–நிஜந்தன்
உறுப்பு எழவில்லை. மிகவும் வியர்த்தது. சோர்வளித்தது. எழுந்து நீல் ஆடை அணிந்துகொண்டான். கதவைத் திறந்து வெளியே வரும் முன்னால் திரும்பிப் பார்த்தான். கட்டிலின் மூலையில் சுவரில் சாய்ந்துகொண்டு போர்த்தியபடி தீனா அமர்ந்திருந்தாள். கூர்மையாக நோக்கின அவளுடைய விழிகள். அவள் சிரிக்க முயன்றாள். நட்புக்கானதாக அது இருக்கவில்லை. அவன் அவளை உற்றுப் பார்த்தான். அவள் சிரித்தபடி இருந்தாள். கொஞ்சம் கேலி போல் இருந்தது. உறுத்தியது. அவன் வெளியே நடந்தான்.
சாலையில் நீலின் நிழல்கள் நீண்டன. செருப்புச் சப்தம் இடியாய்க் கேட்டது. சகதி செருப்பில் அப்பிக்கொண்டிருந்தது. சேறு நிறைந்து சாலை நிறம் மாறியிருந்தது. இருள் மூலையில் இரண்டு நாய்கள் மூச்சுவிட்டபடி புணர்ந்தன. தொந்திரவு தந்தால் கடித்துவிடலாம் என்று அவனை ஒரு நாய் நோக்கியது. இரும்பு வாசனையுடன் பேருந்து வந்தது. நடத்துனர் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்தார். பணம் பெற்றுக்கொண்டு சீட்டு கொடுத்தார். இறங்கும்போது அவர் மிச்சப் பணம் தரவில்லை.
மலை உச்சியில் ஆசிரமம் இருந்தது. நடக்க முடியாமல் போனது. முயன்று நடந்தான். வளைவுகள் சிலிர்ப்பூட்டின. மேலிருந்து வந்தவர்கள் சரிவில் வேகமாக ஓடினார்கள். அவர்களின் முகங்களில் தெளிவும் குழப்பமும் ஒரு சேரத் தெரிந்தன. சிலர் மலையின் முகடுகளிலிருந்து விழுந்துவிடத் துடித்தார்கள்.
மலை ஆசிரமத்தின் மீது கோடை வெயில் படிந்தது. குடிலுக்குள் கொஞ்சம் குளிர்ச்சி இருந்தது. நீல் கண்களை உற்று நோக்கினார் பிரத்யூஷ் சுவாமி. இரண்டு வார்த்தைகளில் விளக்கினான் அவன். மிகப் பெரிய குடிலில் சப்தம் போட்டுப் பேசினாலும் ரகசியம் போல ஒலித்தது. வெளிக் காற்று உள்ளேயும் நிறைந்திருந்தது. மேகங்கள் அறைக்கு வெளியே உரசிச் சென்றன. பிரத்யூஷ் சுவாமி அமைதியாக இருந்தார். நீல் அவரைப் பார்த்தான். ஒன்றும் நடக்காது போல இருந்தது.
எதிர்பாராத கணம் ஒன்றில் நீல் கையில் வெள்ளிக் குச்சியால் சூடு வைத்தார் சுவாமி. அவன் எதிர்பாராத வலியால் பெருங்குரல் எழுப்பினான். காயத்தின் மீது சுவாமியின் உதவியாளர்கள் களிம்பு தடவினார்கள். நடக்க முடியவில்லை. யாரோ தோளில் சுமந்து சென்றார்கள். எரித்துவிடுபவர்கள் போன்ற மூர்க்கம் தெரிந்தது. எங்கு அவனைக் கிடத்தினார்கள் என்று தெரியவில்லை. மலையின் உச்சியிலிருந்து தள்ளிவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டான். கீழே கீழே போவது போலிருந்தது.
ஒரு நாளைக்கு மூன்று முறை ஆசிரமத்தில் உணவு தரப்பட்டது. குழம்பில் காரம் அதிகம் இருந்தது. தணிக்கத் தண்ணீர் வந்தது. பழச் சாறில் உப்பு போன்ற சுவை இருந்தது. அதில் கொஞ்சம் போதை வந்தது. சாப்பிட்டுத் தனிக் குடிலில் உறங்குவது மயக்கம் தந்தது. இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு தெரியவில்லை. உறங்கும்போதும் விழித்தபோதும் கனவுகள் வந்தன. கனவில் எப்போதும் சூரியன் சுட்டெரித்தான். இளம் சூடான குளத்தில் குளிக்கும்போது பாம்புகள் வந்து துடையைச் சூழ்ந்துகொண்டன. விழித்து எழுந்தபோது தொலைவில் ஒரு பாம்பாட்டி அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்காத போதும் சிரித்தான். கூடையில் இருந்த பாம்பு ஒன்றை எடுப்பதும் உள்ளே திணிப்பதுமாக அவன் இருந்தான். கையில் சீழ் வந்து தீர்ந்தது. காயத்தின் மேலே தோல் வந்து மறைக்க முயன்றது. கையில் காயம் ஆறிக்கொண்டிருக்கும்போது சுவாமி அழைத்தார்.
