சலாஹுத்தீன் தெர்மிடாஸ்
தமிழில்: ரமீஸ் பிலாலி
எங்கள் சிறையின் திண்ணை ஒரு கோழிக் கொடாப்பை விடச் சற்றே பெரியது – நான்கு மீட்டர் அகலம், எட்டு மீட்டர் நீளம், அவ்வளவுதான். அதே சமயம் அது முடிவற்றதும்கூட. எங்குமே போய்ச் சேராமல் அதனுள் நீங்கள் காலையில் இருந்து இரவு வரை நடக்கலாம். இந்தக் கொடாப்பில் நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் – நானும், என் சக பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா ஜைதானும். இதன் அர்த்தம், இது எங்கள் இருவருக்கு மட்டுமே உரிய இடம் என்பதல்ல. சொல்லப் போனால், இது ஒரு சமூகக் கூடம். எனவே நாங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ள எறும்புகள் மட்டும் சிலந்திகளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அவைதாம் இந்த இடம் ஏதோ தங்களின் ஏகபோக உடைமை என்பது போல் நடந்து கொள்கின்றன, அவற்றின் கூடுகளின் மீது இந்தச் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது என்பது போல். அப்படி அவை நினைப்பதில் பிழை ஏதுமில்லை. இருந்தாலும், அப்துல்லாவும் நானும் நாகரிக கனவான்கள். இதையெல்லாம் கணக்கில் எடுக்கையில், இங்கே பரஸ்பர மரியாதை உள்ள சுமுகச் சூழலே நிலவுகிறது.
எறும்புகளின் திரள் போராட்டம் கண்ணுக்கு விருந்து. சிறைத் திண்ணையின் இருண்ட மூலை ஒன்றில் சத்தமின்றித் தமக்கு ஓர் ஒளிமயமான வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதில் உடல் பொருள் ஆவி எல்லாம் சேர்ந்து அவற்றின் முழுச் சமுதாயமும் ஒற்றை இலட்சியத்தை நோக்கியே பாடுபடுகிறது. மற்றொரு பக்கம் இந்தச் சிலந்திகள் முற்றிலும் வேறுபட்ட ஓர் உயிரினம் ஆகும். அவை ஏறத்தாழ எதுவுமே செய்வதில்லை. அவை சமூக உயிரிகளும் அல்ல. அவற்றில் ஒன்றிடம் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள், சீக்கிரமே இழைத் தொடர்பை இழந்து விடும். அல்லது, அதை அது இழப்பதில்லை, எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்கு ஓடிப் போய் அங்கே அதை வைத்துத் தன் வலையைப் பின்ன ஆரம்பித்துவிடும்.
அப்புறம், சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. அவற்றின் ஒரு ஜோடி சிறைக் கூரையின் அடியில் எரவாணத்தில் தமக்கொரு கூடு கட்டித் தங்கிவிட்டன. சின்னஞ்சிறு அலகுகளில் புல்லும் குச்சியும் கவ்வியபடி சில நாட்கள் அவை போவதும் வருவதுமாய்ப் பறந்து கொண்டிருந்தன. அதிக வேலை செய்தது பெட்டைதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆண் பறவை இருக்கிறதே, அது எப்போதாவது அலகில் குச்சி ஒன்றைக் கவ்விக்கொண்டு சிறகடித்தபடி காட்சி தரும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது கூட்டின் வாசலருகில் சிறை மதிலின் முள்வேலிக் கம்பியில் உட்கார்ந்து சிறகு கோதிக் கொண்டிருக்கும். அதன் மீது கடுமையான விமர்சனத்தை நான் வைக்கக் கூடாதுதான். பாவம், அது பாட்டுக்குத் தன் வேலையைப் பார்க்கிறது.
தம் வீட்டைக் கட்டி முடிக்க அவற்றுக்குப் பத்து நாட்கள் ஆயிற்று. ஜன்னல் சட்டகத்தில் அவற்றுக்கு ரொட்டித் துண்டுகளும் தண்ணீரும் வைத்து எங்களால் முடிந்த அளவு நாங்களும் உதவினோம். ஒருநாள், அந்தப் பெட்டைக் குருவி விர்ரென்று என்னிடம் பறந்து வந்து சொன்னது, “அபி, இறைவன் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்! ஒன்றுக்கும் உதவாத என்னுடைய புருசனை நம்பியிருந்தால் எப்போதோ நான் பட்டினியால் செத்திருப்பேன். எல்லாவற்றையும் போல நான்தான் மேஜையில் உணவையும் பரத்தி வைக்க வேண்டும்.”
