்டு இருந்த ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்து உள்ளிழுத்து புகையினை வெளியே விட்டார்.
இரவு நெருங்க நெருங்க ஒவ்வொருவராக குட்டிமணி வீட்டிற்கு வந்தார்கள். சாரைப்பாம்பு கறி எப்படி இருந்தது என்று கேட்டார்கள். அனைவருக்கும் சலிக்காமல் பதில் சொன்னார் கஞ்சா. அன்று இரவு ஊர் முழுக்க சாரைப்பாம்பு கறி நாயம்தான். ஒரு மாத காலம் இருவரையும் ஊரார் ஓர் மாதிரியாகத்தான் பார்த்தார்கள். அதுவும் கஞ்சாவைப் பார்த்தால் கொஞ்சம் விலகியே நடப்பார்கள். பிறகு வேறு நியாத்திற்கு ஊர் மாறியது.
ஊரில் மாரியம்மன் பண்டிகை விமர்சையாக நடக்கும், ஊரில் சிலர் வணிகத்தில் ஈடுபடுவதுண்டு. வாழைப்பழம் தேங்காய்கடை பலகாரகடை பக்தர்களுக்குத் தேவையான கற்பூர ஊதுபத்திக்கடைஎன சொந்த ஊரார் கடை வைப்பார்கள், ஆனால் கஞ்சா லங்கர்கட்டை உருட்டினார்.
சூதில் விருப்பம் உள்ளவர்கள் பலர் அங்குதான் இருந்தார்கள். ஸ்பேடு கிளவர் டைமண்ட் ஹார்ட்டின் ராணி சக்கரம் என ஆறு சின்னங்களைக் கொண்ட சிறிய கட்டைகளை தகர டப்பாவில் போட்டு துடும்பு அடிப்பதுபோல் சத்தம்வர குலுக்கி வைப்பார். பலகையில் இருக்கும் சின்னத்தில் நின்றிருப்பவர்கள் பணம் வைப்பார்கள், பிறகு டப்பாவை எடுப்பார், விழுந்த சின்னங்களை பலகையில் இருக்கும் சின்னகளில் வைத்து அங்கு இருக்கும் பணத்திற்கு விழுகாத சின்னகளில் இருக்கும் பணத்தினை எடுத்துப் போடுவார். கட்டையும் குலுக்கும் பணியும் மட்டும்தான் கஞ்சாவுடையது பணம் குட்டிமணியுடையது. அன்று மாலையில் ஆரம்பித்து விடியற்காலைவரை அரைமயக்கத்தோடு கட்டையினை உருட்டுவார் கஞ்சா.
காவலர்கள் இடைஇடையே வந்து கட்டயினை எடுக்கச்சொன்னால் “தோ இரு சார் எடுத்துடுறேன்,நோம்பி அதுவுமா வந்து ஏ சார் தொல்ல பண்றீங்க”என்பார் கஞ்சா.
“ஏண்டா கஞ்சா ஊரு சனம் உங்க ஊரு ஆளுங்களெல்லாம் கோவிலுக்கு தேவையான பூசப்பொருட்கள விக்கும் போது நீ மட்டும் லங்கர்கட்டத்தான் போடுவியா?” என்றார் காவலர்.
“வேற எனக்கு தெரியாது சார்”
காவலர்களும் கஞ்சாவைப் பார்த்தால் லங்கர்கட்டை போட்டு சம்பாதிக்கும் ஆள் போல தெரியாததால் சீக்கிரம் கட்டையை எடு என்று கண்டிப்பு செய்துவிட்டு செல்வார்கள்.
லங்கர்கட்டையில் சம்பாதித்த பணத்தை பாதியினை குட்டிமணியிடம் கொடுத்துவிட்டு மீதியினை ஒரு வாரம் வரை ஊரில் இருக்கும் சந்துக்கடையில் கட்டிங் கட்டிங்காக ஒருநாளைக்கு நான்கு மட்டரகமான சரக்கினை வாங்கிக் குடித்து போதையில் திரிவார். மீண்டும் ஊரில் சீட்டாட்டம் கஞ்சா சந்துக்கடை சரக்கென குடும்பஸ்தனுக்கே இல்லாத வாழ்வை கஞ்சா வாழ்ந்து வந்தார். இதுவரை ஊரில் கஞ்சா ஒரு பெண்ணிடம் சிரித்துப் பேசியதை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர் மீது கஞ்சாபுகையின் காற்றுதான் அதிகம் படிந்தது. எந்தப் பெண்ணின் மூச்சுக்காற்றும் அவர் மீது படவில்லை.