அமைதியாக இருந்தார் சுவாமி. காயத்தின் மீது அவன் கை வைத்தான். அரித்தது. சொறிய விரும்பினான். அவனுடைய கைகளை யாரோ கட்டிவைத்தார்கள். ஒரு மயிலிறகு கொண்டு காயத்தின் மீது வருடிக் கொடுத்தார்கள். சொறிந்தது. அவனுக்கு அரிக்கத் துடித்தது. கைகளை அவிழ்த்துவிட்டார்கள். அவன் காயத்தைச் சொறிந்தான்.
‘சுகம் வந்ததா?’ என்றார் சுவாமி.
அவன் ஆம் என்று தலை ஆட்டினான்.
‘சொறி’ என்றார் சுவாமி.
அவன் சொறிந்தான். மீண்டும் காயம் ஏற்பட்டு இரத்தம் எட்டிப் பார்த்தது.
‘சுகமே சுமை. தேடாதே. எல்லாம் வலிதான்’ என்று கண்களை மூடிக்கொண்டார் சுவாமி.
மலையிலிருந்து நீல் இறங்கி வரும்போது கடும் மழை பொழிந்தது. மேகத்தின் வாசனை மயக்கியது. ஈரம் தோய்ந்த ஆடைகளுக்குள் தேகம் கனன்றது. ஷேர் ஆட்டோ கிடைத்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. கிராமத்து இளம்பெண்கள் மீது வீசிய சிமெண்ட் வாசனை ஈர்த்தது. ஒரு பெண்ணின் கண்களில் வியப்பு ஒன்றே ஒட்டிக் கிடந்தது.
மிதமான சூட்டில் டீ கொடுத்த சாலையோரக் கடை உரிமையாளர் இளக்காரமாகச் சிரித்தார். ஒரு பெண் அருகில் வந்து அமர்ந்தாள். கண்களில் கொக்கி இருந்தது. எழுந்து போகும்போது திரும்பிப் பார்த்தாள். கோபம் கொண்டவள் போலத் தெரிந்தாள். அவளுக்குப் பின்னால் நடந்தான். வெகு தூரம் பாதை நீண்டது. பச்சைப் புல் சூழ்ந்த வெளியில் கரப்பான் பூச்சிகளின் நெடி அடித்தது. பாசிப்பயிறு அரைக்கும் வாசனை எங்கிருந்தோ வந்தது. அவள் ஒரு கணம் நின்றாள். அவனும் நின்றான். விழிகளால் அழைத்தாள்.
அவளுடைய வீடு பெரியதாக இருந்தது. தொலைவில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டது. அறைகளில் சிலந்திகள் ஓடி விளையாடின. பூச்சிகளைத் துரத்தித் தோற்று கீழே விழுந்து உருண்டன. ஆடையற்று அவன் முன்னால் அவள் நின்றாள். அவன் உற்றுப் பார்த்தான். தீக்காயத்தைத் தடவிக்கொண்டான். சுகமாக இருந்தது.
‘என்னய்யா செய்யறே?’ என்றாள்.
‘சொறியறேன்’ என்றான் நீல்.
அவன் பொறுமையாக இருந்தான். தீக்காயம்தான் பெரிய சொத்து போல இருந்தது. சொறியச் சொறிய சுகமாக இருந்தது. காலம் அப்படியே நீண்டுவிடும் போலத்தான் இருந்தது. அவள் தொண்டை கனைத்துக் கொண்டாள். அவன் நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சம் புன்னகைத்தாள். உதட்டைச் சுழித்துக்கொண்டாள். அவன் சிரித்தான். தன் உடலை தன் விழிகளால் சுட்டிக் காட்டினாள். அவன் சிரிக்காமல் இருந்தான்.
‘கிளம்பு’ என்றாள் அவள். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டாள்.
‘சாவு கிராக்கி’ என்று அவள் வசைபாடுவது கேட்டது.