நான் அதிர்ச்சியுற்று அதனிடம் கேட்டேன், “குருவியே! நீயா என்னிடம் பேசுகிறாய்?”
“நானேதான்” என்றது அது. “அப்போ, நான் பேசுவது உனக்குப் புரிகிறது, இல்லையா?”
நான் தலையாட்டினேன். என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. பால்ய பருவத்தில் நாங்கள் விளையாடிய “பறவைப் பேச்சு” – சும்மா வாய்க்கு வந்தபடி உலுவுலாயி பண்ணுவது – எனக்கு இன்னும் முற்றிலும் மறந்துவிடவில்லை போலும்.
“அதைச் சொல்லாதே பெண்ணே! கூடு கட்டிக்கொண்டு அலைந்து திரியும் நீங்கள் உணவுக்கும் சிரமப்பட வேண்டாமே என்று ஒரு கரிசனம் எங்களுக்கு”, என்றேன் நான். “உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் சொல்லுங்கள் போதும். இப்போ நாம் அண்டை வீட்டார்கள் ஆகிவிட்டோம் அல்லவா?”
“நன்றி அபி,” என்று அவள் சொன்னாள். அப்போது, ஆண் குருவி கூட்டை விட்டு வெளியே வந்தது.
“பெண்ணே! நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்?”
“ஓ, யாரிடமும் இல்லை” என்று அவள் சொன்னாள். “நமக்கு உணவு தந்ததற்காக அண்டை வீட்டாருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.”
“உள்ளே வா” என்று அவன் கீசினான். இந்த விடயத்தை இப்படியே போக விடுவது நல்லது என்று நினைத்து பெட்டைக் குருவி கூட்டுக்குள் அடைந்தது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. அதன் புருசன் என்னை அச்சுறுத்துவது போல் முறைத்தது.
“என்ன வேணும் உனக்கு? நான் ஏதாவது செய்ய வேண்டுமா?”
“இல்லை, அபி, உனக்கு ஏதாவது தேவை இருக்கிறதா என்று உன் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்…”
“உனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால் நீ என்னிடம் சொல், சரியா?” என்று அது வெடுக்கென்று சொன்னது.
“சரி, அபி, இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்” என்று நான் சொன்னேன், ஜன்னலைச் சாத்தியபடி.
சில நாட்கள் கழித்து நாங்கள் ஒன்றைக் கண்டுபிடித்தோம். பெட்டைக் குருவி அம்மா ஆகப் போகிறது. அது தன் கூட்டில் இரண்டு முட்டைகள் இட்டிருந்தது. எம் அண்டை வீட்டாருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறக்கப் போகின்றன. இரண்டும் ஒன்றே போல் இரா. ஆனாலும் ரெட்டைதான். அவை தம் வாப்பாவைப் போல் இருக்கக் கூடாது என்று நான் எண்ணினேன். இங்கே சிறையில் பச்சை முட்டைகளுக்கு அனுமதி கிடையாது என்பதையும் யோசித்தேன்.
சமைத்த முட்டைகள் என்றால் சரி. ஆனால் அவை பொரிக்காது. இது ஓர் உண்மையைக் காட்டுகிறது: அவர்கள் தாம் விரும்பும் எதையும் தடை பண்ணலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் விஞ்சி இருக்கும், இங்கேயும்கூட. எம் தோழி கூட்டைக் கட்டிக் கொண்டிருந்தபோதே குஞ்சுகளை எதிர்பார்த்தபடி வேலை செய்தது என்பது இப்போது எங்களுக்குத் தெளிவாகிவிட்டது. அதே சமயம், அதன் இணை தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வீறாப்பாகச் சுற்றி வந்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
ஒருநாள் காலையில், குருவிக் கூட்டுக்குள் இருந்து வந்த கலவரச் சத்தம் கேட்டு நான் கண் விழித்தேன். திண்ணைக் கதவு இனிமேல்தான் திறக்கப்படும். ஆனால், எங்கள் சிறையறையில் இருந்து பார்த்தால் எரவாணத்தில் உள்ள குருவிக் கூடு தெளிவாகத் தெரியும். எனவே நான் எழுந்து போய் ஜன்னலருகில் நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தேன். கூச்சல் சத்தம் காதடைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
“ஐயோ, கண்ணீர்ப் புகை வேண்டாம்!” என்று ஒரு குரல் அரற்றியது. அந்தக் களேபரத்தில் இருந்து, போராட்டம் ஒன்றைக் கலைப்பதற்கு அங்கே கலகத் தடுப்புக் காவல் படை வந்து விட்டதோ என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். நான்கு ஆண் குருவிகள் அந்தக் கூட்டைச் சுற்றி வளைத்திருந்தன. அவை எம் அண்டை வீட்டாரை நோக்கி ஆக்ரோஷமாகக் கீச்சிட்டன. எம் அண்டை வீட்டுக் குருவிகள் தம் வீட்டைக் காப்பதற்காகக் கடுமையாகச் சண்டை போட ஆரம்பித்தன.