குட்டிமணி குடும்பத்தினர் கஞ்சாவின் உழைப்பையும் பணத்தினையும் ஏமாற்றுகிறார் என ஊரில் பேசினார்கள். இருவருமே அதனை காதில் போட்டுக்கொள்ளவில்லை. புகைபோதையும் சராயபோதையும் உடலில் ஏறி கஞ்சா தேய்ந்துகொண்டே வந்தார். குட்டிமணிக்கு குடி புகைப்பழக்கம் இல்லாததால் வயதானாலும் நன்றாக இருந்தார். அவரின் பிள்ளைகள் மூவரும் பதின்பருவத்தை தாண்டியிருநந்தார்கள். உடல்நிலை சரியில்லாத ராணி மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. குட்டிமணியின் மகள்தான் உணவு சமைத்து வைப்பாள்.
யாருக்கு எப்போது பசிக்குதோ அவர்களே தட்டை எடுத்து உணவிட்டுச் சாப்பிடுவார்கள்.
மாதத்தில் ஒருநாள் நரிக்குறவர் வந்து முயலையோ அழுவநாத்தி காடை கவுதாரி என எதாவதை கொடுத்துவிட்டு அவர்களோடு பேசிக்கொண்டு,உணவருந்தி செல்வார். ராணியில்லாத குட்டிமணி வீடு இருண்டுதான் இருந்தது. கஞ்சாவின் உடல் ஒடுங்கிக்கொண்டே வந்தது. ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் குட்டிமணிதான் பணம் கொடுத்து வாரத்தில் ஒருமுறை கஞ்சாவிற்கு குளுக்கோஸ் ஏற்ற சொன்னார்.
கஞ்சாவின் உடலில் முன்னேற்றம் இல்லை. கஞ்சாவின் கண்ணின் அடிப்பகுதியினைப் பார்த்த மருத்துவர் ரத்த ஓட்டம் மங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு “இனிமேல் இங்கு வைத்து பார்ப்பது சரியாகாது, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால்தான் கஞ்சாவைக் காப்பாற்ற முடியம்” என்றார்.
இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை இடையில் வைத்துக்கொண்டு குட்டிமணியின் மூத்தமகன் வாகனத்தை ஓட்ட குட்டிமணி கஞ்சாவைப் பிடித்துக்கொண்டு பின்னே அமர்ந்து இருந்தார்.
கஞ்சாவின் மேற்சட்டை பாக்கெட்டில் நான்கு பீடி இருந்தது. கஞ்சாவிற்கு அதனைப் புகைக்கவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் அவருக்கு மூச்சுவிடுவதே இயல்பாக இல்லை. கஞ்சா, தான் மரணிக்கும் தருவாயை உணர்ந்து கொண்டார். “டே குட்டிமணி என்ன எங்கேயும் கூட்டிக்கிட்டு போவாத, நா செத்துவிடுவேன் எனக்குச் சாவு நெருங்கிக்கிச்சி,ஏம் பொணத்த ஓ வூட்லயே போட்டு எடு,எனக்கு அதுபோதும் டே கண்ணு. வண்டிய ஓரமா நிறுத்தி கடசியா ஒரு பீடியாவது குடிக்கிறேன்” மூத்த மகனின் தோளினைத் தட்டினார் கஞ்சா. வண்டி மெதுவாக நிறுத்தப்பட்டது. கஞ்சாவைப் பிடித்துக்கொண்டு குட்டிமணி கீழே இறங்கியவர் கஞ்சாவைப் பார்த்தார்,கஞ்சா குட்டிமணியின் கையினை பிடித்துக்கொண்டு கீழே இறங்காமல் இதுவரையில் பார்க்காத ஒரு பரிதாபப் பார்வையில் குட்டிமணியைப் பார்த்தார், அவரின் கைமீது ஒரு பூவைப்போல் தலை சாய்த்தார், கஞ்சாவின் மூச்சு ஒடுங்கி ஆவி உடலைவிட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறியது.
கஞ்சாவின் உடலை குட்டிமணி வீட்டில் வைத்துதான் அஞ்சலி செலுத்தினார்கள். குட்டிமணியின் மூத்தமகன்தான் வந்தவர்களுக்கு இழவுகொடுத்தார். இடுகாட்டில் மொந்தை சுமந்து முதல் மண்தள்ளி அனைத்து சடங்கினையும் குட்டிமணியின் குடும்பத்தாரே செய்தார்கள். இழவு முடித்து சென்ற ஊரார் பேசினார்கள் “கஞ்சாவுக்கு ஒரு பையன் இருந்தாக்கூட இப்படி செஞ்சிருக்கமாட்டான்.”
00

கந்தசாமி சித்தையன்–
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி இவரின் பூர்வீக கிராமம். அரசுபள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் படைப்பு சேலம் மேற்கு பகுதியில் குலதெய்வ விழாவாக கொண்டாடப்படும் தெவவிழாவினை தெவம் என்ற பெயரில் நாவலாக எழுதியுள்ளார்.அந்நாவல் யாவரும் வெளியீடாக கடந்த 2025ம் ஆண்டு வெளிவந்தது.