இரவு முழுவதும் நடந்தான். மலைகள் வந்தன. ஒரு ஊரில் வெறும் தீயாக இருந்தது. ஊர் மக்கள் தீ வைத்து விளையாடினார்கள். மேளங்களின் ஒலி வயிற்றைக் கலக்கியது. ஆண்கள் மனப்பித்துடன் கால்களை தூக்கித் தூக்கி ஆடினார்கள். பெண்கள் கைகொட்டித் துள்ளினார்கள். தலைக்குப் பின்னால் அவர்கள் கை கோர்த்தபோது அவர்களின் நெஞ்சுப் பகுதி திகைப்பூட்டியது. நெருப்புச் சுடருடன் ஒரு கிழவி அருகில் வந்து சிரித்தாள். அவன் முகத்தை தீப்பந்தம் கொண்டு பார்த்தாள். அவனுடைய தலை மயிர் கொஞ்சம் எரிந்து போனது. அவனை இழுத்துக் கொண்டு ஒரு வீட்டின் பின்னால் மறைந்தாள். பெரும் இச்சையுடன் அவனையே பார்த்தாள். கண் சிமிட்டிகொண்டே அவள் இருந்தாள். அவனும் திருப்பிக் கண் சிமிட்டினான். பதிமூன்று வயதுச் சிறுமி ஒருத்தியைக் கையால் இழுத்து வந்தாள். அந்தச் சிறுமியும் சிரித்தபடி இருந்தாள். கையில் ஒரு சொம்பு வைத்திருந்தாள். அதில் தண்ணீர் போன்று ஏதோ இருந்தது. தீக்காயங்களுக்கு அது மருந்து என்று புரிந்தது. அந்தச் சிறுமி அவனுடைய கையைப் பிடித்து ஆட வைத்தாள். அவளுடைய ஒரு கையில் சின்னதாய் தீப்பந்தம் இருந்தது. அதில் வந்த வெப்பம் உடல் எங்கும் பரவி உருக வைத்தது. அவளால் அந்தத் தீப்பந்ததைப் பிடிக்க முடியவில்லை அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபடியே இருந்தாள். ஒரு கணம் அவனுடைய கால் சட்டையில் தீப்பந்தம் பற்றி நகர்ந்தது. அவனுடைய துடை பகுதியில் இலேசாக நெருப்புப் பட்டு எரிந்தது. அவனுடைய பேண்ட் ஜிப் அருகில் நெருப்பு ஒளிர்ந்து அடங்கியது. அந்தச் சிறுமி சட்டென்று கையில் இருந்த திரவத்தை அவனுடைய இடுப்புப் பகுதியில் வீசினாள். நெருப்பு அடங்கியது. ஆனால் உள்ளூரத் தீயாய் எரிந்தது. அவனுடைய பேண்டும் உள்ளாடையும் எரிந்து போனது போல இருந்தது. அந்தச் சிறுமி அந்த திரவத்தை அவனுடைய உறுப்பு மீது தெளித்தாள். அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. அவள் பழக்கப்பட்டவள் போல அவனுடைய உடல் மீது திரவத்தைத் தெளித்தாள். அவனுக்கு மேலும் எரிந்தது. அதை உணர்ந்தவள் போல அவள் சிரித்தாள். ஒரு கணம் அவனுடைய உறுப்பை அந்தச் சிறுமி கையில் பிடித்தாள். அவன் அவளைத் தள்ளிவிட்டான். அவள் கீழே விழுந்தாள். அவளுடைய கையில் இருந்த தீப்பந்தத்தில் அவளுடைய கூந்தல் தீப்பற்றிக்கொண்டது. அவள் முழுக்க எரிந்துபோவாள் போல இருந்து. நீல் கண்டுகொள்ளாமல் நடந்தான். தன் பையில் தேடினான். ஒரு வேட்டி இருந்தது. அணிந்துகொண்டான்.
காலையில் குளிர் அடித்தது. திரும்பிப் பார்த்தான். தொலைவில் கிராமத்தின் தீ அசைந்தது. சூரியன் வரவில்லை. மேகம் திரண்டிருந்தது. நவீன ரயில் ஒன்று மலைகளைக் குடைந்து சென்றது. தண்டவாளத்தில் நின்று பார்த்தான். ரயில்கள் ஒன்றையொன்று துரத்தியபடி சென்றன.