என் அறிவுக்கு எட்டிய வரை, இந்தப் புதுக் குருவிகள் கூடுபேறு அமலாக்கத்துறை அனுப்பி வைத்த ஆய்வாளர்கள் ஆகும்.
“இங்கே பார்!” என்று அவற்றில் ஒன்று அதிகாரம் தொனிக்கும் குரலில் கத்திற்று. அதன் இறகுகள் உப்பி இருந்ததால் அதுதான் அணித் தலைவன் என்று தெரிந்தது. “நீங்கள் உரிய அனுமதி பெறாமல் கூடு கட்டிவிட்டீர்கள்! என்ன சாக்குப் போக்கு சொன்னாலும் எடுபடாது. இப்போவே இதைப் பிய்த்துப் போடுவோம். அல்லது, அபராதமாக உங்கள் குஞ்சுகளில் ஒன்றை எடுத்துச் செல்ல அப்புறம் வருவோம்!” என்று அவன் கூட்டில் கிடந்த முட்டைகளைச் சுட்டிக் காட்டி பயமுறுத்தினான்.
“அதுதான் சரி” என்று ஏனைய மூன்றும் ஒத்து ஊதின. “என்ன காரணம் சொன்னாலும் ஏற்கப்படாது!”
தற்காப்பாக எதிர்ப்புக் காட்டி ஒரு ஜோடி சிறகுகள் விரிந்தன. பெட்டைக் குருவி தன் கூட்டின் வாசலை அடைத்து நின்றது.
“என் வீட்டை எடுப்பீர்களா? என் குழந்தையை எடுப்பீர்களா? என் பிணத்தின் மீதுதான்!”
“ஆம், அவள் பிணத்தின் மீதுதான்” என்று அதன் இணைக் குருவியும் கீசிற்று. ஆனால் அது எதிர்த்துப் போராடுகிறதா இல்லை கெஞ்சுகிறதா என்று தெளிவாகப் படவில்லை.
தலைவனும் அவனின் இடிப்பு அணியும் கூட்டை நெருங்கி வந்தன.
“நான் உங்களுக்கு மீண்டும் சொல்ல மாட்டேன்,” என்று தலைப்பறவை மிரட்டிற்று. “ஒன்று, சட்டத்துக்குக் கட்டுப்படுங்கள். அல்லது, நான் உங்கள் இரண்டு பேரையும் சிறையில் அடைப்பேன்.”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த இணை என்னிடம் திரும்பின. எங்கள் கண்கள் சந்தித்தன. “பக்கத்து வீட்டுக்காரரே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவை என்னிடம் கேட்பது போல் தோன்றிற்று. “நல்லது, என்னைக் கேட்டால், பின்வாங்காதீர்கள் என்றுதான் சொல்வேன்” என்று கூறுவதுபோல் நான் அவற்றைப் பார்த்தேன்.
“என்ன நடந்தாலும் சரி, நான் சரணடைய மாட்டேன்” என்று பெட்டைக் குருவி அறிவித்தது.
“ஆஹா! என் மனைவி!” என்று ஆண் குருவி சொல்லிற்று, இந்த முறை அழுத்தமாக. “ஒருபோதும் சரணடைய மாட்டாய் அல்லவா, என்ன நடந்தாலும்!”
உடனே, சட்டென்று பெட்டைக் குருவி அந்த அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்தது.
சிறைச்சாலையின் முள்-கம்பி வேலிக்கு உட்புறம் பெரிய களேபரம் வெடித்தது. அரசின் அதிகாரிகள் நான்கு பேரை ஒற்றைப் பெட்டைக் குருவி எதிர்த்து நிற்கிறது! இந்த அசாதரணமான எதிர் சாகசம் நிகழ்ந்ததும் அதன் இணை பதற்றத்துடன் தத்திச் சென்று ஓரத்தில் பம்மிவிட்டது. “ஐயா! இரக்கம் காட்டுங்களேன். தயவு செய்து நிறுத்துங்கள் ஐயா. ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள் ஐயா. பிரச்சனை ஒன்றும் வேண்டாம். எப்படியும் இரண்டு குஞ்சுகள் எங்களுக்கே அதிகப்படிதான்,” என்று அது பினாத்தியது.