மேகம் கவிந்த ஊரில் பெருங்கூட்டம் திரண்டு படபடப்பாக இருந்தது. திரைப்படப் படப்பிடிப்பு என்று புரிந்தது. ஏராளமான விளக்குகள் மரங்களிலிருந்து ஒளி பாய்ச்சின. இயக்குனர் ஆற்றலுடன் இருந்தார். ஒரு கணம் எல்லோரும் அமைதி காத்தார்கள். கதாநாயகன் மரத்தின் பின்னாலிருந்து ஓடி வந்து கதாநாயகியின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவள் ஈரமான ஆடைகள் அணிந்திருந்தாள். ஒரு கணம் எல்லோரும் சிரித்தார்கள். பிறகு அமைதி அடைந்தார்கள். பார்க்க ஈர்ப்பாக இருந்தது. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். நீல் கொஞ்சம் சாப்பிட்டான். அவனையும் நடிகன் என்று உதவி இயக்குனர் ஒருவர் நினைத்தார். வசனம் சொல்லிக்கொடுத்தார். கற்றுக்கொண்டு சொன்னான். அவன் நடிகன் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை நடிக்கலாம் என்று அவர் கூறினார். அவன் சிரித்தான். காட்சி வந்தது. அவன் வசனம் பேசியதை இயக்குனர் பாராட்டினார். இரவில் உதவியாளர்கள் மது அருந்தினார்கள். துணை நடிகை ஒருத்தியுடன் பக்கத்துக் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்கள். அவனை உதவி இயக்குனர் தன் வண்டியில் அமர்த்திக்கொண்டு சென்றார். அவர்கள் அனைவரும் ஒரு அறையில் முடங்கினார்கள். அறைக்கு வெளியே நீல் காவல் காத்தான். திரும்பி வரும்போது அவன் தான் வண்டி ஓட்டினான். ‘ஏன் உள்ளே வரலை?’ என்றார் உதவி இயக்குனர். அவன் பதில் சொல்லவில்லை. ’கூச்சமா?’ என்றார் உதவி இயக்குனர். அவன் பதில் சொல்லவில்லை. ‘குற்றவுணர்வா?’ என்றார் உதவி இயக்குனர். அவன் தலை ஆட்டினான். ‘தனி ஆவர்த்தனம்தான் பண்ணுவீங்களோ’ என்றார் உதவி இயக்குனர். அவன் சிரித்தான்.
உதவி இயக்குனரை இருப்பிடத்தில் இறக்கிவிட்டு அவன் அவருடைய வண்டிச் சாவியைக் கொடுத்தான். இலேசாக மழை தொடங்கியது. உதவி இயக்குனர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் நீல் மெதுவாக சாலை நோக்கி நடந்தான். பின்னால் உதவி இயக்குனர் உரத்துக் குரல் எடுத்து அழைத்தார். நீல் திரும்பிப் பார்த்துவிட்டு கை அசைத்துவிட்டு நடந்தான். அவர் பின்னாலேயே ஓடி வந்தார். மழை வலுத்தது. அவர் முழுக்க நனைந்துவிட்டிருந்தார். அவருடைய அத்தனை போதைகளும் அகன்று புதிதாய்க் குளித்த குழந்தை போல் இருந்தார்.
‘எங்கே போறீங்க?’ என்றார் அவர்.
‘போறேன்’ என்று சொல்லிவிட்டு நீல் நடந்தான்.
‘கன்டினியுட்டி இருக்கு. இன்னும் உங்க போர்ஷன் இருக்கு’ என்றார் அவர்.
‘இல்லை. சாரி. முடியாது’ என்று சொல்லிவிட்டு அவன் நடந்தான்.
‘சே. அறிவு இல்லை? பொறுப்பு இல்லை?’ என்று உதவி இயக்குனர் வசைபாடினார்.
நீல் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வேகமாக அவன் நடந்தான். சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் வந்தன. ஒன்றை ஒரு இளைஞனும் மற்றொன்றை ஒரு இளம்பெண்ணும் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்கள். தலையில் ஒரு பெரிய தொப்பி இருந்தது. அவனைப் பார்த்ததும் வண்டிகள் நின்றன. அவன் இளைஞனின் வண்டியில் ஏறினான். அவர்கள் எங்கே போவார்கள் என்று சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை. மழை பெய்துகொண்டிருந்தது. இளம்பெண் முன்னால் சென்றாள். அவளைப் பின்தொடர்வதே தன் பணி என்பது போல் இளைஞன் இருந்தான். ஒரு பெரிய மலையை வண்டிகள் தாண்டின. அதற்குப் பிறகு ஒரு பெரிய சரிவு வந்தது. அது ஒரு ஒற்றையடிப் பாதையாக இருந்தது. கற்களும், புற்களுமாக பாதை நீண்டது. வண்டி குதித்துக் குதித்துச் சென்றது. ஹேண்டில்பார் வளைந்து வளைந்து வண்டி விழுந்துவிடும் போல இருந்தது. இருள் சூழ்ந்து வண்டியின் முகப்பு விளக்கு மட்டுமே வழி காட்டியது. அது ஒரு சின்ன ஊராகத் தெரிந்தது. சிறிய வீடுகள் எதிர்கொண்டன. ஒரு வீட்டின் வாசலில் அந்தப் பெண் வண்டியை நிறுத்தினாள். இளைஞனும் வண்டியை நிறுத்தினான். நீல் இறங்கிக்கொண்டான். அந்த வீட்டின் கதவு திறந்தது. உள்ளே ஒரு சிறிய விளக்கு எரிந்தது. ஒரு முதியவர் தலை அசைத்து வரவேற்றார். மூவரும் வீட்டினுள் நுழைந்தார்கள். ஒரு முதிய பெண்மணி மூலையில் முடங்கி இருந்தாள். அவளுக்கு ஏதோ உடல் நலமின்மை போல் தெரிந்தது. முனங்கிக்கொண்டு இருந்தாள். இறுதி நிலையில் இருந்தாளோ என்று புரிந்தது.
’சாப்பாடு வந்திருக்கு’ என்றார் முதியவர்.
அந்த முதிய பெண்மணி எழுந்து அமர்ந்தாள்.
இளைஞனும், இளம்பெண்ணும் கையில் இருந்த அட்டைப் பெட்டிகளைத் திறந்தார்கள். ஆவி பறக்க உணவு இருந்தது. அதன் மணம் மயக்கிக் களித்தது. அசைவ உணவின் மசாலா வாசனை ஈர்த்து அடக்கியது. எல்லோருக்கும் ஒரு பெட்டி உணவை அவர்கள் கொடுத்தார்கள். நீல் கையிலும் ஒரு பெட்டி இருந்தது. மெதுவாக அவன் சாப்பிட்டான். ஒரு முறை அந்த இளம்பெண் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். கண்களில் எகத்தாளம் இருந்தது. ஒரு சவாலை அவள் வைத்திருந்தாள். பின் வாசல் அருகே கை கழுவிவிட்டு உறங்கச் சென்றார்கள். அந்தச் சின்ன வீட்டில் நிறைய அறைகள் இருந்தன. முதியவர்கள் முன்னறையில் படுத்துக்கொண்டார்கள். இளைஞனும் இளம்பெண்ணும் ஒரு அறையில் முடங்கினார்கள். நீல் ஒரு அறையில் படுத்துக்கொண்டான். தரை கொஞ்சம் ஈரமாக இருந்தது. நள்ளிரவில் உறக்கம் போனது. அறையை வீட்டு நீல் வெளியே வந்தான். முன்னறையில் முதியவர்கள் மோகம் கொண்டிருந்தார்கள். அடுத்த அறையில் இளைஞனும் இளம்பெண்ணும் மூர்க்கமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அறைக்குச் சென்று நீல் படுத்தான். உறக்கம் வரவில்லை. தரையில் ஏதோ சப்தம் வந்தது. விழித்துப் பார்த்தான். ஒரே இருட்டாக இருந்தது. மெல்லிய வெளிச்சத்தில் அந்த முதிய பெண்மணி தரையில் உரசியபடியே நகர்ந்து வந்தாள். அதிர்ந்து பார்த்தான். அவள் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். அவளிடமிருந்து வெற்றிலை பாக்கு நெடி அடித்தது. உடையிலேயே சிறுநீர் கழிப்பாள் போல இருந்தது. அவள் அவனை உற்றுப் பார்த்தாள். ஏதோ ஒரு சிறு ஒளிக் கசிவில் அவளுடைய கூரிய விழிகள் கொன்றுவிடும் போல இருந்தது.
‘என்னடா’ என்றாள் அவள்.
அவன் உற்றுப் பார்த்தான்.
‘வேடிக்கை பார்ப்பியா. வேலை பார்க்க மாட்டியா’ என்று கேட்டாள் அவள்.
அவன் அமைதியாக அவளைப் பார்த்தான். அவள் விகார முகம் கொண்டு சிரித்தாள். சப்தம் எழாமல் அவள் மிகுந்த வன்மத்துடன் சிரித்தாள். அவன் எழுந்தான். அவள் அவனுடைய துடையில் கை வைத்தாள். அவன் கால்களை உதறினான். அவள் சிரித்தாள். அவன் அவளை எட்டி உதைத்தான். அவள் மூலையில் சென்று விழுந்தாள். ஏதோ அவள் உடலைக் குத்தியது. ஒரு சிறு முனகலுடன் அவள் அடங்கிப் போனாள். அவளிடமிருந்து மூச்சு வரவில்லை என்று புரிந்தது. அவன் உடல் நடுங்கியது. வியர்த்தது. யாராவது ஒருவரிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தான். வேண்டாம் என்று தோன்றியது. காலை எழுந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிடும். நினைத்தபடியே படுத்து உறங்கினான். காலையில் உறைந்த இரத்த நெடி அடித்தது.