இதைக் கேட்டதும் பெட்டைக் குருவி அதைச் சுட்டுவிடுவது போல் பார்த்தது. ஆண் குருவி தன் சிறகுகளுக்குள் ஒடுங்கிச் சுருங்கிற்று. நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை: நான்கு அரசதிகாரிகளையும் அங்கிருந்து விரட்டியடிக்கும் வரை அந்தப் பெட்டைக் குருவி தனி ஒருத்தியாகப் பத்து நிமிடங்கள் எதிர்த்து நின்றது. தன்னை நோக்கி வரும் தாக்குதலின் முன் அது தன் முகத்தில் வியக்கத்தக்க மனவுறுதியைக் காட்டி நின்று தன் முட்டைகளையும் கூட்டையும் பாதுகாப்பதில் வெற்றி அடைந்தது. அதே சமயம், என் சக ஆண் தன் வழக்கமான நடத்தைக்குத் திரும்பிவிட்டது. இப்போது அது என்னை முறைத்தபடி நிற்கிறது.
“என்னை அப்படிப் பார்க்காதே, ஹம்ஸா” என்று நான் சொன்னேன். (எப்படியோ, அதை ஹம்ஸா என்று அழைப்பது என்று நான் முடிவு பண்ணியிருந்தேன்.) “முதலில் செய்யவேண்டிவை முதலில்: உன்னுள் இருக்கும் ஆணைத் தீர்த்துக் கட்டிவிடு, என் நண்பா! அதுதான் நீ செய்ய வேண்டியது.”
ஹம்ஸாவின் வெற்றுப் பார்வை ஒன்றுமே சொல்லவில்லை. இந்த நாள் வரை, இந்த விடயத்தில் அவன் அமுக்குணியாகத்தான் இருக்கிறான். இதில் ஒருவேளை ஏதாவது உருப்படியான மாற்றம் நிகழ்ந்தால் நான் நிச்சயம் உங்களுக்கு எழுதித் தெரிவிக்கிறேன்.
(குறிப்பு: இந்தக் கதையை எழுதிய சலாஹுத்தீன் தெர்மிடாஸ் அவர்கள் துருக்கி நாட்டின் குர்திஷ் மக்கள் இயக்கத் தலைவரும், மேனாள் பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைப் போராளியும், அந்நாட்டின் சிறந்த புனைகதையாளருள் ஒருவரும் ஆவார்.)
00

ரமீஸ் பிலாலி
1976-இல் திருச்சியில் பிறந்த இவரின் இயற்பெயர் அ.தௌஃபீக் ரமீஸ். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை என விரியும் இவரின் எழுத்துப் பணி முக்கியமான ஸூஃபி நூற்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் சிறப்படைகிறது. காதலின் நாற்பது விதிகள், ஜின்களின் ஆசான், அஹில்லா, விசித்திரர்களின் புத்தகம், ஒளிமிகு கற்பனையின் ஆழங்களில் ஆகிய ஐந்து ஸூஃபி நாவல்களையும், மீக்கோவும் ஐந்தாம் பொக்கிஷமும் என்னும் ஜப்பானிய சிறார் நாவலையும், ரூமியின் ருபாயியாத், ரூமியின் வைரங்கள், தாகூரின் மின்மினிகள் ஆகிய கவிதை நூல்களையும், நீருக்குள் மூழ்கிய புத்தகம், ரகசியங்களின் திரை நீக்கம், ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு, சிவப்புக் கந்தகம், ரூமியின் ஞானப் பேருரைகள், உன்னை அறிக, ரூமியின் ஸூஃபிக் கொள்கை, ஆன்மாவின் படித்தரங்கள், ஏகத்துவ நூல், இக்பாலின் நாடோடி நினைவுகள், ப்ரியமுள்ள முஹம்மதுக்கு ஆகிய கட்டுரை நூல்களையும், தர்வேஷ்களின் கதைகள், முல்லா நஸ்ருத்தீன் கதைகள் (ஐந்து பாகங்கள்) ஆகிய கதை நூல்களையும், நாற்பது ஹதீஸ் தொகுப்புகள் (ஒன்பது நூல்கள்) ஆகியவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார். என்றார் சூஃபி, மலை முகட்டில் ஒரு குடில், அகத்தில் ஆயிரம் (தொகுதி-1) ஆகியவை இவர் எழுதிய உரை நடை நூல்களாகும். இவை அனைத்தும் சீர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