கதவுகள் திறந்திருந்தன. அவன் வெளியே வந்தான். சூரியன் சுட்டெரித்தது. வாசலில் முதியவர் பல் விளக்கிக்கொண்டிருந்தார். அந்த இளைஞனும், இளம்பெண்ணும் அரைகுறை ஆடைகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். நீல் அந்தப் பெண்ணின் தோற்றம் கண்டு நின்றான். தலையைத் திருப்பிக்கொண்டு எதுவும் பேசாமல் சாலையில் இறங்கி நடந்தான். பாதை கரடுமுரடாக இருந்தது. அந்த முதியப் பெண்மணியின் இறுதி முனகல் நினைவுக்கு வந்தது. ஒரு மரத்தடியில் அமர்ந்து நெஞ்சு வெடித்து அழுதான். மூக்கில் படிந்திருந்த இரத்த வாசனை மறைய மறுத்தது. வேப்ப மரத்து இலைகளைப் பறித்து கைகளில் நசுக்கி மூக்கில் வைத்துக்கொண்டான். உற்சாகமாக இருந்தது. மூளையில் படிந்திருந்த இரத்த நெடி சுழன்று அடித்தது.
நீல் நடக்கத் தொடங்கினான். பின்னால் ஒரு இருசக்கர வாகன ஒலி கேட்டது. அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அந்த ஒலி அதிகரித்து மெதுவாக அவன் அருகே வந்து நின்றது. இரண்டு போலீசார் வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். அவன் நின்று அவர்களைப் பார்த்தான். ஒரு அதிகாரி பற்களைக் கடித்துக்கொண்டார். அவர்கள் வந்த திசையிலேயே இன்னொரு இருசக்கர வாகனம் வந்தது. அதில் ஒரு காவல் அதிகாரி அமர்ந்திருந்தார். ‘ஏறு’ என்றார் அவர். அவன் ஏறிக்கொண்டான். ஏதோ ஒரு கரடுமுரடான பாதையில் அந்த வாகனங்கள் சென்றன. கொஞ்சம் தெளிந்த பாதையில் தார் வாசனை அடித்தது. சாலையின் இருபுறமும் கற்றாழைச் செடிகள் இருந்தன. எதிரில் வேகமாக வந்த ஒரு லாரி மோதுவது போல் வளைந்து கடந்து சென்றது. ‘ஏய்’ என்று காவல் அதிகாரி அதட்டினார். அதை அந்த லாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
ஒரு சிறு ஊரின் நெருக்கமான சந்தில் நுழைந்த காவலர்களின் வாகனங்கள் ஒரு காவல் நிலையம் முன்னால் நின்றன. ‘வா’ என்றார் காவலர். நீல் பின்னால் சென்றான். உள்ளே சென்றதும், ‘எப்படிக் கொன்னே?’ என்றார் காவல் அதிகாரி. அவன் ஒன்றும் சொல்லவில்லை. பிருஷ்டத்தில் லத்தியால் ஓங்கி அடித்தார் அவர். அவன் மயங்கி கீழே விழுந்தான். ‘என்னய்யா, இதுக்கே விழுந்துட்டான். செத்துட்டானா?’ என்று காவல் அதிகாரி கேட்பது நீல் காதில் விழுந்தது. அவன் மெதுவாகக் கண் விழித்தான். ‘நடிக்கிறாண்டா’ என்றார் காவல் அதிகாரி. மீண்டும் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இனி எழக் கூடாது என்று அவன் முடிவு செய்தான். அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அவன் கண் திறக்கவில்லை. ‘டேய் போய்ட்டான்யா’ என்று அதிகாரியின் குரல் கேட்டது. அவன் முதுகில் ஷூவால் குத்தினார்கள். அவன் சவம் போல அசைந்தான். அவனுடைய மூக்கு அருகே ஒருவன் விரல் வைத்துப் பார்த்தான். அவன் கொஞ்சம் மூச்சை அடக்கிக்கொண்டான். ‘மூச்சு இல்ல’ என்றார் ஒரு காவல் அதிகாரி. ‘ஏன்டா கொன்னீங்க’ என்று ஒருவர் அதட்டினார். ‘செத்திருக்க மாட்டான்’ என்று ஒரு அதிகாரி கூறினார். மீண்டும் ஒருவர் அவன் நெஞ்சை அழுத்தினார். அவன் அசையாமல் கிடந்தான். அவன் முகத்தில் ஐஸ் தண்ணீரைப் பீய்ச்சினார்கள். அவன் அதிர்ந்து கண் விழித்தான். ‘இருக்கான்டா’ என்றார் ஒரு அதிகாரி. மீண்டும் அவனை அடிக்க ஒரு அதிகாரி கையை உயர்த்தினார். ‘போதும். செத்துடுவான்’ என்றார் அதிகாரி. ‘கொள்ளை அடிச்சியா?’ என்றார் அதிகாரி. நீல் இல்லை என்பது போல் தலை அசைத்தான். ‘கிழவியைக் கெடுத்தியா?’ என்றார் ஒருவர். அவன் இல்லை என்று பதில் சொன்னான். மீண்டும் அவன் மயங்கி விழுந்தான். ’எப்படி செத்தது பாட்டி?’ என்று அதிகாரி கேட்டது காதில் விழுந்தது. மீண்டும் அவன் முகத்தில் தண்ணீர் ஊற்றினார்கள். காபி கொடுத்தார்கள். இட்லி கொடுத்தார்கள். உதட்டில் இரத்தம் வழிந்தது. ஒரு காவல் அதிகாரி சிரித்தார். ‘பாட்டிகிட்ட காஜ் காம்பிச்சியா?’ என்று சொல்லிவிட்டு ஒருவர் அறையை விட்டு வெளியேறினார்.
தலைமைக் காவல் அதிகாரி வந்தார். பெண் அதிகாரி. கொண்டை போட்டிருந்தார். உடை இறுக்கமாக இருந்தது. முகம் சதுரமாக இருந்தது. உதடுகள் மிகவும் சிறியதாக சிவந்து கிடந்தன. மூக்கு நுனியில் கோபம் இருந்தது. ஒரு முறை அவனை முறைத்துப் பார்த்தார். நீல் தலையைக் குனிந்துகொண்டான். அவன் அருகில் அவர் வந்தார். ‘பெர்வர்ட்’ என்று அவருக்குள் முணுமுணுத்தார். அவன் அமைதியாக இருந்தான். ‘நான் கொலை செய்யவில்லை’ என்று கூறினான். அவர் அவனைப் பார்த்தபடியே இருந்தார்.
மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். நீல் எதுவும் பேசவில்லை. அவனுக்கு ஆண்மை இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார். ‘ரேப் இல்லை’ என்று பெண் அதிகாரி கூறினார். ’பொருளும் எதுவும் காணாமல் போகலியே’ என்றார் அவர். ‘என்னதான் செய்தே’ என்றார் அதிகாரி. அவன் எதுவும் பேசாமல் இருந்தது அவருக்குக் கோபம் தந்தது. ஒரு முறை அவனை அவர் எட்டி உதைத்தார். அவர் உயர்தர சென்ட் போட்டிருந்தார். அவனுக்குக் கொஞ்சம் ஈர்ப்பாக இருந்தது. அது அவருக்குப் புரிந்தது. கண்களை உற்றுப் பார்த்தார். ஒரு கணம் கண்கள் பொருள் கொண்டன. அவர் நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார்.
நகர நீதிபதி முன்னால் நீல் பதற்றமாக நின்றான். தொடர்ந்து கேள்விகளைக் கேட்டபடியே இருந்தார். அவன் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொல்லவில்லை என்று மட்டும் சொன்னான். மூத்த பெண்மணி இறந்தாரா என்றுகூட தெரியாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறினான் என்று கூறினான் அவன். நீதிபதி ஏற்றுக்கொண்டு அவனை ஜாமீனில் விடுவிப்பதாகச் சொன்னார். அவனிடம் பணமும் இருக்கவில்லை. யாரோ ஒரு வழக்கறிஞர் அவனுக்காகப் பணம் கட்டினார். அவன் வெளியே வந்தான். தெரிந்த நகரம் போலத்தான் இருந்தது. சாலையில் இலக்கு இல்லாமல் நடந்தான். பெண் காவல் அதிகாரி எதிர்பட்டார். அவர்தான் அவனுக்காகப் பணம் தந்தார் என்று கூறினார். அவர் புன்சிரித்தார். அவனும் சிரித்தான். அவருடைய வாகனத்தில் அவனை ஏற்றிக்கொண்டார். வாகனம் எங்கு செல்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அடிக்கடி அவனைப் பார்த்து அவர் சிரித்துக்கொண்டார். அவனும் சிரித்துக்கொண்டான். ஒரு மலை உச்சிக்குப் போனார்கள். அங்கு ஒரு சிறிய வீடு இருந்தது. அங்கு சென்று அவனை அவர் உள்ளே தள்ளினார். அவன் ஒரு அறையில் சென்று விழுந்தான். மசாலா பரோட்டா வந்தது. கொஞ்சம் சாப்பிட்டான். பெண் அதிகாரி கொஞ்சம் மது அருந்தினார். அவர் அவருக்குப் போட்டுக்கொள்ளும் சென்ட் குடிப்பது போல் இருந்தது. அவன் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தான். பாதாளத்தில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. முக்காடிட்ட பெண்கள் இலை பறித்தார்கள். ஸ்வெட்டர் அணிந்த ஆண்கள் இரண்டு பேர் பெரிய சுருட்டைப் புகைத்தார்கள். அவன் வீட்டினுள் வந்தான். பெண் அதிகாரி சிரித்தார். அவனும் சிரித்தான். அவனுக்கு உறக்கமாக வந்தது. அவன் அறைக்குள் சென்று போர்த்திக்கொண்டு கண்ணை மூடினான். கதவைத் தட்டிவிட்டு அதிகாரி அறைக்குள் நுழைந்தார். அவன் முதுகினை அவருடைய கை தொட்டது. அவன் விலக்கினான். அவர் அதை குறும்புபோல் எடுத்துக்கொண்டார். அவனுக்கு அலுப்பாக இருந்தது. அவர் அவன் அருகில் படுத்துக்கொண்டார். அவனுடைய போர்வையை எடுத்து அவரும் போர்த்திக்கொண்டார். அவனுக்கு அவருடைய சென்ட் வாசனை பிடித்தது. அவர் அவனை இறுக அணைத்துக்கொண்டார். அதுவும் அவனுக்குப் பிடித்தது. அவர் அவனைக் கட்டிக்கொண்டு பதற்றம் காண்பித்தார். அவனுக்கு அதுவும் பிடித்தது. ’அவ்வளவுதானா’ என்று அதிகாரி கூறினார். ‘ம்’ என்று மட்டும் கூறினான். ’வெளியே போய் நிக்கலாமா?’ என்றார் அதிகாரி. சரி என்று தலை ஆட்டினான் நீல்.
வெளியே மிகவும் குளிர் அடித்தது. அவன் அருகில் வந்து அதிகாரி நின்றுகொண்டார். அவனைப் பின்னால் இருந்து அவர் கட்டிக்கொண்டார். அவனுக்கு அது பிடித்தது. ‘உள்ளே போலாமா’ என்றார் அவர். ‘இல்லை’ என்றான் அவன். ‘இங்கேயே கிட’ என்று அவர் கோபித்தார். அப்போது வேகமாக பனிப் புயல் வீசியது. அருகில் இருப்பவர்கள்கூட கண்ணில் தெரியவில்லை. பின்னால் நின்றிருந்த அதிகாரி ஒரு அரூப பிம்பம் போலத் தெரிந்தார். அவர் அவனை நெட்டித் தள்ளினார். அவன் அப்படியே பாதாளத்தில் விழுந்தான். எங்கோ ஒரு மரக் கிளையில் அவன் சிக்கிக்கொண்டான். துல்லியமாக அப்போது வெயில் அடித்தது. தொலைவில் ஒரு வீட்டில் அதிகாரி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவன் கை அசைத்தான். அவரும் கை அசைத்தார். கீழே பார்த்தான். இருண்ட பள்ளம் மட்டுமே இருந்தது. அங்கு தீனா சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.
************

நிஜந்தன்
நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை 1984ல் ‘கணையாழி’ இதழில் வெளியானது. 1985ல் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற அவரது படைப்பு வெளியானது. 1990களின் தொடக்கத்தில் நாடகங்கள் எழுதி, அவற்றை நிஜந்தன் மேடையேற்றியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு 12 நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கின்றன. நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலுக்கு 2014ல் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. 37 ஆண்டு காலம் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக, தலைமை செய்தி ஆசிரியராக, விவாத நெறியாளராக நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது வலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நிஜந்தன் நடித்து வருகிறார். மனச்சிதைவு, தற்கொலை தடுப்பு தொடர்பாக கதை சார்ந்த ஆவணப் படங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.
00

